Skip to Content

12. வாழ்க்கையை மேம்படுத்த Life Divine கருத்துகள் பயன்படுமிடங்கள்

வாழ்க்கையை மேம்படுத்த Life Divine கருத்துகள் பயன்படுமிடங்கள்

N. அசோகன்

பகவான் இப்புத்தகத்திற்கு The Life Divine என்று பெயரிட்டுள்ளார். Divine Soul அல்லது Divine Mind என்று பெயரிட்டிருந்தால் பொருத்தமாகவிருந்திருக்கும். பூரணயோகத்தில் மனிதனை பகவான் "Soul in the mind'', அதாவது மனதில் உறையும் ஆன்மாஎன வர்ணித்து உள்ளார். அதனால் Divine Soul என்று பெயரிட்டிருந்தால் பொருத்தமாகவிருந்திருக்கும். பூரணயோகத்தின் லட்சியமே Supermind என்ற சத்தியஜீவியத்தை நோக்கிப் பயணம் செய்வதுதான். ஆகவே Divine Mind என்று பெயரிட்டிருந்தாலும் பொருத்தமாகவே இருந்திருக்கும். ஆனால் அவர் Life Divine என்று பெயரிட்டுள்ளார். Divine Matter என்று கூட பெயரிடவில்லை. இதை வைத்துப் பார்க்கும் பொழுது வாழ்க்கையை தெய்வீகமயமாக்க முடியும், அதற்கு இப்புத்தகத்தில் உள்ள கருத்துகள் உதவும் என்று தெரிகிறது.

புத்தகத்திலுள்ள 56 படலங்களும் 56 கருத்துகளைச் சொல்கின்றன. புத்தகத்தின் அடிப்படைக் கருத்து முதல் படலம் துவங்குவதற்கு முன்னரே Fly leaf என்று சொல்லப்படும் = inside First pageஇல் "Omnipresent Reality & The Universe'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பரம்பொருளும் பிரபஞ்சமும் என்று அர்த்தமாகும். இரண்டாம் பாகத்திற்கு முன்னால் The Knowledge and the Ignorance . The Spiritual Evolution என்று பெயரிட்டுள்ளார். இந்த இரண்டாம் புத்தகத்தை மேலும் இரண்டு பாகங்களாகப் பிரித்து, முதல் பாகத்திற்கு The Infinite Consciousness and the Ignorance, அதாவது அனந்த ஜீவியம் மற்றும் அஞ்ஞானம் எனவும், இரண்டாம் பாகத்திற்கு The Knowledge and the Spiritual Evolution ஞானமும் பரிணாமமும் என்று பெயரிட்டுள்ளார். 56 அத்தியாயங்களும், 1450 பாராக்களாகப் பிரிகின்றன. ஒவ்வொரு பாராவும் ஒரு கருத்தைக் கூறுகின்றது.

ஒவ்வொரு படலத்திலும் ஒரு புதிய கருத்தைக் கூறுவதே கடினம். ஆனால் பகவான் ஒவ்வொரு பாராவிலும் ஒரு புதிய கருத்தைக் கூறியுள்ளதாக கர்மயோகி அவர்கள் கூறுகின்றார். இது பகவானுடைய சிந்தனையிலுள்ள originalityஐக் காட்டுகிறது. நூன் அடிப்படைக் கருத்து பெரியது என்றாலும் ஒவ்வொரு தனிப் பாராவிலும் உள்ள கருத்து சிறியதாகவே இருக்கும். ஆகவே அவற்றை விளக்குவதோ, நடைமுறையில் பயன்படுத்துவதோ எளிதாக இருக்கும். நூல் உள்ள சில கருத்துகளை இப்பொழுது குறிப்பிட்டு, அவற்றை விளக்க முயல்கிறேன்.

