Skip to Content

03.ஆன்மாவின் இயற்கை

ஆன்மாவின் இயற்கை

N அசோகன்

அண்மையில் வெளிவந்துள்ள "இரகசியம்'' என்ற புத்தகம் வாழ்க்கையில் சாதிப்பது எப்படி என்ற இரகசியத்தைத் தெரிவிக்கிறது. அப்புத்தகத்தில் நமக்குள் இருக்கும் தெய்வீக அம்சம் எல்லாச் சிறப்புகளையும் உள்ளடக்கியது என்றும் கூறுகிறது. அடுத்ததாக இந்த தெய்வீக அம்சத்தின் சிறப்பை நாம் எந்த அளவிற்குப் போற்றுகிறோமோ, அந்த அளவிற்கு நம் வெளி வாழ்க்கையும் சிறப்படையும் என்றும் சொல்கிறது.

தெய்வீக அம்சம் என்று அப்புத்தகம் குறிப்பிடுவது பகவானும், அன்னையும் சைத்தியப்புருஷன் என்று வர்ணிக்கும் நம்முடைய வளர்ச்சியடையும் ஆன்மாவே ஆகும். நம்முடைய சைத்தியப்புருஷன் ஆனந்தமும், இனிமையும், அன்பும் நிரம்பியது. ஆகவே இத்தகைய தன்மையுடைய சைத்தியப்புருஷனை நாம் பாராட்டிக்கொள்ளும் அளவில் நம்முடைய வாழ்க்கையும் அதே அளவிற்கு ஆனந்தமும், இனிமையும் நிரம்பியதாக மாறும். இந்த ஆன்மீக ஆனந்தமும், இனிமையும் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படும்பொழுது ஐஸ்வரியமாகவும், பூரண ஆரோக்கியமாகவும், சுமுகமான உறவுகளாகவும், சாதனைகளாகவும் மாறுகின்றன.

உள்ளிருக்கும் ஆன்மாவைப் பாராட்டிக்கொள்ள விரும்புகின்றவர்கள் அது வெளிவருவதற்கு உதவும் வகையில் தன்னுடைய வாழ்க்கைப் பாணியை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும். ஆகவே நம்முடைய வாழ்க்கையை உண்மை, நேர்மை, சுமுகம், அன்பு, தைரியம், சரணாகதி, நன்றியறிதல் போன்ற நற்பண்புகள் நிரம்பியதாக அமைத்துக்கொண்டால் நம் ஆன்மா அந்த அளவிற்கு வேகமாக நம் வாழ்க்கையில் வெளிப்பட வாய்ப்புள்ளது.

நம்முடைய உண்மையான ஜீவன் இந்த ஆன்மாவே அன்றி அகந்தை இல்லை. ஆகவே நம்முடைய அகந்தையை வெளியேற்றிவிட்டு, காயான அந்த இடத்தில் நம்முடைய ஆன்மாவை நிலைநாட்டினால், நம் ஆன்மா அதற்குரிய வேகத்தில் செயல்பட்டு, சாதாரணமான வாழ்க்கையில் ஒரு வருடத்தில் முடிகின்ற காரியத்தை ஒரே நாளில் முடித்துக் கொடுக்கும்.ஆன்மா வெளிவருகின்றபட்சத்தில் நம்மைக் காலத்திலிருந்து காலத்தைக் கடந்த நிலைக்கும், முடிவானதிலிருந்து முடிவற்ற நிலைக்கும்,பகுதியிலிருந்து முழுமைக்கும், அடுத்தடுத்த நிகழ்வுகளிலிருந்து ஒரே சமய நிகழ்வுகளுக்கும், வெளியிலிருந்து உள்நிலைக்கும், குறுகிய கண்ணோட்டத்திலிருந்து பரந்த கண்ணோட்டத்திற்கும் நம்மை மாற்றுகிறது. இப்படி நம்முடைய நிலைமை மாறும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் "முடியாது' என்று விட்ட காரியங்களெல்லாம் முடியும் என்ற நிலைக்கு மாறுகின்றன.

