Skip to Content

04.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சிறு விஷயம் சூடானால் போகும் வழி எது?

. சிறியது, சூடு என்பனவற்றை தத்துவமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

. ஸ்ரீ அரவிந்தம் என்பதின் சிறப்பை அறிய அனந்தம் ( infinity) என்பதை வாழ்விலும், ஜடத்திலும் அறிவது அவசியம். மேலும் ரிஷிகள் infinityயைப் பற்றிச் சொல்லியது, விஞ்ஞானம் infinityயைப் பற்றிக் கூறியது ஆகியவற்றுடன் இணைத்துப் பார்ப்பது அவசியம்.

. Communication என்பது மனிதன் ஏற்பட்ட நாளாய் இருப்பது. தபால் எழுதுவது என்பது புறாவின் காலில் சீட்டுக் கட்டி அனுப்பியது புராணகாலத்துச் செய்தி. அதிலிருந்து தபால் இலாக்கா ஏற்பட்டது, தந்தி வந்தது, telex வந்தது, telephone வந்தது பெரிய மாற்றங்கள். இருப்பினும் cell phone வந்தபின் ஏற்பட்ட மாற்றம் மிகப்பெரியது. போன் உள்ள இடத்திலிருந்துதான் பேசமுடியும். செல்போன் நாம் நகரும்பொழுது நம்முடன் நகருகிறது. ஸ்ரீ அரவிந்தர் The Life Divine இன் இரண்டாம் அத்தியாயத்தில் கம்பியில்லாத் தந்தியில் கம்பி போனதுபோல் போனும் போகவேண்டும் என்கிறார். அதுவும் போனபின் இருவரிடையே தடையாயிருப்பது அகந்தை என்கிறார். அகந்தை அழிந்தால் மனித மனம் பிரபஞ்சமனமாகிறது. ஒருவர் மனத்திலுள்ள எண்ணம் அனைவருக்கும் இயல்பாகத் தெரியும். உலகில் உள்ளது ஒரே மனம் என்பது நிலைக்கும் என்கிறார். அதைப்போல உலகில் ஒரே உணர்வு (universal vital), ஒரே உடல் (universal body) ஏற்படும் என Synthesis of Yogaவில் 4ஆம் பகுதியில் 10ஆம் அத்தியாயத்தில் கூறுகிறார்.

. அனந்தம், காலம், இடம் என்பவைகளைப் பற்றிப் பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுபவை அதுபோல் புரட்சிகரமானவை. ரிஷிகளும், விஞ்ஞானிகளும் உலகில் இன்று யோகத்திலும், விஞ்ஞானத்திலும் முன்னோடிகள். அதனால் அவர்களை இவ்விஷயத்தில் கருத வேண்டும். அப்படி நாம் அறிவதை நம் வாழ்வில் முக்கியமான இடம், நமக்கு நாம் முக்கியமான இடத்தில் வைத்துப் பொருத்திப் பார்த்தால் புது உலகம் பிறக்கும்.

. சிறு விஷயம் பெரிய பலனைத் தரும் என்பது அன்னை கூறுவது.

. சூடுஎன்பது தீவிரம். நாமுள்ள plane இடத்தின் எல்லையைக் கடக்கும் உணர்ச்சி சூடு.

. இவையிரண்டும் positiveஆக இருந்தால் நாம் infinity ஆவோம். கண்டம், அகண்டமாகும்; வாழ்வு அற்புதமாகும்.

. நம் வாழ்வில் இதுபோல் நடப்பவற்றை நாம் பார்க்கிறோம்; புரிந்துகொள்வதில்லை. புரிவது ஸ்ரீ அரவிந்தம்.

. Token act என்பது நாம் அற்புதத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

. ஒரு கம்பனி மாதம் 6 கோடி வருமானம் பெறும்பொழுது 7½வந்தால்தான் கட்டுப்படியாகும் (break even point வரும்) என்றால் நாம் செய்யும் பிரயத்தனம் எல்லாம், பிரம்மப்பிரயத்தனமானால், அதாவது நம் வழியில் உண்மையாக முயன்றால் நிச்சயமாக அதே மாதம் 8 கோடி வரும். அதுவே, நம் வழியில்லாமல் ஏதாவது ஓர் இடத்தில் "சிறு" விஷயம் "சூடு" பிடித்தால் அது 80 கோடியாகும், 800ஆகும், 8000ஆகவுமாகும்என சமீப காலமாக நான் பலமுறை எழுதிவருகிறேன்.

"சிறு" விஷயம் "அன்னையின் சூடு" பிடித்தால் வழக்கமான வாழ்வு அற்புதமாக மாறும் என்பது ஸ்ரீ அரவிந்தம். அஜெண்டாவில் அன்னை அதைக் கூறுகிறார். நம்மை விலக்கி சமர்ப்பணத்தால் அங்கு அன்னை செயல்படுவது இன்றியமையாதது.

எந்த அளவுக்குக் குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் கூறலாம்?

. குடும்ப விஷயம் என்பவை இரகஸ்யம், கூச்சப்படவேண்டியவை (sensitive issues, delicacies, private affairs) சொந்த விஷயம், தனிப்பட்டவை ஆகும்.

. அடுத்தவருக்குச் சொல்வது என்றால் யார் அடுத்தவர், வீட்டு மனிதர், தம்பதி, நண்பர், அடுத்த வீட்டுக்காரர், அன்னியர் ஆகியவராகும்.

. சொந்த விஷயங்களைச் சொல்வதும், சொல்லாததும் பொதுவாக அவரவர் சுபாவத்தைப் பொருத்தது.

. இதற்குரிய சட்டம் ஒன்றுண்டா? தத்துவப்படி இதை விவரிக்க முடியுமா?

. சட்டம் என்பது எளிது - நம்பிக்கையுள்ள அளவுக்குச் சொல்லலாம் என்பது சட்டம். நம்பிக்கையோடு சொன்னபின், நம்பிக்கை போனால், வரும் அசம்பாவிதம் ஏராளம்.

. தத்துவம் :

. ஒரு ஜீவாத்மாவினுள் அனைத்து ஜீவாத்மாவுமிருப்பதால், இரகஸ்யம், தனிப்பட்ட விஷயம், சொந்த விஷயம், கூச்சப்பட வேண்டியதில்லை.

. இல்லை என்றாலும் லீலைக்கு அடிப்படை வேறுபாடு என்பதால் ஆனந்தம் எழுவது வேறுபாடு ஏற்படுத்தும் விளையாட்டு. அதனால் இரகஸ்யமிருந்தால்தான் ஆனந்தம் எழும்.

. தத்துவப்படி இரகஸ்யம் அவசியம். இரகஸ்யம் வெளிப்படுவதே ஆனந்தம்.

. தத்துவப்படி நடைமுறை

. ஆனந்தமே இலட்சியமாகி, அதை அனுபவிக்கும் அளவுக்கு இரகஸ்யத்தைச் சொல்லவேண்டும்.

. பார்ட்னர் நெருக்கமானவர். அவர் தாம் குடும்பத்திற்கு எல்லாம் என்பதால் பெரியவனுக்கு வந்த தொந்தரவு அவர் பார்வையில் பட்டு கரைந்தது. அதனால் அந்த விஷயம், அதுபோன்ற விஷயம் அவருக்குச் சொல்ல வேண்டியது. அவரிடம் அதை மறைப்பது தவறு. கணவரும், பெரியவன் போலிருக்கிறார் என்பதால் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நமது பாஷையில்

இதை, இதம், இங்கிதம் என்பார்கள்.

. பெண் டிகிரி எடுக்கப் பிரியப்படுகிறாள். முதல் வகுப்பு அவளுக்கு முக்கியமில்லை என்பது பார்ட்னருக்குச் சம்பந்தமில்லாதது. சொன்னால், சொன்னோம் என்று தெரிந்தால் பெண் மனம் புண்படும். நாம் அதைச் சொல்ல நினைக்கிறோம் என்பதும் பெண் மனத்தைப் புண்படுத்தும் என்பதால் அதைச் சொல்லவும் நினைக்கக் கூடாது.

. சொல்வதால் நெருக்கம் ஏற்படும், சந்தோஷம் எழும் என்பதைச் சொல்லலாம்.

. சொல்வதால் நமக்கோ, பிறருக்கோ பாதகம் ஏற்படும் என்பதைச் சொல்லக்கூடாது.

. சொல்ல நினைவு வரும்பொழுது சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணம் நமக்கு வழிகாட்டும்.

புரிந்தபின், புரிந்தவற்றை எந்த அளவுக்கு, எந்த முறையில் செயல்படுத்துவது:

. புரிந்ததை ஒருவரால் செயல்படுத்த முடியுமானால், அவர் புரியும்போது இருந்த நிலையை விடப் பலமடங்கு உயர்ந்துவிடுவார்.

. மெய் சொல்லவேண்டும், மெய்மட்டும் சொல்லவேண்டும் என்பதைக் கேள்விப்படாதவர், அறியாதவரில்லை. மெய்மட்டும் சொன்னால் வாழ்வு மலரும் எனப் புரிவதில்லை. அப்படி ஒருவருக்குப் புரிந்தால்,அதை அவரால் செயல்படுத்த முடியுமா? முடியும் என்றால் எந்த அளவுக்கு முடியும்?

. உழைப்பு பயன் தரும் என எவரும் அறிவர். எந்த அளவுக்கு செயல்படுத்த முடிகிறது?

. செயல்படுத்துவது என்பதில் என்ன தத்துவம்?

. மனம் பெற்ற அறிவு உடலின் செயலாக மாறுவதற்கு உடல் மனத்தை ஏற்கும் அளவு நிர்ணயிக்கும்.

. உடல் இருளாலானது.

. மனம் அதிக ஒளி பெற்றது.

. ஒளி உடலை அடையும்பொழுது இருளில் கரைந்து மிஞ்சியதே செயல்படும்.

. ஒளி உடலில் அழிவதை உடல் மனத்தை நோக்கி முன்னேறுவது எனக் கூறலாம்.

