Skip to Content

09.அன்னையின் ஸ்பர்ஸம்

"அன்னை இலக்கியம்"

அன்னையின் ஸ்பர்ஸம்

                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)                         இல.சுந்தரி

அவர் வெளியே புறப்படுகிறார் என்று பேச்சு. கார் வெளியே வந்து நின்றுவிட்டது. இருபுறமும் அன்பர்கள் கூட்டம் அவரைத் தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறது. கூட்டத்தினிடையே அவளும் இருந்தாள்.அத்தனைக் கூட்டத்தில் அவளைப் பிடித்திழுத்து கன்னத்தைத் திருகிவிட்டுப் போகிறார். பரிசா? தண்டனையா? ஒருவருக்கும் விளங்கவில்லை.

அவள் இங்கு வருவதற்குமுன் இரவில் அன்னைக்குத் தனிக்கவனிப்புடன் தயாரிக்கப்பட்ட பால்சோற்றை ஒரு வெள்ளிக் கிண்ணியில் ஓரன்பர் கொண்டுவர அனுமதியிருந்தது. திடீரென ஒரு நாள் அன்னை, அந்த அன்பரை அழைத்து, "விமல், பூமாவிடம் பால் சோற்றை அனுப்பு''என்று கூறிவிட்டார். விமலுக்கு ஒரே ஏமாற்றம். எங்கிருந்தோ வந்து என் அற்புத வாய்ப்பை இந்தப் பைத்தியம் பிடித்துக் கொண்டது என்று புலம்பலானார்.

அவள் சிறுமி. கபடமும், கவலையுமற்ற சிறுமி. அவளுக்கு எதுவும் தெரியாது. அவருடைய வாய்ப்பை அவள் தட்டிப்பறிக்கவில்லை.அன்னையே அவளை அழைத்து அவ்வாய்ப்பைத் தருகிறார்.பூமா பைத்தியமென்றும், அவளைக் குணப்படுத்த அன்னை முயல்கிறார் என்பதும் எல்லார் கணிப்பும். ஆனால், அவள் அந்தரங்கம் அன்னையே அறிவார்.ஓரழகிய வெள்ளித்தட்டில் வெள்ளிக்கிண்ணத்தில் மணக்கும் பால்சோற்றை மூடி எடுத்துவருகிறாள் சிறுமி.முன்பு அவள் தன் சின்னஞ்சிறு அம்பாள் விக்ரகத்திற்குச் சோறூட்ட முயன்றதுண்டு. இன்று அவளை அழைத்து, அவள் கையால், அப்பா சொன்ன பேசும் தெய்வம் சோறுண்ணப் போகிறது. மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தாள்.மெல்ல அவர் முன்னிருந்த டேபிளில் தட்டை வைத்தாள். "என்ன இது? யாருக்குக் கொண்டுவந்தாய்?''என்கிறார்.

"பால்சோறு. உங்களுக்குத்தான்''என்றாள். "நீ சாப்பிட்டாயா?'' பரிவை வெளிக்காட்டாமல், அவள் முகத்தை நேரே பாராமல், ஜாடையாய் கவனித்த வண்ணம் கேட்டார்.

"இல்லை. ஒன்பது மணிக்குத்தான் சாப்பிடுவேன்''என்றாள்.

"இங்கு என்னுடன் சாப்பிடுகிறாயா?''என்கிறார் அன்னை. "இல்லை இல்லை. இது உங்களுக்கு''என்று அவசரமாய் மறுத்தாள்.

"வா இப்படி''என்று அருகில் அழைத்து, கட்டாயப்படுத்தி, ஓரிரு ஸ்பூன் உணவினை அவளைச் சாப்பிடச்செய்தார். சந்தோஷம், சங்கடம்,இரண்டுமாய்க் குழந்தை தவித்தாள். சிறிதளவு தானும் உண்டபிறகு மீதியைக் கொடுத்தனுப்பிவிட்டார்.வெளியே விமல் அந்தப் பிரசாதத்திற்குக் காத்திருந்தார். அன்னை முழுவதும் சாப்பிடவில்லையே என்று அவள் நினைத்தாள். உண்மையில் அன்பர்கள் விரும்பும் பிரசாதத்திற்காக மட்டுமே அன்னை சிறிது உண்கிறார் என்பது அவளறியாதது. காத்துக்கொண்டிருந்த விமல்,பால்சோற்றுக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டு, "அன்னை என்ன சொன்னார்?''என்கிறார்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைக்கிறாள். இவள் ஒவ்வொரு முறை அன்னையிடம் சென்றுவரும்போதும் "அன்னை என்ன சொன்னார்?''என்று கேட்கத் தவறமாட்டார்கள். ஒன்றுமில்லை என்பது போல் தலையசைப்பாள்.

