Skip to Content

08.சாவித்ரி

"சாவித்ரி"

Love cannot live by heavenly food alone.

சொர்க்கத்தால் மட்டுமே அன்பால் வாழ இயலாது.

       முரட்டுத்தனமான வாழ்வு கனிந்து ஆசையாகிறது. ஆசை மலர்ந்து அன்பாகி, அதை அனைவரிலும் கண்டு இணைத்துத் தன்னைப் பூர்த்தி செய்கிறது என்பது Life Divineஇல் சைத்தியப் புருஷனைப் பற்றி எழுதிய அத்தியாயத்தின் சுருக்கமாகப் பகவான் கூறுகிறார்.

. கொடுத்தால் பெற வேண்டும் என்ற சட்டம் அன்பிற்கில்லை. அன்பால் கொடுக்க முடியும், பெற இயலாது.

. அன்பு என ஆன்மீகம் கூறுவதில் தாயன்பும் சேராது. பெற்றோர்,உடன்பிறந்தவர் மீதுள்ளது இரத்த பாசம். அன்பு தூய்மையானது. மனிதன் காதல் என்பதிலுள்ள பிரியத்தைக் கடந்தது.

. சச்சிதானந்தத்திலுள்ள ஆனந்தம் ஆன்மாவில் பிரதிபலிப்பது அன்பு.

. சிருஷ்டி இறைவனை விட்டுப் பிரிந்தபொழுது, மீண்டும் சேர வேண்டும் என்பதற்காக இறைவன் அளித்த இணைப்பு அன்பு.

. உடல், ஜடம். ஜடத்திற்கும் அன்புண்டு. ஜடம் பெற முடியாத அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்தால், முதலில் தான் பெற வேண்டும் என்று கூறும் என்கிறார் பகவான். அன்பிற்கும் சுயநலம் கற்பிப்பது ஜடம்.

. உலகை விட்டு மோட்சத்தை நாடுவது தவம்.

. சொர்க்கத்தில் பிறந்த அன்பும் அதனால் மட்டும் வாழ இயலாது. அதற்கும் வாழ்வுண்டு. ஜடமே அன்பிற்கு நிரந்தர வாழ்வளிப்பது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

       அன்பு என ஆன்மீகம் கூறுவது உலகம் அறியாதது. ஒரு துளி உலகுக்கு வந்தால் அதைத் தாங்க முடியாமல் உலகம் நொறுங்கிவிடும். ஏசுபிரான் உலகுக்கு அளிக்க முயன்றது அது. அதை மனித கற்பனைக்காவது எட்டும்படிக் கூற முடியுமானால்,

கனிவின் இனிமை கனத்துப் பழுத்தால்

உலகம் அதை ஏற்றுப் போற்றிப் பணியும்

எனக் கூறலாம்.

       5.30க்கு சூரியோதயம் என்றால் 4.15, 4.20க்கே நிலம் தெளியும். அன்பு சூரியோதயமானால் மனம் அதை அறிவால் தொட முயல்வது சூரியோதயம் போலாகும். கருமித் தகப்பனார், ஊதாரி மகன், தறுதலைக் கணவன், அடங்காப்பிடாரி மனைவி, துரோகம் செய்த நண்பன், இவர்கள் நமக்குச் செய்தது அவர்களுடைய ஆன்மாவுக்கு இதமானது எனக் கொண்டு அவர்கள் செய்கைகளைப் புரிந்து மனம் ஏற்றபின், அவர்களுடைய சந்தோஷத்தில் நம் மனம் சந்தோஷம் பெற்றால், அது கனியும். கனிவு கடைசி கட்டத்தில் இனிமை பெறும். அது கனத்துப் பழுத்தால் எதிரி மனம் மாறி, செயல் மாறி, அவன் நடத்தைக்கு நேர் எதிராக நம் மனம் இனிப்பதாக நடப்பான்.

அது அன்பின் சாயல்.

****


 



book | by Dr. Radut