Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

கர்மயோகி

12. ஆனந்தம் - விளக்கம்

தீமை எப்படிப் படைக்கப்பட்டது என்பதைக் காண்போம். நாம் சத் என்பதை ஆராய்ந்தறிந்தோம். சத் அழியா ஆனந்தமாக அஸ்திவாரத்தில் உள்ளது. அதை விலக்க முடியாது, நமக்குணர்வுண்டு. முடியாது என்பதன்று; உணர்ச்சி மேலெழுந்தவாரியாக வெளியில் உள்ளது. அது மூன்று நிலைகளில் உள்ளது. அவை அனந்த ஜீவனின் ஆழத்து அலைகள். சில சமயங்களில் அவை நுரை. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து தீமை என்ன என நாம் முடிவு செய்யலாம். ஜீவனில் பிரம்மம் அனந்தம். அது பகுக்க முடியாது. அதற்கு உள்ளுறை சக்தியுண்டு. அது அழிக்க முடியாத சக்தி. அது அனந்தம். அது தன்னையறியும் ஜீவனின் சக்தி. தன்னையறிவதற்கும் சக்தியுண்டு. அதை இயற்கை என்றோ, அறிவு என்றோ கூறலாம். அது தன்னைப் பற்றிய ஞானம். அதை ஜீவனின் ஆனந்தம் எனலாம். அது முடிவற்ற ஆனந்தம், அழியாதது. உலகம் ரூபமயமானது. அரூபமும் உண்டு. அகண்டத்தை அறியும் திறனும் உண்டு. அது முடிவற்ற திறன். பகுக்கப்படாத, பகுக்கமுடியாத ஜீவன் அது. தோற்றங்கள் பல. அவை அகண்டம் கண்டமாகப் பகுக்கப்பட்ட தோற்றம். இதுவே சத் எனப்படும் சுயமானது, எல்லாவற்றிலும் உள்ளது. கண்டம் பகுக்கப்படுவது அதன் தன்மை. அது ஆனந்தம். சத்தின் அனுபவம் நிலையானது. அவ்வனுபவம் ஆனந்தமானது. ஜடம் உணர்வற்றது. அதுவும் தோற்றம். ஜடத்தில் தன்னையறியாமலிருப்பது ஆத்மா. ஜடம் தன் பழக்கத்திற்கு அடிமைப்பட்டது. அது ஆழ்ந்த பழக்கமில்லை. அப்பழக்கமும் சத்தினுடைய ஒரு வகையே. ஜடத்துள் சித்-சக்தி அசையாது, நிலையாக, உள்ளுறைவதை நமது ஆன்மா காண்கிறது. ஜடத்திற்கு உணர்ச்சியில்லை. ஜடத்தினுள் பிரம்மத்தைக் கண்ட ஆன்மா, உணர்வு இல்லாத வாழ்விலும் அதையே காண்கிறது. இதைக் கண்ட ஆன்மா அதனுடன் சுமுகமாக இருக்கிறது. அனந்தமான ஆனந்தத்தை ஆன்மா கண்டது. அவ்வானந்தம் அழிவற்றது, பூரிப்புடையது, அனைத்தையும் தன்னுட்கொண்டது. இந்த இன்பம் அதன் சொந்த இன்பம். இந்த பிரம்மம் அனைவரிலும் உள்ள பிரம்மம். நாம் பிரம்மத்தை அனைவரும் நினைப்பதைப்போல் புரிந்துகொள்கிறோம். இது மேலெழுந்தவாரியானது. நாம் மேல் மனத்தில் விழிப்போடிருக்கிறோம். நாம் அங்கேயே சஞ்சாரம் செய்கிறோம். பிரம்மம் நம் பார்வையில்லை.

அது நினைவைக் கடந்தது, பெரியது, எல்லா ரூபங்களிலும் உள்ளது இப்பிரம்மம். இன்ப, துன்பங்களிலும் இப்பிரம்மம் உள்ளது. இரண்டு மற்றவற்றிலும் பிரம்மம் உண்டு. ஆத்மா மறைந்திருந்தாலும் ஆழத்திலிருந்து அது செல்வாக்குடன் செயல்படுகிறது. அதுவே பொருள்களை உயிருடனிருக்கச் செய்கிறது. மனிதர்களும், மற்றவையும் வாழ ஆசைப்படுவது இதனால்தான். அதன் ஆட்சிக்கு அனைவரும் உட்பட்டுள்ளனர். விலங்குகள் தன்னிச்சையாகச் செயல்படுவதை நாம் காண்கிறோம். அது பிரம்மம் உணர்வைக் கண்டுகொள்வது. உணர்வு வாழ விரும்புகிறது. ஜடம் அழியாதது. ஜடம் உடலில் பிரம்மம் தன்னைக் காண்பதாகும். அமரத்துவத்தை மனம் உணர்வதும் பிரம்மத்திலிருந்து எழுவதாகும். ரூப வாழ்வில் எல்லாக் கட்டங்களிலும் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துவதில் நாம் இதைக் காணலாம். தற்கொலை செய்யும் எண்ணத்தை நாமறிவோம். வாழும் வேட்கையின் எதிரான உணர்வு தற்கொலை. அடுத்த நிலைகளை எட்ட பிரம்மம் விரும்பினால், இவ்வுடலிலிருந்து பிரம்மம் விலகும். சத் என்பது ஆனந்தம். வாழ்விருப்பதற்குக் காரணம் ஆனந்தம். பிறவியின் முடிவு ஆனந்தம். ஆனந்தம் முடிந்தால் சிருஷ்டி முடிகிறது. உபநிஷதம், "அனைத்தும் ஆனந்தத்திலிருந்து பிறந்தன. அவை ஆனந்தத்தால் வாழ்கின்றன. அவை ஆனந்தத்தில் முடிகின்றன'' என்று கூறுகிறது.

