Skip to Content

03.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

                             (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சிறியவன் - அப்பா, நடந்தது, நடக்கவேண்டியது, நாம் செய்ய வேண்டியது, எல்லாம் விளக்கமாகச் சொல்லுங்கள். நீங்கள் கண்டிக்காமல் நாங்கள் திருந்தமாட்டோம். கண்டித்து விடுங்கள்:

. ஒரு மாதம் அனைவரும் கட்டுப்பாடாக இருந்ததால், turnover செலாவணி நிகர இலாபமாகிவிட்டபின் சிறியவன் மேற்சொன்னபடிப் பேசுகிறான்.

. சௌகரியம் தரும் சந்தோஷம் இது. கணக்கில் சேராது, என்றாலும் நல்ல வார்த்தை என்ற அளவில் நல்லது.

. இது கணக்கில் சேராது எனில், எது கணக்கில் சேரும்?

. சௌகரியத்தைப் பார்த்தும் சந்தோஷப்படாமல், நம்பிக்கையில்லாமல் பேசுவதை விட இது சரி.

. எங்களைக் கண்டித்துவிடுங்கள் என்பதை நீங்கள் கண்டித்து மாறுவதற்குப் பதிலாக நாங்களே மாறிக் கொள்கிறோம் என்பது கணக்கில் சேரும்.

. அப்படிச் சொல்வது ஆர்வம் (aspiration).

. ஆர்வம் எப்படி எழுகிறது? ஆர்வம் என்பதென்ன?

. பிரம்மம் சிருஷ்டியுள் வந்தது, மீண்டும் அதன் இடத்தை அடைய எழும் சக்தி ஆர்வம்.

. ஏன் குழந்தை வளர்கிறது? விதை முளைக்கிறது? இந்த சக்தி முளையில் இலையாக, குழந்தையில் வளர்ச்சியாகக் காண்கிறது.

. கண்டித்தால் திருந்துவோம் எனக் கூறுவது ஆர்வம்.

. வீட்டில் நடப்பதைக்கண்டு, எங்களுக்கு அன்னை வேண்டும் என்பது ஆர்வம்.

. ஆர்வத்தின் நிலைகள் பல, ஆனால் ஆர்வம் ஒன்று.

. பிறப்பில் காணும் சக்தி ஆர்வம், இறப்பில் காண்பதுவும் ஆர்வம்.

. மனிதனுக்கு ஒன்று சரி, மற்றது சரியில்லை.

. சத்தியஜீவியத்தையடையும் ஆர்வமும், ஜடம் அசையும் ஆர்வமும் ஒன்று என்றறிவது பிரம்மஞானம்.

. இரண்டும் அனந்தமான சக்தியானதால் சமம்.

பார்ட்னர் - பெரிய இடத்திற்குச் சமமாக நாம் உயர்வது சாத்தியமா?

. பெண், மனம் காற்றில் பறக்கிறது என்றாள். பெரியவன் பெரிய அந்தஸ்து வந்துவிட்டது என்றான். தாயார் இவையிரண்டும் பணத்தைவிட உயர்ந்தவை. எல்லா அன்பர்கட்கும் வந்தது. காப்பாற்றியவர் குறைவு. இல்லைஎன்று கூறலாம் என்றார். கணவர் பெரிய இடங்களில் பழகத் தெரியவில்லைஎன்றபொழுது பார்ட்னர் மேற்கூறிய கேள்வியைக் கேட்டார்.

. இதில் கருதவேண்டியவை சில:

1. வந்ததைக் காப்பாற்றவேண்டும்.

2. பெரிய இடத்திற்குச் சமமாக உயரவேண்டும்.

3. உயராவிட்டால் வந்தது போய்விடும்.

4. சமயத்தில் மானம் போகும்.

5. இவற்றுள் புதைந்துள்ள தத்துவங்களைக் காணவேண்டும்.

. பெரிய இடம், சமூகத்தில் பெரிய இடம். அன்னை ஜீவியத்திற்குப் பெரிய இடமில்லை. அன்னை ஜீவியமிருந்தால் நாம் பெரிய இடத்திலும் முக்கியமாக இருப்போம்.

. அந்தஸ்தைக் கொடுத்த அன்னை ஜீவியம், அதற்குரிய அடிப்படை இலட்சணங்களைக் கொடுத்துவிடுகிறது. நம் பங்கு அவற்றை நல்ல முறையில் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும். பணம், படிப்பு,அந்தஸ்து முக்கியம். தாழ்ந்தோருக்கு அவையில்லை. சமூகம் வளரும் பொழுது வாய்ப்பு அதிகரிப்பதால் தாழ்ந்தவர் அவற்றைப் பெறுகின்றனர். அவற்றைப் பெற்றபின் வீடு, உடை, மொழி, பழக்கம், பண்பு, ஆகியவற்றை அவர் முயன்று பெறவேண்டும். அவை தோற்றம். இவைகட்கெல்லாம் மையமாக இருப்பது ஜீவியத்தின் அகந்தை ego of social consciousness . அகந்தை எளிதில் பழையபடிச் செயல்படும். அகந்தையை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது சிரமம். ஜீவியம் உயர்ந்தபின் பழைய அகந்தையை நாம் விட்டுவிட்டால், புதிய ஜீவியம் அகந்தையின்றிச் செயல்படும். தவறு வாராது. புதிய நிலைக்குரிய அகந்தையைப் பெற முயலாவிட்டால் அடக்கம் எழும். நடைமுறையில் பழைய அகந்தையை புதிய நிலையில் வெளிப்படுத்துவது வழக்கம். அது அசம்பாவிதமாகும்.

. ஜீவியத்தை அன்னை வளர்த்தால் நாம் அகந்தையை வளர்க்க முயன்று ஜீவியத்தை இழக்கிறோம்.

. ஜீவியம் வளரும்பொழுது அகந்தையை அழித்து வளரும்.

. ஜீவியம் செயல்பட அகந்தை தேவையில்லை. தடையாக இருக்கும்.

. எதை அழிக்க அருள் வருகிறதோ அதைப் பயன்படுத்தி அதற்கு எதிரானதை வளர்க்க முயல்வதின் விளைவு இது.

. தடையைத் தகர்த்து எழும் வளர்ச்சியைப் பயன்படுத்தி ஏன் மனிதன் தடையை வளர்க்கிறான்?

. உடலிலிருந்து மனத்திற்குப் போவது வளர்ச்சி. வளர்ச்சிக்குரிய பழக்கம் உடலிலிருக்கிறது. மனத்தில் அப்பழக்கம் வரவில்லை. வெளிநாடு போனால் அம்மொழி கொஞ்சம் கற்றுக்கொண்டால் தெரிந்தவரை பேசுகிறோம். மேலே தாய்பாஷை வருகிறது. வெளிநாடு போகுமுன் தேவைப்பட்ட அளவு அம்மொழியை அறிவது அந்நாட்டைப் பெரிதும் அறிய உதவும்.

தாயார் - வேலை உள்ளேயிருக்கிறதுஎன்பது அதுதான்:

. பெரிய இடத்து அழைப்பு வந்தால் டென்ஷன் வருகிறது என்பது கணவர் பிரச்சினை. வந்தபின் அழைப்பை மேற்கொண்டால் அமைதி வரும் என்பதும் அவர் அனுபவம்.

. வேலை உள்ளேயிருக்கிறது என்பது self-conception தன்னிச்சையாக பிரம்மம் செயல்படுவதின் பிரதிபலிப்பு.

. தத்துவம்: பிரம்மம் தன் இச்சையால் ஒரு ரூபத்தை (சொரூபத்தை)உற்பத்தி செய்கிறது. சொரூபம் சுபாவத்தைத் தாங்கிவருகிறது. சுபாவம் சொரூபத்தின்மூலமாக வெளிப்பட சலனம் தேவை. அது சுமுகமான சலனமானால், உரிய சந்தர்ப்பத்தில் உரிய முறை வழியாகச் சுபாவம் சொரூபத்தால் வெளிப்படுவது சிருஷ்டியின் சுருக்கம்.

. கணவருக்காக வந்தது பெரிய இடத்து அழைப்பு. அது சந்தர்ப்பம்.அவருக்கு டென்ஷன் வருவது சுபாவம். அழைப்பு ரூபமுடையது. அவர் தம் இச்சையாகச் செயல்படுவதற்கு choice உண்டு. டென்ஷன் ஒரு புறம்; அமைதி அடுத்த பக்கம்.Choiceஅவருடையது. டென்ஷனை அமைதியாக்குவது உள்ளே அவருடைய வேலை. விருந்து என்ற இடத்தில் நடக்கும் செய்திகள் அவருக்கு உள்ளே பெருஞ்சலனம் தரும். அவருடைய நடத்தை, பேச்சு, எண்ணம், ஆகியவை அவருடைய உள்சந்தர்ப்பங்கள்.

. டென்ஷனுக்குப் பலன் அவமானம்.

. அமைதிக்குப் பலன் அந்தஸ்து.

. இரு பலன்கட்கும் முறை ஒன்றுதான்.

. முடிவு நம் கையில் choiceஆக இருக்கிறது.

. பிரம்மத்தின் செயலும், நம் செயலும் ஒன்றே.

. அதற்குக் காரணம் நாமும் உள்ளே பிரம்மம்.

. நாம் பிரம்மமாக இருக்கலாமா, மனிதனாக இருக்கலாமா என்பது நம் choice.

. மனிதன் செய்வது படபடப்பு; பெறுவது அவமானம்.

. பிரம்மம் செய்வது அமைதி; பெறுவது அந்தஸ்து.

. வேலையை வெளியிலிருந்து உள்ளே கொண்டுபோவது முதற்கடமை.

. Choiceஅடுத்தது.

. அமைதி மூலம் choice செயல்பட பொறுமையாக இருப்பது பலன் தரும்.

