Skip to Content

12.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 தம்பி - ஏன் அன்னை நம்மைத் தேடி வருகிறார்?

அண்ணன் - பிரம்மம் Self என்பதும் தெய்வலோகக் கடவுள்களும் அவரவர் உள்ள இடத்திலேயே இருப்பவர்கள் (typical beings). உலகில் வாழும் மனிதனுக்கும் அவர்கட்கும் சம்பந்தமில்லை. நெய்வேலி என்பது மின் உற்பத்தி நிலையம். அருகிலுள்ள கிராமங்கட்கு NLC சேவை செய்யக் கடமைப்பட்டதில்லை. கிராமத்தார் கேட்டுக் கொண்டால் ஒரு பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி ஏற்படுத்தினால் அது NLC கடமையில்லை. அவர்களால் முடியும், கேட்டதனால் செய்கிறார்கள். அதுபோல் கடவுள்கட்கு மனிதனிடம் கடமை என்பதில்லை. மனிதன் பிரார்த்தனை அவர்களை எட்டினால் அனுக்கிரஹம் செய்கிறார்கள். உலகம் கடவுளை, இறைவனை மறந்துவிட்டதால் அதை நினைவுபடுத்த அன்னை அவதாரம் எடுத்தவர்கள். அதனால் அன்னை நம்மைத் தேடி வருகின்றார்கள். நம்மைத் தேடி வர அவதாரம் எடுத்தவர் அன்னை.

தம்பி - தெய்வலோகக் கடவுள்கள், க்ஷர, அக்ஷர பிரம்மம், புருஷோத்தமன் ஆகிய அனைத்தும், இப்படிப் பார்த்தால், பிரம்மத்தின்(Absolute) பகுதிகள். அன்னை பிரம்மத்தின் முழுமை. பகுதி, அடுத்த பகுதியை நாடாது. பகுதி முழுமையை நாடும். முழுமை பகுதியை நாட வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் நாட முடியும்.

அண்ணன் - பிரம்மம் (Absolute) தன்னை சிருஷ்டியில் இழந்தபின், தன்னைத் தான் காண முயல்கிறது. அதுவே லீலை. லீலையைப் பூர்த்தி செய்ய பிரம்மம் எடுக்கும் முயற்சியே அன்னையின் அவதாரம். தன்னை மறந்த பிரம்மம் தன்னை உணர அன்னை உலகில் வந்து மனிதனுக்கு இறைவனை நினைவூட்டுகிறார். அதையே இறைவனின் பெருந்தியாகம் holocaust என்கிறார் பகவான். இந்த அம்சம் தெய்வங்கட்கில்லை.

தம்பி - ஆன்ம விழிப்பு என்பது தெளிவாக இல்லை.

அண்ணன் - சுயநலமானவனுக்கு குடும்ப நலன் புரியாது. ஆபீசில் காசு வாங்குபவனுக்கு நேர்மை விளங்காது. ஆசையைப் பூர்த்தி செய்பவனுக்கு ஆன்மா விளங்காது.

தம்பி - ஆசையும், அறிவும் எதிராக இருப்பதை நாம் அறிவது போல் ஆன்மாவும், வாழ்வும் எதிராக அல்லது மாறியிருப்பதைக் கூற முடியுமா?

அண்ணன் - குடும்பஸ்தன் சூன்யம் வைக்கும் மந்திரம் கற்றுக் கொள்வதில்லை, கற்றுக் கொண்டால் வைப்பதில்லை. அப்படிச் செய்தால் அவன் குழந்தை ரத்த வாந்தி எடுக்கும். சூன்யம் வைப்பது ஆன்மாவுக்குக் கெடுதல், ஆன்மாவில் இருளடைந்தவன்தான் அதைச் செய்வான். சூன்யம் பெரிய தப்பு. கோபம், எரிச்சல், போட்டி, பொறாமை அகந்தைக்குரியன. சாந்தம், நிதானம், பொறுமை, உதவி மனப்பான்மை ஆன்மாவுக்குரியன. இவை ஆன்மாவின் அம்சங்கள். இவையிருந்தால் ஆன்ம விழிப்பிருப்பதாகப் பொருள். ஆன்ம விழிப்பிருப்பது மேல்.