நம் ஆன்மாவினுடைய ஆனந்தம் மற்றும் அன்பு ஆகியவை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் நம்முடைய கடந்த காலக் கர்மாவையும் அழித்து, கர்ம பலனாக நாம் அனுபவிக்கின்ற உடல் நலக்குறைவு, நீடித்த வறுமை மற்றும் தொடர் ஏமாற்றங்கள் ஆகியவற்றிலிருந்தும் நம்மை விடுவிக்கின்றன. அடுத்ததாகத் தூரத்தில் இருக்கின்ற வாய்ப்புகளை நம் அருகில் கொண்டுவந்து உடனடியாகக் கைமேல் பலனாக மாற்றித் தருகின்றன. அளவு என்பது நம்முடைய ஆன்மாவிற்கு ஒரு பொருட்டில்லை. நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நமக்கு வருமானத்தைக் கொடுப்பது ஆன்மாவிற்கு எவ்வளவு சுலபமோ, அவ்வளவு சுலபமாக லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும்கூட நம் ஆன்மாவால் வருமானத்தை ஈட்டித்தர முடியும். அம்மாதிரியே ஒருவருக்கு ஐஸ்வரியத்தை வழங்குவது ஆன்மாவுக்கு எவ்வளவு சுலபமோ, அவ்வளவு சுலபமாக ஒரு பெரிய குழுவிற்கும் அதே ஐஸ்வரியத்தை நம் ஆன்மாவால் வழங்க முடியும்.

ஆன்மீக நிலையில் வாழ்கின்ற ஒருவருக்கு அகம்தான் உண்மையா- னது. புறம் என்பது அகத்தின் பிரதிபலிப்பாகத்தான் தெரியும். அதாவது அவருக்கு அகம் காரணமாகவும், புறம் பலனாகவும் தெரியும். ஆனால் சாதாரண மனநிலையில் இருப்பவருக்கு புறம்தான் காரணமாகவும், அகம் வெறும்பலனாகவும்தான் தெரியும். உதாரணமாக, ஒரு சாதாரண மனிதனைக் கேட்டால், தன் வருமானத்தைப் பார்த்த பின்புதான் தனக்கு சந்தோஷம் வரும் என்பான். அதாவது அவனுக்குப் பணம் காரணம்;சந்தோஷம் பலன். ஆனால், ஆன்மீக மனநிலையில் இருப்பவர்க்கு அவருக்கு உள்ளே இருக்கின்ற மகிழ்ச்சிதான் வெளியிலிருந்து பணத்தைக் கொண்டு வருகிறது என்பது தான் உண்மை. அதாவது அவருக்கு மகிழ்ச்சிதான் காரணம் என்றும், பணம் வெறும் பலன் என்றும் தெரிகிறது.