கணவர் - நாம் அடிப்படையில் மாறவேண்டும், அளவுகடந்து உயர வேண்டும். அபரிமிதமான பெரியமனசு வேண்டும். இது சரியான திருவுருமாற்றம். ஏன், அன்னையிருந்தவரை தமிழ்நாடு அவரை அறியவில்லை? உலகம் அறியவில்லை என இப்பொழுது விளங்குகிறது. மனிதன் மட்டமானவன், சிறியவன், இவனால் உயரமுடியாது:

. எந்த மகானும் அவரிருந்த காலத்தில் அவரூரில் பிரபலமாக இல்லை.இது அனுபவம். இதனுள் உள்ள தத்துவம், "விளக்கின் அடியில் இருட்டு"என்பது. ஏன் விளக்கின் அடியில் இருட்டு இருக்க வேண்டும்?

. சிருஷ்டி இரட்டையாலானது.

. ஒளியின் அருகில் இருட்டு இருப்பது சிருஷ்டியின் தத்துவம்.

. மீண்டும் ஏன் இந்தத் தத்துவம்?

. மனிதன் மனத்தால் செயல்படுகிறான்.

. மனம் பொருளையோ, விஷயத்தையோ முழுமையாகக் காண முடியாது. பகுதியாகப் பிரித்து ஒரு பகுதியை ஒரு சமயத்தில் காணும்.

. ஏன் மனம் இத்தன்மையானது?

. ஞானம் அஞ்ஞானமானால், பிரம்மம் அதனுள் ஒளியலாம்.

. ஞானம் அஞ்ஞானமாக மனம் பகுதியான கருவியாக உதவுகிறது.

. மனம் முழுமையாக இருந்தால் அஞ்ஞானம் ஏற்படாது.

. அஞ்ஞானம் ஏற்பட மனம் பகுதியாகச் செயல்படுகிறது.

. ஞானமான மகானை அஞ்ஞானமாக மனிதன் அறிவதால் - அவன் மனம் அஞ்ஞானத்தைமட்டும் காண்பதால் - சிருஷ்டி செயல்பட முடிகிறது.

. அன்னையை உலகம் அறியாததும், தமிழ்நாடு அறியாததும், புதுவை அறிய மறுத்ததும் மனிதன் தன் choiceஐ அஞ்ஞானத்திற்கு விரும்பிக்கொடுப்பதாகும்.

. அடிப்படையில் நாம் மாறவேண்டும் என்பது நம் choice ஞானத்திற்கு வரவேண்டும்.

. மனிதன் உயருவது, அஞ்ஞானத்தில் உயருவான். அபரிமிதமான பெரிய மனம் அஞ்ஞானத்தைக் கடந்து ஞானத்தை எட்டவல்லது.

. மற்றவர் கண்ணோட்டம் என்பது இதுவே.

. மனிதனால் உயரமுடியாது என்றால், அவனுக்கு உயரப் பிடிக்கவில்லை எனப் பொருள்.

. இக்குடும்பத்தில் "நான் ரங்கன் மந்திரியாக வேண்டும் என்று சொன்னால், அவன் மந்திரியாகி விடுவான் எனில், நான் அப்பாவத்தைச் செய்யமாட்டேன்"என்ற மனம் ஆட்சி செய்கிறது. அங்குப் பெரிய மனம் அவசியம்.

பார்ட்னர் - சைத்தியப்புருஷன் ஜீவாத்மாவைவிட நமக்குப் பலன் தருவதிலும், உண்மையிலும் உயர்ந்தவன் என்பதை அறிய விரும்புகிறேன்:

. அவசரக்காரன், கோபக்காரன், திறமையற்றவன், மடையன் ஆகியவர் வாழ்வைச் சேர்ந்தவர். நிதானமானவர், சாது, திறமைசாலி,புத்திசாலி ஆகியவர் ஆன்மவளர்ச்சியுள்ளவர். இங்கு ஆன்மா என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. நிதானம் ஒரு சமயம் தவறும், புத்திசாலி புத்தியில்லாமலும் சில காரியங்களில் நடப்பதுண்டு. நிதானமான சாது திறமையும், புத்தியும் நிறைந்து இருப்பதுடன், சில சமயங்களில் இனிமையாகவும், இதமாகவும்,கனிவுடனும் இருப்பதுண்டு. அப்படிப்பட்டவருக்குக் கோபமே வாராது.அவர் நிதானம் எப்பொழுதும் தவறாது. அவர் கையால் செய்த எந்த வேலையும் தவறியதில்லை. எதிரியுடனும் இனிமையாக இருப்பவர் அவர்.

. முதல் சொல்லியவர் வாழ்வுக்குரியவர்.

. அடுத்தாற்போல் சொல்லியவர் ஆத்மாவுக்குரியவர்.

. முடிவாகக் கூறியவர் சைத்தியப்புருஷனுக்குரியவர்.

.மனிதன் என்பவன் உடல், உயிர், மனம், ஆன்மாவாலானவன். இவ்வுடலும், உயிரும், மனமும் ஆன்மாவின் வெளிப்பாடுகளே. ஏனெனில், அனைத்தும் ஆன்மாவே. உடல் உழைப்பால் உயிர் வெளிப்படுகிறது. உயிர்உழைப்பதால் மனம் ஏற்படுகிறது. மனம் உழைத்தால் ஆன்மா வெளிவருகிறது. இதற்குப் பரிணாமம் எனப் பெயர்.

. உடலிலிருந்து உயிரும், மனமும் வெளிவருவதுபோல் ஆன்மாவில் இருந்து முடிவாக வெளிவருவது சைத்தியப்புருஷன். உடலுக்குரிய சைத்தியப்புருஷன்.

. அதே போல் சைத்தியப்புருஷன் உயிரிலிருந்தும், மனத்திலிருந்தும் வெளிவரும். அவை உயிருக்குரிய சைத்தியப்புருஷன், மனத்திற்கு உரிய சைத்தியப்புருஷன் எனப்படும்.

. மனத்தின் சைத்தியப்புருஷன், உயிரின் சைத்தியப்புருஷன்,உடலின் சைத்தியப்புருஷன் ஆகியவை சேர்ந்தது (central psychic being) சைத்தியப்புருஷனாகும்.

. ஜீவாத்மா பாங்கில் உள்ள நம் டெப்பாசிட்போன்றது. சைத்தியப்புருஷன் வியாபாரத்தில் போட்ட முதல் போன்றது. பாங்கில் டெபாசிட் இருப்பது நல்லது.

. பாங்க் டெப்பாசிட் வட்டி தரும்.

. வியாபாரத்தில் உள்ள முதல் இலாபம் தரும்.

. பாங்கில் பணம் பத்திரமாக இருக்கும்.

. வியாபாரத்தில் ரிஸ்க் உண்டு.

. இலாபம் வரும் இடத்தில் நஷ்டமும் வரும்.

. இலாபம் உபரியானால் வட்டியைப்போல் பல மடங்காகும்.

. பாங்க் டெப்பாசிட் மெதுவாக வளரும். வியாபாரத்தில் முதல் விரைவாக வளரும்.

கணவர் - Punctualityயை உதாரணமாக்கிச் சொல்லேன்:

. சைத்தியப்புருஷனுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள வித்தியாசத்தை தாயார் விளக்கியவுடன் கணவர் punctualityமூலம் அதைச் சொல்லச் சொல்கிறார்.

. மிக எளிமையாகச் சொன்னால்,

. பணம் நகையாக வீட்டிலிருப்பதை, ஜீவாத்மாவுக்கும்;

. பணம் முதலாகக் கடையில் நடமாடுவதை சைத்தியப்புருஷனுக்கும் உதாரணமாகக் கூறலாம்.

. நகையாகவோ, வேறு எந்த ரூபத்திலும் பணம் சேமிப்பாக இல்லாத வீடு ஆத்மா இல்லாத மனிதனுக்கு உதாரணம்.

. எளிய மனிதனுக்கு ஆத்மா தெரியாது, இருக்காது. ரிஷிக்கு ஆத்மாவுண்டு, தெரியும். ரிஷிக்குள்ள ஆத்மா சொத்து, வீட்டிலுள்ள பணம், நகை போன்றது. அவை சம்பாதிக்கா. சைத்தியப்புருஷன் வளரும் ஆன்மா எனப்படும். வீட்டிலுள்ள பணம் கடைக்குப் போய் பெருகுவது போல் ஆன்மா வளர்ந்தால், அது சைத்தியப்புருஷனாகும். அதனால் சைத்தியப்புருஷன் ரிஷியைவிட உயர்ந்த நிலை.

. நல்ல குரல் உள்ளவருக்குப் பாட்டு வரும். பாட்டு கற்றால், பாடினால், பயின்றால் வளரும். பயிலாவிட்டால் வளராது. திறமையிருப்பது வேறு. அது வளர்ந்து பயன்படுவது வேறு.

. Punctuality என்று ஒன்றிருப்பதே பெரும்பாலோர் அறியமாட்டார்கள். Punctuality உள்ள இடங்களில் படித்து, அதன் அருமை தெரிந்தவர் பலருண்டு. ஆனால், அவர்கள் ஒரு ஸ்தாபனம் நடத்தினால் அங்கு punctualityயைக் கடைப்பிடிக்கமாட்டார்கள். கடைப்பிடிப்பவர் சைத்தியப்புருஷன்போல; தெரிந்து பின்பற்றாதவர் ஜீவாத்மாபோல.

. ஜீவாத்மாவையும், சைத்தியப்புருஷனையும் மேற்சொன்னதுபோல் பல உதாரணங்கள் மூலம் கூறலாம்.

ஜீவாத்மா

சைத்தியப்புருஷன்

1. புத்திசாலித்தனம்

படிப்பில் வெளிப்படும் புத்திசாலித்தனம்.

2. செல்வம்

பலருக்கும் பயன்படும் செல்வருடைய செல்வம்.

3. பூமிக்கு அடியிலுள்ள நீர்

பயிருக்கு இறைக்கப்படும் தண்ணீர்.

