Skip to Content

10.அடுத்த கட்டம்

"அன்னை இலக்கியம்"

அடுத்த கட்டம்

வி. ரமேஷ்குமார்


 

மொட்டைமாடி. நாள் முழுதும் அடித்த வெயிலுக்கு மேகமூட்டமும், தென்றல் உடலை வருடுவதும் இதமாக இருந்தது. தொடர்ந்து கும்மென்று மரமல்லிகையின் வாசம். ஆகஸ்ட் மாதத்தில் மரமல்லிகையின் பருவம் ஆரம்பிப்பதுகூட ஏதோ சொல்வது போலிருந்தது. என் பார்வையே அதைச் சொல்லி இருக்க வேண்டும்.

"ஆரம்பித்துவிட்டாயா?' என்பது போல் பார்த்தார் நண்பர் ஜெகன்.

"மாலையிலிருந்து ஒரு மாதிரியாகத்தான் இருக்கின்றீர்கள்'', கிண்டல் அடித்தார். ஆம், இன்று ஆகஸ்ட் 15. தியான மையத்திலிருந்து சொற்பொழிவும், தியானமும் முடிந்து இப்போதுதான் வீடு திரும்பினோம்.அங்கு ஆரம்பித்த நெகிழ்வும், ஆச்சரியமும் விலகாமல் இருந்தேன்.

"என்ன ஜெகன், நீங்கள் உணரவில்லையா? அந்தச் சூழலிலேயே ஒரு நெகிழ்ச்சியும், நன்றியும் இருப்பதாகப் பட்டதே......?''

"நிச்சயம் உணர்ந்தேன். அந்த அதிர்வு எப்படிச் சாத்தியமாயிற்று என்று தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.

"எனக்கும் அதுவே! அந்தக் கூட்டத்தில் இருந்த, மற்றும் வரிசையில் நின்ற அத்தனைப் பேரின் முகத்திலும் தெரிந்த நம்பிக்கை, மகிழ்ச்சி,விசுவாசம், நிறைவு.... இவையெல்லாம் எப்படி? சாதாரணமாக யார், எவ்வளவு கொடுத்தாலும், அது இறைவனே ஆனாலும், இன்னும் கொஞ்சம்.... என்று கோரிக்கைப் பட்டியல் வைத்துக்கொண்டு, திருப்தியில்லாமல் இருப்பதுதான் நம் சுபாவம். அதையும் மீறி, இத்தனைப் பேரின் முகங்களும் ஜொலிக்க வேண்டுமென்றால்..... எவ்வளவு பெற்று இருப்பர்...... அல்லது அன்னை எவ்வளவு கொடுத்து இருந்தால், இந்த இடமே கனக்கும் அளவிற்கு  விசுவாசத்தால் நிரம்பும்.....'' சொல்லும்போதே உடல் சிலிர்த்தது.

"நம் பழைய சம்பிரதாயமாக இருந்தால் விரதம், வேண்டுதல் என்று பதிலுக்கு ஏதாவது திருப்திப்பட்டுக்கொண்டு இருக்கலாம்'' புலம்பினேன்.

"மாதம் தவறாமல் மலர்ந்த ஜீவியம் வாங்குவதும், ஊதுவத்தி வாங்குவதுமே எனக்குப் பெரிய நன்றியாகப் படுகிறது'' சிரித்தார் ஜெகன்.

அவர் சிரிப்பாகச் சொன்னாலும், அதிலுள்ள உண்மை தைத்தது.

"இல்லை ஜெகன், எங்கேயோ வழி மாறிவிட்டோம். பிரச்சினை நிறைந்த காலத்தில் எப்படி அன்னையைப் பரபரப்பாகத் தேடினோம். புஷ்பாஞ்லிசயும், சுத்தமும் என்று பார்த்து, பார்த்துச் செய்தோம். அதன்பிறகு என்ன ஆனது? அடுத்த கட்டத்திற்கு ஏன் போக முடியவில்லை....?'' சொல்லிக் கொண்டே போனபோது.... மின்னலடித்தது! "அட..... அடுத்த கட்டம்......'

"நாளை ஞாபகப்படுத்துங்கள் ஜெகன். ராஜனைப் பார்ப்போம்.செய்கிறாரோ இல்லையோ, அன்னையைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து வைத்திருப்பவர். ஏதாவது ஐடியா கிடைக்கும்.....''