  1. பகவான் முரண்பாடுகளை உடன்பாடுகள்என்று கூறுகிறார். இக்கருத்து The Human Aspiration என்ற முதல் படலத்திலேயே வருகிறது. இறைவனின் செயல்பாடும் இயற்கையின் செயல்பாடும் மனிதனுடைய அறிவைத் தாண்டியவை என்பதை அழகாக விளக்கும் கருத்து இது. மனிதனுக்கு முரண்பாடாகத் தெரிவது இயற்கைக்கும் இறைவனுக்கும் உடன்பாடுகளாகத் தெரிகின்றன என்றால், அதெப்படிஎன்று மனிதன் ஆச்சரியப்படுகின்றான். மனித வாழ்க்கையிலேயே இத்தகைய முரண்பாடுகள் உடன்பாடுகளாக இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை விளக்கிக் கூறினால்தான் இக்கருத்து விவரமாக புரியும். சற்று நேரத்தில் இக்கருத்தை விவரமாக விளக்குகிறேன்.
  2. Divine Maya என்ற 13ஆம் படலத்தில் பெரியது சிறியதாகிறது. சிறியதற்கு ஒரு இலட்சியம் என்றிருந்தால் அது மீண்டும் பெரியதாவது என்றே இருக்கும் என்றொரு கருத்தைக் கூறுகின்றார். பெரியது என்பது infinite என்பதையும், சிறியது என்பது finiteஐயும் குறிக்கின்றது. சிறியது என்பது எப்படி மீண்டும் பெரியதாக முடியும். Finite and infinite என்ற கருத்துகளை மனித வாழ்க்கையில் நாமெப்படி பொருத்திப் பார்ப்பது என்பதையும் விவரமாகப் பார்ப்போம்.
  3. பிரம்மா, புருஷா, ஈஸ்வரா என்ற படலத்தில் பிரம்மத்தின் பூரணத்தை நாம் அறியும் சொல்லால் கூற முடியாது. வேதம் எழுதப்பட்ட கனத்த மொழியில் சொல்லலாம் என்கிறார். நம் மனநிலையும், பேச்சும் எப்படி மாறினால் நம்மாலும் பிரம்மத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பதைப் பார்க்க வேண்டும்.
  4. சத்புருஷன் (The Pure Existent) என்ற படலத்தில் சிவனுக்கும் காளிக்கும் உள்ள தொடர்பென்ன என்று நாமறிய வேண்டும்ன்கிறார். அதாவது Static Brahman and Dynamic Brahman ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
  5. மாயை என்ற படலத்தில் பிரபஞ்ச மாயை வேறு சங்கரர் கூறும் உலக மாயை வேறு என்கிறார். வித்தியாசம் என்ன என்று பார்க்க வேண்டும்.

Life Divineஇல் உள்ள கருத்துகளை வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னேன். இங்கே நாம் சற்று யோசிக்க வேண்டும். Life Divineஇல் பல புதிய கருத்துகள் உள்ளன என்று தெரியும்பொழுது அவற்றைக் கடைப்பிடித்து ஒரு நல்ல பலனைப் பார்க்க வேண்டுமென்ற ஓர் ஆர்வம் எழுகிறது. இந்த ஆர்வம் தற்காகமானதா அல்லது நம்மை serious ஆகச் செயல்பட வைக்குமா என்று பார்க்க வேண்டும். அன்னை ஸ்ரீ அரவிந்தரிடம் வருவதற்கு முன்பே பல ஆக்கபூர்வமான கருத்துகளையும் ideaக்களையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் கடைப்பிடித்தோமா, என்ன பலன்களைப் பார்த்துள்ளோம் என்பதைக் கருத வேண்டும். ஏற்கனவே பல நல்ல புதிய கருத்துகளைக் கடைப்பிடித்து நல்ல பலன்களைக் கண்டுள்ளோம் என்றால், Life Divine கருத்துகளையும் பயன்படுத்தி நல்ல பலனைப் பார்க்க முடியும் என்று நம்பலாம். ஏற்கனவே தெரிந்ததையே கடைப்பிடிக்கவில்லை என்றால், Life Divine கருத்துகளாலும் பயனில்லை என்றாகிவிடும்.

வாழ்க்கையில் சில பொதுப்படையான நல்ல கருத்துகளும் பண்புகளும் உள்ளன. உண்மை பேசுதல், சுத்தம், சுறுசுறுப்பு, காலம் தவறாமை, கடமையுணர்வு, self-giving, பணிவு, சுமுகம், செய்வதைத் திருந்தச் செய்தல் போன்றவை இதற்கு உதாரணங்கள். சுறுசுறுப்பு, perfection ஆகிய கருத்துகளைப் பயன்படுத்தி எவரும் பயனடையலாம். சாதாரண மனிதன் சுறுசுறுப்பாகவும், perfect ஆகவும் இருந்தால் வாழ்க்கையில் அதற்கு என்ன பலனுண்டோ அது கிடைக்கும். அன்னை பக்தர்கள் Life Divineஇல் பகவான் குறிப்பிடுகின்ற perfect perfectionஐ வாழ்க்கையில் வெளிப்படுத்தினால் வருகின்ற பலன் சாதாரணமாக இருக்காது. வாழ்க்கையில் கிடைப்பதைவிடப் பல மடங்கு பெரிதாக சத்தியஜீவிய சக்தி கொடுக்கின்ற பிரம்மாண்டமான பலனாக வரும்.

