Skip to Content

07.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம் 

 (சென்ற இதழின் தொடர்ச்சி....)

       சமூகத்திற்குப் பயன்படும் பொருள்கள் (resources) ஏராளம். மரம், நிலக்கரி, எண்ணெய் போன்றவை. இவை தீர்ந்துபோனால் என்ன செய்வது என்ற குரல் பல திசைகளிலும் எழுகிறது. இவை எப்பொழுதும் தீராது என்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பயன்படும் பொருள்களின் ஒரு பகுதி தீர்வதற்குமுன் சமூகம் வேறு ஒரு பொருளைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. புதுப்புது வேலைகளை ஆரம்பிப்பதால் பழைய பொருள்கள் தேவைப்படா. கார் வந்த பிறகு குதிரைக்கு வேலையில்லை. டிராக்டர் வந்த பிறகு உழுவதற்கு மாடு தேவையில்லை. பேப்பர் வந்தபின் பனைஓலை அவசியமில்லை. பணம் அதுபோல் ஒன்று. பணத்திற்குப் புதுப்புது உபயோகங்கள் ஏற்படுவதால் பண உற்பத்திக்கு அளவு என்பது கிடையாது.

       அளவு கடந்து பணம் உற்பத்தி செய்ய முடியும் என்று வைத்துக்கொள்வோம், அது முடியுமானால், எவரும் அதைச் செய்ய முன்வர மாட்டார். உதாரணமாக, இன்று ஒருவரால் அளவு கடந்து பல பொருள்களைப் பெருக்க முடியும். அதை எவரும் செய்வதில்லை. ஷர்ட், பேனா, சாமான், கடிகாரம், செருப்பு போன்ற பொருள்களை அளவுகடந்து ஒருவரால் வாங்கி வைத்துக்கொள்ள முடியும். அதை எவரும் செய்வதில்லை. ஆனால் அளவு கடந்து சொத்து வாங்க, பணம் சம்பாதிக்க எவரும் பிரியப்படுவார். பணம் பற்றாக்குறையாக இருப்பதால் இனி நாம் அதைச் செய்யலாம். ஜப்பான் அதைச் செய்தது. $12 டிரில்லியன் (டிரில்யன் என்பது ஆயிரம் பில்லியன்; 1 பில்லியன் ஆயிரம் மில்லியன்) பணம் நாட்டில் சேமிப்பிலிருக்கிறது. பாங்கில் போட்டால் வட்டியில்லை. இந்தப் பணத்திற்கு நாட்டில் எந்த உபயோகமும் இல்லை. நமக்கு அப்பிரச்சினையில்லை என்பதால், நாம் அதைச் செய்யலாம். அதைச் செய்யக்கூடிய வழிகளை ஒன்றுவிடாமல் பின்பற்றினால் நாட்டில் பணம் அபரிமிதமாக உற்பத்தியாகும். நாடு அதைச் செய்ய நாட்டின் தலைமை அதை ஏற்கவேண்டும். அதை நான் இங்கு கருதவில்லை. தனிப்பட்டவர் அதைச் செய்ய முன்வர வேண்டும் என்பதே என் கருத்து.

இதைச் செய்யக் கூடிய வழிகள் :

1) இரு துறை ஒன்று சேர்தல். இத்தலைப்பில் சுமார் 50 முதல் 100 காரியங்கள் செய்யலாம்.

2) பணத்தின் வேகத்தை அதிகப்படுத்தலாம்.

3) இன்ஷுரன்ஸை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம்.

4) தவணை முறையை எல்லா இடங்களிலும் சட்டப்படி ஏற்கலாம்.

5) Credit card system பரவலாக அமுல்படுத்தப்படலாம்.

6) பென்ஷன் வசதிகளை அதிகப்படுத்தலாம்.