ஆமாம், அவளை அன்னை அடிக்கிறார், திட்டுகிறார். அவள் எப்படிச் சொல்வாள்என்று பேசிக்கொள்வார்கள்.

அவளோ உங்களுக்கெல்லாம் என்ன தெரியும் என்பது போல் தனக்குத் தானே சிரித்துக்கொள்வாள்.

திடீரென அவளை அழைத்து, "அம்மா வந்தார்களாமே. நீ போகவில்லையா?''என்று ஒன்றுமறியாதவர்போல் கேட்கிறார் அன்னை.

"அம்மாவிடம்தானே இருக்கிறேன்''என்று மெல்ல முணுமுணுத்தாள்.

"நீ கவனமாக நடந்துகொள்ளவில்லையென்றால், உன்னை அனுப்பிவிடுவேன்''என்றார்.

அவள் என்ன செய்வாள்? அருளமுதம் ஆயிரம் முறைகள் படித்தும் நமக்கு வாராத இடையறாத அன்னை நினைவு அவளுக்கிருக்கிறது.இடையறாத தரிசனமும் கிடைத்துவிடுகிறது.

அவள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் தனக்குள் ஏதோவொன்றில் ஆழ்ந்துவிடுகிறாள். உடனே அன்னை அழைத்துவிடுகிறார். வரும்போது முகம் கொள்ளாத மலர்ச்சியுடன் வருகிறாள். அற்புதமாக வேலை முடிகிறது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அன்னை அவளிடம் கடுமையாகயிருப்பது போலத் தான் தெரிகிறது. ஆனால், அவளோ முகம் சுளிக்கவோ, அழவோயில்லை. மகிழ்ச்சியால் பூரிக்கிறாள். இது எப்படி?எல்லோர்க்கும் விந்தையான இந்தப் புதிர் ஒரு நாள் அவிழ்ந்தது.அன்று ஜன்னல், கதவுகள் துடைக்கும் பெரியவர்க்கு உதவியாக அவள் அனுப்பப்பட்டிருந்தாள். சிறிது துடைக்கும் வேலைதொடங்கியதுமே மெய்ம்மறந்து நின்றுவிட்டாள். பெரியவர் அவளைக் கவனித்தார். என்ன இது? கதவில் வைத்த கை அப்படியேயிருக்கிறது. ஆடாது, அசையாது நிற்கிறாள். எதையோ கவனிப்பதுபோல் தெரிகிறது. ஆனால், அவள் பார்வை படுமிடத்தில் அவள் கவனம் இல்லையெனத் தெரிகிறது. அதே நேரம் அன்னை அவளைக் கூப்பிட்டனுப்புகிறார்.

"என்ன செய்துகொண்டிருந்தாய்?''என்றார் அதட்டலாக.அவளோ சிரிப்புமாறாத முகத்துடன், "கதவு துடைத்துக்கொண்டு இருந்தேன்''என்றாள்.

"கதவை எங்கே துடைத்தாய்? பிடித்துக்கொண்டு நின்றாய்''என்றார்.நேரே பார்த்ததுபோல் ஒவ்வொன்றையும் சொல்கிறார் என்று எண்ணியபடி குனிந்துகொண்டாள்.

"உன்மீது ஒரே புகார். நீ எந்த வேலை கொடுத்தாலும் சரியாகச் செய்வதில்லையாம். எல்லோரும் சொல்வது சரிதானா?''என்று கோபமாய் குரலை மாற்றிக் கேட்டார்.

அவள் சிறிதும் பதறாமல் "ஆம்'என்பது போல் தலையசைத்தாள். "இனி,எல்லார் முன்பும் வைத்து உனக்குத் தண்டனை தருவதுதான் சரி''என்றார்.முகம்கொள்ளாத பெருமித மகிழ்வுடன் நிற்கிறாள்.