4. அன்புள்ள பெற்றோர் கடமையைச் செய்துவிட்டு சும்மாயிருப்பவர்

அன்பைச் செயலில்,

பிரியமாக, பரிசாக, பரிவாக,

கனிவாக, கவனமாக வெளிப்படுத்தும் பெற்றோர்.

5. நாட்டிலுள்ள நிலக்கரி இரும்புபோன்ற கச்சாப் பொருள்கள்.

அவற்றைத் தோண்டி எடுத்து மக்களுக்குப் பயன் படுத்துதல்.

6. படித்தவர், ஓட்டுப்போடாமலிருப்பது

படித்தவர் நல்லவனைத் தேர்ந்தெடுத்து ஓட்டுப்

போடுவது.

7. வீட்டில் தூங்கும் பணம்

அது பாங்க் டெப்பாசிட்ஆகி மக்களுக்குப் பயன்படுவது.

கணவர் - ...ஓர் இடத்திலும் பணத்தைப்பற்றிப் பேச்சே எழவில்லை. இடம் பெரியது என்பதால் எவரும் கேட்கவில்லை:

. "நீங்கள் பொய் சொல்லக்கூடாது என முடிவு செய்தால், நான் பொய் சொல்லும் சந்தர்ப்பம் தரமாட்டேன்"என்று அன்னை கூறுகிறார்.

. பொய் சொல்ல நிர்ப்பந்தம் என்பது என்ன?

. நாம் பொய் சொல்லப் பிரியப்படுவதே அந்த நிர்ப்பந்தம்.

. சந்தர்ப்பம் என்னைக் கட்டாயப்படுத்துகிறது என்று நாம் கூறுவது சரியில்லை என அன்னை கூறுகிறார்.

. திருடு போகாத நாளில்லை, திருடு போகாத பொருளில்லை, திருடாத ஆளில்லை என்ற இடத்தில் காவலேயில்லாமல் பல மாதங்கள் மகசூல் இம்மியளவும் திருடு போகாமலிருந்தது நம் அனுபவம். அன்னையை தினமும் சந்திப்பவர் வாரம் இருமுறை வந்து பார்த்துவிட்டு அன்னையிடம் அங்குள்ள நிலவரத்தைக் கூறிக்கொண்டிருந்ததால்,அந்தச் சொத்திற்கு அன்னைச்சூழல் வந்து காவலாக அமைந்தது.எந்தச் சொத்திலும் நாம் பொருள்களைச் சமர்ப்பணம் செய்தபடி இருந்தால், அதே சூழல் வரும்.

. திருடு போகாது.

. பொருள்கள் விரயமாகாது, சிந்தாது, உடையாது.

. காரியங்கள் விரைவாக நடக்கும்.

. இதில் தத்துவம் என்ன?

. கர்மம் என்ற நிர்ப்பந்தமில்லை என்பது தத்துவம்.

. முடிவு நம்முடையது.

. நிறைவேற்றுவது அன்னை.

. கர்மம் தானே விலகுகிறது.

. வேண்டாத சந்தர்ப்பங்கள் தாமே விலகுகின்றன.

. முடிவு நம்முடையது எனில் அகந்தையின் முடிவன்று.

. முடிவு நம்முடையது எனில் ஜீவாத்மாவினுடையது.

. அதுவும் வளரும் ஜீவாத்மாவான சைத்தியப்புருஷனுடையது.

. ஜீவாத்மா வளர்ந்து சைத்தியப்புருஷனாகி, பரமாத்மாவாகிறது என்பதால் நம் முடிவு பரமாத்மாவின் முடிவாகிறது.

. முடிவு பரமாத்மாவினுடையது என்பதால் நிறைவேறுமா என்பது இல்லை. தானே நிறைவேற்றிக்கொள்ளும்.

. தானே நம் முடிவு தன்னை நிறைவேற்றிக்கொள்ளும்என்பதை அன்னை நிறைவேற்றுவார் என்கிறோம்.

. நாமே நிறைவேற்றிக்கொள்வது நம்பிக்கை செயல்படுவதால். அன்னை நிறைவேற்றுவது அருள் செயல்படுவதால்.

டிபுடி கலெக்டர் :  இது முற்றிய கான்சர். குணமாகும்என உங்கள் அம்மா கியாரண்டி கொடுப்பார்களா?...

தாயார் - அதெல்லாம் நட்புக்குரியது. பக்தி பவித்திரமானது. நட்பையும் பக்தியையும் இணைக்கலாமா?

. இந்த 3, 4 பக்கங்களில் குதர்க்கமாக, விதண்டாவாதமாகப் பேசுபவர்கள் தாயாரைச் சந்தித்து, அவர் அவர்களுக்குப் பதில் சொல்லாதபொழுது, கான்சர் தானே குணமாவதால், மீண்டும் வந்து மறுபடியும் அதே தொனியில் அடக்கமாகப் பேசிப்போகின்றனர். அவருக்கு முழுவதும் குணமாகிறது. வீட்டில் ஏராளமான தொந்தரவுகள் எழுகின்றன. பிரச்சினையை உற்பத்தி செய்தவர் கணவர்.

. இந்நிகழ்ச்சியில் தத்துவம் ஏதேனும் உண்டா?

. தத்துவமில்லாத இடமேயில்லை.

. கான்சர் குணமாவதுஎன்பது ஒரு செயல், சாதனை. சாதனைக்குரிய சட்டங்களைப் பின்பற்றாதவருக்குச் சாதனையில்லை.

. இங்குச் சாதனை என்பது கான்சரை அருளால் குணப்படுத்துவது.

. மனிதன் அறிவால் செய்யமுடியாததை (செய்யமுடிந்ததையும்) அருள் முடிப்பது சாதனை.

. அருள் செயல்பட்டால், எதுவும் முடியும்.

. அதற்குரிய முறை அருளைச் செயல்பட வைக்கும் முறை - நம்பிக்கை.

. நம்பிக்கை அடக்கத்தால் செயல்படும்.

. ஏன் நம்பிக்கை செயல்பட அடக்கம்வேண்டும்?

. இரயிலில் போக இரயில் போகும் என நம்பவேண்டும்.

. டிக்கட் வாங்கிக் கொண்டு இரயிலில் ஏறி உட்காரவேண்டும். இரயில் போனபின் வரக்கூடாது. ஓடும் இரயில் ஏறக் கூடாது. இரயில் கூரைமீது உட்காரக்கூடாது. இரண்டு பெட்டிகளுக்கு இடையில் கப்ளிங்மீது உட்காரக்கூடாது. உட்கார்ந்து இதுவும் இரயில்தானே எனப் பேசக்கூடாது.அடக்கமாக, அமைதியாக, இரயில் ஏறி இடத்தில் உட்கார வேண்டும். எந்த வேலை செய்யவும் அதற்குரிய நம்பிக்கை, அதற்கு வேண்டிய அடக்கமில்லாமல் செய்யமுடியாது என்பது அதற்குரிய சட்டம். அடிப்படை சட்டம்.

. இங்கு அருள் செயல்படவேண்டும்.

. அருள் இறைவன் செயல்.

. இறைவன் தன்னிச்சையாகவே செயல்படுவான்.

. நாமாக அவனைச் செயல்பட வைக்கமுடியாது.

. நம் வீட்டு மாடிக்குக் காக்கையை வரவழைக்கமுடியாது.

. அது சாப்பிடக்கூடிய பொருள்களை மாடியில் வைத்தால் காக்கைகள் வரும்.

. நம்பிக்கை, அடக்கம் உள்ள இடத்தில் அருள் செயல்படும்.

. நாம் அவற்றை ஏற்றுக்கொண்டால் அருள் நம்மை நோக்கிவரும்.

. நமக்கு கான்சர் இருந்தால், நமது நம்பிக்கை அருளை ஈர்க்கும், கான்சர் குணமாகும்.

. கான்சர் அருளால் குணமாகும் என்பது நம்பிக்கை.

. குணமாகாது என நான் நிரூபிக்கிறேன் என்பவரைப் பற்றிப் பேசவேண்டியதில்லை.

. எதிர்த்துப் பேச ஏராளமான நம்பிக்கை வேண்டும் என்பது தத்துவம்.

. நாம் "நான் திருடவேமாட்டேன்", "ஏமாற்றமாட்டேன்"என அடிக்கடிப் பேசுவதில்லை.

. அது வரை திருடியவன், ஏமாற்றியவன், அவற்றைக் கைவிட்டபின்

அப்படிப் பேசுவான்.

. உள்ளே திருடும், ஏமாற்றும் உயிரோடு இருப்பதால் அவன் அதையே நினைக்கிறான்.

. அதனால் அவனிடமும் அருள் அதிகமாகச் செயல்படும்.

. அவன் தவறாகப் பேசுவதால் வீட்டில் தவறானவை நடக்கும்.

. 1940முதல் 1960வரை தமிழ்நாட்டில் தீவிர நாத்திகப்பிரசாரம் நடந்தது. அதன் விளைவாக இன்று எல்லாக் கோவில்கட்கும் மக்கள் ஏராளமாகப் போகிறார்கள். நாத்திகனுடைய பக்தி உண்மையானது, ஆழமானது.

. டிபுடி கலெக்டரும், A.G's ஆபீஸ் A.O.வும் அப்படிப்பட்டவர்கள். அதனால் முதல் 15 நாட்களில் பெரும்பாலும் குணமான கான்சர், பின்னால் முழுவதும் குணமாய்விட்டது.

. கணவர் இந்த விவரங்களோ, சூட்சுமமோ தெரியாதவர். தம் மனைவி கான்சரைக் குணப்படுத்துவார் எனக் கூறியதால் விவாதம் எழுந்தது.

. இப்படிக் குதர்க்கமாகப் பேசுபவர்களை வியாபாரிகள், அரசியல்வாதிகள் சாதுர்யமாக மடக்குவார்கள்.

