Skip to Content

10. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

 N. அசோகன்

 

  1. உடலளவில் தாமசம் என்பது நகர மறுப்பதைக் குறிக்கும். உணர்வு அளவில் தாமசம் வேலை செய்ய மறுக்கும்விதமாக வெளிப்படும். அறிவு நிலையில் புது அறிவை தேடிக்கொள்ள மறுப்பதாக வெளிப்படும். ஆன்மீக நிலையில் இறைவனை நோக்கி உயர மறுப்பதாக வெளிப்படும்.
  2. நம்முடைய நிலையிலிருந்து கீழ் இறங்கிவிட்டோமென்றால் பழைய நிலைக்குத் திரும்பி வருவதற்கு நாம் முயற்சியை இரு மடங்காக்க வேண்டும். ஏனென்றால் இப்பொழுது கீழ்த் திசையை மாற்றி மேல் திசைக்குப் போக வேண்டியிருப்பதால் சக்தி இரு மடங்கு தேவைப்படுகிறது.
  3. ஒருவர் சாதித்தார் எனும்பொழுது அதை நாம் Positveஆக எடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கு வெற்றி கிட்டியது என்றால் நல்ல வழியில்தான் அந்த வெற்றி கிடைத்தது என்று சொல்வதற்கில்லை.
  4. பிடிவாதம் என்பது இரு வகைகளில் வெளிப்படும். உயர்ந்த பண்புகளை விட்டுக்கொடுக்காமல் திடமாக இருக்கும் பொழுது அது நல்லவிதமாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில் நமது மட்டமான குணங்களையும், பழக்கவழக்கங்களையும் விட மறுக்கும் பொழுது தவறாக வெளிப்படுகிறது.
  5. நம்மிடம் இருக்கின்ற விஷயங்களைத்தான் நாம் அடுத்தவரிடம் அடையாளம் காணமுடியும். நேர்மையான ஒருவருக்கு அடுத்தவர் நேர்மையற்றவர் என்பது கண்ணில் படாது.
  6. ரகசிய மனப்பான்மை நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் ரகசியம் நம் குறிக்கோள்களை எட்ட உதவும். இருந்தாலும் யாரையும் நம்பாத மனநிலை மனதில் ஓர் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்.
  7. தன்னுடைய சாதனைகளைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாதவன் தன்னுடைய எனர்ஜியை சேகரம் செய்கிறான். அதனால் அவனால் மேலும் சாதிக்க முடிகிறது. பெருமையடிக்கின்றவன் தன்னுடைய எனர்ஜியை விரயம் செய்கிறான். அதனால் மேற்கொண்டு முன்னேற முடியாமல் தேங்கிப்போகிறான்.  
  8. தகுதியுடையவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே வெகுமதிகள் தேடி வரும். தகுதியில்லாதவர்கள் தான் எந்நேரமும் கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பார்கள்.
  9. தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அதனால் உந்தப்பட்டு சாதிப்பதுண்டு. இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை நம்முடைய எனர்ஜியை எல்லாம் விரயம் செய்யுமென்பதால் அது நல்லதில்லை.
  10. அப்பாவியான, விவரம் தெரியாத மக்கள் பொதுவாக மற்றவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். வாழ்க்கை பொய்மை நிறைந்திருப்பதால் கள்ளம் கபடமற்ற தன்மை ஒரு பலகீனமாக போய்விடுகிறது. வாழ்க்கை Positiveஆக இருந்தால் இதே கள்ளங்கபடமற்ற தன்மை பாராட்டைப் பெற்றுத் தரும்.
  11. இன்பத்தைத் தேடுபவர்களுக்குத் துன்பமும் சேர்ந்தே வரும். ஏனென்றால் இவையிரண்டும் ஒன்றை ஒன்று பிரியாது. நிழலில்லாத வெளிச்சம் இல்லை என்பது போல் துன்பம் இல்லாத இன்பம் இல்லை.
