Skip to Content

07.லைப் டிவைன் -கருத்து

"லைப் டிவைன்" - கருத்து -  P. 12.

 If not knowable by thought, It is attainable by a Supreme effort by consciousness.

அறிவுக்கு எட்டாதது ஜீவியத்திற்கு எட்டும்

       பகுத்தறிவுவாதி கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை. அதனால் நம்ப முடியாது என்று கூறுவது அறிவுக்குப் பொருத்தமான வாதம் இல்லை. இதை எளிதில் மறுக்கலாம். நெடுங்காலமாக இக்கேள்விக்குச் சொன்ன பதில்கள் ஏராளம். கேட்பவனை மடக்கிச் சொன்ன பதில்கள் அவை. கேட்பவர் மனம் விரிந்து ஏற்று மகிழும் வகையில் ஸ்ரீ அரவிந்தர் பதில் கூறுகிறார். அவர் கூறும் பதில் மனத்திற்கு மட்டும் திருப்தி அளிக்கக் கூடியதன்று. கேட்டவனுக்கு இதுவரை பதில் சொல்லியவர்களும் காணாத கடவுளைக் காணும் மார்க்கம். அவர் கூறிய பதில் மேலேயுள்ளது.

       கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரை உணரும் தன்மை மனிதனிலிருக்கும். அத்திறமைக்குக் கடவுள் தெரியும். முன்சீப் கோர்ட்டில் வழக்குத் தோற்றுவிட்டால், அதுவே முடிவு என்று நாம் ஏற்பதில்லை. கடைசி கோர்ட்டிலும் வழக்கு தோற்றுவிட்டால், தர்மம், நியாயம் என்று ஒன்று இருந்தால் அது ஜெயிக்கும் என்ற நம்பிக்கையுடையவர்க்கு அது ஜெயிக்கும். அதுபோல் கலெக்டர் போட்ட உத்தரவு ரத்தாகியிருக்கிறது. வேலைக்குப் போன பின் படித்து பட்டம் பெற சட்டமில்லாத காலத்தில், சட்டம் உள்ள சிலரும், வேலைக்குப் போன பின் படிப்பது என்பது கறுப்பு நாய் வெள்ளை நாயாவதாகும் என்று கைவிட்ட காலம். சரியாக 50 ஆண்டுகட்கு முன், ஒரு கறுப்பு நாய் supreme effort of consciousness பெருமுயற்சியை மேற்கொண்டு வெள்ளை நாயாயிற்று. தொடர்ந்து மேலும் இருபட்டங்கள் எடுத்து பதவி உயர்வு பெற்றதால், அடுத்த 10 ஆண்டுகளில் அவ்வூரில் 73 பேர் பட்டம் பெற்றனர். ஒருவர் Ph.Dயும் எடுத்தார். ஒரு சமயம் அவ்வூரில் உள்ள எல்லாப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பிரைவேட்டாகப் பட்டம் பெற்றவர்களாக இருந்தனர்.

       அறிவு ஜீவியத்திலிருந்து வருவதால், அறிவுக்குப் புலப்படாததை ஜீவியத்தில் தேடலாம் என்பது பகவான் பதில். தேடியவர் பெறுவதென்ன? ஜடம் சக்திமயமான அலைகளாக ஜீவியத்திற்குத் தெரிகிறது. விஞ்ஞானி சோதனை மூலம் கண்டதை மனிதன் ஜீவியத்தின் முயற்சியால் காண்கிறான். ஆன்மா ஹிருதய சமுத்திரத்தின் அலை என்பதை ஏற்பவர்கட்கு இரண்டும் சக்தி எனப் புலப்படும். மனம், வாழ்வு, ஜடம், ஆன்மா ஆகியவை சக்தியின் அலைகளாகக் கண்டால், அவை அனைத்தும் ஒன்று என அறியலாம்.

       அறிவிலிருந்து ஜடத்தன்மையை அறிந்தது போக ஜீவியத்திற்குப் போவது எப்படி? அறிவு எண்ணமாக எழுகிறது. எண்ணத்தை நிறுத்தினால் மௌனம் வரும். அறிவு விலகும். அறிவு விலகிய பின் நிஷ்டை ஜீவியத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த விளக்கத்தைப் பேசிக் கொண்டிருந்தபொழுதே ஓர் அன்பர் சுவரெல்லாம் நகர்வதுபோல் தெரிவதாகச் சொன்னார். இதெல்லாம் நமக்கில்லை என்று நினைக்கிறோம்.

       அன்னை ஸ்ரீ அரவிந்தர் படத்தில் அவர்கள் உயிரோடிருப்பதைக் கண்ட பக்தர்கட்கு இது முயன்றால் பலிக்கும். மனம் குதூகலமாக இருக்கும்பொழுது ஒரு பக்தர் வேணுகானம் கேட்டது என்றார். அவர் போன்றவர்க்கு இது முடியும்.

முயற்சி பெருமுயற்சியாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒருவகையில் சூட்சுமம் வேண்டும் - படத்தை உயிருடன் காண்பது, கனவில் அன்னையைத் தரிசிப்பது, சூட்சுமத் தரிசனம் பெறுவது, அந்தராத்மா குரல் கேட்பது, வேணுகானம் கேட்பது, நடக்கப் போவது கனவிலோ, கருத்திலோ முன் கூட்டித் தெரிவது போன்றவை சூட்சும அம்சங்கள். இரவில் உயிர் உடலைவிட்டுப் பிரிந்து மேலே போவதும் சூட்சுமமே.

 

****

 

 



book | by Dr. Radut