Skip to Content

11. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம்

                                            (சென்ற இதழின் தொடர்ச்சி....)         கர்மயோகி

907) நம் வாழ்வையும், பண்புகளையும் அன்னை நோக்கில் அளந்து பார்க்க வேண்டும். அன்னையை நோக்கிச் செல்ல அது உதவும். பதிலாக அன்னையை நாம் நம் வாழ்வின் கோணத்தில் அளந்து பார்க்கிறோம். அதன்மூலம் மனிதனுக்குரிய அதிகபட்ச வளர்ச்சிக்கு மேல் நாம் உயர முடியாது.

உயர்ந்த நோக்கம் உயரப் பயன்படும்.

வேகமாக மாறும் வாழ்வில் எளிய மனிதன் அன்றைய மகான்களைவிட உயர்ந்தவன்.

விஞ்ஞானம் புதியதாகக் கண்டுபிடிப்பதை நாம் டெக்னாலஜி என்கிறோம். சமூகம் தன் போக்கை மாற்றிக்கொள்வதை உலகம் மாறி விட்டது என்கிறோம். நீக்ரோக்களை எப்படி நடத்துவது என்பதில் அமெரிக்கச் சமூகம் மாறிவிட்டது. மனிதன் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டால் மனிதச் சுபாவம் மாறிவிட்டது என்கிறோம்.

அன்னை நோக்கில் நாம் வாழ்வைக் காணும்பொழுது வாழ்வும், பிரபஞ்சமும் மாறுகின்றன.

. ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பது உலக வழக்கு; அனுபவம்.

. எந்த நாடானாலும் சட்டம், நியாயம் ஏழைக்கும், பணக்காரனுக்கும் மாறுபடும்; தொழிலாளிக்கும், முதலாளிக்கும் மாறுபடும்; ஏழை நாட்டிற்கும், பணக்கார நாட்டிற்கும் நியாயம் வேறு.

. பணக்காரன் வீட்டுப் பெண் ஓடிப்போய் திரும்பிவந்தால் அது ஒரு பொருட்டன்று. எவரும் அவளைத் திருமணம் செய்துகொள்வார். ஏழைப் பெண் ஓடிப்போனால் அவளுக்குத் திருமணமாகாது.

. சினிமா நடிகையை மணக்க ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். அதே போலுள்ள வேறோர் அழகிக்குச் சட்டம் வேறு.

. அரசியல்வாதி லஞ்சம் வாங்கினால் உலகம் அதைப் பொருட்படுத்தாது.

அதே குற்றத்திற்குச் சாதாரண அதிகாரிக்குத் தண்டனை கிடைக்கும்.

. அணுகுண்டு யாரும் செய்யக்கூடாது என அமெரிக்கா கேட்கிறது. அதனிடம் 10,000 அணுகுண்டு உள்ளது. அதுவே இன்று உலகில் அரசியல் நியாயம். பணக்காரனுக்கும் பதவியில் உள்ளவனுக்கும் இன்றுள்ள உரிமையை, அன்னை தம்மை ஏற்பவருக்கும் பெற்றுத் தருகிறார். அதற்கு நாம் அவர் கோணத்தில் வாழ்வை அளந்து பார்க்க வேண்டும். அடாவடிக்காரனிடம் பிடி கிடைத்துவிட்டால் அவன் விடமாட்டான்.அவனுக்கு அது செல்லும். நியாயமானவன் அடாவடிக்காரனை மீறிச் செயல்பட முடியாது.பொய்யும், திருடும் நிறைந்த இனிமையான பழக்கமுள்ளவன் சாதுர்யமாக நல்ல ஸ்தாபனத்துள் நுழைந்துவிட்டான். அங்கு வேலை செய்வதில்லை;பொறுப்பேற்பதில்லை; ஏராளமாகத் திருடுகிறான். அவன் நடவடிக்கையால் ஸ்தாபனம் அழிந்துவிட்டது. அவனே தலைவரிடம் வந்து ஸ்தாபனத்தை மூடுவது தவிர வேறு வழியில்லை என்கிறான்.

அவன் 8 ஆண்டாக அழிச்சாட்டியம் செய்து அழித்த ஸ்தாபனத்திற்கு, தலைவர், பிரார்த்தனையால் 3 நாளில் உயிர் கொடுத்தார்.இந்த ஸ்தாபனத்திலிருந்து எவரையும் விலக்குவதில்லை என்ற பழக்கம் உண்டு.

மேலும் 5 ஆண்டுகள் அவன் அழிச்சாட்டியத்தைத் தொடர்ந்தான். ஸ்தாபனத்தை இவனிடமிருந்து காப்பாற்றாவிட்டால் மூட வேண்டிவரும் என்ற நிலை வந்தது.

தலைவர் பிரார்த்தனை செய்தார்.