ஆன்மீக மனநிலை என்பது நம்முடைய அகந்தைமயமான மனநிலையை விட மிகவும் பரந்ததாகும். ஆகவே அப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்க்கு பொறுப்புணர்வும் அந்த அளவுக்கு அதிகமாகவே இருக்கும். ஆகவே ஆன்மீக மனநிலையில் இருப்பவர் தம்மைச் சுற்றி இருப்பவர் எல்லோருடைய வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தாமும் பொறுப்பாளி என்றுணர்கிறார். ஏனென்றால் அவர்களெல்லாம் தம்மைச் சேர்ந்தவர்கள் என்று அவர் ஏற்றுக்கொள்கிறார். அப்பட்சத்தில் அவர்களுடைய குறைபாடுகளையெல்லாம் தம்முடைய குறைபாடுகளாக ஏற்கின்றார். ஆகவே அவர்களுடைய குறைபாடுகளுடைய பிரதிபலிப்பாகத் தமக்குள் என்ன இருக்கிறதோ, அதைக் கண்டறிந்து மாற்றிக்கொள்ள முன்வருவார். இதை அவர் அமைதியாகச் செய்வார். அடுத்தவரிடம் தென்படுகின்ற குறைகளுக்காக அவர்களைக் குறை சொல்லவும்மாட்டார். இத்தகைய பொறுப்புணர்வு அவருடைய உயர்ந்த மனநிலையின் ஓர் அம்சமாகும். இன்னோர் அம்சம் என்னவென்றால், அவருடைய மனநிலை பரந்து, விரிந்து, உயர்ந்து இருப்பதால் அவருக்குக் கிடைக்கின்ற நன்மைகள் எல்லாம் தாமாகவே அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பரவும். அவர் செல்வராகவும், உடல்நலம் மிக்கவராகவும், சந்தோஷமானவராகவும், முன்னேறிக்கொண்டிருப்பவராகவும் இருப்பதால், அவரோடு நல்லெண்ணத்துடன் தொடர்பு கொள்பவர்கள் எல்லோருக்கும் இச்செல்வம், உடல்நலம், சந்தோஷம், முன்னேற்றம், ஆகியவை எல்லாமே கிடைக்கும். அவருடைய ஆன்மீகச் சூழல் அவரைச் சுற்றி ஒரு பாசிடிவ்வான சூழலை ஏற்படுத்தும். அந்தச் சூழலுக்குள் நுழைபவர் எவராக இருந்தாலும், உடனே அவர்களுடைய எனர்ஜி லெவல் அதிகரிக்கும். நம்முடைய ஆன்மா நம்முடைய இடைவிடாத ஆர்வம் மற்றும் சரணாகதியின் பலனாகத்தான் வெளிவருகிறது. அவரவருடைய ஆன்மாவைப் பாராட்டிக்கொள்வதோ அல்லது உதாசீனம் செய்வதோ அவரவருடைய இஷ்டத்தைப் பொருத்தது. நம்முடைய ஆன்மா அதனைப் பாராட்டிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. ஆனால் நம்முடைய அகந்தையோ, நம்முடைய ஆசைகளோ, அவற்றை நாம் உதாசீனம் செய்ய அனுமதிப்பதில்லை. தாம் இருப்பதை நமக்கு அடிக்கடி நினைவுப்படுத்தி, தம்மைத் திருப்திபடுத்தச் சொல்லி நம்மை வற்புறுத்தும். ஆனால் நம்முடைய ஆன்மா அதனைப் பாராட்டிக்கொள்ளவும் அல்லது அதனை மறந்து நாம் விரும்புகின்ற சாதாரண வாழ்க்கையை வாழவும் பூரணச் சுதந்திரத்தை நமக்கு அளிக்கிறது. அப்படி ஒருவர் தம்முடைய ஆன்மாவைப் பாராட்டி, அதை வெளிக் கொணர்ந்துவிட்டார் என்றால், அதன் பிறகு அதன் வழி நடப்பது நல்லது. மாறாக வெளி வந்த ஆன்மாவை மீண்டும் உதாசீனம் செய்து பழையபடியே அவர் அகந்தை நிலைக்கே போனார் என்றால், அது ஒரு பெரிய இழப்பாக அமையும்.

சிலபேர் யோகம் செய்யாமலேயே தற்செயலாகத் தங்களுடைய ஆன்மாவை உணரும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுப் பிழைக்கமாட்டார்கள் என்று டாக்டர்களால் கைவிடப்பட்டு உயிர் பிரிகின்ற கடைசிக் கட்டத்திற்கு வந்தவர்களும் இதில் அடங்குவர். உடம்பைவிட்டு வெளியே வந்த இவர்கள் தங்கள் ஆன்மாவைச் சந்திப்பதன் பலனாக மீண்டும் உடம்புக்குள் போக முடிகின்றது. அதன் விளைவாகத் தொடர்ந்து உயிர் வாழவும் முடிகின்றது. சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவித்த பிறகும்கூட இப்படிப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கின்றார்கள். ஆகவே இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது ஆன்மாவிற்கு மரணத்தை முறியடிக்கும் சக்தியும் இருப்பதாகத் தெரிகிறது. உடம்பை விட்டு வெளியே வந்த அனைவரும் ஒரு நீண்ட, இருண்ட குகையின் வழியே செல்வதாகவும்,

