Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் ஸ்ரீ அன்னையே சரணம்

அன்னையைப் பற்றிய கட்டுரைகளில் இருந்து அன்னையை அறிந்து அவரின் பேரருளால் இன்றளவும் நான், என் குடும்பத்தினர் அனைவரும் வாழ்ந்துகொண்டுள்ளோம். 1995-ஆம் ஆண்டில் இருந்து அன்னையின் அருளால் எங்கள் வாழ்வு மிகச்சிறப்பாக உள்ளது. 1995-ஆம் வருடம் அன்னையை அறிவதற்குமுன் எங்கள் வாழ்வுநிலை பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி இருந்தது. பள்ளி ஆசிரியரான என் கணவரின் அன்றைய வருமானம் ரூ.700ஆக இருந்தது. அவரின் படிப்புத் தகுதி எம்.எஸ்.ஸி., எம்.ஃபில்., எம்.எட்.

குடும்பச் சூழ்நிலை:

வீட்டில் மூத்தவரான என் கணவரின் சுபாவம் மிகவும் அமைதியான சுபாவம். வருமானம் ரூ.700/- எந்தச் சூழ்நிலையிலும் இவரை மதித்து எவரும் பேசமாட்டார்கள். வருமானம் பெருக்க வழி தெரியாதவன். இவனிடம் பேசி என்ன பயன் என்று ஒதுக்கி விடுவர். குடும்ப அங்கத்தினர்கள் எல்லோராலும் ஒதுக்கப்பட்டு கூட்டுக் குடும்பத்திலேயே என் கணவர், நான், குழந்தை என தனித்தீவாக வாழ்ந்தோம். குழந்தையின் பசிக்குப் பால் வாங்கவோ, உடல்நிலைக்கு மருந்து வாங்கவோ கூட பிறர் உதவியை நாடவேண்டிய சூழ்நிலையில் இருந்தோம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தான் தர்மபுரி தியானமையத்தைச் சேர்ந்த அன்னை அன்பர் மூலம் நான் ஸ்ரீ அன்னையையும், அன்னையைப் பற்றிய அருளுரைகளையும் அறிந்து ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருந்து என் வாழ்வுநிலை படிப்படியாக அன்னையின் அருளால் உயரத் துவங்கியது. கூட்டுக்குடும்பமாக இருந்த நாங்கள் அன்னையின் அருளால் கைக்குழந்தையுடன் சேலம் நகரத்திற்கு தனிக்குடித்தனம் வந்தோம். அப்பொழுது 1995-ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 28-ஆம் தேதி. நாங்கள் தனிக்குடித்தனம் வந்தபோது அன்னை என் கணவரின் வருமானத்தை ரூ.1000மாக உயர்த்தினார். என் கணவரிடம் டியூசன் பயில சில மாணவர்களையும் அன்னை அனுப்பினார். இதன் மூலம் எங்களின் மாத வருமானம் ரூபாய் 3000ஆக உயர்ந்தது அன்னையின் அருளால். பிறகு 1996ஆம் வருடம் அன்னை என் கணவருக்கு வேறு ஒரு பள்ளியில் முதுகலை ஆசிரியராக வாய்ப்பு அளித்து, எங்களின் மாத வருவாயை ரூ.3,250ஆக உயர்த்தினார். 3250 ரூபாய் சம்பளம் + 2000 ரூபாய் டியூசன் பீஸ் என ரூ.5250ஆக எங்கள் வருமானத்தை உயர்த்தினார். அன்னையின் அருள்மூலம் எங்கள் தேவைகளை நாங்கள் சுயமாகப் பூர்த்தி செய்துகொள்ளும் நிலைக்கு மாறினோம். 1997-ஆம் வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி அன்னை என் கணவருக்கு அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியர் பணியான அரசாங்க பணியினைக் கொடுத்தார். இதன்மூலம் அன்னை எங்கள் மாதவருமானத்தை ரூ.7000ஆக 1997-ஆம் வருடம், அதாவது அன்னையின் அருட்கரம் பற்றிய இரண்டே வருடத்தில் அன்னை எங்களைப் பொருளாதார ரீதியாக உயர்த்தினார். இன்று 2005-ஆம் ஆண்டு எங்களின் மாதவருமானம் ரூ.15,000ஆக அன்னை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார். அன்னையை அறிந்த இந்த 10 வருடங்களில் பொருளாதார வளத்தை அன்னை உயர்த்தி உள்ளார். அன்னைக்கு என் கோடி நன்றிகள்.

