Skip to Content

11. அன்னை இலக்கியம்

"அன்னை இலக்கியம்"

சாசனம்

வி.ரமேஷ்குமார்

மும்பை மேரிடன் ஹோட்டல். பன்னிரண்டாவது மாடி பால்கனியில் இருந்து பார்த்தபோது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சூரியோதயம். உள்ளே திரும்பினால் அதையும் தாண்டிய அதிசயமாய் அன்னையின் புன்முறுவல். கண்ணாலேயே கட்டிப்போடும் அந்த வாஞ்சையில் நெகிழ்ந்தேன்.

"இந்த உயரத்திற்கு வருவோம்என்று என்றாவது நினைத்தீரா, ராஜன்?''

"எதை? பன்னிரண்டாவது மாடியை சொல்கிறீரா?'' ஜோக் அடித்தார் ராஜன். "அன்னையிடம் வந்தபிறகு உயரம் ஒரு பொருட்டன்று. நம் பண்புகளுக்கு ஏற்ற உயரத்தை நிச்சயம் கொடுப்பார். நாம் மூன்று வருடங்களுக்கு முன் இருந்தது போல ஒரு சூப்பர்வைசராக இருக்க விரும்பியிருந்தால் இந்த ஆடம்பர அறையும், அழைக்க பென்ஸ் காரும் வருமா? நமக்கே தெரியும் நம் நிலை. பிரார்த்தனையில்கூட இதைக் கேட்டிருக்கமாட்டோம்...''

உண்மைதான். அன்னை பண்புகள் மூலம் அதிகம் பக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் பட்ட பாடு.... என் நினைவு பின்னோக்கிச் சென்றது.

*****

அது மெதாய்த் தூறிக்கொண்டிருந்த ஒரு நவம்பர் மாத மழைக் காலம். மலையளவு பிரச்சினைகளுடன் அன்னையிடம் வந்தபோது, "அது எனக்குத் துரும்பு" என்று கிள்ளிப் போட்டு என்னை ஆட்கொண்ட நேரமது.

ராஜனும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். "எல்லாம் சரி, அன்னையிடம் வந்தால் அது செய்வார்.... இது செய்வார்.... என்கிறார்களே..... பிரச்சினைகள் தீர்ந்து, நிம்மதி வந்தது.... சரி. அதன்பிறகு ஒரு முன்னேற்றமும் இல்லையே.... தினமும் பிரார்த்தனை செய்கிறோம், புஷ்பாஞ்சலி செய்கிறோம்.....'' உதட்டை பிதுக்கினேன்.

"இதற்கெல்லாம் சரியான பதில் தரக்கூடியவர் கிருஷ்ணன் தான்'' என்ற ராஜன் ஆட்டோவை அழைக்க, கிருஷ்ணன் வீட்டில் இறங்கினோம். கிருஷ்ணன் அன்னை சேவகர். அன்னையின் சட்டங்களைப் புரிய விளக்குவதில் வல்லவர். கேள்விகளைக் கேட்டோம். சிரித்தார்.

"வருமானம் அதிகமாக வேண்டும். இதைத்தானே சுற்றி வளைத்துக் கேட்கின்றீர்கள்?'' அசடு வழிந்தோம்.

"பிரார்த்திக்கின்றோம் என்கிறீர்களே, "நாளை காலை அன்னை அறைக்குள் செல்லும்போது ஒரு கோடி இருக்க வேண்டும்" என்று பிரார்த்திக்கலாமே?''

விழித்தோம்.

"நாம் கேட்கமாட்டோம். நமக்கே தெரியும், அப்படி எல்லாம் வராது என்று. நம் அளவில் எப்படி யோசிப்போம்? பிரமோஷன் வர வேண்டும், இன்கிரிமெண்ட் வரவேண்டும் அல்லது இதைவிட நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்றுதானே யோசிப்போம். வியாபாரியானால், நன்றாக வியாபாரம் நடந்து, அதிக வருமானம் வரவேண்டும் என்று யோசிப்பார்....''

என்ன சொல்ல வருகிறார், குழம்பினோம்.

