Skip to Content

01. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னை அவர்களின் சமூகத்திற்கு அநேக கோடி நமஸ்காரங்கள். என் பெயர் அருணா. நான் அன்னையை அறிந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து நான் செய்த செயல்கள் அனைத்திலும் எனக்கு வெற்றியே. இங்கு நான் ஒரு முக்கிய சம்பவத்தை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் 2000 ஆகஸ்டு முதல் மேல்மருவத்தூரில் பணிபுரிந்து வந்தேன். நான் பணிபுரியும் இடம் என் வீட்டிலிருந்து ஏறத்தாழ 80கி.மீ.க்கு மேல் இருந்தது. தினமும் காலை 6.30க்குக் கிளம்பி, இரவு 8.30க்குத்தான் வீட்டுக்கு வருவேன். நான் ஏழு ஆண்டுகள் இப்படிச் சென்று வந்தேன். கவுன்சிலிங் அறிவித்து மாறுதல் வழங்கினார்கள். நானும் கலந்தாய்வில் மாறுதல் பெற பல முறை சென்றேன். அன்னையிடம் நான் வேண்டியது, பணம் செலவு செய்யாமல் சென்னைக்கு அருகில் மாறுதல் வேண்டும் என்பது தான். அதன்பின் இரண்டு முறை என் வேண்டுதலை மீறிப் பணமும் கொடுத்து முயன்றும் என்னால் மாறுதல் பெற இயலவில்லை. இந்த ஆண்டும் மே மாதக் கலந்தாய்வில் எனக்கு மாறுதல் கிடைக்கவில்லை. பணிபுரியும் இடத்தில் பல்வேறு பிரச்சினைகளால் எனக்கு அவசியம் மாறுதல் வேண்டும் என்று அன்னையை மனமாற வேண்டினேன். திடீரென நடுவில் கலந்தாய்வு தீர்மானித்தனர். சென்ற மாதம் 1ஆம் தேதி பாண்டிச்சேரி சென்று அன்னையிடம் மனமுருகி வேண்டி, எனக்கு அன்னையைத் தவிர யாரும் இல்லை என்று வேண்டி வந்தேன். ஜூலை 3ஆம் தேதி கலந்தாய்வில் பல்வேறு தடைகளை நீக்கி அன்னை எனக்கு, சென்னைக்கு அருகில் மாறுதல் பெற்றுத் தந்தார், ஒரு பைசா செலவும் இன்றி. என்னால் இன்னும் நம்பவே இயலவில்லை. அன்னையை நம்பியவர் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இதை எல்லோரிடமும் தெரிவித்துக்கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி.

அருணா, சென்னை.

*********

 

 

 



book | by Dr. Radut