பழைய மதவாதிகள் நெடுநாளாகச் சண்டையிடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சட்டம் பேசுகிறார்கள். சத்புருஷனுடைய மூன்று அம்சங்களும் ஒன்றே. இந்நோக்கம் அவர்களை இணைக்கும். இந்த மூன்று அம்சங்களும் பார்வைக்கு வேறு. மனம் அவற்றை மூன்றில் ஒன்றாகக் காண்கிறது. பார்வைக்கே அவை பிரிக்கப்படக்கூடியவை. நிகழ்ச்சிகள் ஜீவியத்தைப் பிரிக்கின்றன, அல்லது பிரிக்கும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் பிரிவினையில்லை. உலகை நாம் தோற்றமாகக் காண்கிறோம். அது மாயையாகத் தோன்றுகிறது. சத்புருஷனுடைய பார்வையில் உலகம் மாயையாகத் தோன்றுகிறது. சத்புருஷன் ஆனந்தம், சலனமற்றது, பகுக்கப்படாதது. மாயைக்கு ஆரம்பத்தில் இந்தப் பொருள் இல்லை. அதற்குரிய பொருள் வேறு. மாயை என்பது அறிவுள்ள ஜீவியம். மாயை உலகைத் தன்னுட்கொண்டது. அனைத்தையும் தழுவவல்லது; அளக்கவும், வரையறுக்கவும் வல்லது. அப்படியானால் மாயை என்பது ரூபம் தரும் ஜீவியம். எல்லையிட்டு, அளந்து, உருவம் கொடுத்து செப்பனிட வல்லது. அறிய முடியாததை அறிய உதவுவது மாயை. அளவற்றதை அளக்க உதவுவது மாயை. அறிவு, திறமை, புத்தி என்பது மாயைக்கு ஆதியில் கொடுத்த அர்த்தம். இப்பொழுது அதற்கு வேறு அர்த்தம். இல்லாதது, திருடு, சூது என்று இப்பொழுது நாம் அதை அறிகிறோம். இத்தவறான பொருளின் ஒரு சாயலை தத்துவங்கள் பயன்படுத்துகின்றன. மந்திரம், மாஜிக், கற்பனை என உலகம் இப்பொழுது மாயையைக் கருதுகிறது.

உலகம் மாயை. உலகம் படைக்கப்படவில்லை என்ற பொருளில் உலகம் மாயையில்லை. உலகம் பிரம்மம் கண்ட கனவு எனலாம். என்றாலும் உலகம் கனவாக பிரம்மத்திலிருக்கும். முடிவாக உலகம் உண்மையானால் உலகம் இன்று பிரம்மத்திலிருக்கும். நிரந்தரமானது இல்லை என்ற பொருளில் உலகம் மாயை எனக் கூற முடியாது. குறிப்பிட்ட உலகங்கள் மறையலாம். குறிப்பிட்ட ரூபங்கள் மறையலாம். ஜடஉருவமே மறையலாம். சிருஷ்டியிலிருந்து அவை பிரம்மத்திற்குப் போகலாம். தொடர்ந்து நிலையாக இல்லை என்றாலும் தொடர்ந்து மீண்டும், மீண்டும் வருகின்றது. என்றும் அழியாத தன்மையை அவை அடிப்படையிலும், முழுமையிலும் பெற்றுள்ளன. அம்சத்திலும்,தோற்றத்திலும் நிரந்தரச் சலனமுடையவை அவை. பிரபஞ்சம் இல்லாத நேரம் இருந்ததா? நமக்குத் தெரியாது. சத்புருஷனுக்கு ஜீவனுடைய லீலை இல்லாத நேரமுண்டா? நாமறியும் உலகம் மட்டுமே இருந்ததா? பிரம்மத்தினின்று எழுந்து, அதிலேயே சங்கமமாகும் நிலையே இருந்ததா? நாமறியோம்.

அனந்தமான சத்தின் அடிப்படையான சத்தியமில்லாததால் உலகம் மாயை எனப்படுகிறது. உலகம் சத்புருஷனுடைய சிருஷ்டி. அது சூன்யத்தில் படைக்கப்படவில்லை. உலகம் சூன்யமன்று, சூன்யத்தில் உற்பத்தியானதன்று. உலகம் அழியாத சத்தியத்தில் அழியாத சத்தியமாக சத்புருஷனிலிருந்து படைக்கப்பட்டது. அதன் ஆதி, உட்பொருள், பொருள் ஆகியவை அடிப்படையானவை, அதுவே சத்தியமான சத். அதன் ரூபங்கள் பிரம்மத்தின் மாறும் ரூபங்கள். உலகம் தன்னை அப்படிக் காண்கிறது. உலகம் தன் சித்-சக்தியால் நிர்ணயிக்கப்படுகிறது. அது சிருஷ்டிக்கும் திறனுடையது. அந்த சக்தி சிருஷ்டியில் வெளிப்படும். மனத்தின் புலன் தவறு செய்யும். அதற்குத் திறமையில்லை. அதனால் மாயை ஏற்படுகிறது. நம் இயலாமையை நாம் கடவுளுக்கோ, அனந்த ஜீவியத்திற்கோ கற்பிக்க முடியாது. அப்படிச் செய்வது அடாவடித்தனம். எனவே நாம் உலகை அனந்த ஜீவியத்தின் மாயை எனலாம். அனந்தஜீவியம் மனத்தைக் கடந்தது. மனத்தைவிடப் பெரியது. எனவே அது மாயையைக் கடந்தது. மாயை என்பது பொய். சத்தின் அடிப்படையோ, பொருளோ பொய்யன்று. குறைகளும் தவறும் அகந்தைக்குரியன. அகந்தை பிரிவினைக்குரியது.அதனால் உலகம் பிரம்மத்தின் சத்தியமில்லை என நாம் - அகந்தை - கூறலாம். ஜீவியம் சுதந்திரமானது. அது பெருகும், மாறும். ஆனால் மேலெழுந்தவாரியானது. அதுவும் கண்டம். ஆகையால் நாம் உலகைத் தோற்றமான உண்மை எனலாம். அடிப்படையான, சலனமற்ற ஐக்கியத்தாலானதன்று உலகம். நம் ஜீவியம் பிரிவினைக்குட்பட்டது. அனந்தஜீவியத்தில் பகுதியில்லை.

உலகை ஜீவியத்தின் நோக்கில் மட்டும் காண்போம். அதிலிருந்து சித்-சக்திக்கு வருவோம். உலகம் சக்தியின் சலனம் எனக் காண்கிறோம். அந்த சக்தி இரகஸ்ய உத்தரவை ஏற்றுச் செயல்படுகிறது. உலகைத் தன்னுடையதாகக் கொண்ட ஜீவியம் உறுதி (will) உடையது. இந்த உறுதி உலகை நடத்துகிறது. உலகம் அவ்வுறுதிக்குப் பணிகிறது. உலகம் பிரகிருதியின் செயல், அது ஒரு செயல்படும் சக்தி. புருஷனைத் திருப்தி செய்ய பிரகிருதி வேலை செய்கிறது. புருஷன் ஜீவன். அது தன்னையறியும். புருஷன் அனுபவிக்கிறது. அது புருஷனுடைய லீலை, பிரகிருதியில் வெளிப்படுகிறது. புருஷன் அச்செயல்களுடன் ஈடுபடுகிறான். உலகம் அன்னையின் திருவிளையாடல். தன்னை அனந்தமான ரூபங்களில் வெளிப்படுத்த அன்னை முயல்கிறார். காலத்தைக் கடந்த அனுபவம் பீறிட்டெழுவதில் அன்னை வெளிப்படுகிறார்.