"இதிலிருந்து என்ன தெரிகிறது? நம் மனமே, உழைப்பை அடிப்படையாகக் கொண்ட ஏதோ ஒரு பண்பு மூலம் தான் வருமானம் வரவேண்டும் என்று நம்புவது தெரியும். உழைப்பு என்பது ஒரு பண்பு. அதற்கான சட்டங்களைத் தெரிந்து பின்பற்றும்போது அன்னை அதிகமாகப் பலிப்பார். முதல் நிலையில் எவருடைய அழைப்பையும் ஏற்கும் அன்னை, அடுத்தடுத்த நிலைகளில் அந்நிலைக்குரிய நிபந்தனைகளில் ஓர் இழை பாக்கியிருந்தாலும் பதில் சொல்லமாட்டார். அன்னையை அடுத்த கட்டத்தில் பெற விரும்புகிறவர்கள் ஏற்க வேண்டியது அன்னையின் பண்புகள்'' உணர்ச்சிகரமாய்ப் பேசினார்.

"நாங்கள்தான் இந்த ஐயாயிரம் சம்பளத்திற்கு 10 மணி நேரம் மாடுபோல் உழைக்கிறோமே''..... "அது எல்லோரும் செய்வது. அன்னை பலிக்கவேண்டும் என்றால் அன்னை விரும்பும் பண்புகளுக்கான சட்டங்கள் அதில் வெளிப்பட வேண்டும்''.

"புரியவில்லையே''.

"அன்னை நீங்கள் வேண்டுவதையெல்லாம் தருவதற்காக இங்கு வரவில்லை. அவருக்கு ஒரு நோக்கம் உண்டு. பரிணாமத்தைத் துரிதப்படுத்துவது. நம்மளவில் சொல்வதானால், ஒவ்வொரு கணமும் முன்னேற்றம் பெற நாம் விரும்பினால் அது நம்மளவில் ஒரு பரிணாம வளர்ச்சி என்பதால் அன்னை நம்மைத் தாங்கிச் செல்வார்''.

"அதற்கும், வருமானத்திற்கும் என்ன சம்பந்தம்?'', கேட்டோம்.

"ஆமாம், நீங்களும் நானும் தெய்வத்தைக்கூட எவ்வளவு தருகிறார் என்பதை வைத்துத்தானே நெருங்குவோம். நம் சுபாவத்தை ஒட்டியே நம்மை அன்னை மாற்ற விரும்புவதால் தாயுள்ளத்துடன் அந்தக் கயமையைப் பொருட்படுத்தாமல் அபரிமிதமாகப் பக்கிறôர்''.

"ஏற்றுக்கொண்ட பண்புகளுக்கான சட்டங்களைத் தெரிந்து - உதாரணமாக, அதிர்ஷ்டத்திற்கு அடிப்படை உழைப்பு. உழைப்பு சம்பளத்திற்காக அல்லாமல் வேலைக்காகச் செய்யவேண்டும். கடமையை விரும்பிச் செய்து, உரிமையை நிலைநாட்டித் திருப்திபட வேண்டும். தினம் தினம் உழைப்புக்கான திறமையை அதிகப்படுத்த வேண்டும். திறமையை, அறிவை அதிகப்படுத்துவது பரிணாம வளர்ச்சி. அதுவே அன்னை விரும்புவது. அதைச் செய்து பாருங்கள், அதைச் செய்யுங்கள், அடுத்த மாதம் என்ன வருமானம் என்று சொல்லுங்கள்'', சிரித்தபடியே விடை கொடுத்தார்.

புரிவது போல இருந்தது. நியாயம்தானே. இந்த சூபர்வைசர் வேலைக்கு இதுவே அதிகம். அதிகபட்சம் ஆறாயிரம் கிடைக்கலாம். இன்னும் அதிகம் கிடைக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் சீனியர் சூபர்வைசர் ஆகவேண்டும். அல்லது அதற்கு இணையாக வேறு இடத்திற்குச் செல்லவேண்டும் என்றாலும், அதற்கான திறமை, தகுதி வேண்டுமே....

ராஜனைப் பார்த்தேன். அவரும் அதையே யோசித்திருக்க வேண்டும். "கடனே என்று செய்தோம். கடன்தான் வந்தது'' சிரித்தார். "அரசியல் சாசனம்போல அன்னை சாசனம் போலும். அன்னை organisationல் அன்னைச் சட்டப்படி இருந்தால் தான் promotion. போல இருக்கிறது''... வீட்டிற்கு நடந்தோம்.

முதற்கட்டமாக உழைப்பை விரும்பிச் செய்வது, திறமையை அதிகப்படுத்துவதுஎன்று தீர்மானித்தோம். காரணம், சுத்தம் என்ற பண்புக்கான சட்டங்களைப் பின்பற்றினால் அன்னை உடனடியாகப் பலிப்பதைப் பல முறை பார்த்திருக்கின்றோம்.

