Skip to Content

09.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

                                               (சென்ற இதழின் தொடர்ச்சி....)   N. அசோகன்

121. நல்லெண்ணம் மற்றும் பரநலம் பாராட்டல் ஆகிய பண்புகள் பண வரவை அதிகரிக்கும். ஏனென்றால் இவை விசாலப்படுத்தும் பண்புகள்.இவற்றால் உற்பத்தி திறனையும் அதிகரிக்க முடியும்.

122. வங்கியில் உள்ள சேமிப்பைவிட வீடு, நிலம், நகை போன்ற பொருட்களுக்குத்தான் மதிப்பு அ திகம். ஏனென்றால், மனிதனுடைய அறிவு பிஸிக்கலாக இருக்கிறது. இந்நிலையில் மனிதனுக்கு கண்ணிற்குத் தெரிந்த நிரூபணங்கள் தேவைப்படுகின்றன.

123. பணக்காரர்களை விட ஏழைகளுக்குத்தான் கடன் அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் திருப்பித் தரும் திறன் பணக்காரர்களுக்கு அதிகம் இருப்பதால், நடைமுறையில் அவர்கள்தான் ஏழைகளைவிட அதிக கடன் பெறுகிறார்கள். இது பார்வைக்கு நியாயமாக இல்லை என்றாலும், வாழ்க்கை இப்படித்தான் செயல்படுகிறது.

124. வேலைக்கு வழங்கப்படும் ஊதியம் அவ்வேலைக்குச் சமமாக இருக்க வேண்டும். சன்மானம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், இரண்டுமே உற்பத்தித் திறனை பாதிக்கும்.

125. "அவரவர் திறமைக்கு ஏற்ப வழங்கி, அவரவர் தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள வேண்டும்" என்பது ஒரு சிறந்த கம்யூனிஸக் கொள்கையாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு உண்மையான பரநலம் பாராட்டும் தன்மை இருந்தால்தான் இக்கொள்கையை நல்லவிதமாகக் கடைப்பிடிக்க முடியும்.

126. நிறைய பணத்தைச் சம்பாதிப்பதும் அல்லது வாரிசு என்ற முறையில் சொத்தாகப் பெறுவதும் ஒரு வசதியான, பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற்றுத் தரலாம். ஆனால் பணமிருந்தால் சந்தோஷம் கிடைக்கும் என்ற அவசியமில்லை.

127. சமூகம் ஒரு பிரிவினரை ஒதுக்கி வைத்தால், அவர்கள் பாதுகாப்பு வேண்டி பணத்தை நிறைய சம்பாதித்து வைத்துக்கொள்வார்கள்.ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இப்படித்தான் நிறைய பணத்தைச் சேமித்து வைத்திருந்தார்கள்.

128. வறண்ட பிரதேசங்களான ராஜஸ்தான், ராமநாதபுரம் மற்றும் இஸ்ரேல் ஆகியவிடங்களைச் சேர்ந்த மார்வாரி இனத்தவர், செட்டியார் இனத்தவர் மற்றும் யூதர்கள் என்ற மூன்று பிரிவினரும் மிகவும் வசதியானவர்களாக இருக்கின்றார்கள். இதை வைத்துப் பார்க்கும்பொழுது, கடுமையான சுற்றுப்புறச் சூழல் மக்களைக் கடின உழைப்பாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் மாற்றி, அவர்களை அதன்வழி செல்வர்களாக மாற்றுகிறது என்றாகிறது.

129. வட்டி வாங்குவது பழங்காலத்தில் ஒரு பாவமாகக் கருதப்பட்டதால் வட்டிக்கடை வைப்பவர்கள் சமூகத்தில் குறைவாகக் கருதப்பட்டார்கள்.ஆனால் இன்று கடன் என்பது உலகப் பொருளாதாரத்தில் முக்கியமாக விளங்குவதால், பழைய அபிப்பிராயங்களைப் பெரும்பான்மையான மக்கள் கருதுவதில்லை.

