Skip to Content

13. மலரும் மணமும்

 "அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

மகேஸ்வரி
 

"அவசரமாகச் செல்கின்றீர்கள் போலிருக்கிறதே?'' என்ற தன் காரியதரிசியின் சொல்லைக் கேட்ட தென்னரசு

"நேரத்தைப் பார்த்தீர்களா, மாலை 5.30. இந்நேரத்தில் புறப்பட்டால்தான் இந்திரா நகருக்குச் சரியான சமயத்திற்குச் செல்ல இயலும். பூபதி, பாங்காக் ஆபீசிற்குச் செல்ல வேண்டியதையெல்லாம் தயார் செய்து வைத்துவிடுங்கள். நான் வந்தவுடன் பார்த்துவிட்டு e-mail அனுப்பிவிடுகிறேன்''.

"சார், இன்றைக்கு என் குழந்தையின் பிறந்தநாள். அதனால் நானும் இப்பொழுதே கிளம்ப வேண்டும்'' என்றார் பூபதி.

"அப்படியா! நீங்கள் செல்லுங்கள். நானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கின்றேன்'' கூறிக்கொண்டே தன் பர்சிலிருந்து ஐயாயிரம் ரூபாயை எடுத்து, "நீங்கள் இதை என் அன்புப் பரிசாக உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள். முன்பே தெரிந்திருந்தால் நல்லதொரு பொருளை வாங்கிக் கொடுத்திருப்பேன். உங்கள் குழந்தை விரும்பும் பொருளை வாங்கிக் கொடுத்தால் எனக்கு மிக்க சந்தோஷமாக இருக்கும்''. 

"சார், நீங்களும் இந்தப் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டால், எனக்கும் சந்தோஷமாக இருக்கும்''.

"சாரி பூபதி. இன்றைக்கு என்னால் நிச்சயமாக முடியாது. ஒரு முறை நிச்சயம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்''.

"நானும் நீங்கள் சென்னைக்கு வந்ததிலிருந்து கவனிக்கின்றேன். நாள் முழுவதும் அலுவலகத்தில்தான் இருக்கின்றீர்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் மாலை 5.30 ஆனால் மட்டும் எங்கோ செல்கிறீர்களே! கேட்பது தவறுதான். ஆனாலும் இப்பொழுதெல்லாம் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கின்றீர்கள். வந்த புதிதில் எனக்கு ஒரே பதட்டமாக இருக்கும். எந்தச் சமயத்தில் எதைக் கேட்பீர்கள், எப்படிப் பேசுவீர்கள் என்று புரியாது. சமயங்களில் நான் வேறு டிபார்ட்மெண்ட்க்குப் போகக்கூட எண்ணினேன். அதனால்தான் கேட்கிறேன்''.

"நீங்கள் என்னை நன்றாகவே கவனித்திருக்கிறீர்கள் பூபதி. என் மனத்தில் இருந்த டென்ஷன், அவசரம், நிதானமின்மை ஆகியவற்றையெல்லாம் உங்கள் மீது செலுத்தியிருக்கிறேன். இப்பொழுது நான் அனுபவித்துகொண்டிருப்பது ஒரு வசந்தமான பொற்காலம். இந்தப் பொற்காலத்தில் செய்வதிலெல்லாமே ஒரு அலாதியான சந்தோஷம் பிறக்கிறது. முன்பெல்லாம் வேலை உடனடியாக நடக்க வேண்டும், முடிக்க வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும். இப்பொழுதோ, வேலை நிச்சயமாக நடக்கும், நன்றாக நடக்கும். அதை எந்தவிதத்திலும் தடை செய்யாமல் இருக்க வேண்டியது மட்டுமே என்னுடைய வேலை என்ற தெளிவும், நம்பிக்கையும் பிறந்திருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் புத்துணர்ச்சியை அனுபவிக்கிறேன். சோர்வே இல்லாத எழுச்சியான சக்தி உடம்பின் நாடி நரம்புகளில் தொடர்ந்து உருவாகிக்கொண்டேயிருக்கிறது. இதைப் பற்றி எவ்வளவு பேசினாலும் சரி, கடல் காலை நனைத்தல் போல்தான் இருக்கும். அனுபவிக்க வேண்டும்'' என்று சொன்ன தென்னரசுவின் முகம் வைரத்தைப் போல் ஒளி வீசியது.