. உடலில் உள்ள மனம் விழிப்பாக இருந்தால், முழு ஒளியும் செயல்படும்.

. செயல்படும் அளவு உடலின் மனம் விழிப்பாக இருப்பதைப் பொருத்தது.

. எப்படி உடலின் மனம் விழிப்படையும்?

. உடலுக்கு எண்ணம், கருத்து, பண்பு புரியாது.

. உடலுக்குப் புரிவது பலன், செயல்.

. மனத்தின் எண்ணம் உடலின் செயலாக, பலனாக மாறும் அளவில் தெளிவுடையதானால், அதிகமாகச் செயல்படுத்த முடியும்.

. படிப்பு உயர்ந்ததுஎன்ற எண்ணம் எளிதில் செயல்படாது. படித்தால் டிகிரி கிடைக்கும், அதனால் வேலை கிடைக்கும் என்றால் படிப்பை மனிதன் ஏற்பான்.

. இக்கதையில் குடும்பத்தாருக்குப் பிரார்த்தனை பலிக்கிறது, அன்னை அதிர்ஷ்டம் எனப் புரிகிறது. அதற்கு மேல் புரியவில்லை. தாயாருக்குப் புரியும் அளவுக்கு எவருக்கும் புரியவில்லை. தாயாருக்குக் குடும்பம் முன்னுக்கு வரவேண்டும் எனப் புரிகிறதேதவிர, அன்னைக்காக அன்னையை ஏற்றால் குடும்பம் அதிகமாக முன்னுக்கு வரும் எனப் புரிந்தாலும் அவரால் செயல்படுத்த முடியவில்லை.

. அதற்குக் காரணம் குடும்பம் உடலிலும், உணர்விலும் உள்ளபொழுது அன்னை மனத்திலும், உணர்விலும் உள்ளார்.

. தாயார் உடலிலிருந்து மனத்திற்குப் போனால், அதிகமாகப் புரியும்; அதிகமாகச் செயல்படும்.

. எந்த அளவிற்குச் செயல்படுத்துவதுஎன்று அளவில்லை.

. எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவில் செயல்படுத்த வேண்டும்.

. முழுவதும் செயல்படுத்தாவிட்டால் அடுத்த முறை வருவது குறையும்.

வாழ்க்கை முழுவதும் வாய்ப்புமயமானது என்பதே என் ஆராய்ச்சியின் முடிவு - பிரின்ஸ்பால்.

நம் மனம் பற்றாக்குறையாக இருப்பதைப் பொருள்களின் பற்றாக்குறையாகக் கருதுவது சிறுபிள்ளைத்தனம் - தாயார்:

. பிரின்ஸ்பால் செய்த ஆராய்ச்சி பெரியது. படித்தவர். அதனுடன் உண்மையாக ஆராய்ச்சி செய்யும் பொழுது, மனம் உலகைக் காட்டுகிறது.

. பற்றாக்குறையின் தத்துவம் என்ன? - பார்க்க மறுப்பது பற்றாக்குறை.

. சுயநலத்தின் சொரூபம் அறிவில் பற்றாக்குறையாக இருக்கிறது.

. Bata கம்பனியிலிருந்து இரண்டு ஆபீசர்கள் ஆப்பிரிக்காவில் வியாபாரம் செய்யப் போனார்கள். அங்கு எவரும் செருப்பு அணிவதில்லை.

1. ஒருவர் கம்பனிக்கு, "இங்கு எவரும் செருப்பு அணிவதில்லை என்பதால் மார்க்கட் இல்லை"என எழுதினார்.

2. அடுத்தவர், "இங்கு எவருமே செருப்பு அணிவதில்லை என்பதால் அளவு கடந்து மார்க்கட் உள்ளது"என எழுதினார்.

மார்க்கட் பார்வையைப் பொருத்தது.

. மேல்நாட்டார் பிறரிடமிருந்து கற்கமாட்டார்கள். தாங்களே புரிந்து கொண்டதை அளவுகடந்து பின்பற்றுவார்கள். நம்மவர் அப்படியில்லை. எவரிடமிருந்தும் கேட்டுக்கொள்வர். பின்பற்றும் பொழுது தாங்கள் கற்றதையே பின்பற்றுவார்கள். தான் கற்பதே அறிவு. அதை self-knowledge என்கிறோம்.

. உலகில் மனிதன் உடலால் செயல்பட்டவன் இன்று மனத்தால் செயல்படுவதால், உலகம் முன்னேறியுள்ளது.

. உடல் மனத்தைவிடப் பிடிவாதமானது.

. உடலால் சிந்திப்பவன் எவர் சொல்வதையும் கேட்டுக்கொள்ள மாட்டான். தன் சொந்த அனுபவத்தையும் பின்பற்றமாட்டான். சிறுவயதில் கற்றதையே செய்வான். அதாவது செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்வான்.

. மனமும் உடல் போன்றது என்றாலும், மனம் விழிப்பாக இருந்தால் கற்கப் பிரியப்படுவான்.

. ஆன்மா அதிகமாகக் கற்க முன்வரும்.

. நமக்குத் தேவையான அறிவு முழுவதும் புறத்தில் இருக்கும்பொழுது, கற்பது அவசியம்.

. அதையும் கடந்த ஞானம் உள்ளேயுள்ளபொழுது முழுவதும் கற்பது அவசியம்.

. முழுவதும் கற்கும் பாங்கு சரணாகதி.

. வளரும் ஆன்மாவுக்குச் சரணாகதி இயல்பு.

. அது 30,000 வருஷத்தை இன்று கொண்டுவரும்.

. வளரும் ஆன்மாவுக்குப் பற்றாக்குறையில்லை.

. மனிதன் அவனே சரணாகதியின் பெருமையை அறியவேண்டும்.

. நாமே சரணாகதியின் பெருமையை அறிவது ஞானசித்தி எனலாம்.

. நாமே அறிவதற்கு முழு அடக்கம் தேவை.

என் ஆராய்ச்சியில் நான் கண்டது என் மகனுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் 30 மடங்கு முன்னேற்றம் காத்திருப்பதைக் கண்டேன் - பிரின்ஸ்பால்:

. பிறப்பு வாழ்வில் புதிர் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

. பிறப்பு ஆத்மா தழலாக எழும் நேரம் எனவும் கூறுகிறார்.

. வாழ்வின் எல்லா முக்கியக் கட்டங்களிலும் - எல்லாக் கட்டங்களிலும் - ஆத்மா கனலாக எழுவது விழிப்பான ஆத்மாவுக்குத் தெரியும்.

. இன்று பயிரிடும் நிலம் மனையாக மாறுவது பல மடங்கு விலை ஏறும் என அறியாதவரில்லை.

. எளிய வீட்டுப்பையன் IAS பாஸ் செய்ததை IAS என்ன என்று அறியாத பெற்றோர், அதை B.A. எனப் புரிந்துகொண்டால், அவர்கள் விவரம் தெரியாதவர்கள்.

. வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தில் பரம்பரையாக வந்த கம்மலை, வைரக்கம்மல் என அறியாதவரிடம் எடுத்துச் சொன்னால் கேலி செய்வதாகக் கோபித்துக்கொள்வார்கள்.

. பல ஊர்களிலிருந்தும் நமது சரக்கை வந்து கேட்கிறார்கள் என்றபின் சரக்கிற்கு மார்க்கட் இருக்கிறது எனப் புரியாதவர் அனுபவமற்ற வியாபாரி.

. அமெரிக்க இளைஞர்கள் தம் நாட்டுப் பெண்களை நம்பமுடியாமல் தாய்லாந்திற்கு வந்து பெண்களை மணக்கிறார்கள். தாய்லாந்து பெண்களுக்குத் தங்கள் தூய்மையின் உயர்வு தெரிவதில்லை.

. இந்தியர் தங்களுக்குள் உள்ள ஆன்மாவின் உயர்வு தெரிந்தால் நாட்டில் ஏழ்மையிருக்காது.

. தொழில் நுணுக்கம் தெரிந்தால் இந்தத் தவறு வாராது. ஆத்ம விழிப்பிருந்தால் எந்தத் துறையிலும் இந்த அபரிமிதமிருப்பது தெரியும்.

. பிரின்ஸ்பாலுக்குத் தம் மகனைப் பொருத்தவரை, அவன் தொழிலைப் பொருத்தவரை அவனுடைய எல்லாச் சந்தர்ப்பங்களும் வாய்ப்புமயமாக இருப்பது தெரிகிறது.

. இந்தியாவில் மக்கள் இந்த அம்சத்தைப் புரிந்துகொண்டால் ஏழ்மையிருக்காது. மனிதன் இதே அம்சத்தை வாழ்வில் புரிந்து கொண்டால், சத்தியஜீவன் பிறப்பான்.

. இன்று மனிதன் கர்மத்தை நம்பி, அதன் பிடிக்குள்ளிருக்கிறான்.

. கர்மத்தை நம்பாவிட்டால், நம்பிக்கையிருந்தால் அருள் செயல்படும்.

. நம் திறமையை நம்பாவிட்டால் அருள் பேரருளாகும்.

. வாழ்வில் அருள் நமக்காகக் காத்திருக்கிறது. நம் நம்பிக்கை கர்மத்திலிருப்பதால் அருள் செயல்படமுடியவில்லை.

. அருள் வந்தால், பேரருள் பின்னாலேயே காத்திருக்கிறது.

. நம் திறமையில் உள்ள நம்பிக்கை தடையாக இருக்கிறது.

. ஞானம் நம்மை விழைகிறது. நமக்கு அறியாமை ருசிக்கிறது.ருசிப்பதும் தெரியவில்லை.