ராஜன், பல ஆண்டுகளாக அன்னை பக்தர். வீடு முழுதும் அன்னை படங்களும், புத்தகங்களும் நிரம்பி இருக்கும். அனைத்துத் தகவல்களையும் பக்கம்வாரியாகக் கூறுவார். அன்னைக் கோட்பாடுகளைப் பற்றி விரிவாகப் பேசுவார். பின்பற்றுகிறாரா என்றால், "அடுத்த ஆகஸ்டு 15 முதல்' என்பார்.....பல ஆண்டுகளாகச் சொல்வதாகக் கேள்வி.

"வாங்க ரவி, ஜெகன்.....'' வரவேற்றார். "என்ன இந்தப் பக்கம்....?''

"ஒன்றுமில்லை.....'' என்று ஆரம்பித்து, நேற்று நடந்ததைச் சொன்னோம்.

"அன்னையை இன்னும் அதிகமாக வழிபட வழி சொல்லுங்களேன்''.

"வழிபாடா?'' சிரித்தார். "என்னை வழிபடுவதில் திருப்தி அடைவதை  நான் விரும்புவதில்லை. நான் விரும்புவது திருவுருமாற்றம். அதற்கான முயற்சியை எடுப்பதற்குத் தயங்குபவர்கள் தான் வழிபாடே போதுமென்று இருக்கின்றார்கள்'' என்று அன்னையே ..............................................................................புத்தகத்தில் .................... பக்கத்தில் கூறி இருக்கிறாரே.இதை..... இதைத்தானே எதிர்பார்த்தேன் நான்.

"திருவுருமாற்றமெல்லாம் பெரிய வார்த்தை இல்லையா?'' குறுக்கிட்டார் ஜெகன்.

"என்ன பெரிய வார்த்தை...... நம் குணங்களையெல்லாம் அன்னைக்குப் பிடித்த குணங்களாக மாற்றவேண்டும், அவ்வளவுதான். நான் பட்டியல் ரெடி செய்துவிட்டேன். அடுத்த அன்னை பிறந்தநாளிலிருந்து ஆரம்பிக்கப் போகிறேன்.....'' நானும், ஜெகனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். புரிந்துகொண்டார் ராஜன். "என்ன கிண்டலாக இருக்கிறதா? இந்த முறை தப்பாது.... உண்மை தெரியுமா? நான் பல அன்னை கோட்பாடுகளைப் பின்பற்றத்தான் செய்தேன். ஆனால், எதையும் முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. காரணம் மிக உயர்ந்த ஒரு வழிமுறையை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று நினைத்ததுதான். பிறகுதான் புரிந்தது, எதற்கும் பல கட்டங்களாக, படிப்படியாகத்தான் போக முடியும்என்பது. குறிப்பாக, சுபாவம் எங்கெல்லாம் அன்னை வழிமுறைகளை ஒட்டி வருகிறதோ, அங்கே எல்லாம் வெற்றி கிடைக்கிறது. இதைப் புரிந்துகொள்ள இவ்வளவு நாளாயிற்று.....'' சத்தம் போட்டு, மனம் விட்டு சிரித்தார். எங்களுக்குத்தான் சிரிப்பு வரவில்லை. குழப்பம்தான் வந்தது.

"எங்கள் சுபாவத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?''

"நான் ஒரு கேள்வி லிஸ்ட் தயார் செய்து வைத்திருக்கிறேன்;தருகிறேன். வீட்டிற்குச் சென்று பொறுமையாகப் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, "ஜோக் இல்லை ரவி..... உண்மையில் முடியும்.... நாம்தான் முயல்வதில்லை.''

"உன்னையே எடுத்துக்கொள்ளேன். அன்னையிடம் வந்தபின் அனைவரும் பின்பற்றுவது சுத்தம். சுபாவத்திலேயே நீ அதிக சுத்தம் பராமரிப்பவன் என்று எனக்குத் தெரியும். அன்னையிடம் வந்தபிறகு,அன்னைக்குப் பிடித்த விதத்தில் அதிகபட்சச் சுத்தத்தை நீ பின்பற்றியபோது உன் நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்று நினைவு இருக்கிறதா?''

யோசித்தேன். "ஆம்! நிதிவேந்தன், "இவ்வளவு பளிச்சென்று இருந்தால் உள்ளே வருவதற்கே கூச்சமாக இருக்கிறது' என்றான்''.