ஆனந்தத்தின் நோக்கில் உலகைக் காணலாம். சத்புருஷன் காலத்தைக் கடந்தவன். அவனுடைய ஆனந்தம் நம்முள் சுய ஆனந்தமாகிறது. இதையே லீலை என்கிறோம். லீலையை அறிவது சித்தி. குழந்தையின் இன்பம், நடிகனின் இன்பம், கவி அனுபவிக்கும் இன்பம், மெக்கானிக் காணும் இன்பம், அனைத்தும் லீலை. ஆத்மா என்றும் இளமை பூண்டிருப்பதின் இன்பம் லீலை. அது என்றும் உள்ளது, முடிவற்றது. அது சிருஷ்டி, மீண்டும், மீண்டும் தன்னை அவனில் சிருஷ்டிப்பது. தன்னை தனக்கே காண்பிப்பதில் பெறும் ஆனந்தத்திற்காக அது சிருஷ்டிக்கின்றது. அது சுயமான சிருஷ்டி. அவனே லீலை, அவனே ஆட்டம், அவனே அரங்கம். சிருஷ்டிக்குரிய மூன்று சட்டங்கள் இவை. நிலையான அமரத்துவத்துடன் உள்ள தொடர்பு அவை. சலனமற்ற சச்சிதானந்தம் அவ்வாழ்வு. அவற்றை மாயா, பிரகிருதி, சக்தி என்கிறோம். இந்தியத் தத்துவம் அவற்றை வெவ்வேறாகவும், எதிரானதாகவும் காண்கிறது. உண்மையில் அவை அடுத்தவற்றுடன் சுமுகமானவை. ஒவ்வொன்றும் அடுத்தவற்றுடன் இணைந்தவை. பூரண வாழ்வுக்கு ஒன்று அடுத்ததற்கு இன்றியமையாதது. நாம் உலகின் பகுதி. உலகம் சக்தியின் சலனம்.அச்சக்தியை ஊடுருவலாம். மேலெழுந்தவாரியானது தோற்றம். ஜீவியம் பின்னணியில் உள்ளது. ஜீவியத்தின் சலனத்தை நாம் காண்கிறோம்.ஜீவியம் தன் அனந்தமான ஜீவியத்தை ஆயிரம் தோற்றங்களில் வெளிப்படுத்துகிறது. இச்சலனம் நடனம். அதன் சாரம், காரணம்,இலட்சியம் அனந்தமான ஜீவியத்தின் லீலை. தன்னை ஆயிரமாயிரம் வகையாகத் தனக்கே காண்பிப்பதில் அது முனைந்துள்ளது. மூன்றும் ஒன்றில் உள்ள நிலை. நாம் உலகை அறிய இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். பிரச்சினையின் வேர் தெரிகிறது. அழிவற்ற, சலனமற்ற ஜீவனின் ஆனந்தம் சலனம் பெற்று அனந்தமாக மாறும் பிரகிருதியின் இன்பமாகிறது. அவற்றின் பின்னால் அவ்வனுபவங்களை ஆதரிக்கும் முழுமையான சத்புருஷனை நாம் கருதவேண்டும். சத்புருஷனுக்கு நிலையான, விலக்கமுடியாத இன்பமுண்டு. அதன்மூலம் அது தன் ஆதரவைத் தருகிறது. இன்பம், துன்பம், இரண்டுமில்லாதது ஆகிய அனுபவங்களை சத்புருஷன் தன் அசைவுகளால் செயல்படுத்துகிறான். இம்மூன்று நிலைகளும் நம் புலனுணர்வாலான வாழ்வைக் குறிக்கின்றன. அதுவே நம் உண்மையான ஆத்மா. மனத்திற்கு இம்மூன்று நிலைகளும் உண்டு. அது உண்மையான ஆத்மாவின் பிரதிநிதியாகும். உண்மையான ஆத்மா உணர்வான அனுபவம் பெற முன் வருகிறது. நமது ஜீவியம் பகுக்கப்பட்ட பகுதிகளாலானது. அதன் முதல் அலை புலன் அனுபவம். பிரபஞ்சம் ஆயிரம் இடங்களில் நம்மைத் தொடுகின்றது. புலன்கள் அந்த ஸ்பரிசத்தை ஏற்று விருப்பு, வெறுப்பைக் காட்டும் முறை உலகம் என்பது. இது முழுமையான, சிறப்பான பிரதிபலிப்பில்லை. சிக்கலான, முரணான இசையாகும். பிரம்மத்தின் முழுமையைப் பெற இது முன்னோடி. முழுமையான, தன்னையுணரும் அனுபவத்தை சத்புருஷன் பெறுவதற்கு இது உலகைத் தயார் செய்கிறது. இது உண்மையான வேணுகானமில்லை. உலகின் சிருஷ்டியில் எல்லாம் நாம் ஒன்றான இறைவனை அனுபவித்து உணரலாம். பிரம்மம் பிரபஞ்சத்தில் வெளிப்படுவதில் நாம் இரண்டறக் கலக்கலாம்.