அதன் பின்னர் ஓர் ஒளிமயமான பந்தைப் பார்ப்பதாகவும் சொல்கிறார்கள்.அந்தப் பந்தின் வெளிச்சம் பிரகாசமாக இருந்தாலும், கண் கூசும்படியாக இருப்பதில்லை. அந்த ஒளிப்பந்து வார்த்தைகளே இல்லாமல் இவர்களோடு உரையாடல் நிகழ்த்துகிறது. இவர்கள் யார்? எப்படி உடம்பைவிட்டு வெளியே வந்தார்கள்? பூமியில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்துகொண்ட பின்னர் அந்த ஒளிப்பந்து மீண்டும் அவர்களை உடம்பிற்குள் நுழைந்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடரச் சொல்கிறது. அவர்கள் மீண்டும் உடம்பிற்குள் புகுவதற்கான எனர்ஜியை அந்த ஒளிப்பந்தே அவர்களுக்கு வழங்குகிறது. அந்த ஒளிப்பந்தின் அருகிருக்கும்பொழுது,அதனிடமிருந்து நிறைய அன்பும், ஆதரவும், மகிழ்ச்சியும் கிடைத்ததாக இவர்கள் சொல்கிறார்கள். உடம்பிற்குள் மீண்டும் சென்றால், இந்த அன்பு, ஆதரவு, மகிழ்ச்சி, எல்லாவற்றையும் இழந்துவிடுவோம்என்று நினைப்பதால், பலர் உடலுக்குள் மீண்டும் செல்ல தயக்கம் காட்டியதாகவும் தெரிவிக்கிறார்கள். மேலும் ஒரு சில நொடிகளில் அந்த ஒளிப்பந்து இவர்களுடைய முழு வாழ்க்கையையும், எந்த விவரத்தையும் விடாமல் திரைப்படம்போலப் போட்டுக் காட்டுகிறது. இவர்கள் விவரிக்கின்ற அனுபவங்களை படிப்பதற்கே நமக்குப் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களாகின்றன. ஆனால் இப்படி மீண்டும் திரும்பி உடலுக்குள் வந்த சிலர், தாங்கள் உடம்பைவிட்டு வெளியேறிய பொழுது சுவர்க்கடிகாரம் என்ன நேரத்தைக் காட்டிக்கொண்டிருந்ததோ அதே நேரத்தைதான் இப்பொழுதும் காட்டிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கும்பொழுது, நம்முடைய ஆன்மா காலம் கடந்த நிலையில் இருப்பதாக நாம் அறிந்துகொள்ளலாம். இப்படி ஆன்மாவைச் சந்தித்த அனுபவம் கிடைத்தபின்னர், பல பேர் அடுத்தவர்கள் சொல்லாமலேயே அவர்களுடைய எண்ணங்களை அறிந்துகொள்ளும் திறனும் பெற்றுக்கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும் இந்த அனுபவத்திற்குப்பின்னர் உயிர் வாழ்வதன் அருமையை உணர்ந்து கொண்டதாகவும், தம்முடைய மீதி வாழ்நாட்களை ஒரு பொறுப்புணர்வு மற்றும் இலட்சியத்துடன் கழிப்பதாகவும் சொல்கிறார்கள்.

இப்படித் தற்செயலாக ஆன்மாவைச் சந்தித்தவர்களுக்கே இத்தகைய நல்ல பலன்கள் கிடைக்கும்பொழுது, ஆன்மாவைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே யோகப் பயிற்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கு இன்னும் எவ்வளவு பெரிய பலன்கள் கிடைக்கக்கூடும்என்பதை நாம் கருத வேண்டும். அன்னை தம்முடைய அஜெண்டாவில், ஒரு வருடத்திற்கு இடைவிடாமல் நம்முடைய ஆன்மாவை நினைத்துக்கொண்டிருந்தால், அந்த ஒரு வருடக் கடைசியில் நம் ஆன்மாவைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார். பாரீசில் அவர் வசித்துக் கொண்டிருக்கும்பொழுது மற்ற ஐரோப்பியர்கள் போலவே அவரும் இறைவனை வெளியில் தேடிக்கொண்டிருந்தார். அவரைப் போலவே இறையார்வம் கொண்ட இன்னொருவர் அவரைச் சந்தித்து இறைவனை வெளியில் தேடுவதற்குப் பதிலாக உள்ளே தேடவேண்டும் என்றார். இது அவருக்கு ஒரு விசேஷமான தகவலாகப்பட்டது. அந்நிமிடத்திருந்து அவர் ஒரு வருடத்திற்கு ஓர் இடையறா முயற்சியை எடுத்து, அவ்வருடத்தின் இறுதியில் தம் ஆன்மாவைச் சந்தித்ததாகச் சொல்கிறார். அவர் பிறவியிலேயே தெய்வீக அம்சம் கொண்டவர். ஆகையால் இரவு, பகல் என்று பார்க்காமல், தூக்கத்திலும்கூட இடைவிடாமல் அவரால் இறைச் சிந்தனையோடு இருக்க முடிந்துள்ளது. ஆனால் நம் போன்ற மானிடர்களால் இப்படி, தூக்கத்திலும்கூட இறைச் சிந்தனையை இழக்காமல் ஓர் இடையறா முயற்சி எடுக்க முடியுமாஎன்பது சந்தேகத்திற்குரியது. "அன்னை அழைப்பு' என்று 12 மணி நேரத் தியானத்தை ஒரு நாள், இரு நாள், மூன்று நாள் மற்றும் ஐந்து நாட்கள்என்று தொடர்ச்சியாகச் செய்தவர்கள் உள்ளார்கள்.

