Skip to Content

6. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

261. சோவியத் யூனியனில் அதிபராக இருந்த கோர்பச்சேவ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சீர்திருத்தம் செய்ய முயன்று இறுதியில் ஆட்சியிருந்தே அக்கட்சியை அகற்றினார். இப்படி உள்ளே இருந்துகொண்டே புரட்சியை நிகழ்த்திய அபூர்வ மனிதராகத் திகழ்கிறார்.

262. மகாத்மா காந்தியடிகள் சுதந்திரம் வந்தபொழுது காங்கிரஸ் கட்சி முன்னேற்றப் பணிகளுக்காகத் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆனால் காங்கிரஸ் கட்சி அப்படித் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதன் விளைவாகக் கட்சி மிகவும் இறுகிப் போய் தேசத்தோடு தனக்கிருந்த ஒட்டுறவை இழந்தது. அதன் விளைவாக 1989ம் ஆண்டில் 40 வருட காலமாகத் தன் பிடியில் வைத்திருந்த ஆட்சியையே இழந்தது.

263. அனார்க்கிஸக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் குடிமக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடாதென்று பிரியப்படுகிறார்கள். ஆனால் இப்படி ஒரு கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை இப்பொழுது மனிதனுக்கு வழங்க முடியாது. பூவுலக வாழ்க்கை சத்தியஜீவிய மயமாகும்பொழுதுதான் தவறுகள் நேரிடாமல் பூரண சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

264. சோவியத் யூனியனிலும், சைனாவிலும் கம்யூனிசக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் நல்ல ஒரு பொருளாதார முன்னேற்றம் வந்துள்ளது. ஆனால் சுதந்திரம் இல்லாத நிலையில் வருகின்ற பொருளாதார முன்னேற்றத்தைவிடச் சுதந்திரமான சூழ்நிலையில் பொருளாதார முன்னேற்றம் தாமதமாக வந்தாலும், மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.

265. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள், இலங்கை அரசு மற்றும் LTTE  இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இவர்களுக்கிடையே உள்ள பிரச்சினைகள் நெடுங்காலமாகத் தீராமல் இருந்துவருகின்றன. இவற்றிற்கு எல்லாம் நிரந்தரத் தீர்வு வேண்டுமென்றால் மனிதர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை உணர்வு அதிகரிக்க வேண்டும்.


266.ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக இங்கிலாந்து உலகமெங்கும் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி ஆண்டது. ஆனால் இப்பொழுது லண்டனில் ஆப்பிரிக்காவையும், ஆசியாவையும் சேர்ந்தவர்கள் நிறையக் காணப்படுகின்றனர். வெளிநாடுகளில் நிறுவிய சாம்ராஜ்யத்திற்கு இதைக் கர்மபலனாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

267. ஐரோப்பாவில் நிகழ்ந்த இரண்டு உலகப் போர்களும் பெரும் சேதத்தை விளைவித்தன. ஆனால் இந்த உலகப் போர்களைத் தொடர்ந்து ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பிய தேசங்கள் நிறுவியிருந்த சாம்ராஜ்யங்கள் கலைக்கப்பட்டன. இந்த உலகப் போர்களே நிகழ்ந்து இருக்காவிட்டால் இந்தச் சாம்ராஜ்யங்கள் கலைக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது.

268. இந்தியாவும், அமெரிக்காவும், இரண்டுமே ஜனநாயகக் குடியரசு நாடுகளாக இருக்கும்பட்சத்தில் இரண்டும் நட்பு நாடுகளாக விளங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்தியா சோவியத் யூனியனை நாடிச் சென்றதை வைத்துப் பார்த்தால், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே நட்புறவுக்குப் பதிலாகப் போட்டி உறவு மேலோங்கி இருந்ததைக் காட்டுகிறது.

269. இந்தியாவின் ஆன்மா ஒன்று என்னும்பொழுது இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்திருப்பது இறைவனுக்கு ஏற்புடையதில்லை என்று தெரிகிறது. ஆகவே நெடுங்காலக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தப் பிரிவினை நீங்கும் எனத் தெரிகிறது. இறைவன் எப்படி இந்தப் பிரிவினையை அகற்றுவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

270. வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வியைத் தழுவியது வெற்றி பெறுவதற்கு ராணுவ பலம் மட்டும் போதாது என்று காட்டுகிறது. மக்களுடைய ஆதரவு இல்லை என்றால், ராணுவமும் தோற்கும்.

