Skip to Content

13. கர்மவினையைக் கரைப்பதற்கான பிரார்த்தனை

கர்மவினையைக் கரைப்பதற்கான பிரார்த்தனை

N. அசோகன்

தெய்வீக அன்னைக்கு,

இந்நன்னாளில், கீழ்கண்ட விஷயங்களைத் தங்களின் கருணை நிறைந்த பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றேன். தங்களை அறிந்தது முதல், தங்களின் அருள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளேன் என்பது உண்மை. அதற்கும் மேலாக தவத்திரு கர்மயோகி அவர்கள் எழுதிய புத்தகங்களும், அவரின் சேவை ஸ்தாபனமான Mother’s Service Societyயும், அவரின் வழிநடத்துதலால் இயங்கிவரும் தியான மையங்களும், பல நன்மைகள் எனக்கு ஏற்பட்டதற்கு முக்கியக் காரணங்களாக திகழ்கின்றன. ஆனால், வெள்ளமாக வந்த தங்களின் அருட்கொடை என்னுடைய தவறான கர்மவினையின் சுமையால் சிறு துளியாகக் குறைந்துவிட்டது என்பதை நான் தற்பொழுது உணர்கிறேன். இக்கர்மவினைகள் நான் தங்களை அறிவதற்கு முன்னும், தங்களிடம் வந்தபிறகு தங்களின் குழந்தையாக விளங்குவதற்கான நெறிகளைத் தெரிந்தும் தெரியாமலும் மீறியதால் ஏற்பட்டவற்றிற்கும் பொருந்தும்.

இவ்வாறு ஏற்பட்ட அனைத்துக் கர்மங்களின் சுமையைக் கரைக்குமாறு தங்களைப் பிரார்த்திக்கிறேன். இதற்காகக் கடந்தகாலச் சமர்ப்பணத்தை மேற்கொண்டு, தங்களின் அருளைச் சுருங்கச்செய்த, Mother’s Service Society மற்றும் தியான மையங்களின் தொடர்பு மூலம் வந்த அதிர்ஷ்டத்தை இழக்கச் செய்த என் அனைத்துத் தவறுகளையும் முழுமையாக உணர்வேன் என்று உறுதி கூறுகிறேன். என் அறிவிற்கு எட்டிய அனைத்துக் கர்மங்களையும் சாம்பலாக்க வேண்டி தங்களின் சக்திக்கனலுக்கு அர்ப்பணிப்பேன். என் நோக்கங்கள், எண்ணங்கள், உணர்வுகள், நடத்தை ஆகியவைகளை நேர்படுத்துவேன்என்ற தீர்மானத்தை உளமாற எடுத்து, இனி என்றும் தவறான கர்மத்தைச் சேகரிக்கமாட்டேன்என்று தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நான் செய்த ஏதேனும் பெரிய தவற்றையோ அல்லது செயலையோ என்னால் நினைவிற்குக் கொண்டுவர முடியவில்லையெனில், அவற்றைச் சுட்டிக்காண்பிப்பவருக்கு நான் செவிசாய்ப்பேன்.

இனிய குடிநீரைக் கொண்டுவருவதைத் தடைசெய்யும் குழாயில் உள்ள அழுக்குக் குவியலைப் போன்றது கடந்த காலக் கர்மவினையாகும். குழாயினுள் படிந்துள்ள அழுக்கு கண்களுக்குத் தெரியவில்லை என்பதால், அழுக்கு அதனுள் இல்லைஎன்று அர்த்தமாகாது. குழாயில் தண்ணீர் முழு வேகத்துடன் வாராமல் சொட்டுச் சொட்டாக வெளி வந்தால், குழாயின் உள்ளே வேண்டாத அழுக்கு உள்ளதாகவே அர்த்தமாகும். என்னுள்ளே உள்ள வேண்டாத கர்மவினையின் குவியல் என்னுடைய பர்ஸனாட்டியை அடைபட்ட குழாயைப்போல் மாற்றி உள்ளது என்றுணர்கிறேன். இவ்வாறு தவறான கர்மவினையின் ரூபத்திலுள்ள, அசுத்தங்களால் கரைபடிந்த எனது பர்ஸனாலிட்டியை பரிசுத்தமாக்கி, பிரவாகமாக வரும் தங்களின் அருளை முழுமையாகப் பெற்றுத்தரும் சீரான கருவியாகத் தாங்கள் என்னை மாற்ற நான் சம்மதம் அளிக்கிறேன்.

நான் செய்த அனைத்துத் தவறுகளையும் உணரும் அடக்கத்தை நான் பெறுவேனாக. ஒருவேளை என் அறிவில் தெளிவு இல்லையென்றால், அடுத்தவர் சுட்டிக்காட்டும் என் தவறுகளைக் கோபப்படாமலும், பழிக்காமலும் கேட்டுக்கொள்ளத் தேவையான அடக்கத்தை எனக்குக் கொடுப்பீர்களாக.

இதுநாள்வரை நான் இம்முயற்சியை மேற்கொள்ளாமல் இருந்ததற்கும், அதனால் நான் திருந்துவதற்கான தருணத்தைத் தாமதப்படுத்தியதற்கும் என்னை மன்னியுங்கள். என் குறைகளையும், தவறான கர்மங்களையும் பொருட்படுத்தாமல் என் மீது அருளைப் பொழிந்துவரும் தங்களின் கருணாவிலாசத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.

-  இப்படிக்கு, தங்கள் அன்புக்குழந்தை

*****book | by Dr. Radut