அப்படிச் செய்தவர்கள் பல பேர் நிறைய ஆன்மீக அனுபவங்கள் கிடைத்ததாகச் சொல்லியிருக்கின்றனர். அந்தப் பல அனுபவங்களில் ஆன்மாவைச் சந்தித்ததும் ஓர் அனுபவமாக இருக்கலாம். அது உண்மையாக இருந்தால், அந்தச் சந்திப்பு அந்த "அழைப்பு'க் காலத்தில் மட்டும் நீடித்ததா? அல்லது அதன் பிறகும் தொடர்ந்ததா? என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட "அழைப்பில்' ஈடுபட்டவர்கள் தம்முடைய குருநாதரைத் தவிர வேறு எவரிடமும் இத்தகவலைப் பகிர்ந்துகொள்வதில்லை.

ஆன்மீக ஆர்வம் உள்ள சாதாரண மனிதருக்கு என்ன சாத்தியம் என்றால், ஓரளவு நீடித்த ஓர் ஆன்மீக ஆர்வத்தையும், சமர்ப்பணத்தையும் வளர்த்துக்கொள்ளலாம். அன்னை விரும்புகின்ற ஒரு வருட இடைவிடாத முயற்சிக்கு இது பல படிகள் கீழே இருந்தாலும், ஒரு பத்து வருடக் காலக்கட்டத்திலாவது ஆன்மாவை நெருங்குவதற்கு இம்முயற்சி உதவும்.