இவனுடைய ஊரில் இவன் வீட்டு நிலை மாறியது.

இனி ஒரு கணம் தாமதிக்காமல் இவன் திரும்ப வேண்டிய கட்டம் வந்தது.

தானே போக வேண்டும் என முடிவு செய்தான்.

அவனே போய்விட்டான்.

அன்னை அரசனுக்குள்ள உரிமையை அன்பனுக்கு அளிக்கிறார்.

அரசனுக்கும் இல்லாத வசதிகளையும் அன்பனுக்கு அளிக்கிறார்.

அன்பன் அன்னையைத் தன் வாழ்வில் ஏற்க வேண்டும்.

தன் அபிப்பிராயப்படி அன்னையைச் செயல்பட அழைக்கக்கூடாது.

****

908) மகாபுருஷர்கள் அவ்வப்பொழுது உலகுக்கு அறிவித்ததை மனிதன் பெற்றுப் பலனடைய இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். ஆன்மாவில் அவர்கள் பெரியவர்கள் என்பதால், நாட்கள் அதிகமாகும். அவர்கள் அன்றாட வாழ்வில், அவர்கள் அக்காலத்து மனிதர்களாகவேயிருந்தனர். இன்று எளிய மனிதன் அவனுடைய அன்றாட வாழ்வில் மகாப் புருஷர்களைத் தாண்டியவனாக இருக்கிறான்.

காலத்தால் எளிய மனிதன் உயர்ந்த வாழ்வைப் பெறுகிறான்.

காலத்தால் உயர்ந்த வசதிகளைப் பெறும் எளிய மனிதன் மனவளர்ச்சியால் உயர்ந்த பண்புகளையும் பெறுகிறான்.

. இன்றைய மனிதன் அன்றைய மனிதனைவிட உயர்ந்த மனமுடையவன்; உயர்ந்த பண்புள்ளவன்.

. இவ்வுயர்வு டெக்னாலஜியில் தெரிவதைப் போல் பண்பில்தெரிவதில்லை.

. அன்று குழந்தைகளை அடித்து வளர்த்தனர்; பெண்கள் அடிமைகளாக இருந்தனர்; பெரிய மேதையும், பணக்காரன் தயவை நாடினான்,ஏழைகளைத் துச்சமாகக் கருதினான்.இன்று குழந்தைகளை அடிப்பது அநாகரீகம் என எவரும் அடிப்பதில்லை.

பெண்களை அடிமையாக நடத்த எவரும் வெட்கப்படுவர்.

பணக்காரனுக்குச் சமூகத்தில் அன்றைவிட இன்று மரியாதை குறைவு.

ஏழைகளை மரியாதையுடன் நடத்துவது அவசியம்.

. அன்று மனிதன் கொடுமை செய்யப் பிரியப்பட்டான்; பெருமைப்பட்டான்.

பெரிய மனிதரும், பெரிய ஆத்மாக்களும் கொடுமை செய்யாவிட்டாலும்,அவர்களிடம் உள்ளவரை கடுமையாக நடத்தினர். அவர்கட்குக் கடுமை இல்லாவிட்டாலும், அன்றைய நிலையில் கடுமை அவசியம். கடுமை இல்லாமல் கட்டுப்பாடிருக்காது.

அன்று அவசியத்தால் கடுமையிருந்த இடங்களிலும் இன்று இனிமை,

பண்பு நிறைந்துள்ளன. இது காலத்தால் நடப்பது.

. ஆன்மீகம் என்றால் சாம்பல் சாப்பிடுவது, ஆணி மேல் படுப்பது,சாட்டையால் தன்னையே அடித்துக்கொள்வது போன்ற கடுமையான செயல்களாகும். இன்றைய ஆன்மீகம் sunlit path சூர்யோதய சுபிட்சமாகும்.

. காலம் சமூகத்தை மென்மையாக்கியது.

. காலத்தால் வளர்ந்த மனம் பதம், பக்குவம், பண்பு, இதம், இங்கிதம் பெற்றுள்ளது.

. ஒற்றைக் கால் தவம், தலைகீழே தொங்கிய நிஷ்டையெல்லாம் மாறி,சுகமான ஆசனத்தில் சௌகரியமாக அமர்ந்து நிஷ்டை செய்வது இக்காலம்.

. பொதுவாகக் கடுமை அழிந்துவிட்டது. அழிந்தது திருவுருமாறி இனிமையாக, சுகம் நிறைந்த சுமுகமாயிற்று.

. மனித மனம் உயர்ந்த தெய்வ நிலையை நாடுகிறது.

. பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, ஜெயில், விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் கடுமை மறந்துவிட்டது; வலிபோய் விட்டது.

தொடரும்.....

****
 

ஜீவிய மணி

சென்ற வழியே திரும்ப முடியாதது சிருஷ்டி.


 


 


 


 


 



book | by Dr. Radut