***

"அம்மா, இன்றைக்குத் தியானம் அற்புதமாக இருந்ததுஅதைத் தவிர எனக்கு வேறு வார்த்தை தெரியவில்லை'' என்ற தென்னரசுவிற்குப் பதிலாக,

"வர வர உங்கள் முகம் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது. முல்லை பார்த்தால் அவ்வளவுதான். புதியதாக வந்திருக்கும் அரசுவின் மறுபிறவியோ என்று மயங்கிவிடுவாள்'' என்றாள் மல்லிகை.

"நீ சரியாகச் சொன்னாய், மல்லிகை'' என்ற ரோஜா, "ஒரு வருடமாக முல்லை கண்ணில் படாமல் உங்களை அன்னை வைத்து இருக்கிறார். இதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. நிச்சயமாக ஒரு காரணம் இருக்க வேண்டும்''.

"ரோஜாம்மா! முல்லையின் முகத்தைப் பார்ப்பதற்கு எனக்கு அருகதை இன்னும் வரவில்லை. ஒரு வருடமாக அன்னையிடம் என்னைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி நடப்பவைகளெல்லாம் அன்னையின் அருளால் நடக்கின்றது என்பது எனக்குப் புரிகிறது. இந்த விஷயமும் நிச்சயமாக அன்னை நடத்திக்கொடுப்பார் என்று தெளிவாகத் தெரிகிறது. மல்லிகையுடன் பேசப் பேச எவ்வளவு விஷயங்கள் புரிகின்றன. மல்லிகையை நான் எப்படி நடத்தினேன் என்று அவளிடம் சொல்ல எனக்குத் தைரியம் இல்லை. என்றைக்காவது அது தெரியாமல் போகாது. அந்தச் சமயத்திலும் அவர்கள் என் மீது வைத்துள்ள பிரியம் மட்டும் குறையாது. என்னால்தான் அவர்கள் முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. "மன்னிக்க முடியாத தவறென்று எதுவும் கிடையாது' என்று அன்னை கூறியிருந்தாலும், நான் செய்தது, என்னை நானே தோலுரித்துக் காட்டினாலும்கூட.....'' தென்னரசு அழவில்லை. அவனின் குரலின் தளர்வு உள்ளத்தை, உண்மையை எடுத்துக்காட்டியது.

"அரசு, நீங்கள் எதைச் சொன்னாலும் நடந்து முடிந்ததைப் பற்றித்தான் சொல்லப்போகின்றீர்களேயொழிய, அன்னையிடம் வந்தபின், உங்களை அன்னை ஏற்றுக்கொண்ட பின், நீங்கள் அன்னையை ஏற்றுக்கொள்வதற்காக எடுக்கும் முயற்சிக்குப் பின் எது நிதர்சனமாகத் தெரிகிறதோ, அதில்தான் உண்மையிருக்கும்அந்த உண்மையை நிச்சயமாக எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அதில் நானும் ஒருத்தி'' என்று பதிலளித்த மல்லிகைக்கு,

"மல்லிகை, எப்படியம்மா உன்னால்....'' என்று ஆரம்பித்த தென்னரசு, "உங்களால்....'' என்று திருத்தினான்.

"ரோஜாம்மா, உங்களுக்கு நான் நன்றியைச் சொல்ல வேண்டும்.எனக்குத் தெரிந்த விதத்தில் சொல்ல நினைக்கிறேன்'', 10 இலட்சத்திற்கான காசோலையை ரோஜாவின் கையில் கொடுத்த தென்னரசு, அவளை நோக்கிக் கை கூப்பினான்.