இது சரியான கண்ணோட்டமானால், இதிலிருந்து சில முடிவுகள் எழுகின்றன. ஆழத்தால் நாம் சத்புருஷன், ஏகன். நம் ஜீவனின் சத்தியம், உலகை அறியும் ஜீவியம், பகுக்கப்படாதது. அது ஆனந்தமயமானது. நாம் பகுதியாகவுமிருக்கிறோம், நாம் விழிப்பில் இருக்கும் பொழுது பகுதி மேலேயுள்ளது. வலி, சந்தோஷம், இரண்டுமில்லாதது ஆகியவை மேல்மனத்திற்குரியவை. புலனுக்குரிய வாழ்வு என்பதால், மேலெழுந்தது. அதன் பின்னால் நாம் என்பது உண்டு. அது பரந்தது, உண்மையானது, ஆழ்ந்தது. அதற்கு எல்லா அனுபவங்களும் ஆனந்தமயமானது. பிரகிருதி படபடப்பானது. மனம் வதைந்து வேதனைப்பட்டாலும் தொடருகிறது. இரகஸ்யமான ஆனந்தம் ஆதரவு தருவதால், அதனால் இவ்வவலங்களை அனுபவிக்க முடிகிறது. நாம் என நாம் கூறுவது மேலெழுந்தவாரியான நடுங்கும் கதிர். அதன்பின் அகண்ட பாதாளமும், பரமாத்மாவும் உள்ளன. மேலே உள்ள அனுபவங்களை அவையிரண்டும் அனுபவிக்கின்றன. அவையிரண்டும் நம் புறத்தை கட்டாயப்படுத்துகின்றன. நம் புறவாழ்வு உலகை மென்மையான புலன்களால் ஸ்பரிசிக்கிறது. அது திரைக்குப் பின்னுள்ளது. இத்தொடர்புகளை அது பண்பாக மாற்றிக்கொள்கிறது. அவை உண்மையான, ஆழ்ந்த, படைப்புத்திறனுள்ள அதிகாரமுள்ள அனுபவங்கள். அதன் ஆழத்திலிருந்து அது மேலே வருகிறது. அவை வலிமை, சுபாவம், ஞானம், வேகம் என எழும். நம் பார்வைக்கு அவற்றின் ஆரம்பம் தெரிவதில்லை. நம் மனம் மேலெழுந்தவாரியாக அசைந்து செயல்பட்டு படபடக்கிறது. நம் மனத்திற்கு ஆழத்தில் நிலைக்கும் அனுபவமில்லை.

நம் வாழ்வில் உண்மை ஒளிந்துள்ளது. ஏதோ ஒரு சமயம் லேசாக சத்தியம் தலைகாட்டுகிறது. நாம் எதை சத்தியம் எனக் கருதுகிறோமோ அது பூரணமானதன்று. நாம் உள்ளே போய் வாழலாம். உள்ளேயுள்ள பிரம்மத்தை நாம் உயிருடன் காணலாம். அதுவே நமது உண்மையான ஆத்மா. அது ஆழ்ந்த, செறிந்த, கனத்த ஆத்மாவாகும். அது அமைதியாக, சந்தோஷமாக, சக்திவாய்ந்ததாக உள்ளது. அது உலகத்திற்குட்பட்டதன்று. உள்ளுறை இறைவன் தன் பீடத்தினின்று ஒளி வீசுகிறான். அது பிரம்மமாகவே இல்லாமலிருக்கலாம். அது உள்ளேயுள்ளதை நாம் அறியோம். மேல்மனத்தின் ஆத்மாவை அது ஆதரிக்கிறது, உதவுகிறது. சிறு குழந்தையின் வேகத்தைக் கண்டு நாம் சிரிப்பதைப்போல் அது நம்மைக் கண்டு சிரிக்கிறது. நாம் உள்ளே போய் இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம். அது உண்மையில் இறைவனின் ஒளி பொருந்திய நிழல். அது மேலெழுந்த அனுபவமில்லை. அதே நிலையில் நாம் உலகத்துடன் உறவாடலாம். நாம் வாழ்விருந்தும், மனத்திலிருந்தும் ஒதுங்கி நிற்கலாம். ஒதுங்கி நின்றால் உலகம் நம் அனுபவமாகும். இவை மேலோட்டமானவை என்பதால் நம் சுபாவத்தைத் தொடாது. நம்மை அது வற்புறுத்தாது. சமஸ்கிருதம் திருப்தியான சொல். மனோமயத்தின்பின், அதை ஆனந்தமயம் என்கிறது. அளவோடுள்ள மனத்தின்பின் அது அளவிறந்த ஆனந்தம். மனம் ஆனந்தத்தின் நிழல், சிதறிய சின்னம். நமது சத்தியம் ஆழத்திற்குரியது, மேல்மனத்திற்கன்று.

வலி, ஆனந்தம், நடுநிலைமை ஆகிய மூன்றும் மேலேயுள்ளது. அரைகுறையான நம் பரிணாமம் செய்த ஏற்பாட்டின் பலனது. அதற்கு பிரம்ம முழுமையில்லை, அவசியமுமில்லை. ஸ்பரிசம், வலி அல்லது சந்தோஷம் தரும். இது பழக்கம். வலிபட வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. ஓரிடத்தில் இன்பமும், மற்ற இடத்தில் வலியையும் அனுபவிக்கிறோம். இது நம் சுபாவத்தின் பழக்கம். அனுபவிப்பவர் அனுமதித்த நிரந்தரத் தொடர்பு அது. நாம் நேர் எதிராக நடக்கலாம். அது நம்மால் முடியும். வலியுள்ள இடத்தில் நாம் ஆனந்தம் பெறலாம். ஆனந்தத்தை நாம் வலியாக உணரலாம். பரந்த ஆனந்தமயபுருஷன் நம்முள் உள்ளது. நீக்கமற நிகழும் ஆனந்தம் அதன் நிரந்தர அனுபவம். நம் மேல் மனத்தை சுதந்திரமாக உணர நாம் பயிற்றுவிக்கலாம். தற்சமயம் போல் வலிப்பட்டாக வேண்டும், பராமுகமாக இருக்கலாம்; சந்தோஷப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. இது பெருவெற்றி. மேல்மனத்தின் பழக்கத்திலிருந்து விடுபட்டு சந்தோஷமாக உலகை அனுபவிப்பதைவிட இது பெரியது. அது ஆனந்தத்தை சுயமாகப் பெறுவதாகும். உலகுக்கு அடிமைப்பட்டு ஏற்பதுண்டு. அடிமைப்படாமல் உலகை ஏற்பதைவிட இது பெரியது. அனுபவத்தின் குறைகளை சுதந்திரமாக ஏற்பது இது இல்லை. குறையை நிறைவாக்கவும், பொய்யை மெய்யாக்கவும் இதனால் முடியும். மனம் இரட்டைகளையறியும். ஆன்மா ஆனந்தத்தை ஆழத்தில் நிரந்தரமாக உணரும்.