. கான்சர் நோயாளி தாயாரை அறியாதவர். அவரே வந்து கேட்கப் போவதில்லை. பிரச்சினையை கணவர் உற்பத்தி செய்துவிட்டார்.

. பொதுவாக அன்பர்களிடம் இதுபோன்ற ஒருவர் பேசினால் அதற்குரிய பதில் அன்பருக்கு மனதில் உதயமாக வேண்டியது ஒன்றுண்டு, "என் மனம் குதர்க்கமாக இருப்பதால், என்னிடம் ஒருவர் இப்படிப் பேசுகிறார்" என்று அன்பர் அறியவேண்டும். அதை மனம் ஏற்றவுடன் அடுத்தவர் அக்கேள்வியைக் கேட்பதை நிறுத்திவிடுவார்.

. ஏன் தாயாரிடம் இக்கேள்வி வந்தது?

. தாயாருடைய நிலை குதர்க்கமான நிலை. பக்தியில்லாத குடும்பம்

அருளால் பலன்பெற விரும்புவது குதர்க்கம். குடும்பம் பக்தியுடன் அன்னையை ஏற்கவேண்டும்என அவர் பிரார்த்திக்கலாம். அதைவிட, தாயார் தம் மனமாறுதலை ஆழ்ந்து ஏற்றால் குடும்பம் மாறும். அதற்குமேல் அவரால் எதுவும் செய்யமுடியாது. செய்ய முடியாது என்ற நேரம் செய்ய முயல்வது குதர்க்கம். அதனால் டிபுடி கலெக்டர் குதர்க்கமாகப் பேசுகிறார்.

. டிபுடி கலெக்டரும், நோயாளியும் அன்று பேசியதைப் பிள்ளைகள், கணவர் பேசுவதுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், அடிப்படையில் ஒன்றாக இருப்பதைக் காணலாம்.

. எல்லோரும் அன்னையை ஏற்கவேண்டும் என்றால் ஒரு பையன்,

"அம்மா சொல்படி நடக்க வேண்டும் என்று சொல்லுங்களேன்"என்கிறான்.

. கணவர் தொழிலாளர் தலைவனை நீக்கும்பொழுது, "எந்தச் சட்டமும் பேசவேண்டாம். முதலில் அவனை விலக்கி ஆர்டர் அடித்துக் கொடுத்து அனுப்புங்கள்"என்கிறார்.

. சிறியவனுடைய பாட்மிண்டன் டீம் ஜெயித்தபின், பெரியவன் அவனை நம்பாமல் மற்றொருவனிடம் கேட்டறிந்தபின், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் வெளியே போகிறான். தோல்வியை ஏற்காதது குதர்க்கம்.

பார்ட்னர் வந்தார். முகமும், உடலும் கனிந்துபோய் பழுத்தபழமாக இருந்தார்:

. இளம் பிள்ளை, வளரும் பருவத்தில் (physical energy) பொங்கிவருவது முகத்தில் தேஜஸாகவும், உடலில் பளபளப்பாகவும், மனத்தில் மலரும் சந்தோஷமாகவும் தெரிகிறது.

. இளம்ஆன்மா, அது வளரும் பருவத்தில் இதே மாறுதல்களை அடுத்த உயர்ந்தகட்டத்தில் பார்ட்னரில் வெளிப்படுத்துகிறது. நெஞ்சு சந்தோஷத்தால் நிறைவது நிறைவு. ஜீவன் சாதனையால் நிறைவது பூரணம் பூரிப்படைவது. பார்ட்னர் நிலை அதுவே. இதன் தத்துவம்

ஏதேனும் உண்டா?

. உடலுக்குத் தேவை உணவு. போதுமான உணவு கொடுத்தால் உடல் வளமாக இருக்கும். மூளைக்குத் தேவையானது அறிவு, போதுமான அறிவும், சிந்தனையும் மனத்தைச் சிறக்கச்செய்யும். ஜீவனுக்குத் தேவையானது நம்பிக்கை, பக்தி. இரண்டும் சத்தியம் வாழ்வில் வெளிப்படும் உருவங்கள். 50 ஆயிரம் ரூபாயை 50, ஆயிரம் ரூபாய் நோட்டாக மாற்றினால் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளலாம். 50ஆயிரம் ஒரு ரூபாய் நாணயமாக்கினால் பெட்டி கனக்கும். பார்ட்னருக்கு ஆன்மீகம் புதியது. பக்தி, நம்பிக்கையுடையவர் என்பதால் அதிகம் உள்ளே வந்துவிட்டது. வந்தது ரூபாய் நாணயமாக வந்ததால் நெஞ்சு கனக்கிறது. ஆத்மா பலிக்குமானால் ரூபாய் நாணயம் நோட்டாகும், கனக்காது. ஓர் ஆயிரம் டாலர் நோட்டின் மதிப்பு 50,000 ரூபாய், ஒரு வைரக்கல்லும் 50,000ரூபாய் பெறும்.

. பார்ட்னருக்கு உள்ளே வந்த மாற்றம், தாயார் கனவில், பாக்டரி நாட்டில் பல இடங்களில் பரவுவதைக் கண்டது; பாங்க் சேர்மன் பார்ட்னருடைய நிலையைப் போற்றிப்புகழ்வது; அதற்குரிய தொழில் அதிபர்களை அறிமுகப்படுத்த முன்வருவது; ஆகியவை பார்ட்னருக்கு அதிகம். இந்த நேரம் அவர் கணவருடன் பேசி மகிழ்ந்தால், அம்மகிழ்ச்சியே பலனாகும், வந்தது பலிக்காது என அறிவதால் அவர் பேசாமலிருக்கிறார்.

. அவர் பேசாமலிருப்பது கணவருக்குத் தாங்கவில்லை.

. தாங்கவில்லை என கணவர், பார்ட்னரைப் பேசவைத்தால், விஷயம் கெட்டுப்போகும். விஷயம் கெடாவிட்டால் கணவரால் தாங்கமுடியாத விஷயம் வரும்.

. அருள் செயல்பட்டு பார்ட்னர் போனில் கூப்பிடும்பொழுது கணவரால் பேசமுடியாமற் போய்விட்டது.

. இது சூட்சுமலோக இரகஸ்யங்கள்.

. இவற்றை அறிவது சூட்சுமஞானம்.

. நடைமுறையில் பயன்படுத்துவது சூட்சுமஅதிர்ஷ்டம்.

. Life Response எழுவது இந்த இடத்தில்தான்.

. பார்ட்னருக்கு வாழ்வுக்குரிய பக்குவம் உண்டு. அது எவ்வளவு பெரியதானாலும், தாயாருக்குரிய பக்திக்கு ஈடாகாது.

. பார்ட்னர் அதை அறிந்து நடந்துகொள்கிறார்.

. கணவர், மனைவி என்ற உரிமையைக் கொண்டாடுகிறார்.

தொழிலாளர்கள் கேட்டதைக் கொடுத்தபின், வாங்க மறுத்து ஸ்டிரைக் வர இருக்கிறதுஎனக் கூறினார். தாயார் அதுபோன்ற நிகழ்ச்சிகள் முதலாளியிடமோ, மானேஜ்மெண்ட்டிடமோ உண்டா எனக் கேட்டு அனுப்பினார். பல உண்டு எனப் பதில் வந்தது:

. Rule of correspondence தொடர்பின் சட்டம் என இதைக் கூறலாம். இதைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்ட முதலாளி தாயாரைப் பார்க்க வருமுன் ஸ்டிரைக் வாபசாகிவிட்டது. என்ன தத்துவம் இங்கு செயல்படுகிறது?

எரிவதை இழுத்தால், கொதிப்பது நின்றுவிடும்,

என்பது புரிகிறது. இங்கு அதே சட்டம் செயல்படுவதை நாம் அறிவதில்லை. ஒருவன் என்னை வந்து திட்டுகிறான் என்பதை நான் அவன் திட்டுகிறான்என அறிகிறேன். என்னுள் உள்ள கெட்ட குணம் அழிய முடிவுசெய்தபின், அது தானே அழிய முடியவில்லை என்பதால், அது அடுத்தவனை அணுகி, அவன் கெட்ட குணத்தை அசைத்து, "என்னை வந்து திட்டு"எனக் கேட்டுக் கொள்கிறது என நாம் அறிவதில்லை.

கதையில் தொழிலாளிகள் கேட்டதைக் கொடுத்தபின், வாங்க மறுக்கிறார்கள்; ஸ்டிரைக் செய்கிறார்கள். முதலாளிகள், எவ்வளவு நேர்மையாக, திறமையாக ஒருவன் வேலை செய்தாலும், அவன் வேலையை மெச்சமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள்; அதிகாரம் செய்வார்கள். அதற்குரிய காலம் மாறிவிட்டதுஎன்பதை முதலாளியின் அடிமனம் அறிவதால், அப்பழக்கத்தை விட முடிவுசெய்தவர்கள் விட முடியாமல், தொழிலாளிகளின் அடிமனத்தை அணுகி, "எங்களுக்குத் தொந்தரவு கொடுத்தால்தான் அறிவுவரும். தொந்தரவு கொடுங்கள்'என்று கேட்பதே இந்த ஸ்டிரைக்.

. இதைத் தாயார் அறிவார்.

. வீட்டில் அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவர்.

"எனக்காகப் புத்தியில்லை, புத்தி வேண்டும்"என்ற நேரம் வந்து விட்டது என்று அறியும் மட்டபுத்திக்காரர், தம் கீழ் வேலை செய்பவர்களை, குழந்தைகளை இதுபோல் அடிமனத்தில் தூண்டுவதுண்டு.

. புத்தியில்லாதவருக்குப் புத்திவேண்டும் என்ற நேரம் வந்து விட்டது என்று பொருள்.

. அந்த நேரம் எரிச்சல்படாமல், தொழிலாளி செய்வதே நாம் செய்வது எனப் புரிந்துகொண்டால் க்ஷணத்தில் பிரச்சினை முடியும்.

