Skip to Content

13.ஆன்மாவின் விடுதலை

"யோக வாழ்வு"

ஆன்மாவின் விடுதலை*

கர்மயோகி

{I}

. சுத்தி முக்தி தரும்.

மனம் தூய்மைப்பட வேண்டும். அத்துடன் ஆசைக்குட்பட்ட ஆத்மாவும் தூய்மை பெற்றால் முக்தி கிட்டும்.

. ஆசையழிந்தால் ஆத்மாவின் பிராணன் (உயிர்) விடுதலை பெறும்.

தவறான உணர்வு தன்னையழித்துக்கொண்டால் இதயம் விடுதலை பெறும்.

எண்ணம் சிறுமையை இழந்தால் அறிவு விடுதலை பெறும்.

ஜடமான அறிவு அழிந்தால் ஞானம் உதயமாகும்.

பிராணன், இதயம், அறிவு ஆகியவை கரணங்கள்.

கரணங்கள் தூய்மைப்பட்டால், கரணங்கள் விடுதலை பெறும்.

இது ஆத்ம விடுதலையாகாது.

. நிர்வாணம் என்பது அமைதியான பிரம்மம்.

நம் இலட்சியத்திற்குத் தேவையான முழு விடுதலை அதனால் கிடைக்காது.

பிரம்மத்தினின்று குறைகளை அகற்றும் விடுதலையது (negative freedom).

பாடம் படிக்க வேண்டிய பையன் நாள் முழுவதும் T.V/ பார்ப்பது படிக்க உதவாது. T.V.. பார்ப்பதை நிறுத்துவது நல்லது. இனி தவறு தொடராது.

T.V. பார்ப்பதை நிறுத்தியதால் பாடம் வாராது. பாடம் வர படிக்க வேண்டும். வாழ்வின் சிறுமைகளில் உழலும் ஆத்மா அவற்றினின்று விடுதலை பெறுவது பையன் T.V., பார்ப்பதை நிறுத்துவது போன்று. பையன் பள்ளிக்கூடம் போனது படித்துப் பட்டம் பெற. ஆத்மா ஜன்மம் எடுத்தது வாழ்வில் ஆத்மா மலர. வாழ்வின் இருளினின்று விலகியது முதற் கட்டம்.

அது ஆத்ம இலட்சியத்தைப் பூர்த்தி செய்யாது. அது நடைபெற ஆத்மா வாழ்வை ஏற்று, அதை உயர்ந்த கோட்பாடுகளால் நடத்தினால் வாழ்வில் ஆத்மா மலரும். அப்படி மலர்வது சிருஷ்டியில் ஆத்மா தேடும் ஆனந்தம் பெற உதவும். அதுவே ஆத்ம இலட்சியம்.

. நிர்வாணம் மோட்சம் பெற உதவும்; அது நம் குறிக்கோள் இல்லை.

நமது குறிக்கோள் வாழ்வில் ஆத்மா மலர்வது.

ஒரு வக்கீல் கேஸ் நடத்தித் தோற்கிறார். என்றாலும் அவருக்குரிய பீஸைப் பெறுகிறார்.

அது தொழில்

பணம் பெறும் வெற்றி.

கேஸை ஜெயித்து, தமக்குரிய பணம் பெறுவது அடுத்த நிலை.

கேஸை எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்.

ஒரு சட்ட பாயிண்டு மூலம் ஜெயிப்பது சட்டம் ஜெயிப்பது.

கேஸில் நியாயம் உண்டு.

நியாயம் ஜெயிப்பது அடுத்தது.

தர்மம் நியாயத்தைவிட உயர்ந்தது.

கேஸ் ஜெயிப்பதன்மூலம் தர்மத்தை நிலைநாட்டுவது கேஸில் ஆத்மா மலர்வதாகும்.

{II}

. ஆசை பிராணனின் உயிர் நிலை.

ஆசையின் கடமையது.

ஆசை பறக்கும், துடிக்கும், பதைபதைக்கும்.

அதற்கு சூட்சும முடிச்சுண்டு.

அது ஆத்மாவில் உள்ளது.

அதை, புத்தி ஆதரிக்கும்.

அதற்குப் பிரதிஷ்டை எனப் பெயர்.

அறிவு ஆசைக்குத் துணைபோவதால் ஆசைக்கு வேகம் எழுகிறது.

கீழிருந்து பார்த்தால் இப்படித் தெரிவதை மேலிருந்து பார்க்கலாம்.

மேலிருந்து பார்த்தால் ஆசையை ஆத்மா ஆதரிக்கிறது.