"போ போ. இன்று உனக்கு விசாரணை வைத்திருக்கிறேன். மிகவும் என்னைத் தொல்லை செய்கிறாய்''என்றார்.

அடக்கமுடியாத மகிழ்வுடன் ஓடுகிறாள். அருகில் நிற்கும் சாதகர்,இன்று என்ன நடக்கப்போகிறதோ, அன்னை தவறுகளைக் கண்டால்

"மகாகாளி' வடிவம் எடுத்துவிடுவார் என்று எண்ணியவண்ணம் நிற்கிறார்.கடைக்கண்ணால் அவரைக் கண்காணித்த அன்னை அவரிடம்,

"இன்று மாலை எல்லோரும் முன்னிடத்தில் கூடிவிடுங்கள். அவளையும் அழைத்துவாருங்கள். அவள் ஏன் இங்கு வந்தாள் என்று விசாரித்து விடுவோம். தீர்ப்பு நீங்களெல்லோரும் தான் சொல்லப்போகிறீர்கள்''என்றார் அன்னை.

ஆஸ்ரமம் முழுவதும் அன்னை கூறிய செய்தி இறக்கைகட்டிப் பறந்தது. விசாரிக்கப்போகிறாராமே. தீர்ப்பு நாம் சொல்லவேண்டுமாமே.என்ன தீர்ப்பு சொல்லுவோம், இதே பேச்சு.

மாலை 6 மணிக்கு எல்லோரும் ஆர்வமாய் மிக்கஎதிர்பார்ப்புடன் கூடிவிட்டனர். அன்னையும் வந்து ஆசனத்தில் கம்பீரமாய் அமர்ந்து விட்டார்.

"எல்லோரும் வந்தாயிற்றா?''என்றார். "ஆம், அன்னையே. நாங்கள் எல்லோரும் வந்துவிட்டோம்''என்று ஒருவர் கூறினார். "அவளெங்கே?''என்றார் அன்னை. அப்போதுதான் எல்லோரும் தங்களுக்கிருந்த பதற்றத்தில் அவளைக் கவனிக்கவில்லை என அறிந்தனர்.

அவளோ ஓரிடத்தில் அமர்ந்து பூத்தட்டு ஒன்றில் பல வண்ண மலர்களை அழகுற அடுக்கும்போதே அந்த முகம், அந்தச் சிரிப்பு, அந்தக் கண்கள் தோன்றவே மெய்ம்மறந்துபோனாள். 6 மணிக்கு அன்னை வரச்சொன்னதும் மறந்தாள்.எல்லோர்க்கும் ஒரே பதற்றம். எந்த வேலையையும் பாதி செய்யும்போதே கனவு காண்பவளைப் போலாகிவிடுகிறாள். அன்னை அழைத்துக் கண்டிக்கிறார். இப்போது அன்னையின் கட்டளையையே மறக்கும்படி அவளுக்கு என்னாயிற்று? இன்றோடு அவள் ஆஸ்ரம வாழ்க்கை முடியப்போகிறது. அவளை அன்னை வெளியேற்றி விடப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

"அவள் எங்கிருந்தாலும் பார்த்து, அழைத்துவாருங்கள்''என்று கோபமாய் ஆணையிடுகிறார் அன்னை. சாதகர் ஒருவர் ஓடிச்சென்று அவளைத் தேட, அவள் நிதானமாய் ஒரு பூத்தட்டில் அடுக்கிய மலர்களை பார்த்து, தன் வயமிழந்து உட்கார்ந்திருக்கிறாள். "பூமா, இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? அன்னை உன்னை அழைத்துவரச் சொன்னார். கோபமாயிருக்கிறார்!''என்று பதறினார். கவனம் கலைந்து எழுந்து உடன் வந்தாள்.

அன்னை மகாராணியாய் வீற்றிருக்க, எல்லோரும் ஏன் கூடி உள்ளனர் என்று எண்ணியவண்ணம் வருகிறாள். தன்னைப்பற்றிய விசாரணைக்குழு என்ற எண்ணமே தோன்றவில்லை.

