Skip to Content

07.அருளாகி, அமுதமாகி....

"அன்னை இலக்கியம்"

அருளாகி, அமுதமாகி....

                                    (சென்ற இதழின் தொடர்ச்சி....)        சியாமளா ராவ்

அதனால்தான் இப்போது முருகேசுவின் வீட்டில் வந்து ஸ்ரீ அரவிந்தருடன் ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறார்.  முருகேசு பணக்காரனா? அல்லவே. அவனுடைய வீடும் படாடோபமான பங்களாவா? இல்லவே இல்லை. இன்னும் கேட்டால்,வீட்டிற்கு உபயோகமில்லாத ஒரு குடிகாரனே.

ஆனால், செல்வி மூலம் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அவள் வீட்டிற்கு வந்தார்கள். செல்வி, பொன்னி, கணேசு, ஆண்டாளு, நால்வரின் மனமும் இணைந்து, ஒன்றுபோல கூட்டுப் பிரார்த்தனையை மனமுருகி, நெகிழ்ந்து செய்தனர். அது மட்டுமா? அந்தச் சின்னஞ்சிறு வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொண்டனர். சண்டையில்லை,சச்சரவில்லை. அந்த வீட்டினரின் ஒற்றுமை, தூய்மை, பிரார்த்தனை,இந்த மூன்றுமே அவர்களின் பலமாகி, அன்னையும் அவர்கள் வீட்டிற்கே வந்தும் விட்டார். முதல் கட்டமாக, முருகேசனின் தீய பழக்கத்தை அவனிடமிருந்து விரட்டியே விட்டார்.

இந்த அசாத்தியம் நடந்தது எத்தனை ஆனந்தம்! எத்தனை மகிழ்ச்சி! எத்தனை சந்தோஷம்!

இது முதல் கட்டம்தான்.

அடுத்த கட்டம் இதோ இதுதான்.

****

மாலதியின் வீட்டிற்கு ஐவருமே சென்றார்கள்.  அன்னை ஸ்ரீ அரவிந்தரின் அறையின் முன்னே நின்றார்கள். மெய் சோர, மனம் கனிந்து, கண்கள் மல்க வீழ்ந்து வணங்கி, விழிகளை மூடி, சப்பணமிட்டு அமர்ந்தார்கள். எவரும் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விலக, மாலதி மட்டும் அவர்களோடு தியானித்தாள்.

மாலதியிடம் முதliலேயே செல்வி, வீட்டில் நடந்தவற்றையெல்லாம் கூறியிருந்ததால் மாலதியின் மனமும் நெகிழ்ந்து போனது.

தியானம் முடிந்தவுடன் முருகேசு மாலதியின் காலில் விழப்போகச் சட்டென்று விழவிடாமல் நிறுத்தினாள் மாலதி.

"இதோ பாருங்க, நான் ரொம்ப ரொம்பச் சாதாரண மனுஷி. உங்க கூடப் பொறக்காத தங்கச்சி. என் காலுல விழறது தப்பு. உங்களுக்கு எல்லாரையும்விட அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்தான் முக்கியம். தெய்வங்களோட முன்னே வீழ்ந்து வணங்கறதுதான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது அண்ணா....''

"என்ன..... என்ன சொன்னீங்க..... அண்ணாத்தேன்னா சொன்னீங்க .அதுக்கு எனக்கு ஒரு தகுதியும் இல்லேம்மா. வேணாம். வுட்டுடுங்க. நீங்க சொல்றாப்புலல்லாம் இனிமே கேட்டு நடப்பேம்மா. ஆனா..... ஆனா.....மானம் ஒசரத்துக்கு என்னைய நினைக்காதீங்க மாலும்மா..... தேகமே நடுங்குது.....''

"முருகேசுண்ணா..... நாம எல்லாருமே அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையுந் தானே கும்புடறோம். அப்ப, நாம எல்லாருமே, ஒருத்தருக்கொருத்தர் கூடப் பொறந்த பொறப்புபோலத்தானே. அதைத்தானே சொன்னேன். சரி, அதெல்லாம் போகட்டும். அண்ணா! உங்களுக்குன்னு மாசாமாசம் ஒரு வேலை தரேன், செய்யிறீங்களா?''

தடுமாற்றத்துடனேயே, "தங்கச்சி.....'' மேலே பேச முடியாமல் திணறினான் முருகேசு.

"பரவாயில்லை முருகேசுண்ணா. எப்பவும் போல மாலும்மான்னே கூப்பிடுங்களேன். பெரியவங்க, சின்னவங்க பெயரைச் சொல்liக் கூப்பிடறது ஒண்ணும் தப்பில்லையே. எல்லார் வீட்டிலேயும் நடக்கிறதுதானே..... சரி, இப்ப சொல்ரேன். உங்களோட வேலையைத் தினமும் பார்க்கறீங்கதானே. அதுல லீவு எடுக்க முடியுமா? அதுவும் மாசாமாசம் ஒரு நாள், இல்லேன்னா ரெண்டு நாள் தருவாங்களா?''

"எடுக்கலாம்மா. இங்கே ஒரு கம்பெனியிலதாம்மா பார்க்கரேன். இத்தன நாளு ஒளுங்கா போனதில்லே. இனிமே அப்படியில்லே மாலும்மா.கம்பெனி ஓனர் நல்லவரு. அதனாலதான் வேலைய விட்டு எடுக்கலே.

வாரம் ஒரு நாளு லீவுதான். அதனால..... மாசம் நாலு நாளு லீவு கிடைக்கும். என்னா வேலைன்னும், எப்ப செய்யணும்னும் முன்கூட்டியே சொல்liட்டீங்கன்னா..... ஓனருகிட்ட சொல்ட்டு வருவேம்மா.....''

"மாசாமாசம் வீடெல்லாம் சுத்தம் செய்யணும். நானும், அப்பா,அம்மாவும், செல்வியும் கூடமாட செய்வோம். ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் வாங்க, முடிச்சுடலாம். ஒண்ணாந்தேதி அப்பாவோட போயி கோயம்பேடுலேருந்து பூக்களெல்லாம் வாங்கிட்டு வரணும். அன்னிக்கு உங்களால லீவு போட முடியும்னா போடுங்க. எல்லாருமா, இங்கே பூவை அடுக்கலாம், சரியாண்ணா.....''

"நிச்சியமாம்மா. மாலுகண்ணு..... என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, இத்தனை அன்பா ஒறவு முறையோட கூப்டுற..... தாங்கலே சின்னம்மா.....''

"என்ன சொன்னீங்க சின்னம்மாவா..... வேண்டாமே முருகேசு அண்ணா..... நான் உங்க சகோதரியாவே இருந்துட்டுப் போரேனே. அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. "எளிமையான விசுவாசமுள்ள இதயம் ஒரு மகத்தான வரப்பிரசாதம், எனது ஆசிகள்'னு அன்னை, "அன்னையின் மந்திரங்கள்' அப்படீங்கற புஸ்தகத்துல எழுதியிருக்காங்க. உங்ககிட்ட அது இருக்கிறதால தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கும் எழுதப் படிக்கத் தெரியுந்தானே.....''

வெட்கத்துடனும், சங்கடத்துடனும் தலையைச் சொறிந்தபடி நெளிந்தான் முருகேசு.

"சரி, பரவாயில்லே. உங்களுக்குப் படிக்கணும்னு ஆசையிருந்துதுன்னா..... வேலை செய்துட்டு, நேரம் இருக்கிறப்ப வாங்க, அப்பாவோ.....இல்லை நானோ கத்துத் தரோம், சரியா..... ..... அப்புறமா

இன்னொண்ணு சொல்ரேன். செல்வியோட, பொன்னி, கணேசுவோட படிப்பு எங்க பொறுப்பு.....'' மேலே பேசுமுன் குறுக்கிட்டான் முருகேசு.

"மாலும்மா..... ஒவ்வொண்ணா..... பூக்கட்றாப்புல..... எப்டிம்மா..... எப்டி? சந்தோசம் தாங்கலே மாலும்மா. அம்மா மாலுக்கண்ணு..... எனக்கும் அதுல பொறுப்பு வேணும்மா. நிச்சியமா வேணும். இத்தனை நாளுல,ஒரு தபாகூட நானு என் பசங்களுக்குன்னு ஒரு துணிமணியோ,பொஸ்தகங்களோ, சம்பளமோ கட்னதில்லே. இனிமேல் பட்டாவது ஏதாச்சும் செய்யணும்மா. அப்பத்தான் என் மனசும் அடங்கும். தப்பா பேசிட்டனா.....''

"இல்லவே இல்லே. நான் என்ன சொன்னேன்னு சரியா புரிஞ்சுக்கலே.பொறுப்புதான் என்னோடதுன்னேன். அதுவும் படிப்புல. அதுக்கு அர்த்தம்,நான் இங்கே இருக்கிறவரை, மூணு பேருக்குமே பாடங்களைச் சொல்liத் தருவேன். அதனால அவங்க ஸ்கூல்ல நல்ல மதிப்பெண் வாங்குவாங்கதானே. அதைத்தான் சொன்னேன். மத்தபடி, அவங்க புஸ்தகம், பள்ளிக்கு வேண்டியது என்ன கட்டணுமோ அது, சீருடை தைக்கற செலவு எல்லாமே உங்களோடதுதான். காரணம் என்ன தெரியுமா? அண்ணா! இனிமே உங்க கைக்குத்தான் முழு சம்பளமும் வரப்போறதே. அந்த தைர்யந்தான் எனக்கும். அதே தைர்யந்தான் உங்களுக்கும். புரிஞ்சுதாண்ணா.....''