. மட்டமானவர்க்கு எவரையும் திட்டத் தோன்றும். திட்ட முடியாத சூழ்நிலையானால், தலைவலிக்கும், தலைபாரமாக இருக்கும், மயக்கம் வரும், வந்தால் தெளியாது. அவருக்கு இருவழிகள் உள்ளன. அனைவரும் சூட்சுமத்தை அறிந்து அவரைத் திட்டச் சொல்லி ½ மணி நேரம் கேட்டுக் கொண்டால், அவர் பிரச்சினைகள் தீரும். அல்லது அவர் நிலையைப் புரிந்துகொண்டு, அவர் அறிவு அவர் நிலையை ஏற்று மனத்தை உயர்த்த முடிவுசெய்தால், மனம் மகிழும், மலரும், மயக்கம் மறையும். மூன்றாவது முறையும் உண்டு. அவருடைய இரத்தபாசமுள்ளவர் - உடன் பிறந்தவர், மக்கள் - அவருக்காகத் தங்கள் குணங்களை (இதே குணம் அவர்களிடமிருக்கும்) மாற்றிக்கொண்டால் கொஞ்சகாலம் அவருக்குச் சிரமம் விலகும்.

தாயார் - உலகம் மனத்திற்குக் கட்டுப்பட்டது. மனம் மாறினால் மக்கள் மாறுவார்கள்;

தாயார் - நம்பிக்கை புறத்திலிருந்து எழுவதில்லை. அகத்திற்கு உரியது:

. ஆலை முதலாளி அன்னை சட்டத்தைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்-படுகிறார். அனைவரும் ஒன்றே என்ற ஆன்மீகக் கருத்து நம் போன்றவர்க்குத் தெரியாது. நமக்கு நாம் வேறு, முதலாளி வேறு,தொழிலாளி வேறு. ஒவ்வொரு ஜீவனிலும் அனைத்து ஜீவன்களும் இருப்பது ஆன்மீக உண்மை.

. "நாமும், பிறரும் ஒன்று"என்று ஆழத்தில் எடுக்கும் முடிவு பிறர் செயலை நம் எண்ணத்திற்குக் கட்டுப்படுத்துகிறது.

. ஸ்டிரைக் வாபஸான வேகம் முதலாளியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

. ஆச்சரியம் ஆச்சரியமாகும், அது நம்பிக்கையாக மாறும் திறனுடையதில்லை.

. அகந்தை - புருஷன் - பிரபஞ்சஆத்மா - பரமாத்மா என்பது தத்துவம்.

. பரம்பரையாக ஜீவாத்மா மாயை.

. மாயை விலகினால் ஜீவாத்மா கரையும்.

. நாம் பரமாத்மாவில் ஐக்கியமடைந்து மோட்சம் பெறுகிறோம் என்பது மரபு.

. ஸ்ரீ அரவிந்தம் ஜீவாத்மா அழிவற்றது,

பரமாத்மாவே ஜீவாத்மா என்கிறது.

. நாம் ஜீவாத்மா என அகந்தையைத் தவறாக உணர்கிறோம்.

. தவறு விலகினால், அகந்தை விலகும்.

. அகந்தை விலகியவுடன், நாம் புருஷன் என விளங்கும். புருஷன் என்பது பிரபஞ்சஆத்மாவாகும். பிரபஞ்சத்தை அகத்திலும் காணலாம். அகத்தில் பிரபஞ்சத்தையும், அதனுள் அதன் ஆத்மாவையும் காணலாம். அது பரமாத்மாவாகத் தெரியும்.

. ஜீவாத்மாவே பரமாத்மாஎன்பதால் நாம் (ஆலை முதலாளி) நம்மை நம்முள் மாற்றிக்கொண்டால், பிறர் (தொழிலாளிகள்) அவர்கள் செயலை மாற்றிக்கொள்வார்கள்.

. அதுவே நடந்தது. அது க்ஷணத்தில் நடக்கும்.

. பரமாத்மா காலத்தைக் கடந்தது என்பதால் காரியம் க்ஷணத்தில் நடக்கும்.

. எதுவும் நம்பிக்கையைத் தாராது.

. நம்பிக்கை நம்பியின் ஞானம். அது அகத்துள் எழவேண்டும்.

பெரியவன் - எப்படியம்மா நம்பிக்கை வரும்?

. நம்பிக்கை என்பது ஆத்மஞானம்.

. மனம் அனுபவத்தை நம்பும்.

. ஆத்மா அனுபவப்படாததை நம்பும்.

. ஆத்மாவில் அந்த ஞானம் எப்பொழுதும் உண்டு.

. அதனுடைய சாயல் மனத்தில் படும்பொழுது அது நம்பிக்கையாகிறது.

. மனத்திற்கு நம்பிக்கையில்லை, உடலுக்கு நம்பிக்கையேயில்லை.

. ஒருவன் சம்பளத்தால் மட்டும் வாழ்ந்தால் அவன் உடை, உணவு,

டாக்டர் செலவு, கல்யாணச் செலவு, எந்தச் செலவும் அந்தச் சம்பளத்திலிருந்தே வரவேண்டும். அதைத்தாண்டித் தனக்கு வருமானம் வரும் என அவனுக்குத் தோன்றாது. அவனுக்கே நிலம், வீடு, நகை, அன்பான குடும்பமிருந்தால் அவனுக்குச் சாப்பிட அரிசி வரும், வாடகை வரும், அவசரத்திற்கு நகையை அடகுவைத்து பணம் வாங்கலாம், மாமா வீட்டிற்குப் போனால் அனைவருக்கும் துணிமணி எடுத்துத்தருவார்கள். மனை வாங்கப் பணமில்லாமல் வாங்கவில்லை என அண்ணன் கேள்விப்பட்டால், அண்ணன் மனை வாங்கித் தருவான். அன்பான குடும்பம் அளவுகடந்த அதிர்ஷ்டம். அவனை ஒரு நண்பன் சம்பளம் வாங்கும்பொழுது "இதை எனக்குக் கொடு"எனக் கேட்டால் கொடுத்து விடுவான். அதனால் அவனுக்குச் சிரமம் வாராது. சம்பளத்தைமட்டுமே நம்பி வாழ்பவன் அப்படிக் கொடுக்கமுடியாது. கொடுத்தால் சிரமப்படுவான். ஆத்மஞானம் ஆதரவான சூழ்நிலை போன்றது.

. சரி, நம்பிக்கையில்லாதவனுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

. விடாமுயற்சியால் நம்பிக்கை வரும் என்கிறார் அன்னை.

. நம் பாதாளத்திற்கு நம்பிக்கையில்லை. அதற்கு நம்பிக்கைத் தர பரமாத்மாவால் தான் முடியும். தியானம் பரமாத்மாவை எட்டினால்,பரமாத்மாவின் ஒளி பாதாளத்தை எட்டி, பாதாளத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது The Life Divine.

. இந்த ஜன்மத்தில் நம்பிக்கையில்லாதவனுக்கு விடாமுயற்சியால்

அடுத்த ஜன்மத்தில் நம்பிக்கை பிறக்கும். இந்த ஜன்மத்திலேயே நம்பிக்கை பிறக்கும் வழியுண்டா?

. உடல் ஜடமானால் அறிவு பெறாது, ஒளியை அனுமதிக்காது. இந்த ஜன்ம அனுபவம் அடுத்த ஜன்ம ஞானமாகும்.

. உடலால் செய்யப்படும் செயல் சமர்ப்பணமானால், உடல் ஒளியை அனுமதிக்கும்.

. சமர்ப்பணத்தின் ஒளி பரமாத்மாவைக் கடந்த Supremeஐயும்கடந்த பிரம்மத்தின் ஒளி.

. அவ்வொளி செயலை மாற்றும், உடலை மாற்றும், உடலின் அறிவை மாற்றும், நம்பிக்கை பிறக்கும்.

. வளர்ந்த ஆத்மாவுக்குரிய அடுத்த உடலை நாடுவது மறுபிறப்பு.ஆத்மா வளரும்பொழுது உடலும் வளர்ந்தால் - உடலிலுள்ள ஆத்மாவும் வளர்ந்தால் - உடலை மாற்றவேண்டிய அவசியமில்லை. மறுபிறப்பு இப்பிறப்பில் வரும்.

. விடாமுயற்சி உடலுக்குரியது. அதைப் பூர்த்திசெய்தால் உடலில் உள்ளஆத்மா வெளிவந்து நம்பிக்கையைத் தரும்.

சிறியவன் - நல்லவனாக இருந்தால் நம்பிக்கை வரும்:

. நல்லவனாக இருப்பது (morality) மனத்தின் சிறப்பு. அதனால் பிறருக்கு நம்மீது நம்பிக்கை வரும். நம்பிக்கை ஆன்மாவுக்குரியது.நல்லகுணத்தால் ஆன்மா வெளிவாராது. ஆன்மாவைப் பொருத்தவரை நல்லது, கெட்டது கணக்கில் சேராது.

நம்பிக்கையிருந்தால் ஆன்மா விழிக்கும்.

ஆன்மா விழித்தால் நம்பிக்கை எழும்.

. நல்லவனாக இருந்தால் பாட்டு வருமா? படிப்பு வருமா? விளையாட வருமா? அவையெல்லாம் வாராது என்றால், நம்பிக்கை மட்டும் எப்படி வரும்? குரலிருந்தால் பாட்டு வரும், புத்திசாலித்தனமிருந்தால் படிப்பு வரும், சுறுசுறுப்பு இருந்தால் விளையாடவரும். ஆன்மவிழிப்பிருந்தால் நம்பிக்கைவரும்.

. அஞ்ஞானம் ஏழுவகையின. நம்பிக்கை என்பது அஞ்ஞானம் ஞானமாக மாறும் கட்டம். ஏழுவகை அஞ்ஞானம் யோகத்திற்குரியது. மனித வாழ்வு எளியது. மனிதவாழ்வை 50 அல்லது 100 பாகங்களாகப் பிரிக்கலாம்.