ஒரு காரில் பயணம் செய்கின்றோம் என்றால், அக்காரிலுள்ள எல்லாப் பாகங்களும் நல்ல கண்டிஷனில் இருந்து, நல்ல முறையில் இயங்கும் பொழுதுதான், பயணம் smoothஆக இருக்கும். A/c சரியில்லை, அல்லது டயர் சரியில்லை, break சரியில்லை, seat சரியில்லை, A/c சரியில்லை என்று ஏதேனும் ஒரு முக்கியமான பாகம் பழுதாகி இருந்தாலும் அந்த அளவிற்குப் பயணத்திலுள்ள smoothness குறைந்துவிடும். அம்மாதிரியே ஒரு வேலை என்று எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு பாகங்களுள்ளன. எல்லா பாகங்களிலும் perfection வெளிப்படும்பொழுது அது பகவான் சொல்கின்ற perfect perfection ஆகிவிடுகிறது. அப்படிப்பட்ட perfection வெளிப்படும்பொழுது பலன் வாழ்க்கையில் நாம் சாதாரணமாகப் பார்ப்பதைவிடப் பல மடங்கு பெரிதாகவிருக்கும்.

ஒரு கம்பெனி என்று எடுத்துக்கொண்டால் அதில் பல பிரிவுகள் இருக்கும். Production, sales, raw material procurement, accounts, bank dealings, customer relations, machinery maintenance, tax payment, wages, disbursement என்று உட்பிரிவுகள் பலவிருக்கும். எல்லாக் கம்பெனிகளிலும் எல்லா உட்பிரிவுகளிலும் perfection இருக்கும் என்று சொல்ல முடியாது. Productionஇல் உள்ள perfection விற்பனையிலோ அல்லது collectionஇலோ இருக்காது. Accountsஇல் உள்ள நேர்த்தி machinery maintenanceஇலோ அல்லது இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதிலோ இருக்காது. Machinery நல்ல conditionஇல் இருந்தாலும் departmentகளுக்கு இடையில் ஒரு நல்ல co-ordination இல்லாமல் வேலை வேகமாக நடக்காது. ஊழியர்களுக்கு நன்றாக வேலை செய்யத் தெரிந்திருந்தாலும், மார்க்கெட்டில் productற்கு நல்ல demand இருந்தாலும், தேவை இல்லாமல் management-labourக்கு இடையே தகராறு எழுந்து, அதனால் productivity மற்றும் sales பாதிக்கப்படும்.

இப்படியெல்லாம் இல்லாமல் ஓர் அன்னை பக்தர் perfect perfection என்ற Life Divine கருத்தை மனதில் கொண்டு தான் நடத்துகின்ற நிறுவனத்தின் எல்லா உட்பிரிவுகளிலும் நேர்த்தியைக் கொண்டு வந்தாரென்றால் அந்நிறுவனம் அது இயங்குகின்ற துறையில் முதன்மை நிலைக்குக் கண்டிப்பாக வந்துவிடும். வாழ்க்கையில் இப்படி எல்லா இடங்களிலும் perfectionஐக் கொண்டு வந்துள்ள நிறுவனங்களையோ அல்லது ஸ்தாபனங்களையோ பார்ப்பது அரிது. இன்று சிறப்பாகச் செயல்படும் ஸ்தாபனங்கள் எல்லாம் ஏதோவோர் அம்சத்தைச் சிறப்பாக வளர்த்துக்கொண்டு அதன் மூலம் பிரபலம் அடைந்தவைதான். Coca-Cola product qualityக்கு பெயர்போனது. சரவணபவன் ஓட்டல்கள் சுத்தத்திற்குப் பெயர்போனவை. Reliance முதலீட்டிற்குப் பெயர் போனது. இப்படிப் பகுதியின் சிறப்பிற்கே இவ்வளவு பலன் கிடைத்தால் முழுமையின் சிறப்பிற்கு எவ்வளவு பெரிய பலன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

முரண்பாடுகளாக நமக்குத் தெரிபவை இறைவனுக்கும் இயற்கைக்கும் உடன்பாடுகள் என்ற முதற்கருத்தை நாம் இப்பொழுது விவரமாக பார்ப்போம். மனிதனுடைய அறிவிற்கு முழுமையான பார்வை கிடையாது என்பதால் ஒரு பகுதியைப் பார்க்கும் பொழுது மற்றொரு பகுதியை அது விட்டுவிடுகிறது. மேலும் எல்லாவற்றையும் பிரித்து எதிர்மறைகளாகவே பார்க்க நம்மறிவு பழகிவிட்டதால் எதிர்மறைகளாகத் தெரியும் இரண்டு பகுதிகள் உடன்படும் இரு பகுதிகளாக இணைந்து ஒரு முழுமையைக் கொண்டு வரும் என்பதையே நம்மறிவு ஏற்க மறுக்கிறது.