"ரொம்ப ரொம்ப சரியான பேச்சுதாம்மா. சந்தோசமும் கூடிப்போச்சு மாலும்மா. உங்க நம்பிக்கையை, கண்டீசனா நான் செய்வேம்மா''.

மாமி உள்ளிருந்து சர்க்கரைப் பொங்கலை, அன்னைக்கு முன் வைத்து பிரார்த்தித்து எல்லோருக்கும் கொடுத்தார்.

சாப்பிட்டபின் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

 

****

செல்வி பத்தாவதில், அவள் பள்ளியிலேயே முதலாவது மாணவியாக வந்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தாள். ஆனால் மாகாணத்தில் அவளால் ஏழாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.

"அக்கா! ஒரு பக்கம் ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் நாந்தான்னாலும், மாகாணத்துல ஏழாவதுதானேன்னு இருக்குக்கா. ஆனா, இத குறையா நினைக்கலேக்கா. அன்னையோட அருளால நிச்சியமா ப்ளஸ் டூவுல நான் நிச்சியமா, ஆமாங்க்கா, நிச்சியமா மாகாணத்துலேயே முதலாவதா வரணும்னு தினமும் வேண்டிக்கிறேங்க்கா.....''

"தட்ஸ் குட். அன்னை மேல உனக்கு இருக்கிற நம்பிக்கையான பக்திக்கு, நிச்சியமா நல்லதே நடக்கும் செல்வி. சரி, இப்ப இங்கிலீஷ் உனக்குக் கஷ்டமா இல்லையே. என்னோட நல்லா பேசரே. எங்கப்பா,உன்னோட பேசறப்பவும் தப்பில்லாம பேசறதா சந்தோஷப்பட்டார். கீப் இட் அப் செல்வி''.

வெட்கத்தோடும், மகிழ்ச்சியோடும் புன்னகைத்தாள் செல்வி. பொன்னி, கணேசுவும் மிக நன்றாய் படித்தார்கள். படிப்பு, அன்னை அவர்களுக்குத் தந்த வரப்பிரசாதமாகயிருந்தது. உழைத்துப் படித்தார்கள்.

தெரியாததை, செல்வி அக்காவிடம் கேட்டுத் தெளிந்தார்கள். மாலையில் தினந்தோறும் கம்பெனியிliருந்து முருகேசு வந்தவுடன், அவன் குளித்துவிட்டு வந்து உட்கார்ந்தவுடன், ஊதுபத்தி ஏற்றி, எல்லோருமாகக் கூட்டுப் பிரார்த்தனை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். அந்த நேரம் வந்தாலே..... எல்லோர் மனதிலும் ஓர் உற்சாகம், ஒரு சந்தோஷம், ஒரு கொண்டாட்டம்.

தினந்தோறும் முருகேசுவின் வரவை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் அவர்களின் முகம், முருகேசைக் கண்டவுடன் மலர்வதும்,அவனும் பரபரப்புடன் வந்து, குளித்து, சுத்தபத்தமாய், ஊதுபத்தியை பய பக்தியோடு ஏற்றி அமர்வதும், அவனோடு அவர்களும் சிரித்தபடியே வந்து உட்காருவதும், ஒரு யாகம் போல், மனமொன்றி, பூரித்து, கூடிச் செய்தார்கள். அதனால் ஏற்பட்ட மனநிம்மதி அவர்களின் வீட்டில் மட்டுமன்று, சுற்றுப்புறத்திலும் தெரிந்தது.

நாட்களின் நழுவலில் மாதங்கள், வருடங்களாகின. அதற்கேற்ப மாற்றங்களும் வெகு நன்றாக ஏற்பட்டன.

அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வீட்டிற்குள் கொணர்ந்து, அவர்கள் இருவரையும் தங்கள் மனதிலேயே நினைத்து, எப்போதும் நினைவை விட்டு அகலாமல், அன்னையை ஜபிப்பதும், பிரார்த்திப்பதுமாக இருந்த முருகேசுவின் வீட்டை விட்டு அன்னை வருவாரா என்ன?

பணம், காசு, படாடோபம், ஆடம்பரம், இவைகளெல்லாம் அன்னைக்குத் தேவையேயில்லை.

ஆத்மார்த்தமான, பரிபூரணமான, மனம் நிறைந்த, மனம் கனிந்த, மனமுருகிய சரணாகதியும், சமர்ப்பணமுமே அன்னைக்கு மிகவும் உகந்தது என்பதற்கு முருகேசுவின் குடும்பமே உதாரணம். அவர்கள் தங்களையே காணிக்கையாக அன்னைக்குத் தந்ததுதான் விசேஷம்.

****

செல்வி ப்ளஸ் டூவில் மாகாணத்திலேயே முதலாவதாக வந்தாள். பள்ளியிலும், வீட்டிலும், மாலுவின் குடும்பத்திலும் ஏகப்பட்ட மகிழ்ச்சி.

பரீட்சை முடிந்தவுடனேயே அவள் எந்தவிதமான யோசனையுமின்றி, அனாவசியமான யோசனைகளோ, எண்ணங்களோயில்லாமல், அலட்டிக் கொள்ளாமல் எப்போதும் போலவேயிருந்தாள்.

மாலதி வீட்டு வேலையும், தன் வீட்டு வேலையும் செய்துகொண்டு, தம்பி, தங்கைகளின் படிப்பைக் கவனித்து, யதார்த்தமாகவே நடந்தாள்.

ஆமாம், அவளிடம் எந்தவிதமான சஞ்சலமுமில்லை; யோசனையும் இல்லை.

காரணம், அவள் எண்ணங்களையும், யோசனைகளையும் அன்னையிடமே சமர்ப்பித்துவிட்டதால், அவளுக்குக் கவலை என்பதே அற்றுப்போனது. நிச்சிந்தையாக இருந்ததுதான் அவளின் சிறப்பானது.

அன்று காலை மாலதியின் வீட்டிற்கு வேலைக்குப் போனதுமே,மாலதியின் வீட்டில், சாமான்களையெல்லாம் பேக் செய்வதற்காக எடுத்து வைத்தபடியிருந்தார்கள்.

"அக்கா! என்னக்கா..... ஊருக்குப் போகப் போறீங்களா? எல்லாமே எடுத்து வச்சுகிட்டு இருக்கீங்க.....''

"ஆமாம் செல்வி. ஷார்ஜாவுலேருந்து ஃபோன் வந்தது. இன்னும் ஒரு வாரத்துல வராராம். நானும், குழந்தையும் போகணும். ம்..... அது சரி, மேலே என்ஜீனியரிங் படிக்கிறதுக்காக ஊ...க்காக அப்ளிகேஷன் கொண்டு வந்து, நீயும் அதை எழுதிக் கொடுத்தேயில்லே. அதுக்கு இன்டர்வியூ கார்டும் வந்துடுச்சு. அன்னையின் பாதத்துல வச்சுருக்கேன்.நாளைக்கே இன்டர்வியூ. முடிஞ்சா நான் வரேன். இல்லேன்னா..... அப்பா கூட்டிண்டு போவார். பெஸ்ட் ஆப் லக் செல்வி''.

செல்வியின் முதுகில் சந்தோஷத்தோடு தட்டிக் கொடுத்துக் கூறிய மாலதியை நன்றியோடு பார்த்தவளின் பார்வை நேராக அன்னையிடமே சென்றது.

நேராகச் சென்றாள். வீழ்ந்து சரணாகதியாக வணங்கினாள். பிறகு பிரார்த்தனை. அதன் பிறகே இன்டர்வியூ கார்டை, அன்னையின் பாதத்திலிருந்து பவ்யமாக எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு,

மீண்டும் அன்னையை மனம் நிரம்பி நன்றி கூறினாள். இதயம் மட்டுமின்றி, அவளே சந்தோஷப்பூவாகப் பெரியதாக மலர்ந்தாள்.

"அக்கா! தேங்க்ஸ்க்கா. இந்த இன்ஜீனியரிங் படிப்புக்கு நிறைய செலவாகுமே. ஆனாலும் அன்னை அதை எப்படியாவது தருவார் என்கிற நம்பிக்கையிருக்குக்கா. அன்னையை காட்டிய உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்க்கா''.

"செல்வி! மொதல்ல அன்னைக்கு தேங்க்ஸ் சொன்னியா அப்புறந்தான் மத்ததெல்லாம். "தெய்வம் மனுஷ்ய ரூபேனா'ன்னு சொல்லுவாங்க. தெய்வங்களல்லாம் மனுஷங்க மூலமாத்தான் செய்வாங்கன்னு தான் அதுக்கு அர்த்தம். ஆனா, நம்ம அன்னை, மனுஷ ரூபத்துலேயே வந்த தெய்வம்மா. அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் நமக்காகவே வந்திருக்கிற மனித தெய்வங்கள். அதனாலதான் அவங்களோட கோட்பாடுகளும் நமக்கு, அதாவது மனுஷங்களுக்கு ஏத்தமாதிரி இருக்கு.செல்வி, அந்தக் கோட்பாடுகளில் சிலதைக் கடைப்பிடிச்சாலே நமக்கு அபரிமிதமா எல்லாமே கிடைக்கும் செல்வி. அதைப் புரிஞ்சுண்டீன்னா போதும், சரியா?''