மறுநாள்.

நாங்கள் வேலை செய்வது ஒரு கெமிக்கல் கோட்டிங் கம்பெனியில். என்றும் எரிச்சல் கொடுக்கும் கெமிக்கல் நெடியும், ஸ்ப்ரேயரின் இரைச்சலும் இன்று வாசனையாகவும் இசையாகவும் தோன்றியது ஆச்சரியமாக இருந்தது. இன்று ஒரு தவறும் வாராமல் அத்தனை பீஸ்களையும் தரமாகச் செய்யவேண்டும் என்று தீர்மானித்து வேலையில் இறங்கினோம்.

பதினொரு மணி. டீ நேரம். ராஜன் ஓடிவந்தார். கண்ணில் நீர். ஒரு கவரை நீட்டினார். படபடப்புடன் பிரித்துப் படிக்க என்னை அறியாமல் நெகிழ ஆரம்பித்தேன். எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து எங்கள் இருவருக்கும் "Special Training Programme on Advanced Coating Systems'' என்ற கோர்ஸில் கம்பனிச் செலவில் சேர்ந்துகொள்ளச் சொல்லி அனுப்பியிருந்தது. தொண்டை அடைத்தது.

என்ன தவம் செய்தோம் அன்னையே உங்களைப் பெற! ஒவ்வொரு க்ஷணமும் அருகிலேயே இருந்து, மனமாற்றத்தை எதிர்பார்த்து..... மாறக்கூட இல்லை.... மாற வேண்டும் என்று நினைத்தவுடன் அதற்கான சூழலைக் கொண்டுவரும் உங்கள் கருணை..... மேலும் நினைக்கக்கூட முடியவில்லை. என்றோ படித்தது ஞாபகம் வந்தது, "நான் எளியவன். என்னை மாற்றிக்கொள்ளும் அறிவு, திறன் எனக்கில்லை. நீங்களே அதையும் செய்ய வேண்டும்.... என்பதெல்லாம் மாற்றிக்கொள்ளும் முடிவு இல்லாதவர் சொல்லும் சொல். மாறவேண்டும்என்ற முடிவுக்கு வந்தவர்க்கு, அதற்கான திறமை, அறிவை நான் அளிப்பேன்'' என்றது புரிந்தது.

ராஜன் தன்னை இழந்திருந்தார். தோளில் தட்டினேன். "இனி வேலைக்காக அன்று, அன்னைக்காகச் செய்வோம்'' என்றபடியே எழுந்து அன்றே கோர்ஸில் சேர்ந்தோம். இரண்டு மாத கோர்ஸ் முடிந்து, கற்றுக்கொண்ட அத்தனைத் திறமைகளையும் முழுதும் வேலையில் வெளிப்படுத்த ஆரம்பித்தோம்.

ஒரு நாள்.

பின்னால் கைதட்டல் கேட்க, திரும்பிப் பார்த்தோம். மொத்த ஊழியர்களும் நிற்க, பொக்கேயுடன் பிருந்தா, எங்கள் ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட். பிருந்தா என்றாலே சந்தோஷம்தான். பாராட்டும், நல்ல செய்திகளையும் மட்டுமே அவரால் பேச முடியும். சின்ன செயலையும் பெரிதாய்ப் பாராட்டி, சம்பந்தப்பட்டவர் ஏதோ பெரிதாய்ச் சாதித்துவிட்டது போன்ற உணர்வை ஊட்டி, ஊக்கப்படுத்துவதில் வல்லவர். இனிப்புகளுடன் ஒரு கவரைக் கொடுத்தார்.

Supervisor-Technical Applications என்று இரு புது பதவிகள் உருவாக்கப்பட்டு, எங்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், சம்பளம் இரு மடங்காக்கப்பட்டிருப்பதையும் பார்த்து திக்குமுக்காடினோம். இதுதான் பண்புகள் மூலம் பலிப்பது என்பதா! அது இவ்வளவு எளிதானதா! இதைத்தான் புரியவில்லை என்று சால்ஜாப்பு செய்துகொண்டு இருந்தோமோ! நினைக்கவே வெட்கமாக இருந்தது.

கிருஷ்ணன் வீட்டிற்கு ஓடினோம்.

