Skip to Content

11.மனமாற்றம்

"அன்னை இலக்கியம்"

மனமாற்றம்

                                               (சென்ற இதழின் தொடர்ச்சி....)     

                                                                                            இல. சுந்தரி

அவர் தம் பதவியைப் பிரயோகிக்காமல், தம் மகளைத் தகுதி அடிப்படையில் சேர்த்துக்கொள்ளும் பள்ளியில் சேர்த்ததை நினைத்துக் கொண்டார் பிரின்சிபால். மாதவியின் பண்பும், படிப்பும் அவரை ஈர்த்தது.

"மாதவியின் புத்தகமா இது?''என்றார் வியப்பாக. மேலும், நீங்கள் 9 மணிக்கே வந்து இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லியிருந்தீர்களா?'' என்றார்.

"அப்படியெதுவும் சொல்லவில்லையே''என்றார் குமாரி.

"ஒரு வாரமாக அந்த மாணவிகள் காலையில் வந்து இதைப் படிக்கிறார்கள். கிளாஸில் மிஸ் யாருமில்லையே என்று யார் கிளாஸ் வைத்திருப்பது என்று தெரிந்துகொள்ள இன்று வகுப்பில் போய்ப் பார்த்தேன். அப்போதுதான் நீங்கள் யாரும் கிளாஸ் வைக்கவில்லை என்பது தெரியவந்தது. நாளைக்குப் பேரண்ட்ஸ் வந்து ஏதேனும் கம்ப்ளெயிண்ட் செய்தால் தவறாகிவிடுமல்லவா? அதனால் நாளை அவர்களைப் பேரண்ட்ஸ்ஸூடன் வரச் சொல்லியிருக்கிறேன்'' என்றார் பிரின்சிபால். ஆரம்பத்திலிருந்த கடுமை இப்போது இல்லை.

"நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இன்று நான் அவர்களைக் கண்டிக்கிறேன். இம்முறை அவர்களை மன்னித்துவிடுங்கள்'' என்று பணிவுடன் குமாரி கேட்டுக்கொண்டார்.

"ஆஷாவை என்னிடம் அனுப்பிவையுங்கள்''என்றார் பிரின்சி.

"சரி மேடம். இதோ வரச்சொல்கிறேன்''என்று கூறி 11ஆம் வகுப்புக்குப்போய், "ஆஷா! உன்னைப் பிரின்சி கூப்பிடுகிறார். போய்க் கேள்''என்றார்.

ஆஷா மதரை மனதில் நினைத்துக்கொண்டாள். "என் குணக்குறையைக் காரணமாய்க் கொண்டு என்னை வலிய வந்து ஆட்கொண்ட அன்னையே நீங்கள்தான் எனக்குத் துணை வரவேண்டும்' என்று பிரார்த்தித்தவண்ணம் சென்றாள்.

"குட்மார்னிங் மேடம்'என்று பணிவாய் நின்ற ஆஷாவைக் கனிவுடன் பார்த்தார் பிரின்சி.

"ஆஷா! உன் வகுப்பு அடுத்த ஆண்டு +2வில் பள்ளிக்குப் பெரிய சிறப்புப் பெற்றுத்தரும் என்று உங்கள் சயின்ஸ்மிஸ் கூறுகிறார். அதனால் இம்முறை உங்களை மன்னித்துவிட்டேன். ஆசிரியர்கள் அனுமதியின்றி நீங்கள் முன்னதாக வந்து பாடத்திற்குப் புறம்பாக இங்கு எதுவும் செய்ய உங்களை அனுமதிக்க எனக்கு அதிகாரமில்லை. உங்கள் நல்ல ஆர்வங்களை நான் பாராட்டுகிறேன். அதைப் பள்ளிக்கு வெளியே செய்யுங்கள்''என்று நயமாய்க் கூறிவிட்டு, "இந்தா, இந்தச் சர்க்குலரை எல்லா வகுப்புகளுக்கும் பாஸ் செய்துவிடு''என்று ஒரு சர்க்குலர் எழுதப்பட்ட தாளை அவளிடம் அன்புடன் கொடுத்தார். "படித்துப்பார்''என்றார்.

இலக்கியமன்ற விழாப் போட்டிக்குரியது, "உங்கள் உளம் கவர்ந்த உத்தமர்'' என்ற தலைப்பில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரையவும் என்றிருந்தது. நாளும், நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தது. படித்த ஆஷாவின் முகம் மலர்ந்தது. அதைப் பார்த்த பிரின்சி, "உங்கள் உளம்கவர்ந்த உத்தமர் 'தி மதர்' தானே? உங்கள் வகுப்பில் இரண்டு முதல் பரிசுகள் வெல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்''என்றார்.

"நிச்சயமாக மேடம், தாங்யூ மேடம்'' என்று உள்ளம் பூரித்து விடையளித்தாள் ஆஷா.

"(Vital mind) உணர்வுக்குரிய மனம் பொதுவாக வக்கிரமாக இருக்கும். பிறரை எளிதில் அறியும் திறனுடையது. உதாரணமாக ஒருவர், எவரையுமே பாராட்டாதவர் (பொருட்படுத்தாதவர்), நம்மைச் சதா மட்டம் தட்டிப் பேசுபவர் எனில், அவர் வாயால் நம்மைப் பாராட்டவேண்டிய சந்தர்ப்பம் வந்தால், அருள் வக்கிரத்தை மாற்றி விட்டது என்று பொருள்".


 

கர்மயோகி.


 

முற்றும்.


 


 


 book | by Dr. Radut