"சரிக்கா. நீங்க ஊருக்குப் போறீங்கன்னதும் மனசு ஒரே ஒரு நிமிஷம் சங்கடப்பட்டது நிஜங்க்கா. உடனே அன்னைகிட்டே நான் சுயநலமா நினைச்சதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேங்க்கா. அக்கா! ரெண்டு வருஷமா..... இங்கே இருந்தீங்க. அன்னையை எங்களுக்கு அறிமுகப்படுத்தினீங்க. எங்கப்பாவும் குடிக்கறதை விட்டுட்டு திருந்தி,சந்தோஷமாயிருக்கோம். "காட்டுவான், ஊட்டமாட்டான்னு' சொலவடை இருக்கு. ஆனா, நீங்க காட்டினது மட்டுமில்லேக்கா, மனம் நிறைஞ்சு சொல்ரேன், பசிச்ச எங்களுக்கு வயிறார சோறும் போட்டீங்க. நல்ல வழி காட்டியிருக்கீங்க. அக்கா! உங்க குடும்பமும் எப்பவும் நல்லாயிருக்கணும்க்கா. அம்மா எப்போதும் இதைத்தான் சொல்வாங்கக்கா''.

"சரி, அதையெல்லாம் விடு. நாமல்லாம் ஒரே குடும்பம்னுதான் சொல்liயிருக்கிறப்ப, எதுக்கு இந்த உபசாரமான வார்த்தைகள் செல்வி.அதையெல்லாம் விட்டுடு. உனக்கு ஸ்காலர்ஷிப் கண்டிப்பா கிடைக்கும்.அதுக்காக அன்னையை வேண்டிக்கோ; பிரார்த்தனை பண்ணு. நான் ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி, ஒரு நாள் எல்லாருமா கூட்டுப்பிரார்த்தனை செய்யலாம். எல்லாம் அன்னை கிட்டே விட்டுட்டு நிம்மதியாயிருக்கலாம், புரிஞ்சுதா''.

"சரிக்கா! சாமான் பேக் பண்ண நானும் ஹெல்ப் பண்றேங்க்கா. அப்பா வந்து, நல்லா கட்டி, எல்லாம் செய்வாரு. இன்னும் ஏதாவது செய்யணும்னாலும் சொல்லுங்கக்கா.....''

"நீ மட்டும் படிச்சா போதாது செல்வி. பொன்னியையும், கணேசுவையும் நீதான் நல்லா கவனிச்சு படிக்கச் சொல்லணும். அதுவும் உன்னோட கடமைன்னு நினைச்சுக்கணும். நான் ஊருக்குப் போனாலும் ஒவ்வொரு மாசமும் ரெண்டாவது வெள்ளிக்கிழமை ஃபோன் பண்ணுவேன், சரியா? சரி வா, அதோ அந்த டப்பாவை எடேன்.....''

பரபரவென்று பேக்கிங்கிற்கு வேண்டியவைகளை அடுக்க ஆரம்பித்தார்கள்.

 

****

அன்னையை மனதில் ஏந்திக்கொண்டு இன்டர்வியூவுக்கு மாலதியே வர, தைர்யமாகவே சென்றாள் செல்வி.

இன்டர்வியூவும் அவளுக்குச் சுலபமாகவேயிருந்தது. அன்னையே அவளுக்குப் பதில் இன்டர்வியூவில் செயல்படவேண்டும் என்கிற ஆத்மபூர்வமான பிரார்த்தனை வெகு சிறப்பாக நிறைவேறி பலித்தது.

மனது பூராவும் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது.

மாலதியிடமும், கேட்ட கேள்விகளையும், அளித்த பதில்களையும் கூற, அவளுக்குள்ளும் சந்தோஷம்.

"வெரிகுட் செல்வி. நன்னா பதில் சொல்liயிருக்கே. ரொம்ப சந்தோஷமா இருக்கு. வீட்டுக்குப் போனவுடனேயே அன்னையை பிரார்த்தனை பண்ணி தேங்க்ஸ் சொல்லணும். மொதல் கட்டம் அன்னையோட அருளாலே சுலபமானதாலே, நிச்சியமா அன்னையின் கையைப் பிடிச்சுண்டு ஒவ்வொரு படியா ஏற முடியும். எப்போதும் இப்டியேயிரு, சரியா.....''

"நிச்சியமாக்கா. அன்னையின் கைகளைப் பிடிச்சுகிட்டு ஒவ்வொரு படியாக நான் முன்னேற நீங்கதாங்க்கா என் கையைப் பிடிச்சு அன்னை,ஸ்ரீ அரவிந்தர் முன்னே நிறுத்துனீங்க. உங்களைக் காட்டிய அன்னைக்கு நிச்சியமா தேங்க்ஸ் சொல்லுவேன். அதேபோல அன்னையை என்னால விட முடியுமா? முடியாதுக்கா. அக்கா! இன்னொன்னும் சொல்றேன், எத்தனையோ நாளு ராத்திரி தூக்கம் வாராம போனா அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன்னே உட்காருவேன். நான் என் மனசுலயிருக்கிறதை எல்லாம் அன்னைகிட்டே சொல்liப் பேசுவேன்:

"அன்னையே..... இது சரியா? நான் இப்டி நினைக்கிறது தப்பானதாயிருந்தா, என்னைத் திருத்துங்க. என்னைத் தப்பே செய்யாம பார்த்துக்கிறதும் உங்க பொறுப்பு. ஆமாம்மா. என்னோட, என் குடும்பத்தாரோட எல்லாப் பொறுப்பையும் நீங்கதான் ஏத்துக்கணும்.நாங்கல்லாம் எந்த நிலையிலும், எந்த நேரத்துலேயும் தப்பான பாதையில போகாம உங்க கண் பார்வையிலேயேயிருக்கணும்மா. அந்த அருளை நீங்க தந்தே ஆகணும்மா. அன்னையே! இந்த வீடு உங்க வீடு. நாங்க எல்லாருமே உங்களோட குழந்தைங்க. நாங்க தப்பு செஞ்சா, கண்டிச்சு திருத்துங்க. அதை எங்களுக்குப் புரியறாப்பல செய்யிங்கம்மா.என்னென்னிக்கும் நீங்கதாம்மா எங்க தெய்வம். உங்களை விட்டு நாங்க வேற பாதையை தேடக்கூடாது, தேடவேக் கூடாதுன்னு.....' ''

மேலே பேச்சுக்கள் வாராமல் மாலதியைப் பிடித்துக்கொண்டு சத்தமின்றி கதறினாள் செல்வி.

அன்னையிடம் அவளுடைய உருக்கமும், நெருக்கமும் நன்றாகவே புரிந்தது மாலதிக்கு. அவளுடைய விழிகளும் மழையாய் நீரைப் பொழிந்தன. செல்வியின் முதுகில் ஆதரவாய், அதே சமயம் மனதுள் எழுந்த பீறிட்ட சந்தோஷத்தோடு தட்டிக் கொடுத்தாள். ஆனால்,மாலதியின் கண்களோ அன்னையைப் பார்த்தன.

"அன்னையே..... நீங்களே இவளின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, நான் யார்? சாதாரணப் பிறவி. நீங்கதானே எல்லாவற்றிற்கும் சூத்திரதாரி. நன்றி அன்னையே நன்றி''.

 

****

மூன்று வருடங்கள் என்பது மூன்று நிமிடங்களாகப் பறந்து போனது.

அவ்வப்போது மாலதி ஷார்ஜாவிliருந்து தொலைபேசி மூலம் எல்லோரிடமும் பேசினாள். அதுவும் செல்வியின் படிப்பு பற்றியும், முருகேசு பற்றியும் தவறாமல் விசாரிப்பாள். அன்றும் அப்படித்தான்.

"அக்கா! காம்பஸ் இன்டர்வியூவில என்னை முதலாவதாக செலக்ட் செஞ்சிருக்காங்கக்கா. அன்னைகிட்ட, உங்களோட விருப்பம் என்னவோ அப்படியே ஏத்துக்கரேன்னு அந்த நேரத்துலேயே சமர்ப்பணம் செஞ்சுட்டேங்க்கா. பொன்னியும் பத்தாவது பரீட்சையில நல்லா எழுதியிருக்கிறதா சொன்னாக்கா. கணேசும் நல்லா படிக்கிறான். அக்கா! அப்பா..... இப்ப எப்படியிருக்கார் தெரியுமா? எப்ப வரப் போறீங்க?மாமா நலமா? குழந்தையை ஸ்கூல்ல சேர்த்துட்டீங்களா? இங்கேயும்,உங்க வீட்டுலயும் அப்பா, அம்மா ரெண்டு பேரும் நலமாயிருக்காங்க. ஒண்ணாந்தேதி ஸிம்பல் வைக்கறோம். என்ன பரீட்சையானாலும் வீட்டு வேலையில பாட்டிம்மாவுக்கு உதவி செஞ்சுட்டுத்தான் போறேங்க்கா.கவலையேபடாதீங்க, அன்னை எல்லாத்தையும் பாத்துக்குவார். அக்கா!அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் எங்களுக்குக் காட்டிய உங்களுக்கு ரொம்ப நன்றிக்கா. எங்க வீட்டுக்கு மட்டுமில்லக்கா, அன்னையோட பக்தர்களுக்கெல்லாம் காவல் தெய்வமாத்தான் அன்னையும்,ஸ்ரீ அரவிந்தரும் இருக்காங்கக்கா. இதோ பாட்டிம்மா வந்துட்டாங்க, பேசறீங்களா.....''

மூச்சு முட்டும் அளவிற்கு சந்தோஷமான வார்த்தைகள் சரமாரியாகச் செல்வியின் குரliliருந்து மழையாகப் பொழிந்ததைக் கேட்டு மாலதியின் மனம் விகசித்தது.

****

முருகேசு இப்போதெல்லாம் ரொம்பவும் அமைதியானவனாக மாறிவிட்டான். காலை வேளையில் பல் தேய்த்து, குளித்துவிட்டு வந்தவுடன், நேராக அவன் செல்வது அன்னையிடந்தான்.ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் வணங்கி பத்து நிமிடம் தியானம் செய்தபின் வேலைக்குப் புறப்பட்டுவிடுவான்.