"என்ன வருமானம் டபுளாகிவிட்டதா?'' வரவேற்றார்.

"எப்படித் தெரியும்?'' ஆச்சரியத்துடன் கேட்டோம்.

"ஜோசியம் தெரியும்'' சிரித்தார். "அன்னைச் சட்டம் பலிக்கும் விதம் அது. அன்னைச்சட்டங்களே அன்னை. அன்னை விரும்பும் பண்புகளே அன்னை. சரி, அனுபவம் நம்பிக்கையாகிறதா?.....''

"நிச்சயமாக, இனி அன்னையைத் தவிர வேறொன்றுமில்லை என்றிருக்கிறது'', ஒரே குரல் சொன்னோம்.

"அப்படியென்றால் இனி நம்பிக்கை அனுபவங்கள் ஆக வேண்டும். இதை நீங்கள் 10 மடங்கு, 100 மடங்கு உயர்த்த முடியும்.... மற்றும் சில பண்புகளைச் சேர்த்துக்கொண்டால்.....''

"எப்படி?'' கண்கள் விரியப் பார்த்தோம்.

"சுத்தம், ஒழுங்கு, பொய் கூறாமை, தணிவானகுரல், சுமுகம், நிதானம் என்று பல உண்டு. அன்னை மிகவும் விரும்புவது "அகமே புறம்" என்பதைத் தான். புறத்தில் வருபவற்றையெல்லாம் அகத்தின் வெளிப்பாடு என்று பார்த்து, அதற்கு ஏற்ப உள்ளே மாற்றிக் கொண்டால், அதன்மூலம் அன்னை விரும்பும் பண்புகள் வெளிப்பட்டால், வெறும் வருமானம் அல்ல, வெகு உயரத்திற்குச் சென்றுவிடலாம். அவர் இருக்கும் துறை அல்லது கம்பனிக்குத் தலைவராகலாம்.

எதை அதிகப்படுத்தவும் இதைச் செய்யலாம். வீடு, அலுவலகத்தில் சந்தோஷத்தை அதிகப்படுத்த வேண்டும்என்றால் அடிப்படைப் பண்பான சுமுகத்தை எடுத்துக்கொண்டு, அதற்கான சட்டங்களான விட்டுக்கொடுத்தல், other man's point of view, நிதானம் போன்றவற்றை பின்பற்றினால் சுமுகம் என்ற பண்புமூலம் சந்தோஷம் பலிக்கும்'', தத்துவமாக கிருஷ்ணன் பேச, புரியாமல் தலையாட்டிவிட்டு வந்தோம்.

"உங்களுக்கு ஏதாவது புரிந்ததா, ராஜன்''.

"ம்.... நம்மைச்சுற்றி இருப்பவை, நடப்பவை, வருபவை அனைத்தும் நம் உள்ளே இருப்பவை தாம். நாம் முதல் "கெட்டது" என்பது பற்றி யோசிக்க வேண்டாம். "நல்லவற்றை" யோசிப்போம். அவை உள்ளே இல்லாமல் நம் எதிரில் வாராது இல்லையா? அதை அதிகமாக வெளிப்படுத்த முயல்வோம்'' என்றார் ராஜன்.

எனக்கும் அது எளிதாகப்பட்டது. "ஏன் இன்றே பார்ப்போமே.... காலையிலிருந்து யார், யார் நம்மை நாடி வந்தார்கள்.... சர்க்கரை, பிருந்தா, முரளி, மூர்த்தி.... அப்படியென்றால், திறமை இருப்பதாகத் தெரிந்தால் அபரிமிதமாகப் பாராட்டித் தெரியப்படுத்த வேண்டியவர்களுக்கெல்லாம் தெரியப்படுத்தும் பரந்த மனமும், பெயருக்கேற்ற இனிமையும் நமக்குள்ளும் உண்டு என்றாகிறது அல்லவா? அதை வெளிப்படுத்தலாமே''...

"அட, சுலபமாக இருக்கிறதே....''

"அதேபோல பக்தியானாலும், சந்தோஷமானாலும் உளமாற வெளிப்படுத்தும் பிருந்தா நம்முள் இல்லையா.... ஒரு நிமிடமும் தவறாத planning, punctuality  உள்ள முரளி நம்முள் இருப்பாரே..... ஒரு கோடு போட்டாலும் பல முறை சரிபார்க்கும் perfectionist மூர்த்தியும் உள்ளே உண்டுதானே''.... உணர்ச்சிபூர்வமாகப் பேசிக்கொண்டே போனார் ராஜன்.