குழந்தையின் உடல்நிலை:

1994இல் ஜனவரி 31-இல் பிறந்த என் முதல் பெண் குழந்தை 1996 பிப்ரவரி 20வரை கடும் காய்ச்சலாலும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்காலும் உடல்நலம் பாதிக்கப்படுவாள். 1996-ஆம் வருடம் அன்னையின் பிறந்தநாளான பிப்ரவரி 21-ஆம் நாள் என் குழந்தையை முதன்முதலாக அன்னையின் சமாதியில் நிற்கவைத்து, அவளின் உடல்நிலைப் பற்றிய கவலையையும், என் மகளையும் அன்னையிடமே சமர்ப்பித்தேன். அன்றுமுதல் இன்றுவரை, இன்று என் முதல் பெண்ணிற்கு வயது 12. இத்தனை வருடங்களில் ஒரு முறைகூட என் குழந்தை அதுபோன்ற தீவிர காய்ச்சலுக்கோ, வாந்தி பேதிக்கோ ஆட்படவில்லை. இது அன்னையின் அருளால் நடந்த பேர் அற்புதம். அன்னைக்கு என் கோடி நன்றிகள்.

ஜாதகம் அன்னையின் அருள்பார்வையால் தோற்றது:

1996-ஆம் வருடம் என் கணவருக்கு ஜாதகத்தில் ராகு திசை நடப்பதாகவும், மிகவும் மோசமான திசை என்றும் கூறினார்கள். இதனால் சாலை விபத்து நடக்கலாம் என்றும் கூறினர். எனக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது. நேரம் மிகவும் மோசமாக உள்ளது என்றும் கூறினர். நான், என் கணவர், என் குழந்தை மூவரும் உடனடியாக ஜாதகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அன்னையின் ஆஸ்ரமம் வந்தோம். அன்னையின் சமாதியில் ஜாதகத்தை வைத்து, இதில் உள்ள கெட்ட பலன்கள் எதுவும் எங்களை நெருங்காதவண்ணம் எங்களை தங்கள் அருள்வட்டத்திற்குள் வைத்திருங்கள் அன்னையே என்று சரணடைந்தோம். இன்றுவரை எந்தக் கெட்டபலன்களும் எங்களை நெருங்கவில்லை. இன்றுவரை நாங்கள் மிகப் பாதுகாப்பாக அன்னையின் அருள்வட்டத்துக்குள் இருக்கிறோம். அதன்பிறகு இந்த 10 வருடங்களில் ஜாதகத்தை நாங்கள் ஒரு முறைகூட பார்க்கவில்லை. இதுவும் அன்னையின் அருளே. அன்னைக்கு என் கோடி நன்றிகள்.

செல்வ வளம்:

1999-ஆம் வருடம் சொந்த வீடு வேண்டும் என்று அன்னையின் சமாதியில் வேண்டினோம். அந்த நேரத்தில் எங்கள் கைகளில் ரூ.80,000 சேமிப்பாக இருந்தது. 1999-ஆம் வருடம் ஜூன் மாதம் அன்னையின் அருளால் எனக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. என் இரண்டாவது குழந்தைக்கு மிராலினி என்று பெயரிட்டு அன்னையின் அருளால் வளர்த்து வருகிறோம். அன்னையின் பெயர் தன்னுடன் இருப்பதில் என் குழந்தைக்கு மிகவும் மகிழ்ச்சி. என் இரு பெண்களும் அன்னையின் நினைவே வழிபாடாக மிகவும் நலமாக வாழ்ந்து வருகின்றனர். படிப்பதிலும் அவர்கள் இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். இதுவும் அன்னையின் அருளே. அன்னைக்கு என் கோடி நன்றிகள்.