நன்றியறிதல் என்பது அருமையான உணர்வு. நமக்கு நல்லது செய்தவர்களைக் கருணையுடன் நினைத்து அந்நினைவில் மகிழ்ந்து, மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமே நன்றியறிதல் எனலாம். இந்த நன்றியுணர்வு நல்லெண்ணத்துடன் இணையும்பொழுது உடல், உணர்வு, மனம், ஆன்மா என்ற ஜீவனின் பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, மூழ்கித் திளைக்கும்பொழுது அபரிமிதமான ஆனந்தம் (சந்தோஷத்தால்) உண்டாகிறது. சைத்திய புருஷன் ஆளுகை மேலோங்கும்பொழுதுதான் நன்றியறிதல் ஒரு க்ஷணம் மேலே வருகிறது. அன்னையின் கருத்துப்படி நன்றியறிதல் அதிகமாக மனிதர்களிடம் காணப்படாத ஒன்று. நெகிழ்ந்து சொல்வது, உணர்வில் சக்தி உள்ளவர்க்குதான் அதிகமுண்டு. வாய் வார்த்தையால், "Thank you' என்ற சொல்கூட நன்றியறிதலின் வெளிப்பாடு என்றாலும், பழக்கத்தின் பேரில் சொல்லும் வார்த்தையாகும்பொழுது அங்கு ஜீவன் இல்லாமல் போய்விடுகிறது. எதையும் ஜீவனுடன் செய்வதுதான் அன்னையை அதிகம் நெருங்கத் துணை செய்யும். சைத்திய புருஷனின் விழிப்பு இருக்கும்பட்சத்தில்தான் இச்செயல்பாடு நடப்பதால், அவ்விழிப்புள்ளவர்கள் மட்டுமே அனுபவிக்கக்கூடிய ஒன்றாக அமைந்துவிடுகிறது.

"இன்றைக்கு "நன்றியறிதல்' மலர் அதிகமாக வந்தது. வீட்டின் முன்னுள்ள பூக்கூடையில்கூட இம்மலரைத்தான் வைத்தேன்'' என்றார் முகுந்தன்.

"அதற்கு ஆடாதொடை மலர் என்றுதானே பெயர்'' என்று கேட்டாள் மல்லிகை.

"ஆமாம், வேலியில் படர்ந்திருந்து, சற்றே நீல நிறத்தில் குவளை வடிவத்தில் பூத்திருக்கும்''.

தென்னரசு கொடுத்ததைக் கையிலே பிடித்திருந்த ரோஜாவின் கைகள் கனம் தாளாமல் பெரிய பாரத்தைப் பிடித்தாற்போல் தளர்ந்தன. பாரத்தை இறக்கிவைக்கக்கூடிய ஒரே இடம் அன்னையின் திருவடிகள்தானே! கால்கள் துவள, கண்கள் அன்னையின் மேனி முழுவதும் பரவி, ஆனந்தமா, அமைதியா, வானத்தைத் தொட்டுவிட்ட மகிழ்ச்சியா, அன்னையின் அருள் மழையில் நனைந்த உடல் சிலிர்ப்பா, இவைகள் அத்தனையும் கலந்த மௌனத்தின் மௌனமா என்று இல்லாமல், அன்னையைத் தன்னுள் முழுவதுமாக இருத்திக்கொள்ள முடியுமா என்ற தவிப்புடன் கண்கள் இமைக்க மறந்து, ஆனந்தக் கண்ணீர்ப்பூக்கள் உதிர்க்க ஆரம்பித்தன. என்ன தவம் செய்தேன் இந்த அன்னையையறிய. நாயினும் கடையேனை நயந்தளித்த அன்னையே! கிள்ளிக் கொடுக்காமல் அள்ளி, அள்ளித் தருகின்ற அருளுக்கு "நான்' என்னைத் தவிர எதைக் காணிக்கை அளிக்க முடியும்? வார்த்தைகள் எண்ணத்திலிருந்து பிறக்காமல், எண்ணமற்றுப் பிறந்த குழந்தையின் மாசு, மருவற்ற பிதற்றலைப் போல ரோஜாவும் அன்னையுடன் ஏதோதோ பேசினாள். பேசினாளா, நினைத்தாளா, உணர்ந்தாளா? எதுவுமே தெரியவில்லை. உட்கார்ந்திருந்தாள் அன்னையின் முன். ஆனால் அவளோ அன்னையின் மடியில்தான் உளமாரத் தவழ்ந்துகொண்டிருந்தாள். கிடைத்தது பணமல்ல, செல்வமல்ல; அன்னை! அவரின் அருட்கொடை. உணர்ந்து, உணர்ந்து உள்ளம் பூரித்தாள். கேட்கவில்லை, நினைக்கவில்லை, ஆனால் அன்னையின் பார்வைக்குள் விழுந்திருக்கிறாள் என்பதை நினைத்தவுடன் தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று நினைத்தாலும், அது நினைவல்ல. அதற்கு என்ன பெயரிட்டு அழைக்க முடியும்?

