Skip to Content

06.முடிந்ததை முழுமையாக முடிப்பது முக்கியமான முறை

முடிந்ததை முழுமையாக முடிப்பது முக்கியமான முறை

கர்மயோகி

. மனிதன் முடிக்குமிடத்தில் அன்னை ஆரம்பிக்கிறார்.

மனிதனும் தெய்வமும் ஒரே வாழ்வின் இரு முனைகள்.

. தவத்தை ஏற்றுகொள்ள முடியாத மனிதனுக்கு வழிபாடு உண்டு.

தன்னால் முடியும் வரை மனிதன் ஆண்டவன் உட்பட எவரையும் நினைக்க மாட்டான்.

முடியாத பொழுது உதவியை நாடுவான்.

எவரும் உதவ முடியாத நிலையில் ஆண்டவனை நினைப்பான்.

முழுவதும் முடியும் நேரத்திலும் ஆண்டவனை அழைப்பவன் பக்தன்.

தன்மானமுள்ளவன் தானே முயன்று பெறாததை மறுத்துவிடுவான்.

அன்னை மூலம் வருவது நமக்குரியது; வேறு எந்த வகையாக வருவதும் எனக்குத் தேவையில்லையென்பவன் தீவிர அன்னை பக்தன்.

பொதுவாக அன்பர்கள் அன்னையின் பெயரை உச்சரித்தவண்ணம் இருப்பார்கள்.

"முருகா", "ராமா", "கோவிந்தா" என்றவர் இன்று "மதர்", "அன்னை",

"பகவான்", "ஸ்ரீ அரவிந்தர்" என்று கூறுகிறார்.

இந்த உச்சாடனம் தரும் பலன் பெரியது.

இது முடியாதவர் பலர்.

வாயால் சொல்லும் வார்த்தையை மனதால் கூறினால் பலன் அதிகம்.

வாயால் சொல்வது முழுமை பெறும் நேரம் மனம் சொல்ல

ஆரம்பிப்பதைக் காணலாம்.

ஒரு நிலை முடிந்தால், அடுத்தது தானே ஆரம்பிக்கும்.

அன்னையைப் பற்றி விவரமாகப் படித்து, விளக்கமாகக் கேட்டபின்,

"இதெல்லாம் என்னால் முடியாதே" என நினைப்பவருண்டு.

இந்த நினைவு பலருக்கும் எழுவதுண்டு.

அவரும் தன்னால் முடிந்ததைச் செய்யலாம்.

"எண்ணத்தைக் கட்டுப்படுத்து" என்றால் முடியாதவர், "எதையாவது கையால் செய்யச் சொன்னால் செய்யலாம்; எண்ணம் எனக்குக் கட்டுப்படாது" என்றால், அவர் கையால் செய்யும் காரியம் ஒன்றை -சுத்தம் செய்வதை - மேற்கொள்ளலாம்.

என்னால் முடியவில்லை என்பது, எனக்குப் பிடிக்கவில்லை என்பதினின்று வேறுபட்டது. முடியவில்லையென்பவருக்கு வழியுண்டு; பிடிக்காதவருக்கு நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

சுத்தத்தை மேற்கொள்பவர் ஓரளவு செய்யலாம்.

ஓரளவு செய்வது அரைகுறையாகச் செய்வது.

அரைகுறையாகச் செய்வதை முழுமையாகச் செய்வது முறை.

முழுமையாகச் செய்வதுஎனில், அக்காரியம் பூர்த்தியாகும்வரை செய்வது எனப் பொருள்.

அப்படி வேலை முடிந்தபின் ½ மணி நேரம் மீதியிருந்தால், நம் சக்தி முழுவதும் செலவாகும்வரை செய்து முடிப்பது இம்முறையின் இரண்டாம் கட்டம்.

அன்னைக்குரிய முறை சமர்ப்பணம். சமர்ப்பணம் பூர்த்தியானால்,

சரணாகதி எழுந்து தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும்.