அன்னையை அபரிமிதம்எனக் காண்பதில்லை. அன்னை அனந்தம் என்பது வெறும் சொல்லன்று. நமக்காகக் காத்திருக்கும் ஆன்மீக அனுபவம். அழகொழுக, அன்பொழுகக் காத்திருப்பதை நம் குணம் காண மறுக்கிறது. பிரச்சினையாகக் காண்கிறது. நாம் பிரம்மம், உலகம் பிரம்மம். பிரச்சினையைப் பிரம்மமாகக் கண்டால் பிதிராஜ்யம் புரியும். நம் பார்வை குறுகியது. அது விசாலப்படவேண்டும். மனநிலை மதர் நிலையாகவேண்டும். நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது:

. மாந்தோப்பில் குடி வந்தவன், அது மாந்தோப்பு என அறியாமல்,நிமிர்ந்து பார்க்கக்கூடாது எனப் பழக்கமுள்ளவனானால், ஒரு மாம்பழம் வேண்டுமென டவுனுக்குப் போய் கடையில் வாங்குவது போல், நாம் நம்மைச் சுற்றியுள்ளவற்றை அறியும் பழக்கமில்லாமல், நாம் கற்றதைமட்டும் நம்பி, பற்றாக்குறையை உண்டுபண்ணுகிறோம்.

. அபரிமிதத்தின் தத்துவம் என்ன?

. கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் உலகில் உண்டு.

. பரமாத்மா, ஆனந்தம் அனுபவிக்க லீலையை நாடி, தன்னைப் பல ஜீவாத்மாக்களாக்கி, அவை கலந்துணரும் ஆனந்தம், தாம் தனித்து வாழும் ஆனந்தத்தைவிடப் பெரியது என அதை நாடினான். நாம் அகந்தையும், நாமும் ஒன்றென நினைத்து, நமக்கு ஆனந்தம் தர இருக்கும் ஜீவாத்மாக்களை, அதன்மூலம் ஆனந்தம் பெற விழைபவற்றை விலக்குகிறோம்.

. விலக்குவதால் தனித்து நிற்கிறோம்.

. தனித்து நிற்பதால், எந்த ஜீவாத்மாக்கள் ஆனந்தம் தர முயன்றனவோ, அவர்கள் ஸ்பர்சம் வலி தருகிறது.

. சேர்ந்து வாழ்வது அபரிமிதம்.

. தனித்து நிற்பது பற்றாக்குறை.

. இதுவரை மனிதன் பெற்ற வசதிகள் மனிதன் கண்டுபிடித்தவை அன்று. எங்கோ வசதியிருந்தது. அதை மனிதன் போய்க் கண்டுபிடித்தான் என்பதில்லை. அவை அவனால் உற்பத்தி செய்யப்பட்டவை.

. அவனே அவ்வசதியாக மாறினான்.

. அவனே பிரம்மம் என்பதால், அதை உணரும் நேரம் அவன் அவ்வசதியாக மாறுகிறான்.

. தானே பிரம்மம் என உணர்வது ஆன்மீகச் சித்தி.

. தான் செய்யும் வேலையில் அபரிமிதம் உள்ளதுஎனக் காண்பது அந்நிலைக்குரிய ஆன்மீகச் சித்தி.

. படிக்க முடிந்தவன், படித்து அறிவு பெற்று, அனுபவம் பெற்று வசதியடைந்தவன், நிற்காமல் தொடர்ந்து படித்தால், அபரிமிதமாக அறிவும், வசதியும் பெறுவான் என எளிமையாக நமக்குப் புரியும்.

. அதுவே அந்நிலைக்குரிய ஆன்மீகச் சித்தி.

தேடிவருவதை நாடிப்போவது அபரிமிதமன்றோ;

அன்னைக்கு அடங்குவது அதிர்ஷ்டம்;

அன்புக்கு அடங்குவது அருள்;

அடுத்தவர் அன்பிற்கு அடங்குவது பேரருள்;

அடுத்தவர் அதிகாரத்தை அன்பாக அறிந்து அடங்குவது அன்னையின் அருள் அன்பரில் பேரருளாவது:

. வாழ்வு என்பதை அறியாதவரில்லை.

. நம்மைத் தேடிவருவது தொந்தரவு, உபத்திரவம், பிரச்சினை, வீண்வேலை.

. இவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது பிழைக்கக் கற்றுக்கொள்வது.

. நல்லதுஎன ஒன்றிருந்தால், அதை அனைவரும் தேடிப் போகின்றனர்.அது எவரையும் தேடிவருவதில்லை.

. தமிழ்நாட்டில் முதல்வர் பதவி இதுவரை எவரையும் தேடிவந்ததில்லை. 1952இல் சட்டசபையில் மெஜாரிட்டி இல்லாதபொழுது ராஜாஜியைத் தேடிவந்தது. அது தேடிவந்ததாகாது.

. ஒரு மில், MLA பதவி, செல்வம், செல்வாக்கு மனிதனைத் தேடி வருவதில்லை. அப்படித் தேடிவருவது நம்போன்றவருக்கில்லை. அதை அதிர்ஷ்டம் என்கிறோம்.

. உலகம் முன்னேறியபின் முதலில் அது சூட்சும உலகில் நடைபெறுகிறது. அது நம் உலகில் வர முயலும்பொழுது அதற்குரிய கருவியான மனிதன் கிடைப்பதில்லை. அந்நிலையில் அச்சந்தர்ப்பம் வாய்ப்பாக மாறி தகுந்த மனிதனை நாடிவரும். சுதந்திரம் வந்த ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரே அலுமினியம் கம்பனியிருந்தது. இரண்டாவது ஆரம்பிக்க எவரும் முன்வரவில்லை. தயாராக சர்க்கார் லைசென்ஸ் தர விரும்பினாலும் ஏற்பவரில்லை. அந்நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு தொழிலதிபரைத் தேர்ந்தெடுத்து முதலும், டெக்னாலஜியும், மின்சாரச் சலுகையும் கொடுத்து அவரை ஏற்கச் சொல்லியது. அதுவே தேடி வந்தது.

இன்று அதுபோல் வீட்டுலோன், கார், வேலை, கிரடிட் கார்டு என நம்மை ஆயிரம் தேடி வருகின்றன. நாடு சூட்சுமத்தில் அளவுகடந்து முன்னேறியது எனக் காட்டுகிறது.

ஆன்மீகச் சூட்சும உலகில் அருள் பேரருளாக மாறி மனிதன் பெறக் காத்திருப்பதால், சுபிட்சத்தில் அது ஒரு சிறிதளவு துளியாக வெளிப்படுவது நாம் காணும் வாய்ப்புகள்.

. அன்பு அடக்கத்தால் அருளாவதும், அது மனிதரில் பேரருளாவதும், அதுவும் எதிரான அதிகாரத்தை அன்பு என அறிந்து ஏற்பதால் அன்பரில் பேரருள் நிலையாக எழுவதும் உண்மை.

. உலகம் வாய்ப்பு எனும் அமிர்த சாகரத்தில் மிதக்கிறது. மனிதன் பற்றாக்குறையில் வாடுகிறான்.

சத்தியம் வெளிவர சத்தம் கூடாது;

மனத்தில் சத்தமிருந்தால் ஒரு நாள் வெளிவரும்;

புரியவில்லை என்றாலும், சத்தம் அதிகமாகும்;

பிறர் அறியாமையை ஆராய்ச்சி செய்தால், நம் அறியாமை விளங்கும்;

30 மடங்கு வியாபாரம் பெருகிக்கொண்டேயிருந்தால் எப்படி வேலை செய்வது என்பது என் மகனுக்குள்ள பிரச்சினை - பிரின்ஸ்பால்:

. சத்தின் புறம் சத்தியம்.

. சத்தியம் ஆன்மாவின் அம்சம். ஆன்மாவின் அடுத்தவோர் அம்சம் மௌனம்.

. ஆன்மாவின் அம்சமான சத்தியம், அதன் மற்றோர் அம்சமான மௌனத்தின் மூலம் வெளிவரும்.

. சப்தம் மௌனத்திற்கு எதிரானது. அதன்மூலம் சத்தியம் வெளிவர இயலாது.

. மனத்திலிருப்பது வெளிவருவதற்காக, அங்கு ஒரு விஷயம் எழுந்தால், அடுத்தாற்போல் அது வெளிவரவேண்டும் என்பது சட்டம். சத்தத்தை அழிக்கவேண்டுமானால், அது எந்த நிலையில் எழுந்தாலும், அதே நிலையில் மௌனமாக்கிவிட்டால் அது அழிந்துபோகும்.

. நமக்குப் புரியாததை வாய்விட்டுப் படித்துப் பார்த்தால் புரிவதுண்டு. புரிவது எனில் மனம் சரி என ஏற்பது. மனத்தில் ஆழத்திலிருப்பது, மனத்தில் மேலேயிருந்தால் அது சொல்லாக இருக்கும். புரிந்தால் உள்ளே போய்விடும். வாய்விட்டுச் சத்தமாகப் பேசினால் மேலேயுள்ளது உள்ளே போகும். நமக்குத் தெளிவாகத் தெரிந்தவை மனத்தின் ஆழத்திலிருப்பதைக் காணலாம். அங்கிருந்து பேசும்பொழுது குரல் மெதுவாக வரும். பிறருக்குப் புரியவில்லை என்றால் உரத்த குரலில் பேசவேண்டியிருக்கும். நமக்கே புரியவில்லை என்றால் அபாரசத்தம் போடுகிறோம்.

. ஒருவர் விபரம் தெரியாமல் பேசினால் கேலி செய்கிறோம். சற்று நிதானித்துப் பார்த்தால், அல்லது அவர்களை விசாரித்தால், அந்த விஷயத்தில் அவர்கட்கு அனுபவமில்லை, அதனால் அப்படிப் பேசுகிறார் எனத் தெரியும். நம்மைக் கவனித்தால் நமக்கு அனுபவமில்லாத இடத்தில் நாமும் அவர்போலப் பேசுகிறோம் எனத் தெரியும். அவருடைய அறியாமையை ஆராய்ச்சி செய்தால், நம் அறியாமை தெரியும். நம்மிடம் உள்ள அறியாமை அவருடைய அறியாமையாகப் பிரதிபலிக்கிறது.