இந்த ஆன்மாவிற்கு ஆதரவான முயற்சி எடுக்கும்பொழுது, அதே சமயத்தில் ஆன்மாவிற்கு எதிராக செயல்படக்கூடிய நெகடிவ்வான குணவிசேஷங்களைக் களைந்து எடுக்கும் வேலையையும் செய்ய வேண்டும். இந்த நெகடிவ்வான குணவிசேஷங்களின் பட்டியல் பொய் பேசுதல், பொறாமைப்படுதல், பேராசை, கோபம், சோம்பேறித்தனம், காமம் போன்ற பலவிதமான குணவிசேஷங்கள் அடங்கும். இந்தக் குணவிசேஷங்கள் விரும்பத்தகாதவை என்று தெரிந்தாலும், இவற்றிற்கு அடிமையானவர்கள் இவற்றை மிகவும் ரசிப்பதால், இவற்றை இவர்களே பொக்கிஷம்போலப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இப்படி நம்முடைய தாழ்ந்த பர்சனாலிட்டியுடன் ஐக்கியமாகிவிடுவதால், அந்த அளவிற்கு நம்முடைய தாழ்ந்த பர்சனாலிட்டியும் வலுவடைந்து ஆன்மாவை நெருங்கும் வழியில் ஆன்மாவிற்கான கதவைத் திறக்கவிடாமல் பெரிய தடையாகச் செயல்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் நம்முடைய தாழ்ந்த சுபாவத்திலிருந்து விடுபடுவதற்குரிய பெரிய முயற்சி தேவைப்படுகிறது. இப்படி ஒருவர் தம்முடைய தாழ்ந்த மனநிலையிலிருந்து விடுபட்டுவிட்டார் என்றால், அதன் பின்னர் அந்தத் தாழ்ந்த சுபாவம் வலுவிழந்துவிடுகிறது. அதே சமயத்தில், அவருடைய இறையார்வத்தில் ஓர் உண்மையிருந்தால், அந்த உண்மையில் இருந்து கிடைக்கும் பலத்தை வைத்துக்கொண்டு சுலபமாக அவருடைய தாழ்ந்த சுபாவத்தை அவர் தம்முடைய பர்சனாலிட்டியிலிருந்து வெளியேற்றலாம். ஆனால், தாழ்ந்த சுபாவத்தின்மேல் நமக்கு இருக்கும் மோகத்தை விடுவதுதான் நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. எருமை சேற்றில் புரள்வதை ரசிப்பதுபோல நாம் நம்முடைய தாழ்ந்த சுபாவத்தின் செயல்பாடுகளை ரசிக்கின்றோம். எருமையின் சொந்தக்காரருக்கு எருமை சேற்றில் புரள்வது அருவருப்பாகத் தெரிகிறது. ஆனால் எருமைக்கு அப்படித் தெரியவில்லை. அதற்குச் சேறும், சகதியும் தெய்வீகமாக இருக்கிறது. சேற்றில் புரள்வது சரியில்லை என்று எருமைக்கு உணர்த்தி, அதைச் சேற்றில் இருந்து வெளியேற்றி, நல்ல தண்ணீர் உள்ள இடமாகக் கொண்டுசெல்வது எருமையின் சொந்தக்காரருக்கு ஒரு கடினமான வேலையாகும். அறிவுறுத்தாமல் பலவந்தமாக எருமையின் கழுத்திலுள்ள கயிற்றைப் பிடித்து இழுத்து, அவ்வகையில் சகதியை விட்டு வெளியேற்றி, நல்ல தண்ணீர் உள்ள இடத்திற்கு எருமையின் உரிமையாளர் அழைத்துப் போனால்தான் உண்டு. அப்படியே நல்ல தண்ணீர் உள்ள இடத்திற்குப் போனாலும், எருமை அதில் இறங்குமாஎன்பது சந்தேகம் தான். கடைசி நேரத்தில் திமிறிக் கொண்டு உரிமையாளர் பிடியிலிருந்து விடுபட்டு, பழைய சகதிக்கே அது திரும்பி வரலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம். நம்முடைய உயர்ந்த சுபாவம் எருமையின் உரிமையாளருக்குச் சமம். நாம்தான் எருமை. நம் தாழ்ந்த சுபாவம்தான் எருமை புரளும் சகதி. எருமை சகதியை நாடுவதைப் போல் நாம் நம் தாழ்ந்த சுபாவத்தில் திளைக்கிறோம். சேறு தன்னை அழுக்காக்குகிறது என்பது எருமைக்குப் புரிவதில்லை என்பதைப்போல, தாழ்ந்த சுபாவத்தைவிட வேண்டும் என்பது நமக்கு உரைப்பதில்லை. எருமைக்கும், சகதிக்கும் என்ன ஐக்கியம் இருக்கிறது? அதே ஐக்கியம் நமக்கும், நம் தாழ்ந்த சுபாவத்திற்கும் இருக்கிறது. எருமையைச் சேற்றிலிருந்து பலவந்தமாக இழுக்கின்ற உரிமையாவது எருமையின் சொந்தக்காரருக்கு இருக்கிறது. ஆனால், நம் தாழ்ந்த சுபாவத்தில் இருந்து நம்மைப் பலவந்தமாக விடுவிக்கும் உரிமை நம்முடைய உயர்ந்த சுபாவத்திற்குக் கிடையாது. அது எட்ட நின்று நாமாக நம் தாழ்ந்த சுபாவத்திலிருந்து விடுபட்டு, அதனை நோக்கி நாடி வரும்வரை காத்திருக்கும் உரிமைதான் இருக்கிறது. மற்றபடி வேறு எந்த உரிமையும் அதற்கில்லை.

நம்முடைய பர்சனாலிட்டியில் மிகஉயர்ந்த பாகமாக விளங்குவது நம்முடைய ஆன்மாதான். ஆனால், அந்த உயர்வைக் காரணமாக வைத்து நம் பர்சனாலிட்டியின் மற்ற அம்சங்களின் மேல் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்தாமல் அது அடங்கியிருப்பது இயற்கையில் நமக்கு விளங்காத பெரிய புதிராக இன்னமும் இருக்கிறது. ஆனால், நம்முடைய தாழ்ந்த சுபாவமோ தன் அதிகாரத்தை மிகவும் வலியுறுத்துகிறது. நம் தாழ்ந்த சுபாவத்திற்கு நாம் அடிமைப்பட்டிருப்பதால் நமக்கு ஓர் உயர்ந்த அம்சம் இருக்கிறது என்பதையே நாம் மறந்த நிலையில் இருக்கிறோம். தாழ்ந்த சுபாவத்தின் பிடியைத் தளர்த்தி, நம் உயர்ந்த சுபாவம் வலுவடைந்து, நம் பர்சனாலிட்டியை நம் ஆன்மாவே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைமைக்கு மாற வேண்டும்என்றால், சத்தியஜீவிய சக்தி நம் ஆன்மாவிற்குப் பக்கபலமாக நம் உடம்பிற்குள் இறங்க வேண்டும். சத்திய ஜீவியம் நம் ஆன்மாவுடன் இயற்கையாக ஒத்துழைக்கக்கூடியது. ஆகவே, அதனுடைய ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் இதயக் குகையிருந்து கண்டிப்பாக வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சச்சிதானந்தத்தின் புறவடிவம்தான் சத்தியஜீவியம் என்பது பகவானுடைய கூற்று. சத்திய ஜீவியம் அனந்தமானது; உண்மையானது; ஜீவியம் நிறைந்தது. அதனுடைய அனந்தம் சச்சிதானந்தத்தின் ஆனந்தத்திலிருந்து வருகிறது; உண்மை சத்திலிருந்து வருகிறது; ஜீவியம் சித்திலிருந்து வருகிறது. நம்முடைய ஆன்மாவும் ஆனந்தத்தில் இருந்துதான் பிறக்கிறது. ஆனந்தத்தின் பிரதிநிதியாகத்தான் நம்முடைய ஜீவனிலும் அது உறைகிறது. சத்திய ஜீவியமும், ஆன்மாவும் சமநிலையில் இருப்பதால் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