"பின் என்ன ஆயிற்று? அதோடு அந்தக் கூட்டமும் போயிற்று. அவர்கள் வந்து போனதும் இருக்கும் சிகரெட் புகை மூட்டமும், பான்பராக், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் குப்பைகளும் ஒழிந்தது அல்லவா?''

"ஆமாம்'' ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

"இன்னொரு உதாரணத்திற்கு வருகிறேன். உனக்கு சுபாவத்தில் அரசியல் பிடிக்காது என்று தெரியும். உன் வீட்டுப் பக்கத்து டீ கடையில் தினமும் சேரும் நண்பர்கள்குழாம் சினிமாவையும், அரசியலையும் அலசும். நீயும் இருப்பாய். அன்னைக்கு அரசியல் பேசுவது பிடிக்காது என்றதும், நீ பேசுவதை நிறுத்தினாய். என்ன ஆயிற்று?''

ஜெகன் உற்சாகத்துடன் குறுக்கிட்டார், "கார்ப்பரேஷன், ஆக்கிரமிப்பு என்று அந்த டீக்கடையை அகற்றியது. அந்தக் கூட்டமும் நின்றது''.

ராஜன் மிகுந்த உணர்ச்சியில் பொங்குவது தெரிந்தது. "அதுதான் அன்னை. "நீ பொய் சொல்ல பிரியப்படாவிட்டால் நான் பொய் சொல்லும் சந்தர்ப்பத்தையே தருவதில்லை' என்பதை அனைவரும் படித்திருப்போம்.அது ஒரு குறியீடு. அதுபோலவே, நீ அன்னைக்காக சுத்தத்தை விரும்பினால், அசுத்தப்படும் சந்தர்ப்பத்தையே அன்னை அளிப்பதில்லை.அன்னைக்காக அரசியல் பேசமாட்டேன் என்றால், அரசியல் பேசும் சந்தர்ப்பத்தையே அளிப்பதில்லை.....'' கண் கலங்கினார். "இதை எல்லாம் பலமுறை பார்த்தாலும் நம்பிக்கை வரவில்லை...''

சற்று நேரம் மவுனம் நிலவியது. அந்த மவுனமே தீர்மானத்தை வலுவாக்கியது. நிச்சயம் அடுத்த, அடுத்த கட்டங்களில் அன்னையைத் தரிசிப்பேன் என்ற நம்பிக்கை பிறந்தது.

உள்ளே சென்று பட்டியலை எடுத்துவந்தார் ராஜன். "இந்தா ரவி,நான் பேச்சளவில் அடிக்கடி நின்றுவிடுவேன். அது என் சுபாவம்....'' சிரித்தார்.

"நீ சில இடங்களில் தீவிரமானவன்; முயற்சி செய்து பார்''. பார்த்தேன், ஒரே கேள்விகளாக இருந்தது. "என்ன இது?'' இழுத்தேன்.....

"பொதுவாக நீ அன்னைக்காக மாறவேண்டியதை உடல், உணர்வு,அறிவு என்று பிரிக்கலாம். உன் சுபாவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் உன்னிடம் உள்ள அன்னைக்கேற்ற சுபாவத்தையும், அன்னைக்கு எதிரான சுபாவத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அது உன்னையே நீ பார்த்தால்தான் முடியும். இந்தக் கேள்விகளைத் தினமும் உன்னையே நீ கேட்டுக்கொள்ள அரை மணி நேரம்தான் ஆகும்.நாளடைவில் நீ அன்னைக்கு ஏற்றவனாக மாற, மாற ஐந்து நிமிடம்கூட ஆகாது. ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள் அன்னை உன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது அதற்காக just 2% நேரம், அதாவது முப்பது நிமிடம் செலவிடக்கூடாதா?''

மிக எளிமையாகத் தோன்றியது. எழுந்தோம்.

"நன்றி ராஜன்! என்னால் முடியும்என்று நினைக்கின்றேன்....''

