Skip to Content

7. லைப் டிவைன் கருத்து

 "Life Divine" - கருத்து

பௌத்த மதத்திலும், பரம்பரையிலும், தற்கால கொள்கைப்படியும் ஆத்மா என்பது அழியாததில்லை. அது மனிதன் உற்பத்தி செய்தது.

(The Life Divine - P.746)

நம்பிக்கை பலவிதம். தெய்வ நம்பிக்கை, மனத்தின் நம்பிக்கை,மூட நம்பிக்கை எனப் பலவகையுண்டு. பகவத் கீதை தெய்வ நம்பிக்கை ஆத்மா மீதுள்ள நம்பிக்கையானால், ஆத்மா எதை நம்பினாலும்,மனிதன் அதைச் சாதிப்பான் என்கிறது. சுமார் 150 ஆண்டுகளாக ஐரோப்பாவில் Mind, Matter மனம், உடல் எது சக்தி வாய்ந்தது என்ற ஒரு கொள்கை விவாதிக்கப்படுகிறது. அதன் விளைவாக மனம் ஒரு விஷயத்தை நம்பினால் அது நம்புபவர்க்குப் பக்கும் என ஆயிரம் நிகழ்ச்சிகள் விவாதிக்கப்படுகின்றன.

பௌத்த மதம் நிர்வாணக் கொள்கையை முக்கியமாகக் கொண்டது. அகந்தை, ஆணவம், அகங்காரம் (ego) என்பது நம் பிரச்சினைகட்குக் காரணம் என்பது அவர்கள் அனுபவம். பௌத்த மதம், ஜைன மதம் - நாம் சமணர் என்போம் - அகந்தை வளர ஆரம்பத்திலிருந்தே இடம் தரமாட்டார்கள். ரோட்டில் போகும்பொழுது ஒருவர் தம் மீது இடித்துவிட்டால் அதுவும் தம் குறையெனக் கொள்வார்கள். அவனிடம் மன்னிப்புக் கேட்பார்கள். அவர்கள் பேச்சில் முனைப்பிருக்காது. கைகளைத் தொட்டால் மிருதுவாக இருக்கும்.பொதுவாக பௌத்த பிக்ஷூக்கள் கை மிருதுவாக இருக்கும். வேலை செய்த கை முரடாக இருக்கும். மனம் "தான்' என்பதைப் பாராட்டினால் அந்த முனைப்பு கண்களில் தெரியும், நடையில் வெளிப்படும், உடலும் வெளிப்படும். பௌத்த மதத்தில், "ஆணவம் என்பது நாமே ஏற்படுத்தியது. நம் முயற்சியால் அதைக் கரைக்கலாம்' என முடிவு செய்து, தவ முயற்சியால் அகங்காரத்தைக் கரைத்துள்ளனர். அதனால் அவர்கள் நடைமுறை அமைதியானதாகும். அது பெருவெற்றி. பௌத்த மதம் அத்துடன் நிற்காமல், "ஆத்மா என்பது நாம் ஏற்படுத்தியது. அதையும் தவ முயற்சியால் கரைக்கலாம்' என்றனர். அவர்கள் ஆத்மாவை நம்புவதில்லை. ஆத்மாவுக்கு அமரத்துவம் உண்டு எனவும் நம்புவதில்லை.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் தன் கொள்கை ஒன்றை விளக்கச் சில முறைகளைக் கையாள்கிறார். அவை:
 

1) தர்க்கரீதியாகத் தன் கொள்கையைக் கூறுவது.

2) பொதுவாக எழும் ஆட்சேபணைகளைக் கூறிப் பதில் சொல்வது.

3) எதிரித் தரப்பு என ஒன்றிருந்தால், அவர்கள் எழுப்பும் கேள்விகட்குப்
    பதில் கூறுவது.

4) வாழ்க்கையில்லை என்பவற்றை எடுத்துக் கூறுவது.

5) ஏதோ ஓரிடத்தில் உதாரணம் மூலம் விளக்குவது.

6) எப்படி இந்தத் தவறான எண்ணம் எதிரிக்கு உதயமாயிற்று எனக்
    கூறுவது.
 

ஆத்மா, அகந்தை என்பவற்றுள் ஆத்மா பிரம்மத்தின் பிரதிநிதி. அதை இந்தியப் பரம்பரை ஆத்மா, புருஷா, ஈஸ்வரா என்ற மூன்று நிலைகளில் விவரிக்கிறது. காலம் ஆத்மாவின் அகம்; இடம், புறம்.சச்சிதானந்தம் சத்தியஜீவியமாகி, சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து, மனம் உற்பத்தியாகிறது.