செல்வி இன்ஜீனியரிங் முடித்ததும் அவனால் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை.

"செல்வி கண்ணு..... எம் பொண்ணு, இந்தக் குடிகாரனோட பொண்ணு, இன்ஜீனியரா..... நம்பவே முடியலையேம்மா. எல்லாம் அன்னையோட அருள்தானேம்மா..... சந்தோஷம் தாங்கலே செல்விம்மா.....'' குரல் தழுதழுத்தது.

"அப்பா! என்னிக்கோ நீங்க தவறா நடந்துகிட்டீங்கதான். அதையே நினைச்சு வருத்தப்படாதீங்கப்பா. இன்னும் அந்தக் குடியை நீங்க மறக்கலையா? உள்ளுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருக்காப்பா?சொல்லுங்க..... சொல்லுங்கப்பா..... நீங்க குடிகாரனா?''

"அம்மாடி..... அப்டில்லாம் இல்லேம்மா..... என்னைய..... என்னைய போய் நீ சந்தேகப்படலாமாம்மா.....?'' தளும்பும் விழிகளுடன் அவன் கூறவும்,செல்வி அவன் கண்களைப் பரிவோடு துடைத்தாள்.

"அப்பா! சந்தேகப்படலே..... ஆனா..... இன்னும் ஏன், "குடிகாரன்' என்கிற அடைமொழியை உங்ககிட்டேயிருந்து விலக்க முடியலே. அந்த வார்த்தைகளோ, அந்த எண்ணங்களோ உங்க மனசுல, ஒரு துளிக்கூட இருக்கக்கூடாதுப்பா. எப்போ நீங்க அன்னையோட கருணைக்கு உட்பட்டு அவங்களை ஏத்துகிட்டீங்களோ..... அப்பவே நீங்க புடம் போட்ட தங்கமா சுத்தீகரிக்கப்பட்டவங்கப்பா. அதைப் புரிஞ்சுக்கோங்கப்பா. அப்பா, சுத்தீகரிக்கப்பட்ட நீங்க, அந்த வார்த்தையையே தூக்கி உங்க மனசுலேருந்து எறிஞ்சுடுங்க. உங்க மனசுல அந்தப் பழைய நினைவுகளையும், நிகழ்ச்சிகளையும் எண்ணி, எண்ணி மருகிப்போறதை அறவே விட்டுடுங்க. அன்னையோட அருள் உங்களுக்குத்தாம்ப்பா பூரணமா கிடைச்சிருக்கு.....''

"செல்விம்மா என்ன சொல்றே.....? புரியலே..... நிஜம்மா..... உண்மையா சொல்லு. அன்னையோட அருள் எனக்கு முழுசுமா கிடைச்சிருக்கா.....நானு..... நானு..... அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும்..... தூக்கி..... தூக்கிப் போட.....''

மேலே பேச்சு வராமல் தடைபட்டு கேவிக்கேவி அழுதான் முருகேசு.

"அப்பா..... ஆமாம்ப்பா. நாங்க அன்னையை மனமுருக வேண்டினோம்;நெஞ்சு நிறைஞ்சு தொழுதோம். ஆனா..... நீங்க..... தப்பா நடந்துக்கப் போனீங்க. அன்னைக்கு நாம எல்லாருமே குழந்தைங்கதானேப்பா.அதுதான் உங்களை, நீங்க செய்ய நினைச்சத் தவறுலேருந்து தவிர்க்க,உங்களைக் கண்டிச்சுத் திருத்தினாங்க. உங்களை பெற்ற தாய்போல நினைச்சுக் கண்டிச்சாங்க. அதே சமயம் தெய்வமாயிருந்து அருளை அள்ளி அள்ளித் தந்துருக்காங்க. இதுதானேப்பா உண்மையில நடந்துருக்கு. குழந்தைக்கு நெருப்புக்கும், மத்ததுக்கும் வித்தியாசம் தெரியாதுப்பா. ஆனா, நெருப்பைப் பார்த்து அதை எடுக்கப் போற குழந்தையைத் தடுக்கறது யாருப்பா? பெத்த அம்மாதானே பறந்தோடி,பரிதவிச்சு, நம்ம குழந்தைக்குச் சூடு தாங்காதே, கை வெந்துடுமேன்னு வாராங்க, தடுக்கறாங்க. அதே போலத்தாம்ப்பா அன்னையும், எம் புள்ள என்னைக் கோபமா திட்டறான், அடிக்க வாரான். தப்பு, பெரிய தப்பு.அவனுக்கு அது தெரியவும் இல்லே, புரியவும் இல்லே. ஏன்னா,அவனுக்குள்ளேயிருக்கிற மது அரக்கன் அவனை ஆட்டிப்படைக்கிறான்.அந்த அரக்கனை நாம அழிச்சு, அதுகிட்டேயிருந்து எம் புள்ளயை விடுவிக்கணும்ங்கற எண்ணத்துலதான் அவங்க தம் கண்கள்ல மட்டும் தம் சக்தியைக் காட்டி உங்களைக் கட்டுப்படுத்தினாங்க. அதையே உங்களால தாங்க முடியலயே. நீங்க மட்டுமில்லேப்பா, யாராலயும் அன்னையோட முழு சக்தியையும் தாங்க முடியாதுப்பா. உங்களுக்காக,அந்த மது அரக்கனை அழிக்க, உங்களிடமிருந்து அந்த அரக்கனை விரட்ட, தம்முடைய மகாகாளி அவதாரத்துலேருந்து கொஞ்சமே கொஞ்சம் தம் கண்கள்ல காட்டி உங்ககிட்டேயிருந்து ஒரேயடியா துரத்தியே அடிச்சு விரட்டிட்டாருப்பா. அப்பா, அந்த அரக்கனை உங்ககிட்டேயிருந்து துரத்தினபிறகும் நீங்க அந்த அரக்கனை உங்ககிட்டேயிருந்து விடுவிக்காம, விடுதலை தாராம, "நான் குடிகாரன்,குடிகாரன்'னு ஏம்பா உங்ககிட்டேயே அவனைக் குடி வச்சுருக்கீங்க.ரொம்ப தப்புப்பா. இனிமே அவனை உங்ககிட்டேயிருந்து விடுதலை கொடுத்து, அடிச்சு விரட்டுங்க. இனிமே உங்க பேரு குடிகாரனில்லே.உங்க பேரு முருகேசன். யாரு, என்ன வேணும்னாலும் சொல்லட்டும்,கூப்பிடட்டும்; சட்டையே பண்ணாதீங்க. நாங்களும் முருகேசனோட குழந்தைங்க. இப்ப, நாம எல்லாருமே அன்னையோட குழந்தைங்கதான்,புரிஞ்சுதா. உங்க பொண்ணுதான் இப்ப இன்ஜினீயராயிருக்கா,தெரிஞ்சுதா.....''

மெய்சிliர்க்க,செல்வியை அப்படியே ஆரத்தழுவி, கண்களை சொரிய விட்டதில், செல்வியின் விழிகளும் நிறைந்தன.

இருவருமாக அன்னை, ஸ்ரீ அரவிந்தரை நினைத்து மெய் மறந்தனர்.

பின் அவரவர், அவரவர் வேலையை கவனித்தனர்.

இவற்றையெல்லாம் பார்த்தபடியிருந்த ஆண்டாளுக்கு மட்டுமன்று,பொன்னி, கணேசும் மனம் நிறைந்து அன்னையை வேண்டி, செல்வியைக் கட்டிப்பிடித்து சந்தோஷித்தார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களைத் துள்ளாட வைத்தது.

 

****

T.C.S.இல் வேலை கிடைத்தேவிட்டது செல்விக்கு. பூனாவிற்குத்தான் அவளை "போடுவார்கள்' என எல்லோருமாய் பேசிக்கொண்டார்கள்.அவள் அதற்கு எதுவுமே பதில் சொல்லவில்லை. காரணம் அன்னைதான்.

முதலில் திருவனந்தபுரத்தில் டிரெயினிங்.

நாம் பேசாமலிருக்கலாம்.ஆனால், நம் உள்மனது எப்பவுமே வாயை மூடாது. சந்தர்ப்பம் கிடைத்தால் தன் வாயைத் திறந்து புலம்பவே ஆரம்பித்துவிடும். அந்தப் புலம்பலை நாம் அனுமதித்து, ஆமோதித்து,இடம் கொடுத்து, நம் செவியை அதன் புறம் சாய்த்து, அந்த வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தந்தோமானால்..... "மனம் என்பது குரங்கு' என்பதற்கேற்ப குரங்காட்டம்தான் ஆடிவிடுவோம். அந்தக் குரங்கை ஆட்டுவிக்கும் கயிற்றை நம் கையில் வைத்திருக்க வேண்டும். அந்தக் குரங்கு தறிகெட்டுப் போகும்போது, அதை இழுத்துப் பிடித்து நிறுத்தும் "ஜாலத்தை' நாம் அறிந்திருக்க வேண்டும். இல்லையேல், நாம் மாறுவது குரங்காகத்தான், இது நிச்சயம். அதன் விளைவு குரங்கின் குரங்குத்தனம் நம்மிடம் வந்து நாமே குரங்காவோம்.