2001-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னை மிக நல்ல அருமையான ஏரியாவில், என் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு மிக அருகில், மிக மலிவான விலையில் எங்களுக்கு காலிமனை அமைத்துக் கொடுத்தார்கள். 2001, ஏப்ரல் 23ஆம் தேதி அன்னையின் திருவருளால் அவர் உருவப் படத்தையும், அவரின் திருமலர்ப்பாதங்களையும் வைத்து காலிமனையை மூன்று முறை சுற்றிவந்து சாம்பிராணி புகையிட்டு வீட்டுமனையில் வீடு கட்ட ஆரம்பித்தோம். மிகச்சரியாக 120வது நாள் அன்னை புது வீட்டிற்கு எங்களைப் புதுமனைப் புகுவிழா செய்து அங்கு குடிவரச் செய்துவிட்டார். வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்து குடிவரும் நாள்வரை ஒரு நாளில்கூட ஒரு வேலையும் தடையில்லாமல் நடைபெற அன்னை அருளினார். இதுவும் அன்னையின் அருளே. அன்னைக்கு என் கோடி நன்றிகள்.

1995-இல் 700 ரூபாய் சம்பளத்தில் இருந்த எங்களுக்கு இன்று அன்னை தங்கள் பேர் அருளால் 2005-இல் ரூபாய் பத்து இலட்சம் மதிப்புள்ள வீட்டினைக் கொடுத்துள்ளார். அன்னையின் அற்புதம் இது. அன்னைக்கு என் கோடி நன்றிகள். அன்னை அருளிய வீட்டின் பெயர் Mother's Home.

புதிய வாய்ப்பு:

வீடு கட்ட வாங்கிய லோனை அடைக்க ரூ.5000 மாதம் கட்டி விடுகிறோம். ரூ.4000 G.P.F.க்கு பிடித்துக்கொள்கிறார்கள். மீதம் ரூ.4000த்தை வைத்து குடும்பச் செலவைப் பார்க்கிறோம். இந்தச் சூழ்நிலையில் நான் அன்னையிடம் என் கணவருக்கு வேலையில் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டேன். ஏனென்றால் ஆசிரியர் பணியில் எத்தனை வருடம் சர்வீஸ் ஆனாலும், ஆசிரியராகவே மட்டும்தான் இருக்க முடியும். உத்தியோக உயர்வு பெறுவது சிரமம். இரு பெண்களைப் படிக்கவைத்து நல்ல நிலையில் திருமணம் செய்ய இன்னும் சற்று உயர்ந்த பதவியில் இருந்தால், அதற்கான ஊதியம் கிடைக்கும் என்று அன்னையிடம் வேண்டினேன். அன்னை தம் பேர் அருளால் என் கணவருக்கு ஓர் உயர்ந்த வாய்ப்பினைக் கொடுத்துள்ளார். அது நவோதயா வித்யாலயா சமிதி என்ற மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகளின் முதல்வர் பதவி. இதற்கான விண்ணப்ப விளம்பரத்தை அன்னை எங்கள் வீடு தேடி அனுப்பினார். அதனைப் பூர்த்திசெய்து விண்ணப்பித்தோம். பிறகு சென்ற 2004, ஜனவரியில் அன்னையின் தரிசனம் முடித்து வீடு திரும்பிய அன்றே அன்னை அதற்கான பரீட்சைக்கான ஹால் டிக்கெட்டை அனுப்பினார். அன்னையின் அருளோடு என் கணவர் டெல்லி சென்று அதற்கான முதல்கட்டத் தேர்வினை எழுதிவிட்டு வந்தார். சென்ற ஆண்டு அன்னையின் பிறந்தநாளன்று அப்பரீட்சையில் என் கணவர் தேர்வு ஆகிவிட்டார் என்று கடிதம் வந்தது. சென்ற மார்ச் 12ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கான அழைப்பும் வந்தது. ஆனால், இண்டர்வியூவிற்கு நான்கு நாட்கள் முன்பு அது ஒத்திவைக்கப்பட்டது. இன்றோடு ஒரு வருடம் முடியப்போகின்றது. இன்னமும் இண்டர்வியூவிற்காக அழைப்புக் கடிதம் வரவில்லை. இப்பரீட்சையில் தேர்ச்சி பெற்றதற்குக் காரணம் அன்னையின் அருள்தான். என் கணவர் திறமையைவிட அன்னையின் அருளையே நான் முழுமையாக நம்புகிறேன். இந்த இண்டர்வியூ சீக்கிரம் நடைபெற்று, என் கணவர் இதில் தேர்ச்சி பெற்று N.V.S.இல் முதல்வராகச் சேர நான் அன்னையிடம் எவ்வாறு பிரேயர் செய்யவேண்டும்? இத்தனை அற்புதங்களைச் செய்த அன்னை என் கணவருக்கு N.V.S.இல் பிரின்ஸ்பால் postingஐயும் தருவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அதற்காக என் கணவரும், நானும் என்ன செய்யவேண்டும்? 24 மணி நேரமும் அன்னையிடம் N.V.S.இல் பிரின்ஸ்பால் போஸ்டிங் என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரேயர் செய்துகொண்டு இருக்கிறேன். அன்னையே காட்டிய வாய்ப்பு. என் கணவர் இந்த வேலைக்கான முதல்கட்டத் தேர்வு எழுதும் அன்று நான் தர்மபுரி தியான மையத்தில் அன்னையிடம் என் கணவர் நன்றாகப் பரீட்சை எழுத அருள் புரியவேண்டும் என்று வேண்டினேன். அதேபோல் அன்னை தம் அருளால் என் கணவரைத் இத்தேர்வில் தேர்ச்சிபெறச் செய்தார். இண்டர்வியூ ஒத்தி வைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இன்னும் அழைப்புக் கடிதம் வரவில்லை. Interview call letter சீக்கரமாக வரவும், என் கணவருக்கு பிரின்ஸ்பால் போஸ்டிங் கிடைக்கவும் நாங்கள் எப்படிப் பிரேயர் செய்யவேண்டும்? என்னென்ன மலர்களை வைக்கவேண்டும்?

