Skip to Content

10.கன்ஸல்ட்டன்ஸி

 “அன்பாகப் பழகுகிறார், காரியம் நடக்கவில்லை”

       நம் நாட்டில் ஒருவருக்கொருவர் உதவுவது சகஜம், அப்படி உதவ மறுப்பவனை மனிதத் தன்மையில்லாதவன் என்கிறோம். மேல் நாடுகளில் பிறர் உதவியை ஏற்பது அவமானம் என்பது பழக்கம்.

மகனுக்கு ஏற்பட்ட கடனுக்குத் தகப்பனார் உதவ முன்வந்தால் மகன் ஏற்பதில்லை.

89 வயதில் உதவிக்கு வர உறவினர் விரும்பினால், உதவியை ஏற்பது குறைவு என ஒருவர் மறுக்கிறார்.

லண்டனைவிட்டு ஜெர்மனிக்கு நிரபராதியாக ஓடியவன் தங்கியுள்ள ஓட்டலுக்குப் பாக்கி தர முடியாமல் வெளியேற வேண்டிய நேரம், தற்செயலாக  லண்டனிலிருந்து வந்தவர் கண்ணில் பட்டார். பணஉதவி செய்ய முன் வந்தார். உதவி செய்ய முன் வந்தவருக்கு இவர் ஊறு செய்தவர். அதையும் புறக்கணித்து உதவியளிக்க முன்வந்தார்.

       “என்னால் உதவியை ஏற்க முடியாது” என்று கூறி எழுந்து போய்விட்டார்.

       இக்கட்டான நேரங்களிலும் பிறர் உதவியைப் பெற மறுப்பது தன்மானம், பெறுவது அவமானம் என்பது மேல் நாட்டுப் பண்பு. அவர்கள் திறமையாலும், செல்வத்தாலும் எழுந்த உயர்ந்த பண்பு. வறுமையில் உழல்பவன் தன்மானம் பெற்றால் அவனது வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

வறுமை அவமானத்தை ஏற்பதால் வருகிறது.

செல்வம் தன்மானத்தை நாடி வருகிறது.

       எந்தக் காரியத்திற்கும் சிபாரிசு, லஞ்சம், உதவி பெறுவது நம் நாட்டு வழக்கம். இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது?

பிறருக்கு உதவுவது நல்ல குணமன்றோ?

பிறர் உதவியை மறுப்பது தன்மானம் என்றாலும், மனம் வறண்டு போகாதா?

பிறருக்கு உதவ மறுப்பது கொடுமையல்லவா?

       இரண்டும் உண்மை. செல்வர் ஒருவரிடம் ஏராளமான பேர் உதவி கேட்பார்கள். இல்லை என்று மறுக்க முடியாது. அத்தனையும் செய்ய முடியாது. எல்லோரிடமும் செய்கிறேன் என்பார். யாருக்கு செய்ய வேண்டுமோ அவருக்கு மட்டும் செய்வார். இவருக்கு சர்க்காரில் ஆயிரம் காரியம் ஆகவேண்டும். பெரிய அதிகாரிகளிடம் போய் உதவி கேட்டால் எவரும் மிக அன்பாகப் பழகுகிறார்கள். தவறாமல் செய்கிறேன் என்கிறார்கள். ஆனால் எதுவும் செய்வதில்லை. என்ன செய்வது? தொழில் நடப்பதெப்படி? அன்னை கூறும் consultancy கன்ஸல்ட்டன்ஸி என்ன கூறுகிறது?

வாய் எதைச் சொன்னாலும், மனத்தின் உண்மை பலிக்கும்.

மனம் உண்மையை மட்டும் ஏற்றால், வாயால் சொல்பவற்றை மீறி பலன் வரும்.

மனமும், சொல்லும் உண்மையாயிருக்க முடியுமா?

மனம் உண்மையாக இருந்தால், வாயால் பொய் சொல்லும் சந்தர்ப்பம் எழாது.

மனத்தைச் சோதனை செய்து உண்மையை மட்டும் பாராட்டுவது தவறாது நல்ல பலனை என்றும் தரும்.

 

****

____________________________________________________________________________________________________________________

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அடுத்தவரை நம்பினாலும், ஆண்டவனை நம்பினாலும், மனிதன் தன்னையே

நம்புகிறான். தன் நம்பும் திறமையை 'நம்புகிறான்'.

______________________________________________________________________________________________________

 



book | by Dr. Radut