திருவனந்தபுரம் டிரெயினிங் என்றவுடனேயே செல்வியின் மனதில் ஏற்பட்ட முதல் எண்ணம் "அங்கு அன்னையின் தியான மையம் எங்கு இருக்கிறதுஎனத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடன் அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் அழைத்துப் போக வேண்டும். அங்கு எது நடந்தாலும் அன்னைக்கே சமர்ப்பணம் செய்ய வேண்டும். அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் நம்மை விட்டு அகலாது இருக்க நம் மனதை,இதயத்தை, எண்ணங்களை எல்லாமே மாசற்று, துப்புறவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் ஒரு தியானமாகவே நினைக்க வேண்டும், செய்ய வேண்டும். அன்னையே..... என்றென்றும் உங்கள் துணை எனக்கு வேண்டும். நான் எங்குப் போனாலும், என்னுடன் யாரிருந்தாலும், என்னுள் உறைந்திருக்கும் உங்களால்தான் நான் வழிநடத்தப்படவேண்டும். என் மனம் எதையும் கண்டு கலையாமல் வெட்டவெளியாக இருந்து நீங்கள் மட்டுமே அதனுள் இருக்க வேண்டும்,அன்னையே! அன்னையே சரணம்! அன்னையே சரணம்! அன்னையே சரணம்!'

 

****

இரண்டு மாத டிரெய்னிங்கில் செல்வி எல்லோருடனுமே வெகு அருமையாகப் பழகியதால், அனைவருமே அவளுடைய நட்பை விரும்பினார்கள். அவளுடைய தியானமும், அமைதியும், அதே சமயம் வகுப்புகளில் நேர்த்தியாக பதிலளிப்பதும் அனைவருக்குமே வியப்பைத் தந்தது. அதனால் அவளிருக்கும் குழுவிலேயே சேர வேண்டுமென  ஆகர்ஷிக்கப்பட்டு விரும்பியதில், பேராசிரியர்களுக்கும் வியப்பே.

எல்லாம் நல்லபடியாய் முடிந்து வந்தாயிற்று. செல்விக்கு பூனாவில் வேலை என வந்தாயிற்று.

முருகேசுவும், ஆண்டாளும் "ரொம்ப தூரம் மகள் போகிறாளே' என நினைத்தாலும், மகளின் சஞ்சலமற்ற நடத்தை அவர்களுக்குள்ளும் ஒரு தெம்பைத் தந்தது.

மாலதியிடமும் ஃபோனில் பேசும்போது கூறியாயிற்று. அப்போதுதான் மாலதி கூறினாள், "செல்வி, நீ கரஸ்பாண்டென்ஸில் மேலே எம்.எஸ். படிக்க வேண்டும்மா. வேலை பார்த்துண்டே படி. உனக்கு அந்தத் திறமையிருக்கிறது. பக்கத்துணையாக அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இருக்கும்போது, அவர்களிடம் உன் பாரத்தைக் கொடுத்துவிடு. எல்லாமே உனக்கு லேசாயிடும். நிச்சியமாய் நீ எம்.எஸ். படிக்கத்தான் வேண்டும் செல்வி. அதுவும் பிலானியில் நீ அப்ளை பண்ணு, கிடைக்கும்.வேலையோடு ஸைடு பை ஸைடு படிச்சுடலாம். உன்னால முடியும் செல்வி.மொதல்ல எழுதிப்போடு, சரியா.....''

மாலதி கூறியதுமே மாமியிடம் கூறினாள் செல்வி.

செல்வி திருவனந்தபுரம் போகும்போதே ஆண்டாளு பொன்னியை அவர்கள் வீட்டு வேலைக்கு அனுப்பிவிட்டதால், அவர்களுக்குப் பிரச்சினையில்லாமல் போனது.

மாமி, தன் கணவரிடம் கூறி, செல்விக்கு வேண்டிய உதவிகளைச் செய்யச் சொன்னதில், கரஸ்பாண்டென்ஸில் எம்.எஸ்.ஸிற்கு செல்வி சேர்ந்தாயிற்று. ஒரு வருடமும் ஓடிவிட்டது.

 ****

ஒரு வாரம் லீவில் செல்வி ஊருக்கு வந்தாள். எல்லோருக்கும் துணிமணிகள், திண்பண்டங்கள் என நிறையவே கொண்டு வந்தாள்.அன்னையின் ஆசியால் அவள் வனப்பாகி, அழகுற இருந்தாள்.

"செல்வி, நீயும் ஒரு வருஷமா சம்பாதிக்கரே. உன் படிப்பையும் ஒரு வருஷத்துல முடிச்சுடுவ. மேலே என்னம்மா செய்யப் போரே.....''

"ஏம்ப்பா..... என்ன திடீர்னு இப்டி கேக்கறீங்க? புரியலையே. ஏம்மா,

மேலே என்ன செய்வேன், வேலைதானம்மா செய்வேன். இரும்மா, ஒரு முக்கியமான விஷயம் அன்னைகிட்டே சொல்liயாச்சு. இப்ப உங்ககிட்டயும் சொல்றேன். அப்பா எனக்கு வேலை பர்மனனண்ட் ஆயிடுத்துப்பா. சம்பளமும் இப்ப இருபத்தஞ்சாயிரம் ரூபாயா உசந்திடுச்சுப்பா. அம்மா, நீங்களும் அப்பாவும் நில்லுங்க. வந்தவுடனேயே அன்னை, ஸ்ரீ அரவிந்தருக்கு மனம் நிறைஞ்சு வணங்கினேப்பா. இப்ப உங்களையும் வணங்கரேன், வாங்கப்பா''.

"இல்லேம்மா..... நான் உனக்கு எதுவுமே செய்யலே. செஞ்சதெல்லாம் அன்னைதான். அவங்கள வணங்கினதே போதும்மா.....''

"அப்பா! "மாதா, பிதா, குரு, தெய்வம்'னு, தெய்வத்தை கடைசியில தான் வணங்கக் கூறியிருக்காங்க. ஆனா, அன்னையும்,ஸ்ரீ அரவிந்தரும் "மனித தெய்வங்கள்'. எப்படி வாழணும், எப்படி இருக்கணும், எது கூடாது, எது நல்லதுன்னு மனுஷங்களாயிருந்து வாழ்ந்து காட்டினவங்க. தவறு செய்யிறப்போ சுட்டிகாட்டறாங்க. இப்ப நம்ம வீட்டை மாத்தினவங்களே அவங்கதானேப்பா. அதனாலதான் என்னுடைய மனசுல இருக்கிறதையும் இனிமே என் வாழ்க்கையில நடக்கப் போறதுக்கும் அவங்களையே சரணாகதின்னு வேண்டி,மனமுருக பிரார்த்தனை செய்யறேன். அதற்கு அடுத்தபடி வணங்க வேண்டியவங்க எனக்கு ஊனும், உயிரும் கொடுத்த நீங்க ரெண்டு பேர்தானேப்பா..... நீங்க எனக்கு இந்தப் பிறப்பைத் தந்திருக்காட்டா,எனக்கு அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் வணங்கி, இத்தனை தூரம் முன்னேறியிருக்க முடியுமா? வாங்கப்பா..... வாங்கம்மா.....''

இருவரும் நிற்க, அவர்கள் பாதங்களில் வணங்கி எழுந்தாள். ஆண்டாளு அவளை உச்சி முகர்ந்தாள். என்றுமே வாய் திறந்து பேசாத ஆண்டாளு, அன்று மகளை அணைத்து, சிறு குழந்தையாய் பாவித்து,செல்லம் கொஞ்சினாள். அடுத்த கணமே அவளுடைய பேச்சு மாறியது.

"செல்வி! இன்னும் ஒரு வருஷம்போல வேலை செஞ்சு, பணத்தை சேர்த்து வச்சுக்கம்மா. உங்கப்பாவும், நானும் சம்பாதிக்கிறது எங்களுக்குப் போதும் கண்ணம்மா. ஒரு நல்ல படிச்ச பையனாப் பார்த்து உனக்கும் கல்யாணம், காட்சின்னு செய்ய வேணாமா? இத்தனை நாளு நீ அனுப்பிச்ச பணத்தையெல்லாம் அப்பா மாலும்மா அப்பாகிட்ட கொடுத்து பேங்குல போட்டிருக்காரு. அதனால உனக்குக் கல்யாணம் செய்துட்டா எங்க பொறுப்பும் குறையுமே. ஏன் செல்வி, நான் சொல்றது சரிதானே? உறவுமுறையில பார்க்கட்டா..... இல்லே.....''

"அம்மா! என்னம்மா பேசறே நீ. எனக்கு ஒண்ணுமே புரியலையே.எப்போதாவது நான், "எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க'ன்னு கேட்டேனா? இல்லேல்ல. அது உங்க கடமைன்னு ரெண்டு பேருமே சொல்லுவீங்க. அது சரிதான். ஆனா..... அம்மா..... எனக்கு ஏனோ.....இந்தக் கல்யாணம், குழந்தை, குடும்பம்னு இதிலெல்லாம் மனசு போகலேம்மா. காரணம் தெரியலே. பொன்னி நல்லா படிக்கிறா.அவளுடைய ஆசை சார்டர்ட் அக்கவுண்டெண்ட் ஆகணும்னு ஸி..படிக்கணும்கறா. நானும் சரின்னு சொல்யிருக்கேன். ப்ளஸ் டூவுல காமர்ஸ்தாம்மா எடுத்திருக்கா. மாலுக்காவோட அப்பாகூட, "ரொம்ப நல்லா படிக்கிறா. அவ ஸி..தான் படிக்கணும்'னாரு. அவ படிக்கட்டும். கணேசு டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்படறாம்மா. ஏம்மா, உன் குழந்தைங்க மூணு பேருல ஒருத்தி இன்ஜினீயர், இன்னொருத்தி ஸி..,பையன் டாக்டர்னு சொல்liக்கப் பிடிக்கலையாம்மா.....''

