Skip to Content

07.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                         (சென்ற இதழின் தொடர்ச்சி....)            கர்மயோகி

867) மரத்தின் வளரும் நுனி, மலரக்கூடியது. மகரந்தச் சேர்க்கையால் கருத்தரிப்பது. சமூகத்திலும், தனிமனித வாழ்விலும் புதுவாழ்வின் வளரும் நுனி, செய்தி பரிமாறி மலர்கிறது. இது பயனுள்ள செய்தியாகவோ, வதந்தியாகவோ இருக்கும். அதனால்தான் வாய்மொழி உலகெங்கும் க்ஷணத்தில் பரவுகிறது.

வாய்மொழி உலகெங்கும் க்ஷணத்தில் பரவுகிறது.

. உயிருண்டு என்பதன் அடையாளம் வளர்ச்சி.

. வளர்ச்சி முனையில் தெரியும், அடிமரத்தில் தெரியாது.

. சமூகத்தை மரத்திற்கு ஒப்பிட்டால், சமூகத்தின் முனை - நுனி - வாய்மொழி.

. சமூகம் என்பது மனிதச் சமுதாயம்.

. மனிதனைக் கடந்த விலங்கு, தாவரம், கல், மண், சமூகத்தில் கருதப்படவில்லை.

. மனிதச் சமுதாயம் மனிதர்களாலானது.

. அதன் அஸ்திவாரம் மக்களுடைய உடல்.

. சிரசே பிரதானம் என்பதால் தலையே உச்சி.

. தலைக்குள் உள்ள மூளையும், அங்குச் செயல்படும் மனமும் பிரதானம்.

. மனத்தின் எண்ணம், வாய்ச் சொல்லால் வெளிவருகிறது.

. சமுதாயத்தில் ஒருவர் சொல் அடுத்தவருக்கு முக்கியமானால் அதன் வழி மனிதவளர்ச்சி சமூகவளர்ச்சியாகும்.

. வளர்ச்சி என்பதற்கு அறிகுறி அது தாமதிக்காது.

. அமெரிக்காவில் "நியூயார்க் டைம்ஸ்"என்ற பத்திரிகை பிரபலமானது. அதில் வெளியிடும் விளம்பரத்தைவிட வாய்மொழி அதிகமாகவும், வேகமாகவும் பரவும் என்பது அங்குள்ள அபிப்பிராயம்.

. சென்னையில் அரசியல்தலைவர், பெருஞ்செல்வர், நடிகர் போன்றவர் வீட்டு விஷயங்கள் அன்று மாலை நகரம் முழுவதும் பரவிவிடும்.

. முக்கியமானவர்களை மக்கள் எடுத்துக்காட்டாகக் கொள்கிறார்கள்.

. அதனால் அவர்களைப் பற்றித் தெரியப் பிரியப்படுகிறார்கள்.

. பிரியம் தீவிரமானால், வேகம் அதிகமாகும்.

. பம்பாயில் டப்பாவாலா எப்படி வேலை செய்கிறது என ஒரு அமெரிக்க நிருபர் ஒரு டப்பாவுடன் வீட்டிலிருந்து ஆபீஸுக்கும், ஆபீஸிலிருந்து வீட்டிற்கும் வந்து ஒரு கட்டுரை எழுதினார். அத்தனை (points of transit) இடம் மாறி டப்பா தினமும் போய்வருவது மக்களுடைய organising skill செயல்பாட்டுத் திறனைக் காட்டுகிறது. செய்தியை ஒருவர் அப்படிப் பின்தொடர்ந்தால் அதன் பாதை விளங்கும்.

. மனிதன் சூடான செய்தி கிடைத்தவுடன் அடுத்தவரைப் பார்க்கும் வரைப் பொறுக்காமல், அவரைத் தேடிப்போய் அச்செய்தியைக் கொடுப்பதால், உடனே பரவுகிறது.

. அந்த விதிக்குட்பட்ட மனிதனுக்கு அன்னை விலக்கு. அவன் வெறும் மனிதன்.

****

868) தன் காரியம் - புத்தகம், கருத்து, திட்டம், etc. - நாடெங்கும் பரவ விரும்புபவர் "வாய்மொழியை" நாடவேண்டும். அதை நல்லமுறையிலும் செய்யலாம்.

தன் காரியம் நாடெங்கும் பரவ விரும்புபவர் வாய்மொழியை நாடவேண்டும்.