"ஏன் இவ்வளவு நேரம் உனக்கு?''என்று அன்னை கோபமாய்க் கேட்டார். எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் அவளிடம் எவ்விதத் தடுமாற்றமுமில்லை. இனிமையாய்ச் சிரிக்கிறாள்.

"கூப்பிடக் கூப்பிடக் கவனமின்றி ஒரு மலர்த்தட்டை பார்த்தவண்ணம் இருந்தாள். அவள் கவனத்தைத் திருப்பி, அவளை அழைத்துவர நேரமாகிவிட்டது''என்றார் அழைத்துவரச் சென்றவர்.

"அவர் சொல்வது உண்மைதானா?''என்றார் அவளைப் பார்த்து.

"ஆம்'என்பதுபோல் தலையசைக்கிறாள். "அப்படி என்ன பார்த்தாய் அதில்?''என்றார் கடுமையாக.மகிழ்ச்சிபொங்கும் சிரிப்பு இதழில் ஊற, கள்ளங்கபடமின்றி நிற்கிறாள்.

"கேட்ட கேள்விக்குப் பதில் சொல். இல்லையென்றால், அடித்து விடுவேன்''என்று பாவனையாகக் கையை ஓங்கினார்.

எல்லோரும் பதறிப்போக அவள்மட்டும் ஆனந்தபரவசமாய் நின்றிருந்தாள். ஏதோ இனியகாட்சி கண்டிருக்கிறாள்போலும்.

"நீ என்ன செய்கிறாய் என்பதை எல்லோருக்கும் சொல்''என்றார்.பதில் சொல்லாது மலர்ந்த நாணத்துடன் நின்றிருந்தாள்.

"உண்மையைச் சொல்லி விடு''என்றார் கண்டிப்பாய்.

தயங்கியபடி, "எல்லோர் முன்னிலையிலுமா?''என்றாள்.

"ஆம், எல்லோர் முன்னிலையிலும்தான் சொல்லவேண்டும். உண்மையைச் சொல்''என்றார்.

"நான் எப்போதும் உங்கள் நினைவாகவே இருக்கிறேன். அதனால்தான் என்னையே மறந்துவிடுகிறேன்''என்றாள் மென்மையாக.

"நான் அடிக்கிறேன் என்ற அச்சமா?''என்றார்.

"அச்சமில்லை. அடிவாங்கும் ஆனந்தம் எனக்கு மிகவும் பிடிக்கிறது''என்றாள்.

"அன்னையே! இவள் என்ன சொல்கிறாள்? ஒன்றும் புரியவில்லை''என்றார் ஒருவர்.

"அவள் நிபந்தனையின்றி, எதிர்பார்ப்பின்றி, வேறு தேவையின்றி என்னைமட்டும் நினைக்கிறாள். என்னில் தன்னையே மறக்கிறாள்'' என்றார் அன்னை.

"அடியை ஆனந்தம் என்கிறாளே''என்றார் ஒருவர் நம்பமுடியாமல்.

"ஆம், நீங்கள் அதை அடியென்றும், திட்டு என்றும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவள் என் ஸ்பர்ஸத்தை உணர்கிறாள். ஆனந்தப் படுகிறாள்''என்றார் அன்னை.

"ஆனால், அன்னையே! முதல் நாள் உங்களைப் பற்றிக் கொண்டு அழுதாளே?''என்றார் ஒருவர்.

"அது அவள் அழுகையில்லை. அவள் என்னைச் சரணடைந்தாள். அவள் என்னைச் சரணடைந்ததால், அவள் ஆணவம் தான் எங்கே போவது என்று அழுதது''என்றார்.

"அப்படியென்றால், அதன்பிறகு என்னவாயிற்று?''என்றார் ஒருவர்.

"அப்பொழுது நானவளை என் இடக்கையில் பற்றி இழுத்துவந்தேன். நான் கடுமையானவள் என்று நீங்களெல்லாம் விமர்சிக்கவில்லையா?'' என்றார்.

எல்லோரும் தம் செய்கைக்கு நாணுவதுபோலாயினர்.

"அப்போது அவளை நான், அவளைப் பற்றி இருந்த ஆணவத்தின் (அகந்தையின்) பிடியிருந்து விடுவித்து இழுத்துவந்தேன்''.

