Skip to Content

08.சமர்ப்பணமும் சரணாகதியும்

"அன்னை இலக்கியம்"

சமர்ப்பணமும் சரணாகதியும்

                                                                                                       சியாமளா ராவ்

சரவணன் வரும் போதே மிகுந்த சிந்தனையுடனேயே வந்தான். "இனி சமாளித்தல் என்பது கடினம். பிறகு விபரீதம் ஏற்பட்டால்..... வேண்டாம். வீட்டில் கூறியே ஆகவேண்டும். வேறு வழியேயில்லை. ஆமாம்.கூறித்தான் ஆகவேண்டும். ம்.....''

அந்த முடிவிற்கு வந்தபின்பு, மனதுள் ஒரு சின்ன சமாதானம் ஏற்பட்டது. நடையை வேகப்படுத்தினான். வீட்டுக்குள் நுழைந்தான்.

கேட்டைத் திறந்தவுடனேயே, உள்ஹாலில் ராமாமிர்தம், இவனைப் பார்த்ததுமே சிரித்தார்.

சட்டென அவரிடம் சத்தமிடாமல் வரும்படி, உதடுகளின் மேல் ஒரு விரலை வைத்து, "வாருங்கள்' என்பதுபோல் ஜாடை காட்டினான் சரவணன்.

புரிந்துகொண்ட ராமாமிர்தம், விடுவிடுவெனத் தோட்டத்திற்குள், செடிகளுக்கு நீர்வார்ப்பதுபோன்ற பாவனையில், சரவணன் பேசுவதைக் கேட்க, தன் காதுகளை மட்டும் சுறுசுறுப்பாக்கினார்.

"அப்பா! இனிமே நீங்க கம்பெனிக்கு, நிச்சயமா வந்தே ஆகணும்பா...மாமாவோட நடவடிக்கைகள்ள... மாறாட்டம் தெரியறதுப்பா. இன்னும்,வேலை செய்யிறவங்களுக்குப் புரியலே. அதுக்குள்ள, நாம.... ஏதாவது செய்யணும்பா..... அதனால... நீங்களே வந்துடுங்க. எப்படியாவது சமாளிச்சுக்கலாம். என்னப்பா..... சரியா....''

சரவணன் கூறவும், மனம் நொறுங்கிப்போவது போலானது. ஆனாலும், நொறுங்கிய இதயத்தை வெளியே காட்டாமல், சம்மதம் என்பதுபோல் தலையையாட்டினார் ராமாமிர்தம்.

****

ஆனந்த், கோகிலாவுடன் காரில் சென்றுகொண்டிருந்தான். டிரைவ் செய்ததும் ஆனந்த் தான்.

புதுவழியில் போய்க்கொண்டிருந்தது கார். கோகிலாவிற்கு அந்தத் தடமே புரியவில்லை. சரி, எங்குக் கூட்டிப் போகிறாரோ போகலாம். பிறகு கேட்கலாம் என்கிற உத்தேசத்தில் மௌனமாகவேயிருந்தாள்.

இரு கிளைகளாகப் பிரிந்த பாதையில், வலப்புறமிருந்த பாதையில் ஒரு கிலோமீட்டர் போன ஆனந்த், சட்டென காரை நிறுத்தினான். காரிலிருந்து இறங்கி, சுற்றும்முற்றும் பார்த்தான். கோகிலாவும் இறங்கி அவனருகில் நின்றாள்.

"கோகி, இந்த வழியில எங்கே போகணும்? எனக்குப் புரியலே. இங்கே உனக்குத் தெரிஞ்சவா யாராவது இருக்காங்களா.....?''

கேட்ட கணவனைத் திடுக்கிட்டுப்பார்த்தாள்.

"எங்கே போறோங்க. நீங்கதானே இந்த வழியில வந்தீங்க. இப்ப, என்னைக் கேக்கறீங்க.....'' கோகிலா, ஆனந்தைப் பார்க்க, அவன் பார்வையில் வித்தியாசத்தையுணர்ந்தவளின் மனதிலும் சின்ன உறுத்தல்.

பாதை புரியாமல், எங்கே போகிறோம் எனத் தெரியாமல், பதில் ஏதும் சொல்லாமல், உறுத்துப்பார்க்கும் ஆனந்த் அவளுக்கும் புதியவனானான்.

உள்ளுக்குள் ஒரு வண்டு குடைய ஆரம்பித்தது.

நெற்றியில் விரல்களால் தேய்த்தான். மோவாயை சொறிந்து கொண்டான். சாலையில் இரு பக்கங்களையும் தீர்க்கமாய் பார்த்தான்.

"கோகிலா..... எங்கே போகணும்னுதான் சொல்லேன். புரியலையே....சொல்லேம்மா... எங்கே போகணும்?''

அவ்வளவுதான் கோகிலா அதிர்ந்தேபோய்விட்டாள். இதென்ன கூத்து. சொன்னவனைப் பார்த்து குழப்பமானாள் கோகிலா.

ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்துக்கொண்டாள்.

"வாங்க, வீட்டுக்கே போலாம். குழந்தைகளும் வந்திருப்பா. பாவம், அம்மா ஒருத்தராவே அவாளைச் சமாளிச்சாகணும். வண்டியைத் திருப்புங்க. வீட்டுக்குப் போயிடலாம். வாங்க''.

அதன்பிறகு, ஆனந்தின் போக்கில், அவ்வப்போது இந்த குறைபாடு தென்பட்டது. கொஞ்சம், கொஞ்சமாய் அது, அதிகரித்த போது தான் கலக்கம் வந்தது. அடிவயிற்றிலிருந்து துக்கம் பிளிறிக்கொண்டு வந்து தொண்டையை அடைத்தது. "இனிமையாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் இதென்ன, இப்படியொரு தடைகல்? ஏன்? எதனால்? பகவானே.... நீதான், எந்தக் கஷ்டமுமில்லாமல் வைத்திருக்கவேண்டும். கஷ்டப்படுத்தாதேப்பா.....' மனம் பலவாறு புலம்பித்தவித்தது.

அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தாள். போர்டிகோவில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள். தன்னிச்சையாய் எதிரே டீபாயிலிருந்த புத்தகத்தைக் கை எடுத்தது; புரட்டியது; அது ஒரு வாராந்தரி.

