Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

  யோக வாழ்க்கை விளக்கம் IV 

                                                                         கர்மயோகி

652) உங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்று சொல்லி பரவசமடைதல் சரணாகதியின் உச்சகட்டம்.

சரணாகதி பலித்தால் திருவுள்ளம் நிறைவேறும்.

       ஆசையை அடக்க முயல்பவர்கள் குறைவு. பூர்த்தி செய்ய விழைபவர்கள் அதிகம். ஆசையை அடக்க முயல்வது வாழ்விலுள்ள முயற்சிகளில் பெருமுயற்சி. அதற்கடுத்த நிலையில் ஆசையை வென்று, கரைத்து, அது எழாவண்ணம் செய்வது திருவுருமாற்றத்தின் முதன் நிலை. ஆசையை, பக்தியாக அன்பாக மாற்றுவது திருவுருமாற்றம். ஒரு நிலையில் ஆசையை அடக்கினால் அடுத்த உருவத்தில் அது எழும். புகையிலையை ஓர் உருவத்தில் விட்டுவிடுபவன் அடுத்த உருவத்தில் அதை நாடுவான். குழந்தைகளை அடிப்பதை நிறுத்த முயல்பவன், (sublimates) அடிப்பதில் உள்ள தீவிரத்தை நல்லதாக மாற்றிக் கடுமையான கட்டுப்பாடாக மாற்றிப் பாடம் சொல்லிக் கொடுப்பான்.

       வாழ்வு நதியின் ஓட்டத்தை ஒத்தது. ஓடும் நதியைத் தடுக்க முடியாது, தடுப்பது அணை கட்டுவதைப் போன்றது. தனி மனிதன் செய்யக் கூடியது அன்று. வாழ்வின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தாமல் யோகம் இல்லை. மனத்தில் எண்ணங்களாகவும், உயிரில் உணர்வாகவும், உடலில் செயலாகவும் சக்தி இடையறாது வெளிப்பட்டபடி இருக்கிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தடுத்து, சமர்ப்பணம் செய்யலாம். மனித சுபாவத்தைப் பூர்த்தி செய்ய ஓடும் வாழ்வு சமர்ப்பணத்தால் தெய்வத் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்யும். சமர்ப்பணம் யோகத்தின் முதற்படி. இதைச் சரியாகச் செய்தால் ஜீவனில் பெரும் பலம் சேரும். ஓடும் ரயிலை கைகளில் தூக்கி நிறுத்தும் பலம் வரும். சேர்ந்த பலத்தை நம் ஆசைக்குப் பயன்படுத்தாமல் இறைவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்யக் கொடுப்பது சமர்ப்பணம். ஒரு அகலமான நதி இருகரை நிரம்பி ஓடி வந்து கடலில் சங்கமித்தவுடன் ஆயிரம் மைல் அகலமான நீர்ப்பரப்பாக அகன்று விரிகிறது. ஜீவாத்மாவை நதிக்கும் பரமாத்மாவைக் கடலுக்கும் பகவான் ஒப்பிடுகிறார். நதி போன்ற ஜீவன் கடல் போன்ற தெய்வத்தைத் தொட்டவுடன், கடலளவுக்குப் பரந்து விரிகிறது. அகந்தையை இழந்த ஜீவன் பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது என்கிறார் அன்னை. கண்டமான சிறு பகுதி தன்னுள் உள்ள பிரம்மத்தை அறிந்தவுடன் அகண்டமாக அனந்தனையடைகிறது. (The finite becomes the infinite). ஒரு ரூபாய் லாட்டரி சீட்டு வாங்கினால் இலட்சம் பேரில் ஒருவருக்கு இலட்ச ரூபாய் விழுகிறது என்பது வாழ்விலுள்ள லாட்டரி அமைப்பு. இலட்சம் பேருக்கும் தலைக்கு இலட்ச ரூபாய் பரிசு விழும் லாட்டரி இறைவன் என்ற கருத்தை உபநிஷதம் complete - complete = complete முழுமையிலிருந்து முழுமையை எடுத்தால் முழுமை மீதியாகும் என்கிறது. அம்முழுமையை எத்தனை முறை எடுத்தாலும் மீதி முழுமையாகவே இருக்கும் என்பது உபநிஷதம். அதுவே அக்ஷயபாத்திரம்.

