Skip to Content

04.சிறு குறிப்புகள்

 “நமஸ்காரம்”  

       மனம் இறைவனைக் கண்டு அதன் முன் தான் தூசு என்பதை அறிந்து, அவ்வறிவுணர்வில் துதிக்கும் பக்தியாகி, அதை ஜீவன் முழுவதும் ஏற்றுக்கொள்வதை, ஏற்றுக்கொள்வதால் அடையும் பெருமிதத்தை உடலால் வெளிப்படுத்துவது நமஸ்காரம். எல்லா அங்கங்களும் தரையில் பணிந்து, படிந்து பணிவது சாஷ்டாங்க நமஸ்காரமாகிறது.

       பரம்பரையாக இதை அடிக்கடி செய்பவர்கள் உடல் இதை ஏற்கும். புதியதாகச் செய்பவர்கட்கு உடல் வணங்காது. அவர்களுடைய நமஸ்காரம் பார்ப்பவர்கட்கு வேடிக்கையாக இருக்கும். தமிழ்நாட்டுப் பெண்கள் மண்டியிட்டு நமஸ்காரம் செய்வார்கள். வடநாட்டில் ஆடவரும் பெண்கள்போல் மண்டியிட்டே நமஸ்காரம் செய்வார்கள். மேலைநாட்டில் Thank you என்பதைச் சொல்லாமல் வாக்கியம் முடியாது. நம் நாட்டில் அவர்கள் நன்றி சொல்ல வேண்டிய நிலையில்

   நன்றி என்று சொல்வதற்கு பதில், கைகூப்பி நமஸ்காரம்      செய்கின்றனர்.

       மனம் அடங்கி, உணர்வு பூத்து, உடல் வணங்கி, உடலின் அங்கமெலாம் நன்றியை உணர்ந்து மலர்வதைக் கூப்பிய கரங்கள் காண்பிக்குமானால், அது புனிதச் செயல், புகழுக்குரிய நேரம், நமஸ்காரம் சமர்ப்பணமாகும் நேரம்; ஆன்மா புனர்ஜென்மம் பெறும் நேரம். “எனக்கு அடக்கமில்லை. நண்பர்கள் என்னைக் கர்வமானவன் என்கின்றனர். வீட்டிலும் அதே பெயர். அது உண்மை என்று நான் புரிந்து கொண்ட நேரம் கசப்பான நேரம். இவ்வளவு நாள் கழித்து என் மனம் அதை ஏற்கிறது. அடக்கமே அன்னைக்கு முக்கியம் என்பதால், அதைப் பெற நான் முயன்றபொழுது, எல்லோரையும் ஒரு முறை திட்டினேன். அதுவே நான் அடக்கத்தை மேற்கொண்டதன் விளைவு. ஒரு முறை வீட்டிற்கு வருபவர்கட்கெல்லாம் நமஸ்காரம் செய்தேன். மூன்றாம் நாள் பெரும் பலன் வந்தது. அத்தோடு அதை நிறுத்திவிட்டேன். எனக்கு அனைவரும் என் தகப்பனார், தாயார் உள்பட அனைவரும், முதலாளியும் அடங்கியிருப்பதே நான் விரும்புவது. வேறெதை நினைத்தாலும் எரிச்சல் வருகிறது. பிறரிடம் இதமாகப் பேச நினைத்தாலே சண்டை வருகிறது” என்று ஒருவர் இருந்தால், அவர் மனம் இத்தனையையும் மீறி அடக்கத்தை நாடினால், அதன் மூலம் வரும் அதிர்ஷ்டத்தை நாடினால், சமர்ப்பணமான நமஸ்காரம் அவருக்குப் பலன் தரும்.

        நம் பழக்கம் என்னவென்றால் நாம் நம் சுபாவப்படியிருப்போம். அடக்கும் இடத்தில் அடங்குவோம், நம்மை அடக்காத இடத்தில் நாம் பிறரை முடிந்தவரை அடக்க முயல்வோம். ஒருவரைக் குடும்பம் அடக்க முயன்றாலும், தானே தன்னைப் பணிய வைக்க முயன்றாலும் - அதுபோல் எவரும் செய்வதில்லை - முறை கடுமையாக இருக்கும். உலகம் கேலி செய்து, கடுமைப்படுத்தி அடக்கும். தானே செய்வதானாலும், கடுமையான முறைகளையே நாடுவோம். அவற்றிற்குப் பெரும் பலன் உண்டு. முரட்டுத்தனமானவை, மனம் வளர்ந்தவர்க்கு அது தேவையில்லை.

மனதால் பணிவது பெரிது.

உணர்வால் பணிவது அதனினும் பெரிது.

உடலால் அவ்வுணர்வை வெளிப்படுத்துவது முழுமையானது.

பணிவான எண்ணம், உணர்வைச் சமர்ப்பணம் செய்து நமஸ்காரம் செய்வதே முடிவு.

அடக்கம்

1) அடக்கம் என்ற எண்ணத்தை மனம் எரிச்சல்படாமல் ஏற்றபின், அந்த எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்தால் அது பெரிய ஆரம்பம்.

2) எண்ணம் ஏற்றதை உணர்வு ஏற்க, அதாவது உணர்வு பணிவை உணர நாள் அதிகமாகும். அது ஏற்றபின் அதையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

3) உடலின் ஜீவியம் அதை ஏற்று, ஏற்றதையும் சமர்ப்பணம் செய்தால் சமர்ப்பணம் மனதிலிருந்து, நெஞ்சுக்குப்போய், மூலாதாரத்தை அடையும். அதன் கீழ்த் தொடைகளிலும், முழங்காலிலும பாதங்களின் கீழும் சக்கரங்கள் உண்டு. சமர்ப்பணத்தை பாதங்களின் கீழுள்ள சக்கரத்திற்குக் கொண்டு போக வேண்டும்.

4) அடக்கத்தை ஜீவன் ஏற்றதை அங்கிருந்து சமர்ப்பணம் செய்தபின் செய்யும் நமஸ்காரம் - கரம் கூப்புவது - சாஷ்டாங்க நமஸ்காரத்தை 3 தரம் செய்வதைவிட அதிகப் பலன் உண்டு.

5) அம் மனோபாவத்துடன் உடல் தரையில் படிந்து செய்யும் நமஸ்காரம் ஒரு முறை செய்தாலும் யோகப் பலனுண்டு.

 

****

_____________________________________________________________________________________________________ 

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

சொத்து, பணம், குடும்பம் ஆகியவை உணர்வுக்குத் தெம்பை அளிப்பவை.

 உண்மையில் இவை நம் நிலையில்லாத நிலையை நிரந்தரமாக்குபவை. போதையை நம்பி வாழ்பவனைப் போன்றது இந்நிலை.

 

நிலையில்லாத நிலையை நிரந்தரமாக்கும் சொத்து.

_____________________________________________________________________________________________________

 

 

 

 



book | by Dr. Radut