  • மனம் அஞ்ஞானத்தால் அகந்தையை உருவாக்கியது.
  • மனம் அஞ்ஞானத்தை இழந்தால், அகந்தைக்கு ஆதரவு குறையும்.
  • மனம் அகந்தையை உற்பத்தி செய்து, அஞ்ஞானத்தால் அதை வளர்த்தது.

அதனால் மனம் அகந்தையின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். மனம் தன் ஆதியையடைந்து அகந்தையை உற்பத்தி செய்ததை அறிந்துமாற்றினால் அகந்தை கரையும்.

மனம் அகந்தையை உற்பத்தி செய்ததால், மனத்தால் அகந்தையைக் கரைக்க முடியும்.

  • இந்த அனுபவம் தவறாக பௌத்தர்களை மனம் அகந்தையைக் கரைத்தது போல், ஆத்மாவையும் கரைக்க முடியும் என்று நினைக்கச் செய்தது.
  • ஆத்மா மனத்தை உற்பத்தி செய்தது. மனம் ஆத்மாவை உற்பத்தி செய்யவில்லை என்பதைப் பௌத்தம் அறியவில்லை.
  • தான் உற்பத்தியாகும் முன் உற்பத்தியான ஆத்மாவை மனத்தால் கரைக்க முடியாது என பகவான் பௌத்தர்கட்கு விளக்கம் தருகிறார்.

இந்திய மரபு 

இந்திய மரபில் தவம், யோகம் என்பவை மோட்சம் பெற உதவும் மார்க்கங்கள். அன்றிருந்து இன்றுவரை யோகம் எந்த ஸ்தாபனத்திற்கும் கட்டுப்பட்டதில்லை. மேல்நாடுகளில் சர்ச்சுக்கு வெளியே ஒருவர் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிரமம். அனுமதி இருக்காது. சில சமயம் ஜெயிலுக்குப் போக வேண்டும். உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதுவும் மார்ட்டின் லூதருக்கு முன் சர்ச்சின் ஆட்சி பூரணம்; தெய்வ வழிபாடனைத்தும் சர்ச் கண்ட்ரோலுக்குள் வரும். அதையும் மீறி மலையில், குகையில் சாதுக்கள் இருந்தனர். நம் நாட்டில் தவம் செய்ய எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. வேதம் முதல் யோகங்கள் பல வகையாக எழுந்தன. இந்த ஆன்மீகச் சுதந்திரம், மத சுதந்திரம் எந்த நாட்டிலும் இன்றுவரை இல்லை. அதனால் ஏற்பட்ட யோகங்கள் பல. அவற்றைப் பயிலுவதில் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு என்பதால் அநேகமாக ஒவ்வொரு முனிவரும் தனக்கேற்ப யோகத்தை மாற்றி அமைத்துள்ளனர். ராஜ யோகம், ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், ஹட யோகம், லய யோகம், மந்திர யோகம், தந்திர யோகம் முக்கியமானவை. இவற்றின் பிரிவுகள் ஆயிரம். பொதுவாகச் சொன்னால்,

1) யோகி தவத்தால் ஜீவாத்மாவைச் சித்தித்தால் ஜீவன் முக்தனாகிறான்.

2) சித்தித்தது பழுக்க ஓரிரு பிறவிகளாகும். அதுவரை காத்திருக்கிறான்.

3) ஜீவாத்மா பரமாத்மாவை எட்டினால் கரைந்துவிடும் என்பது மரபு.

4) அது மோட்சம்.

5) அதன் நிலைகள் மூன்று.

ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி. பரமாத்மாவை எட்டிய உடன் அதில் ஜீவாத்மா கரைகிறது என்பது தத்துவம்; அனுபவம். அதனால் மரபில் ஜீவாத்மாவுக்கு அமரத்துவம் இல்லை

பகவான் கூறுவது

பிரம்மம் மூன்று நிலைகளில் உள்ளது. அதில் மனிதன் ஒன்று,பிரபஞ்சம் ஒன்று. பிரம்மம் கடந்தது. மனிதன் தவத்தால் பிரம்மம் ஆகலாம். பிரம்மமானபின் பிரபஞ்சத்தின் பிரம்மத்தை எட்டி, பிரபஞ்சத்தில் தன்னைப் பூர்த்தி செய்யலாம். தன்னில் பிரபஞ்சம் பூர்த்தியாக அனுமதிக்கலாம். பின் அதனின்று உயர்ந்து, கடந்த நிலை பிரம்மத்தை அடையலாம். மனிதன் எதைச் செய்வதற்கும் சுதந்திரம் பெற்றவன்.

1) தான் நேரடியாக பிரம்மத்தை உயர்ந்து அடைவது மோட்சம். அதில், பிரம்மத்தின் முக்கிய அம்சமான பிரபஞ்சம் விட்டுப்போகிறது. படித்து  வேலைக்குப் போனவன் வீட்டைக் கைவிட்டது போலாகும்.