       நாம் ஆசையைப் பூர்த்தி செய்ய முயன்றால் ஆசை பூர்த்தியாகலாம், அல்லது பூர்த்தியாகாமலிருக்கலாம். ஆசையை வென்றால், அல்லது திருவுருமாற்றம் செய்தால், மனிதன் கண்டமான சிறியதிலிருந்து அகண்டமான பெரியதாகிறான். கண்டம் தன்னை அகண்டமாக அறிவது சிருஷ்டி தன்னை இறைவனாகக் காண்பதாகும். A vast surrender is his greatest strength என்பது பகவான் சொல். கண்டமான சிறிய மனித ஆசை, தன்னையறிந்து, தன்னுள் புதைந்துள்ள பிரம்மத்தை அறிந்தால், அகண்டமான பெரிய தெய்வீக அன்பாக மாறி அளவையிழந்து நிற்கிறது. அது நடக்க மனித ஜீவன் தான் எனும் உரிமையை, தன் ஆசையை, தன் சிறுமையை, அழியும் தன்மையைச் சமர்ப்பணம் செய்ய முன்வர வேண்டும். சமர்ப்பணம் சரணாகதியானால் மனிதன் தெய்வமாகிறான். அழியும் சிறியது, அழியாத பெரியதாகிறது.

       இந்த ஞானம் பூரண யோக ஞானம். யோகங்களில் பெறும் ஞானம் மோட்சம் பெற்றுத் தருகிறது. பூரண யோக ஞானம் சிருஷ்டியில் இறைவனை வெளிப்படுத்தி அவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்கிறது. அதுவே அவன் திருவுள்ளம். ‘உன் திருவுள்ளம் நிறைவேறட்டும்’ என்று ஞான உணர்வோடு சொன்னால் மனிதனுக்குரிய வரையறை, அளவு, மறைந்து, பிரபஞ்சத்துடன் கலந்து, பிரம்மாண்டமான திருவுருவம் பெறுகிறது மனித ஜீவன். அது அளிக்கும் பரவசம் அனந்தத்தை உற்பத்தி செய்யும். மனித வாழ்வு தெய்வீக வாழ்வாகும். கல்லும், மரமும், புல்லும், பூண்டும் உயிர் பெற்றெழும். மனிதனுள் புதைந்துள்ள சைத்தியம் வெளிவரும், வாழ்வில் அவலங்கள் தாங்களாகவே கரைய ஆரம்பிக்கும்.

பரவசம் பரமனின் பாதத்தில் நம்மைச் சேர்க்கும்.

****

653) ஆசைக்குப் பின்னால் ஆண்டவனிருப்பதாக அன்னை கூறுகிறார்.

மனித முயற்சிக்குப் பின்னால் இறைவனிருக்கிறான்.

பிராணமயப் புருஷனுக்குப் பின்னால் அன்னையும் அன்னமயப் புருஷனுக்குப் பின்னால் வேத ரிஷிகளும் இறைவனைக் கண்டார்கள்.

சைத்தியப் புருஷனுக்குப் பின்னால் இறைவனைக் காண்பது பூரணயோகம். கண்டு, கண்டதை விலக்காமல், சைத்தியப் புருஷனை சத்திய ஜீவனாக மாற்றுவது பூரண யோகம்.

ஆண்டவன் ஆசைக்குப் பின்னாலிருக்கிறான்.

சைத்தியப் புருஷனுக்குப் பின்னால் பூரணயோகம் இறைவனைக் காண்கிறது.

