Skip to Content

03.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

நான் சமீபத்திய அன்னை பக்தன் (சுமார் இரண்டு வருட காலம்). பல கெட்ட சுபாவங்களால் மிகப்பெரிய கடன்காரனாகி, வாழ்வா, சாவா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நான் சென்னை கே.கே. நகரில் ஒரு பழைய புத்தகக் கடையில் ரூ.10 விலைக்கு "புஷ்பாஞ்சலி' புத்தகத்தை வாங்கினேன். அதற்குமுன் நான் அன்னையை பற்றியோ, பகவானைப் பற்றியோ அறியாதவன். அதன்பிறகு சில புத்தகங்களைப் படித்தேன். மாம்பலம் தியான மையம் செல்வதுண்டு. "மலர்ந்த ஜீவியம்' படிக்க ஆரம்பித்து சிறிது காலம் கழித்துதான் எனக்கு அன்னை மீதும், பகவான் கருத்துகள் மீதும் முழு நம்பிக்கை ஏற்பட்டது. சரியான நேரத்தில், சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொண்டேன். இன்னும் சொல்லப்போனால், அன்னையே என்னை அழைத்துக்கொண்டதாக உணர்ந்தேன். ஆன்மீகத்தில் நீண்ட நாள் ஈடுபாடு உள்ளவன் நான் எனினும், எந்த உயர்ந்த நிலைக்கும் போகவில்லை. அன்னை தத்துவங்கள் முற்றிலும் மாறுபட்டவையாகவும், எனக்குப் பொருந்துவதாகவும் உள்ளன. இனி, என் சமீபத்திய அனுபவத்தைச் சொல்கிறேன்.

என் மகன் 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றுள்ளான். அவனை 11ஆம் வகுப்பு சேர்க்க என்னிடம் பணம் இல்லை. எல்லாப் பள்ளிகளிலும் சேர்க்கை முடிந்துவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் அன்னையிடம் இந்தப் பிரச்சினையை ஒப்படைத்து, ஓர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்தேன். அவர் first group தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால், பணம் இல்லை. நாளையே பணம் கட்டியாக வேண்டும் என்று கூறினார். முடிச்சூர் அக்ஷயா டிரஸ்டில் விண்ணப்பம் செய்தேன். அவர் பணம் கொடுத்து, "உடனே செல்லுங்கள்' என்று கூறினார். அப்பணத்தை எடுத்துக்கொண்டு நான் பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கும்போது, அந்தப் பணம் ஒருவனால் பிக்-பாக்கெட் அடிக்கப்பட்டது. அதை நான் உடனே உணர்ந்தேன். பாக்கெட்டில் பார்த்தால் பணம் இல்லை. அந்தத் திருடன் அப்பணத்தை பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் போட்டான். அதையும் பார்த்துவிட்டேன். அவன் சைகையால், பெண்களை "சொல்ல வேண்டாம்' என்று மிரட்டினான். நான் உடனே சென்று பணத்தை எடுத்துக்கொண்டு, அவனைப் பிடிப்பதுபோல பாவனை செய்தேன். அவன் ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து விட்டான். இந்தச் சம்பவத்திலும் எனக்கு ஒரு இலாபம் உண்டு. என்னவென்றால், தி.நகரில் இறங்கி நீல நிற யூனிபார்ம் எடுத்து இருப்பேன். ஆனால் திருடர்கள் இறங்கிய அதே இடத்தில் இறங்க வேண்டாம் என்று பள்ளிக்கூடம் வந்து, இறங்கி, ஸ்கூல் பீஸ் கட்டினேன். அவர்கள் சிவப்பு நிற யூனிபார்ம் எடுக்கச்சொன்னார்கள். அன்னையின் ஒவ்வொரு செயலும் என்னை பிரமிக்க வைக்கிறது. எந்தக் காரியத்தையும், பிரச்சினையையும் அன்னையிடம் முழுமையாக அர்ப்பணிக்கும்பொழுது முழு நற்பலன் கிடைப்பதை நான் உணர்கிறேன். நன்றி!!

*******
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

கையால், ஒரு சமயம், ஒரு காரியத்தைத்தான் செய்ய முடியும். ஏனெனில், பொருள்களைப் பயன்படுத்தவேண்டிய தேவையிருப்பதால் ஒரே சமயத்தில் பல காரியங்களைச் செய்ய முடியாது. மனத்தால் ஒரே சமயத்தில் பல விஷயங்களைச் சிந்திக்க முடியும்.

கைக்கு ஒரு காரியம். மனத்திற்கு பல எண்ணம்.


 


 


 


 



book | by Dr. Radut