Skip to Content

08.அன்னை கல்வி

அன்னை கல்வி

எவ்வாறு பிரிம்ரோஸ் பள்ளி மற்ற பள்ளிகளைக் காட்டிலும் வித்தியாசமாக விளங்குகின்றது?

ஜரீனா பீகம்

பிரிம்ரோஸ் பள்ளியின் மிக முக்கியமான அடிப்படைக் குறிக்கோள் என்னவென்றால், பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் ஈடு,இணையற்ற, மிகத் தனித்தன்மை வாய்ந்தவர்களாக உருவாக்குவது.எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு நாங்கள் சுதந்திரம் அளிப்பதனால் ஒவ்வொரு குழந்தையும் தனித்து விளங்குகின்றது. இதனால் ஒவ்வொரு குழந்தையும் தன்னம்பிக்கையுடன் செயல்படுகின்றது. இந்தத் தன்னம்பிக்கையை நாங்கள் அந்தக் குழந்தையின் தரத்தின் அடிப்படையிலோ,பரீட்சை எழுதி அதன் மூலமாகவோ, வினாடி-வினா நிகழ்ச்சி மூலமாகவோ வளர்ப்பதில்லை. மாணவர்களிடம் அந்தத் தன்னம்பிக்கையைக் கொண்டு வருவதற்காக எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களைக் கடிந்து கூறுவதோ (திட்டுவது), அச்சுறுத்துவதோ, மிரட்டுவதோ, அதிகாரம் செலுத்துவதோ, ஆதிக்கம் செலுத்துவதோ கிடையாது.

நாங்கள் எதற்காக, எந்த நோக்கத்திற்காக இப்பள்ளி ஆரம்பிக்கப் பட்டது என்பதை எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கிக் கூறுவோம். எங்கள் ஆசிரியர்களும் மேற்கூறப்பட்ட அனைத்தையும் மிக சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு அவ்வாறே மாணவர்களிடம் செயல்பட்டு, வெற்றி கண்டுள்ளனர்.

பழைய முறைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், குழந்தைகளிடம் உள்ள தனித்தன்மை காணப்படுவதில்லை. உதாரணமாக, ஒரே வகுப்பில் சில மாணவர்கள் பாடங்களை நன்கு கவனித்து, உடனே ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதைக் கிரகிக்க நீண்ட நேரம் தேவைப்படும்.அப்போது நன்கு படிக்கும் மாணவர்கள் மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிக விரைவில் படிப்பை முடித்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் மற்றவர்களைத் தொல்லைப்படுத்துவார்கள். அதனால் ஆசிரியர்கள் பாடத்தை எல்லோருக்கும் புரியும் விதத்தில் பொறுமையாகவும்,உற்சாகத்துடனும், ஆழமாகவும் நடத்தினால் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்வர்.

பொதுவாக ஆரம்ப நிலை வகுப்புகளான பிரி.கே.ஜி., எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில், அதாவது  , 3 வயதுடைய குழந்தைகளை 3 அல்லது 4 மணி நேரம் ஒரே இடத்தில் அவர்களை உட்கார வைத்து கையெழுத்து எழுத வைப்பது மட்டுமே கற்றுக் கொடுக்கின்றனர். அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் எப்படி ஓரிடத்தில் உட்கார்ந்து எழுத முடியும்?அப்படி எழுதாவிட்டால் அக்குழந்தைகள் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப் படுகின்றனர்.

ஆனால் எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த 3மணி நேரத்தில் விளையாட்டு மூலமாகவும், கதைகளை பப்பட் ஷோ (puppet show) மூலமாகவும், படிப்பதை ஃபிளாஷ் கார்டு (flash card) மூலமாகவும், பாட்டு, நடனம், உடற்பயிற்சி, அறிவுத் திறனை எளிமையாகக் கற்கும் விளையாட்டு, நிறைய அறிவை வளர்க்கும் செய்திகளும் (G.K.)கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதனால்தான் எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு வர ஆசைப்படுகின்றனர்.

நாங்கள் எவ்வாறு குழந்தைகளுக்கு மிக எளிய முறையில்,அவர்களுக்குப் புரியும் விதத்தில் பாடம் நடத்துவது, மிக விரைவில் அவர்கள் எப்படி நிறைய கற்றுக் கொள்வது என்பதை எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். ஆசிரியர்கள் இந்த அடிப்படை மனப்பான்மையைக் கற்றுக் கொண்டால், மாணவர்களும் மிக விரைவில் அவர்களிடமிருந்து படிப்பதை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் எளிதில் கற்றுக் கொள்வார்கள்.