.வேலை என்று செய்தால், விவரமாக வேலை செய்தால், நுட்பமாக நுணுக்கமாக வேலை செய்தால், மனம் விழிப்பாக இருந்தால், ஆன்மா விழித்து எங்கும் அபரிமிதமான வாய்ப்புகளைக் காண்கிறது. தொழில் விரிவடைகிறது. அதை ஏற்று அடுத்த கட்டம் போனால், அதேபோல் விரிவடைந்தபடியிருக்கும். முழுமையான விழிப்பை, எந்த நேரமும், எல்லா விஷயங்களிலுமிருந்தால் 30 மடங்கு பெருகும் வியாபாரம், முதலில் 30 மடங்கும், மார்க்கட்டில் 30 மடங்கும், டெக்னாலஜியில் 30 மடங்கும், நிர்வாகத்தில் 30 மடங்கும், உற்சாகத்தில் 30 மடங்கும், ஒத்துழைப்பில் 30 மடங்கும், எல்லா விஷயங்களிலும் 30 மடங்கு பெருகுவதைக் காணலாம். அதை அபரிமிதம் என்கிறோம். நம் கவனம் பெருக்கம். பெருக்கம் பெருக்கத்தைத் தரும். எவரும் அந்த வாய்ப்புக்குரியவாறு வேலை செய்யப் பிரியப்படுவதில்லை.

மூலமும், முடிவும் அன்னை. அந்த அன்னையை நம்முள் காணவேண்டும் என்று தோன்றுவதில்லை;

முடிவில்லாத பொறுமையே பொறுமை எனப்படும். அதை நமக்கு நாமே சொன்னாலும் எரிச்சல் வருகிறது:

. நமக்குத் தொழில் முடிவு; நாம் மூலம்.

. குடும்பம் முடிவு; நமது நல்லெண்ணம் மூலம்.

. எரிச்சல் வருகிறது என்றால் புரியவில்லை எனப் பெயர்.

. ஜனாதிபதி கலாம் நாட்டில் சீனுவாசராமானுஜத்தைத் தேடவேண்டும் என்கிறார்.

. ஜனாதிபதி இதைச் சொல்வது மனிதன் அதிர்ஷ்டத்தைத் தேட வேண்டும் என்பதன் அடுத்த கட்டம்.

. இதற்கு மூலம் எது, முறை எது, முடிவு என்ன?

. இனி இந்தியா சீனுவாசராமானுஜத்தை உற்பத்தி செய்யவேண்டும் என்பதில்லை. ராமானுஜம் மேதை. யோகி மனம் intuition அவருடையது.

. தவசி மோட்சம் பெறுகிறான். யோகியின் ஞானம் (intuition) அதற்கு முன் நிலை.

. நாட்டில் மோட்சம் பெற்ற முனிவர், தபஸ்வி, ரிஷி, யோகி ஆகியோர் நூற்றுக்கணக்கிலில்லை, ஆயிரக்கணக்கிலிருந்துள்ளனர். ஒருவர் பெற்ற சித்தி அவரது சந்ததியில் ஓரளவு இல்லாமலிருக்காது. அது அழிவதில்லை. சித்தி பெற்றவருடைய முந்தைய 21 தலைமுறைகட்கும் பலன் தரவல்லது. மோட்சத்தை நோக்கிப் போகும் பாதையில் ஞானம், மேதையாகும் ஞானம் ஒரு நிலை. அது சாஸ்திரங்களை நாடும். அப்படி எழுந்தவை 64 சாத்திரங்கள். எந்தச் சாத்திரமும் ஒரு மேதையால் எழுதப்பட்டது. 1904-இல் பகவான் அரசியலில் நுழைந்தபொழுது "ஏன் அரசியல்" என்ற கேள்வியை அவரிடம் எழுப்பியபொழுது அடிமையான நாடு சுதந்திரம் பெறும்வரை எதுவும் பரிமளிக்காது என்றார். இன்று நாடு வறுமையில் இருக்கும்வரை மேதைகளோ, ரிஷிகளோ வாழ்வில் வெளிவர முடியாது. நாடு வளம் கொழித்தால் தான் அவர்கள் தாமே வெளிவருவார்கள். அதுவரை தேடினால் கிடைப்பார்கள். ஓரிருவர் கிடைக்கமாட்டார்கள். நூற்றுக்கணக்காக, ஆயிரக்கணக்கானவர் கிடைப்பர். இன்று அவர்கள் இருளில் புதைந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் எங்கிருந்தாலும், எந்த அளவு புதைந்திருந்தாலும், அந்த இடத்தில் அவர் பளிச்சென இருப்பார்கள். அதுவே முதல் அடையாளம். ஒரு சிறு குழுவில் தலைமையாக இருப்பார்கள். அதைவிடப் பெரிய திறமையிருந்தால் அவர்களை அனைவரும் ஏற்க மறுப்பார்கள். அவர்கள் செய்யும் காரியத்தில் தலைசிறந்தவராக இருப்பார்கள். பொய்யே சொல்ல முடியாதவராக இருந்தால், அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். அளவுகடந்த energy சுறுசுறுப்புள்ளவராக இருப்பார்கள். அவர்கள் தொழிலில் ஏதாவது புதியதாகச் செய்வார்கள், செய்தபடியிருப்பார்கள். தொழிலின் மூலத்தை அறிந்தவர்களாகவோ, நாடுபவர்களாகவோ இருப்பார்கள். பொறுமை அவர்களிடம் பெரிதுமிருக்கும். தனக்கு ஒரு விசேஷத் திறமையுண்டு என்று தெரியாதவரானால், அவரிடம் மேதாவிலாசம் புதைந்திருக்கும். ஆயிரக்கணக்கான முனிவர்களுடைய சந்ததியில் ஆயிரக்கணக்கான மேதைகளின் வித்து புதைந்திருப்பதைக் கண்டுபிடிப்பது சுலபமில்லை என்றாலும், முடியாததில்லை. மௌனமும், பொறுமையும் உள்ள திறமைசாலி எவரும் இதற்கு உரியவர்.

குதர்க்கம் தன்னை வெல்லும்வரை பிறரால் குதர்க்கத்தை வெல்ல முடியாது - பிரின்ஸ்பால்:

. பெரியவன் "அம்மா என்ன இன்ஜினீயரா?", "என்னம்மா செய்கிறீர்கள்", "எனக்கு நீங்கள் எப்பொழுதும்போல்தானே தெரிகிறீர்கள்" என்று பேசுவது குதர்க்கம். நடப்பவற்றையெல்லாம் அவன் பார்த்தபின், அம்மா என்ன செய்கிறார்கள் எனக் கேட்கத் தோன்றுவது இயல்பன்று. என்னவோ செய்கிறார்கள், எனக்குத் தெரியவில்லை என்று சொல்லலாம். ஏன் அவன் அப்படிப் பேசுகிறான்?

. அவன் இன்ஜினீயர். பாக்டரிக்கு இன்ஜினீயர் தேவை. பாக்டரி பெரியது. அது அவனுடையது. இதுவரை அவனுக்குத் தெரிகிறது. எந்த இன்ஜினீயரைத் தேடியும் பாக்டரி வருவதில்லை, எல்லா இன்ஜினீயருக்கும் அது வரவில்லை என்று அவனுக்குத் தெரிய முடியாததில்லை.

. பெரியவன் அப்படி நினைக்க விரும்பவில்லை.

. அப்படி நினைத்தால் பாக்டரிக்குப் பணம் வேண்டும், லைசென்ஸ் வேண்டும், டெக்னாலஜி வேண்டும், நிர்வாகம் வேண்டும், அந்தஸ்து வேண்டும் என புரியும். அவற்றுள் அவனிடம் எதுவுமில்லை. அதனால் அவன் மனம் அப்படி நினைக்க விருப்பப்படவில்லை. விரும்பவில்லை என்று உள்ளே தெரிவதால், வேகம் வருகிறது. அது மற்றவரால் நடக்கவில்லை எனப் பேசச் சொல்கிறது. அது தர்க்கத்திற்கு எதிரான குதர்க்கம்.

. மனத்தின் ஆழத்தில் விஷயத்தை மாற்றிப் பேச முடிவெடுத்து, அம்முடிவை வேகமாக அமுல்படுத்துபவருக்கு, விளக்கம், வியாக்யானம், விஷயம், விவரம், வாதம் பலன் தாராது. எந்த விளக்கமும் இரு வகைகளில் கூறப்படலாம். பெரியவன் முடிவு அடுத்த வகை. அந்த முடிவு அவனுடைய சொந்த முடிவு. சொந்த முடிவைச் சொந்தமாக மட்டுமே மாற்ற முடியும்.

. குதர்க்கத்திற்கு தத்துவம் உண்டா?

. தர்க்கம் என்பதன் எதிர் குதர்க்கம். விஷயங்கள் சரியான தொடர்பு கொள்வது தர்க்கம். டெல்லி வடக்கேயுள்ளது. நான் டெல்லிக்குப் போக வடக்கே போகவேண்டும் என்றால் டெல்லியுள்ள திசையும், நாம் போகும் திசையும் வடக்காக இருப்பதால் அது தர்க்கத்திற்குப் பொருந்தும். தெற்கே போனாலும், உலகம் உருண்டையாக இருப்பதால், வடக்கே முடியும் என்பதால் தெற்கேயும் போகலாம் என்பது தர்க்கமாகாது. அதைக் குதர்க்கம் என்கிறோம். ஒளி என்றால் இருள் உடன் வருகிறது. நல்லதுடன் கெட்டது வரும். எதுவும் இருவகைகளாக அமையும். மனிதன் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதைப் பொருத்து அவன் வாழ்வு அமையும். பெரியவன் குதர்க்கத்தை நாடுகிறான். ஏன் நாடுகிறான் என்பது அடுத்த கேள்வி. வறுமை, செல்வத்துடனிருந்தால் தன் நிலைமையை ஏற்பதுண்டு. அல்லது தன்னையே செல்வம் என வர்ணிக்க முயல்வதுண்டு. முன்னேற ஆர்வமிருந்து, வலிமை இல்லாவிட்டால் அறிவு தலைகீழே செயல்படுவது குதர்க்கம்.