தினம் தினம் மதியம் ஒரு மணியானால் மனம் போஸ்ட்மேன் வரும் திசையைப் பார்த்துக் காத்திருக்கிறது. Interview call letter கொண்டு வருவாரா என்று ஏங்குகிறது.

தினம் காலை எழுந்தவுடன் அன்னையைப் பார்த்து வேண்டும் முதல் விஷயமே N.V.S.principal posting தான்.

தியானத்தின்போது மகேஸ்வரி அன்னை, மகாகாளி அன்னையின் திரு உருவங்கள் வருகின்றன. மகாகாளி அன்னையின் திருமலர்ப் பாதங்களைக் கட்டிக்கொண்டு நான் பிரின்ஸ்பால் போஸ்டிங்கை கேட்பதுபோல் உள்ளது. அந்த நேரங்களில் நெஞ்சு விம்மி விம்மி கண்களில் உண்மையாகவே கண்ணீர் வருகிறது. இண்டர்வியூ என்பது ஒரு பணி நியமனத்துக்கான இறுதிச் சுற்று. இது தள்ளிப்போவது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை வெற்றிகரமாகக் கொண்டுவந்த அன்னை இந்த வெற்றியை ஏன் ஒத்திவைத்துள்ளார்? எங்களின் இருவர் மனதிற்குள்ளும் ஏதாவது மாற்றத்தை அன்னை செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்களா? இதுவரை அகந்தையாக நடந்துகொள்வதை இருவருமே தவிர்த்து இருக்கின்றோம். யாரிடமுமே கோபப்படாமல் வாழ முயன்று, ஓர் அளவு வாழ்கிறோம். அன்னை தன் இறைப்பணிக்காகப் பயன்படுத்தும் 12 குணங்களை எங்களுள் வளர்த்துக்கொள்ள முயல்கிறோம். வேறு எப்படி எல்லாம் அன்னைக்காக நாங்கள் மாறவேண்டும்? என் கணவருக்கு N.V.Sஇல் பிரின்ஸ்பால் போஸ்டிங் கிடைக்கவேண்டும். அதற்கு அன்னையையே நம்பி இருக்கின்றோம்.


 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஞானமும் கல்வியும் பல நிலைகளிலுள்ளன. செய்த கவனம்; எண்ணம், சிந்தனை; கருவான சிந்தனை; தெளிவான எண்ணம்; புதிய சொந்தமான எண்ணம்; சிக்கல் நீங்கிய சிறப்பான சிந்தனை; கற்பனைக் கருவூலம்; ஒன்றை மற்றதால் அறிவது (செய்தியைக் கரு மூலம் அறிவது); புதிய படைப்பு; நடக்கக் கூடியதை நடைமுறை வெற்றியாகக் கருதும் முதிர்ச்சி; சிந்தனையற்ற விவேகம்.

கவனமும், விவேகமும் ஞானத்தின் இரு முனைகள்.


 


 


 


 


 


 



book | by Dr. Radut