       ஆன்மா உலகில் பிறந்து வாழ்வை மேற்கொள்ள உடலை ஏற்றது. உடலுக்கு உணர்வும், மனமும் ஏற்பட்டன. உடல், உணர்வு, மனம் ஆகியவை (பிரகிருதி) இயற்கையைச் சேர்ந்தவை. இவற்றிற்கும் ஆன்மீக நிலைகளுண்டு. உடலின் ஆன்மா அன்னமயப் புருஷன் எனப்படும், உணர்வின் ஆன்மா பிராணமயப் புருஷன் எனப்படும், மனத்தின் ஆன்மா மனோமயப் புருஷனாகும், ஜீவனுக்குரிய ஆன்மா ஜீவாத்மாவாகும். அன்னமயப் புருஷன் மூலாதாரத்திலும், பிராணமயப் புருஷன் நாபியிலும், மனோமயப் புருஷன் புருவ மையத்திலும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஜீவாத்மாவின் பகுதிகள். அதனால் இவை வழியே ஜீவாத்மாவை அடையலாம். ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி என்பதால் அதன் மூலம் பரமாத்மாவை அடையலாம். அதுவே மோட்சம்.

       ஆசையழிந்தால் பிராணமயப் புருஷன் வெளிப்படுவான். அதுவே ஆண்டவன். எல்லாப் புருஷர்களும் ஆண்டவனே. அன்னையின் பிராணமயப் புருஷன் 14 உயரம் என்கிறார். வேத ரிஷிகள் ஆண்டவனை அன்னமயப் புருஷன் பின்னால் கண்டார்கள். ஞானி, மனோமயப் புருஷன் பின்னால் ஆண்டவனைக் காண்கிறான். தெய்வாம்சம் உள்ள அனைத்தையும் நாம் ஆண்டவனாகக் கருதுகிறோம். மேற்சொன்ன புருஷர்கள் பகுதிக்குரியவர்கள். சைத்தியப் புருஷனும் எல்லாப் பகுதிகளிலும் உண்டு என்றாலும் சைத்திய புருஷன் முழுமைக்குரியவன். அவன் பின்னாலுள்ளது ஜீவாத்மா. இதை பகவான் ஜீவா, ஜீவாத்மா, central being என்றெல்லாம் குறிக்கிறார். சைத்தியப் புருஷனை ஆன்மா என்றும் சொல்வதுண்டு. அது நெஞ்சின் பின்னால் குகையின் அடியிலிருக்கிறது. ஜீவாத்மா தலைக்கு மேல் சகஸ்ர தளத்திலிருக்கிறது. யோகம் முதிர்ந்தால் மனமும், உணர்வும் ஜீவாத்மாவும், சைத்தியப் புருஷனும் ஒன்றாகக் கலந்துவிடுவார்கள்.

       ஜீவாத்மா அசைவற்ற, அழிவற்ற பரமாத்மாவின் பகுதி. சைத்தியப் புருஷன் ஜீவாத்மாவின் பிரதிநிதி. வாழ்வின் அனுபவச் சாரத்தைச் சேர்த்து வளர்ந்து, பிறவிக்குப் பிறவி மனிதனைத் தொடர்வது சைத்தியப் புருஷன். மனிதனின் சாதனையின் உச்சகட்டம் உணர்ச்சியிலிருப்பதால், சைத்தியப் புருஷன் சாதனையின் சாரத்தைச் சேர்ப்பவனானதால், சைத்தியம் உணர்வு மையத்திற்குப் பின் உள்ளது. சைத்தியப் புருஷன் மூலமாகவும் ஜீவாத்மாவை அடைந்து மோட்சம் பெறலாம். பக்தி யோகப்பாதை அது. சைத்தியப் புருஷன் கவி, மேதை, வீரன், தலைவன் போன்ற மகாபுருஷர்கட்கே வளர்ந்த நிலையிலிருக்கும். பக்தி நிறைந்த மகான்களுக்கு சைத்தியப் புருஷனுண்டு. சைத்திய புருஷன் மூலம் மோட்சத்தை நாடுபவர்கட்கு சைத்தியத்தின் பக்தி அம்சம் மட்டுமே தெரியும். சைத்திய வாழ்வின் அனுபவச் சாரத்தைச் சேர்த்து, பரிணாம வளர்ச்சியடைய வல்லது. அந்த அம்சமே பூரண யோகத்திற்குரியது. பூரணயோகத்தை மேற்கொண்டால், ஆசையை அழித்து பிராணமயப் புருஷனையும், அகந்தையை அழித்து சைத்தியப் புருஷனையும் விடுதலை செய்து, மோட்சம் பெறும் தகுதி பெற்று, அதை விலக்கி, சைத்தியப் புருஷன் மூலம் ஜீவாத்மாவை, ஜீவனைத் திருவுருமாற்றம் செய்ய அழைக்க வேண்டும். முதல் நிலையில் சைத்தியம் ஜீவியமாக இருக்கிறது. ஜீவாத்மா சைத்தியத்தின் மூலம் ஜீவனை திருவுருமாற்றம் செய்யும்பொழுது, சைத்திய ஜீவியம் செறிந்து, அடர்ந்து, முதிர்ச்சியடைகிறது. ஜீவாத்மாவால் ஜீவியம் பெறக்கூடிய அனைத்தையும் பெற்றபின், அதன் மூலம் சத்திய ஜீவனை அடைந்து அதன் திருவுருமாற்றத்தை ஜீவனில் கொண்டு வந்தால், அடர்ந்து செறிந்து முதிர்ந்த சைத்தியம் ஜீவியம் என்ற நிலையிலிருந்து (substance) பொருளாகத் திடம் பெற்று திண்மையுறுகிறது. சைத்திய ஜீவனுக்குப் பொருள் அடிப்படை ஏற்பட்டால் அது சத்திய ஜீவனாகும்.