தம்பி - அன்னை எல்லா இடங்களிலும் ஒரு சிறப்பைச் சேர்ப்பார்களே. அதுபோல் இங்கு என்ன செய்திருக்கிறார்கள்?

அண்ணன் - அச்சிறப்பே அன்னை செய்த யோகம். அதன் நிலைகளை ஏராளமாக Agendaஇல் விவரித்திருக்கிறார்கள். மேலும், இதுவரை யாரும் செய்யாத யோகம் அது எனவும் கூறுகிறார்கள். நமக்கு உடல், உணர்வு, மனம், ஆன்மா என்ற வரிசை தெரியும். மேலே போகப் போக உயர்வு, இதற்கு உதாரணம் தேவையில்லை.

தம்பி - இருந்தாலும், சொன்னால் பயன் உண்டு.

அண்ணன் - கூலிக்காரன், சிந்திக்க முடியாதவன், உணர்வு, சொரணையில்லாதவன் உடலால் ஆனவன். கூலிக்காரனை மேய்ப்பவன், சிந்தனை இல்லாவிட்டாலும், சொரணையுள்ளவன், ரோஷக்காரன், உணர்வாலான மனிதன்.

சிந்திப்பவன், சிந்தனையால் செயல்படுபவன், மனத்தாலான மனிதன்.

பிரகாசம், நிதானம், சாந்தம், பொறுமையுடையவன் ஆன்ம விழிப்புடையவன்.

தம்பி - இதற்கு மேல் என்னயிருக்க முடியும்?

அண்ணன் - ஆன்மா (descent) கீழே இறங்கி வந்து மனத்தில் வெளிப்படுவது, உணர்வில் வெளிப்படுவது, உடலில் வெளிப்படுவது அடுத்த உயர்ந்த கட்டங்கள்.

தம்பி - அதை நாம் எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?

அண்ணன் - ஆன்மா மனத்தில் வெளிப்பட்டால் மேதை பிறக்கிறான் (ஐன்ஸ்டீன்). உணர்வில் ஆன்மா வெளிப்பட்டால் நேரு போன்ற புனிதன் வருகிறான். உடலில் ஆன்மா வெளிப்பட்டால் அவதாரப் புருஷன் பிறக்கிறான்.

தம்பி - இவையெல்லாம் நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள்.

அண்ணன் - நாம் unconscious கண்மூடியாக இருந்தாலும், நம் அளவில் அருள் இதுபோல் எல்லா நிலைகளிலும் செயல்படுகிறது. நாம் அதன் பலனை மட்டும் கருதுகிறோம், Mother's Grace என்கிறோம். உட்பொருளை அறிவதில்லை.

தம்பி - உதாரணமாக சொல்ல எதுவுமில்லையா?

அண்ணன் - மனம் விழிப்பாகவுள்ளவர் ஒருவர் அன்னையிடம் வந்தார். ஈடுபாடாக இருந்தார். அவர் மனம் விசாலமடைந்ததையும், அதனுள் உற்பத்தியான பெரிய கருத்துகளையும் அவர் அறியவில்லை. பிற்காலத்தில் மேதை எனப் பெயர் பெற்றவர் அவரைத் தேடி வந்து அவருடைய கருத்தின் மேன்மையைப் பாராட்டினார். அதன் விளைவாக உலகுக்கு ஸ்ரீ அரவிந்தத்தின் அடிப்படையில் புதிய தத்துவம் எழுந்தது. இது ஆன்மா மனத்தில் விழிப்படைந்ததின் பலன்.

தம்பி - ஒரு பெரிய புதிய தத்துவம் எழுவது மேதா விலாசம்தான்.

அண்ணன் - உணர்வில் ஆன்மா வெளிப்பட்டால் வீரன், மாவீரன் ஜனிப்பான். அதுவும் நடந்தது. அன்னையை உணர்வில் வெளிப்படுத்தியவர் உலக சமாதானத்திற்கு உழைத்தார். அவர் முயற்சியால் நல்ல பலன் ஏற்பட்டது. நேரடியாக அது அவரால் நடந்ததை அவரைச் சுற்றியுள்ள சிலரே அறிவார்கள். சூட்சுமத்தில் உலக சமாதானம் உயர்ந்த கட்டத்தில் பூர்த்தியாயிற்று. ஆயுத தளவாடங்களைக் குறைக்க வல்லரசுகள் ஒத்துக் கொண்டன. விபரம் தெரிந்தவர் புரிந்து கொள்ளலாம். மற்றவர்க்கு விளக்க முடியாது.