புத்தகத்தின் ஒரு பக்கத்தில் நலம் பெற பிரார்த்திப்போம் என இருந்தது. சட்டென தீர்க்கமாய் பார்க்க, வெண்மைதாடியும், தலைமுடியும், மீசையுமாய், கருணையே உருவான கண்களில் பார்வையைத் தேக்கி, இவளையே உற்றுப்பார்ப்பது போலிருக்க, மீண்டும் கண்களைக் கசக்கியபடி பார்க்க, அந்த முனிவரின் அருகிலேயே, அன்பைப் பொழிந்து கொண்டிருக்கும் கண்களோடு, ஒரு மூதாட்டி, அவளையே சிரிப்போடு பார்த்தபடியிருந்தார்.

"என்னைப் பார்த்துவிட்டாயா? இப்போதுதான் உனக்கு என்னைப் பார்க்கணும்னு தோணித்தா? நீ, எப்போ வருவாய் என்றல்லவா காத்திருந்தேன். வாம்மா.... வா..... என்னருகே வா. உன்னுடைய எல்லாச் சஞ்சலங்களுமே நீங்கிவிடும். வாம்மா.... வா கண்ணா..... ம்....'என்று அழைப்பதுபோல் தோன்ற, தன்னையுமறியாமல் "அம்மா....'என்று கூவியபடி தன்னையும் மறந்து அப்படியே அந்தப் புத்தகத்தில் இருந்தவர்களைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். ஏனோ, அவளுக்குள்ளிலிருந்து பிரவாகமாக, அணையை உடைத்து வருவதுபோல் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. ஆனால், அந்த அழுகையில் ஒருவகையான சந்தோஷமே மேலோங்கிநின்றது. அவளுக்குள், என்னென்னமோ இரசாயன மாறுதல்போல் நடந்துகொண்டிருந்தது. அதை உணரமுடிந்ததே தவிர, சொல்ல வரவில்லை. "கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் உன்னை''என்று கூவவேண்டும்போல் இருந்தது.

இன்னும் தன் இதயத்தின்மேல் வைத்த அந்தப் புத்தகத்தை எடுக்கவில்லை. கோகிலாவின் இரு கரங்களும் அந்தப் புத்தகத்தைப் பொதிந்து கொண்டிருந்தது என்பது தான் நிஜம்.

எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாளோ தெரியவில்லை.

உள்ளே கூடத்திலிருக்கும் சுவர்க்கடிகாரம், கண்டாமணிபோல் ஏழு அடித்தது. ஒரு விதிர்ப்பு ஏற்பட்டு உணர்விற்கு வந்தாள். புத்தகத்தைக் கையில் எடுத்தாள். மீண்டும் பார்த்தாள்.

அந்த முனிவரின் புகைப்படத்தின் கீழ் "ஸ்ரீ அரவிந்தர்"என்றும், அந்த அன்புருவான மூதாட்டியின் கீழ் "ஸ்ரீ அன்னை"என்றும் எழுதி இருந்தது.

"உயிர் வாழ்வனவற்றில் மனிதன்மட்டுமே பிரார்த்தனை செய்கிறான். அது அவனுக்கு அவசியமானது. அதுவும் பிறருடைய நலனுக்காக பிரார்த்தனை செய்யும்போது அது மேன்மையடைகிறது'' - ஸ்ரீ அரவிந்தர் என எழுதியிருந்தது.

"ஸ்ரீ அரவிந்தர்.... ம்... இவர் சுதந்திரப் போராட்ட வீரர் அல்லவா?இவர் எப்போது ஆன்மீகவாதியானார். கூடவே இந்தப் பெண்மணி யார்?' புரியாவிட்டாலும், மனது என்னமோ பூக்களைச் சுற்றும் வண்டு (தேனீ)போல, அவர்களைச் சுற்றியே ரீங்காரமிட்டது.

"யாரைக் கேட்பது? எப்படி அறிவது? ஆனால், எனக்கு இவர்கள் இருவரைப்பற்றியும் நிச்சயமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமே..... எனக்கு....இவர்கள் வேண்டுமே. நான் அவர்களை நெருங்கவேண்டுமே..... எப்படி?....ம்.... சரி.... உங்களையே வேண்டுகிறேன்.... அம்மா... எனக்கு வழிகாட்டு. உங்களையறிய வழிகாட்டு.... நான் உன் குழந்தைதானே.... பரிதவிக்கும் எனக்கு..... எப்படியாவது உன் அருகாமையைத் தந்துவிடு.... நீ யார்?எங்கிருக்கிறாய்? எல்லாமே நீயேதான் சொல்லவேண்டுமம்மா.... அம்மா....அம்மா.... எனக்கு நீ வேண்டும்.... நீமட்டுமே வேண்டும்.... ஆனால், வழிவகை தெரியவில்லையே..... ஏனோ.... உன்னை, என்னிடமிருந்து ஒரு வினாடிகூட விலக்கமுடியவில்லையே.... என்னிடமிருந்து பயம்கூட, தூர நின்றுதான் என்னைப் பார்க்கிறது.... ஆமாமம்மா... கண்டுபிடிப்பேன்.... எப்படியாவது, உன்னைக் கண்டுபிடித்து உன்னருகில் நெருங்கி, உன் ஆஸ்ரமத்தில் ஒடுங்கிக்கொள்வேன். அம்மா.....'

"கோகிலா.... கோகிலா.... டிபன்கூட சாப்பிடாம என்ன பண்ணிண்டிருக்கே... வாம்மா....''

மாமியார் சிவகாமியின் குரல் கேட்கவும், சட்டெனக் கலைந்தாள். புத்தகத்தைத் தன் அறையினுள் பத்திரமாக வைத்தாள்.

"இதோ வந்துட்டேம்மா''என்றபடி சிவகாமியின் அருகில் சென்றாள்.

"என்ன பொண்ணும்மா நீ.... கம்பெனிலேருந்து வந்தவ, ஒரு வாய் காப்பியும் குடிக்காம, டிபனும் சாப்பிடாம.... சரி வா. சூடா ஏதாவது.... ம்.... தோசை வார்த்துத்தரேன். வா....''