கண்கள் இமைத்தால்கூட அன்னையை விட்டு ஒரு கணம் விலகி விடுவோமோ என்று இமைக்காமல், பார்வையை அகலவிடாமல் அன்னையை மட்டுமே பார்த்துகொண்டிருந்தாள்.

"ரோஜா, இன்றைக்கு பேங்கில் பணத்தைக் கட்டி, வீட்டு லோன் முழுவதையும் சரி செய்துவிட்டேன். ஆனால், எனக்கொன்று புரியவில்லை'' என்று ஆரம்பித்த முகுந்தன்,

"தென்னரசு மல்லிகையால் அன்னைக்கு அறிமுகம் ஆனவர்.

ஆனால் மல்லிகைக்கு நன்றி செலுத்தாமல், நமக்கு நன்றி செலுத்தி உள்ளாரே, அது ஏன்? என்பதுதானே உங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது''.

"நீ ரிஷியின் மனதை அடைந்துவிட்டாய் போருக்கிறது.

அதனால்தான் நான் சொல்லாமலேயே என் மனதை ஊடுருவிப் பார்த்து, அதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொண்டாய்''.

"நாமிருப்பது எங்கே?''

"வீட்டில்''.

"அன்னையிருப்பது?''

"எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்''.

"அது சரிதான். ஆனாலும் அவருக்கென நம் வீட்டில் ஒரு இடத்தை ஸ்தாபித்து இருக்கிறோம். எங்கிருந்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாமென்றாலும்கூட, அந்த அறையில்தான் அமர்ந்து 
தியானம் செய்கிறோம், இல்லையா?'' என்று கேட்ட ரோஜாவுக்கு,

"நீ என்ன சொல்ல வருகிறாய் என்று புரியவில்லை, ரோஜா''.

காலிங்பெல் அடித்தது.

"என்ன மாமா, ஏதாவது குடும்பப் பேச்சா? இல்லை, அப்புறம் வேண்டுமானால் வருகிறேன்''.

"இப்பேச்சின் கதாநாயகியே நீதான் மல்லிகை'' என்றான் முகுந்தன்.

"சென்ற வாரம் தென்னரசு கொடுத்ததைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்?''

"சரியாகச் சொன்னாய், மல்லிகை.

என்னை ரிஷியென்கிறார் உங்கள் மாமா. உன்னை நான் யோகி என்றுதான் சொல்ல வேண்டும்'' என்ற ரோஜாவிற்கு,

"மாமா, ரோஜாக்காவின் conscious ஜீவிய நிலைக்கு அன்னை கொடுத்தது அது. தென்னரசு ஒரு கருவிதான். அவருக்கு நான் அன்னையைப் பற்றிச் சொன்னாலும், நிதர்சனமாக அவர் அன்னையைப் பார்த்தது உங்கள் வீட்டில்தான். (South Asia) கிழக்காசிய நாடுகளுக்குத் தென்னரசு உயரதிகாரியாகப் பதவி உயர்வு கிடைத்திருப்பது அவர் இங்கு வந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்ததால்தான் என்று உணர்ந்ததால், முதல் மாத சம்பளத்தை ரோஜாக்காவிடம் கொடுத்தார். உடலால் உழைத்துக் கிடைத்ததை, உடல் அன்னையை ஏற்ற/பார்த்த இடத்திற்குக் காணிக்கை ஆக்கி உள்ளார்'' என்று சொன்ன மல்லிகைக்கு,

"ஜடத்திற்கு உயிரூட்டியது நம்முடைய வீடென்றால், ஆன்மாவிற்கு உயிர் கொடுத்தவள் நீதானே. உன்னுடைய ஆன்மாவிற்கு அவர் என்ன காணிக்கை கொடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை'' என்றாள் ரோஜா.

அப்பொழுதுதான் நுழைந்த தென்னரசு, "நீங்கள் பேசுவதை நானும் கேட்டேன் ரோஜாம்மா. மல்லிகைதான் என்னுடைய தெய்வம்.