"செல்வி..... நீ சொல்றது ரொம்ப சரி. ஆனா, எங்க கடமைன்னு.....'' இடைமறித்தாள் செல்வி.

"அம்மா, தயவுசெய்து என்னை விட்டுடுங்க. காலேஜுலேயும் சரி,வேலையிலேயும் சரி, நான் நிறைய்ய ஆம்பிளைப் பசங்களோடத்தான் படிச்சேன்; எல்லாரும் சகஜமாத்தான் பேசினோம், சிரிச்சோம்,கிண்டலடிச்சோம். ஆனாலும், யாருக்குமே கல்யாணம் பண்ணிக்கனும்னு என்னைக் கேட்கவுமில்லே; நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா என்கிற எண்ணத்துல பழகவுமில்லே; எவரையும் விரும்பவுமில்லே. அம்மா! அப்பா!ரெண்டு பேருக்குமே சொல்றேன். தயவுசெய்து என்னை விட்டுடுங்க.என்னுடைய மனசுல அந்த எண்ணம் துளிக்கூடயில்லேம்மா. எனக்கு அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மட்டும் போதும்மா. அம்மா, அம்மா, எனக்குப் பிடிக்கலேம்மா..... ப்ளீஸ்மா.....''

கண்ணீர் மல்க தாயையும், தந்தையையும் பிடித்தபடி கெஞ்சும் செல்வியை அணைத்துக்கொண்டனர். ஆனால் மனமோ, "அன்னையே,எங்களுக்கு எதுவும் புரியவில்லை. உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டோம்.இனிமேல் அவளுக்கு நீங்கள்தான் எல்லாவிதத்திலும், இத்தனை நாளிருந்ததைப்போல் வழிகாட்டுங்கள். எல்லாம் உங்களுக்கே சமர்ப்பணம்'' என்று அன்னையிடம் கூறியபின் கொஞ்சம் தெளிந்தார்கள்.

செல்வியிடம் பொன்னியும், கணேசும் ரொம்பவும் பிரியமாக இருந்தார்கள்.

"அக்கா! நாம மூணு பேரும் எப்பவும் இப்படியே ஒத்துமையா, சந்தோஷமா இருக்கணும்க்கா. அக்கா! அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் வந்த பிற்பாடுதானே நாம எல்லாருமே என்னமா மாறி, புதுசா பொறந்தவங்க மாதிரியிருக்கோம். செல்விக்கா, எனக்கு படிப்புல வர சந்தேகங்களை மாலும்மா அப்பாவே சொல்liத் தராரு; தெளிவாப் புரியுதுக்கா. அக்கா, நானும் கணேசும் நல்லா படிக்கறோம். கணேசும் பொறுப்பா படிக்கிறாங்க்கா. அதுவுமில்லாம, அவங்க ஸ்கூல்ல டென்னிஸ் நல்லா விளையாடறதால, பி.டி. மாஸ்டர் அவனுக்குத் தனியா கோச் செய்யிறார். இப்ப, சின்னச் சின்ன லெவல்ல, மத்த பள்ளிக்கூடங்களோட விளையாடி, இவங்க ஸ்கூல் ஜெயிக்குதுக்கா''.

"பொன்னி! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அன்னைகூட டென்னிஸ் விளையாடுவாங்களாம். தேகப்பயிற்சிக்கு அவங்க ரொம்ப முக்கியத்துவம் குடுப்பாங்களாம். அங்கேயிருக்கிறவங்களுக்கு தேகப்பயிற்சியும், சாத்வீகமான உணவும்தான் முக்கியம்னு சொல்லுவாங்களாம்''.

"! அதுதான் நம்ம வீட்டுலகூட இப்ப எந்த "கவிச்சி'யும் செய்யிறதில்லை, இல்லையாக்கா.....''

"ஏன் பொன்னி, உனக்கு வேணும்போல தோணுதா.....''

"இல்லேக்கா..... இப்பல்லாம் அதப்பத்தின நெனைப்பேயில்லேக்கா. அதுவும் கணேசுகூட எப்டி மறந்தான்னே தெரியலே. ஆனா, என் மனசுல ஒரு ஆசை இருக்குக்கா''.

"என்ன பொன்னி..... சொல்லு.....''

"அக்கா! இப்ப நம்ம வீடு சுத்தமாயிருக்கு. நம்ம அப்பாவும் ரொம்ப நல்லவரா ஆயிட்டாரு. இதெல்லாம் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் வந்தபின்னால....., எத்தனை, எத்தனை சந்தோஷமான மாற்றங்கள்.....அக்கா, நீ நல்லா சம்பாதிக்கரே. அன்னையோட அருளாலே நம்ம குடும்பம் இன்னும் நல்லா ஆகும்னு நம்பிக்கை இருக்கு. எது,எப்படியானாலும் நாம் இந்த வீட்டை மட்டும் விக்கவே கூடாதுக்கா.நமக்கு இந்த வீடு ஒரு கூடப்பொறந்த பொறப்புப்போலக்கா. அதுவும் மொதல்ல நம்ம வீடு எப்டியிருந்துது, இப்ப எப்டியிருக்குங்கற வித்தியாசம் என்னமா..... தெரியுது. அப்பவும் ஏதோ சுத்தம் செஞ்சுட்டு தானிருந்தோம். ஆனா..... இப்ப மட்டும் என்னமாயிருக்குது! அதுக்குக் காரணம்.....''

"சொல்லு பொன்னி, என்ன காரணம்னு நினைக்கரே. தயங்காம சொல்லும்மா..... ம்.....'' ஆர்வத்தோடு கேட்டாள் செல்வி.

"மனசுக்கா. நம்ப மனசு. ஆமாங்க்கா. அப்ப நாம யாருமே சந்தோஷமாயில்லே. அப்பவும் குளிச்சோம், சாப்பிட்டோம், துணி துவைச்சோம், பாத்திரம் தேய்ச்சோம், வீடு பெருக்கிக் கூட்டினோம்,மெழுகினோம், எல்லாமேதான் செஞ்சோம். ஆனா, இப்ப இருக்கிறாப்பல மனசு சந்தோஷப்படல. நாம எல்லாருமே ஏனோதானோன்னு ஒரு சிரத்தையில்லாமதான் செஞ்சோம். கடமையைக்கூட மடமையாத்தான் செஞ்சோம். ஆனா இப்ப..... அக்கா..... அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் நம்ப வீட்டுக்கு வந்தபின்னாலதானே நம்ம வீட்டுக்கும் "உயிர்'வந்திருக்குக்கா. ஆமாங்க்கா. நம்ம வீடு எப்டி ஜீவனோட இருக்குங்கறது நல்லாவே தெரியுது, புரியுது. நம்ம வீடு மொதல்ல இருந்தது போலத்தான்  இருக்கு. அதே அளவுல, அதே செங்கல்லும், சிமெண்டுமாத்தான் இருக்கு.ஆனா, அப்ப இல்லாத ஒண்ணு, இந்த வீடும், இப்ப நம்மளைப்போல உயிரோடு இருக்குக்கா. ஆமாங்க்கா. இல்லேன்னா இப்டி ஒரு பளிச்சுன்னு இருக்குமா? எப்பவாவது ஒரு சின்ன ஒட்டடை ஒட்டியிருந்தாக்கூட நான் பதைச்சுப் போயிடுவேன். நம்ம மூஞ்சியில கருப்பா ஏதாவது இருந்தா முகம் கழுவறோம், பவுடர் ஒத்திக்கிறோமே.நமக்கு பாதுகாப்பாயிருக்கிற இந்த வீடு, குளிரு, மழை, வெய்யில்னு எல்லாத்துலேருந்தும் காப்பாத்தற நம்ப வீட்டை இப்டி விடலாமா?தப்பில்லையான்னு தோணும். உடனே அதை சுத்தம் செஞ்சாத்தான் மனசுக்கு ஆறுதலாயிருக்கும். அன்னையைப் பார்த்தேன்னு வச்சுக்க,அன்னை அப்டி வாய் கொள்ளாச் சிரிப்போடு "வெரிகுட்'னு சொல்றாப்பல தோணும். அக்கா, நமக்கு எத்தனை பணங்காசு வந்தாலும் இந்த வீட்டை நாம் விட்டுட்டோ, வித்துட்டோ போகக் கூடாதுக்கா.....சரியாக்கா.....''

சரீரம் முழுவதும் சிliர்க்க,பிரமிப்போடு தன் சகோதரியையே கண் கொட்டாமல் பார்த்த செல்வி, அவளை ஆரத்தழுவினாள். இருவரின் கண்களும் பனித்தன.

 

****

செல்வி எம்.எஸ்.ஸும் பாஸ் செய்துவிட்டாள். அதுவும், அவளுடன் படித்தவர்களில் இவளே முதன்மையாக வந்தாள்

ஊரிலிருந்து வந்திருந்த மாலதிக்கு, செல்வி வீட்டைப் பற்றியும்,அவர்களுடைய படிப்பைப் பற்றியும் கேட்டு சந்தோஷம் என்றால்..... அப்படி ஒரு சந்தோஷம்.

முருகேசுவைப் பார்த்து பிரமித்துப்போனாள்.

எவ்வளவு பவ்யமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்கிறான் என்றும், ஆளே எப்படி கம்பீரமாகத் தோற்றத்தில் மாறியிருக்கிறான் என்று வியந்தாள். அன்னையின் கடாட்சம் அவர்களிடம் எவ்வளவு பூரணமாக ஊடுருவியிருக்கிறது என்பதும் புரிந்தது.