அன்னையிடம் கூறுவது பிரச்சினைக்குரிய சமர்ப்பணம்.

சமர்ப்பணத்திற்குரிய முறை எண்ணம் எழுந்தவுடன் அன்னைக்குக் கூறுவது. கூறியது சரியானால், அந்த எண்ணம் நம் மனத்தைவிட்டகல வேண்டும்.

அதற்குள்ள பாரம் விலக வேண்டும்.

நாம் உணர்ச்சியை எண்ணமாக அறிவோம்.

உணர்ச்சியை, எண்ணத்தினின்று பிரித்துப் பார்க்க வேண்டும்.

எண்ணம் மனதில் - தலையில் - உதிப்பது.

உணர்ச்சி வயிற்றைப் புரட்டுவது.

பிரித்துப் பார்ப்பது எளிது.

சொல்லாக உருவாகி, பேச்சாக வாய்வழிப் பேசுவது எண்ணம்.

எண்ணம் தலையில் உருவாவதைக் கவனித்தால் தெரியும்.

இந்த எண்ணம் எழுந்தவுடன், அதை உருவம் பெற இடம் தாராமல் சமர்ப்பணம் செய்வது மிகச்சிரமமான காரியம்.

நாம் சமர்ப்பணம் செய்ய முயலும்பொழுது, அதைப் பொருட்படுத்தாமல் எண்ணம் முழுஉருவம் பெற்று, வாய்வழி பேச்சாக வெளிவரும்.

செயலாகவும் மாறும். இதைச் சுபாவம் என நாம் அறிவோம். முயல்பவர் குறைவு; இல்லை எனலாம்.

முயன்றால் முடியாது எனக் கைவிடுவர்.

இப்படி எழுவது ஜடமான எண்ணம். சூட்சுமமான எண்ணம் இதைக் கடந்தது. ஜடமான எண்ணம் தெளிவாக, மெதுவாக உருவம் பெறும்.

சூட்சும எண்ணம் மின்னல் தெறிப்பதுபோல் தோன்றி மறையும்.

. விரைவாக எழுவதால் பிடிபடாது.

. பிடிபட்டால் ஒரு முறை சமர்ப்பணம் செய்தால் காரியம் முடியும்.

. ஜடமான எண்ணம் சமர்ப்பணமாகும்வரை சூட்சுமம் கட்டுப்படாது.

. ஜடமான எண்ணம் சமர்ப்பணமாக உஷாராக இருக்க வேண்டும்.

. மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க எவ்வளவு உஷாராக இருக்கிறானோ, அவ்வளவு உஷாராக இருந்தால் சமர்ப்பணம் முடியும்.

. வாழ்க்கை யோகவாழ்க்கையாகமாற எண்ணம் சமர்ப்பணமாவது அவசியம்.

. எடுத்துக்கொண்ட செயல்களை முழுமையாகச் செய்தால் எண்ணம் சமர்ப்பணமாக உதவும்.

. ஜட எண்ணமும், சூட்சும எண்ணமும் சமர்ப்பணமானால் நாம் மனத்தின் பிடியிலிருந்து விடுபடுவோம்.

. மனத்திற்கு அடுத்தது உணர்ச்சி; முடிவானது உடல்.

எண்ணம் இரு நிலைகளிலும் சமர்ப்பணமானதற்குரிய அறிகுறிகள்:

. மனம் அமைதியுறும்.

ஓடும் எண்ணங்கள் ஓடா.

சிந்தனை வலுவிழக்கும்.

மௌனம் சேர ஆரம்பிக்கும்.

குழப்பம் மனத்தை விட்டு விலகும்.