பெற்றவர்களில்லாமல், கோகிலாவும், அவள் தம்பி சரவணனும் படித்து, ஆளுக்கொரு வேலையில் சேர்ந்தது எல்லாமே பிறர் உதவியின்றி, பெற்றோர் வைத்திருந்த சிறு தொகையில்தான். விபத்தில் இருவரும் அடிபட்டு மரித்ததால், அதனால் வந்த ஓர் ஈட்டுத்தொகையும் அவர்களுக்குக் கைகொடுத்தது.

ஆனந்தின் நட்பு, காதலாகப் பரிணமித்ததில், வெவ்வேறு மதத்தினரானாலும், ஆனந்தின் பெற்றோர், அறிவுசார்ந்த, தாராள மனதுடன், சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு திருமணமும் செய்து வைத்தார்கள். அதுமட்டுமின்றி சரவணனையும் தங்களோடு தங்கள் குடும்பத்தில் ஒருவனாய், அன்பு, பாசத்தோடு பிணைத்துக் கொண்டார்கள்.

திருமணத்திற்குப்பின் தாங்கள் இத்தனை நாட்கள் குடியிருந்த சின்னஞ்சிறு வீட்டைக் கண்ணீரோடு, நன்றி கூறி, வீட்டை விட்டு வெளியே வரும்போது, கோகிலாவும், சரவணனும் அந்த வீட்டிற்குமுன் வீழ்ந்து வணங்கி, இத்தனை நாட்கள் தங்களுக்கு விசுவாசமாய், எந்தத் தொந்தரவுமின்றி இடம் கொடுத்து, காப்பாற்றிய அந்த வீட்டை அவர்களால் உயிரில்லாத ஜடமாய் நினைக்க முடியவில்லை. தங்களுக்கு எல்லாவிதத்திலும் அதிர்ஷ்டமாகயிருந்ததாகத்தான் நினைத்தார்களே தவிர, கல், மண், சிமெண்ட்என்ற வகையில் நினைக்கவில்லை.

அன்னையின் கோட்பாடுகளில் ஒன்றான, "ஜடத்திற்கும் உயிருண்டு''என்பதை அறியாதவர்கள்தான். ஆனால், வீடுஎன்றும் ஆஸ்ரயம் தரும் அந்த இடத்தை, வெகுவாக மதித்தார்கள். உறவினராக அன்று, பெற்றவர்கள்போல் நினைத்து, மருகினார்கள். பிரிவது குறித்து மன்னிப்பும் கேட்டார்கள். உணர்ச்சிக் குவியலாக மாறியிருந்தார்கள் என்பதுதான் நிஜமானது.

ஆர்த்தி, அவினாஷ்என இரு குழந்தைகளும் பிறந்து, வளர்ந்து, ஆறாவதும், மூன்றாவதுமாகப் படித்துக் கொண்டிருக்கும்போதுதான், ஆனந்திற்கு, திடீரென இந்தக் குறைபாடு ஏற்பட்டது. எதனால்? ஏன்? எனப் புரியாமல், டாக்டரிடம் காட்டி, மருந்து, மாத்திரைகள் என்றும் கொடுத்தாயிற்று. ஆனால் பூரணமாக அவனைவிட்டு விலகவில்லை....அந்தத் தடுமாற்றம்.

சொந்தக் கம்பெனி என்பதால், அடிக்கடி வெளியூர் போகவேண்டிய நிலை. கம்பெனியுடன் தொடர்புள்ளவர்களிடம் நிறைய பேசவேண்டிய நிலை. இந்தச் சமயத்தில் ஆனந்தின் நிலைமைக்கு இப்படியொரு சங்கடம். மனம் வெதும்பித் தான் போனது அனைவருக்கும்.

அந்த நேரத்தில்தான் கோகிலா, அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் பார்வையில் பட்டாள்.

அடிக்கடி, அந்தப் புத்தகத்திலிருந்தவர்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். காய்கறிகளை வாங்கிக் கொண்டு, யோசனையுடன் நடந்து வந்துகொண்டிருந்தாள் கோகிலா.

மனது என்னமோ, அன்னை, ஸ்ரீ அரவிந்தரைப்பற்றியே, அந்த நினைவுகளிலேயே ஓடிக்கொண்டிருந்தது. வழிவகை தெரியாமல், எப்படி கண்டுபிடிப்பது? "அம்மா..... அம்மா....' மனது புலம்பியது. கண்கள் இதோ கொட்டப் போகிறேன் என்று தளும்பித்தள்ளாடியது.

"வேண்டாம். நம் மனதை அடக்கவேண்டும். தெருவில் நடப்பவர்களின் அனுதாபம் நம்மேல் விழக்கூடாது. தைரியம். எனக்குள் தைரியம் வரவேண்டும்.... ஆமாம். நான் தைரியமாகயிருப்பேன்'.

பலவிதமான எண்ணங்களின் ஓட்டங்களை மனதில் ஓடவிட்டு, நடந்து போய்க் கொண்டிருந்தவளை நிறுத்தியது ஒரு குரல்.

"கோகி... கோகி.... ஏய் கோகிலா....'' அவளைப் பிடித்து நிறுத்தியது ஒரு கரம்.

திரும்பியவளின் வாய் ஆச்சரியத்தில் விரிந்து, கண்கள் பெரியதாக "நீலா.... நீயா.... எப்ப இந்த ஊருக்கு வந்தே..... ரொம்ப சந்தோஷமாயிருக்கு நீலா..... வாயேன் வீட்டுக்கு. பேசிண்டே போகலாம்....'' கூறினாள் கோகிலா.

"கோகிநான் பத்து தரம் கூப்பிட்ட பின்பு தாண்டி நீ திரும்பிப் பார்த்தே. அப்படி என்ன யோசனை கோகிலா? முகமெல்லாம் வாடியிருக்கு. ஏதாவது ப்ராப்ளமா? சொல்லு. நான் உன்னோட நெருங்கிய சிநேகிதின்னு நினைச்சா, உன் ப்ராப்ளத்தை சொல்லு..... கோகிலா....உள்ளுக்குள்ள வச்சுப் புழுங்கறதை விடும்மா. அப்பத்தான் உனக்குள்ளயும் ஒரு தெளிவு பிறக்கும்''.

ம்....ஹூம்.... கோகிலா எதுவுமே பேசாமல், கண்களில் வரும் கண்ணீரைத் தடைபோட முடியாமல், கைகுட்டையால் துடைத்தபடியும், மூக்கை உறிஞ்சியபடியும் வந்தாள்.