. கோர்ட் அனுபவமுள்ளவனுக்கு கேஸ் போகும் போக்குத் தெரியும்.வக்கீல் கேஸ் ஜெயிக்காது என்றாலும், அவன் அனுபவம் ஆத்மாவைத் தொட்டபின் அவனுக்குக் கேஸ் ஜெயிக்கும் என ஆத்மா உணர்த்தும். அவன் நம்பிக்கையை இழக்கமாட்டான். கேஸ் ஜெயித்தபின் வக்கீல், "எனக்கு நம்பிக்கையில்லை. எப்படி உனக்கு நம்பிக்கை ஏற்பட்டது? நீ நினைத்ததுபோல் ஜெயித்து விட்டதே"என்பார். பொதுவாக அவனுக்கு விளக்கம் சொல்லத் தெரியாது. "ஏதோ மனதில் அப்படிப் பட்டது"என்பான்.

கவனித்தால் ஒவ்வொரு கட்டத்திலும் சொல் நெகட்டிவாகவும், செயல் பாஸிட்டிவாகவும் இருப்பது அவன் கண்ணில்படும். மனதில்படும். சாட்சி எதிரான செய்தியை வாய்தவறிச் சொன்னவுடன், வக்கீல் மனம் உடைந்துவிடுவார். ஜட்ஜ் திகைப்பார். சாட்சி மாற்றிச் சரியான செய்தி சொல்ல, ஜட்ஜ் எழுதுவதை இவன் கவனித்திருப்பான். அது அவனுக்கு நம்பிக்கையூட்டும். அந்த நேரம் நடக்கும் செய்திகள் நல்ல சகுனமாகும்.

. காய் வதங்கியிருப்பதால் சாம்பார் கெட்டுவிடும் எனத் தெரிகிறது.ஆனால், வதங்கிய காயைக் கையால் எடுக்கும் பொழுது நல்ல உணர்வு ஏற்பட்டால், சாம்பார் கெடாது எனப் புரியும். நல்ல காய், நல்ல சாம்பார் தரும். காய் வதங்கியிருந்தால், வேறு பருப்பு, மிளகாய், அவற்றின் தரம், அன்று மிகமிகச் சிறப்பாக அமைந்தால், வதங்கிய காயும் ருசியான சாம்பார் தரும். ஆத்மா விழிப்பாக இருந்தால் வதங்கிய காய் வாராது. வந்தால் விழிப்பான ஆத்மா அதிலும் நல்ல சாம்பார் செய்யும். விழிப்பான ஆத்மா என்பதை நாம் இராசி எனக் கூறுகிறோம்.

. நமக்கு ஆத்மவிழிப்பு அளவு கடந்துள்ள நேரம் நடக்கும் காரியங்களில் பிரேக் இல்லாத வண்டி, இங்க் இல்லாத பேனாவும் எழுதும், தவறில்லாமல் ஓடுகிறதுஎனக் காணலாம். ஆனால், ஆத்மவிழிப்புள்ளவர் வண்டியின் பிரேக்கை மிகவும் சரியாகவும், பேனாவில் இங்க்கை எப்பொழுதும் கவனமாகவும் பார்ப்பது ஆத்மாவுக்கு நம்முடைய கடமை.

நமது திறமைக்கேற்ப எது செய்தாலும், எந்த அளவில் செய்தாலும், பாங்க் சட்டங்களை ஒதுக்கிவிட்டு நமக்குப் போதுமான மூலதனத்தை முழுமையாகத் தர விரும்புகிறார்கள்:

. மனிதன் கடவுளை சச்சிதானந்தமாகக் கண்டான். சச்சிதானந்தம் கடவுளில்லை. கடவுள் தம்மை மனித முயற்சி, அறிவுக்கேற்ப வெளிப்படுத்துகிறார். கொள்ளிவாய்ப்பிசாசு, ஐயனார், மோகினி, கிராமதேவதை, அம்மன், ஆகியவற்றிலிருந்து சிவன், பிரம்மா, விஷ்ணுவரை கடவுளுண்டு. சச்சிதானந்தம் அவற்றைக் கடந்தது. பிரம்மம் அதையும் கடந்தது.

. வாழ்வு மனிதத்திறமையின் முழுமைக்கேற்ப தன் செல்வங்களை அபரிமிதமாக வெளிப்படுத்துகிறதுஎன்பது மேற்சொன்ன தத்துவத்தின் வாழ்க்கைப் பிரதி.

. பொதுவான வாழ்வில் ஒருவர் ஆரோக்கியமாகவும், அடுத்தவர் நலிந்தும் இருக்கிறார்.

. ஒருவர் உச்சியிலும், அடுத்தவர் தரைமட்டத்திலும் உள்ளார்.

. வாழ்க்கை அனைவருக்கும் பொது; பெறுவது அவரவரைப்பொருத்தது.

. அனைவரும் பிரம்மம் என்பதால், அந்த அளவில் சமம் என்பதால், எவர் பெறுவதும் அடுத்தவர் பெறுவதற்கு, அவரவர் நிலையைக் கருதினால் "சமம்"எனக் கூறலாம். சிறிய, பெரிய பாத்திரங்களை நீரில் மூழ்கி எடுத்தால் அனைத்தும் நிறைய இருக்கும். நிறைவதில் அவை சமம்.

. நாட்டில் சட்டங்கள் பல. பாங்க் பணம் தரும்பொழுது 1970க்கு முன்னால் working capital நடைமுறைச் செலவுக்கே தரும். 1970க்குப் பின்னால் முதலீட்டில் 25%, 50%, 75% கொடுத்தது. சிலருக்கு 100%உம் தந்தது. விவசாயிக்கு நிலம் வாங்குவதற்கும், வீட்டில் திருமணத்திற்கும் தவிர 1980க்குமுன் பாங்க் பலவிதமான கடன்களை வழங்கியது. 1980க்குப்பின்னால் திருமணக் கடன்களும் வழங்கப்பட்டன. வீடு வாங்கவும் கடன் வழங்கியது பாங்க். கடன் வழங்கும் சட்டம் நாட்டின் பொருளாதார நிலையைப் பொருத்தது. அதற்காக ஏற்பட்ட விதிஎன ஒன்றில்லை.

. நாணயமும், திறமையும் உள்ள அன்பர்கட்கு எல்லாச் சட்டங்களும் விலகி வழிவிடும். இலஞ்சம் முதல் கொடுமைவரை விலகாத சட்டமில்லை. அது பாங்க்கையும் கடந்தது. கொடுமையான மாமியார் கொடுமை செய்யவேண்டும் என்பதில்லை. திருட்டுக்குப் பேர் போனவர் திருடவேண்டும் என இல்லை. மகசூல் பெருக மழைவேண்டும் என்பதில்லை. வியாபாரம் மார்க்கட்டைப் பொருத்ததில்லை.

. எதுவும் எதையும் பொருத்ததில்லை.

. அனைத்தும் அன்னையைப் பொருத்தது.

. நாம் அன்னையை ஏற்பதைப் பொருத்தது.

. அன்னை நம்மை அரவணைப்பதைப் பொருத்தது.

. இங்கிலாந்து தனியாக ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் தோற்கடித்தது ஸ்ரீ அரவிந்தர் சக்தியால்என்பதை நம்மால் நம்ப முடியுமானால், நீர்மேல் நடக்கலாம், நெருப்பில் குளிக்கலாம்.

. முடிவு மனிதனுடையது.

கணவர் - அப்படியானால் நம் கம்பனி இந்தியா முழுவதும் பரவிவிடும்;

பார்ட்னர் - அதற்குரிய தகுதி, நம் நாணயம் ஜீவன் முழுவதும் பரவவேண்டும்:

. நாணயம் ஜீவன் முழுவதும் பரவுவது என்றால் என்ன? சொல், செயல், எண்ணம், உணர்ச்சி, ஆகியவற்றுள் நாணயம் வேண்டும்.

. சொல்லிலும், செயலிலும் நாணயம் எளிதாகப் புரியும். எண்ணத்திலும் விளங்கும். எண்ணத்தின் நாணயத்திற்கும், உணர்வின் நாணயத்- திற்கும் உள்ள வித்தியாசம் புரியாது. மனம் கொடுக்கச் சொல்லும் பொழுது, கை அப்பொருளை அலமாரியில் வைத்துப் பூட்டும். கை வாராது. கை பிரியமாக வருவது உணர்ச்சியின் நாணயம்.

. ஜீவன் முழுவதும் பரவவேண்டியது சைத்தியப்புருஷன், நாணயம் மட்டுமன்று. நம் ஜீவன் நாட்டிற்கு ஆன்மீகப் பிரதிநிதியாகிறது.

. அன்பர்கள் உள்ள நாட்டில் வரும் மாறுதல்கள், அன்பர்கள் இல்லாத நாட்டில் வருவதில்லை. ஒரு நாட்டு லைப்ரரியில் The Life Divineஇருந்தால் அதற்குரிய மாறுதல்கள் அந்த நாட்டில் காணலாம்.

. அன்னையிடம் வந்த வெளிநாட்டாரில், அமெரிக்கர் அதிகம். அவர்களில் பெரும்பாலோர் கலிபோர்னியாவிலிருந்து வந்தனர்.ஜாக்கிரையா என்ற ஆசிரியர்,

. கலிபோர்னியா அமெரிக்காவிற்குத் தலைவன்;

. கலிபோர்னியா உலகத்தின் தலைவன்; என எழுதுகிறார். வந்த அன்பர்கள் அன்னையை ஏற்றவர், அன்னைக் கோட்பாடுகளை ஏற்கவில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களுக்குப்பின் மாறுதல்களில்லை. ஜாக்கிரையா, "கடந்த 30 ஆண்டுகளாக கலிபோர்னியா மிகவும் தாழ்ந்து, மற்ற மாநிலங்களை விடவும் தாழ்ந்துவிட்டது"என்று எழுதுகிறார்.