       இன்று வெளிநாட்டில் அமுல் செய்யப்பட்டவற்றுள் நம் நாட்டில் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவையும் செய்வது நல்லது. இவற்றைச் செய்வதால் உலக நாட்டில் 134வது இடத்தில் உள்ள இந்தியா இந்த முறைகளால் உயர்ந்து 124க்கு அல்லது 100வது இடத்திற்கு வரும். கங்கை - காவிரி திட்டத்திற்கு 60,000 கோடி தேவை. இத்திட்டம் நிறைவேறினால் இலட்சக்கணக்கான நிலங்கள் 100 மடங்கு விளையும். ஆயிரக்கணக்காக மின்சார உற்பத்தி பெருகும். இன்று கரம்பாக உள்ள நிலம் ரூ.5000. ஆனால் கங்கை நீர் வந்தபின் அந்நிலம் 50,000 ரூபாயாக அல்லது லட்ச ரூபாயாக மாறும். இந்த எதிர்காலத்தில் வரப்போகும் விலையை இன்று Govt. Of India Bonds சர்க்கார் பாண்ட் மூலம் - அதன் பகுதியை - பணமாக்கும் முறை எல்லாச் சர்க்காரும் செய்வது. இத்திட்டத்திற்குத் தேவையான எல்லாப் பணமும் உள் நாட்டிலேயே எழுப்ப முடியும். நாட்டில் புது ரோடு போடுவதற்கும், புதிய மின் திட்டங்கள் உற்பத்தி செய்வதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில் தேவைப்பட்ட அத்தனை திட்டங்களுக்கும் தேவையான பணத்தை நாடே உற்பத்தி செய்ய முடியும். அத்திட்டங்கள் நாட்டை வளமாக்கும்.

1) இரு துறைகள் சேர்வது - இன்று உலகத்தில் புரட்சிகரமான மாறுதல் கம்ப்யூட்டர் - டெலிகம்யூனிகேஷன். இவை சேர்ந்தபின் வந்தவை Internet, Web ஆகியவை. இதுவரை நடந்ததில் இதுவே பெருமாறுதல். இரு துறைகள் சேர்ந்தால் இதுபோன்ற புரட்சி நடப்பது வழக்கம். ரயில்வே வந்த புதிதில், ரயில்வே தங்களுக்கே தந்தி ஏற்படுத்தியது. இத்தந்தி வந்ததால் ரயில்வே நடந்தது. பாங்க் ஏற்பட்டு, வியாபாரத்துடன் சேர்ந்தபொழுது பாங்க் இலாபகரமாயிற்று. சுமார் 1950வரை மற்ற நாடுகளில் இதுபோன்று இரு துறைகள் சேர்ந்ததுபோல் நம் நாட்டில் இதுவரை வரவில்லை. ரயில்வேயும், பஸ் ரூட்டும், சில இடங்களில் சேர்ந்து செயல்படுவதைக் காணலாம். அதுகூட இல்லை. ரயில்வே எல்லா இடங்களிலும் எல்லா பஸ் ரூட்டுடன் இணையவேண்டும். இதுபோன்று சுமார் 100 இணைப்புகளைக் கூறலாம். இதற்கெல்லாம் பணம் தேவையில்லை. இது தோட்டத்துப் பச்சிலை.

2) பணம் நம் நாட்டில் பிற நாடுகளின் நடமாடும் வேகத்தில் பாதிக்கும் குறைவாக நடமாடுகிறது. வேகத்தை அதிகரிக்க சர்க்காரும், வியாபாரமும் செய்யக் கூடியவை ஆயிரம். நம் நாட்டு நிலையில் நாம் 30% வேகத்திலிருந்து 100% வேகத்திற்குப் போக முடியாது. ஆனால் 60%க்குப் போகலாம். அந்த வேகத்தால் நாட்டில் பணம் இரு மடங்காகும். இவற்றைச் செய்ய முதல் தேவையில்லை, முனைந்து செயல்பட வேண்டும்.

3) இன்று இன்ஷுரன்ஸ் நாட்டில் அதிகமாகப் பரவியுள்ளது. அது மேல்நாடுகளில் உள்ளதில் 1/100 பாகம்கூட இல்லை. ஒரு மத்தியப் பிரதேஷ் மந்திரி அமெரிக்காவில் விமானத்தில் பிரயாணம் செய்தபொழுது கால் அடிபட்டுவிட்டது. அதை அவர் புகாராகக் கூறவில்லை. அவர் இந்தியா திரும்பிய 6 மாதத்திற்குப் பின் அக்கம்பனியிலிருந்து கடிதம் வந்தது. "உங்கள் கால் விமானப் பயணத்தில் காயம்பட்டதை நாங்கள் இன்ஷுரன்ஸ் கம்பனிக்கு எழுதி நஷ்டஈடு பெற்ற தொகையை இத்துடன் அனுப்புகிறோம்'' என்று இலட்ச ரூபாய் செக்கை அனுப்பிற்று. எனக்கு அதைச் சொல்லியவருக்கு அது இலட்ச ரூபாயா அல்லது கோடி ரூபாயா என விளக்க முடியவில்லை. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கட்கு அந்நாட்டில் இன்ஷுரன்ஸ் செய்யும் சேவை தெரியும்.