"இவள் வாழ்க்கையில் ஏதோ பெரியதாய் அடிபட்டிருக்கிறாள். கேட்டு தொந்தரவு செய்வதைவிட, நாம் போகும் இடத்திற்கு இவளையும் அழைத்துபோவோம். அங்காவது அவளுக்கு அமைதி கிடைக்கட்டுமே'. மனதில் நினைத்ததைச் செயல்படுத்தினாள் நீலா.

"கோகி.... சரி விடு. ஒண்ணும் நீ சொல்ல வேண்டாம். இப்ப, நான் கோவிலுக்குத்தான் போரேன். என்னோட நீயும் வாயேன் கோகி. சஞ்சலமும் குறையும், நிம்மதியும் கிடைக்கும். வரியா கோகிலா.....''

"ப்த்ஸு....''என்று உதட்டைப் பிதுக்கினாள் கோகிலா. "ப்ளீஸ் நீலா. தப்பா நினைச்சுக்காதே. இப்ப மனசு எதுலயும் ஒட்டாது. ஒண்ணுமே பிடிக்கலே. வீட்டுல மாமியாரும், மாமனாரும் வேறே.... ஆதங்கப்படுவாங்க. இன்னொரு நாள் பார்க்கலாமே.... தப்பா நினைச்சுக்காதேம்மா நீலா....ப்ளீஸ்...''

"சேச்சே.... இதுல என்ன இருக்கு தப்பா நினைக்க. நீ.... சொல்றது போல, வீட்டுல பெரியவங்க, நேரமானா கவலைப்படுவாங்கதான். கிளம்பு கோகி. உனக்காக நான் வேண்டிக்கிறேன். வரட்டுமா? கவலைப்படாம போ. எல்லாம் சரியாயிடும். பை.....''

சொல்லிவிட்டு நீலா போக, வேறு பாதையில் கோகிலா வீட்டை அடைந்தாள். ஆனால், அவள் மனதில்மட்டும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய பல கேள்விகள் துளைத்து, அறியும் ஆவல் அதிகமாகியது.

வாசலில் வந்து நின்றபடி வீதியின் இருபுறமும் கவலையோடு பார்க்கும் சிவகாமியைப் பார்த்து, மனம் வெதும்ப, நடையை வேகமாக்கினாள்.

"அம்மா.... ரொம்ப கவலைப்பட்டுட்டீங்களா? ரொம்ப சாரிம்மா. வழியில என் ஃப்ரெண்டு நீலாவைப் பார்த்துப் பேசினதுல நாழியாயிடுத்தும்மா....பாவம்மா நீங்க. சாரிம்மா''.

உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து கூறும் கோகிலாவைப் பார்த்துப் புன்னகைத்தாள் சிவகாமி.

"கவலைப்பட்டேன்தான். இல்லேங்கலே. ஆனா, இதுல என்னம்மா தப்பு..... ரொம்ப நாள் கழிச்சு, சிநேகிதியப் பார்த்த சந்தோஷத்துல கொஞ்ச நேரம் பேசிண்டிருந்திருக்கே. இது சகஜந்தானே. இப்ப, நான் கோவிலுக்குப் போயிட்டு வரப்ப, கொஞ்ச நாழியானா..... நீ, கவலைப் பட்டுண்டு வாசல்ல நிப்பே. இன்னிக்கு நான். அவ்வளவுதான். இதுக்கெல்லாம் போயி மன்னிப்புகேட்டுண்டு. நீ டிபன் சாப்பிடாம போயிட்டியே....ங்கற கவலைதாம்மா எனக்கு. வா உள்ளே. சூடா, வெங்காய உப்புமா பண்ணியிருக்கேன். வாம்மா. களைச்சுப்போயிருக்கே பாரு''.

நெகிழ்ந்து தான் போனாள் கோகிலா.

"தாயினும் சாலப்பரிந்து....' ம்... என்று பெருமூச்சுடனும், கூடவே ஒரு பெருமையுடனும் உள்ளே சென்றாள்.


 

****

அவர்கள் கம்பெனிக்கான சில முக்கிய சாமான்கள் கல்கத்தாவில் இருந்துதான் வாங்கவேண்டும். இத்தனை வருடங்களும், ஆனந்த் மட்டுமே சென்றுவந்தான். ஆனால்..... இப்போது..... சொல்லவும், நினைக்கவும் தயக்கமாகத்தானிருந்தது. சரவணனை மட்டுமே அனுப்பலாம். ஆனால் ஆனந்த் மனசு கஷ்டப்படுமே.... என்ன செய்வது.... எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது.... புரியாமல், எல்லாருமே நடப்பது நடக்கட்டும் என இருந்தார்கள்.

அப்போதுதான் ஆனந்த் ராமாமிர்தத்தினருகில் வந்தான்.

"அப்பா! கல்கத்தாவுக்கு அவசியம் போயே ஆகணும். நான் போனால் தான் சரிப்பட்டுவரும். சரவணனை அனுப்பலாம்தான். ஆனா, இங்கே கம்பெனிக்குப் பொறுப்பான ஆள் அவன் தானே. அதனால,யோசிச்சு, நானும், கோகிலாவுமா போலாம்னு இருக்கேன். என்னோட இப்பத்திய நிலைமைக்கு, கோகிலா என்னோட வரதுதாம்பா சரியா இருக்கும். ஆனா, குழந்தைகளோட, அம்மாவுக்குக் கஷ்டம் ஆயிடுமோன்னு....''

ஒரு பெரிய்ய பாரம், மனதிலிருந்து சடேரெனக் கழண்டுவிழுந்து தூளானது போலிருந்தது ராமாமிர்தத்திற்கு.

"அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. நீ கோகிலாவையே கூட்டிண்டு போ. பல விதத்திலயும், நீ சொன்னதுதாம்பா சரி. சரவணன் இருக்கிறப்ப....எந்த கவலையும் உனக்கு வேண்டாம்பா. இங்கத்திய வேலைகளை நாங்க பார்த்துக்கறோம். நீயும், கோகிலாவும் பிஸினஸைப் பத்திய கவலையை மட்டும், என்னென்ன வாங்கணும், எத்தனை வாங்கணும்கற யோசனையோட போய்ட்டு, நன்னா பேசிட்டு வாங்கோ. அது போறும். சரிப்பா, ஒருவழியா சரியான தீர்மானம் எடுத்துருக்கே. சரவணா! இன்னிக்கேபோய் டிக்கெட் ரிஸர்வ் பண்ணு. ம்..... சரி..... சாப்பிடலாம் வாங்கோ.....''

