Skip to Content

08.பண்பு தரும் பலன்

"அன்னை சுபிட்சம்"

பண்பு தரும் பலன்

திறமை, சாமர்த்தியம், பயிற்சி, அனுபவம் பலன் தரும். பண்பு இவற்றை எல்லாம் உயர்த்தும் பாங்குடையது. திறமைக்குப் பெரும்பலனிருந்தால், பண்புள்ள திறமைக்கு முழுப்பலன் உண்டு. கடை வியாபாரம் திறமையை வெளிப்படுத்தும். திறமையற்றவரால் நிர்வாகம் செய்ய முடியாது. திறமையுடன் நாணயமும் சேர்ந்தால் அக்கடை ஊரில் பிரபலமாகும். இவை எளிய பண்புகள். இருப்பினும் கடைப்பிடிப்பது கடினம். சென்னையில் 40 ஆண்டுகளுக்குமுன் ஆரம்பித்த fertilizer company 100 கோடி மூலதனமுடையது. அமோகமாக ஆரம்பித்து, பெருக ஆரம்பித்த நேரம் மார்க்கட் சரிய ஆரம்பித்தது. சரியும் மார்க்கட் முன் எந்தத் திறமையும் பலிக்காது. ஆனால் பண்பு - ஆன்மீகத்திறன் - பலிக்கத் தவறாது. 100 கோடி முதல் கண்ணெதிரே கரைவதை முதலாளி பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? ஆபீசர்களும், தொழிலாளிகளில் பலரும் அஞ்சி நடுங்குகின்றனர். கம்பனியை மூடினால் அவர்கள் கதியென்ன? பீதி பிடித்துக்கொண்டது. எத்தனை நாள் இன்னும் என்பது கேள்வி. முதலாளி அசையவில்லை. அவர் நிதானம் கலையவில்லை, குலையவில்லை. அவர் குடும்பம் 900 ஆண்டுகளாகச் செல்வம் பெற்ற குடும்பம். அவர் மனதில் கேள்வியில்லை. அந்த நிதானம் ஆன்மீகப் பக்குவத்திற்குரியது. மார்க்கட் அவர் பாங்கை ஏற்றது; பரிசு கொடுத்தது. சரியும் மார்க்கட் எழ ஆரம்பித்தது; கம்பனி பிழைத்தது. இன்று 3000 கோடி கம்பனியாக அது விளங்குகிறது.

நிதானம் பெரியது. எது அழிந்தாலும் அழியாதது நிதானம்.

அழிவைத் தடுத்து ஆதரவைத் தரவல்லது நிதானம். அது ஆன்மீகப் பண்பு.உலகப் பொருளாதார நெருக்கடி 1929-32இல் உலகை ஆட்டுவித்தது. 100 கம்பனிகளில் 80க்கு மேல் மூடினர். மீதி கம்பனிகளில் 80 சதவீதம் ஆள் குறைப்பு செய்தனர்.IBM அன்று பெரிய கம்பனி. இன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் மிகச் சிறியது. வாட்சன் CEO "வேலையை இழப்பது என்பது பயங்கரமான சிம்மசொப்பனம். எனது கம்பனியில் நான் ஒருவரையும் வேலை நீக்கம் செய்யப்போவதில்லை'' என்றார். அவரெடுத்த முடிவு நெருப்பாற்றில் எதிர்நீச்சல் செய்வதாகும். அது தமக்காக எடுத்த முடிவன்று. பிறர் நலனுக்காக எடுத்த முடிவு. அது பண்பின் சிகரம். பண்பு என்பது ஆன்மாவின் திறன். மார்க்கட் சரிவது ஆபத்து. 1930-இல் மார்க்கட் மறைந்துபோகிறது. மாயமாய் மறையும் மார்க்கட்டில் வேலையாட்களைக் குறைக்காமலிருக்க அனைவரும் அசுரவேகத்தில் வேலை செய்ய வேண்டும். மனம் மனோவேகத்தில் செயல்பட வேண்டும். ஒரு பைசாவும் விரயம் செய்ய முடியாது. இத்தனையும் செய்தால் மட்டும் பிழைக்க முடியுமா? இத்தனையும் செய்தபின் ஆத்மா வெளிவரும். அது எவராலும் முடியாததைச் செய்யும்.IBM பிழைத்துக்கொண்டது. இன்று அது உலகப் பிரசித்திப்பெற்ற கம்பனி.

பண்பு பலன் தரும், தவறாது தரும்.