என்னுள்ளத்தில் அவர்களை அன்னையாகப் பிரதிஷ்டை செய்துள்ளேன். நான் எதைச் செய்தாலும், பேசினாலும், நினைத்தாலும், உணர்ந்தாலும் அவர்களை நினைத்து ஒவ்வொரு நொடியும் நமஸ்காரம் செய்து வருகிறேன். என்னுடைய ஆத்மார்த்தமான நன்றியை நமஸ்காரத்தின் மூலம் செய்கிறேன்.

எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அன்னையை மல்லிகை மூலமாகத்தான் பார்க்கிறேன். என் நாடி நரம்புகளில் புதியதாக இரத்தத்தை உற்பத்தி செய்து, என்னுடைய அழுக்கு, குற்றம், தவறு ஆகிய எல்லாவற்றையும் திருவுருமாற்றம் அடையச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கோரிக்கையை "என் அன்னை' மூலமாக பிரபஞ்ச அன்னைக்கு மாற்ற வேண்டும் என்பதுதான் இப்பொழுது என்னுடைய பிரார்த்தனை'', வார்த்தைகள் மேலே எழாமல், கீழே விழுந்துவிடுவோமோ என்ற நிலையில் மல்லிகையைப் பார்த்துக் கைகூப்பினான்.

"தென்னரசு, உணர்ச்சி வேகத்தில் எதையும் பேச வேண்டாம். அன்னையே தன்னை வணங்க வேண்டாம் என்று சொல்லுகின்ற பொழுது, என்னை வணங்குவதாக நீங்கள் சொல்வது.....''

"மல்லிகை,அவர் உன்னை வணங்கவில்லை. உன்னில் ஐக்கியமான அன்னையைத்தான் ஏற்றுக்கொண்டுள்ளார். சில சமயங்களில், ஏன் பல சமயங்களில் நமக்குச் சரியாக சொல்லத் தெரியாது. தலையாட்டித்தான் பழக்கம். உன்னுடைய ஜீவனில் அன்னையை நீ ஆழ்ந்து ஏற்றுக்கொண்டிருக்கிறாய். உன்னைப் போல் தானும் அன்னையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இப்படித் தென்னரசு சொல்கின்றார்''.

"சரியாகச் சொன்னீர்கள் ரோஜாம்மா! அன்னை என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை இந்த ஒரு வருட காலத்தில் அனுபவபூர்வமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உள்ளங்கையில் வைத்துத்தான் தாங்குகிறார். அப்படிப்பட்ட அன்னையை நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது. அதற்கும் நீங்கள்தான் துணை செய்ய வேண்டும்'' என்று மல்லிகையின் பக்கம் திரும்பி மீண்டும் கைகூப்பினான் தென்னரசு.

"நான் சொல்வதைவிட, "புஷ்பாஞ்சலி' என்ற புத்தகத்தில் "அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன?' என்று ஸ்ரீ கர்மயோகி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதை ஒரு முறை படித்துவிடுங்கள். அதன்பின் செயல்முறைப்படுத்தும்பொழுது கேள்விகள் ஏதும் எழுந்தால் நிச்சயமாகக் கேட்கலாம். சொல்லப் போனால், நானும் அன்னையின் குழந்தையாக வேண்டுமென்று முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்''.

"மல்லிகை, சுருக்கமாகச் சொல்லேன். எப்பொழுதோ அக்கட்டுரையை நானும் படித்திருக்கிறேன். ஆனால் எதுவும் இப்பொழுது நினைவிற்கு வரவில்லை'' என்று கேட்ட முகுந்தனுக்கு, "ஆர்வத்துடன் படித்துப் படித்ததைச் செயல்படுத்த வேண்டும் என்பவருக்கு எப்பொழுதுமே அது மட்டுமே நினைவிருக்கும்'' என்று பதில் சொன்னாள் ரோஜா.

தொடரும்.....

***

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவன், ஜீவியம், திறன், ஆனந்தம் ஆகியவற்றை ஜீவாத்மா பரமாத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்வதை, பகவான், "சரணாகதி' என்கிறார். இவை சச்சிதானந்தத்தின் சிருஷ்டி உருவங்கள். சரணாகதிக்குரிய வாத்மா இவற்றிலிருந்து விலகி நிற்கிறதெனில், சரணாகதியை ஏற்கும் பிரம்மம் சச்சிதானந்தத்திலிருந்து விலகி நிற்கிறது.

விலகிய நிலை சிருஷ்டி.
 


 

 


 book | by Dr. Radut