இன்பம்-துன்பம், நல்லது-கெட்டது, பிறப்பு-இறப்பு, வரவு-செலவு, வெற்றி-தோல்வி, இவையெல்லாம் நம்மறிவிற்கு எதிர்மறைகளாகும்.

மேலோட்டமாக எதிர்மறைகளாகத் தெரிந்தாலும், சற்று ஆழமாகப் பார்த்தால் இவை உடன்பாடுகளாகச் செயல்படுவதைப் பார்க்கலாம். இன்பத்தை நாம் நாடுகிறோம், துன்பத்தை விலக்குகிறோம். ஆனால் பகவானுடைய கருத்தின்படி பார்த்தால் நம்மான்மாவிற்கு இரண்டுமே அனுபவங்கள்தாம். இரண்டையும் அது சமமாகவே வரவேற்கிறது என்கிறார். இன்பகரமான அனுபவமாகவிருந்தாலும் சரி, துன்பமயமான அனுபவமாகவிருந்தாலும் சரி, இரண்டின் மூலமும் ஆன்மாவிற்கு ஆனந்தம்தான் கிடைக்கிறது. நாம் அகந்தையின் பிடியில் சிக்கியிருப்பதால் இந்தப் பொதுப்படையான ஆனந்தம் நம் கண்ணிற்குத் தெரிவதில்லை. நம் வாழ்வு மேலோட்டமாக இருப்பதால் இன்பம், துன்பம்என்ற எதிர்மறைகளில் நாம் மூழ்கியிருக்கிறோம். அவற்றிலிருந்து விடுபட முடிவதில்லை.

வெற்றி வேண்டும், தோல்வி வேண்டாமென்கிறோம். தோல்வி என்பது உண்மையில் தோல்வி இல்லை. அது, வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடமாகும். தொழிலில் வருகின்ற நஷ்டத்தை நாம் வெறும் நஷ்டமாகப் பார்க்கக்கூடாது. அதை, புத்தி கொள்முதலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நஷ்டம் என்பது நாம் செய்கின்ற தவறுகளால் வருவது. தவறுகளை நாம் படிப்பினையாக ஏற்றுக் கொண்டால், அவையெல்லாம் புத்தி கொள்முதலாகிறது. இப்படி தோல்வி என்ற அனுபவத்தின் காரணமாக நம்மறிவு வளர்வதால், பின்னால் நம்மால் மேலும் பெரிதாக வெற்றியைத் தேடிக்கொள்ள முடிகிறது. இக்கண்ணோட்டத்தில் பார்த்தால், தோல்வி புத்தி கொள்முதலாக மாறி, பெருவெற்றிக்கு வழிசெய்கிறது என்பது புரியும் பொழுது வெற்றியும், தோல்வியும் எப்படி உடன்பாடுகளாக செயல்படுகின்றன என்பது நமக்குப் புரிகிறது.

பகலும், இரவும் நமக்கு எதிர்மறைகளாகத் தெரிகின்றன. ஆனால் அவையிரண்டும் சேர்ந்ததுதான் ஒரு நாள். பகல் செய்கின்ற வேலையினால் வரும் களைப்பிலிருந்து மீள்வதற்காக நாம் இரவில் உறங்கி எழுகிறோம். நமக்குப் பகல் மட்டும் தான் வேண்டும், இரவு வேண்டாம் என்றால், 24 மணி நேரமும் நம்மால் வேலை செய்து கொண்டிருக்க முடியுமா? நெடுநாள் நம்முடம்பு தான் தாங்குமா? நம் உடம்பிற்கு ஓய்வு தேவை என்பதை இயற்கையே புரிந்துகொண்டு பகலும், இரவும் மாறி மாறி வரும்படி அமைந்துள்ளது.

நம் உடம்பும், உயிரும், இரண்டுமே எதிர்மறையான விஷயங்கள் தாம். உடம்பிற்கு வடிவமுண்டு, ஆனால் உயிருக்கு வடிவமே இல்லை. ஆனால் இவ்விரண்டும் சேர்ந்து செயல்படும் பொழுதுதான் உயிருள்ள உடம்பு கிடைக்கிறது. உயிரில்லாத உடம்பிற்கு நடமாட்டம் கிடையாது. உடம்போடு இணையாமலிருந்தால் உயிருக்கு வெளிப்பாடு கிடையாது.