"தவறு ரவி..... "என்னால் முடியும்' என்பது நீ அன்னையின் கையைப் பிடித்து நடப்பதுபோல; சுற்றி இருக்கும் சுவாரஸ்யங்களில் மறந்து க்ஷண நேரமேனும் விட்டுவிடலாம். அன்னை உன் கையைப் பிடித்துக்கொள்ள வை. எந்தத் தாயும் கை பிடித்து அழைத்துச் செல்லும் குழந்தையை அதன் இலக்கில் சேர்க்காமல் திரும்புவதில்லை. கடக்க முடியாத இடங்களில் கூட இடுப்பில் தூக்கிச் சென்றாவது சேர்ப்பார், இல்லையா?''


 

"புரியவில்லையே.....''


 

"அன்னை உன்னைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்றால் உனக்குத் தேவை முழு நம்பிக்கை. அடுத்த கட்டத்தை அடைய வேண்டுமென்பதில் முழுஆர்வம், அதற்கான முயற்சி மட்டுமே''.

"உதாரணமாக, உழைப்பு உன் சுபாவம் என்பது தெரியும். உழைப்பு என்ற தலைப்பில், உன்னுடைய வேலைக்கான திறமை, அறிவை அதிகப்படுத்த ஏதாவது செய்தாயா என்ற கேள்விக்கு முதலில்

"இல்லை' என்றும், அடுத்த அடுத்த நாட்களில் "ஆம்' என்றும் சொல்லுமளவிற்கு உன் ஆர்வமும், முயற்சியும் இருந்தால்...... அன்னை உன்னைப் பிடித்துக் கொள்வார்; அதற்கான சந்தர்ப்பம், சூழ்நிலை உருவாக்கித் தருவார். அதுதான் அடுத்த கட்டம். வேலையை விருப்பத்துடன் செய்வதில் ஆரம்பித்து, வேலை அன்னை அருளை வெளிப்படுத்த உதவும் பாலம் என்ற எண்ணம் வரை கட்டங்களைப் போட்டுக்கொள்ள வேண்டியது உன் முயற்சி. அன்னையே அந்தப் படிகளில் உன்னை அழைத்துச் செல்வார்.

இது போலவே ஒவ்வொரு கேள்வியிலும் உன்னுடைய நல்ல சுபாவத்தை அறிந்து அதிகப்படுத்துவதும், அன்னைக்குப் பிடிக்காதவற்றைக் கண்டுபிடித்து, அதற்கு எதிரான அன்னை வழிகளைப் புகுத்த முயன்றால் - ஒரு படி போதும் - மீதியை அன்னை அதற்கான சந்தர்ப்பத்தை அளித்துப் பார்த்துக்கொள்வார்.....''பெரிய சொற்பொழிவைக் கேட்பதுபோல இருந்தது. "நன்றி ராஜன்!''கிளம்பினோம்.

வீடு திரும்பியதும் பரபரவென்று இருந்தது. குளித்து, அன்னை,பகவான் படம் முன் அமர்ந்தேன். எத்தனை முறை பார்த்தாலும் சக்காத அந்த புன்முறுவல் நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

"ஆத்ம சோதனை - தினந்தோறும்'' என்று அழகாகத் தலைப்பிட்டு இருந்தார். கேள்விகளைப் பிரித்தேன். ஒன்று ஒன்றாகப் பதில் தேட ஆரம்பித்தேன். குப்பென்று வியர்த்தது. காரணம், ஒரு கேள்விக்குக்கூட உண்மையான பதில் தர மனம் ஒப்பவில்லை. காலையில் என் வண்டிக்கு குறுக்கே வந்தவனைப் படுகேவலமாகத் திட்டி, சாபமிட்டதிலிருந்து.....,

பேராசையும், பொறாமையும், கயமையும், காமமும்..... நாள் முழுதும் என்னை ஆக்கிரமித்து, அவையே என் வாழ்க்கையை நடத்துவது தெரிந்தது. அத்தனைக்கும் ஒரு பதில் மனதில் இருப்பதும் தெரிந்தது. "ஐயோ! கனா தூரம் என்பார்களே! அதுபோல அன்னையிடம் இருந்து அவ்வளவு தொலைவிலா இருக்கிறேன்! அப்படியுமா அன்னை என்னை ஏற்றுக் கொண்டார்கள்!' நெகிழ்ந்துபோனேன். என் உண்மை உருவத்தை நானே ஓர் இரண்டாம் மனிதனாகப் பார்க்க முடிவதே அன்னை அருள் தான் என்று தோன்றியது.

"இனி சொல்வதற்கு, யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. செய்வதற்குத்தான் எல்லாம் இருக்கிறது'.