இன்ஷுரன்ஸ் என்பது வரப்பிரசாதம். உலகம் கண்டுபிடித்த அற்புதம். பென்ஷனுடைய அருமை பென்ஷனில்லாதவர்க்குத் தெரியும். வயோதிகத்தில் காப்பாற்ற மனிதரில்லாதவர்க்குக் குடும்பத்தின் அருமை தெரியும். சிறு பிரீமியம் கட்டி பெரிய வசதியைக் கொடுப்பது இன்ஷுரன்ஸ். அமெரிக்காவில் இன்ஷுரன்ஸ் இல்லாத இடமேயில்லை என்றாலும், இன்ஷுரன்ஸை சமூகம் முழுவதும் ஏற்றால் எவ்வளவு பலன் பெற முடியுமோ அதில் 1/100 கூட அமெரிக்காவில் இன்று நடைமுறையிலில்லை. அதிகபட்சம் இந்தியாவில் எந்த அளவு இன்ஷுரன்ஸ் இன்றுள்ள நிலையில் ஏற்கப்பட முடியுமோ அந்த அளவு ஏற்கப்பட்டால் கடந்த 10 ஐந்தாண்டுத் திட்டங்கள் செய்ததை அது செய்யும் என்ற கருத்து இன்று இந்தியாவில் இல்லை.

4) மணிலா மார்க்கட் 60 ஆண்டுகட்கு முன் ஏற்பட்டபொழுது விவசாயிக்கு பெரிய உதவி. வியாபாரிகள் எடையில், விலையில் செய்யும் தில்லுமுல்லுகள் விலக்கப்பட்டன. ரூ.1000 மணிலா வியாபாரம் செய்ய இன்று மார்க்கட் கமிஷன் 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் ஆகும். பழைய முறைப்படி எடை ஏமாற்றப்படும், விலை ஏமாற்றப்படும், வட்டியாக பணம் போகும், விவசாயி வீட்டிற்கு 700 ரூபாய் எடுத்துச் செல்வான். மார்க்கட்டை ரயில், பஸ் போக்குவரத்துடன் இணைப்பது, ரேடியோ, T.V. ஸ்டேஷனுடன் இணைந்து செயல்படுவது, நியூஸ் பேப்பருடன் முழு உறவு கொள்வது, மார்க்கட்டைப் பற்றிப் பள்ளியில் போதிப்பது, போன் சர்வீஸுடன் சேர்ந்து செயல்படுவது போன்ற அநேக காரியங்களைச் செய்தால், மார்க்கட் விரிவடையும். சமூகம் தன் முயற்சியால் முன்னேற உதவும் காரியங்கள் இவை. இதுபோல் செய்யக்கூடியவை ஏராளம். தவணைமுறை கடந்த 10 அல்லது 20 வருஷமாக அமுலிலிருப்பது நாம் பெற்ற சௌகரியம். இம்முறை சமூகத்தில் 10 அல்லது 15% தான் செயல்படுகிறது. முழுவதும் செயல்படலாம்.

5) Credit கார்டு சிஸ்டம் ஆரம்பக் கட்டத்திலிருக்கிறது. இது வளர வேண்டும். இது பரவினால் பணம் பெருகும். 1937இல் போர்ட் கம்பனி முதலாளி பாங்க்கை நம்பாமல் பணத்தை வீட்டில் வைத்திருந்தார். நம் நாட்டில் 1970, 1980வரை பாங்கில் பணம் போடும் பழக்கம் அதிகமில்லை. இப்பொழுது இது நடைமுறைக்கு வருகிறது.

. வீட்டில் உள்ள பணத்தைப் பாங்கில் போட்டால் நாட்டில் செல்வம் பெருகும் என்பது புரியாதது போலிருக்கிறது.

. வீட்டில் பெட்டியில் பணமிருந்தால், அது பத்திரமாக இருக்கும், தூக்கம் வராது.

. பாங்கில் போட்டால், அது ஒரு தொழிலதிபருக்குப் போய் தொழில் வளர உதவும்.

. தொழில் வளர்ந்தால் உற்பத்தி பெருகி, பணம் பெருகும்.

. டெபாசிட் போட்டவருக்கு வட்டி வரும்.

. Credit கார்டில் பணம் பெருகுவதை விளக்குவது சுலபமன்று. ஆனால் credit card பயன்படுத்தினால் பணம் ஏராளமாகப் பெருகும், அதனால் நாம் அதை ஏற்கவேண்டும்.