அன்னை தம்முடைய பூரணயோகத்தைச் செய்துகொண்டிருந்த பொழுது சத்தியஜீவிய மனிதன் உருவாகும்பொழுது, அவனுடைய உடம்பு எப்படி இருக்கும்? எதை வைத்து அது உருவாகும்? என்ற கேள்விகள் அவருக்கு எழுந்தவண்ணம் இருந்தன. பிறகு ஒரு நாள் ஒரு பெண் சாதகி அன்னை முன் நமஸ்கரிக்கும்பொழுது அவளுடைய ஆன்மா திடவடிவம் பெற்று அவளுடைய உடம்பிலிருந்து வெளிவந்து அன்னைமுன் நின்றது. அதைக் கவனித்த அன்னைக்கு உடனே விஷயம் புரிந்துவிட்டது. அதாவது நம் மானிட உடம்பில் சத்தியஜீவியம் முழுமையாக இறங்கிவிட்ட பிறகு நம்முடைய ஆன்மாவே திடவடிவம் பெற்று சத்தியஜீவனாக வெளிவரும் என்று அவருக்குப் புரிந்தது. இதை அவர் தம்முடைய அஜெண்டாவில் விவரித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும்பொழுது நம்முடைய சைத்தியப் புருஷன் வெளிவருவதற்கு சத்தியஜீவியத்தினுடைய ஆதரவு மிகவும் தேவைப்படுகிறதுஎன்பது தெரிகிறது. நம்முடைய ஆன்மாவை வெளிக்கொண்டுவருவதற்கு சத்தியஜீவியத்தின் துணையை நாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. நிறைய அன்பர்களுக்கு சத்திய ஜீவியம் என்பது வெறும் வார்த்தைதான். புரட்சிகரமான விஞ்ஞானக் கருத்துகளைப் பற்றிச் சாதாரண மனிதனுக்கு ஒன்றுமே தெரிவதில்லை என்பதுபோலச் சாதாரண அன்பர்களுக்கு சத்தியஜீவியத்தைப் பற்றி ஒன்றும் தெரிவதில்லை. ஆகவே சத்தியஜீவியத்திற்கு அடுத்தபடியாக நமக்குச் சுலபமாகக் கிடைக்கக்கூடிய மற்ற ஆதாரங்களை நாம் கருதலாம். பகவான் தம்முடைய ஆன்மீகச் சிந்தனைகளில், அன்பையும், தைரியத்தையும் துணையாக வைத்துக் கொண்டு ஆழத்தில் அமுங்கி இருக்கும் ஆன்மாவை நாம் வெளியே கொண்டுவரலாம் என்கிறார். இங்கே பகவான் குறிப்பிடுகின்ற அன்பு மனிதன் இறைவன் மேல் காட்டும் அன்பாகும். ஆகவே நம்முடைய இறையன்பை அதிகப்படுத்தும் அளவிற்கு நம்முடைய ஆன்மாவிடம் தொடர்பு கிடைக்கும்என்று தெரிகிறது. இங்கே அவர் தைரியம்என்று குறிப்பிடுவது உலகில் உண்மையை நிலைநாட்ட பொய்யை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தைரியமாகும்.