வாழ்க்கையின் அடிப்படையிலேயே இப்படியொரு முரண்பாடு உடன்பாடாக மாறிச் செயல்படுகின்றதென்றால், வாழ்க்கைக்குள் மேலும் எத்தனை முரண்பாடுகள் உடன்பாடுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடு, வரவு மற்றும் செலவு, பழையது மற்றும் புதியது, Unity and diversity, இயக்கம் மற்றும் ஓய்வு, stability and change, வாய்ப்பு மற்றும் பிரச்சினை, என்றிவையெல்லாமே முரண்பாடான விஷயங்கள் உடன்பாடுகளாக இயங்குவதுதான்.

கட்டுப்பாடுகளே இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கையில் முழுச் சுதந்திரம் கிடைத்தால் அவர் செய்யக்கூடாத தவறுகளை எல்லாம் செய்து தம் வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் சுதந்திரமே இல்லாமல் வாழ்க்கை முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரம்கூட இல்லாமல் போய்விடும். பெற்றோர்கள் செல்லம் கொடுத்து சுதந்திரமாக வளர்த்ததால், கட்டுப்பாடுகளே இல்லாத நிலையில் தவறான பாதையில் சென்று வாழ்க்கையை சீரழித்துக்கொண்ட இளைஞர்களைப் பார்க்கின்றோம். வேலை செய்யுமிடத்தில் சுதந்திரமே இல்லை, அதனால் முன்னேற வாய்ப்பே இல்லைஎன்று பணிபுரியும் இடத்திலிருந்து ஊழியர்கள் வெளி- யேறுவதையும் பார்க்கின்றோம். ஆகவே சீராகவும் முன்னேற்றப் பாதையிலும் போக வேண்டுமென்றால் சுதந்திரமும், கட்டுப்பாடும் வாழ்க்கையில் ஒரு proper proportionஇல் இணைந்திருந்தால்தான் முடியும் என்றாகிறது.

இதே ரீதியில் பார்த்தால் வரவும், செலவும் எதிர்மறைகளாகும். பணம் வருகிறதென்றால் நமக்கு சந்தோஷமாக உள்ளது. அதே சமயத்தில் செலவு என்றொன்று வந்தால், நாம் அவ்வளவு சந்தோஷப்படுவதில்லை. ஆனால் உண்மையில் பார்த்தால் நாம் சம்பாதிப்பதே செலவு செய்வதற்காகத்தான். செலவு என்று ஒன்றில்லை என்றால் சம்பாதிப்பதில் அர்த்தமே இல்லை. மேலும் செலவு செய்தால்தான் நம்மால் சம்பாதிக்கவே முடியும். ஒரு தொழில் செய்து சம்பாதிக்க விரும்பினால் மூலதனம் என்றொரு செலவைச் சந்தித்தே ஆகவேண்டும். அடுத்தவரிடம் சம்பளத்திற்கு வேலை செய்தாலும், நம்முடைய உழைப்பையும், நேரத்தையும் செலவு செய்தால்தான் நாம் செய்த வேலைக்குரிய சம்பளமே கிடைக்கும். இதை வைத்துப் பார்க்கும்பொழுது வருமானத்தை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றவர்கள் செலவையும் அதற்கு நிகராக உயர்த்தவேண்டும் என்றாகிறது.

இறைவனை நாம் சச்சிதானந்தமாகப் பார்க்கும்பொழுது இறைவனை சத்தியமாகவும், ஒளியாகவும், ஆனந்தமாகவும் பார்க்கிறோம். அதே சமயத்தில் படைப்பையும், உலக வாழ்க்கையையும் பார்க்கும்பொழுது அது பொய்யிலும், இருட்டிலும், துன்பத்திலும் மூழ்கியுள்ளதைப் பார்க்கிறோம். சச்சிதானந்தம் பிரம்மத்தின் ஒரு வெளிப்பாடென்றால், படைப்பும் உலகமும் பிரம்மத்தின் மற்றொரு வெளிப்பாடு. இரண்டும் சேரும்பொழுதுதான் பிரம்மம் முழுமை அடைகிறது என்றால் நம்மறிவு அதை ஏற்க மறுக்கிறது. இரண்டுமே மிகவும் முரண்பாடாகத் தெரிவதால், இரண்டும் ஒரே முழுமையின் இரு வேறு பிரிவுகள் என்பது நம்மறிவிற்கு ஏற்புடையதாக இல்லை.