சரவணன் கோகிலாவிடம் சென்றான்.

"அக்கா! சந்தோஷமா போயிட்டு வா. நல்லதே நடக்கும்னு தைர்யமாயிரு. நாம யாருக்கும் கெடுதல் பண்ணலே. கடவுள் தண்டிக்க மாட்டார்னு நம்புக்கா. புரியுதா..... ப்ளீஸ்கா.....''

கண்களில் நீர் தளும்ப, சரவணன் கூற, முகம் சிவக்க, அழுகையை அடக்கி, தலையை அசைத்தாள் கோகிலா.

****

முதல் வகுப்பு கூபேயில் பயணித்தும், எந்தவிதமான துள்ளலோ, துடிப்போயின்றி பொறுமையும், வெறுமையுமே அவர்களைச் சூழ்ந்திருந்தது. இனம்புரியாத உணர்வால், கட்டுப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஜன்னலோடு, ஜன்னலாய் பார்வையை வெளியேற்றி ஒன்றிப் போயிருந்தான் ஆனந்த். எடுத்து வந்திருந்த ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள் கோகிலா.

திடீரென, அப்படியே..... மனைவியின் மடியில் சரிந்தான். அவள் புடவை ஈரமாகியது. குலுங்கவில்லை, விம்மவில்லை. சரம்சரமாக ஒரேபோல, சத்தமின்றி பெய்யும் மழையின் தாரையைப்போல் கண்களின் வழிகள் திறந்ததில் சொரிந்த கண்ணீர்தான் அவள் புடவையை நனைத்தது.

ஆனந்தின் தலையை இதமாய் வருடிவிட்டாளே தவிர, வாய் திறந்து ஒரு பேச்சும் வெளிவரவில்லை. தன்னுடைய கண்களின் வாசலையும் இறுக மூடிவிட்டாள்.

அந்த மௌனமும், இரயிலின் சீரான, சிக்குபுக்கு சப்தமும்மட்டுமே அந்த கூபேயை சூழ்ந்திருந்தது.

திடீரென எழுந்து உட்கார்ந்தான் ஆனந்த்.

"கோகிலா.... ரொம்ப பயமாயிருக்கும்மா.... எனக்கு..... எனக்குமட்டும்...ஏன்.... இப்படி.....? முடியலையே.... முடியவேயில்லே...... கோகி.....''

கதறும் கணவனின் கண்ணீரைத் துடைத்தாலும், உள்ளுக்குள்ளேயே இரத்தக்கண்ணீர் வடிவதைத் தடுத்துநிறுத்த முடியவில்லையே.....

வார்த்தைகளில் ஜாலம்காட்டி, சமாதானப்படுத்தினாள். அவன் மனம் உருகும்படிப் பேசியதில், கொஞ்சம் சமாதானமானவன், சாப்பாடு கேட்டு, சாப்பிட்டதில் ஓரளவு, அந்த நிலை மாறியது.

கம்பெனிக்கான வேலைகளை மீண்டும் இருவருமாய் விவாதித்து சரி பார்த்தார்கள். தீர்மானித்தபின் அவைகளைக் குறிப்பெடுத்து, சந்தோஷமாகப் பயணித்து, அங்கு இருக்கும் கம்பெனியின் நண்பர் வீட்டிலேயே தங்கினார்கள்.

குளித்துவிட்டு, உட்கார்ந்து பேசும் போது தான் மீண்டும் அந்த அசம்பாவிதம்.

பட்டாச்சார்யா ஒன்று கேட்க, இவன் பதில் வேறொன்றாயிருந்தது. கோகிலாவின் முகமும் மாறியது. பட்டாச்சார்யாவின் முகத்தில் கேள்விக்குறி.

கோகிலா, செய்கையால் அவரைப் பேசாமலிருக்கும்படிக் கூற, புரிந்து கொண்டார். பத்து நிமிடங்கள்போல பேசி ஓய்ந்தவன், இப்பொழுது சுயத்திற்கு வந்தான். ஆனால், ரொம்பவுமே தளர்ந்திருந்தான். பிறகு தூங்கச் சென்றுவிட்டான். அவன் நன்கு தூங்கியபின் பட்டாச்சார்யாவிடம் விவரமாகக் கூறினாள்.

"சார், நீங்க நெருங்கிய நண்பர்ங்கிறதால, உங்ககிட்ட மட்டும் சொல்றேன். அவருடைய நினைவுகள்ல தடுமாற்றம் இருக்கு. டாக்டர்கள் இதெல்லாம் "பாஸிங் கிளவுட்ஸ்'போலன்னு சொன்னாலும், எங்களால பயப்படாம இருக்கமுடியலே. மூளையிலயிருக்கிற ஸெல்களிலயோ, நரம்புகளிலயோ வரும் சிறு சிறு உறுத்தல்களாலதான் இப்படியொரு நிலைமை. அது தானா சரியாயிடும்னு சொல்லிட்டார். அதனால்.... தயவுசெய்து.... வேறே யாருக்கும் பிஸினஸுல இருக்கிறவங்களுக்குத் தெரியவேண்டாமே..... ப்ளீஸ் சார்....''

குரல் தழுதழுக்க கோகிலா கூறவும், பட்டாச்சார்யாவும், அவர் மனைவியும் (தீபாவும்) அவளுக்குத் தைரியத்தைக் கொடுத்தார்கள்.

"கோகிலா.... இன்னிக்கு, நான் உங்க ரெண்டு பேரையும் ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப்போறேன். எல்லாம் சரியாகும். கவலையே படாதேம்மா... சரியா.....'' கூறிய தீபாவின் உண்மையான ஆதங்கம் உள்ளுக்குள் ஆறுதலைத் தந்தது.

சுமார் நான்கு மணிக்கு நால்வருமாய் டிராமில் ஏறினார்கள். அதில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என இருந்தது ஆச்சரியமாக இருந்தது. பெரிய மின்விசிறி சுற்றும் முதல் வகுப்பில் உட்கார்ந்து, வெளியே வேடிக்கைப் பார்த்தபடியே வந்தார்கள்.