டிகிரியைக் காணோம். யூனிவர்சிட்டிக்குப் போய் நகல் வாங்கி வரவேண்டும்:

. தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிக்க பல ஊர்களில் பல முறைகளைக் கையாள்கிறார்கள். அவை எல்லாம் பலிக்கும். அவற்றிற்கெல்லாம் அளவுண்டு. அந்த அளவை மீறி வரும் பிரச்சினைகட்கு உலகில் தீர்வில்லை. அன்னையிடம் அப்படிப்பட்ட பிரச்சினைகள் மட்டுமே வரும். அவை தீர்வதைக் கண்டவர் அன்னையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வர். கெட்டியாகப் பிடித்துக் கொண்டவுடன் இனி அதுபோன்ற பிரச்சினையே எழாத நிலையை அன்னை தருகிறார். அத்துடன் அன்னையை அடியோடு மறந்துவிடுவார்கள். பெரியவனுக்கு அதுபோன்ற நிலை. யூனிவர்சிட்டி டிகிரி, கிரயப்பத்திரம், F.D. ரசீது எந்த வீட்டிலும் தொலையாது. தொலைந்தால் அது வீடில்லை. அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். நம்மைப்போன்றவர் ஒரு நாள் லாக்அப்பில் இருப்பதில்லை. அவை நாம் கேள்விப்படாததில்லை. கற்பனை செய்ய முடியாதது.

. பெரியவன் குதர்க்கவாதி. அத்துடன் நன்றியுணர்வு இல்லாதவன். கேலி செய்பவனுக்குக் கொடுமையான உள்ளம். நல்லது இல்லை என்பதைக் கடந்து கெட்டது இருக்கிறது என்ற இடம் உள்ளவன். முதற்பகுதியில் நிகழ்ச்சிகளையும், ஓரளவு அன்னை விளக்கங்களையும் எழுதினேன். கதையின் இரண்டாம் பாகம் குடும்ப நிகழ்ச்சிகளில் யோக அம்சங்களையும், யோக தத்துவங்களையும் எழுத முற்பட்டேன். ஒரு பக்கம் முழுவதும் கதையை மீண்டும் எழுதி ஓரு வரி தத்துவம் எழுதுகிறேன். தத்துவம் வாழ்வில் வெளிப்படுவதைப் புரிந்துகொள்வதும், எழுதுவதும், விளக்குவதும் கடினம். முடிந்தவரை எழுதுகிறேன். கதை மூலம் சொல்லக்கூடிய தத்துவங்களைக் கடந்து தத்துவ அம்சங்கள் உள்ளன. அவற்றுள் தீமை, கடுமை, கொடுமையுண்டு. அதே போல் இனிமை, அன்புண்டு. அவற்றை அப்படியே சொன்னால் புரியும். கதையுடன் அவை பொருந்தா. ஏனெனில் அவை நிகழ்ச்சிகளின் பின்னாலிருக்கும்; மறைந்திருக்கும்; ஒளிந்திருக்கும். எடுத்துச் சொன்னால் வந்து பொருள் கொள்வது போலிருக்கும். வாசகர் கண்ணிலும், மனதிலும் அவ்வம்சங்கள் பட்டபிறகு விளக்கினால் புரியும். பெரியவன் அப்படிப்பட்டவன். அதனால் கேலிசெய்கிறான். அது பொறுக்க முடியாதது, மன்னிக்க முடியாதது.

. ஒருவர் அப்படிப்பட்டவர் ஆதிக்கத்திற்குள் வந்துவிட்டால் - மாமியார், மருமகள், ஏழை உறவினர், வேறு வழியில்லாதவர் - கொடுமைக்காரர்கள் கொடுமையைக் கடுமையாகச் செலுத்துவார்கள். அவர்கள் தங்கள் விஷயத்தில் அளவுகடந்து உஷாராக இருப்பார்கள். அந்த உஷாரான இடம் விழித்துக்கொண்டால், பிரச்சினை உடனே தீரும்; எதிர்பாராதவகையில் தீரும். அந்த நேரம் திருவுருமாற்றத்திற்கு அவர்கள் தங்களையறியாமல் சம்மதிப்பதால், க்ஷணத்தில் வேலை முடியும். அதற்கெதிரானதும் உண்டு. அவ்வளவு உஷாராக தனக்கு கிடைத்த புதிய வசதியைத் தவறாகப் பயன்படுத்துவது அது. அதைச் செய்தவருக்குப் பேரடி விழும். அந்த இடம் மனதில்படாது, நினைவு வாராது, புரியாது. அந்த இடம் நினைவு வந்து மாறாமல் அந்தப் பிரச்சினை கரையாது. தவறு செய்யாதவனைப் பிறரோ, சந்தர்ப்பமோ தவறு செய்யத் தூண்டியபின், அவன் மறுப்பது கஷ்டம். மறுத்தால் பிழைத்துக் கொள்வான். அதற்குப் பலியானவன் அதை மறந்து விடுவான். நினைவே வாராது. கடந்த காலச் சமர்ப்பணம் மட்டுமே நினைவுபடுத்தும். நினைவுபடுத்தினால் பொருட்படுத்தமாட்டான். "எப்பொழுதோ போனது, அதற்கு இப்பொழுது என்ன?" என்பான். அது மாறுவது திருவுருமாற்றம். சுபாவம் செயல்படும் இடம்.

அன்னையை அதிகபட்சம் பெற இந்த இடத்தில் மாறுவது அவசியம். அதேபோல் இங்கு தவறு பெரிய தவறாக மாறும் என்பதால் அதைத் தவிர்க்கவேண்டும்.

. அவன் டிகிரி பிரச்சினை எளிதாகத் தீர்ந்தது. அவன் இந்த முக்கிய இடத்தில் உஷாராகி திருவுருமாற இடம் கொடுத்ததால்தான்.

. கதையை இந்த நோக்கோடு பார்த்தால் ஒரு பக்க கதைக்கு 100 பக்கம் விளக்கம் எழுதலாம். கதை மனத்தைத் தொட்டபிறகே பயன்படும் விமர்சனம் என்பதால் அளவோடு எழுதவேண்டி இருக்கிறது.

வருவது பெரியது. காப்பாற்றுவது கஷ்டம் - தாயார்;

உன் பிரச்சினை எதுவானாலும் நான் தீர்க்கிறேன். நான்தான் உனக்கு மதர். எனக்கு சலாம் போடு - சிறியவன்;

நீயே எங்களுக்கெல்லாம் பிரார்த்திக்கக்கூடாதா? - கணவர்:

. சிறியது பலிக்கப் பெரியது வருவது சிருஷ்டியின் தத்துவம். அனந்தமே அணுவாகிறது என்பதால் அணுவை உற்பத்தி செய்ய அனந்தம் வந்து உருவத்தால் சுருங்குகிறது. பெரியது சிறியதாக விரயமில்லாமல் சுருங்கவேண்டும் என்பது கஷ்டம் என்பதால் வருவதைக் காப்பாற்றுவது கஷ்டம்.

. பெரியவன் சிறியவனைக் கேலி செய்வதால் சிறியவனால் பெரியவன் பிரச்சினை தீரும். எவரை நாம் கேலி செய்கிறோமோ அவர்களிடம் நம் energy தெம்பிருப்பதால் தீர்வு அவர்களிடமிருந்து எளிதில் வரும். கேலி என்பது தொடர்பு ஏற்படுத்துகிறது. சிறியவனால் பிரச்சினை தீர்கிறது.

. பிரின்ஸ்பால் மகனும், கணவரும் இதையே கூறுகின்றனர். இருவரும் பெற்றது பொங்கி வழிவதால் அப்படிக் கூறுகின்றனர்.

. இந்தியாவுக்குச் சுதந்திரம் 1910-இல் சூட்சுமமாக வந்தது. பெற முடியவில்லை. அதற்குரிய தலைமை அன்று நாட்டிலில்லை. 1920-இல் மகாத்மா வரும்வரை தலைமையில்லை. மகாத்மா, வந்த சுதந்திரத்திற்குரிய தலைமையாக ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குத் தயாராக இல்லை. அவர் ஆயுதம் சத்தியாக்கிரஹம். வாய்ப்புக்குரிய ஆயுதமில்லை என்பதால்,

. 1910-இல் பெறவேண்டியது 1947வரை ஒத்திப்போயிற்று.

. நாடு முழுமையாக வருவதற்குப்பதிலாக 3 பிளவாகப் பிரிந்தது.

. நேரடியாகச் சுதந்திரம் சுபிட்சத்தை எட்டுவதற்குப்பதிலாக 1980 வரை சுபிட்சம் ஒத்திப்போயிற்று.

. சொந்தக்காலில் நிற்பதற்குப்பதிலாக நாம் மேல்நாடுகளை எதிர்பார்க்கிறோம்.

. பெரியது வந்தால் பெறப் பாத்திரம் பெரியதாக இருக்க வேண்டும். தலைமை உயர்ந்ததாக இருக்கவேண்டும். கருவி - strategy - நுட்பமானதாக இருக்கவேண்டும். கொடுப்பவருடைய பெருந்தன்மை பெறுபவருக்குப் பெறுவதிலிருக்கவேண்டும். இவை கடினம்.

. "நீயே எங்களுக்கெல்லாம் பிரார்த்திக்கக்கூடாதா?" - இதில் என்ன தத்துவம் உள்ளது?