"நம்முள் இருக்கும் சர்க்கரை, பிருந்தா, முரளி, மூர்த்தியை வெளிக்கொண்டு வந்தாலே போதுமே.... அன்னை விரும்பும் broad mind, joy, organisation, punctuality, perfection என்று எவ்வளவு பண்புகளை வெளிப்படுத்த முடிகிறது.... திரு உருமாற்றம் என்பது புரிவது போல இருந்தது.

"முதலில் ஒரு படி உயரும்போதும் அந்த அந்த நிலைக்கான பண்புகளை வெளிப்படுத்தினாலே போதும் என்று நினைக்கிறேன்'' என்றார் ராஜன்.

"எப்படிச் சொல்கிறீர்கள்?''

"நாம் வெறும் சூபர்வைசர்களாகவோ, சேல்ஸ் ரெப்பாகவோ இருக்கும்போது நம் சக அல்லது கீழ் வேலை செய்யும் ஊழியர்களுடன் தெருமுனையில் தம், டீ அடிப்பது உண்டு. அதுவே இன்று டெக்னீஷியனாக, மானேஜராக இருக்கும்போது அதுபோன்று நிற்க மனம் வரவில்லை. பண்பு, நட்பு என்று நின்றாலும் மனம் உறுத்தும். அதற்குக் காரணம் நாம் இன்று வந்த நிலைக்குத் தேவையான பண்புகளை அங்கு வெளிப்படுத்த முடியாததால் அந்த conflict. உறுத்தல் ஏற்படுகிறது. லேபராக நாம் இருந்தபோது இருந்த நடை, உடை, பாவனை, பேச்சு இன்று நகைப்புக்கு இடமளிக்கும். காரணம், மானேஜருக்கான பண்புகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். அது போல கோடீஸ்வரராக வேண்டுமென்றால் அவருக்கு இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் பண்புகள் இன்று நமக்கு வர வேண்டும். அதுபோல எதிரே வருபவர் பண்புகளை வெளிப்படுத்தினால் அவராகலாம். அன்னையின் அத்தனைப் பண்புகளையும் வெளிப்படுத்தினால் அன்னையாகலாம்''.

பெரிய தத்துவம் எளிதாகப் புரிவதுபோல இருந்தது.

மறுநாள்.....

பெயிண்ட் ஷாப்பில் பாரிஎன்னும் தொழிலாளி சிரத்தையாக ஸ்பிரே செய்துகொண்டிருக்க, என்னுள் இருந்த சர்க்கரை எழுந்தார்.... "பாரி....'' கூப்பிட்டேன். "பின்னாலேயே வா'', விறுவிறுவென்று பர்சனல் மானேஜர் ரூமுக்குள் சென்றேன். "சார், இவன் சின்சியர் தொழிலாளி. பாராட்டும், இன்கிரிமென்ட்டும் இவனை ஊக்கப்படுத்தும். இந்த வாரம் நடக்கும் மீட்டிங்கில் இவரைப் பாராட்ட அனுமதிக்க வேண்டும்''.... ஆச்சரியத்துடன் பார்த்தார். "சரி" என்று தலையசைத்தார். பாரி கண்களில் தெரிந்த நன்றி சர்க்கரையை வாழ்த்தியது.

சிரித்துக்கொண்டே வந்தபோது, ராஜன் கேட்டார், "என்ன வாயெல்லாம் பல்லாக வருகின்றீர்கள்?''....

"சந்தோஷமாக இருக்கிறதா?''

"நிச்சயமாக''....

"அப்பாடா, பிருந்தா வெளிப்பட்டுவிட்டார். இப்படியே punctuality, planning, organisation, perfection என்று வெளிப்பட, அவை அனைத்தும் ஒருவித harmonyஐக் கொண்டுவர கம்பெனி அபரிமிதமாக வளர ஆரம்பித்தது. அன்னையின் ஒரு பண்பும், வேறு பல பண்புகளை உள்ளே இழுத்து வருவதை உணர முடிந்தது. அதிர்ஷ்டத்திற்கு அஸ்திவாரம் அன்னை விரும்பும் பண்புகள். சுபிட்சத்தின் சாசனம் அன்னைச்சட்டங்கள்.