ஆகவே இந்த விஷயத்தில் நாம் தைரியத்தை அதிகப்படுத்தினால்,அந்த அளவிற்கு ஆன்மாவுடன் தொடர்பு அதிகரிக்கும்என்று தெரிகிறது.கேள்வி-பதில் தொகுப்புகளில் அன்னை ஓர் இடத்தில், "புன்முறுவல் இருக்கும் இடத்தில் எல்லாம் தெய்வம் இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.இதன்படி பார்க்கும்பொழுது நம் மனநிலையை நாம் எந்நேரமும் சந்தோஷமாக வைத்துக்கொண்டோம் என்றால், நமக்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம் என்றால், அந்த அளவுக்கு நம்முடைய ஆன்மாவுடன் தொடர்பு அதிகரிக்கும்என்று தெரிகிறது. ஆனால், அகந்தையின் பிடியில் இருக்கும்வரை நம்மால் எந்த ஒரு முயற்சியும் எடுக்க முடியாது. ஆனால், இதையே காரணமாகக் கூறிக்கொண்டு எந்த ஒரு முயற்சியும் எடுக்காமலும் இருக்கக்கூடாது.எந்த அளவிற்கு எல்லா அனுபவங்களையும் இன்பகரமாக எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அகந்தையின் பிடியில் இருந்து விடுபடுவோம்என்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்தத் திசையில் நாம் உடனடியாக முயற்சிகளை எடுக்க வேண்டும். படிப்படியாக முயற்சிகளைத் தீவிரப்படுத்தினால், ஒரு கட்டத்தில் அகந்தையின் ஆட்சி நிலைகுலையும் அளவுக்கு ஒரு மாற்றம் வரும்.

மேலும், ஆன்மாவை வெளிக்கொண்டு வருவதற்கு நன்றியறிதல், பணிவு போன்ற குணவிசேஷங்களும் மிகவும் உதவுகின்றது. நம்முடைய ஆன்மா எந்நேரமும் இறைவனைப் போற்றிக்கொண்டிருக்கிறது. நாமும் அன்னை நமக்கு இதுவரை செய்த நல்லனவற்றிற்கெல்லாம் அவருக்கு எந்நேரமும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தால், அந்த வகையில் நமக்கும் நம் ஆன்மாவுக்கும் ஒரு நல்ல அலைன்மென்ட் கிடைக்கும். இந்த நன்றியறிதலோடு பணிவும் சேர்ந்துகொள்கின்றபொழுது நம்முடைய முயற்சி மேலும் வலுப்பெறுகிறது. இறைவன் இவ்வளவு பிரம்மாண்டமான படைப்பை நிகழ்த்திய பிறகும் தன்னுடைய சாதனையைப் பற்றி தானே பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. அவருடைய படைப்பைப் பாராட்டி நாம் அவருக்குப் புகழாரம் சூட்ட வேண்டும்என்று ஏங்கிக்கொண்டும் இருப்பது இல்லை. நாம் கண்ணாடிமுன் நின்றுகொண்டு நம் அழகையே நாம் எத்தனை முறை ரசித்துக்கொள்கிறோம். இது நம் அழகை நாமே பாராட்டிக்கொள்வதற்குச் சமம். படைப்புஎன்பது இறைவனுடைய படைப்பு ஆற்றலுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்ற கண்ணாடியாகும். அவர் விரும்பினால் இந்தப் படைப்பென்ற கண்ணாடிமுன் நின்று அவருடைய சாதனையை அவரே புகழ்ந்துகொள்ளலாம். ஆனால் இந்த வேலையை அவர் செய்வதில்லை. இது அவருடைய அடக்கத்தினுடைய உச்சக்- கட்டத்தைக் காட்டுகிறது. அவருடைய சாதனையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நம்முடைய சாதனை ஒன்றுமேயில்லை. ஆகவே, நம்முடைய சாதனைகளை அறவே மறந்துவிட்டு, இரு கை கூப்பி, நாம் அவர்முன் நின்றால்,அப்பட்சத்தில் நம் ஆன்மாவுடன் நல்ல அலைன்மெண்ட் கிடைக்கும். இந்தப் பணிவிற்கு ரெஸ்பான்ஸ் தரும் வகையில் நம் ஆன்மாவும் விரைவில் வெளிவந்து அதனுடைய அன்பு, ஆனந்தம், இனிமை ஆகியவற்றால் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

தொடர்ந்து தரிசனம் கிடைத்தால்

அழைப்பையும் மனம் மறந்துவிடும்.


 



book | by Dr. Radut