Skip to Content

03.வெளிநாட்டு இந்தியர்களின் சாதனைகள்

வெளிநாட்டு இந்தியர்களின் சாதனைகள்

என். அசோகன்

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, வெளிநாடுகளில் சிறப்-பாகச் செயல்படுகின்ற இந்தியர்கள் ஏன் உள்நாட்டில் பரிமளிப்பதில்லை?என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. யூதர்களும், சீனர்களும் மற்றும் இந்தியர்களும் அவர்களுடைய சொந்த நாடுகளைத் தவிர வேறெங்கிருந்தாலும் நன்றாகப் பரிமளிக்கின்றனர். யூதர்கள் கடின உழைப்பு, தீவிர மத ஈடுபாடு மற்றும் அபார புத்திசாலித்தனத்துக்குப் பேர் போனவர்கள். இப்படிப்பட்டவர்கள் செல்வர்களாக விளங்குவதில் ஆச்சரியமில்லை. இதே கடின உழைப்பு சீனர்களிடமும் காணப்படுகிறது.அது மட்டுமின்றி அவர்கள் மிகவும் சுத்தமானவர்களும் கூட.அவர்களுடைய நாகரீகம் சூட்சுமம் நிறைந்ததாகும். கூட்டாளிகளிடம் மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். விசுவாசம், சுத்தம், கடின உழைப்பு ஆகியவை வளமைக்கு முக்கியக் காரணங்களாகும். இப்பொழுது இந்தியர்களிடம் என்ன சிறப்புகள் இருக்கின்றன எனப் பார்ப்போம்.

மேற்கண்ட சிறப்பம்சங்கள் எதுவும் இந்தியர்களிடம் பாராட்டுமளவுக்கு இல்லை. இந்திய மருத்துவர்கள் அதிகமாகப் பணியாற்றும் அமெரிக்க மருத்துவமனையில் உள்ள அமெரிக்க மருத்துவர்கள், "இந்திய மருத்துவர்களிடம் அனுபவ அறிவை விட தியரிட்டிக்கல் அறிவு அதிகமாக உள்ளது'' என்கிறார்கள். அனுபவ அறிவுக்கு ஏதுவாகச் சூழ்நிலைகள் இந்தியாவில் குறைவாக இருக்கலாம். ஆனால், சமயோசித அறிவு அதிகம். நடைமுறை அறிவில் பிறக்கும் திறமையைவிட, முறைப்படுத்திய சிந்தனைகளிலிருந்து பிறக்கும் திறமை அதிகமாகும். மேலும் இந்தியர்களுடைய அறிவுக்குப் பின்னால் ஆன்மீகப் பின்னணி உள்ளது.

ஓர் இந்தியரும், அமெரிக்கரும் ஹாலந்து நாட்டில் இயங்கும் ஒரு கம்பெனியைப் பார்க்கச் சென்றார்கள். அங்குள்ளவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் அக்கம்பெனியின் லாபம் குறைவாக இருப்பதைக் கண்டு அமெரிக்கர் வியந்தார். இதே விஷயத்தைக் கவனித்த இந்தியர், "இந்தக் கம்பெனி ஈட்டும் லாபம் பிரான்ஸில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கே போவதால், இங்குள்ளவர்களுக்கு உற்சாகம் குன்றியுள்ளது'' என்றார். இந்தியரின் அனுமான சக்தியைக் கண்டு அமெரிக்கர் வியந்தார். இப்படி மனிதச் செயல்பாடுகளுக்குப் பின்னிலிருக்கும் நோக்கங்களை ஊடுருவிப் புரிந்து கொள்ளக் கூடிய சக்தி இருக்கும் போது அச்சக்தி நம்முடைய செயல் திறனை அதிகரிக்கிறது.