271.பயங்கரவாதம் என்பது சமூக அநீதிகளை எதிர்ப்பதனுடைய அடையாளமாக நாம் கருத வேண்டும். இந்த அநீதிகள் அகற்றப்பட்டன என்றால் பயங்கரவாதம் தானாகவே மறைந்துவிடும்.

272. ஜப்பானிய நகரங்களின் மேல் இரண்டு அணுகுண்டுகளை வீசி அமெரிக்கா அணுகுண்டு யுகத்தைத் துவக்கி வைத்தது. அதே அமெரிக்கா தான் இப்பொழுது அணுகுண்டுத் தாக்குதலுக்கு பயந்து நடுங்கிகொண்டு இருக்கிறது. இதை நாம் கர்மபலனாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

273. ஆயுதங்களைக் குவித்து வைப்பதைப்பற்றி அன்னை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆயுதங்களே போரைத் தூண்டிவிடும் என்கிறார். ஆகவே அணு ஆயுதக் குவியலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று லியுறுத்தியிருக்கிறார்.

274. ஆரோவில் இருக்கும் வரை மூன்றாம் உலகப் போர் நிகழாது என்று அன்னை கூறியிருக்கிறார். தென்னிந்தியாவின் மூலையில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பு மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் என்பது பல பேருக்கு நம்பும்படியான விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆரோவில் தன்னுடைய வேலையைச் சூட்சும நிலையில் செய்வதால் இந்த உண்மை நம் கண்ணிற்குத் தெரிவதில்லை.

275. செவ்விந்தியர்களும், கருப்பர்களும் வேலை செய்யாமல் அரசாங்க உதவித் தொகையில் காலம் கழித்துக்கொண்டிருப்பது இவர்களை அமெரிக்கா துன்புறுத்தியதற்கு உண்டான கர்மபலனாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

276. தென்னிந்தியாவில் அந்தண வகுப்பைச் சேர்ந்தவர்கள் அந்தணர் அல்லாதோர் மீது பழங்காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் இப்பொழுது அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை கிடைப்பதே கடினமாகிவிட்டது. இதையும் நாம் கர்மபலனாக  எடுத்துக்கொள்ளலாம்.

277. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான் பிரிவினர் கைப்பற்றியபொழுது அதை ஆதரித்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் ஆட்சி கவிழ்ந்தபொழுது அதே தாலிபான் பிரிவினர் பாகிஸ்தானிற்குள் ஊடுருவ ஆரம்பித்துவிட்டார்கள். தான் விதைத்ததைத் தானே அறுவடை செய்கின்ற கர்மபலனைப் பாகிஸ்தான் இப்பொழுது அனுபவிக்கிறது.

278. இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே நிகழ்ந்துகொண்டிருக்கிற நதிநீர்ப்பங்கீடு பிரச்சனைகள் தேசிய உணர்வு குன்றி, குறுகிய மனப்பான்மை தலையெடுத்துள்ளதைக் காட்டுகின்றன.
 

279. கங்கை நதியையும், காவிரி நதியையும் இணைத்தோம் என்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அது ஒரு பெரிய உந்துதலாக இருக்கும். ஆனால் அத்தகைய ஒரு முயற்சி இதுவரை எடுக்கப்படாமல் இருப்பது இந்திய அரசாங்கத்திடம் மன உறுதி இல்லை என்பதைக் காட்டுகிறது.

280. 1980ம் ஆண்டு அளவில் ஓ.பி..சி. தேசங்கள் பெட்ரோல் விலையை 4 மடங்கு உயர்த்தியபொழுது உலகமே அதிர்ச்சி அடைந்தது. இப்படி ஒரு விலை உயர்வு நடந்திருக்காவிட்டால் சுற்றுச்சூழல் இன்னும் வேகமாக மாசுபட்டிருக்கும்.

தொடரும்.....

 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

நாம் பிறரைப் பற்றிச் சொல்லும் குறைகள் அனைத்தும் ஏதோ ஓர் அளவில் நம்முள் வேறு நிலையில் உற்பத்தியாவதாகும்.
 

வாயால் சொல்லும் குறை மனத்திலுள்ள குறையாகும்.
 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் முழுவதும் சமர்ப்பணத்திற்குத் தயாராகும்வரை ஒரு தனிச் செயலைப் பூரணமாகச் சமர்ப்பணம் செய்ய முடியாது.
 

சமர்ப்பணம் பூரணத்திற்குக் காத்திருக்கும்.
 


 


 


 



book | by Dr. Radut