       சத்திய ஜீவனுக்கு மூன்று நிலைகளுண்டு. முதல் நிலையை எட்டிவிட்டால் பிறகு அடுத்த நிலைகளை எட்டலாம். இந்நிலைகளை வரிசையாக எழுதினால்,

1. ஆசை அழிதல்

2. பிராணமயப் புருஷன் வெளிப்படுதல்

3. அகந்தை அழிதல்

4. சைத்தியம் வெளிப்படுதல்

5. ஜீவாத்மாவை அடைதல்

6. மோட்சத்தைத் துறத்தல்

7. ஜீவன் (ஜீவாத்மாவின்) திருவுருமாற்றமடைதல்

8. சைத்தியம் அஸ்திவாரமான பொருளைப் பெறுதல்

9. சைத்திய ஜீவியம், சைத்தியப் பொருளாக மாறுதல்

10. சத்திய ஜீவனை எட்டித் தொடுதல்

11. சத்திய ஜீவியத் திருவுருமாற்றம்

12. சத்திய ஜீவன் ஜனித்தல்

அவை இது போலிருக்கும்.

****

654) பிரம்மத்தைக் காணும் யாத்திரையில் முன்னேற்றம் பெறுவது உண்மை. ஆனால் முக்கிய நோக்கம் அகங்காரமாக இருப்பதால், முன்னேறுவது அகந்தையாகும்முன்னேற்றமிருந்தாலும், அது எதிர்த் திசையிலிருக்கிறது.

பிரம்ம ஞானத்தைத் தேடினாலும், அகந்தை ஆட்சி செய்யும்.

       சுதந்திரம் வந்தவுடன் கிராமப்புறங்களுக்கு, ஏழைகள் வசதி பெற சர்க்கார் பல திட்டங்களைக் கொண்டு வந்தது. பல ஆண்டுகட்குப் பின் ஏழைகள் நிலை மாறவில்லை. அத்துடன் கிராமப்புறத்து மிராசுதாரர் அதிக வசதியாகிவிட்டார்கள். ஏழைக்கு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அது பணக்காரனுக்குப் பலன் தருவது எப்படிபரம்பரையாகக் கிராமத்தில் ஏழைகள், வேலை செய்வதென்றாலும், அவசரமாகக் கடன் பெறுவதென்றாலும், ஜாதி சம்பந்தமான காரியங்களென்றாலும், கோயில் திருவிழா என்றாலும், கிராமத்திலுள்ள எந்தக் காரியமானாலும் நேரடியாக அங்குள்ள பணக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருக்கிறார்கள். அவர்களை மீறி ஏழைகள் எதுவுமே செய்யமுடியாது. ஏழைகளுக்கு மாடு வாங்கிக் கொடுத்தால் முன்னுக்கு வருவார்கள் எனில் பணக்காரன் பல ஏழைகள் பேரில் கடன் வாங்கி மாடு வாங்காமல் தான் எடுத்துக் கொள்கிறான். கிணறு வெட்ட பணம் கொடுத்தாலும் அதுவே நிலை. கோவாப்ரேடிவ் சொஸைட்டி மூலம் பணம் கொடுத்தாலும் நிலை அதுவே. பணம் ஏழைகளைப் போய்ச் சேருவதில்லை. ஏழை பணக்காரனுக்குக் கட்டுப்படும்வரை அவனுக்கு உதவ முடியாது என்று சர்க்கார் கண்டது.

