Skip to Content

07.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

                                                                                                                                           N. அசோகன்

41. நம்முடைய வாழ்க்கைக்கு அடிப்படை நம்முடைய உடம்பாகும். அதனுடைய இயற்கையான சுபாவம் அசைவில்லாமல் இருப்பதாகும். நம்முடைய பிராண மையம்தான் அதற்கு சக்தியைக் கொடுத்து இயங்கவைக்கிறது.

42. கர்மயோகி அவர்கள் நம்முடைய பர்சனாலிட்டியை ஒன்பது நிலைகளாகப் பிரித்துள்ளார்முதலிடம் வைக்கின்ற சுத்த அறிவுக்கு தத்துவஞானி சின்னமாக விளங்குகிறார். இரண்டாம் இடம் வைக்கின்ற உணர்வு கலந்த அறிவுக்கு கவிஞர் சின்னமாக விளங்குகின்றார்மூன்றாம் இடத்தில் இருக்கின்ற உடம்பு சம்பந்தப்பட்ட அறிவுக்கு திறம்படச் செயல்படுபவர் சின்னமாக விளங்குகின்றார். ஐந்தாம் இடம் வைக்கின்ற சுத்த பிராண மையத்திற்குப் போர்வீரன் சின்னமாக விளங்குகின்றான்ஒன்பதாம் இடம் வைக்கின்ற சுத்த ஜடத்திற்கு உடம்பே சின்னமாக விளங்குகிறது.

43. மேதாவி என்பவர் உள்எழுச்சியால் செயல்படுபவர்அவருக்குக் கிடைக்கின்ற உள்ளெழுச்சி நம்முடைய மானிட அறிவை தாண்டிய உயர்நிலையில் உள்ள எழுச்சிமயமான அறிவு நிலையில் இருந்து வருகின்றது.

44. அவதாரம் என்பவர் இறைவனுடைய அம்சமாகப் பூவுலகின் பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக வருகின்றவர் ஆவார்.

45. கடவுளைக் கண்டு அச்சப்பட்டுக்கொண்டிருந்த யூதமக்களுக்கு இறைவனுடைய அன்பை உணர்த்த வந்த அவதாரம் ஏசுநாதர்ராம அவதாரம் மௌனத்தால் செயல்படும் உயர்மனம் பூவுலகில் இறங்கியதை குறிக்கிறது. கிருஷ்ண அவதாரம் கடவுள்கள் உறைகின்ற மேல்மனம் பூவுலகில் இறங்கியதைக் குறிக்கின்றதுபுத்தபிரான், ஆதிசங்கரர் மற்றும் சுவாமி விவேகானந்தர் - மூவரும் சிவபெருமானுடைய வெளிப்பாடுகள் ஆவார்கள். புத்தபிரான் அகந்தையையும், ஆசையையும் அழித்து, நிர்வாணம் என்ற நிலையை எய்தினார்ஆதிசங்கரர் நிர்குண பிரம்மத்தை எய்தினார்சுவாமி விவேகானந்தர் தேக்க நிலையில் இருந்த இந்து மதத்திற்குப் புத்துயிர் கொடுக்க வந்தார்.

46. அசுரர்கள் என்பவர்கள் இறைவனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள். உண்மை தடம்புரண்டு பொய்யாக மாறியபொழுது பொய்யின் தலைவனான அசுரன் பிறந்தான். வாழ்க்கை தடம்புரண்டு மரணமாக மாறியபொழுது மரணத்தின் தலைவனான அசுரன் பிறந்தான். ஆனந்தம் தடம்புரண்டு துன்பமாக மாறியபொழுது துன்பத்தின் தலைவனான அசுரன் பிறந்தான். ஒளி தடம்புரண்டு இருளாக மாறியபொழுது இருளின் தலைவனான அசுரன் பிறந்தான்.

47. ஒருவருடைய தனித்தன்மையை வலுப்படுத்தி ஒரு வடிவமில்லாத கூட்டத்திலிருந்து அவரைப் பிரித்துக்காட்டுவதே அகந்தையினுடைய வேலையாகும். அப்பட்சத்தில் அகந்தை ஓர் உபயோகமான வேலையைச் செய்கிறதுஆனால் ஆன்மா இறைவனோடு ஓர் ஐக்கியத்தைப் பெற விரும்பும்பொழுது இப்படித் தனித்தன்மையை வலியுறுத்தும் அகந்தையே இடையூறாக இருக்கிறது.

48. சூட்சூம ஜடநிலைஎன்பது ஜடநிலையினுடைய கண்ணிற்குத் தெரியாத சூட்சுமத் தொடர்ச்சியாகும். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் நம்முடைய திட சரீரத்தைவிட நம்முடைய சூட்சுமச் சரீரம்தான் உண்மையானது என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார்.

49. பரிணாமம்என்பது ஜடத்திற்குள் ஏற்கனவே மறைந்திருப்பது வெளிவருவது ஆகும்ஜடம் என்பது சச்சிதானந்தத்தினுடைய தலைகீழான வடிவம்தான்ஜடத்திலிருந்து உயிர் வெளிப்படுவது முதல் வெளிப்பாடாகும். அறிவு வெளிப்படுவது இரண்டாவது வெளிப்பாடாகும். சத்தியஜீவியம் வெளிப்படுவது மூன்றாவதாகும்.

50. நம்முடைய அறிவு ஆன்மாவைத் தன்னுடைய புலன்களின்மூலம் பார்க்கும் பொழுது ஆன்மா ஜடமாகத் தெரிகிறது.