வலியும், ஆனந்தமும் பழக்கத்தால் வந்த தொடர்பு. இதைக் காண்பது சிரமமன்று. நம் நரம்பு மண்டலம் சில நிரந்தரமான பழக்கங்களையறியும். நிகழ்ச்சிகளில் பொய்யின் முழுமையை அது அறியும். வெற்றி, ஜெயம், மரியாதை, மானம், அதிர்ஷ்டம் ஆகியவை சந்தோஷமானவை. சர்க்கரை இனிப்பதைப்போல் அவை சந்தோஷம் தரவேண்டும். தோல்வி, ஏமாற்றம், நஷ்டம், அவமானம், தீமை, தரித்திரம் ஆகியவை விரும்பத்தக்கவையல்ல. விளக்கெண்ணெய் கசப்பதைப்போல் அவை வருத்தம் தரவேண்டும். இந்தச் சட்டம் மாறுவது அதற்கு வழக்கத்திற்கு மாறானது, துர்அதிர்ஷ்டம். நரம்பு பழக்கத்திற்கு அடிமையானது. இயற்கையில் நிரந்தரம் வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. அனுபவம் மாறக்கூடாது, மனிதனுக்கும் வாழ்விற்கும் உள்ள தொடர்பு நிலையானது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் ஏற்பாடு இது. மனம் சுதந்திரமானது, வளைந்து கொடுக்கவும், மாறவும் மனம் தகுந்ததாக இயற்கை ஏற்படுத்தியுள்ளது. முன்னேற்றத்திற்கும், மாற்றத்திற்கும் அது அவசியம். மனம் தன்னையறியும் அதிகாரி. தானே அடங்கப் பிரியப்பட்டாலொழிய மனம் சுதந்திரமானது. நரம்பின் ஆட்சிக்கு அது உட்பட்டதன்று. தோல்வி, நஷ்டம், அவமானத்தால் மனம் வருத்தப்படவேண்டும் என்ற அவசியமில்லை. தோல்வியைக் கண்டு மனம் சந்தோஷப்படும். அவமானத்தாலும் பூரிப்படைய மனத்தால் முடியும். நரம்புக்கு அடிமையாக மனம் மறுத்தால் மனிதன் சுதந்திரம் பெறுகிறான். நரம்பிலிருந்தும், உடலிலிருந்தும் மனம் விலகினால், அந்த அளவுக்கு மனிதன் சுதந்திரம் பெறுகிறான். உலகத்தின் ஸ்பரிசத்தை தனக்கு மனிதன் இப்படி உட்படுத்திக்கொள்கிறான். அவன் இனி புறத்திற்கு அடிமையில்லை.

உடல் படும் வலி, அனுபவிக்கும் ஆனந்தம் இந்தச் சட்டத்திற்கு எளிதில் உட்படாது. இந்த லோகம் நரம்புக்கும், உடலுக்கும் உரியது என்பதால் உடல் கட்டுப்படாது. புறம், அதன் ஸ்பரிசம், அதன் வலிமை நமக்கு உடலாலும், நரம்பாலும் வருகின்றன. இங்கும் உண்மை தலைகாட்டும். உண்மை இதுவே. எது ஒருவருக்கு வலி தருகிறதோ,அதுவே அவருக்கு இன்பம் தரும் சந்தர்ப்பமாக மாறினால் இந்த மாற்றம் வரும். நிலைமை மாறினால் வலி ஆனந்தமாகும். நாமுள்ள நிலை மாறும் பொழுது இது நிகழும். சில விஷயங்கள் பெரு வேதனை தரும் என்பது உண்டு. தன்னை மறந்த நிலையில் மனிதன் அவ்வேதனையை அறிவதில்லை. சித்ரவதையான வலியை தீவிரமான உணர்ச்சியுள்ளபொழுது மனிதன் உணர்வதில்லை. பல சமயம் நரம்பு தன்னை அறிந்து வலியை நினைவுபடுத்துவதுண்டு. அது வலியை மீண்டும் கொண்டு வரும். இது தவிர்க்க முடியாததன்று, பழக்கத்திற்குரியது. மந்திரவாதியின் மயக்கத்தில் உள்ளவன் கால் கத்தியால் குத்தினால் அவனுக்கு வலிதெரிவதில்லை. நிலைமை முற்றிலும் மாறுபட்டதால் அவனுக்கு வலிக்கவில்லை. அவன் விழித்த பின் வலி திரும்ப வருவதை மந்திரவாதியால் தடுக்க முடியும். இது ஏன் இப்படி என்பதை சுலபமாக அறியலாம். நாம் விழிப்பில் அறியும் பழக்கம் நரம்பிற்கு அடிமை. மந்திரவாதியால் இப்பழக்கத்தைத் தடுத்து அடிமனத்தைச் செயல்பட வைக்க முடியும். உள்மனம் நரம்பின் அதிகாரி. அது பிரியப்பட்டால் உடலையும், நரம்பையும் ஆட்சி செய்யும். மந்திரவாதி தரும் சுதந்திரம் பிறர் தருவது. நம்மைப் பொறுத்தவரை அது உண்மையான சுதந்திரமன்று. வேகமாக வந்து, விரைவாக விலகும். நாமே இந்த சுதந்திரத்தைப் பெறலாம். கொஞ்சம், கொஞ்சமாக நமக்கு இது சொந்தமாகும். நரம்பையும், உடலையும் மனம் இவ்வாறு வெல்லும். இதைப் பகுதியாகவோ, முழுமையாகவோ பெறமுடியும்.