  12. உயர்ந்த நிலையில் இருப்பவர்களை நாம் பகைத்துக்கொண்டால், தண்டனை உடனே கிடைக்கும். அதே சமயத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தவறு செய்தால் அவர்களுக்குரிய தண்டனை தாமதமாகத்தான் வரும்.
  13. கொடையாளியும், கருமியும் வாழ்க்கையின் இரு எதிர்முனைகள். கொடையாளி இயற்கையின் செலவு செய்யும் அம்சத்தை வெளிப்படுத்துகிறான். கருமி இயற்கையின் சேகரம் செய்யும் அம்சத்தை வெளிப்படுத்துகிறான். இயற்கை இருவரையும் சமமாகவே பாதிக்கிறது. மனிதன் தான் கொடையாளியை போற்றுகிறான், கருமியை மட்டமாக நினைக்கிறான்.
  14. தாமசத்தை நாம் முழுவதுமாக விலக்கக்கூடாது. அறிவின் சூட்சுமமும் உணர்வின் வேகமும் உடம்பின் திட்பத்தால் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் உணர்வின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.
  15. தவறான குணங்களையும், எண்ணங்களையும் நாம் அடக்கி வைத்து இருப்பதால் அவை மறைந்துவிடுவதில்லை. சரியான சூழ்நிலை அமைந்தால் இதே குணங்கள் இரு மடங்கு வேகமாக வெளிப்படும். ஆகவே பரிசுத்தத்திற்கு அடக்கி வைத்தல் தகுந்த முறையில்லை. தெய்வீக ஒளி மற்றும் அருளின் பலத்தை வைத்துக்கொண்டு அவற்றைக் கரைப்பது தான் நிரந்தரத் தீர்வு.
  16. அதிகாரம் ஒரு வகையில் பணத்தைவிடப் பெரியது. ஏனென்றால் அதிகாரத்திலுள்ளவர்கள் வேகமாகப் பணம் சம்பாதித்துவிடுகிறார்கள். ஆனால் பணபலம் உள்ளவர்கள் அவ்வளவு வேகத்தில் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்குப் பின்னால் பணபலம் உள்ளவர்கள் ஆதாரமாக இருப்பார்கள். ஆனால் அதிகாரிகளுக்குப் பக்கபலமாக இருப்பது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதாக அமையாது.
  17. பணம், பதவி, காமம் ஆகியவை மனிதனை எப்படி ஆட்டிப்படைக்கின்றனவோ அதே அளவிற்குப் புகழ்மோகமும் மனிதனை ஆட்டிப்படைக்கும். இவை நான்கிற்கும் அடிமையாகாதவர்களைக் காண்பது அரிது.
  18. குழந்தை பிறப்பதற்கு உடலுறவு தேவைப்படுகிறதென்றாலும், அதில் அதிகமாக ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் குறைகிறது. பிரம்மச்சாரிகள் நீண்ட நாள் வாழ்வதைப் போல இல்லறத்தில் ஈடுபடுகின்றவர்கள் வாழ்வதில்லை.
  19. ஆன்மீகப் பரிசுத்தம் என்பது தெய்வீக உணர்வுகளை மட்டும் அனுமதிக்கின்ற மனநிலையை குறிக்கும். அகந்தை முழுவதும் கரைந்திருந்தால் தான் இத்தகைய பரிசுத்த மனநிலை அமையும்.
  20. பெருந்தெய்வங்கள்தான் பரிசுத்தத்தை எதிர்பார்க்கின்றன என்று இல்லை. இறை விரோத சக்திகளாகச் செயல்படுகின்ற சிறு தெய்வங்கள் கூட தம் பக்தர்களிடம் பரிசுத்தத்தை எதிர்பார்க்கின்றன. பரிசுத்தம் தவறினால் அவர்களைத் தண்டிக்கவும் செய்கின்றன.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமர்ப்பணம், ஜோதியை நாடுவதால் ஆரம்பம் - விரிவு – முடிவு என்ற மூன்று நிலைகளைச் சுருக்கி முடிவான பலனை முதலில் கொடுக்கிறது.
 
முடிவான பலனை முதலில் தரும் சமர்ப்பணம்.



book | by Dr. Radut