ஆனால் உண்மை என்ன? இன்று சச்சிதானந்தமும், படைப்பும் மிகவும் முரண்பாடாகத் தெரியலாம். இந்த முரண்பாடு நிரந்தரமானது இல்லை. இதையடுத்து ஒரு பெரிய உடன்பாடுவரக் காத்திருக்கிறது. சத்தியஜீவியம் படைப்பில் வெளிப்பட்டு, படைப்பும் சத்தியமயமாகவும், ஒளிமயமாகவும், ஆனந்தமயமாகவும் மாறும்பொழுது அந்தப் பெரிய உடன்பாடு நமக்குப் புரியும். படைப்பிற்குள் மறைந்திருக்கும் உண்மையும், ஒளியும், தெய்வீகமும் மேலிருந்து வரும் சத்திய ஜீவியத்துடன் இணைந்து மேலோட்டமாகவுள்ள முரண்பாடுகளிலிருந்து விடுபட்டு, படைப்பு முழுவதும் இறைமயமாகும் பொழுது அடிப்படையிலுள்ள உடன்பாடு புரியும். மேலோட்டமாக சச்சிதானந்தத்திற்கும் படைப்பிற்கும் இடையே முரண்பாடு உள்ளதாகத் தெரிவது என்பது படைப்பு அறியாமையில் மூழ்கியிருப்பதாலாகும். அறியாமை விலகி உள்ளிருக்கும் தெய்வீகம் வெளிவரும்பொழுது முரண்பாடு மறைகிறது, உடன்பாடு பூரணமாகிறது.

இப்பொழுது சிறியதின் இலட்சியம் பெரியதாவது என்ற கருத்தைப் பார்ப்போம். இங்கே சிறியது என்பது finiteஐயும், பெரியது என்பது infiniteஐயும் குறிக்கிறது. ஸ்ரீ அரவிந்தம் சொல்வதை வைத்துப் பார்த்தால் infiniteஆன பிரம்மம்தான் finiteஆக மாறியுள்ளது என்றாகிறது. அதாவது படைப்பு என்ற லீலையை நிகழ்த்துவதற்காக infinite தன்னை finiteற்குள் மறைத்துக் கொண்டுள்ளது என்று சொல்லலாம். இப்படி, தன்னை மறைத்துக் கொள்ளவில்லையென்றால் படைப்பே நிகழ்ந்திருக்க முடியாது என்றாகிறது.

இப்படி infiniteதான் finiteஆக மாறியிருக்கிறது என்னும் பொழுது இந்த finiteஆல் மீண்டும் பழைய infiniteஆக மாற முடியும் என்றாகிறது. தண்ணீர் ஐஸாக மாறுகிறது என்றால், ஐஸால் மீண்டும் தண்ணீராகவும் மாற முடியும். இன்று நொடித்துப்போய் வறுமையில் வாடுகின்ற ஒருவனுடைய குடும்பம் அவனுடைய பாட்டனார் காலத்தில் செல்வச் செழிப்புடன் இருந்தது என்றால், இன்று வறுமையில் உள்ள அந்தப் பேரனுக்குள் அவனுடைய பாட்டனாரின் செல்வம் மறைந்து இருக்கிறதுஎன்றாகிறது. அவன் விழித்துக்கொண்டு தன் பாட்டனாரைப் போல் தானும் செல்வனாகத் தலையெடுக்க வேண்டும் என்று விரும்பினால் அவனால் அப்படிச் செல்வனாக மாற முடியும்.

ஆகவே infiniteஆன பிரம்மம் தான் finiteஆன படைப்பாக மாறியுள்ளது என்றால், அந்தப் படைப்பு விரும்பினால் மீண்டும் தன்னுடைய ஆதியைச் சென்றடையலாம் என்றாகிறது. சிறியதான finiteகுள் பெரியதான infinite எப்படி மறைந்திருக்க முடியும் அல்லது பெரியது எப்படி தன்னைச் சிறியதாக்கிக் கொள்ள முடியும் என்ற கேள்விகள் நம்மறிவிற்கு எழலாம். நம்மறிவு எழுப்பும் கேள்விகள் பிரம்மத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நம்மறிவின் logicக்கு இது ஒத்துவரவில்லை என்றாலும், infiniteஇன் logicக்கு இத்தகைய மாற்றம் ஒத்துவரத்தான் செய்கிறது.

பிரம்மம் மூன்று வழிகளில் இப்படைப்பை நிகழ்த்தியுள்ளதாக ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார். Self-conception, Self-limitation and Self-absorptionஆகியவை இம்மூன்றுமாகும். இந்த மூன்றாம் முறையான Self-absorption என்பதுதான் தனக்குள்ளே தான் மறைந்துகொள்வதாகும். Self-limitation என்ற முறையின் மூலம் infinite முதல் தன்னை finite ஆக்கிக் கொள்கிறது. Self-absorption என்ற முறையின் மூலம் இந்த finiteற்குள் தன்னுடைய ண்ய்ச்ண்ய்ண்ற்ங் அம்சத்தை மறைத்துக்கொள்கிறது.