. அமெரிக்கக் கல்லூரியில் ஒரு பாடபுத்தகத்தில் ஸ்ரீ அரவிந்தர் எழுதியதை மேற்கோள் காட்டும் இடம் வந்தவுடன்,

. மாணவர்கள் அமைதியானார்கள்;

. சூழல் கனத்தது; என ஆசிரியர் கூறுகிறார்.

. அன்பர்கள் சேருமிடங்களைச் சுற்றியுள்ள கடைத் தெருவுகள் அபரிமிதமாக வளர்வதைக் காணலாம். அன்பர்கள் வாழும் இடத்தைக் கடந்து அன்பர்கள் இல்லாத இடத்திற்கு வந்தால், நஞ்சை வெளியினின்று, புஞ்சை வெளிக்கு வந்ததுபோல் தோன்றும்.

. நாணயம் வாழ்வுக்குத் தேவை;

சைத்தியப்புருஷன் யோகத்திற்குத் தேவை.

. அன்னை அறை, பகவான் அறை, சமாதியில் உள்ள சூழல், மாத்ருமந்திரில் உள்ள சூழல், அன்பர் வீட்டிலிருப்பதைக் காணலாம். சம்பிரதாயமான அன்பர்கள் வீட்டில் படம் கறுத்துவிடும். மாடியில் கருமாதி செய்தால் கீழேயுள்ள படங்கள் கறுத்துவிடுகின்றன. சம்பிரதாயம், ஈமச்சடங்கு, பொய், சோம்பேறித்தனம் ஆகியவை சூழலை விலக்கும். சத்தியம், சுத்தம் சூழலை விளக்கும்.

தாயார் தம் கனவிற்குரிய அர்த்தத்தை உணர்ந்தார். இதுவரை ஏற்பட்ட

மாறுதல்கள் நல்லவை. ஆனால் போதுமானவையன்று. தம்

சமர்ப்பணத்தை மேலும் தொடரமுடியாமல் தவிப்பதை உணர்ந்தார்:

. Accomplishment சாதனைஎன்பதை நாம் அறிந்தால், அது பல நிலைகளில் இருக்கிறது. அந்தந்த நிலையில் சாதனை முடியும். எளிதாக முடியாது, முழுமுயற்சிக்குப் பலன் தரும்எனத் தெரியும். ஒரு நிலை கீழேயுள்ளவனுக்கு மேல்நிலைச் சாதனை முழுமுயற்சிக்கே முடியாது. ஒரு நிலை மேலேயுள்ளவனுக்கு கீழ்நிலைச் சாதனை எளிதாக முடியும்.

.பிரச்சினை என்பது நாம் உள்ள நிலையில் ஏற்படும் குறையால் எழுவது. குறையை நீக்கினால் உடன் பிரச்சினை விலகும்.வாய்ப்பு நம்முடைய நிலையில் வந்தால் முழுமுயற்சிக்குப் பலன் தரும்.

. அன்னை தரும் வாய்ப்புகள் அவர் நிலைக்குரியன. நாம் அவற்றால் பலன் பெறவேண்டுமானால், முதliல் நாம் நம்மை வாய்ப்பின் நிலைக்கு உயர்த்திக்கொள்ளவேண்டும். அன்னையை முழுமையாக ஏற்றால் அது உடனே முடியும். நம்மால் அன்னையை ஏற்கமுடிவதில்லை. நமக்கு நம் உற்றார், உறவினர், நட்பு, சமூகம், ஆகியவை முக்கியமாக இருக்கின்றன. அவர்கள் வாழும் பொய்யான வாழ்வு நமக்கு ருசிக்கின்றது. அன்னையின் மெய் அமிர்தம் என நம்மால் அறியமுடிவதில்லை.

. தாயார் நாடெங்கும் கம்பனி பரவும்எனக் கனவில் கண்டார். அது சூட்சும உலகின் வாய்ப்பு. அதைப் பெற சமர்ப்பணம் சூட்சுமத்தில் நிறைவேற வேண்டும். தாயாருக்குத் தாம் மனைவி என்பது முக்கியம். அன்பருள் மனைவியுண்டு. அன்பராக அன்னைக்குக் கடமையை ஆற்றினால், மனைவியின் கடமை அதனுள் அடங்கும் என அவர் அறிந்தாலும், மனம் அடக்கமான மனைவியாக, அன்பான தாயாராக இருக்கப் பிரியப்படுகிறது. மனைவி என்ற பெண்ணின் அடக்கம் அறிவில்லாத பரம்பரை மூடநம்பிக்கைக்கு உள்ள பயத்தின் பணிவு எனத் தாயார் அறியமாட்டார். பாசமான தாயார் என்பது நாய் தன் குட்டிகளை அணைப்பது போன்ற விலங்குணர்வு என அவருக்குத் தெரியாது. அவருடைய ஜீவியம் நம்மைப்போல் விலங்கு ஜீவியம். இந்த அறியாமையுள்ளவரை அவருக்குக் கதிமோட்சமில்லை.

. ஜீவியம் உயராமல் சமர்ப்பணம் செய்ய முனைவது ஏணி இல்லாமல் கோவில் மதில் சுவர் மீது ஏற முயல்வது போலாகும்.

. எல்லாம் தெரிந்து எதுவும் முடியவில்லை என்பவர், உயர்ந்ததை தாழ்ந்ததில் பூர்த்திசெய்ய முனைவதுபோலாகும். எலக்ட்ரிசிட்டியும்,குடிநீர் வசதியும், பள்ளிக்கூடமும் இல்லாத ஊரில் பெரிய பங்களா கட்டி நகர்ப்புற வசதிகளை அங்குக் கொண்டுவர முனைபவருக்கு என்ன வெற்றி கிடைக்குமோ அதே வெற்றியே தாழ்ந்த ஜீவியத்தில் உயர்ந்த ஜீவியத்தின் வசதிகளைப் பூர்த்திசெய்பவருக்குக் கிடைக்கும்.

. பெரியவன் புதுடிரஸ் கேட்பது தகப்பனாருக்குச் சரி எனப்படுகிறது.தாயாருக்குச் சரி எனப்படாவிட்டாலும், பையன் ஆசை பூர்த்தி ஆக வேண்டும் என மனம் நினைக்கிறது. அவன் ஆசைக்குத் தொடர்பான தம் ஆசை எது எனக்கண்டு, அதைக் களைய முன்வர வேண்டும்என்ற அறிவிருந்தாலும், முயற்சியில்லை.

முயற்சியில்லாத அறிவிற்கு முழுமையில்லை.

. அதற்கு இரு காரணங்கள் உள. ஒன்று தாம் மனைவி, தாயார் என்ற எல்லைக்குள் செயல்பட வேண்டும் என்ற இந்தியப் பெண்ணின் அடக்கம். இரண்டாவது தாம் உயர்ந்து, உயர்ந்ததைக் கீழே கொண்டு வருவதற்குப்பதிலாக, தாம் உள்ள நிலையிலிருந்து கொண்டு, உயர மறுத்து உயர்வைக் கீழே கொண்டுவர முயல்வது.

. தாயார் நிலை, இன்று நாம் பலரையும் காணும்பொழுது மிக உயர்ந்த நிலை. அது அவருக்கு வந்துள்ள வாய்ப்புக்குப் போதாது.

பெண் - மதர் விஷயம் எப்படிப் போனாலும் நல்லதாக முடியும் போலிருக்கிறதே:

. நடப்பவை எல்லாம் நல்லன என்ற நோக்கத்தில் தவற்றுக்கு வழியில்லை. குரு நல்லதையே சொல்வார் என்பதற்கும், குரு சொல்வன எல்லாம் நல்லனவாகவே இருக்கும் என்பதற்கும் வித்தியாசம் உண்டு.

. என் பொருளைப் பிறர் அனுபவிப்பதே எனக்கு அதிக சந்தோஷம் தரும் என்ற மனநிலையுள்ள இடத்தில் திருடு என்பதற்கு அர்த்தமில்லை.

. அன்னை ஜீவியம் அப்படிப்பட்டது என அறிவது அன்னையைப் பூரணமாக அறிவது.

. இக்கருத்தின்பின் உள்ள தத்துவம் அனந்தம். நாமறிவது ஒரு கூடையில் உள்ள பழங்களில் சில எடுத்தால், கூடையில் உள்ள பழங்கள் குறையும். 4 பழங்கள் கூடையில் போட்டால் கூடையில் பழங்கள் அதிகமாக இருக்கும். அனந்தம் என்பது infinityமுடிவற்றது.

. அனந்தத்திலிருந்து அனந்தத்தை எடுத்தால் மீதி பூஜ்யம் என நாம் நினைப்போம்.

. அனந்தத்திலிருந்து அனந்தத்தை எடுத்தால் மீதியிருப்பது அனந்தம் என கணிதமும், உபநிஷதமும் கூறுகின்றன.

. அனந்தத்தில் அனந்தத்தைச் சேர்ந்தால் அனந்தம் இருமடங்காகும் என நாம் நினைக்கும்பொழுது கணிதம்

அனந்தம் எனக் கூறுகிறது.

அனந்தம் + அனந்தம் = அனந்தம்

அனந்தம் – அனந்தம் = அனந்தம்

அனந்தம் X 5                = அனந்தம்

அனந்தம் ÷ 10               =  அனந்தம்

அனந்தம் xஅனந்தம் = அனந்தம்

எதை அனந்தத்திலிருந்து எடுத்தாலும், எதை அனந்தத்துடன் சேர்த்தாலும், அனந்தத்தை எதனால் பெருக்கினாலும், அனந்தத்தை எதனால் வகுத்தாலும் முடிவு அனந்தம் என கணிதமும், உபநிஷதமும் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். "அது - அனந்தம் - நகராது. ஆனால் நாம் எவ்வளவு தூரம் போனாலும் முன்னேயிருக்கும்"என கீதை கூறுகிறது.