. 1920இல் பேப்பர் படிப்பவர் குறைவு. எப்படி மகாத்மா காந்தி பிரபலமானார் என்பது கேள்வி.

. இராமபிரானை எவ்வழி தமிழ்நாட்டு மக்கள் அறியமுடியும்?

. இராமன் குளிக்கப்போகுமுன் தன் பாணத்தை செங்குத்தாக மணலில் செருகினான். இராமபாணம் எப்பொழுதும் படுக்கையாக இருக்கக் கூடாது. மீண்டும் வந்து பாணத்தை இராமன் எடுத்தபொழுது அதன் முனையில் ஒரு தேரை இருந்தது. இராமன் தேரையை நோக்கி "ஏன் அப்பொழுதே என்னிடம் முறையிடவில்லை"என்றான். "நான் பிறந்ததிலிருந்து இன்று வரை எதற்கும் இராமபிரானையே நம்பி வாழ்கிறேன். இராமனே என்னைக் குத்தினால் யாரிடம் முறையிடுவது"என்று தேரை கேட்டதாக இராமாயணம்.

. தேரைக்கு இராமபிரானை எப்படித் தெரியும்?

. அதுவே வாய்மொழியின் சக்தி.

. ஒரு புத்தகம் பரவவேண்டுமானால் அது விளம்பரத்தால் பரவாது. வாய்மொழியால் பரவும்.

. புத்தக ஆசிரியர்கள் பிரசுரிப்பவர்களை விளம்பரம் செய்யச் சொன்னால், "நாங்கள் தானாக விற்கும் புத்தகங்களையே விளம்பரப் படுத்துவோம்"எனப் பதில் வரும்.

. தானாக ஒரு புத்தகம் விற்பது வாய்மொழியால்.

. புதியதாக ஆரம்பித்த பள்ளிக்கு விளம்பரம் பலமுறை செய்தனர். பதிலாக ஓரிருவர் வந்து விசாரித்தனர்; சேரவில்லை. இரண்டு ஆண்டிற்குப்பின் பள்ளி பிரபலமாயிற்று. இடம் கிடைக்க சிபார்சு தேவை. அப்படிப் பள்ளியைத் தேடிவந்தவர் அனைவரும் வாய்மொழியாகக் கேட்டவர்களேயாகும்.

. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலிருந்து ஒருவர் 50 ஆண்டுகளுக்குமுன் மற்ற ஆசிரமங்களைப் பார்க்கப்போனார். ஓரிடத்தில் அந்த மகான் தன் இருப்பிடத்தைவிட்டு எழுந்து ½ பர்லாங்கு வந்து ஸ்ரீ அரவிந்த ஆசிரமச் சாதகரை வரவேற்று, "நீங்கள் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இருந்து வருகிறீர்களா?"எனக் கேட்டார்.

வாய்மொழி சூட்சும உலகுக்கும் உண்டு.

. வாய்மொழியாக ஒரு விஷயம் பரவ, அதில் ஜீவனிருக்கவேண்டும்.

. ஜீவனிருப்பது எனில் அது அவர் ஜீவனைத் தொடவேண்டும்.

. படிப்பவர் (கேட்பவர்) ஜீவனைத் தொடவேண்டுமானால் விஷயம் எழுதுபவர் ஜீவனிலிருந்து எழவேண்டும்.

தொடரும்.....


 

ஜீவிய மணி

அறிவு அறிய கை செய்யவேண்டும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

விவேகம்என்பது எல்லோரும் அறிந்ததை நம் அனுபவத்தில் புதியதாகக் காண்பதாகப் பல சமயங்கள் அமையும். சாதாரண மனிதன் யோசனையில்லாமல் பெரிய விஷயங்களைப் பேசுவதுண்டு. அவனுக்கு அது பழமொழி. அறிவாளிக்கு உலகத்து விவேகம் அறிவுக்குரிய கருத்து. யோகி அதை ஆன்மீக உண்மையாகக் காண்கிறார். எவரும் அனந்தனின் செயலை அங்குக் காண்பதில்லை. எல்லோரும் அறிந்த எளிய உண்மையாகக் காணும் விவேகம் நடக்கக்கூடியதற்கும், நடப்பதற்கும் இடையேயுள்ள சூட்சும நிர்ப்பந்தத்தை அறிகிறது.

- உலகம் அறிந்ததை உன் அனுபவம் உணர்த்துவது விவேகம்.

- காதில் விழுந்தது கருத்தில்படுவது விவேகம்.


 


 book | by Dr. Radut