"அன்னைக்காக ஒரு சுபாவத்தையாவது மாற்றியே ஆகவேண்டும்'என்ற வைராக்கியம் வந்தது. எளிதாக இருந்தது, உணர்வில் -காமத்திற்கான கேள்விதான். "ஆம் அன்னையே! இன்றிலிருந்து கிளர்ச்சி ஊட்டும் எதையும் பார்க்கமாட்டேன், படிக்கமாட்டேன், கேட்கமாட்டேன், பேசமாட்டேன்' என்று கூறி, புலனாய்வுப் பத்திரிக்கைகள், நாவல்கள், ரேடியோ பாட்டுகள், டிவி வரை அனைத்தையும் தவிர்க்கிறேன். வாயால் சொன்னதுமே, உறுதி உள்ளே பாய்வது தெரிந்தது. அடுத்த, அடுத்த நாட்களில் அந்த கேள்விகளுக்கு "இல்லை' என்ற பதில் சந்தோஷத்தை அளித்தது.

"இல்லை'யென்று சொல்வதற்கான அந்த இடைப்பட்ட நாட்கள்.....

"இதுதான் நரகமோ' என்று இருந்தது. 24 மணி நேரம் என்பது 240 மணி நேரம் போலப் போயிற்று. "இவையெல்லாம் இல்லாமல் என்ன வாழ்க்கை'என்று மனது அடிக்கடி கூக்குரல் இட்டது. அதற்கு அது சொன்ன காரணங்களும், சமாதானங்களையும் கவனிப்பதே சுவாரஸ்யமான பொழுதுபோக்காக இருந்தது.

சில நாட்களில்........

ஒரு நாள் ஜெகன் காலையிலேயே வந்தார். "என்ன ரவி, பத்து நாட்களாக கண்ணில் படவேயில்லையே?''அப்போதுதான் எனக்கே ஞாபகம் வந்தது. நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவே நேரம் இல்லை என்று.

"கொஞ்சம் வேலை அதிகம் ஜெகன். பேப்பர் படிக்கக்கூட நேரம் இல்லை......'' சொல்லும்போதே...... பளிச்சென்று உண்மை தெரிந்தது: "அன்னை மீண்டும் பலித்துவிட்டார், ஜெகன்'' சந்தோஷமாகச் சொன்னேன். எனக்கு நாவல், வார இதழ் படிக்க முடியாமல், பாட்டு கேட்க முடியாமல், டிவி பார்க்க நேரமில்லாமல் செய்து, உணர்விலிருந்தே மறக்கடித்து விட்டார்.

அந்த இடத்தை வேலையால் நிரப்பி, வருமானத்தை அதிகப்படுத்தி,மனமாற்றத்திற்கும்-சுபிட்சத்திற்கும் உள்ள தொடர்பைக் கண்கூடாகக் காட்டிவிட்டார், ஜெகன்'' உற்சாகத்தில் கத்தியது எனக்கே தெரிந்தது.

"நானும் ஆச்சரியத்தில்தான் இருக்கிறேன், ரவி! நீ கிளர்ச்சியை விரும்பவில்லை என்றதும், அதற்கான சந்தர்ப்பம் அனைத்தையும் விலக்கி, உதவியதை என்னவென்று சொல்வது!''

"அன்னை ஒரு முறையும் தவறுவதே இல்லை என்பது எவ்வளவு பெரிய சத்தியம்!'' கண்கள் பனிக்கக் கூறினார்.

ஒன்று மட்டும் புரிந்தது: "அன்னை காத்திருக்கிறார். நம் வேலை, முழு நம்பிக்கையோடு கதவைத் தட்டுவதுதான். பலமாக தட்டும்போதுதான் தெரிகிறது, கதவு திறந்தே இருப்பது......' உள்ளே பொன்னொளி!

****

 

 


 

ஆத்ம சோதனை - தினந்தோறும்

(99% is not 100%)

(I) உடல் :

1. தேகம்

அனைத்து சுத்திகளையும் இரு வேளை செய்தாயா?

உடற்பயிற்சி செய்தாயா?

தூய்மையான, எளிமையான ஆடை அணிந்தாயா?

2.உணவு

சுகாதாரமான, சத்தான உணவுகளை உண்டாயா?

ருசிக்காக அல்லாமல், பசிக்காக, சரியான

நேரத்தில், சரியான அளவு உண்டாயா?