"ராணிக்குட்டி சார் (4)''என கண்டக்டரிடம் கூறி, டிக்கெட் வாங்கியபோது, அது ஒரு இடம் என்பதே தெரியவில்லை. இறங்கி ஒரு ஆட்டோ பிடித்துப் போனார்கள்.

நுழையும் போதே ஓர் அமைதி, லேசாகி தானே மிதப்பதுபோல் உணர்ந்தாள் கோகிலா.

பெரிய்ய வீடு, தோட்டம், படிகளுக்கருகில் ஒரு கொடி படர்ந்து மேலே பரவியிருந்தது.

"ப்பா.... எத்தனை கொத்துக்கொத்தாய் மஞ்சள்நிறக் குவளைபோன்ற பூக்கள். என்ன அழகு. எத்தனை ரம்யம். இதமான காற்று, சில்லென்று அவர்களைத் தழுவி, இதமான குளிர்ச்சியை அள்ளி வீசியது.

படிகளில் ஏறி உள்ளே நுழைந்தவுடனேயே, அது ஆபீஸ்ரூம் போல் இருந்தது. விதவிதமான அன்னையின், ஸ்ரீ அரவிந்தரின் புகைப்படங்கள் தான் எத்தனை, எத்தனை....

குபீரென்ற சந்தோஷம் அவளை திக்குமுக்காடவைத்தது. தீபாவின் கரங்களைக் கெட்டியாகப்பிடித்தாள். முகம் சிவந்தேபோனது.

"ஆண்ட்டி, ஆண்ட்டி.... இவுங்க.... இவுங்க....'' மேலே வார்த்தைகள் வாராமல், கண்கள் நிரம்ப, தத்தளித்தாள் கோகிலா.

"கோகிலா, அப்புறமா எல்லாம் சொல்றேன். இப்ப எதுவும் பேசக் கூடாது. அமைதி ரொம்பவும் முக்கியம். வா, உள்ளே போகலாம். வா ஆனந்த்....''

உள்ளே போனதும் வலம் இடமாக, அங்கு இருந்த கூடங்களில் பார்வையை ஓட்டியவள், அடுத்து, கூடத்தை ஒட்டிய அறையில் ஸ்ரீ அரவிந்தரின் இளவயது உருவச்சிலை. வேஷ்டி, அங்கவஸ்திரத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

சட்டென, கோகிலாவிற்குப் புரியவில்லை. யார் இவர்? இளவயதாக இருக்கிறாரே.... தீட்சண்யத்துடன் பார்த்தாள். அந்தக் கண்கள்.... அவைகளிலிருக்கும் கருணையும், அன்பும்.... புரிந்துகொண்டாள் கோகிலா. ஆம்... இவர் ஸ்ரீ அரவிந்தர்தான். வயதுமுதிர்ந்த படத்தில் பார்த்தது, வெண்தாடியும், மீசையும், சிரசிலிருந்து கழுத்துவரை பரவியுள்ள நரைமுடியும்..... ஆமாம், அவரேதான். கண்களின் காருண்யம் அவளுக்கு அடையாளம்காட்டியது. வீழ்ந்து வணங்கினாள். அந்தக் கண்கள் அவளையே பார்த்தன.

அடுத்து ஒரு நீண்ட ஹால். அதில், நடுவில், துளசி மாடம்போல் ஒரு சமாதி கட்டப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, அதைப் பார்த்துப் பின், வலப்புறம் திரும்ப.....

"அம்மா.... அம்மா..... அம்மா.....'

இதயத்துள், அவளையும்மீறி கூக்குரல். கண்களில் ஆனந்தபாஷ்பம், பொங்கிப் பொங்கிப் பெருக, அப்படியே கீழே மடங்கி சரிந்தாள். சத்தமில்லாமல் கண்ணீர் பிரவாகமெடுத்தது.

"அம்மா.... அன்னையே.... உன்னை எப்டி கூப்பிடறது, எப்படி அழைக்கிறதுன்னு தெரியலே.... ஆனா.... எனக்கு நீ அம்மாதான்.... அம்மா....நீ..... ஒருத்திதான்.... என்னை..... என்னை..... முடியலையே..... எழுந்திருக்கவே முடியலையே..... உடம்பெல்லாம் பரவுகிற உணர்ச்சியை உணரத்தான் தெரிந்த அளவிற்குச் சொல்லத் தெரியலையேம்மா.... ஆனா.... இதென்ன மாயம்..... என்னோட பயம், ஆதங்கம், கவலை..... எல்லாம் குறைஞ்சுண்டே வருதே..... ம்மா..... அன்னையே..... இதென்ன சந்தோஷம்.... எனக்குள்ளே....ஆமாம்மா.... எத்தனை சந்தோஷம் பொங்கறது..... அம்மா... இதென்ன...எப்டி.... எப்படிம்மா... நானே.... ஆமாம்மா, நானே உன் மடியில் இருக்கிறேனே... எப்படி?....ம்மா.... எத்தனை இதம்... இதம்... உன்னோட மார்புல சாய்ஞ்சுண்டேனே.... வலிக்கிறதாம்மா... எத்தனை நிம்மதி....நிம்மதி... அம்மாடி... அம்மா... என்னைக் கட்டிக்கோயேன், என்னை அணைச்சுக்கோயேன்.... என்ன இதம், என்ன சுகம்... மெத்துன்னு உன் கைகள்லாம் பஞ்சுபோல.... ம்மா.... அப்படித்தாம்மா... ம்மா... ம்மா... ம்மா....''

"கோகிலா.... கோகிலா... எழுந்திரேன். தியானம் செய்யும் நேரமாயிடுத்தும்மா.... எழுந்திரு கோகிலா'' தீபா, மெல்லிய குரலில், அவள் முதுகைத் தட்ட, விதிர்விதிர்த்தாற்போல் புரண்டு எழுந்தாள் கோகிலா.

எழுந்தவளுக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. தீபாவைப் பார்த்தாள். அன்னையைப் பார்த்ததும் புரிந்துகொண்டாள். மோவாய் துடிக்க, மீண்டும் கண்களில் நீர்ச்சரமிட்டது, சந்தோஷத்தினால். சட்டென தீபாவின் கரங்களைப் பிடித்து நெஞ்சில் வைத்துக்கொண்டாள்.