மனத்தில் பிரச்சினையாக இருந்தவை, வாழ்விலும் பிரச்சினையாக இருக்கா. அமைதி, சாந்தி என்பவற்றை பகவான் calm, quiet, stillness, silence என வேறுபடுத்திக் கூறுகிறார். ஓடும் எண்ணம் ஓடுவதை நிறுத்துவது, ஓட்டம் நிற்பது, stillness எண்ணங்கள் மனத்திலிருந்து ஓடாமலிருப்பது நிதானம், quiet. அவை ஓடும் திறமையை இழப்பது அமைதி, calm கீழிருந்து எழுபவை இது. இவை மேலிருந்து வருவது மௌனம் Silence. சமர்ப்பணம் பூர்த்தியாகி, சரணாகதி எழுந்து, அதுவும் பூர்த்தியாக எண்ணமும், சூட்சும எண்ணமும் சமர்ப்பணம் செய்யப்பட்டது போல் உணர்ச்சியும், சூட்சும உணர்ச்சியும் சமர்ப்பணமாக வேண்டும். முடிவாக உடல் என்பதில் சரணாகதி முடியும். உடலுக்கு உணர்வுண்டு; சூட்சுமம் உண்டு. அவைகளும் சமர்ப்பணமாக வேண்டும். சமர்ப்பணத்தில் யோகம் ஆரம்பித்து சரணாகதியில் முடியும். இவை யோக நிலைகளானால், நம்மால் முடிந்ததை முழுவதும் சமர்ப்பணம் செய்வது என்றால் என்ன? அதற்குரிய பலன் என்ன? அவை வாழ்வில் எப்படி பிரதிபலிக்கும் என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. இவற்றிற்கு,

. குறைந்தபட்ச நிலையுண்டு.

. அதிகபட்ச நிலையுண்டு.

அவற்றைக் கடந்த நிலைகளும் உள்ளன.

. குறைந்தபட்சம் என்பது முடிந்ததை முழுமையாகச் செய்து முடிப்பது.

இதற்குரியது யோகப் பலன்.

இதற்கடுத்தக்கட்ட யோகப் பயிற்சி நமக்குப் பலிக்கும் நிலை ஏற்படுவது அதற்குரிய வாழ்க்கைப் பலன்.

இன்றுள்ள எல்லாப் பிரச்சினைகளும் மறையும்.

இன்று எழக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் எழும்.

எழும் வாய்ப்புகளில் நாம் மறுக்காதது, ஒதுக்காதது, வெறுக்காதவை,அத்தனையும் பலிக்கும்.

. அதிகபட்சம் என்பது உடலுக்குரிய சூட்சும உணர்வு சமர்ப்பணமாகி சரணாகதியாகப் பலிப்பது.

அது நடைபெற்றதற்கடையாளம் உடல் நன்றியறிதலால் புல்லரிப்பது.

நம் சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அது அடையாளம்.

அது நடந்தபின் நமக்குத் தேவையானதுஎன்று ஒன்றில்லை.

அதன்பின் நடப்பவை அன்னைச் செயல்என்பதால் நாம் பேசவோ,நினைக்கவோ எதுவுமில்லை.

அதிகபட்சம் ஒரு க்ஷணம் நடந்தால், அது நிலைபெறுவது யோகம்.

ஒரு முறையானாலும் அதிகபட்சம் என்பதால், அதற்குப் பெருமையுண்டு.

குறைந்தபட்சத்தை மனம் ஏற்று, அதிகபட்சத்தை ஆத்மா தொட்டுவிட்ட- தால், நமக்கு நிலையாக உள்ளது வாழ்வில் எழும்.

அதற்கு இரு புறம் உண்டு.

நாம் எந்த நிலையிலிருந்தாலும்

முழு முயற்சிக்கு அடுத்த பக்கம் -

அன்னை பலிக்கம் - போக நம்மால் எந்த நேரமும் முடியும் என்ற நிலை நமக்குப் பலிக்கும்.

இன்று அது நமக்கில்லை. எந்த நேரமும், எந்த பிரச்சினையுள்ளும் அன்னையை க்ஷணம் தவறாது அழைக்கும் திறன் யோக வாழ்வுக்குரிய திறன்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

புதுமை உள்ளே எழுவதால் புத்துணர்ச்சி பொங்கி எழுகிறது.


 


 



book | by Dr. Radut