130. வட்டிக்கடைக்காரர்கள் ஈவு, இரக்கமில்லாமல் செயல்படுபவர்கள் என்ற பெயர் எடுத்திருப்பதால், வட்டித் தொழில் பாவமானதாகக் கருதப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

131. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சமூகம் மக்கள் நலன் காக்கும் கருவியாக மாறியிருப்பதைப் பார்த்தால், சமூகத்தின் அங்கத்தினர்களு- டைய குறைந்தபட்சப் பராமரிப்பிற்குச் சமூகம் ஏதேனும் செய்யவேண்டும் என்ற இடத்தை சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

132. வாங்குகின்ற பொருள் திருப்தியாக இல்லை என்றால் பணத்தைத் திருப்பித் தருவோம் என்ற பாசி அமெரிக்காவில் கடைகளில் விற்பனையை அமோகமாக உயர்த்தியுள்ளது. நம் நாட்டு வியாபாரத்திலும் இதே பாசியைக் கடைப்பிடித்தால் இங்கேயும் அதே அதிகரிப்பு விற்பனையில் வரும்.

133. பழைய முதலாளித்துவம் மீண்டும் உலகில் தலையெடுக்க வாய்ப்பில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வடஅமெரிக்காவிலும் சோஷலிசக் கொள்கைகள் ஓரளவிற்கு அமுல்படுத்தப்பட்டு அங்கே உழைக்கும் வர்க்கத்தினர் வளமையாக இருப்பதால், கம்யூனிஸம் இந்நாடுகளில் பரவ முடியாமல் போய்விட்டது.

134. ஓய்வூதியம் என்பது ஓய்வு காலத்தைப் பற்றிய மக்களின் பயத்தைப் பெருமளவிற்குக் குறைத்துவிட்டது. காப்பீட்டுத் திட்டங்களைப் பரவலாக அமுல்படுத்தினால் மக்களிடையே உள்ள எதிர்காலத்தைப் பற்றிய பயம் மேலும் குறையும்.

135. தவணைமுறைக் கடனை அமுல்படுத்தியதால் இந்தியப் பொருளாதாரம் பயன் பெற்றதுபோல காப்பீட்டுத் திட்டங்களை அமுல்படுத்துவதாலும் நல்ல பலன் பெறலாம்.

136. இந்தியா பொதுவாக ஏழை நாடாக இருப்பதால் இங்கே ஊழல் மலிந்து குறையும். அப்படிக் குறையவில்லை என்றால் இந்தியச் சமூக அமைப்பில் ஏதேனும் ஒரு பெரிய குறையிருப்பதாக அர்த்தமாகும்.

137. நல்ல அறிவுத் திறனிருக்கும் பொழுது சமூகத்தின் ஒரு பிரிவினர் நீண்ட காலத்திற்கு வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சுயநலமிகளாகவும், ஆதாயம் தேடுபவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். பணம் வாழ்க்கையில் முக்கியமானதாக மாறும்பொழுது இப்படி மனோபாவம் மாறுகிறது.

138. சுமுகத்திற்கும், சுபிட்சத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. சுமுகமான சூழ்நிலையில் நம் கவனம் எல்லாம் வேலையின் மேல் போவதால் நம்மால் சாதிக்க முடிகிறது. சுமுகமற்ற சூழலில் நம் கவனம் சிதறுவதால் வேலை கெடுகிறது.

139. குறைந்த விலையும், அதிக விற்பனையும் தொடர்புள்ளவை என்பதுபோல, உயர்ந்த தரமும், அதிக விலையும் தொடர்புள்ளவைகளாகும். முதல் தொடர்பு ஏழைகளுக்கு உதவுவதுபோல இரண்டாம் தொடர்பு பணக்காரர்களுக்கு உதவுகிறது.

140. பணமயமான பொருளாதாரமுறை இப்பொழுது மாப்பிள்ளைகளுக்கும் "வரதட்சிணை" என்ற பெயரில் விலை கொடுக்கும் அளவிற்கு சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.

தொடரும்.....

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரநலம், சுயநலம் என்பவை கொடுப்பது பெறுவதாகும். அது சௌகரியமாகவோ, தொந்தரவாகவோ வெளிப்படும்.தன்னலமற்றவனின் நட்பு, மற்றவர் வாழ்வை மலரச் செய்யும்.சுயநலமானவனின் தொடர்பு, வாழ்வில் சிரமங்களை உற்பத்தி செய்யும்.

சுயநலம் சுருக்கும்; பரநலம் மலரும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தெய்வம் கொடுத்ததை அனுபவிக்க முனைவது, ஓர் ஆசையைப் பூர்த்தி செய்ய நாமே முயல்வதினின்று வேறுபட்டது. நாம் முனைய அனுமதியில்லை. தெய்வம் கொடுத்ததை அனுபவிக்காமலிருக்க அனுமதியில்லை.

அனுபவிக்காமலிருக்க அனுமதியில்லை.


 


 



book | by Dr. Radut