பிரம்மம் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்து, அதன் பிரதிநிதியாக

ஜீவாத்மாவை ஏற்படுத்தியுள்ளது.

நாம் ஜீவாத்மாவிலிருந்து செயல்படும் பொழுது அது பிரபஞ்சமாகவும், பிரம்மமாகவும் தெரியும்.

பிரம்மம் ஆத்மாவாகச் செயல்படும் வகை பிராணனில் ஆசை துடித்துப் பறப்பதாகும்.

{III}

. ஜீவாத்மா அகந்தையை நாடினால், ஆசை உயிர் பெற்று, சூடு பிடித்து, வலி எழுகிறது.

ஆத்மாவுக்கு இரு வழிகள் உள.

1. ஆத்மா தன்னையிழந்து, சலனமற்று, மனத்தில் உறையலாம்; அல்லது

2. அது சத்தியஜீவியத்தையடைந்து, இறைவனின் செயலுக்குக் கருவியாகி, பிரம்மம் பெறும் ஆனந்தத்தைத் தானும் பெறலாம்.

. ஆசையழியும் வரை அகந்தையைக் களைவது சிரமம்.அறிவு தன்னை இறைவனிலிருந்து பிரிந்த நிலையை ஏற்பது தவறு.

பிரம்மத்துடனும், பிரபஞ்சத்துடனும் இணைந்த நிலையை - ஒருமையை ஏற்பதே அறிவுக்குப் பொருத்தமானது.

அகந்தை அழிவதே அவ்வழி.

{IV}

. நாம் பிரம்மத்தின் பகுதி என்பதே நம் ஜீவனுக்குரிய சத்தியம். அறிவு அதை நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியாது.

ஆத்மாவில் நிலைத்தால்தான் - லயித்தால்தான் - அது விளங்கும்.

சமாதியை அடைவது கிளைப்பாதை.

நமக்கு அது தேவையில்லை.

நம் முழு ஜீவனையும், சுபாவத்தையும் இறைவனின் சுபாவமாக மாற்றுவது

நம் இலட்சியம்.

அகந்தையினின்று விடுபட்டு அதைச் சாதிப்பது யோகம்.

{V}

. பிரம்மம் வேறு, ஜீவாத்மா வேறு என்பதே எல்லாத் தவறுகட்கும் காரணம்.

நாமும் இறைவனும் ஒன்றே என்பது இரகஸ்யம்.

ஆத்மாவை அடைந்த நிலையில் அது விரிந்து, பிரபஞ்சமாகி, பிரம்மத்தை வெளிப்படுத்தும். அகந்தையுள் உள்ள வரை அது இயலாது.

{VI}

. அகந்தை அளவுக்குட்பட்டது.

அது பல பக்கங்களிலும் தடைக்குட்பட்டது.

அதனால் அது தவறான அறிவுக்குத் தகுதியளிக்கிறது.

தனித்த நிலையை விட்டு தனக்குரிய அகன்ற ஐக்கியத்தை ஆத்மா நாடினால் பூமாதேவியுடன் அது இணையும்.

அப்போது மனிதனுடைய செயல், இறைவனுடைய செயலாகும்.

அது சரி.

அதன் வழி ஆத்மா அனந்தத்துள் நுழையும்.

{VII}

. உறுதி என்பது ஆசையின் சுபாவம்.

அதிலிருந்து விடுதலை பெறவேண்டும்.

அகந்தையிலிருந்து விடுதலை பெறவேண்டும்.

உறுதியழிவதால் இறைவனுடன் ஒன்று சேரவேண்டும்.

உறுதியுடன் ஆசையும், அகந்தையும் அழியும்.

அதுவே முக்தி.

. சுத்தி தருவது முக்தி.

. அகந்தை மனிதனை பிரம்மத்தினின்று பிரித்துவிட்டது.

. அதனால் பிரபஞ்சத்தினின்றும் நம்மைப் பிரித்துவிட்டது.

. அகந்தைக்கு ஆசை ஆதரவு.

. ஆசைக்கு ஆத்மாவின் அஸ்திவாரமாகப் புத்தி செயல்படுகிறது.

. ஆசையும் அகந்தையும் அழிந்து, பிரபஞ்சத்துடன் இணைந்து, பிரம்மத்துடன் ஒன்றி, பிரம்மம் வாழ்வில் ஆத்மாவாக மலர்வது இறைவன் திருவுள்ளம் இக வாழ்வில் இன்பமாகப் பூர்த்தியாவதாகும்.

****

* Synthesis of Yogaவில் நான்காம் பகுதி பூரணயோகம். (அதில் இத்தலைப்பு 8ஆம் அத்தியாயம்).

 

****


 



book | by Dr. Radut