ஆண்டாள், "செல்விக்கு கல்யாணத்தில் ஈடுபாடு இல்லை' எனக் கூறியதில், முதliல் வருத்தப்பட்டாலும், "அன்னை, செல்விக்கு என,என்ன வழியைக் காட்டுகிறாரோ அதிலேயே தங்களுக்குத் திருப்தி'எனக் கூறியதைக் கேட்டு மாலதி அயர்ந்துபோனாள்.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற எந்தவித பேதமுமின்றி அன்னை அவர்களின் அன்புக்கும், பக்திக்கும் எவ்வளவு தூரம் வசப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தது.

திடீரென ஒரு நாள் செல்வி ஊரிliருந்து வந்தாள். வந்தவள் ஒரு கவரை எடுத்து அன்னையிடம் வைத்துப் பிரார்த்தித்தாள். பிறகு அப்பா,அம்மாவிடம் தந்து வணங்கினாள்.

"அப்பா! என்னை பிராஜெக்ட் வொர்க்கிற்கு அமெரிக்கா ஆறு மாசம் அனுப்பப் போறாங்கம்மா. அது முடிஞ்சவுடன் மறுபடியும் பூனாவுக்கு வந்துடுவேன். அப்பா, எனக்கு இப்ப இந்தியாவுல, பூனாவுல நான் வேலை செய்யிற கம்பெனியிலேருந்தும் சம்பளம் தருவாங்க. அமெரிக்க  கம்பெனியில வேலை செய்யிறதுக்கு அங்கேயும் சம்பளம் தருவாங்கப்பா.எனக்கு, அமெரிக்கா போற வர செலவு, தங்கற செலவு, எல்லாமே கம்பெனியோடதாம்மா. இதுல நான் நல்ல பெயர் எடுத்தா, இன்னும் இதுபோல வரும்மா. ஆனா..... அன்னையோட அருள் எனக்குத் துணையா வரும் என்கிற நம்பிக்கை பூரணமாயிருக்கிறதால..... சரின்னு சொல்லிட்டேன்.....தப்பில்லையேம்மா..... என்னப்பா சொல்றீங்க.....''

"செல்வி..... செல்வி..... எங்கண்ணே.....'' மேலே பேச்சு வராமல் திக்குமுக்காடினான் முருகேசு. சந்தோஷத்தில் கண்களிருந்து பொழிந்தது ஆனந்த பாஷ்பம்.

"செல்வி, நீ ஏரோப்ளேன்லதான் போரேன்னு தெரியும். ஏரோப்ளேன் வந்தா, சின்னபிள்ளையில ஓடிப்போய் வாசல்ல நின்று அண்ணாந்து பார்ப்பே. இப்ப..... இப்ப..... நீயே அந்த ப்ளேன்ல ஏறி போகப்போரேன்னு நினைச்சா..... அம்மாடி..... இது நிஜமா..... கனவான்னு புரியலேம்மா. எம் பொண்ணு அமெரிக்கா போறான்னு பெருமையா சொல்றதுக்குக்கூட வாய் வரமாட்டேங்குது. நீ அன்னையோட பொண்ணு கண்ணு. ஆமா.....

அன்னையோட குழந்தைதான். அதனாலதான் ஒவ்வொண்ணா,மணிச்சரம்போல கோத்துகிட்டே வருது சந்தர்ப்பமெல்லாம். சந்தோஷம்மா செல்வி. எனக்கு மனசும், வயிறும் ரொம்பியே போச்சு கண்ணு. சரி

சரி, வா. மொதல்ல அன்னைக்கு முன்னாடி உக்காந்து தியானம் செய்வோம். வாம்மா, பொன்னி, கணேசு வாங்க.....''

முருகேசுவின் குரliலேயே அவனுடைய குதூகலம் புரிந்தது.ஊதுவத்தி ஏற்றி அமர்ந்தார்கள். அவ்வளவே..... வெளியிருந்துகூட ஒரு சிறு சப்தம்கூட கேட்காமல் அப்படி ஒரு அமைதி. அந்தக் குடும்பம் முழுவதும் தியானத்தை ஆரம்பித்ததிலிருந்து சுற்றுப்புறச் சூழலும் அவர்களோடு போட்டிப்போட்டுக்கொண்டு அமைதியை வாரி வழங்கியது.

அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருமே அந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இருவர் முகத்திலுமே புன்னகை ததும்பியது.

அன்னையின் பாதுகாப்பு வளையம் அந்தக் குடும்பத்தைச் சுற்றிப் பரவியிருந்து, ஒரு பாசமான அணைப்பாகவிருந்தது.தியானத்தை முடித்து, வணங்கி, அவர்கள் எழுந்தபோது,எங்கேயிருந்து வானம் கருமேகங்களைத் திரட்டியது! எப்படி மழையை தாரைதாரையா, சரம்சரமாக ஒன்றுபோல் பொழிந்து கொண்டிருந்தது!

ஐவரும் தியானம் கலைந்து கண் திறக்க, சத்தமின்றி வெள்ளிக்கம்பிகளாய் பொழியும் மழையைப் பார்த்து பரவசமானார்கள்.

மழை "அன்னையின் அருள்' என்பது அறிந்திருந்ததால், எல்லோருமே மனம் துள்ள, அந்த மழைத்தாரையை ரசித்தார்கள்.

 

வருடங்கள் வேகமாக உருண்டோடின.

 ****

தோட்டத்துச் செடிகளிliருந்து பூப்பறித்துக் கொண்டிருந்தான் முருகேசு.

ஆண்டாளு உள்ளே வேலையாகயிருந்தாள்.

வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்டு, கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு ஆண்டாளு வாசற்கதவைத் திறந்தவளின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

"வாம்மா பொன்னி, மாப்பிள்ளை வரலையாம்மா. டேய் வாடா என் பேரக்குட்டி..... வாடா..... பாட்டிய மறந்துட்டியா கண்ணு..... வாடா.....''

பொன்னியிடமிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டாள். "யாரு வந்திருக்கான்னு பாருங்க..... வாங்க.....''

முருகேசு கூடை நிறைய்ய பறித்த பூக்களுடன் உள்ளே வந்தவன்,பேரன் அரவிந்தனை வாரி அணைத்தான்.

பொன்னி ஸி.. முடித்து, ஒருவரிடம் மேற்கொண்டு வேலையையும் கற்று, இப்போது தனியாகவே ஆபீஸ் வைத்து, தன் கணவனுடன் வேலை செய்கிறாள். கணவன் தனபாலும் ஸி.. என்பதால் சுலபமானது.அன்னையைத் தன் மனைவி மூலம் மட்டுமின்றி, முதலேயே தெரிந்து கொண்டிருந்த தனபாலும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரையே தான் வணங்கும் தெய்வமாகவே ஏற்றுக்கொண்டதால், எந்தவிதமான குழப்பமுமின்றி குடும்பம் அழகாக நடந்தது. அதுவும் பொன்னி, சிறு வயதிliருந்தே அதிகம் ஆசைப்பட்டவள் அல்லள். செல்வியைப் போலத்தான் அவளும் எல்லோரிடமும் இதமாக நடந்தாள். படித்தாள்.கூடப் படித்த தனபாலுடன் பிரியம் ஏற்பட, ஆனால் அதை, தங்கள் படிப்பு முடிந்து, நிரந்தரமான வருமானம் வந்தபிறகே பெரியவர்களிடம் கூறி, ஒப்புதலுடன் திருமணம் என்பதில் உறுதியாய் இருந்தனர்.

தனபால் அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன். அவனுடைய ஆர்வமான படிப்பு, நன்னடத்தை, இவைகளையெல்லாம் பார்த்த அந்த அனாதை ஆஸ்ரமத்தின் பொறுப்பை ஏற்றிருந்த பாதிரியார், ஒரு செல்வரின் உபயத்தில் அவனைப் படிக்க வைத்தார். அவனும் நன்கு படித்து முதல் மாணவனாக வந்ததில் பாதிரியாருக்கும், செல்வருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

இதில் அந்த செல்வர் அன்னையின் பக்தர். அன்னையின் கோட்பாடுகளைத் தன்னால் இயன்ற அளவுõ செயல் காட்டுபவர். அவர் மூலம் தனபாலும் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பற்றிய விஷயங்களை அறிய முடிந்தது. ஆனால் அவன் தெரிந்து கொண்ட அளவிற்கு ஈடுபாட்டோடு இல்லாமல் எப்போதும் போலவே இருந்தான். ஆனால் குணத்தில் தங்கம்.

அன்னையின் சூட்சுமம் நமக்குத் தெரியுமா? இல்லை புரியுமா?அனாதை இல்லத்தில் வளர்ந்தவன். பெற்றவர்களைப் பற்றி சின்ன விவரம்கூடத் தெரியாது. கிறிஸ்துவப் பாதிரியாரால், அவனின் நல்ல நற்பண்புகளுக்காகப் பெற்றது நல்ல கல்வி. மேற்கொண்டும் அவன் படிக்க ஆதரவு தந்தவர் அன்னையின் பக்தர். அன்னையைப் பற்றி அறிந்தவனை, அன்னையே தங்கள் தெய்வம் என்றிருக்கும் குடும்பத்தில் இணைத்ததும் அதே அன்னைதானே. இதனால் பொன்னிக்கும் எத்தனை மகிழ்ச்சி, சந்தோஷம். கணவரும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக் கொண்டு, இருவரும் வணங்குவதும், பூக்களை அடுக்குவதும், தியானிப்பதும்..... எத்தனை சுகமான, ஆனந்தமயமான வாழ்க்கையை அன்னை தந்திருக்கிறார்.

செல்வி தேர்ந்தெடுத்தது, தனக்கு அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மட்டுமே  போதும். இல்வாழ்க்கையில் நாட்டமில்லை என நினைத்தாள்.