இதன் தத்துவம் அருள். பிரம்மம் தன்னுள் தானே மறைந்து, மறைந்ததை மறந்தபின், மறைந்த பிரம்மம் நினைவுபடுத்திக் கொள்வதில் ஆனந்தம் தேடியது. ஆனால், மறைந்த பிரம்மத்தால் தன்னைத் தானே நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் பரமாத்மா பாதாளத்தை நினைவுபடுத்துகிறது. அது அருள். நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய பிரம்மம் தன்னை வெளியிலிருந்து நினைவுபடுத்த வேண்டியதை எதிர்பார்ப்பதால், கணவரும், பிரின்ஸ்பால் மகனும் தங்கள் வேலையை மனைவியும், பிரின்ஸ்பாலும் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

. இருள் அருளை எதிர்பார்ப்பது இங்கு தத்துவம்.

. கணவரும், பிரின்ஸ்பால் மகனும் இருள். மனைவியும், பிரின்ஸ்பாலும் அருள்.

அதே காரியத்தைத் தான் நன்றாகச் செய்யமுடியும் என்று காண்பான் - தாயார்;

பலனை எதிர்பார்க்கக் கூடாது என்பது தலையைப் பிய்த்து எடுப்பது போலாகும் - பிரின்ஸ்பால்;

மற்றவர் கெட்டுப்போனபொழுது கை தட்டிச் சிரிக்க சந்தோஷம் உடனே எழும் - பிரின்ஸ்பால்;

அப்படிச் சிரித்தால் அந்த நிலை நமக்கு வரும் - தாயார்:

. இப்பகுதியில் தத்துவத்தை முக்கியமாகக் கருதுவதால் சுயநலமாக மகனுக்கு நல்லது செய்வது, கீதையின் நிஷ்காம்ய கர்மம், மனிதன் சந்தோஷப்படும் விஷயம், அதன் பலன் ஆகியவற்றின் தத்துவத்தை விளக்கவேண்டும்.

. சுயநலம் என்பது அகந்தை மற்றதிலிருந்து பிரிந்து தன்னை வளர்ப்பது. எதை முக்கியமாகக் கருதி வளர்க்கிறதோ - பணம், அதிகாரம் -அவை அகந்தையை உடைக்கும்.

. மனிதனுக்குத் தனித்து வாழ்வது பலம்.

. மனிதனால் தனித்து வாழ முடியாது.

. தனித்து வாழ, மனிதன் மற்றவர் ஒத்துழைப்பை அவசியம் பெறவேண்டும்.

. மற்றவருடன் சேர்ந்து வாழ்ந்தால் மனிதனுக்கு உள்ளதில் பாதிக்குமேல் போய்விடும்.

. மற்றவர் ஒத்துழைப்பால் தன்னை வலுவாக்கிக்கொள்வது சுயநலம்.

. சுயநலமான மக்களிடையே இது வலிமை, தலைமை தரும்.

. பண்பான மக்களிடையே சுயநலமி ஒதுக்கப்படுவான்.

. சுயநலம் சொத்து.

சுயநலம் சொத்தையாக்கும்.

சுயநலம் வளர்ந்து பரநலமாக வேண்டும்.

சுயநலம் பரநலமாக மறுத்தால், சுயநலம் பண்பான மக்களிடையே செத்துவிடும்.

இது அகந்தையின் வரலாறு.

. பிரின்ஸ்பால் தம் மகன் வளர - சுயநலத்திற்கு - Silent willஐப் பின்பற்றப் பிரியப்படுவது பலன் தரும் தவறான போக்கு.

. தம் மகன் மனம் வளர முயல்வது சரி. மகன் பணம் வளர செய்வது சரியில்லை.

. பலனை எதிர்பார்க்காமல் வேலை செய்தால் அதிகப் பலன் வரும் என்பதால் மனம் பலனை நினைக்கக்கூடாது எனில் முடியைப் பிய்த்து எடுப்பது போலிருக்கும். மனம் பக்குவப்பட்டு பலனை மறந்து, வேலையில் ஈடுபடுவது சரி. அப்பொழுது எரிச்சல் வாராது.

. மனிதன் தான் முன்னுக்குவருவதைவிடப் பிறர் கெட்டுப்போவதை விரும்புவதன் தத்துவம், தனக்கு வசதி வருவதைவிட தன்னுள் உள்ள இருள் அழியவேண்டும் என்பதைப் பிறர் அழிய வேண்டும் என அவன் மனம் கூறுகிறது.

. கைதட்டிச் சிரித்தால் அந்த நிலை நமக்கு வரும் எனத் தெரிந்தாலும், அதை மனிதன் செய்வது திருவுருமாற்றம் அவசியம் என்பதை வக்கிரமாக அறிகிறான் எனப் பொருள்.

. பெரியவனையும், சிறியவனுடன் அவன் உறவையும் கவனித்தால் அது விளங்கும். அதனால் டிகிரி சிறியவன்மூலம் திரும்பி வருகிறது.

தாயார் மனக்கண் முன் ஓடிப்போன பெண் பாதி வழியில் திரும்புவது தெரிந்தது;

கறுத்திருந்த பெண்ணின் முகம் அரைமணி நேரத்தில் பளிச்சென்று மாறிவிட்டது;

அது மறக்கக்கூடிய விஷயமா - தாயார்;

வந்த பெண் தகப்பனாருடன் வீடு திரும்பினாள்:

. கம்ப்யூட்டரில் மற்ற கம்ப்யூட்டர் செய்திகள் தெரிவதுபோல், அன்னைச் சூழலில் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகள் தெரியும். அதனால் ஓடிப்போனவள் திரும்புவதைக் கண்டார்.

. ஒரு பிரச்சினை தீராது என்றால், அதை மையத்திற்கோ, ஓர் அன்பரிடமோ கொண்டுவர முடியாது.

. தீராது என்ற பிரச்சினை அன்னைச் சூழலில் வந்துவிட்டால், "தீராது" என்ற நிலை "தீரும்" என்று மாறிவிட்டதாக அர்த்தம்.

. தீராது என்பதன் தத்துவம் என்ன?

தீரும் என்பதன் தத்துவம் என்ன?

மனிதன் தன்னை வலியுறுத்த முயன்றால் தீராது.

அன்னையை நாட முயன்றால் தீரும்.

அன்னையை நாடியும் தீராததை எப்படி விளக்குவது?

அன்னையை ஏற்றாலும், இப்பிரச்சினை விஷயத்தில் அன்னையை ஏற்க மனமில்லை எனப் பொருள்.

. பிரச்சினை என்பது இருள்.

. இருள் அருளை நாடினால் கரையும்.

. அருளை நாடுவது தீர்வது; நாட மறுப்பது தீராதது.

. பூஜை அறையில் ½ மணி நேரம் உட்கார்ந்திருந்த பெண் முகம் சூழலால் பளிச்சென்றாகிவிட்டது.

. மறக்கக்கூடாத விஷயத்தை பகவான் அன்னையை மறக்கச் செய்தார். அன்னைக்கு பகவானே முக்கியம், மையம். மையம் மனம் வைத்தால், வைத்தபடி நடக்கும். நமக்கு நாமே மையம். நாம் நினைத்தபடி உலகம் நடக்கும்.

. எப்படியோ பெற்றோர், பெண் இந்த வீட்டிலிருப்பதைத் தெரிந்து வந்து, நல்ல முறையில் அழைத்துப்போயினர். அது எப்படியோ இல்லை.

. வந்த பெண் இவ்வீட்டுப் பெண்ணுக்குத் தோழி.

. ஓடியவள் மீது இப்பெண்ணுக்குப் பரிவு.

. ஓட முடிவு செய்தாலும், இப்பெண்ணின் பரிவு அவளைத் திரும்ப அழைக்கும்.

. ஓடியவளே இங்கு இருப்பது பெற்றோருக்குத் தெரிய சந்தர்ப்பம் ஒத்துழைக்கும். சந்தர்ப்பம் ஒத்துழைப்பது அருள்.

. இந்த மாசை எப்படி அழிப்பது என்பது பெரிய விஷயம்.

. பெண் அன்னையை அந்த அளவுக்கு ஏற்றால் மாசு மனிதர்கட்கு மறந்துபோகும்.

. பெண் ஓடியதை நினைத்தால், மக்கள் அதை மறக்க மாட்டார்கள்.

. "உன் நினைவு, உலகத்தின் நினைவு".

பம்பாயிலிருந்து ஒரு கம்பனி நம்மிடமிருந்து நம் சரக்குக்குக் கான்ட்ராக்ட் கேட்கிறான்.... நம் பாக்டரியை 12 மடங்கு பெரிதாக்கச் சொல்கிறார்கள்;

நம்பிக்கையை 12 மடங்கு அதிகப்படுத்த வேண்டும்; பிடிவாதம், முரட்டுத்தனமாகுமே:

. இருள் மாறி நிலம் தெளியும்பொழுது அதிகாலையில் எத்தனை மடங்கு ஒளி பெருகுகின்றது எனக் கூற முடியுமா?

. ஒன்றுமில்லாதவன் மந்திரியானால் அவனுக்கு எத்தனை மடங்கு வசதி வரும் எனக் கூற முடியுமா?

. வறண்டுபோன ஆற்றில் புது வெள்ளத்தை எத்தனை மடங்கு எனக் கணக்கிடுவதில்லை.

. எலிசபெத் பெம்பர்லிக்குப் போனபின் தம் தாயார் அங்குள்ள house keeper சமையல் மேனேஜர் போலவுமில்லை என்று கண்டபின் கணக்கு - எத்தனை மடங்கு என்ற கணக்கு - போட என்ன இருக்கிறது?

. புது வெள்ளம் பெருவெள்ளம், பிரவாகம்.

. பிரவாகத்தின் தத்துவம் உண்டா?

. திசை மாறுவது பிரவாகம்.

. திசை மாறுவதுஎனில் கண்டம் அகண்டமாவது ( finite becoming Infinite).

. அகண்டத்தை நோக்கிக் கண்டம் போவது பிரவாகமாக இருக்கும்.

. அகந்தை சைத்தியப்புருஷனாவது எனவும் கருதலாம்.

. அகந்தையில் நம் மனம்மட்டும் தெரியும். சைத்தியப்புருஷனில் உலகில் எவர் மனமும் தெரியும். அம்மாற்றம் பெருவெள்ளமாகவேயிருக்கும்.