சாதாரண spare partsகளுக்குக் கோட்டிங் என்ற நிலையிலிருந்து செயற்கைக் கோளுக்கான கோட்டிங் என்ற நிலைக்கு வளர்ந்து, அதற்கான இன்டர்நேஷனல் கான்பரன்ஸுக்குத்தான் மும்பாய் வந்திருந்தோம்.

*****

ராஜன் உலுக்கினார். நிகழ்காலத்திற்கு வந்தேன். கண்களில் கண்ணீர் வழிந்திருந்தது. நெகிழ்ச்சியுடன் கேட்டேன், "ஏன் ராஜன், யார் யார் பண்புகளையோ வெளிப்படுத்துகிறோமே, அன்னையின் பண்புகளை வெளிப்படுத்த முடியாதா..... அன்னை நம்முள் இல்லையா.....''

இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டார். "அதுவெல்லாம் பெரிய விஷயம்.....''

"நாம் குழந்தை என்ற அளவில் இருந்தபோது ஆன்மா வெளியில் இருந்தது அல்லவா...... அப்போது அன்னையின் பண்புகள் எனப்படுவது அதில் இருந்தது அல்லவா.....''

"ஆமாம், அப்படித்தான் படித்தேன்....''

"இப்போது நீங்கள் வெள்ளைபேண்ட், வெள்ளைச் சட்டை போட்டு இருக்கின்றீர்கள். அதில் அழுக்குப் படிந்தால் என்ன செய்வீர்கள்?''

"துவைத்து அழுக்கைப் போக்குவேன்''.

"ஏன்?''

"மீண்டும் வெள்ளையாக்கத்தான். என்ன கேள்வி இது?''

"அதுவேதான் நான் கூறுவதும். வெள்ளை பாண்ட், வெள்ளைச் சட்டை வெள்ளையாக இருக்க வேண்டியது அதன் இயல்பு. அதில் மாற்றம் ஏற்பட்டால், நீக்கி, மீண்டும் இயல்புக்குக் கொண்டு வருகிறோம். அதுபோல ஒரு குழந்தைஎன்ற சொல்லுக்கான இயல்புகள் நமக்குத் தெரியும். அல்லது ஆன்மாவின் இயல்புகள், அன்னை, பகவான், நம் குரு வாயிலாகத் தெரியும். அதன் மீது படிந்துவிட்ட அழுக்கு எது என்றும் தெரியும். ஒவ்வொன்றாகக் களைந்து, துவைத்து எடுப்பதுதான் நம் வேலை என்று நினைக்கிறேன்'', மூச்சுவாங்கப் பேசினேன்.

சந்தோஷமாகச் சிரித்தார் ராஜன். "நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 100 பேர், 12 பேர் என்பதெல்லாம்கூட எளிதுபோல இருக்கிறதே....''

"நிச்சயமாக! தேவையானது அன்னைக்குரியவனாக வேண்டும் என்ற மனமாற்றமும், அதற்கான உண்மையான முயற்சியும்தான். விரலை நீட்ட வேண்டியதுதான் நம் வேலை. அன்னையே, பற்றி அழைத்துச் செல்வார்''.

"ஆம், பற்றிக்கொள்ளத்தானே விரல்கள்''.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உயர்ந்த உதவியை வலிய அடுத்தவருக்கு அளிக்க முன்வந்தால் பெரும்பாலும் அவர்கள் அதை அலட்சியப்படுத்துவதைப் பார்க்கலாம். இதுவரை என் அனுபவத்தில்
அதுபோல் அலட்சியப்படுத்தாதவரைப் பார்த்ததில்லை. ஒரு சிலர் அதற்காக நம்மைக் குறைகூறி அவமானப்படுத்தவும் முயல்வார்கள்.
 
உயர்ந்த உதவி வலிய போனால் உயர்வை இழக்கும்.
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூக வாழ்வில் ஒருவருடைய அகந்தை, பரோபகாரமாக வெளிப்பட்டால், அது அடுத்தவரின் அகந்தையுடன் மோதி மேற்சொன்ன பலனைக் கொடுக்கும். பரோபகாரத்தின் மூலம் அகந்தை வெளிவந்தால், அகந்தைக்குரிய பலன்தான்
கிடைக்குமே தவிர பரோபகாரத்திற்குரிய பலன் கிடைக்காது.
 
உதவியுடன் அகந்தை கலந்தால், பலன் அகந்தைக்கு வரும்.



book | by Dr. Radut