பொறுப்புணர்ச்சி சிறப்பான பண்பு. சொந்தக் கம்பனிகளில் முதலாளி பொறுப்பாக இருப்பார். பொது ஸ்தாபனத்தில் அப்பொறுப்புணர்ச்சி இருக்காது. அப்படி ஒரு பொது ஸ்தாபனம். ஆரம்பத்தில் ஆர்வத்தோடு முதல் போட்டவரைத் தலைவர் விலக்கிவிட்டார். மேனேஜர் பொறுப்பில் உள்ளவருக்குப் பணம் எழுப்பும் அதிகாரமில்லை. பெரிய ஸ்தாபனம். சொத்திருந்து வருமானமில்லை. நிர்வாகச் செலவு அதிகம். மேனேஜர் எதுவும் செய்வதற்கில்லை. பணம் போட்டவரை விலக்கிய தலைவர் நிர்வாகப் பொறுப்பை அனுபவமோ, படிப்போ, அறிவோ இல்லாத முக்கியஸ்தரிடம் கொடுத்தார். ஸ்தாபனம் மேனேஜரால் கட்டிவளர்க்கப்பட்டது. ஊழியர்கள் மேனேஜரை மட்டும் அறிவார்கள். பணம் போட்ட முதலாளியையோ, இன்று நிர்வாகப் பொறுப்பை ஏற்ற Directorயோ அறியமாட்டார்கள். மேனேஜர், "இந்தச் சொத்தைத் தலைவர் என் பொறுப்பில் கொடுத்தார். யார் பொறுப்பை ஏற்றாலும், ஏற்க மறுத்தாலும், நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் நானே பொறுப்பு'' என்ற முடிவை எடுத்தார். பெருஞ்சிரமத்திற்குப்பின் நிலைமை சாதகமாக மாறி பெரும்பணம் குவிந்து, திட்டம் அபரிமிதமாகப் பெருகித் தமிழ்நாடெங்கும் பிரபலமாயிற்று. மும்பையில் அதிகாரிகள் கேள்விப்பட்டுத் திட்டத்தைப் பார்வையிட வந்தனர். இச்சமயம் powercut வந்து அத்தனையும் பாழாகிவிட்டது. அடுத்த ஆண்டு சொச்சநச்சம் உள்ளதைக்கொண்டு ஒருவாறு சமாளிக்கலாம் என்றபொழுது, பெரும்புயல் உருவாகி 80 பேர் உயிருக்கும் பேராபத்து வந்து, ஆச்சரியமாகப் பிரார்த்தனையால் விலகியது. திட்டம் புயலால் நாசமாகியது. அடுத்த வேளை உயிர்வாழ இடமில்லை, வேலைசெய்ய ஆளில்லை.சொல்லப்போனால் எதுவுமில்லை. அது 1972. ரூ.5000 இல்லாவிட்டால் மீதியுள்ள சொத்தையும் காப்பாற்ற முடியாது என்பது நிலை. நிர்வாகப் பொறுப்பை ஏற்றவர், புராஜக்ட் தம் பெருமையை நிலைநாட்டும் என எதிர்பார்த்தவர், அதுவரை இருந்த உற்சாகத்தை இழந்தார். அன்றைய அவல நிலைக்குப் பொறுப்பேற்க மறுத்தார். மேனேஜருக்கு அப்பொறுப்பில்லை. ஆனால் அவர் கட்டி வளர்த்த ஸ்தாபனம்,

ஊழியர்கள், அவர்கள் பொறுப்பைத் தாமே ஏற்க முடிவு செய்தார்! முடிவு நிறைவேறுவது கனவு, அதுவும் பகற்கனவு. அன்று அந்த 5000 ரூபாய் சொத்தில் 1/20 பங்கு மூலதனத்திற்குச் சமம். ரூ.50 கடன் பெறும் நிலையில் மேனேஜரில்லை. "நான் செய்த வேலை சத்தியமானால், நான் ஏற்ற பொறுப்பு உண்மையானால், இந்த 5000 ரூபாய் எனக்குக் கடனாகக் கிடைக்கும்'' என்ற முடிவை எடுத்து, முதல் தம் கண்ணில் படுபவரைக் கேட்பதாக முடிவு செய்து, தமக்குரிய ஸ்தாபனத்தை நோக்கி நடந்தார். 70 வயதான பிரியமான பெரியவர் அவரை வழிமறித்து, தம் வீட்டிற்கு அழைத்தார். "நான் ஒரு முக்கிய காரியமாகப் போகிறேன். மாலையில் வருகிறேன்'' என்றார். பெரியவர் அவரை அணைத்துக்கொண்டு, "என்னிடம் அதைச் சொல்லேன்'' என்றார். அன்பர் விவரம் கூறினார். இருவரும் பெரியவர் வீட்டிற்குப் போனார்கள். பெரியவர் 5000 ரூபாய் கொடுத்து, "இது கடனன்று, நன்கொடை'' என்றார்.

பண்பு பலன் தரும், பவித்திரமான பலன் தரும்.

*******


 


 


 


 book | by Dr. Radut