உடலும் மனமும் படும் வலி இயற்கைக்குரிய உபாயம். இயற்கை என்பது செயலுக்குரிய சக்தி. பரிணாமம் உயர்ந்து எழுவதில் இயற்கை மாறும் கட்டங்களுக்கு அவசியமானது. நமக்கு உலகம் ஒரு நாடகம். பல்வேறு சக்திகளின் மோதலில் உண்டான சிக்கல் போன்ற சிறப்பு இயற்கை. மனிதன் இந்த அலைகடலின் அற்புத மையம். அவன் சிறியவன், செயற்கையாகச் செப்பனிடப்பட்டவன். அவனுடைய சக்திக்கு அளவுண்டு. அந்த சக்தியின் மீது அதிர்ச்சியான தாக்குதல்கள் அதிகம். மனிதனுடைய செயற்கை அமைப்பை அவை காயப்படுத்தி, ஒடித்து, வெட்டி, சிதறடிக்கின்றன. ஆபத்தான தீண்டுதலினின்று தடுக்கி உடல் தப்பிக்கும் காவியம் வலி. தொந்தரவான தொடர்பிலிருந்தும் மனிதன் பின்வாங்குகிறான். உபநிஷதம் அதை ஜுகூப்ஸா என்கிறது. புறத்திலிருந்து சுயபாதுகாப்பை நாடும் மார்க்கம் வலி. தானில்லை என்பவற்றிலிருந்து சிறியது சுருங்கி விலகும் பாதை வலி. தன்னை ஏற்காதவர், தன்னுடன் சுமுகமில்லாதவரெல்லாம் அதற்குப் பிறராகும்.இக்கண்ணோட்டத்தினின்று எதை விலக்க முடியாதோ அதை அனுபவிக்க வேண்டும் என்பது இயற்கை. விலக்க முடியாததனின்று நாம் வெற்றிகரமாக விலகலாம். வாழ்க்கை முன்வாராதவரை அது உடலில் முன்வாராது. அதுவரை ஜடமான முறைகள் பயன்படும். வாழ்வு இயற்கையில் வந்தபின் அது வரும். வாழ்வு பலஹீனமானது, குறையுடையது, அதனால் ஜடத்தைப் பெற முடியாது; பெற்று ஆளமுடியாது. அது மனம் வாழ்வில் வளரும்பொழுது உடன் வளர்கிறது. மனம் வாழ்விலும், உடலிலும் உள்ளவரை அது வளரும். மனம் வாழ்வையும், உடலையும் பயன்படுத்துகிறது. தான் அறிவு பெற மனம் உடலையும், உணர்வையும் நம்பியுள்ளது. செயலுக்கும் அவற்றையே நம்பியுள்ளது. இத்தடைகள் அகந்தையை வளர்க்கும். மனம் அவற்றால் கட்டுண்டது. மனம் அவற்றினின்று விடுதலை பெறலாம், அகந்தையற்றிருக்கலாம். மனம் மற்ற ஜீவராசிகளுடன் சுமுகமாக வாழலாம். பிரபஞ்சத்துடன் மனம் சுமுகமாக வாழமுடியும். அந்நிலையில் துன்பத்திற்கு இடம் குறைவு. துன்பம் அதிகமாகப் பயன்படாது. அதனால் துன்பம் மறையும். இயற்கையின் பகுதியாகவும், பழக்கத்தாலுமே துன்பம் இருக்க முடியும். துன்பத்திற்கு இனி வேலையில்லை. ஆனால் பழக்கம் நிற்கும். மேல்நிலை ஜீவியம் குறையுடையது என்பதால் தாழ்நிலை ஜீவியம் அதனுள் உயிருடனிருக்கிறது. உரிய நேரத்தில் அதை விலக்க வேண்டும். ஆத்மா ஜடத்தை வெல்லும் பாதை தவிர்க்க முடியாதது. அங்கு இது முக்கியக் கட்டம். ஆத்மா மனத்தின் அகந்தையை அப்படி வெல்லும்.

மனம் அகந்தையை வெல்ல முடியும் என்பதற்குக் காரணம் வலியும், ஆனந்தமும் அனந்தத்தின் இரு ரூபங்கள். ஒன்று குறையானது, அடுத்தது குதர்க்கமானது. ஜீவனின் ஜீவியம் பிளவுபட்டிருப்பதால் இக்குறையும், குதர்க்கமும் எழுகின்றன. மாயை அளந்து, அளவீடு செய்வதால் ஜீவன் பகுக்கப்படுகிறது. மனிதனுக்கு முழுப் பிரபஞ்சமும் உண்டு. அகந்தை வரும் பிரபஞ்சத்தை துண்டு, துண்டாகப் பெறுகிறது. பிரபஞ்சத்தின் உணர்ச்சியை சமஸ்கிருதத்தில் ரஸா என்பர். எல்லாப் பொருள்கட்கும், எல்லா ஸ்பர்சங்களுக்கும் ரஸா உண்டு. பொருள்களின் சத்து, ரஸம், ருசி ஆகியவை ரஸா எனப்படும். சமஸ்கிருதத்தில் அது உயர்ந்த உணர்வைக் குறிக்கும். பொருள்களின் ரஸத்தை நாம் அவற்றின் தொடர்பில் நாடுவதில்லை. நம் பயம், ஆசை ஆகியவற்றை எப்படிப் பொருள்கள் பாதிக்கின்றன என்பதே நமக்குரியது. நமது ஆழ்ந்த ஆசைகளும், மிரட்சியும் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதே நம் கேள்வி. இதனால் ரஸாவை காணும் திறனை நாம் இழந்துவிடுகிறோம். அதனால் ரஸா வலியாகவும், வருத்தமாகவும் மாறுகின்றது. மேலும் குறையான தற்காலிகமான சந்தோஷமாகவோ, உதாசீனமாகவோ ரஸா மாறுகிறது. மனத்தாலும், இதயத்தாலும் நாம் முழுவதும் விலகியிருக்க முடியும். மனம் நரம்புகளை விலகியிருக்க வற்புறுத்த முடியும். அப்படிச் செய்தால் குறையான, குதர்க்கமான ரஸாவின் ரூபங்களைக் கொஞ்சம், கொஞ்சமாக விலக்கலாம். அதன் பின் நீங்காத ஆனந்தத்தின் சாரமான ருசி நமக்கு எட்டும். கலை, காவியத்தில் இதைச் சற்றுக் காண்கிறோம். பிரபஞ்சத்தின் பல்வேறு ஆனந்தம் நமக்குக் கலையுணர்வாக எட்டும். அங்கு வருத்தம், பயங்கரம், சகிக்க முடியாதது, வெறுப்பானது வெளிவரும். நாம் பற்றற்று விலகியிருப்பதால் நாம் விஷயத்தையும், அதன் சாரத்தையும் காண்கிறோம். நாம் நம்மைப் பற்றியும், நம்மை எப்படிக் காப்பாற்றுவது எனவும் நினைக்கிறோம். கலையுணர்வு சுத்த ஆனந்தமோ அல்லது அதன் தூயரூபமோ இல்லை. தூய ஆனந்தம் சத்திய ஜீவியம், கலையுணர்வைக் கடந்தது. கலையுணர்வும் அதைப் பிரதிபலிக்க முடியாது. வருத்தம், பயங்கரம், கொடுமை மிச்சமாக இருக்கும். சத்திய ஜீவியத்தில் அவை - பயங்கரம், கொடுமை - அனுமதிக்கப்படா. கலையுணர்வு பகுதியாக, குறையாக வளரும் ஆனந்தத்தின் ஒரு நிலையைக் குறிக்கும். இது பிரபஞ்ச ஆத்மா வெளிப்படுவதில் பங்குகொள்ளும். அப்பற்றற்ற நிலையின் சுபாவத்தில் நாம் பகுதியாகப் பங்குகொள்ளலாம். அது அகந்தையின் பற்றறுப்பு. ஓர் ஆத்மா சுமுகத்தையும், அழகையும் காணும். பிரபஞ்ச நோக்கம் அதன் மூலம் வரும். நாம் நம் உலகில் குழப்பமும், சச்சரவும் உள்ளதைக் காண்கிறோம். எல்லாக் கரணங்களிலும் இவ்விடுதலை வந்தால் நமக்கு முழு விடுதலை கிடைக்கும். அது பிரபஞ்சக் கலையுணர்வு, பிரபஞ்ச ஞானம், பிரபஞ்சம் பொருள்களினின்று பற்றற்று விலகி நிற்பது. இருப்பினும் நம் குறுகிய உணர்வு அனைத்தையும் ஓரளவு தழுவும்.