2) மனிதன் தன்னை மறந்து பிரபஞ்சத்தில் ஒன்றி உயர்ந்தால், மனிதனுடைய சிறப்பு வெளிவருவதில்லை. அது கட்சிச் சேவையாகும்.  

3) தன்னைப் பூர்த்தி செய்து, பிரபஞ்சத்திலும் தன்னைப் பூர்த்தி செய்து, பிரம்மத்தை அடைவது மனிதன் படித்துச் சிறந்து, கட்சியில் சேர்ந்து உயர்ந்து, நாட்டுக்குச் செய்யும் சேவை கட்சியையும், வீட்டையும் பூர்த்தி செய்வதாகும்.

அதுவே பகவானுடைய பூரண யோகம். வாழ்வை ஏற்றுஉலகை ஏற்று, பிரம்மத்தில் அவையிரண்டும் பூர்த்தி ஆகும்படி யோகத்தைச் செய்வது.

பௌத்தம்

ஆத்மா என்ற ஒன்றில்லை. இருந்தால், அதைத் தவம் கரைக்கும் என்பதால், ஆத்மாவுக்கு அமரத்துவம் என்ற கேள்வி அவர்கட்கு எழுவதில்லை.

மரபு

நோக்கம் ஜீவாத்மாவைப் பரமாத்மாவில் கரைப்பது என்பதால் ஜீவாத்மாவுக்கு அமரத்துவம் தரும் அவசியம் அவர்கட்கில்லை. ஜீவாத்மா அமரத்துவம் பெற்றால் எப்படி மோட்சம் பெறுவது?

பகவான் நிலை

இவரது கொள்கை ஆன்மீகப் பரிணாமம். மரபு, ஆன்மா ஆதியந்தமற்றது, மாற்றமற்றது, வளர்ச்சியற்றது என்கிறது. பகவான் ஆத்மா வளர்கிறது என்கிறார். வளராத ஆத்மா வளர்ச்சியை நாடுவதே சிருஷ்டி என்பது அவர் கொள்கை. அதனால் மரபு கூறும் ஆத்மாவை ஆத்மா எனவும், தான் கூறும் ஆத்மாவை (psychic being) வளரும் ஆத்மா எனவும் கூறுகிறார். மனத்தில் ஆரம்பித்து, கீழ்நோக்கி, உயிரின் வளரும் ஆத்மா, உடன் வளரும் ஆத்மா எனவும், மேல்நோக்கி, 4 கட்டங்களுக்குரிய வளரும் ஆத்மாவாகத் தொடர்ந்து வளர்கிறது என்கிறார். தெய்வீக மனத்தைத் தாண்டி வளரும் ஆத்மா சத்தியஜீவியத்தை அடைந்தால், அது சத்தியஜீவன் ஆகிறது. அந்நிலையில் அது ஈஸ்வரனாகிறது. அதே சமயத்தில் அது உடன் வளரும் ஆத்மாவுடன் கலந்து பூரணம் பெறுகிறது எனக் கூறுகிறார்.

பூரண யோகம் ஆத்மாவின் வளர்ச்சியை ஏற்பதால்ஆத்மாவுக்கு அமரத்துவமில்லாமல் இவ்வளர்ச்சி ஏற்படாது என்பது தத்துவம்.

மேலும் விஞ்ஞானமய புருஷன் (சத்தியஜீவன்) ஏற்பட்ட பின்னும் பரிணாமம் தொடர்ந்து ஆனந்தமய புருஷன் வெளிவருவான். முடிவாக அவன் மூன்றாம் நிலைக் காலத்துச் சத்புருஷனாவான். ஆத்மாவுக்கு அழிவில்லை என்பது பகவான் கொள்கை. இவர் யோகம் பூர்த்தியாக இக்கொள்கை அவசியம் எனப் பல இடங்களிலும் வலியுறுத்தி எழுதுகிறார்.

***


 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

பக்தன் தன் உச்சக்கட்டத்தில் அன்னையுடன் வாழ்வில் ஒன்றிவிட்டால், அவனுக்குரிய அதிகபட்சப் பலனுண்டு.
 

அன்னை பக்தனின் உச்சி.
 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

விளையாட்டில் தன்னை மறந்தவன் ஆசையால் உந்தப்படுபவன், அந்நிலைக்குரிய அளவுகடந்த சக்தியைப் பெற்றவனாவான். சக்தி முழுவதும் இறைவனை நோக்கி அது போல் சென்றால், மனித சந்தோஷம், பிரம்மத்தின் ஆனந்தமாகும்.

இறைவனை நாடும் மனித செயல் அனுபவிப்பது பிரம்மத்தின் ஆனந்தம்.
 


 book | by Dr. Radut