புரிந்துகொண்டாள் தீபா. அன்னையின் அருளால், அவளுக்கு நல்ல செய்தியே கிடைத்திருக்கிறது எனப் புரிந்தவளின் மனதும் மலர்ந்தது.

"கதவைத் திற; காற்று வரும்''என்று சொல்வதற்கேற்ப, கோகிலா தன் மனதின் கதவை முழுமையாகத் திறந்துவிட்டாள். அதுதான் அன்னையின் அருள் முழுவதும் அவளை அடையும் வழியானது என்பதைப் புரிந்துகொண்டாள் தீபா.

"இப்போதிருக்கும் உண்மையான, கல்மிஷமில்லாத நெகிழ்ச்சி, கோகிலாவிடம் எப்போதும் இருக்கவேண்டும் அன்னையே''என தானும் பிரார்த்தித்தாள்.

தியானநேரம் நெருங்கியது.

அனைவருமே விழிகளைமூடி, சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.

ஆனந்த், அதேபோல் அமர்ந்த சில வினாடிகளிலேயே தானே எடையற்றவனாகி, மிதந்து கொண்டிருந்தான். எத்தனை நேரம்?தெரியவில்லை. திடீரென அவனைச் சுற்றி ஒரு வளையம் தோன்றியது. வெள்ளி கோடு போல், அவனைச் சுற்றிப் பாதுகாப்பாக இருப்பதுபோல் இருந்தது. அடிவயிற்றிலிருந்து கிளம்பிய.... இன்னதென்றறியாத உணர்வு மேலேறி, கண்கள்மூலமாய் வெளியேறிக்கொண்டிருந்தது... அவனை அறியாமலேயே....

சத்தமின்றி பெய்யும் மழைபோன்று ஒரேபோல் கண்கள் பொழிந்தன.

எத்தனை மணி? ம்...ஹூம், தெரியவில்லை.

தியானம் முடிந்து, துளிக்கூட சத்தமின்றி நகர்ந்து சென்றனர் அனைவரும். ஆனந்த், எந்தவிதமான தொந்தரவுமில்லாமல், அயோமயமாய் உட்கார்ந்திருந்தான். உள்ளுக்குள் இன்னதென்று தெரியாது பேரானந்தம். அவனே மிதந்துகொண்டிருந்தான். ஒரு மூதாட்டி, அவனிடம், ஏதோ பேசியபடி, அவனை அணைத்துச்செல்கிறார். வெண்புறாவைப் போல, வெண்ணிற உடை அணிந்துள்ளார். வெண்மையான பஞ்சுப்பொதிகளாய் மேகங்களிடையே, ஆனந்தின் கையைத் தன் கரங்களுடன் கோர்த்துக்கொண்டு ஆனந்தை அழைத்துச் செல்கிறார்.

புளகாங்கிதத்துடன், முகத்தில் புன்முறுவலுடன் உட்கார்ந்திருந்தான் ஆனந்த்.

கோகிலாவோ அன்னையைவிட்டு நகரவும் மனமில்லாமல் அப்படியே உறைந்து உட்கார்ந்திருந்தாள்.

அதுவும் முக்காடிட்ட சிரத்தில் தங்கவளையமாய் கிரீடமும், கண்களில் நம்மால் விவரிக்கமுடியாத அளவிற்கு காருண்யமா? அன்பா? அழைப்பா? எனப் புரிந்துகொள்ளமுடியாத, ஆனால் பரவசமூட்டும் பார்வையும், எங்கிருந்து நாம் பார்த்தாலும், நம்மையே பார்ப்பதுபோன்ற உணர்வும், சந்தோஷச் சிரிப்புடன் நம்மை அழைப்பதுபோல், வலக்கரத்தில் ஒரு ப்ளெஸ்ஸிங் பேக்கட்போன்று ஒரு சீட்டையும், தகதகவென மின்னும் புடவையை உடுத்தி, கம்பீரம், கருணை, மகிழ்ச்சி என்கிற மூன்றும் கலந்த கலவையாய், தீட்சண்யமாகப் பார்க்கும் அன்னையைவிட்டு அவளால் நகர முடியவில்லை என்பதே உண்மையாகியது.

"உன்னை விடமாட்டேன், விலகமாட்டேன், நகரமாட்டேன். நீதான் எனக்கு எல்லாமே. என்னை இங்கிருந்து போகவிடாதேம்மா, தாங்க மாட்டேன். இங்கேயேயிருக்க எனக்கு வழிகாட்டு, வழிகாட்டு.....'

மனதுள் சொல்லியபடியே, கண்களில் பொழிந்ததைத் துடைத்து அன்னையைப் பார்த்தவள், "அம்மா''என்று கூவியபடியே மயங்கி வீழ்ந்தாள். ஆமாம். கோகிலாவிற்குத் தெரிந்தது அன்னையின் விஸ்வரூபத் தரிசனமாக, ஆகாயத்துக்கும், பூமிக்குமாய் நின்ற அன்னையின் உருவம்தான்.

அன்னையின் பார்வையையே தாங்கும் சக்தியற்ற நமக்கு, விஸ்வரூபத் தரிசனத்தின் சக்தியைத் தாங்கமுடியுமா?

கண்களைக் கூசச்செய்யும், பிரகாசமான ஒளியை, நம் மானிடக் கண்களால் பார்க்க இயலுமா?

முடியும், முடியும், முடியும்.

எப்போது? எவ்விதம்? எந்த நாளில்?

எல்லாமே நம் கையிலிருக்கும்போது, நம்மை, நாமே, பலவிதமாகப் பண்படுத்திக்கொண்டு, எல்லாவிதமான கெட்டவைகளையும் நம்மைவிட்டு விலகச்செய்து, நம்மை பவித்திரமாக, தூய்மையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இது நடக்குமா? மானிடரால் முடியுமா? அதுவும் தற்போது உலகம் இருக்கும் நிலையில் நம்மால் முடியுமா?

முதல் தவறே அதுதானே. அங்குதானே ஆரம்பிக்கிறது. நம்மால் முடியுமா? ஏன் இந்தச் சந்தேகம்? எதனால்?

அதைவிட்டு, தவிர்த்து, நம்மால் முடியும், முடிய வேண்டும் என்று நினைத்து, நாம் அன்னை காட்டிய பாதையில் நடந்தால், தடங்கல்களும், தடைகளும், தானாக விலகி வழிவிடாதா? அந்த நம்பிக்கை, நம் மனதில் பூரணமாக உருவாகவேண்டும்.