அது மட்டுமல்லாமல், எங்கள் பள்ளியில் பிரி.கே.ஜி., எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் ஆசிரியர், மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் 1 : 10ஆக உள்ளது. ஒரு ஆசிரியரிடம் 4 அல்லது 5 மாணவ,மாணவியர்கள் மட்டுமே படிக்கச் செல்வர். அதனால் ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக் கவனம் செலுத்த முடிகின்றது. அவ்வாறு 2ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்கச் செல்வர். மற்ற மாணவர்கள் 3வது ஆசிரியரிடம் அறிவுத் திறன் போன்ற விளையாட்டுக்கள், ஓவியம் வரைதல் மற்றும் இதரப் பயிற்சிகளை கற்றுக் கொள்வார்கள். 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் 1 : 15 என்ற விகிதத்தில் உள்ளது.

ஆசிரியர்கள் குழந்தைகளின் வெளித் தோற்றத்தை வைத்தோ, அவர்கள் படிப்பதை வைத்தோ கணித்துவிட முடியாது. அதற்கு உதாரணமாக எங்கள் பள்ளியில் சித்தார்த் என்ற மாணவன் 2½ வயதில் வந்து சேர்ந்தான். அவன் யாரிடமும் பேசவோ, விளையாடவோ மாட்டான்.குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றாலும் சைகையில் மட்டுமே காண்பிப்பான். எப்படி, எந்த வகையிலும், என்ன கேள்வி கேட்டாலும் தலையை மட்டுமே அசைப்பானே தவிர வாய் திறந்து பேசவே மாட்டான். ஆசிரியர்கள் இந்த குழந்தையைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு எவ்வாறு எல்.கே.ஜி. வகுப்பிற்கு உயர்த்துவது என்று நினைத்துக் கொண்டிருந்தனர். அவன் எல்லாவற்றையும் உற்று பார்த்துக் கொண்டே இருப்பான். Flash card காண்பித்தாலும் அமைதியாக அதைப் பார்ப்பான். வாய் திறந்து எதையும் சொல்ல மாட்டான். ஒரு நாள் பையனின் அப்பாவை பிப்ரவரி மாதத்தில் அழைத்து, "உங்கள் குழந்தை எதுவும் பேசவோ, சொல்லுவதோ, விளையாடுவதோ கிடையாது. இப்படி இருந்தால் நாங்கள் எல்.கே.ஜி.வகுப்பிற்கு அனுப்ப முடியாது. இன்னும் ஒரு வருடம் இதே வகுப்பில் (பிரி.கே.ஜி.) படித்தால் நன்றாக இருக்கும்'' என்றார் ஆசிரியர். உடனே அவன் அப்பா, "வீட்டில் சித்தார்த் நன்கு பேசுகின்றான்,விளையாடுகின்றான் மற்றும் பள்ளியில் நடக்கும் அனைத்தையும் (படித்ததை பற்றியும்) கூறுகின்றான். எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார். இதனால் எங்களுக்குப் புரிந்தது என்னவென்றால் அந்தக் குழந்தை எதையும் பேசாமல், அமைதியாக அனைத்தையும் கிரகித்துக் கொள்கின்றான்என அறிந்தோம். பிறகு எல்.கே.ஜி. வகுப்பிற்கு அனுப்பினோம். எல்.கே.ஜி. வகுப்பிற்கு சென்றவுடன் ஒரே மாதத்தில் அனைத்திற்கும், ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, உடனடியாகப் பதில் கூறினான். தற்போது பார்த்தால் மற்ற குழந்தைகளை விட அவன் தான் தலைசிறந்து விளங்குகின்றான். இதிலிருந்து ஆசிரியர்கள் கற்றுக் கொண்டது என்னவென்றால் குழந்தைகளின் வெளித் தோற்றத்தைக் கண்டு அவர்களை மதிப்பீடு செய்ய முடியாது. ஒவ்வொரு குழந்தையையும் உற்று கவனித்து கண்காணித்தால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் திறமைகளை வெளிப்படுத்துவர்.

நாங்கள் நம்புவது என்னவென்றால் எல்லா மாணவ, மாணவியர்களும் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக அவரவர் திறமைகளை ஏதாவது ஒரு விதத்தில் வெளிப்படுத்துவார்கள் என்பதை நாங்கள் நம்பிக்கையுடன் உறுதியளிக்கின்றோம்.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

இறைவனைக் காணும்வரை மனிதன் பல முறைகள் அவன் மீது இடறி விழுவதை மனதிலுள்ள அழைப்பு குறிக்கும்.

அழைப்பிருந்தால் ஆண்டவன் மீது இடறி விழுவான்.


 

 

 

கையெழுத்து எழுத வைப்பது மட்டுமே கற்றுக் கொடுக்கின்றனர். அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் எப்படி ஓரிடத்தில் உட்கார்ந்து எழுத முடியும்?அப்படி எழுதாவிட்டால் அக்குழந்தைகள் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப் படுகின்றனர்.



book | by Dr. Radut