51. ஜடநிலையில் ஒரு செயல்பாட்டிற்கு எதிர்ச்செயல்பாடு நிகழ்வதைப்போல உணர்வு நிலையிலும் செயல்பாடும், எதிர்ச்செயல்பாடும் உண்டுவாய்ப்பு என்று ஒன்று எழுந்தால் தடைகளும் எழத்தான் செய்யும்.

52. வாழ்க்கையில் சராசரிக்கு மேலும், கீழும் இருப்பவர்களுக்கு வாழ்க்கை எதிர்மாறாகப் பலன் அளிக்கிறது. சராசரிக்கு மேலுள்ளவர்க்குப் பலனளிக்கும் வாழ்க்கை அதே செயலைச் செய்யும் சராசரிக்குக் கீழுலுள்ளவர்களைத் தண்டிக்கிறதுவாழ்க்கையில் இச்செயல்பாடு பலத்தைப்பொருத்ததே தவிர நியாய-தர்மத்தைப் பொருத்ததில்லை.

53. காற்றும் தண்ணீரும் வெற்றிடத்தை அனுமதிப்பதில்லை என்பதுபோல வாழ்க்கையும் வெற்றிடத்தை அனுமதிப்பதில்லைஒருவர் கவனக்குறைவாக இருக்கும் இடத்தில் உடனே வாழ்க்கை அவருக்குண்டான வேலை, வருமானம், உடைமை போன்ற எல்லாவற்றையும் அவற்றைக் கவனிக்க முன்வரும் அடுத்தவருக்குக் கொடுத்துவிடுகிறது.

54. வருகின்ற வாய்ப்பை ஏற்க முன்வாராதவர் அதை மட்டும் இழப்பதோடன்றி, ஏற்கனவே தம் கையிலிருப்பதையும் சேர்த்து இழக்கின்றார்.

55. நம்முடைய கடந்தகாலத் தவறுகளையும், தோல்விகளையும் சமர்ப்பணம் செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கைச் சூழலை அச்சமர்ப்பணம் சரி ஆக்குகிறதுபழுதான மெஷின் ரிப்பேர் செய்வதன்மூலம் எப்படிச் சரி ஆகின்றதோ அம்மாதிரியே சமர்ப்பணம் நம் வாழ்க்கையைப் பழுது பார்க்கிறது.

56. சுதந்திரமும் கட்டுப்பாடும் எதிரானவைகளாகும். இருந்தாலும் இவற்றைச் சமவிகிதத்தில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தினோம் என்றால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பரஸ்பரம் அனுகூலமாக இருந்து நாம் சாதிக்க உதவும்.

57. வாழ்க்கை என்பது ஒரு முன்னேற்றமான இயக்கமாகும். அதன்படி பார்க்கும்பொழுது நமக்கு இரண்டு வாய்ப்புகள்தாம் உள்ளன. ஒன்று நாம் முன்னேறிக்கொண்டே போகலாம் அல்லது கீழே இறங்கிக்கொண்டும் போகலாம். இப்படி முன்னேறாமலும், பின்னிறங்காமலும் இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருப்பதற்கு வாழ்க்கை அனுமதிப்பதில்லை.

58. ஒற்றுமை மற்றும் வித்தியாசம், இயக்கம் மற்றும் ஓய்வு, வரவு மற்றும் செலவு, ஒத்துழைப்பு மற்றும் போட்டி, கொடுக்கல் மற்றும் வாங்கல், இன்பம் மற்றும் துன்பம் - இவையெல்லாம் எதிர்மறைகளாகத் தெரிந்தாலும் உண்மையில் இவ்விரட்டைகள் எல்லாம் பரஸ்பரம் ஒன்றுக்கு ஒன்று உதவும் உடன்பாடுகளாகும்.

59. கிணற்றில் இருக்கின்ற நீரை நாம் வெளியேற்றும்பொழுது ஊற்று கிளம்பி மீண்டும் கிணறு நிரம்புவதைப்போல கையிலிருக்கின்ற பணத்தை நாம் செலவழித்தால் மேற்கொண்டு பணம் நம்மை நாடி வரும்.

60. நாம் ஒரு நல்ல காரியம் செய்தால் அதற்கு நன்றியறிதலான ஒரு ரெஸ்பான்ஸ்தான் வரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை; நன்றிகெட்ட ரெஸ்பான்சும் வரலாம். ஒரு செயல்பாட்டிற்கு எதிர்ச்செயல்பாடு இருக்க வேண்டும் என்ற விதிக்கு ஏற்ப நம்முடைய செயல்பாட்டிற்கு ஒரு எதிர் செயல்பாடு கண்டிப்பாக வரும்அது நன்றியறிதலாகவும் இருக்கலாம், நன்றி கெட்டதனமாகவும் இருக்கலாம். இரண்டுமே எதிர்ச்செயல்பாடுகள் தான்.

தொடரும்.....

****

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

செயல், ஜீவன் பெற்று, ஒளிமயமாகி, சக்தியால் நிரம்பினால் சைத்தியப்புருஷன் வெளிப்படும். அதுவே 4th dimension ஆன்மீக அம்சம் பெறுவதாகும்.

சைத்தியப்புருஷன் நம் காலத்தைக் கடந்தவன்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நன்றும், தீதும் ஒன்றென அறியும் நேரம், இந்த ஞானம் பிறக்கிறது.        அது தீமையைக் கரைத்து நன்மைக்கு எதிரில்லை என்றாக்குகிறது.

தீமை எனும் நன்மையைக் காணும் சத்தியஜீவியம்.


 


 book | by Dr. Radut