"அம்மா....''என்றபடி மயங்கிச்சரிந்த கோகிலாவை பரபரவென்று நடந்தாலும், துளி சத்தமின்றி அவளைத் தன்னோடு பிணைத்தபடி எழுப்பி, நடத்தினாள் தீபா.

திடீரென யாரோ தொட்டு, உலுக்கியது போல்ஆனதில், கலைந்து எழுந்தான் ஆனந்தன்.

அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படங்களை பயபக்தியோடு வணங்கி, வாங்கியவர்கள், வார்த்தைகளற்றுப்போனவர்களாய், மௌனமே இங்கிதமாயிருக்க, வெளியே வந்தார்கள்.

வீட்டில் சாப்பாடு முடிந்து, வேலைகளை முடித்து, எல்லோருமாய் போர்ட்டிகோவில் அமர்ந்தார்கள்.

****

"அம்மா! நாளைக்கு மறுபடியும் அங்கே போகலாமா? மனசு என்னமோ, அங்கேயே இருக்கணும், அன்னை மடியிலேயே தவழணும் போல இருக்கு. இப்ப, நான், நானாகவே இல்லேம்மா. காத்துல பறக்குற பஞ்சுபோல, நானே லேசாயிட்டேன். கொஞ்சங்கூட பாரமேயில்லே. ஆனா,மறுபடி, மறுபடி, அங்கேயே போகணும் போலிருக்கிறதை... தவிர்க்கவே முடியலையேம்மா....''

சொன்ன கோகிலாவை இறுகக் கட்டித் தழுவியபடி உச்சிமுகர்ந்தாள் தீபா. மித மிஞ்சிய சந்தோஷத்தில் தீபாவின் முகம் பிரகாசமானது, கண்களில் வைரத்துளிகள்.

"நிச்சயமா போகலாம் கோகிலா. உனக்கு அன்னையோட அருள் கிடைச்சிருக்குன்னு நம்பரேன். இந்த சந்தோஷம், நெகிழ்வு, பக்தி, நம்பிக்கை எல்லாமே, இப்ப இருக்கிறதுபோல, எப்பவுமே, ஏன் தினந்தோறுமே, அன்னையை நினைக்கிறப்பவெல்லாம் உனக்குள்ள ஏற்படனும்மா. அப்ப, அன்னை உன்னைவிட்டு விலகவேமாட்டார். கூடவிருந்து உனக்குத் துணையா, சகாயமா வருவார் கோகிலா. நிச்சயமா நாளைக்கும் போகலாம்மா....''

"ஆண்ட்டி! எனக்கும் அப்படித்தான். அங்கேயே தங்கிடனும் போல் இருந்தது. எழுந்துவரவே மனசில்லே. ஆண்ட்டி, என்னையும், ஒரு வயசான மூதாட்டி, வெண்மையான உடையோட வந்து, என்னைக் கைப்பிடிச்சுண்டு கூட்டிண்டு போனார். நான், சின்னக்குழந்தைபோல, சந்தோஷமா அவங்களோடவே போனேன். ஆகாய மார்க்கத்துல அவரோட போன போது, மேகங்கள்கூட துளி அழுக்கில்லாம, மூட்டை மூட்டையா, வெள்ளையா.... சோப்பு நுரைபோல.... சொல்லத் தெரியலே ஆண்ட்டி. ஆனா, இன்னும் கண்ணை மூடினா, அந்தக் காட்சிதான் தெரியறது. கண்ணைத் தொறக்கவே பிடிக்கலே. என் கையைப் பிடிச்சவங்க வயசானவங்க. ஆனா, காத்துலயே பறக்கறவங்கபோல, போன வேகம்.... அப்பப்பா... அவங்க டிரஸ்ஸெல்லாம் காத்து வேகத்துல பறக்குது.தலையில என்னமோ கட்டியிருக்காங்க.... ஸ்கார்ஃப்போல. எல்லாமே வெள்ளை வெளேர்னு.... அன்னப்பட்சிபோல..... அவங்க கை என்னைப் பிடிச்சபோது.... என்ன மெத்து மெத்துன்னு இருந்துது. என் உடம்பெல்லாம்.... மின்சாரம் பாஞ்சதுபோல சிலிர்த்து....சிலீர்னு.... ஆகி..... ப்பா..... இன்னும்கூட என் கையில அந்த சில்லுங்கற உணர்ச்சியிருக்கு ஆண்ட்டி. நான், வணங்கி எழுந்து பார்த்தபோதுதான், என்னைக் கைப்பிடிச்சு, மேகங்களுக்கு நடுவுல கூட்டிப்போனது அன்னைதான்னு தோணறது. அன்னைதானே ஆண்ட்டி?''

"நிஜம்மா.... அன்னையேதான் ஆனந்த். நீங்க ரெண்டுபேரும் சொல்லச் சொல்ல, உங்களையே நிக்கவச்சு, கைப்பிடிச்சு, கண்ணுல ஒத்திக்கணும்போல இருக்குப்பா. உங்க மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும், இனிமே அது உங்களைவிட்டு விலகும்னு அன்னையே சொல்றார்னு தோணுதுப்பா....''

அடுத்த இதழில் முடியும்.....

ஸ்ரீ அரவிந்த சுடர்

அற்புதம் நிகழவேண்டுமானால் அச்சக்தி அதற்குரிய பொருளை (substance) உற்பத்தி செய்யக் கூடிய நிலையில் இருக்கவேண்டும்.

அற்புதத்திற்கு ஆழம் தேவை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உள்ளே எந்நேரமும் அற்புதமான உணர்விருந்தால் அன்னை ஜீவியம் உருவாகிறது எனப் பொருள்.

உருவாகும் அன்னை ஜீவியம் அற்புதமான உள்ளுணர்வாகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆழ்ந்த உணர்வையும், எண்ணங்களையும் அன்னைக்கு நன்றி சொல்லும்முன் கருதவேண்டும். இல்லாவிட்டால், நன்றி மேல்மட்டத்திலிருந்து எழும்.

ஆழ்ந்த நன்றி எழ ஆழ்ந்த உணர்வும், நன்றியும் எழும்.


 


 



book | by Dr. Radut