. கணிதத்தில் கூறும் உண்மையை நாம் வாழ்விலும், ஜடத்திலும் ஏற்றுக்கொண்டால் அன்னை நமக்கு யதார்த்தமாக விளங்கும். நமக்கு நஷ்டமில்லை, இலாபமில்லை, உயர்வில்லை, தாழ்வு இல்லை, பிறப்பில்லை, மரணமில்லை, நோயில்லை, இன்பம் இல்லை, துன்பமில்லை என்பது ஆத்மாவில் உள்ள உண்மை. ஆத்மா வாழ்விலும், உடலிலும் வெளிப்பட்டால் இந்த உண்மை புரியும். போன வேலை திரும்ப வந்ததுஎன்ற செய்தி இக்குடும்பத்தை நடைமுறையில் மேற்கூறிய தத்துவத்தைக் கருதும்படிச் செய்திருக்கிறது என்பது கவனிக்க வேண்டியது.

தாயார் - இன்றையச் சூழலில் அன்னை அன்று உயிருடனிருந்தது போல் செயல்படுகிறார்:

. அன்னை அன்று - 1973க்குமுன் - ஆசிரமத்தில் வாழ்ந்தபொழுது அவரிடம் நேரே போய் ஆசீர்வாதம் பெற்றவர் தங்கள் பிரச்சினைகள் தீர்வதைக் கண்டனர். காலை 10 மணிக்கு "எனக்கு வேலை போய் விட்டது"எனக் கூறி அனுப்பிய அன்பர் மாலை 6 மணிக்குமுன் அவ்வேலையைத் திரும்பிப்பெற்றார். அன்று அன்னையிருந்தார்கள்;அவர் சக்தி வேகமாகச் செயல்பட்டது. இன்று நாம் செய்யும் பிரார்த்தனை சூட்சுமமாக அவருக்குக் கேட்டு அவர் அனுக்கிரஹம் செய்ய சில நாட்களாவது நியாயம்என நாம் நினைக்கிறோம். இக்கதையில் செய்தி அன்பர் வாழும் இடத்திற்கு வந்தவுடனே, வேலையை இழந்தவர் பிரார்த்தனை செய்யாமல், கேட்காமல் அடுத்த செய்தி வருவதற்குள் அவருக்கு வேலை கிடைத்துவிட்டது. 1970இல் சென்னைக்குப் பாண்டியிலிருந்து trunk call போட்டால் ½ மணி அல்லது 3 மணி நேரத்தில் கிடைக்கும். நாம் கூப்பிட்டவர் வீட்டிலில்லாவிட்டால் அவர் வரும்வரை காத்திருக்கவேண்டும். இன்று cell phoneஇல் அவர் எங்கிருந்தாலும் உடனே கிடைப்பது டெக்னாலஜியின் முன்னேற்றத்தால்.

. அன்னை பூதவுடலிலில்லாவிட்டாலும், சூட்சுமஉடலில் உலகில் இருந்து அன்றைக்குச் செயல்பட்டதைவிட அதிவேகமாகச் செயல் படுகிறார்.

. இதனுள் உள்ள தத்துவத்தின் ஓர் அம்சம்,

. அன்னை செயல்படுவது அன்பரின் பக்தியைப் பொருத்தது.

. அடுத்த அம்சமும் உண்டு.

. மனிதனை இறைவனாக்க வந்த அன்னை மனிதன் ஒத்துழைப்பை நாடினார். ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கடுமையான எதிர்ப்பு எழுந்து துரோகமானதால் பகவான் உலகைவிட்டுப் போனார்.

. மனிதனிடம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்என அன்னையைக் கேட்டபொழுது "எதையும் எதிர்பார்க்கவில்லை"என்றார்.

. இன்று அன்னை அதிகமாகச் செயல்படுவதை அன்னை மனித ஒத்துழைப்பில்லாமல் சாதித்தது எனவும் கூறலாம்.

. நாட்டில் பிளேக் வந்த பொழுது தடுப்பு ஊசிக்கு எதிர்ப்பிருந்தது.சர்க்கார் வலியுறுத்தவில்லை. பெரியம்மைக்குத் தடுப்புஊசி வந்த பொழுது அதே எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பை மீறி ஊசி போட்டனர். இன்று பெரியம்மை ஒழிந்துவிட்டது.

. அன்னை நம் ஒத்துழைப்புடன் செயல்படுவார். ஒத்துழைப்பு இல்லாமலும் செயல்படுவார். எதிர்ப்பை மீறியும் செயல்படுவார். அவர் முடிவுசெய்தால், அன்னை செயல்படுவது அனந்தம் வாழ்வில் வெளிப்படுவதாகும்.

. அன்பர்கள் அனுபவத்தில் நாம் ஒத்துழைப்புடனும், இல்லாமலும், எதிர்ப்பை மீறியும் பிறருக்குப் பலிப்பதைக் காண்கிறோம். அதுவும் நடக்கும். அதை நாம் அறிந்துகொள்ளலாம், நடைமுறைப்படுத்த முயலாதிருப்பது நல்லது.

தாயார் - சுதந்திரத்தால் இந்த 8 பிள்ளைகள் மாறியது உண்மை... .....அடுத்த முறை வேறொரு பையன் அதையே செய்ய முயன்றான். வகுப்பு முழுவதும் தடுத்தது. இவனே தலைமையாக நின்றான்; .....

தாயார் - கண்டிப்பதில்லை. புத்திமதி சொல்வார்கள். சொந்தமாகக்

குழந்தைகளை முடிவெடுக்கச் சொல்வார்கள்:

. பிள்ளைகட்குச் சுதந்திரம் தருவது, சைக்கிள் டயரை ஆணியால் குத்திய பையன் அதை ஒத்துக்கொண்டதால் அவனுக்குத் தண்டனை தாராமல் ஆரஞ்சுப்பழம் கொடுப்பது, "இதுபோல் சண்டியை நான் பார்த்ததில்லை"என்ற பிள்ளை 2 ஆண்டுகளில் திருந்தியபின் "நீ மும்பாய் போய் உன் தாத்தாவைப் பார்க்கவேண்டுமா, வேண்டாமா என்ற முடிவை நீயே எடுத்துக்கொள்"என்பவை மேற்கூறிய நிகழ்ச்சிகளில் பெரும்பலன், முழுப்பலன் தந்தன. இந்த முறைகளைப் பெற்றோர் பயன்படுத்தாதற்குக் காரணம்,

அதற்குத் தேவையான பொறுமை பெற்றோருக்கு இருப்பதில்லை.

ஒரு குழந்தை சாப்பிடமாட்டேன் என்றால், புத்தகத்தைக் கலைத்துப் போட்டு வேடிக்கைப் பார்த்தால், மிரட்டினால் அது மீண்டும் செய்யாது.மிரட்டாமல் குழந்தைக்குப் பொறுமையாக சாப்பாடு ஊட்டுவதோ, அது கலைத்துப்போட்ட புத்தகங்களை தினமும் அடுக்கிவைக்கவோ அளவுகடந்த பொறுமைவேண்டும். அப்பொறுமையிருந்தால் குழந்தை நிரந்தரமாகத் திருந்தும். கண்டித்தால், வேறொரு விஷயத்தில் கிறுக்கு செய்யும். எங்கும் கண்டித்தால் பெரியவனான பின் பெரிய கிறுக்காகும். எவ்வளவு பொறுமை வேண்டும் என்று தெரிய வேண்டுமானால், எல்லா விஷயங்களிலும் குழந்தைக்குச் சுதந்திரம் கொடுத்துப் பார்த்தால் ஒரே நாளில் இது முடியாத காரியம் என முடிவுக்கு வருவோம். தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். சமையல் செய்யமுடியாது, குளிக்க, வேறு வேலை செய்ய முடியாது, வீடு அலங்கோலமாக இருக்கும்.

. குழந்தையை வளர்ப்பது மிகச் சிரமம்.

. சுதந்திரமாக வளர்ப்பது நடக்காத காரியம்.

. முயன்றால் அதுவும் முடியும்.

. குழந்தை அழகாக வளரும், அற்புதமாக வளரும்.

. குழந்தைக்கு உண்மையான சுதந்திரம் தரும்பொழுது நமக்கு வாழ்வில் சுதந்திரம் என்றால் என்ன என்று புரியும்.

. நாமாகக் கற்றுக்கொள்ளும்வரை ஆண்டவன் எவ்வளவு பொறுமையாக இருக்கிறான், நாம் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறோம் எனவும் புரியும்.

. சுதந்திரமான கட்டுப்பாடே உண்மையான கட்டுப்பாடுஎன்பது நிதர்சனமாகப் புரியும்.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

புறநிகழ்ச்சிகளை அகவுணர்வாக மாற்ற, நாம் அவற்றைக் கடக்கவேண்டும். அறிவு, பற்றறுத்தல், திரும்பத் திரும்பச் செய்வது அவற்றைக் கடக்க உதவும்.

புறநிகழ்ச்சிகள் தீண்டாமலிருக்க அகவுணர்வைக் கடக்கவேண்டும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

பற்று விடல்: பிரச்சினையைப் பொருட்படுத்தாமல், அதிலுள்ள சிரமத்தைப் பொறுத்துக்கொண்டால், (equality) சமத்துவம் ஏற்பட உதவும். பற்றை விட முயல்பவர் ஆரம்பத்தில் பற்றை விலக்கிப் பொருட்படுத்தாமலிருக்க முயலவேண்டும். அதனால் பற்று அறுபட்டால், யார்மீது நமக்குப் பற்றுள்ளதோ, அவர் தம் மனநிலையை மாற்றிக்கொள்வதால், சமத்துவம் ஏற்பட்டு நிலைக்க உதவும்.

பொறுமை நிதானம் தரும்.

பற்றறுத்தால் நிதானம் நிரந்தரமாகும்.


 


 


 


 


 


 


 


 book | by Dr. Radut