.  Will changes into silent will எனலாம்.

நம் எண்ணம் 10-இல் ஒன்று பலிக்கும்; 100-இல் ஒன்று பலிக்கும்; Silent will நினைப்பனவெல்லாம் பலிக்கும் - மாற்றம் பெரியது, பிரம்மாண்டமானது.

. வளர்ச்சிக்குத் தடையிருந்தால் ஏதாவது ஒரு நிலையில் நின்றுவிடும். தடையேயில்லாத வளர்ச்சியை அதனுடன் ஒப்பிட முடியுமா?

. என் சுபாவத்தில் முரட்டுத்தனமில்லை என்கிறார் கணவர்.

. முரட்டுத்தனம் என்பது அசட்டுத்தனம்.

. அதன் வெளிப்பாடுகள் ஏராளம்.

. பிடிவாதம் அதில் ஒன்று.

. கேலி விஷமான முரட்டுத்தனம்.

. அறியாமையின் வண்ணம் எதுவும் முரட்டுத்தனத்திற்குரியது.

பால்காரன் மகன் அமெரிக்கா போகப்போகிறான் - வேலைக்காரி:

. பால்காரன் மகன் அமெரிக்கா போவது அதிசயம்.

. அது போன்ற அநேகர் அமெரிக்கா போவது பெரிய அதிசயம்.

. எல்லோரும் இந்த நாளில் போகிறார்கள். இதிலென்ன விசேஷம் என்பது அபிப்பிராயம்.

. அருள் பால்காரனில் செயல்பட்டால், அவன் மகன் அமெரிக்கா போகிறான். அருள் சர்க்கார்மீது, நாட்டின்மீது செயல்பட்டால் அவனைப் போன்ற அநேகர் அமெரிக்கா போகின்றனர்.

. ஒருவர் போவது நமக்கு அதிசயம். அனைவரும் போவது நமக்கு ஒன்றுமில்லை. இதுவே மனிதமனம்.

. அவன் மையத்திற்குப் பால் சப்ளை செய்கிறான்.

. அன்னையின் பார்வைபட்ட இடங்களிலெல்லாம் அதிசயங்கள் நடக்கின்றன. அதிசயம் நடக்குமிடங்களிலெல்லாம் அன்னை இருக்கிறார் என்பதை நம்மால் அறியமுடிவதில்லை. எந்த தெய்வத்தின் மூலம் நடந்தாலும் அன்னை அங்கிருப்பார்.

அன்னையின்றி உலகில் அணுவும் நடக்காது

என்பதை நாம் வணங்கும் தெய்வத்தை நாம் உயர்வாகக் கருதுவதாக நினைப்பார்கள்.

. ஒரு சோதனையைப் பல வழிகளில் மேற்கொண்டால் அது புரியும்.

. நமக்குத் தெரிந்த அன்பர்கள் செயல்களையெல்லாம் தொடர்ந்து போனால், அன்பர்கள்மூலம் அவர்களுடைய தொடர்பைத் தொடர்ந்தால், எங்காவது பெரியதாக ஒரு விஷயம் நடந்தால், கூர்ந்து பார்த்தால் நம் மனக்கண்ணுக்கு அதன்பின் அன்னையின் உருவம் தெரியும்.

. அன்பர்களுடைய தொடர்பைப்போல் எதிரிகளையும் தொடர்ந்தால், அன்னை அங்கும் நிதர்சனமாகத் தரிசனம் தருவதைக் காணலாம்.

. நம் சூட்சுமப்பார்வையின் கூர்மை அதிகரித்தால் எல்லா இடங்களிலும், குறிப்பாகப் பெரிய காரியங்கள் நடக்கும் இடங்களிலெல்லாம் அன்னையைக் காணலாம்.

. தீயசக்திகள் பின்னும் அன்னை இருந்து செயல்படுகிறார். காண்பதைப் பொருத்தது.

. நம் அளவில் இந்தச் சோதனையை உலகெங்கும் எடுத்துச் செல்லலாம்.

. Occult vision, subtle vision, சூட்சுமப்பார்வை தேவை.

. அன்பர் விவசாயத்தில் செய்த சேவை நாடெங்கும் பரவியது. World Bank அடுத்த இரண்டாண்டில் கிராமப்புனருத்தாரணத்தைத் தானே மேற்கொண்டது.

. அன்னையைக் காண முடிவது அன்பரின் அன்பின் ஆழத்தைப் பொருத்தது.

மனத்தில் உள்ள அசுரன் எட்டிப்பார்க்கும்பொழுது நாம் உஷாராக இருக்கவேண்டும். உடனடியாகப் பக்தி செலுத்த முயலவேண்டும்:

. பிரபலமான ஒருவர், இனிமைக்குப் பேர்போனவர், "யாரிடம் பேசினாலும் நாற்காலியை எடுத்து அல்லது மேஜையைத் தூக்கி அவரை அடிக்கத் தோன்றும்" என்றார்.

. "எனக்குச் சும்மாயிருக்கும்பொதே ஒரு டம்ளர் தண்ணீரைப் புத்தகத்தின் மீது ஊற்றத் தோன்றும்" என்றார் ஒருவர்.

. தம் மனத்தை அறியாதவர் unconscious பலர்.

. பெரும்பாலோர் அறிவர்.

. "எனக்கு மாடியிலிருந்து குதிக்கவேண்டும், கரண்டில் கை வைக்க வேண்டும் என 2 மாதங்கள் ஜூரமாக இருந்தபொழுது தோன்றியது" என்பது ஒருவகை.

. ஜூரமாக இருந்தால் ஆழ்மனம் சிறிதளவு மேலே வந்து இப்படிச் செயல்படும்.

. சாதாரணமாக இருக்கும்பொழுது ஆழ்மனம் மேல்மனத்தின் சந்து பொந்துகளில் இப்படித் தோன்றுவதைக் கவனித்தால்,

. நமது வேலைகள் கெட்டுப்போவது தெரியும்.

. சாதாரண மனிதனுக்கு இது தெரியாது. தவறு நடப்பதைத் தலைவிதி எனக் கொள்வான்.

. அன்பர்கட்கு வழியுண்டு. க்ஷணம் நின்று அன்னையிடம் அவ்வெண்ணத்தைக் கொடுத்தால், அது கரைவதைக் காணலாம்.

. அசுரன் அடிக்கடி எழுந்தால், உள்ளேயுள்ள தெய்வம் ஆயுளில் ஒரு முறை வரும். அதைக் கவனிக்காவிட்டால் போய்விடும். கவனித்து அன்னையிடம் சமர்ப்பணம் செய்தால் பூர்த்தியாகும்.

. மவுண்ட்பேட்டன் மனைவி பாரிசில் குறி சொல்பவரைக் கண்டார். "உங்கள் கணவர் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்" என்றார் அவர். அதன்பின் மவுண்ட்பேட்டன் இந்தியாவில் வைஸ்ராய் ஆனார். இங்கிலாந்தில் பிரதமருக்கு £ 5,000 பவுன் வருஷச் சம்பளமாக இருந்த பொழுது வைஸ்ராயிக்கு £ 24,000 வருஷச் சம்பளம். மவுண்ட்பேட்டன் மனதிலும், கனவிலும் இதன் அறிகுறிகள் தென்பட்டிருக்கும். அவர் கவனமாகப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

இந்தியாவை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகுடம் என்று இலண்டனில் கூறுவார்கள். இராஜாஜி 1948-இல் கவர்னர் ஜெனரலானபொழுது மாதம் ரூ.24,000 என்ற சம்பளத்தை ரூ.15,000 எனக் குறைத்துக்கொண்டார். 1937-இல் சென்னையில் முதன்மந்திரியான பொழுது 1500 ரூபாய் மாதச் சம்பளத்தை மாதம் 500 ரூபாய் எனக் குறைத்துக் கொண்டவர் ராஜாஜி.

பெருமையை ஏற்பதும், பொறுப்பை ஏற்பதும் நம் மனப்பான்மையைப் பொருத்தது;

நம்மைச் சார்ந்தவர் செய்வன அனைத்திற்கும் நாமே பொறுப்பு consciousness responsibility:

. நாம் செய்யும் காரியம் உலகெங்கும் பரவுவது பெருமைக்குரிய விஷயம். பெருமை, திருப்தி, புரிவது (understanding) என்பவை அகந்தை, உணர்வின் அகந்தை, மனம் ஆகியவற்றிற்குரியன.

. அகந்தை பெருமைப்படும். பெருமைப்பட்டால் அகந்தை எழும்.

. பெருமைப்படாமல் திருப்திப்பட்டால் அகந்தை வீரியமாக எழாது. என்றாலும் திருப்திப்படுவது உணர்வின் அகந்தை.

. மனம் புரிந்துகொள்கிறது. மனமும், அகந்தையும் தொடர்புள்ளது.

. மனத்தையும் கடக்கவேண்டுமானால் புரிந்துகொள்ள முயலக்கூடாது.

. நாம் அனைவரின் பகுதி என்பதால் எவருடைய செயலுக்கும் நாமும் பொறுப்பாவோம்.

. ஒரு வேலையில் பலரிருந்தால், அந்த வேலை கெட்டுப்போனால், அதைச் சரி செய்ய ஒரே வழியுண்டு. யார் எந்தத் தவற்றைச் செய்தார்களோ அதைச் சரி செய்தால் வேலை கூடிவரும்.

. சத்தியஜீவியச் சட்டம் வேறு:

. பலர் தவறு செய்து ஒரு வேலையைக் கெடுத்தால், ஒருவர் தம் தவற்றை மாற்றினால், அதே சமயம் எல்லோர் தவறுகளும் சரியாகும். வேலை கூடிவரும்.

. ஒருவர் தம் தவற்றைச் சரிசெய்தால் எப்படி மற்றவர் தவறுகள் சரியாகும் என்பது கேள்வி.