5) பென்ஷன் பெறுபவருக்குச் சௌகரியம். பென்ஷன் தருவதால் சர்க்காருக்குச் செலவு. அதனால் நாட்டில் பணம் பெருகும் எனக் கூறுவது விளங்காது. பென்ஷனிருப்பதால் மனிதனுக்குச் சர்க்கார் மீதும், சமூகத்தின் மீதும் நம்பிக்கை வளரும். நம்பிக்கை பணம். நம்பிக்கை வளர்ந்தால் பணம் பெருகும். நாட்டில் பணம் பெருக இவை முக்கியமான வழிகள். இதேபோன்று சொல்லக்கூடியவை ஏராளமாக இருக்கின்றன.

       துணி, பேப்பர், ரேடியோ, பேனா, போன்ற சரக்குகள் ஆரம்பத்தில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. நாளடைவில் அவை மக்களிடையே பரவி வரும்பொழுது மலிந்துவிடுகின்றன. அந்நிலைக்குப் பிறகு அப்பொருள்களுக்குக் கிராக்கி இருப்பதில்லை. அவற்றிற்கு (use value) பயன்படும் திறமையுண்டு. பயனுண்டு, கிராக்கியில்லை என்ற நிலை ஏற்பட்டால், அவற்றை எவரும் சேகரம் செய்யமாட்டார்கள். பணத்தால் வாங்கும் பொருள்களுக்கு (saturation point) சமூகத்தில் நிறையும் நேரம் வருவதால், பணத்திற்கும் நிறையும் நேரம் வரும். இனி பணத்திற்கு (use value) பொருள்களை வாங்கும் திறமையுண்டே தவிர சேமித்து வைப்பதால் பலன் இல்லை என்ற நிலை வரும்.

. பொருள்கள் வந்த புதிதில் கிராக்கியாக, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

. நாளடைவில் கிராக்கி மலிவாகி, விலை குறைகிறது.

. அந்நேரம் அவை பயன்படும், வேறு உபயோகமில்லை.

. ஒரு பேனாவை எழுதப் பயன்படுத்தலாம், அதற்கு இன்று வேறு பயனில்லை.

. பணம் இன்றும் புதியதாக இருப்பதால் (scare) அதற்கு மதிப்பு, கிராக்கியுள்ளது.

. ஒரு நாள் பணம் சமூகத்தால் நிறைந்து மலியும். அன்று அதற்கு (exchange value) பொருள்களை வாங்கும் திறன் மட்டுமிருக்கும். சேமித்தால் பயன்படாது.

       எவ்வளவு காற்றிருந்தாலும் நாம் தேவையான அளவுக்கே மூக்கால் பயன்படுத்துகிறோம். அதிகமாகப் பயன்படுத்த முடியாது. தேவையான அளவுக்குத் தாராளமாகப் பயன்படுத்த காற்று அபரிமிதமாக இருக்க வேண்டும் என்பது அவசியம். காற்றுபோல் பணம் ஒரு நாள் தேவைக்கு மட்டும் பயன்படும் அளவுக்கு சமூகத்தில் அளவுகடந்து பெருகும். எனவே,

அபரிமிதமான பணம் அவசியம் தேவை.

       பணம் பெருகுவதால் என்ன பயன்? ஓரளவுக்குப் பெருகும் வரை நாம் பணத்தால் தேவையான பொருள்களை வாங்குகிறோம். இனி வாங்க வேண்டிய பொருள்களில்லை எனில் பணம் சேமிப்பாகிறது. சேமிப்புக்கு வட்டியாக வருமானம் வருவதால் மனிதனுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை (leisure) என்று ஓய்வுண்டாகிறது. ஓய்வு என்பது நம் மனத்திற்கு ஓய்வு. அதிலிருந்து புதுக் கருத்துகள் எழும். புது எண்ணம் புதுத் தெம்பை அளிக்கும். முன்னேற்றத்திற்கு முடிவில்லை என்பதை புதிய சக்தியை அளவு கடந்து உற்பத்தி செய்யலாம் என்று கூறலாம். சக்தி பணம்.

அளவுகடந்த பணத்தை முடிவில்லாமல் உற்பத்தி செய்யலாம்,

என்ற கருத்து தெளிவாகிறது.

தொடரும்....

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாமறிந்த தியானத்தைவிட பூரண யோகத்திற்குரிய தியானம் வேறுபடும்.செயல்திறன் பொதுத்திறனைவிட வேறுபட்டது. பள்ளிப்படிப்பு விவேகத்திலிருந்து வேறுபட்டதுபோல் அவை வேறுபடும்.


 



book | by Dr. Radut