வாழ்வின் ஸ்பரிசத்தின் அதிர்ச்சி தாங்க முடியாததால் துன்பம் எழுகிறது. அதனால் வாழ்வு சுருங்கிக் குறுகுகிறது. எனவே அகந்தையின் குறுகிய அளவு உலகை ஏற்று ஆளும் சக்தியில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. நம் உண்மையான ஆத்மாவான சச்சிதானந்தத்தை அகந்தை அறியவில்லை. ஜுகூப்ஸா என்பது சுருங்குவது, குறுகியது. அதை தீதிக்க்ஷா என்பதால் மாற்றினால், அது அதிர்ச்சிகளை வெல்லும். பொறுமையாலும், வெற்றியாலும் நாம் சமத்துவத்தை நாடுகிறோம். இது ஸ்பரிசத்தைப் பராமுகமாகப் புறக்கணிக்கும் அல்லது சந்தோஷமாக அனுபவிக்கும். இந்த சமத்துவம் அகந்தையை அகற்றி அங்கு ஆனந்தமயமான சச்சிதானந்தத்தை வைக்கிறது. அகந்தைக்கு சந்தோஷமும், வலியும் மாறி, மாறி வரும். சச்சிதானந்தத்தில் வலியில்லை. சச்சிதானந்தம் பிரபஞ்சத்தைக் கடந்தது. அது பிரபஞ்சத்துடன் தொடர்புள்ளதன்று. இந்த தூரத்து ஆனந்தத்திற்குப் பராமுகமே பாதை. அது சன்னியாசியின் பாதை. சச்சிதானந்தம் கடந்தது என்பதுடன் பிரபஞ்சத்தையும் கடந்தது. நாம் சரணாகதி மூலம் பிரபஞ்சத்தில் அகந்தையை இழந்து இக்குறிக்கோளை அடையலாம். எங்கும் பரவியுள்ள சமத்துவமான ஆனந்தம் இதன் பலனாக வரும். அது வேதரிஷிகளுடைய பாதை. சந்தோஷம் குறையுடையது, வலி குதர்க்கமானது. இரண்டாலும் தீண்டப்படாமலிருப்பது ஆத்மாவின் சுயகட்டுப்பாட்டில் முதற்படி. சமத்துவமான அனந்தம் அதன் பிறகு கிடைக்கும். மூன்று நிலைகளிலுள்ள வலியை நேரடியாகத் திருவுருமாற்றுவது முடியும். மனிதனுக்கு எளிதன்று.

வேதாந்தம் முழுமை பெற்றால் இதுவே நமது பிரபஞ்ச ஞானம். அனந்தமான, பகுக்கப்படாத சத் அனந்தமயமானது. தன் சுயஜீவியத்தில் அது தூய்மையானது. அடிப்படையான தூய்மையினின்று விலகி சக்தி எனும் ஜீவியத்தின் விளையாட்டான வெளிப்பாட்டில் அது எழும். மாயையின் வெளிப்பாடான பிரகிருதியின் சலனம் அது. உலகத்தின் ஓட்டமும், பாதையும் பல கட்டங்களில் செயல்படுகின்றன. முதற்கட்டம் ஜடமான உலகம். அடுத்தாற்போல் உணர்வில் அது எழும். அடுத்தகட்டமான மனம், அகந்தையில் வலி, சந்தோஷம், பராமுகம் எழுகிறது. முடிவாக சச்சிதானந்தம் உலகில் முழுவதும் வெளிப்படும். ஜடத்தில் அனந்தம் கிரகிக்கப்பட்டு, ஜீரணிக்கப்பட்டு, ஜடஉலகில் ஆழ்ந்து மறைந்துள்ளது. அடுத்தாற்போல் பாராமுகமான பெருவெள்ளமாக வெளிப்படுகிறது. நாம் அதை உணர்ச்சி எனக் கூறமுடியாது. 3 வகை வலி ஜீவியத்தின் சக்தி அளவுக்குட்படுவதால் எழுகிறது. அது ரூபத்தின் வரையறை. பிரபஞ்ச சக்திகளுடன் மோதுவது சச்சரவை ஏற்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் தான் சச்சிதானந்தம் முழுவதும் வெளிப்பட்டு பிரகிருதியை வெல்லும்.

