Skip to Content

10.பக்தியும், கட்டுப்பாடும்

பக்தியும், கட்டுப்பாடும்

அன்னை சாதகர்களை 4 அம்சங்களை விலக்கச்சொன்னார்: புகை, அரசியல், மது, காமம். பக்தர்கள் திருமணமாகப் பிரார்த்திக்கின்றனர்; திருமணமாகிறது; அது அருள். குழந்தைப்பேறு கேட்கின்றனர்; கிடைக்கிறது; அதுவும் அருள். புகை, மது, அரசியலை விலக்குவது புரிகிறது. தாம்பத்ய வாழ்வை எப்படிப் புரிந்துகொள்வது?

அன்பராக இருந்தால் பிரம்மச்சாரியாக இருப்பது அவசியமா? என்பது கேள்வி.

குடும்பஸ்தனுக்கும் அன்னை உண்டு என்பதால் யோகம் செய்யும் சாதகர்கட்குள்ள கடுமையான பிரம்மச்சர்யத்தை வற்புறுத்துவது நடைமுறைக்கு ஒத்துவாராது. இதற்குரிய பதிலைத் தெளிவாகக் கூறமுடியுமா? யோகத்தை மேற்கொள்பவர்க்குத் திருமணம் இல்லை. அது தெளிவு. குடும்பஸ்தனுடைய நிலையென்ன? காமம் என்பது காம, குரோத, லோப, மோகத்தில் ஒன்று.

- குரோதம், லோபம், மோகத்தை விலக்குதில் ஐயமில்லை. அவற்றை விலக்கினால், காமவுணர்வின் தீவிரம் கட்டுப்பாட்டிற்குள் அமையும்.

-அனுபவத்தில் எது எல்லைக்குள் உள்ளது, எது எல்லையைக் கடந்தது என்பதை அன்பர்கள் முடிவுசெய்துகொள்வது சாத்தியம்.

-சமர்ப்பணம் செய்தபின் வாழ்வில் எல்லாக் காரியங்களும் அதன் அளவைக் காட்டிவிடும். காமவுணர்வும் அதற்குட்பட்டதே.

-அழுக்கான வீடு, அலங்கோலமான அறை, சத்தமாகப் பேசும் பழக்கம், ஒட்டடை நிறைந்த வீடு, 10 நாட்களின் அழுக்குத் துணிக் குவியல், நேற்றைய விளக்காத சமையல் பாத்திரம், தூசி ஆகியவை உள்ள இடங்கள் தீவிரகாம இச்சையைத் தூண்டும்.

-சுத்தமான வீடு, ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்ட அறை, மென்மையாகப் பேசும் பழக்கம், அன்றாடம் அழுக்கைத் துவைக்கும் பழக்கம், உடனுக்குடன் பாத்திரங்களை விளக்குவது, தூசியே இல்லாத சுத்தம், உடல் உணர்வுக்கு அமைதி தரும்.

-ஒட்டுக்கேட்பது, போட்டிப்போடுவது, சவால்விடுவது, பிடியை விடமாட்டேன் என்பது, சிறிய நோக்கம், அல்பமான பழக்கம், கடுங்குரல், அதிகாரம்செய்யும் ஆசை, எவரும் முன்னுக்குவரச் சம்மதிக்காத பொறாமை, குறி கேட்பது, ஜாதகம் பார்ப்பது, மட்டமான கதைகளை இரசித்துப் படிப்பது ஆகியவை நாம் குறைத்து, விலக்க முயல்வதை வளர்க்கும்.

முடிவான சுருக்கம்:

-திருமணமும், பிள்ளைப்பேறும் அன்னைபக்திக்கு விலக்கில்லை.

-தூய்மையும், நேர்மையும், நிதானத்துடனிருந்தால் வாழ்வினுடைய வளத்தின் போக்கு நம் கட்டுப்பாட்டின் எல்லையைக் காட்டும்.

****



book | by Dr. Radut