தம்பி - நமக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தது என்று தெரிந்தால் போதும். நாம் எவரையும் நம்ப முயல வேண்டியதில்லை.

அண்ணன் - உடலில் ஆன்ம விழிப்பு ஏற்பட்டால், அவதாரப் புருஷன் பிறப்பான் என்பது ஸ்ரீ அரவிந்த அவதாரத்தின் சிறப்பு. அன்னை அந்த யோகத்தை செய்ததை விவரித்துள்ளார்.

தம்பி - எளிய பக்தருக்கு ஒன்றுமில்லையா?

அண்ணன் - இதுவரை யாருக்கும் தோன்றாத உயர்ந்த யோசனை பக்தர்கட்குத் தோன்றியது உனக்குத் தெரியாதா? பக்தர்களே அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதால் அது பலன் தரும்வரை எவரும் பின்பற்றுவதில்லை. நிறைய பக்தர்கட்கு இதுவரை தோன்றாத எண்ணம் தோன்றுகிறது. அது மனத்தில் ஆன்ம விழிப்பாகும். பாஸ் செய்ய முடியாத பையன் முதல் மார்க்கு வாங்குவது அது போன்றதாகும், வேலை போய்விட்டால், மனிதன் நடுங்குவான். பக்தர் ஒருவருக்கு வேலை போய்விட்டது. இலாக்கா டைரக்டர் அந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதுபோல் வேலை போனால் வருவது கடினம். கடினமென்றாலும் பக்தருக்கு வேலை வந்தது. அவரது ஆன்மா உணர்வில் வழிந்தது. அருள் செயல்பட்டது. அதற்கப்புறம் நடந்தது ஆச்சரியம். போன வேலை வந்தால், வேலையை எடுத்தவருக்குத் தண்டனை என்பதில்லை. அப்போது ஜெயிக்கலாம், தண்டனை அளித்தவரை ஒன்றும் செய்யமுடியாது. பக்தரை நீக்கிய டைரக்டருக்கு தண்டனை கிடைத்தது. நாம் இதை அருள் என அறிகிறோம். அரசன் சிரச்சேத உத்தரவிட்டாலும், ஜட்ஜ் தவறாகக் கொலைத் தண்டனை விதித்தாலும், அப்பீல் செய்து, கருணை கோரி விடுதலை பெறலாம். அதுவே உலகநீதி. அரசனுக்கோ, ஜட்ஜுக்கோ தண்டனையில்லை. ஆன்மா உணர்வில் எழுந்தால், அதைத் துன்புறுத்துபவர்க்குத் தண்டனை விதிக்கும் திறன் அதற்குண்டு. வேலையை இழந்தவர் எதுவும் செய்யவில்லை. தானே டைரக்டருக்குத் தண்டனை கிடைத்தது உணர்வில் ஆன்மா விழித்து சரித்திரத்திலில்லாததை நடத்தியதாகும்.

தம்பி - உடலுக்கும் உதாரணம் உண்டா?

அண்ணன்- உடலுக்குரிய உதாரணம் ஸ்ரீ அரவிந்தர், அன்னைதான். எளிய பக்தர். அவதாரமான உதாரணமில்லை. வேண்டுமானால் உடல் என்பதை உழைப்பு வருமானம் எனக் கொண்டால், உதாரணம் சொல்லிப் பார்க்கலாம். வருமானத்தை அளவுகடந்து அதிகரிப்பது முடியாத காரியம், உடலில் ஆன்மா விழித்தால் அதுவும் நடக்கும். ஏராளமான ஏழை மக்களின் வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்க முயன்றபொழுது 1000 மடங்கு வருமானம் அதிகரித்ததை நாம் அறிவோம். அதை உடலுக்கு உதாரணமாகக் கூறலாம். ஏனெனில் உடலின் உழைப்பே வருமானமாகும்.

 

தொடரும்...

 

****

  ___________________________________________________________________________________________________

இம்மாதத்தில் வரும் தரிசன நாள்

ஆகஸ்ட் 15 பகவானின் ஜென்மதினம்

_________________________________________________________________________________________________________________

 

 

 



book | by Dr. Radut