இப்படி finite தனக்குள் infinite மறைந்திருக்கிறது என்று உணரும் பொழுது, அதை வெளிப்படுத்த முயலும்பொழுது, infinite வெளிவரும்பட்சத்தில் இதுவரை finiteஆக இருந்தது தானும் infiniteஆகிறது. Finiteஇலிருந்து infinite வெளிவருவதற்குப் படைப்பில் நிறைய நிரூபணங்கள் உள்ளன. ஜடம், அதாவது matter என்பது finite ஆகும். ஆரம்பத்தில் படைப்பில் வெறும்ஜடம் தான் இருந்தது. ஆனால் பரிணாம வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் ஜடத்திருந்து Life வெளிவந்துள்ளது. ஜடத்தைவிட life-force பெரியதாகும். Finiteஆன ஜடத்திலிருந்து infiniteஇன் ஒரு வெளிப்பாடாக life வெளிப்பட்டது. இதோடு பரிணாமம் நிற்கவில்லை.

Lifeஇருந்து மனிதன் என்ற ரூபத்தில் அறிவு வெளிப்பட்டுள்ளது. அறிவு lifeஐவிடப் பெரியது. இதுவும் infiniteஇன் மற்றொரு வெளிப்பாடாகும். பரிணாமம் இங்கே நிற்காமல் மேலும் தொடர்கிறது.

இப்பொழுது அறிவிலிருந்து சத்தியஜீவியமும், சைதன்யமும், அதாவது Supermindஉம் Psychic Beingஉம் வெளிப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அணு என்பது நம் கண்ணிற்குக்கூட புலப்படாத அளவிற்கு சிறியதொரு பொருள் ஆகும். ஆனால் அதை உடைத்தால் அவ்வளவு பிரம்மாண்டமான எனர்ஜி வெளிப்படுகிறது என்பதை வைத்துப் பார்க்கும்பொழுது, finiteகுள் infinite மறைந்துள்ளது என்பதற்கு நமக்கு வேறு நிரூபணமே தேவையில்லை. Finite, infinite ஆகலாம் என்ற கருத்து நம் மனித வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள எப்படி உதவும் என்பதை நாமிப்பொழுது பார்ப்போம்.

நமக்குள் ஏராளமாகத் திறமைகள் மறைந்துள்ளன என்பது ஒரு பெரிய ஆன்மீக உண்மை. ஏதோ ஒரு சில திறமைகளைத்தாம் நாம் வளர்த்துக்கொண்டுள்ளோம் என்றாலும், இவைதாம் நம் திறமைக்கு வரம்பு என்றில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் நாமொரு திறமையை வளர்த்துள்ளோம் என்றாலும், அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றில்லை. அதைத் தாண்டி எந்தவொரு திறமையையும் நாம் அளவுகடந்து வளர்த்துக்கொள்ளலாம் என்பதும் உண்மை.

பாக்கெட்டில் வெறும் 5 அல்லது 10 ரூபாயுடன் ஊரை விட்டு ஓடிவந்து cityக்கு பிழைப்புத் தேடி வந்தவர்கள் சிலர் கடினமாக உழைத்து அபாரமான திறமைகளை வளர்த்துக்கொண்டு இன்று கோடீஸ்வரர்களாக உலகில் நடமாடுவதைப் பார்க்கிறோம். ஒன்றுமே இல்லாமல் ஊரைவிட்டு ஓடி வந்தவர்களால் எப்படி காலப்போக்கில் கோடீஸ்வரர்களாக முடிந்தது என்றால், அவர்களுக்குள் மறைந்து கிடந்த அளவுகடந்த திறமைகளை அவர்கள் உணர்ந்து வெளிப்படுத்தியதால்தான் இது சாத்தியமாயிற்று என்றாகிறது. ஏதோ ஒரு சிலருக்குப் பப்பது எல்லோருக்கும் பலிக்கும் என்பதைத்தான் இப்பொழுது என் தகப்பனார் தம்முடைய கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் வாயிலாக அன்பர்களுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