ஏன் ஆண்டவன் இந்த மாற்றமான ஓட்டத்தை நாடுகிறான். பதில் சுருக்கமானது. ஆண்டவனின் அனந்தத்தில் எல்லாவிதமான சந்தர்ப்பங்களும் உள்ளன. சத்தின் அனந்தம் சந்தர்ப்பங்களைப் பலவாறு பூர்த்திசெய்வதில் இருக்கிறது. இது அக்ஷர பிரம்மத்திலும், க்ஷர பிரம்மத்திலும் உண்டு. நாம் க்ஷர பிரம்மத்தைப் பற்றிப் பேசுகிறோம். சச்சிதானந்தம் அதன் எதிரானதில் ஒளிந்துள்ள பிரபஞ்சப் பகுதியில் நாம் உள்ளோம். எதிரான வாழ்விலும் சச்சிதானந்தம் தன்னைக் கண்டுபிடிக்க முயல்கிறது. அனந்தமான ஜீவன் ஜடத்தின் தோற்றத்தில் தன்னை இழக்கிறது. அது மனித ஆத்மாவில் எழுகிறது. அனந்த ஜீவியம் ஜடத்தில் தன்னை இழக்கிறது. அது குறுகிய ஜீவியத்தில் மேலெழுந்தவாரியாக எழுகிறது. சக்தி அனந்தமானது, தன்னைத் தான் பாதுகாக்கவல்லது. அது அணுக்களின் குழப்பத்தில் அலை மோதுகிறது. நிலையற்ற உலகில் அது எழுகிறது. அனந்தமான ஆனந்தம் சொரணையற்ற ஜடத்தில் தன்னை இழக்கிறது. பல்வேறு வலியாக அது காணப்படுகிறது. சந்தோஷம், வலிபாராமுகம் என்ற சச்சரவான சலனம் அது. அனந்தமான ஐக்கியம் ஆயிரக்கணக்கான ஜடப்பொருள்களின் குழப்பத்தில் தன்னை இழக்கிறது. இழப்பது தோற்றம். சக்திக்கும் ஜீவியத்திற்கும் உள்ள பிணக்கே அதன் அரங்கம். ஐக்கியத்தைப் பெற அவை கரைகின்றன, மற்றவற்றை விழுங்குகின்றன. இந்த சிருஷ்டியில் உண்மையான சச்சிதானந்தம் எழ வேண்டும். தனி மனிதன் பிரபஞ்ச ஜீவனாகி வாழவேண்டும். அவனது மனத்தின் ஜீவியம் அளவற்றது. அது பரமாத்மாவின் ஐக்கியத்திற்குத் தன்னை உயர்த்தி உலகைத் தன்னுட்கொள்ள வேண்டும். தனக்கென வாழும் மனிதன் அனைவரையும் அரவணைக்க வேண்டும். உடலின் காம இச்சை பிரபஞ்சத்தின் அன்பாக வேண்டும். அவனது சிறிய வாழ்வு பிரபஞ்சத்தின் மோதல்களைத் தாங்கக்கூடியதாக இருக்கவேண்டும். பிரபஞ்ச ஆனந்தத்தை அனுபவிக்கும் திறனுடையதாக மாற வேண்டும். அவன் உடலும், தான் தனித்தில்லை என அறிய வேண்டும். அனைவர் உடலும் ஓருடல் என்பது தெளிவு பெற வேண்டும். பரமாத்மா முழுமுதற் கடவுள். அதுவே சச்சிதானந்தம். ஒருமைக்குரிய அதற்கு சுமுகமும், ஐக்கியமும் உண்டு. அவனது முழு சுபாவமும் அந்த ஐக்கியத்தையும், சுமுகத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.

எல்லாம் லீலை. சத்தின் ஆனந்தமே இங்கு இரகஸ்யமான சத்தியம். மனிதன் பிறக்குமுன் இதே ஆனந்தம் ஆழ்மனத்தின் தூக்கத்திலிருந்தது. எல்லாப் போராட்டங்களிலும், மாறுபாடுகளிலும், ஏற்றத்தாழ்விலும், மாற்றங்களிலும், குதர்க்கங்களிலும், தலைகீழ் மாற்றங்களிலும் இந்த ஆனந்தம் உள்ளது. தனி மனிதன் பரமாத்மாவின் காலம் கடந்த சுயரூபத்தில் மீண்டும் பிறக்க வேண்டும். அவன் முழுமையான சச்சிதானந்தத்துடன் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே ஈஸ்வரனின் லீலை, அனைவரிலும் உள்ள பரமாத்மாவின் நாடகம். விடுதலையடைந்து சித்தி பெற்ற ஞானம் இதையறியும். தற்சமயம் ஜட உலகின் சிந்தனை சிக்கலினுள் நாமிருக்கிறோம்.

****   

Comments

04.லைப் டிவைன்  Para  1  - 

04.லைப் டிவைன்
 
 
Para  1  -  Line 14  -   தன்னையறியாமருப்பது    -       தன்னையறியாமலிருப்பது
Please combine Para 1  &  Para  2
Para  4  -  Line  2   -   பிரம்மத்திருக்கும்              -   பிரம்மத்திலிருக்கும்
Para  4  -  Line  3   -   பிரம்மத்திருக்கும்              -   பிரம்மத்திலிருக்கும்  
Please combine Para 7  &  Para  8
Para  9  -  Line  4   -   பிரதிபப்லிபில்லை             -   பிரதிபலிப்பில்லை
Please combine Para 10 & Para 11
Para 12  -  Line 4   -    வயையும்                           -   வலியையும்
 
Please make a new paragraph for the following lines   
 வலியும், ஆனந்தமும் பழக்கத்தால் வந்த தொடர்பு.
:
:
அவன் இனி புறத்திற்கு அடிமையில்லை.
Para 14   -  Line 4   -   வலிதருகிறதோ                 -  வலி தருகிறதோ
Para 14   -  Line 6   -   வலிஆனந்தமாகும்           -   வலி ஆனந்தமாகும்
Para  15  -  Line  1  -   வலிஇயற்கைக்குரிய        -   வலி இயற்கைக்குரிய
Para  15  -  Line  3  -   மோதல்                              -   மோதலில்
Para  15  -  Line  7  -   தீண்டுதனின்று                  -   தீண்டுதலினின்று
Para  16  -  Line  8  -   உடலின்                              -   உடன்
Para   16 -  Line  9  -    உடலும்                             -   உடலிலும்
 Please combine Para 15 & Para 16
Para   17 -  Line 23  -    பிரதிபக்க                          -    பிரதிபலிக்க
Please combine Para 17 & Para 18
Para   20  -  Line 5   -    வலிகுதர்க்கமானது         -    வலி குதர்க்கமானது
Para   20  -  Line 5   -    தீண்டப்படாமருப்பது     -   தீண்டப்படாமலிருப்பது
Please combine Para 19 & Para 20
Para   21  - Line  4   -    வெளிப்படான                  -   வெளிப்பாடான
Para   21  - Line  7   -    பராமுகம்                          -   பாராமுகம்
Para   21  - Line  9   -    பராமுகமான                    -   பாராமுகமான
Para   21  -  Line 10  -   வலிஜீவியத்தின்              -   வலி ஜீவியத்தின்
Please combine Para 22 & Para 23
Para  22   - Line 12   -   பராமுகம்                          -   பாராமுகம்
Para  23   - Line 8    -     சிக்கனுள்                         -   சிக்கலினுள்
 



book | by Dr. Radut