Skip to Content

05. அதிர்ஷ்ட மழை

அதிர்ஷ்ட மழை

N. அசோகன்

அதிர்ஷ்டத்தை அனுபவிப்பவர்கள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாய், பல நல்ல விஷயங்களை அவர்கள் வாழ்க்கையில் நடப்பதை அறிவார்கள். நடப்பதைச் சில சமயம் அவர்களாலேயே நம்ப முடியாது. அந்த அளவுக்கு அதிர்ஷ்டம் அமோகமாக வரும். சில பேருக்கு அசம்பாவிதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அதிகமாக வருவதுண்டு. அப்படி துரதிர்ஷ்டத்துக்கு ஆளானவர்கள் சனி தம்மை விரட்டுவதாகக்கூடச் சொல்வார்கள். அதிர்ஷ்டமானாலும் துரதிர்ஷ்டமானாலும் வரும்போது பலமாக வருமென்பது உலகின் பல்வேறு பாகங்களிலும் மக்கள் பொதுவாக அறிந்த ஓர் உண்மையாகும்.

ஸ்ரீ அரவிந்தருடைய லைஃப் டிவைன் (Life Divine) புத்தகத்தில் இப்படிப் பல அரிய வாழ்க்கையைப் பற்றிய உண்மைகள் இருக்கின்றன. இப்புத்தகம் பரவலாகப் படிக்கப்படாமல் இருப்பது நம்முடைய துரதிர்ஷ்டமாகும். மகாபாரதமும் மற்றும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் இம்மாதிரியான அரிய உண்மைகளால் நிரம்பியுள்ளன. ஷேக்ஸ்பியருடைய காலத்தில் வாழ்க்கை, துன்பம் நிறைந்ததாக இருந்ததால், அவருடைய நாடகங்கள் நெகட்டிவாகவும், சோகமயமாகவும் இருந்தன. 1956ஆம் ஆண்டில் சத்தியஜீவியம் பூவுலகில் இறங்கியபின்னர், வாழ்க்கையில் பாஸிட்டிவ் சூழல் ஏற்பட்டது. எல்லோரும் உடனே இச்சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இது மேலோட்டமாக இப்போது இல்லை. இருந்தாலும், ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி நாம், சூட்சுமமாக இருக்கும் இச்சூழலைத் திடமான பலனாக மாற்றிக்கொள்ளலாம்.

சிரிப்பு நாடகங்கள், திரைப்படங்கள், கதைகள் போன்றவற்றின் இறுதியில் எல்லோரையும் மகிழ்விக்கும் வகையில் முடிவு இருக்கும். இப்படி ஒரே நேரத்தில் நிறைய அதிர்ஷ்டம் வருவதற்கு ஸ்ரீ அரவிந்தர் விளக்கம் தருகிறார். இயற்கை ஒரே நேரத்தில் பல விஷயங்களை நகர்த்துகிறது என்கிறார் அவர். நமக்கு அது பயனற்றதாகத் தெரியலாம். ஆனால், இதைப் பற்றி எல்லாம் இயற்கை பொருள்படுத்துவதில்லை. காரியங்களெல்லாம் கூடி வரும்பொழுது, ஒரே நேரத்தில் அமோகமாகப் பலன் தெரியும்போது, நமக்குப் பிரமிப்பாக உள்ளது. ஆன்மசக்தியைப் பயன்படுத்துகிறவர்கள் இப்படி ஓர் அமோகத்தை அனுபவிக்கிறார்கள். அன்னை பக்தையான பெண்மணி ஒருவர் ஒரே ஆண்டில் தம்முடைய வருமானத்தை ஐந்து மடங்காக்கி, தம்மிரு பெண்களுக்கும் திருமணம் செய்துவைத்து, அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பினார்.

சாதாரண மனிதன் ஏதாவதோர் அலுவலகத்தில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுகிறான். அச்சமயம், அவருக்கு ஓய்வுகாலப் பலன்கள் கிடைக்கின்றன. அவருடைய முப்பது வருடப் பணிக் காலத்தில் ஏதாவதொரு சாதனையை அவர் நிகழ்த்தியிருப்பார். இப்படியில்லாமல் ஒருவர் ஒரே நேரத்தில் பல்வேறு ஈடுபாடுகளை வளர்த்துக்கொள்வதாக நாம் கற்பனை செய்யலாம்.

அரசியல்ஈடுபாடு, விவசாயம், வணிகம் இம்மூன்றும் அவர் வாழ்க்கையில் இருப்பதாகவும், தம் சக்திக்கு மீறிய அளவில் பெண்களுக்குத் திருமணச் சம்பந்தம் ஏற்பட முயல்வதாகவும், பிள்ளைகளை உயர்ந்த நிலையில் படிக்க வைப்பதாகவும் நாம் வைத்துக்கொள்வோம்.

இப்படிப்பட்டவரை எவரும் பேராசைக்காரர் என்பார்கள். ஆனால் வேறொரு கோணத்தில் பார்த்தால், இவர் மிகவும் சுறுசுறுப்பானவரென்றும் சொல்லலாம்.

இப்படி எல்லா விஷயங்களிலும் மேலோட்டமான ஈடுபாடுமட்டும் இருந்தால் பலன் சுமாராகத்தான் இருக்கும். ஆனால், செய்வதை நேர்த்தியாகச் செய்பவராக இருந்தால், அவர் ஈடுபடும் எல்லாக் காரியங்களிலும் அவருடைய முழுக் கவனமும் இருக்கும். நெடுநாள் பலன் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பலிக்கும்போது, தேர்தல் வெற்றி, வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம், மகளுக்குப் பெரிய இடத்தில் சம்பந்தம், மகனுக்கு உயர்ந்த இடத்தில் வேலை என்று எல்லாம் ஒன்றாகத் திரண்டு வரும்.

நேர்த்தியான வேலைக்கு இப்படி அமோக அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் திறனுள்ளது.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
எனக்குத் தாங்காது என்ற நிலையிலிருந்து கட்டுப்பாட்டுக்கும்
சமத்துவத்திற்கும் போக மூன்று நிலைகளுண்டு. அவை உடற்கவர்ச்சி, உணர்ச்சியின் வேகம், மனம் பொறுக்க முடியாதது. சில சமயங்களில் புறநிகழ்ச்சி உடலை அசைக்கும். அப்படியானால் பின்னர் உணர்வும், மனமும் புற நிகழ்ச்சியால் அதேபோல் பாதிக்கப்படும். நீயே அவற்றை நாடாதது நல்லது. ஆனால் சிறப்பெய்த அவை வெளியிலிருந்து வரும்பொழுது அவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
நீயே நாடாதவை பாதிக்காது.
அவை அசைத்தால் நீ அசையக்கூடாது.

 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
இலட்சியத்தை, சுயநலம் பெறும் பலனின் அளவால் நிர்ணயிப்பது சரியில்லை என்றாலும் அதுவும் அளவை நிர்ணயிக்கும் முறைகளில் ஒன்று.
அன்னை சுயநலத்தையும் ஏற்பார்.

 

 

 book | by Dr. Radut