. நாம் தனித்து வாழ்வதால் ஒவ்வொருவரும் சரிசெய்ய வேண்டும்.

. சத்தியஜீவியத்தில் அனைவரும் தொடர்புள்ளவர். ஒருவர் சரிசெய்தால் அனைவரும் சரியாகிவிடுவார்கள்.

. தனியார் கம்பனியில் வேலை ஆரம்பிப்பதை 9 மணிக்குப்பதிலாக 9½ என்றால், அந்தக் கம்பனிமட்டும் ½மணி கழித்து ஆரம்பிக்கும்.

. சர்க்காரில் ஓர் ஆபீஸ் நேரம் மாறினால், எல்லா ஆபீஸ் நேரமும் மாறும். ஏனெனில், எல்லா ஆபீஸ்கட்கும் சர்க்காரில் ஒரே நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

. அதனால் அனைவருக்கும் ஒருவர் பொறுப்பேற்க முடிகிறது.

. அனைவரையும் ஒருவர் மாற்ற முடிகிறது.

. இதுவே சத்தியஜீவியத்தில் அபரிமிதம், அனந்தம் எழக் காரணம்.

. அந்தச் சட்டம் பலிக்கும் என்றால் அந்த ஒருவருடன் மற்ற அனைவரும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதாவது ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அவன் முதலாளி சிங்கப்பூர் போவதால் அவனிடம் தோப்பை 3 வருடங்களுக்குக் குத்தகைக்குத் தருகிறேன் என்கிறார்:

. கதையில் முதலாளி பிற்பாடு தோப்பை வேலைக்காரியின் கணவனுக்கே சொற்ப விலைக்குக் கொடுத்துவிடுகிறார்.

. ஸ்ரீ அரவிந்தர் அவதாரமில்லை. அவதாரம் இறைவனின் அம்சம். பகவான் இறைவனே. ஆனால், முழு இறைவனில்லை. இறைவனின் பகுதி. மந்திரி என்றால் சர்க்கார் அவரே. IAS அதிகாரிக்கு மந்திரியின் இடமில்லை. அவர் நிர்வாகத்தின் பகுதி. மந்திரி சர்க்காரின் பகுதி. தானே இறைவன் ஆனவர் பகவான். அஜெண்டாவில் அன்னை ஒரு நாள் முழுவதும் Supreme சத்புருஷனாக இருந்தேன் எனக் கூறுகிறார். இராமவதாரம், கிருஷ்ணவதாரம் உலகுக்கு வழிகாட்டிய அவதாரங்கள். பகவான் உலகை எடுத்து நடத்தவந்தவர். அப்படி நடத்தியவர்.

தாமே இறைவனானதுபோல் தம்மை ஏற்பவர்களும் இறைவன் ஆகலாம் என்கிறார். அந்தத் தத்துவம் முதலாளியிடம் வேலை செய்பவன் முதலாளியாகிறான் என்று வேலைக்காரியின் வாழ்வில் தெரிகிறது.

. 1000 ஆண்டுகட்கு முன் ஒருவன் இராஜாவாகவேண்டும் என நினைத்தால் அது இராஜத்துரோகம். அதற்காக அவன் தலை போகும். மக்களாட்சி வந்தபின் அந்த உரிமையை எல்லோர்க்கும் அரசு வழங்கிற்று.

. தம்மை ஏற்பவருக்கு அன்னை அந்த உரிமையைத் தருவதுடன் அந்த உடமையைப் பெற்றும் தருகிறார். முதலாளி தோப்பைக் காவல்காரனுக்கு குத்தகைக்குத் தரமாட்டார். ஏனெனில் அவன் நிலை உயர்ந்துபோகும். வேறு ஒருவனுக்குக் கொடுப்பார். அன்பர்கள் வாழ்வில் அனுதினமும் நடக்கும் நிகழ்ச்சிகள், அதன் பலனை அனைவரும் பெற்றாலும் தத்துவத்தை எவரும் அறிவது இல்லை.

. பூரணயோகம் உடலுக்கு அறிவையும், அதைக்கடந்து ஆத்மாவையும் தர முயல்கிறது. தவம் ஆன்மாவை உடலிலிருந்து பிரித்துவிடுகிறது. அது அடிப்படை மாறுபாடு.

. பகுதியில் இறைவன் வெளிப்பட்டு, பகுதியை முழுமையைவிடப் பெரியதாக்குவது தத்துவம்.

. தவம் காலத்தைக் கடக்கிறது.

. பூரணயோகம் காலத்தைக் கடந்ததைக் காலத்துள் செயல்பட வைத்து,

1) காலத்தைக் கடந்ததை உயர்த்துகிறது.

2) காலத்தை, காலத்தைக் கடந்ததைவிட உயர்த்துகிறது.

3) சச்சிதானந்தத்தை வாழ்வில் வெளிப்படுத்தி, அதன் உயர்வையும் உயர்த்துகிறது.

4) ஆனந்தம் மின்னல்போல் மறைவது. ஜடத்தில் ஆனந்தம் வெளிப்பட்டால் ஆனந்தம் நிலையாகும். பூரணயோகம் ஜடத்தையும், ஆனந்தத்தையும் உயர்த்துகிறது என்ற தத்துவம் வேலைக்காரியின் கணவனுக்கு முதலாளி நிலை வருகிறது.

முதற்காரியமாக என் பையனை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் - வேலைக்காரி;

நான் பையனை பள்ளியில் சேர்த்துவிட்டு வீடு கட்டி விடுகிறேன் - வேலைக்காரி;

வருவது எளிது, பெறுவது நம்மைப்பொருத்தது:

. 1950-இல் சர்க்கார் கிராமங்களில் பள்ளிக்கூடம் திறந்தபொழுது, பெற்றோர் பிள்ளைகளை அனுப்ப மறுத்தனர். கொல்லை வேலைக்குப் பையன் உதவியாக இருப்பான் என்றனர். அதே குடும்பங்கள் இன்று வீட்டுக் குழந்தைகளை அதிகச் செலவு செய்து நர்சரி பள்ளிக்கு அனுப்புகின்றனர். .

பொதுமக்களுக்குப் படிப்பு முக்கியம் எனத் தெரிகிறது.

. கல்வியில் மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டது. இது பெரிய விஷயம். இது நடந்துவிட்டதால் இனி நாடு சுபிட்சம் அடைந்துவிடும்.

. கல்வியில் வந்த விழிப்பு சுபிட்சமாக மாற வேறு சில விஷயங்களும் நடக்கவேண்டும். அவை,

. தன்மான உணர்வு வேண்டும்.

. பொய் சொல்ல வெட்கப்படவேண்டும்.

. உழைத்து சம்பாதிக்க வேண்டும்என்ற சொரணை வேண்டும்.

. படித்துவிட்டால் ஓரளவு இவை வந்துவிடுவதால், நாடு முன்னேறுகிறது.

. செல்வம் என்பது உழைப்பு. உழைக்க மனிதன் பிரியப்படவேண்டும். பிறரிடமிருந்து உதவி எதிர்பார்க்கும் மனப்பான்மை அழிய வேண்டும்.

. பொய் தரித்திரம்; மெய் வசதி என்பதை நடைமுறையில் அனுபவத்தால் அறியவேண்டும்.

. எனக்கு என்னுடைய உழைப்பே பயன்படும்; பிறர் உழைப்பு பயன்படாது என்பது பெரிய விழிப்பு.

. வேலைக்காரிக்கு முதற்காரியமாகப் பையனை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சொரணை வந்தவுடன், முதலாளி குத்தகையை மாற்றிக் கிரயமாக நிலத்தைத் தர முடிவு செய்துவிட்டார். படிப்பு, உழைப்பு, தன்மானம், மெய் ஆகியவை முக்கியம்.

. எப்படிப் படிப்பு வந்தால் மற்றவை ஓரளவு வருகிறதோ, அதேபோல் அன்னை வந்தால் மற்ற அனைத்தும் அதனுள்ளிருக்கும்.

. அன்னை வந்தபிறகு படிப்பு, உழைப்பு, தன்மானம், மெய் ஆகியவற்றுள் விழிப்பு வருவது அன்னையை அதிகமாகப் பெறுவது.

. படிப்பை அன்னைக்காகப் பெற்றால், உழைப்பை அன்னைக்காக ஏற்றால், மெய்யை அன்னைக்காக நாடினால், அதுவே கடைசி கட்டம்.

. படிப்பைப்போல் வீடு கட்டுவது. வீடு கட்ட முனைபவன் வாழ்வில் அதன்மூலம் முன்னுக்கு வருவான். வேலைக்காரி வாழ்விலும் நாம் அதைக் காண்கிறோம்.

. வருவது வாழ்வில் இல்லை, கடினம்; அன்னையில் எளிது, பெறுவது நம் விழிப்பைப் பொருத்தது.

.நாட்டில் படிப்புக்கு விழிப்பு வந்துவிட்டது.

. வீடு கட்டவும் விழிப்புள்ளது.

. அடுத்தகட்ட விழிப்புகள் நாட்டில் சுபிட்சத்தை நிலையாக ஏற்படுத்தும்.

. அன்னை அத்தனையையும் தம்முட்கொண்டவர் என்ற விழிப்பு பெரியது.

. அது பெறுவதற்குரிய அறிகுறி.

. விழிப்பை அன்னைக்காகவும், பெறுவதை அன்னைக்காகவும் செய்வது முடிவான கட்டம்.

தொடரும்.....

 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

உணர்வில் நாம் கண்மூடித்தனமான முழுஞானம் பெற்றுள்ளோம். உணர்வில் பெற்ற முழுஞானத்தைத் தெளிவாகப் பெறுதல் முதற்படி. அதைப் பெற பிராணமயப்புருஷன் வெளிப்படவேண்டும். ஆசை அழிந்தால் பிராணமயப்புருஷன் வெளிப்படுவான்.

உணர்வின் ஞானம் முழுஞானம்.

விழிப்பான ஞானம் அவனுக்குரியது.


 


 


 


 


 


 book | by Dr. Radut