Skip to Content

09.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                          (சென்ற இதழின் தொடர்ச்சி....)          கர்மயோகி

885) நேற்றிருந்த நிலையை மறந்து, இன்றுள்ள நிலையைப் பாராட்டுவது சமூகம். புதுப் பணக்காரனும், ஓய்வு பெற்ற ஆபீசரும் இதை உயர்வாகவும், தாழ்வாகவும் பெறுகிறார்கள். பிறர் மட்டுமல்லர், நாமும் நம்மை அதுபோல் நினைக்கிறோம். அதேபோல் மனிதன் தன்னை மனிதனாகக் கருதாமல், ஆன்மாவாகக் கருத வேண்டும்.

உள்ளதற்கே உயர்வு என்பதால் மனிதனை ஆன்மாவாக அறிவோம்.

எதிரி நம்மை அழிக்க முயன்றவன். நம்மை நினைத்தால் அவனுக்கு நெஞ்சு கொதிக்கிறது. இன்று அவனுக்குப் பதவி வந்துவிட்டது; பெரிய மனிதனாகி விட்டான்.

நண்பர்களும், உறவினர்களும் பெரும்பான்மையோர் பதவி வந்தவுடன் பகைமையை மறந்துவிடுவர். பகைமை நம்முடையதாக இருக்கலாம். மானம், அவமானம், நல்லது, கெட்டது மறந்துபோகும்.கிட்டே போனால் அழித்துவிடுவான் எனில் போகமாட்டார்கள். அழிக்க மாட்டான், ஆனால் சேர்த்துக் கொள்ள மாட்டான் என்றாலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தங்களையறியாமல், அழைப்பில்லாமல், வெட்கமில்லாமல் போய்ச் சேர முழு முயற்சியை உயிருள்ளவரை எடுப்பது பெரும்பான்மையான மனிதச் சமுதாயம். அவர்கள் மனநிலை,கூறும் சொல், செய்யும் செயல்களை உலகமறியும்.

.பழைய விஷயத்தை இன்று கருத முடியுமா? இன்று அவன் அந்தஸ்து உயர்ந்துவிட்டது. அவன் எப்படியிருந்தாலென்ன, நாம்தான் போய்ச் சேர வேண்டும்.

.கல்யாணத்திற்கு அழைக்காவிட்டாலென்ன, நானே போய் பத்திரிகை கேட்டு வாங்கிக் கொள்கிறேன். போனால், "ஏன் வந்தாய்?' எனக் கேட்டால் குறைந்துவிடுமா? அதெல்லாம் பார்த்தால் பெரிய இடமில்லை.

.அந்த நாளில் அறிவில்லாமல் ஏதோ நடந்துவிட்டது. இப்போது அதை நினைத்துக் கொண்டிருக்க முடியுமா?

.துரியோதனனை பீஷ்மரும், துரோணரும் ஏற்கவில்லையா?

காங்கிரஸ் D.M.K.யுடன் சேரவில்லையா?

அரசியலே ஏற்கும் பொழுது நமக்கென்ன?

.இப்பொழுது போனால் சேர்ந்து கொள்ள முடியுமா? முடியாதா? முடியும் என்றால் மற்றனவெல்லாம் கேள்வியில்லை.

.இந்தச் சட்டமெல்லாம் பேசினால் பிழைக்கத் தெரியாது என்று அர்த்தம்.

.எப்படியிருந்தாலும் தம்பியில்லையா? அன்று சூன்யம் வைத்தான்,அதெல்லாம் நினைத்தால் காரியம் நடக்குமா? ஆமாம், ஆத்திரத்தில் நான் அறியாமல் நடந்தேன்; என்னென்னவோ பேசினேன்; சூன்யமும் வைத்தேன்; எதுவும் நடக்கவில்லை; அவன் அந்தஸ்து உயர்ந்துவிட்டதே.இனி என்ன செய்வது?

பெரும்பான்மையோர் என்றால் 99%. மீதி 1% மனிதரும் தயங்கித் தயங்கி அவர்களைப் போலவே முடிவாக நடப்பார்கள். தேறுபவர்கள் இல்லை. தேறுபவர்கட்கு அன்னை அருளாக, அதிர்ஷ்டமாக வருவார்கள்.வெறும் மனிதர் பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனை மனம் போலப் பலிக்கும்.வெறும் மனிதனாக இல்லாமல் இலட்சிய மனிதனாக இருப்பது நல்லது. "நெஞ்சு பொறுக்கவில்லை, இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்'' என்றார் பாரதி. நாம் பாரதி கணக்கில் தேற வேண்டும்.

அன்னை இலட்சியம் இலட்சியமான மனிதனுக்குண்டு.

தொடரும்.....

 

****

ஜீவிய மணி

இயல்பான சந்தோஷம் இறைவனின் பீடம்.


 


 



book | by Dr. Radut