3. உறைவு

அனைத்துப் புழங்கும் இடங்களும் சுத்தமானதாக இருந்ததா?

அனைத்துப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தனவா? / வைத்தாயா (organised)?

. எந்தப் பொருளும் வீணாகாமல் முழு உபயோகம் ஆயிற்றா (maximum utilisation)?

4.உழைப்பு

இன்றைய கடமைகள் அனைத்தையும் விருப்பத்துடன் செய்தாயா?

இன்றைய வேலைகள் அனைத்தையும் இன்றே முடித்தாயா?

பதவிக்கான / வேலைக்கான திறமை, அறிவை அதிகப்படுத்த ஏதாவது செய்தாயா?

வேலை நேரத்தில் வதந்தி, அரசியல், சினிமா பேசினாயா?

(II)உணர்வு :

1.கோபம்

இன்று கோபம் வந்ததா / வெளிப்பட்டதா / அடக்கப்பட்டதா?

யாரின் எந்தச் செயல் அல்லது உன் எந்தக் குறை இந்தக் கோபத்திற்குக் காரணமானது?

2.பொறாமை

இன்று பொறாமை தோன்றியதா? யாரின் எந்த வளர்ச்சி, மகிழ்ச்சி அல்லது உன் இயலாமை இந்தப் பொறாமைக்குக் காரணமானது?

3. பயம்

இன்று ஏதாவது ஒரு பொருள் அல்லது நிகழ்வு பயம் ஏற்படுத்தியதா?

எந்தச் செயல் அல்லது எண்ணம் இதற்குக் காரணமானது அல்லது பாதுகாப்பற்ற உணர்வைக் கொடுத்தது?

4. ஆசை

இன்றுள்ள உன் தகுதி, திறமை, பதவி ஆகியவற்றிற்குச் சமூகம் தரும் சராசரி வரவுகளுக்கு மேல் இன்னும் அதிகம் தேவை என்ற ஆசை வந்ததா? இன்றைய செய்கைகளை, தேவைகளை,ஆசைகளைப் பிரித்தறிந்து, தேவைகளை மட்டும் செய்தாயா?

5. வெறுப்பு

இன்று யார் மீதும் எரிச்சல், வெறுப்பு வந்ததா? யாரைப் பற்றியெல்லாம் குறை கூறினாய்,சாபமிட்டாய்?

6.காமம்

இன்று கிளர்ச்சியூட்டும் எதையும் பார்த்தாயா,படித்தாயா, கேட்டாயா, பேசினாயா?

(III) அறிவு
 

1. பொய்

இன்று சொன்ன பொய்கள் எத்தனை? அதன்பின் இருந்த நோக்கம் என்ன?

2. கள்ளம்

இன்று என்ன கயமைத்தனம் செய்தாய்?

அல்லது செய்ய ஆசைப்பட்டுக் கட்டுப்படுத்தி கொண்டாய்?

3. சந்தேகம்

இன்று எதற்காகவாவது / யார் மேலாவது சந்தேகப்பட்டாயா? உன்னுள் இருக்கும் எந்த அவநம்பிக்கை இந்த சந்தேகத்திற்குக் காரணமானது?

4.அதிகாரம்

பலத்தைக் காட்ட, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, பயமேற்படுத்த என்னவெல்லாம் செய்தாய் / பேசினாய்?

5.அகந்தை

இன்று வரையறுக்கப்பட்ட கடமைகளைத் தவிர புகழுக்காக, பகட்டுக்காக எதையும் செய்தாயா?


 

(IV) பொது :

உண்ணும் முன்பும், உறங்கும் முன்பும், செயல்படும் முன்பும், பேசும் முன்பும் அன்னையை நினைத்தாயா?


 

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிரபஞ்சம் மனிதனில் நிலைத்துச் செறிவதால் ஆன்மா உண்டாயிற்று. மனிதன் பிரபஞ்சத்தின் தியானத்தைத் தொடர்வது யோகம்.

யோகம் என்றால் தியானம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அநாகரிகமாக அதிகப் பிரசங்கம் செய்பவனை நோக்கி, "அன்னையின் குரலை எழுப்பியதற்கு நன்றி'' என்று நாம் சொல்லவேண்டும்.

அநாகரீகம் அன்னையின் பலத்த குரல்.


 

.


 


 


 


 



book | by Dr. Radut