"புரியவில்லை அன்னையே. எல்லோருமிங்கு உம்மிடம் அன்பு கொண்டுதானே வந்திருக்கிறோம்''என்று தயங்கியவாறு ஒருவர் கேட்டார்.

"ஆம், அது உண்மைதான். எத்தனை பேர் என்னை நம்பி பூரணமாய்ச் சரணடைந்திருக்கிறீர்கள்? உங்கள் ஒவ்வொருவர்க்கும் என்னிடம் ஒரு எதிர்பார்ப்பு, ஒரு தேவையிருக்கிறது. உங்களை நான் நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் நன்மை கருதி நான் கண்டிப்பாயிருந்தால், நீங்கள் என்னைக் கடுமையானவளாய்ப் புரிந்து, வருந்துகிறீர்கள். அவரவர்க்குரியதைச் செய்யும்போது பாரபட்சமாய் உணர்கிறீர்கள். ஆனால், அவள்? அவளுக்குப் பதிலுக்கு என் அன்புகூடத் தேவையில்லை. அவளுக்கு என் பேச்சு, செயல், கடுமை, யாவுமே என் இனிய ஸ்பர்ஸமாய்த் தெரிகிறது. ஒருபோதும் அவள் என் மீது வருத்தப்பட்டதில்லை. நீங்களே தீர்ப்புச் சொல்லுங்கள். அவளை அனுப்பிவிடுவோமா''என்றார்.

எல்லோரும் நாணத்தால் தலைகுனிந்தனர்.

"அன்னை பூமாவை ஏன் இப்படிப் புகழ்கிறார்? பொறாமையாய் இருக்கிறது என்ற எண்ணம் எழுகிறதா? அன்னையின் குழந்தைகளுக்கு அது உகந்த மனோபாவமன்று. வேறு என்ன செய்ய என்று கேட்கிறீர்களா?''

அதற்கு பகவானின் பதில் இதோ:

அன்பு பொறாமையின் புதல்வி அல்லது கைப்பாவைதானா? சந்திரபாலியைக் கண்ணன் நேசிக்கிறான் என்றால், நானும் ஏன் அவளை நேசிக்கக்கூடாது, என்றார் அன்னை.

"பூமாவை நாங்களும் நேசிக்கிறோம். அவளை அனுப்பவேண்டாம்.எங்கள் அகக்கண்கள் திறக்க உதவிய அவள் பக்திக்கு நன்றி''என்றனர் அனைவரும்.அன்னை அவளைக் கட்டியணைத்து முத்தமிடுகிறார்.

முற்றும்.

மனிதனுக்கு மனம் ஏற்பட்டு அறிவு செயல்பட ஆரம்பிக்கும்வரை வாழ்வு நேராக இருந்தது. பொய்யும், குதர்க்கமும், வக்கிரபாவங்களும் ஏற்பட்டது மனம் செயல்பட ஆரம்பித்தபிறகுதான். அன்னை தம் சூட்சுமப்பார்வையில் மனத்தின்மீது திரையாக ஒரு படலம் பரவியிருப்பதைக்கண்டு, அதுவே வக்கிரபாவங்களின் உறைவிடம் என்கிறார். வெங்காயத்தின் தோல்போல மெல்லியதாய்த் தெரிகிறது. அது கிழித்தெறியப்பட்டால், மனிதனும், இறைவனும் நேருக்குநேர் எந்த நேரமும் சந்திக்கலாம் என்கிறார். நம் மனப்பான்மைகள், மனம் ஏற்றுக்கொண்ட பழக்கங்கள், நம்பிக்கைகள், இவற்றை விட்டுவிட்டால் இத்திரை விலகும்.

உலகம் அறியாத உயர்ந்த இன்பம் அன்னையின் ஸ்பர்ஸம்.

கர்மயோகி


 ****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பக்குவத்தால் அருளைப் பெறும் திறன் பழைய பழக்கங்களை விட்டு, புதிய பழக்கங்களை ஏற்க முடிவதாலும், பெரு நோக்கங்களை ஏற்பதாலும், உயர்ந்த கருத்தை ஏற்பதாலும்,தியானத்திலுயர்வதாலும், பற்றை விடுதல், சமத்துவம்,ஆகியவற்றை மேற்கொள்வதாலும் வரும்.


 


 book | by Dr. Radut