இந்தியர்களுக்குச் செயலாற்றும் அம்சம் பெரிதாக உள்ளது. ஆனால் அவர்கள் குடும்பம், மரபு, பாரம்பரியம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு விடுவதால் இந்த அம்சம் முழுவதுமாகப் பரிமளிப்பதில்லை. ஆனால் அமெரிக்கர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளோ, நிர்ப்பந்தங்களோ இல்லை. அதனால் அவர்கள் முன்னேறுகிறார்கள். இதே முன்னேற்றம் இந்தியர்களுக்கு வேண்டுமென்றால் அவர்கள் கீழ்க்கண்ட இரண்டை ஏற்க வேண்டும்:

.அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை உணர வேண்டும்.

.முன்னேற்றத்தைத் தடுக்கும் சமூக மற்றும் கலாச்சாரக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும்.

இன்றைய நிலையில் பெரும்பாலான இந்தியர்கள் உள்ளிருக்கும் திறமைகளை உணராமலும், கட்டுப்பாடுகளை மீறும் தைரியமில்லாமலும் தான் உள்ளனர்.

இந்தியச் சமூகம் தடைகளைத் தளர்த்தி, திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கான ஊக்கத்தையும் அளிக்கும்பட்சத்தில் நாடு முன்னேறுவதைப் பார்க்கலாம்.

மற்ற நாடுகளில் காணப்படும் சிறப்பம்சங்களைவிட இங்கே அதிகமாகவே உள்ளன. பெரிய சாம்ராஜ்ஜியத்தையே நிறுவி பேரரசாக விளங்கிய இங்கிலாந்து நாட்டுக்கு ஆளும் திறமை உள்ளது. பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களைப்போல் பெரிய சாம்ராஜ்யம் நிறுவவில்லை என்றாலும், அந்நாட்டுக் கலாச்சாரம் அறிவு வளர்ச்சி நிரம்பியதாக உள்ளது. ரோமாபுரி நாகரீகம் சட்டங்களை இயற்றிப் பேரரசாகத் தலையெடுத்தது. சட்டத்தைத் தாண்டி நீதி உள்ளது. நீதியைத் தாண்டி தர்மம் உள்ளது. அந்தத் தர்மம் இந்தியாவில்தான் தோன்றியிருக்கிறது.ரஷியாவில் கம்யூனிசம் ஆதிக்கம் செலுத்திய நாள்கள் இருந்தாலும், அடிப்படையில் ரஷிய நாட்டில் ஆன்மீகம் உள்ளதாக ஸ்ரீ அரவிந்தர் அன்னை சொல்லியிருக்கிறார்.

நம் நாடோ ஆன்மீகத்தில் ஊறிய நாடாகும். அமெரிக்கா தன்னுடைய பொருளாதாரத் திறனை வைத்து, இன்று உலகில் வல்லரசாகத் திகழ்கிறது. அமெரிக்க ஐஸ்வரியம் உடலுழைப்பை ஆதாரமாகக் கொண்டது. நம் நாடோ ஆன்மீக சக்தியை ஆதாரமாகக் கொண்டது.இச்சிறப்பு இந்தியாவுக்கு மட்டுமே உரியது. இதை நாம் உணரும்பட்சத்தில்தான் அது வெளிவந்து பரிமளிக்கும்.

**** 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

இறைவனின் கருணை மனப்பான்மையுடன் மனிதன் போட்டியிடும் முயற்சியே பரோபகாரம்.

பரமனுடன் போட்டியிடுவதே பரோபகாரம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

யானையின் பலம் அதன் உணவிலிருந்து கிடைக்கவில்லை. யானை சாகபட்சிணி. அது சாப்பிடுவது இலை! உணவால் உடல் வலுவடைவது உண்மையானாலும், உடலின் வலிமை அதன் அமைப்பிலிருந்து வருகிறது. அது பிறப்பிலிருந்து கிடைப்பது. பலம் அமைப்புக்குரியது, உணவுக்கன்று.


 


 book | by Dr. Radut