Skip to Content

06.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                            (சென்ற இதழின் தொடர்ச்சி....)              கர்மயோகி

863) அகந்தையைச் சரணம் செய்வது பெரிதன்று. அகந்தை தானே தன்னைச் சரணம் செய்ய முன்வருவது பெரியது.

அகந்தை தானே தன்னைச் சரணம் செய்வது பெரியது.

. எதுவும் உலகில் உயிரோடிருக்க அதனுள் ஜீவனிருக்கவேண்டும்.

. அந்த ஜீவனை ஆத்மா எனவும், பிரம்மம் எனவும் கூறுகிறோம்.

. காதல் திருமணத்தில் பெண்ணும், பிள்ளையும் ஒத்துப்போவார்கள்.

. பெற்றோர் ஒத்துப்போக மாட்டார்கள்.

. பெற்றோர் ஒத்துப்போனால் தடை சுமுகமாக மாறும்.

. பெற்றோர் பிள்ளைகட்கு வித்து.

. கட்டுப்பாட்டை உறுப்பினர் அதிகாரத்திற்குப் பணிந்து ஏற்கலாம், ஏற்க மறுக்கலாம்.

. ஏற்பது சிறப்பு.

. கட்டுப்பாட்டின் சிறப்பை உணர்ந்து, வரவேற்று ஏற்பது அதனினும் சிறப்பு.

. இந்து-முஸ்லீம் கலவரத்தைப் போலீஸ் அடக்குகிறது.

. அவர்கள் நட்பால் இணைந்து கலவரம் அடங்குவது பெரியது.

. அகந்தைஎன்பது சிருஷ்டிஎன்ற முழுமையினின்று பிரிந்த கண்டம்.

. அது மனத்தால் சிந்திக்கின்றது.

. தான் வேறு, வேறாக இருப்பது நல்லதுஎன அறிகிறது.

. அகந்தை காலத்தால் செயல்படுகிறது.

. கடந்ததைக் கருதி, வருவதை எதிர்பார்த்து, நிகழ்வதை நிர்ணயிக்கின்றது.

. தான் சிறியதாக இருப்பது பாதுகாப்பு என நம்புகிறது.

. காலம், மனம், கண்டம், சுயநலம் சேர்ந்து அகந்தையை மேல் மனத்திலிருத்துகிறது.

. மேல்மனத்தின் கீழுள்ள உள்மனத்தில் புருஷனிருக்கிறான்.

. அப்புருஷனே அகந்தையின் ஜீவன்.

. அவன் கடந்தகாலத்திலோ, வருங்காலத்திலோயில்லை; நிகழ் காலத்திலிருக்கிறான்.

. புருஷன் மௌனத்திலாழ்ந்தவன்.

. அகந்தைக்குரிய சிறுமைகள் அவனுடைய ஜீவனுக்கில்லை.

. அகந்தையின் ஜீவன் அகந்தையை ஆதரிப்பதால் அகந்தையிருக்கிறது.

. ஜீவன் நகர்ந்தாலும், ஆதரிக்க மறுத்தாலும் அகந்தையில்லை.

. அகந்தை செய்யும் சரணம் பூரணமானதன்று.

. அகந்தையின் ஜீவனுடைய சரணம் பூரணமானது.

. நாம் அகந்தையாக இருந்து சரணம் செய்வதைவிட,

. அகந்தையின் ஜீவனாகச் சரணம் செய்தால் சரணம் பூர்த்தியாகும்.மூலம் பெரியது. முழுப்பலன் தரவல்லது.

அகந்தை அழிய அதன் மூலமான ஜீவனே கரு.

****

864) மேல்மனவாழ்வு, உள்மனத்திற்குட்பட்டு, சமர்ப்பணம் செய்வது அந்த வகையில் பரிணாமம். ஜீவன், பரமாத்மாவை அழைத்து அதனுடன் இரண்டறக்கலப்பது அழைப்பு. அந்த வகையில் அது ஆன்மீகப் பரிணாமவளர்ச்சி.

ஜீவன் பரமாத்மாவை அழைத்து, அதனுடன் இரண்டறக்கலப்பது அழைப்பு.

. வாழ்வில் நாகரீகம் என்பதும், ஆன்மாவில் பரிணாமம் என்பதும் ஒன்றுபோன்றவை.

. பெரியது சிறியதை அடக்குவது முன்னேற்றம்.

. சிறியது தானே முன்வந்து பெரியதை ஏற்பது பரிணாமம்.

. மேல்மனம் சிறியது, உள்மனம் பெரியது.

. மேல்மனத்திலிருந்து தியானத்தால் உள்மனத்திற்குப் போகலாம்.

. அது பரிணாமமாகாது.

. சமர்ப்பணத்தால் உள்மனம் போவது பரிணாமம்.

. ஜீவன் தேடுவது மோட்சம்.

. அது பரிணாமத்தைத் தேடுவதில்லை.

. அது பரமாத்மாவைத் தேடுவதில்லை.

. பரமாத்மாவுடன் இரண்டறக்கலப்பது மோட்சம், பரிணாமமில்லை.

. அதையே சமர்ப்பணத்தால் செய்வது பரிணாமம்.

. அதற்காகப் பரமாத்மாவைக் கூப்பிடுவது அழைப்பு.

. கல்லூரிக்குப்போய் பட்டம் பெறுவது அனைவரும் செய்வது.

. அறிவு பெறக் கல்லூரிக்குப்போவது குறைவு.

. கல்லூரிக்குப் போனால், பட்டம் எடுக்க முயன்றால், அறிவு பெறுவது தடைப்படும்.

. அறிவு ஆயிரம்வகைகளில் பெறவேண்டியது.

. பட்டம் அவற்றுள் ஒரு பாதை.

. ஒரு பாதைக்குள் நம்மை இருத்திக்கொண்டால் மற்ற பாதைகள் பலன் தாரா.

. அறிவு பெறும் சூழல் கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ இல்லை.அதற்கெதிரான சூழல்லை. நடைமுறையில் கல்லூரி அறிவுக்குத் தடையாக அமைகிறது.

. உலகமே பல்கலைக்கழகமானால், மனிதன் ஞானம் பெறலாம்.

. மோட்சம் பட்டம்பெறுவதைப்போல்.

. ஞானம் பரிணாமம்போல.

. மேல்மனம் மோட்சத்திற்குரியது.

. உள்மனம் இரண்டிற்கும் உரியது.

. தியானம், சமர்ப்பணம் என்ற பாதைகள் நாம் உள்மனத்திருந்து எதைப் பெறலாம் என்பதை நிர்ணயிக்கும்.

. அழைப்பு ஆத்மா வாழ்வில் பிரம்மமாக மலர்வதைப் பூர்த்திசெய்யும்.


 

தொடரும்.....

****


 

ஜீவிய மணி

புரட்சி எழுவது புனித எழுச்சியால்.


 


 



book | by Dr. Radut