       சச்சிதானந்தத்தில் உள்ள சித்தில் சிருஷ்டி உற்பத்தியாகிறது. அகந்தை சச்சிதானந்தம், அதற்கடுத்த சத்திய ஜீவியத்திலில்லை. அதற்கும் அடுத்த தெய்வலோகத்திலிருந்து அகந்தை ஆரம்பிக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் அகந்தையின் சக்தி பரவியுள்ளது. அதன் சாயல் சிருஷ்டியின் ஆரம்பம்வரை தொடர்கிறது. அகந்தை வாழ்வில் முழு ஆதிக்கம் செலுத்துவதால், வாழ்வில் தவம் உள்பட அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அகந்தைக்கே பயன்படும். அதனால்தான் தெய்வங்களும் சில சமயங்களில் இதற்குப் பலியாகி விடுவதுண்டு.

       தவம் உயர உயர அகந்தை கரையும். அகந்தை கரையாமல் முக்தியில்லை என்பது உண்மை. ஞானிக்கு மனத்தின் அகங்காரம் கரையாமல் மோட்சமில்லை. ஆனால் உணர்வின் அகந்தை, உடலின் அகந்தை கரைய வேண்டிய அவசியமில்லை. எந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதற்குரிய மனம் அல்லது உணர்வு அல்லது உடல் அகந்தை அவசியம் கரைய வேண்டும். மற்றவை பற்றி மோட்சத்தை நாடுபவர்க்குப் பிரச்சினையில்லை.

       கிராமத்துச் சலுகைகளை எல்லாம் பணக்காரன் பெறுவதுபோல் ஜீவனின் உயர்வுகளை எல்லாம் - தவம் உள்பட அகந்தை பெற்றுப் பயன் அடைகிறது. பிரம்மத்தை நாடி வரும் வாழ்வில் உள்ள அகந்தையின் பகுதி கரைந்தாலும், மற்ற பகுதிகளின் அகந்தையிருப்பதால், அகந்தை ஜீவனுக்கு வரும் முன்னேற்றத்தைத் தன் முன்னேற்றமாக்கிக் கொள்ளும்.

       சக்தியை அடையும் மார்க்கங்களிலே, அகந்தையை அழிக்காமல் சக்தியைப் பெறலாம். ஈஸ்வரனுடைய சக்தியைப் பெற்ற பின்னும் அங்கு ஆட்சி செய்வது சக்தியில்லை, அகந்தையே என்கிறார் பகவான். பகவான் அதற்கு மாற்று வழி சொல்கிறார். நாம் சக்தியை நாடுவதற்குப் பதிலாக, அகந்தையை அழிக்க முன்வந்தால், அகந்தை அழிவதால் சக்தி நம்மை நாடி வரும். நம்மை வந்து சக்தியடையும் பொழுது ஆட்சி செய்ய நம்மில் அகந்தை இருக்காது. இம்முறையே சிறந்தது என்கிறார்.

       பிரம்மத்தை நாடும் பாதையில் அகந்தை பலப்பட்டால் முன்னேற்றம் தலை கீழாக, எதிர்த் திசையிலிருப்பதாகப் பொருள்.

தொடரும்...

****

________________________________________________________________

ஜீவிய மணி

இறைவனும் இருளும் சந்திக்குமிடம்

உள் மனத்திலுள்ள அடி மனம்.

________________________________________________________________

 



book | by Dr. Radut