ஏற்றுக்கொண்டார் அன்னை.

காரணம், அவளின் தூய்மையான பக்தி. அவளின் இதயம்கூட "அன்னை, அன்னை' என்றுதான் துடிக்குமோ என்கிற அளவிற்கு அவளின் மனம் எப்போதும் அன்னையைத்தான் சுமந்தது.

பொன்னிக்கும் அதே அன்னைதான் வணங்கும் தெய்வம். ஆனாலும்,அவள் மனம் படிப்போடு, மணவாழ்க்கையிலும் நாட்டம் கொண்டது.அதில் தவறேது? அன்னையோடு, இயல்பான இல்வாழ்க்கைக்கும் விருப்பப்பட்டதால், அன்னையின் கருணையும் அவளுக்கு நல்ல கணவனையே தந்தது.

உண்மையான பக்தியும், நேர்மையான பிரார்த்தனையும் அன்னைக்கு மிகவும் உகந்ததாகும். அன்னையின் மந்திரங்களுள் ஒன்று:

"நேர்மையான நம்பிக்கையில்தான்

நம் வெற்றியின் நிச்சயம் உள்ளது.

என் ஆசிகள்''.

அந்த நேர்மையான நம்பிக்கைதான் செல்வியின் வீட்டில் அனைவரிடமும் இருந்தது.

பொன்னி, தங்கள் விருப்பத்தை முதliல் கூறியது அன்னையிடம்தான். ஆம்! அவள் தெய்வமாய் வணங்கும் அன்னையிடம்.அடுத்து அவள் கூறியது, தன்னைப் பெற்ற அன்னையிடம்.

"பொன்னி! நீ கல்யாணம் செய்துக்கரேன்னு சொல்றது சந்தோஷந்தான். அன்னையிடமே சொல்லும்மா. அவங்க நல்ல பதிலைத் தந்தா கல்யாணம் முடிக்கலாம், சரியா பொன்னி.....''

பாமரத்தனமான ஆண்டாளுவின் பரமார்த்தியான பக்தி, நம்பிக்கை,சரணாகதி, இதற்கு ஈடு வேறேது. அதுதான் அன்னை அவர்கள் வீட்டில் நிரந்தரமாகவே குடியேறிவிட்டார்.

கணேசு டென்னிஸிலும் சரி, டாக்டர் படிப்பிலும் சரி, மிக நன்றாக பரிமளித்தான்.

மூன்று குழந்தைகளுமே மூன்று முத்துக்களாய் மாறியது. மாற்றியது எப்படி? யாரால்? மூன்றுமே சோடை போகாமல், ஒருவருக்கொருவர் அன்பாக நடந்து, பண்பாக பரிமளித்து, பூக்களின் தொகுப்புபோல் இருந்து வருவது எதனால்?

அன்னை, அன்னை, அன்னையேதான்.

அன்னையை வணங்குவதில் முதலில் இருக்கும் தீவிரம் படிப்படியாகக் குறைந்து, நம் வாய் மட்டுமே சரணம் கூறுகிறது. உள்ளார்ந்து வரும் சரணம், அன்னையை நினைத்து ஒரு முறை கூறினாலும்,அதற்குண்டான பலன் சொல்லில் அடங்காது; அனுபவித்து உணர வேண்டியதாகும்.

அந்தச் சின்னஞ்சிறிய வீடு, இப்போது மாடி வீடாகியது எப்படி?பின்புறம் வெற்றிடமாக புல்லும், பூண்டும் விளைந்து, புதர் மண்டியிருந்த  இடம் இப்போது, சின்னஞ்சிறு, அழகிய பூந்தோட்டமாய், நந்தவனம் போல் மாறியது எப்படி? அந்த இடம், எல்லோரும் அன்னையையும்,ஸ்ரீ அரவிந்தரையும் வணங்க, தியானிக்க எனத் தங்களாகவே வந்து செல்வது எப்படி?

அதுதான் அன்னையின் கடாட்சம்.

ஆண்டாளு, முருகேசுவின் குடும்பம் எல்லோருடைய பார்வையிலும் முதliல் எப்படியிருந்தது?

அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவர்கள் குடிலுக்குள் வந்து அமர்ந்தவுடனே வந்த மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபமாய் மாறியதைக் கண்கூடாகப் பார்க்கிறோமே.

இது நிஜம், இது உண்மை, இது சத்தியம்.

இவைகளை நாம் மனம் திறந்து அறிந்தால், நம் வீட்டிலும் குடியேறுவார் அன்னை. நமக்கு வேண்டியதைத் தருவார். நம் பக்திக்கேற்ப, அவருடைய அருள் நம் வீட்டை நிறைவாக்கும்.

 

****

ஜப்பானுக்கு வேலைக்காக பத்து மாத காண்ட்ராக்டில் போயிருந்த செல்வி அன்று திரும்பி வருகிறாள்.

கணேசும், முருகேசும் ஏர்போர்ட்டிற்குப் போயிருந்தார்கள்.
 

முருகேசு தன் கண்களுக்கு மேல் கையையே குடையாக்கி, தன் பெண் வருவதைப் பார்க்க, வரும் பயணிகளின் கூட்டத்தில் கூசும் கண்களை அலைய விட்டான்.

"அப்பா! அதோ பாருங்கப்பா..... செல்விக்கா வாராங்க பாருங்கப்பா.....நம்மைப் பார்த்துக் கையாட்டறாங்க.....''

அதோ செல்வி, அவன் கண்களுக்கு பட்டத்து இளவரசி போல்,கைகளை அசைத்தபடி அழகாக வந்து கொண்டிருந்தாள் அவர்களை நோக்கி.

"அக்கா! சூட்கேஸைக் குடுக்கா. நான் தூக்கிட்டு வரேன். குடுக்கா.....''

"கண்ணு..... நல்லாயிருக்கியாம்மா..... வாம்மா, ஆண்டாளு வாசற் படிக்கட்டுலேயே உக்காந்திருப்பாம்மா..... அங்கே போன வேலையை நல்லா முடிச்சுட்டியாம்மா..... வாம்மா..... ஏதாவது சாப்டியா கண்ணு. காபி குடிக்கிறியாம்மா.....''

ஒரு தகப்பனின் உள்ளார்ந்த பாசமும், அன்பும் போட்டி போட்டுக்கொண்டு வெளிப்பட்டதைப் பார்த்து, ஒரு வினாடிக்கும் குறைவாகக் கண்களை மூடி, அன்னையை நினைத்து, நன்றியும் கூறி,பின் தந்தையைப் பார்த்து சிரித்தாள் செல்வி.

"அக்கா! உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ்க்கா. வாயேன். சீக்கிரமா நடக்கா.....'' நமட்டுச் சிரிப்புடன் கூறினான் கணேசு.

கணேசு, இன்றும் அதே சிறுவனாகத்தான் தோன்றினான் செல்விக்கு.

கணேசு வேகமாகப் பெட்டியுடன் நடக்க, தந்தையோடு, அவர் கையைப் பிடித்துப் பேசியபடி நடந்தாள் மெதுவாக.

சுற்றுமுற்றும் பார்த்தாள் வெளியே வந்தவுடன்.

ஏர்போர்ட்டிற்கு வெளியே நிறைய வாகனங்கள் வந்து நிற்பதும்,ஜனங்கள் ஏறுவதுமாக மாறி மாறி நடக்க, திடீரென "சர்ர்ரென' ஒரு கார் அவர்களருகில் வந்து நின்றது. திடுக்கிட்டு ஒரு அடி முருகேசுவையும் பின்னுக்கு இழுத்தாள் செல்வி.

"அக்கா! செல்விக்கா.....'' காரின் கதவைத் திறந்து, சின்னப்பிள்ளை போல் குதித்து இறங்கிய கணேசைப் பார்த்து ஆச்சரியத்தோடு "வாவ்'என்றாள் செல்வி. அவன் கையைப் பிடித்து "கங்கிராட்ஸ்' என குலுக்கினாள்.

காரின் முன்புறக் கண்ணாடியில் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் ஸிம்பல் ஒட்டப்பட்டிருந்தது. காரினுள் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படம் அழகுற இருந்தது.

"அக்கா..... நல்லாருக்காக்கா. என் மனசுல ஆசை இருந்துது. அதை அன்னைக்கிட்டவே சொல்liட்டேங்க்கா.பத்தே நாலுல கார் கிடைச்சு போச்சுக்கா. இப்ப நினைச்சாலும் உடம்பு சிliர்க்குதுக்கா.நல்லாயிருக்காக்கா''.

சிறுகுழந்தையாய் மாறி, தன் சகோதரியின் முகத்தையே ஆவலுடன் பார்க்கும் தன் சகோதரனை பாசத்துடன் தழுவியவளின் கண்களில் ஆனந்தம் பாஷ்பமாய் நிறைந்தது. அன்னை அவள் மனதுள் வந்து

"செல்வி சந்தோஷமா' எனக் கேட்பது போliருந்தது.

முற்றும்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பண்பு:

நாம் ஏற்றுக் கொண்ட பண்புகளே நம் உலகம்; நமக்கு அதுவே பிரபஞ்சம். அன்னையும் பண்புகளாகவே நம்மிடம் வருகிறார்.அன்னையின் பண்புகளை முழுவதும் ஏற்றுக் கொண்டால்,அன்னை முழுமையாக நம்மிடம் வருவார். பார்க்கப் போனால், எதையும் நாம் பண்பு மூலமாகவே அடைகிறோம்.

மனிதன் உருவாவது, பண்பின் உருவகத்தால்.


 

 



book | by Dr. Radut