இலட்சம்ரூபாய் மாத வருமானம் எல்லா அன்னை அன்பர்களுக்கும் சாத்தியம் என்றவர் சொல்கிறார் என்றால், அவரவருக்குள் மறைந்திருக்கும் அபாரத் திறமைகளை அன்னையின் அருளென்ற அபார பலத்தின் உதவியுடன் வெளிப்படுத்தி இந்த வருமானத்தைப் பார்க்கலாம் என்றவர் நம்புகிறார். Finite, Infiniteஆவது என்ற கருத்தை அவரவருடைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நாம் வடிவமைத்துக் கொள்ளலாம். அவரவருக்கு எது வாழ்க்கையின் உச்சகட்டமாகப்படுகிறதோ அதுவே அவர்களுக்கு infiniteஆக அமையும். ஒரு பாக்டரித் தொழிலாளிக்கு முதலாளி ஆவதும், clerical வேலை செய்பவருக்கு ஆபீஸராவதும், ஒரு சிறு விவசாயிக்குப் பெரிய பண்ணையாராவதும், படிப்பறிவில்லாத குடும்பத்தில் பிறந்த இளைஞனுக்கு பட்டதாரியாவதும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கு வசதியான மணமகன் அமைவதும் வாழ்க்கையின் உச்சகட்டங்கள் என்றால், இவையே அவர்களுக்கு infiniteஆக அமைகிறது. அன்னையின் அருட்சக்தி infinite அம்சம் கொண்டது என்பதால், அவரவர் தமக்கு எது infinite என்று நிர்ணயித்துக்கொள்கிறார்களோ, அது அவர்கள் வாழ்க்கையில் பலிக்க அன்னையின் அருள் வழி செய்கிறது.

நாம் வெளிப்படுத்தும் திறமைகளைவிட நமக்குள் மறைந்து இருக்கும் திறமைகள் ஏராளம் என்பது Development Theoryயுடைய முக்கியமானவொரு principle ஆகும். ஆகவே உள்ளிருக்கும் திறமைகள் முழுவதும் வெளிவர வேண்டுமென்றால், நம்முடைய முயற்சியும் அதற்கீடாக அளவுகடந்ததாக இருக்க வேண்டும் என்றாகிறது. அப்படி முயல்பவர்கள் வாழ்க்கையில் அந்த அளவிற்கு infinity வெளிப்படத்தான் செய்கிறது. நம் நாட்டின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஜப்பான் நம் நாட்டைவிடப் பரப்பளவிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி, பத்து மடங்கு சிறிய நாடாகும். ஆனால் அந்நாடு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது பணக்கார நாடாகத் தலையெடுத்திருக்கிறது. அங்கே ஒருவருடைய வருடாந்திரத் தனிநபர் வருமானம் 35,000 டாலராகும். ஆனால் இந்தியாவில் ஒருவருடைய வருடாந்திர வருமானம் வெறும் 470 டாலர்தான்.

ஜப்பானியக் கலாச்சாரத்தில் ஆன்மீகச் சிறப்புகள் இல்லை. நிறைய உடலுழைப்பும், படிப்பும், skilled trainingஉம்தானுள்ளன. அதற்கே இவ்வளவு பெரிய பலன் வரும்பொழுது, ஆன்மீக பலங்கொண்ட நம் நாடு முன்னேற்றத்தில் முழு ஆர்வம் காட்டி, முழு முயற்சி எடுத்தால் எவ்வளவு பெரிய பலன் கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். ஏற்றுமதி மூலம் நம் நாட்டிற்குக் கிடைக்கும் வருமானம் வருடத்திற்கு 30,000 கோடியாகும். ஆனால் சீனாவில் ஷாங்காய் என்ற ஒரு பெரிய மாநகரம் மட்டுமே இதே 30,000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய முடிகிறது என்று நமக்கு வியப்பாக உள்ளது. ஆனால் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சுபிட்சத்தை உயர்த்துவதில் சீனர்கள் பேரார்வம் காட்டுவதால் ஏற்றுமதியில் அவர்களால் இப்படி ஓர் அளவுகடந்த வளர்ச்சியைக் கொண்டுவர முடிந்துள்ளது.

Finite, infiniteஆக மாற வேண்டுமென்றால் அதனுடைய வளர்ச்சிப் பாணியை ண்ய்ச்ண்ய்ண்ற்ங்ற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ள வேண்டும். Finite என்பது எடுக்க எடுக்கக் குறையும். Infinite என்பது எடுக்க எடுக்க வளரும். ஆகவே நாம் finiteஆக செயல்படும் பொழுது செலவைக் குறைத்து வெளியிலிருந்து வருமானத்தை சேகரம் செய்வதை அதிகமாக்க விரும்புகிறோம். அதாவது finite என்பது grows by taking and diminishes by giving. ஆனால் infiniteஇன் செயல்பாடு இதற்கு நேர் எதிர்மாறானது. Infinite என்பது கொடுப்பதன் மூலம் வளர்கிறது. இதற்கு நம் வாழ்க்கையிலேயே உதாரணங்கள் உள்ளன. அறிவு என்பது infiniteஆனவொரு விஷயம். அதை எந்த அளவிற்கு நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு அது வளரும். பணத்திற்கும் இதே அம்சம் உண்டு என்றால் நம்மால் அதை நம்ப முடிவதில்லை.

தொடரும்.....

 

*****



book | by Dr. Radut