Skip to Content

02.அன்னையின் துணை

 "அன்னை இலக்கியம்"

அன்னையின் துணை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

      "அதை மட்டும் நீ விட்டுவிட்டால் உனக்குப் பெரிய அதிர்ஷ்டம் வரும்'' என்றாள் அந்தப் பெண்.

      சிரித்துக் கொண்டாள் வேலம்மாஎத்தனையோ முறை முயன்று தோற்றுப் போயிருக்கிறாள். "ஒருவேளை அதுதான் என் பிடிவாதமோ' என்று தோன்றியது. "அன்னையே, அன்னையே' என்று அன்னையைத் துணைக்கழைத்துக் கொண்டால் எதுவும் முடியும் என்று மீட்டிங்கில் சொன்னார்களே, என்றெண்ணி "அன்னையே நீங்கள்தான் எனக்குத் துணை வரவேண்டும்' என நினைத்தாள். மனப்பூர்வமான நினைவுக்கே பலனுண்டு போலும்!

      கதவைத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே வந்த அவள் கணவன் "வாடி, சோறு போடுடி'' என்ற வழக்கமான ஏகவசனங்களை மறந்துவிட்டது போல, "என்ன வேலம்மாகுடிகாரப் பய வந்திட்டானான்னு பாக்குறியாஎனக்கும் இந்தக் குடியை விட்டுற ஆசைதான். ஆனா  முடியலையேமன்னிச்சுக்க தாயி''  என்று தான் குடிப்பதற்கு முதன் முதலாக வருந்திக் கூறி ஆடியவாறு சாப்பிடாமல் கூட தூங்கப் போனான்.

     மறுநாள் காலை வேலம்மா, தூங்கி எழுந்தவுடன் "அன்னையே,வெத்திலை போடுற ஆசைய நா வுட்டுப்புடணும்'' என்று வேண்டிக் கொண்டாள்இருந்தாலும் அது அவ்வளவு சுலபமில்லை என்பது புரிந்ததுகை மெல்ல இடுப்பில் செருகியபடியேயிருக்கும் வெற்றிலை சுருக்குப்பையைத் தடவிப் பார்த்தது. இன்று மட்டும் ஒரு முறை போட்டால் என்ன என்று கை பிரித்துப் பார்த்ததுஅதில் நேற்றைய முழுநேர வேலையில் வெற்றிலை வாங்கிவைக்காததால் பை காலியாய் இருந்ததுஏமாற்றத்திற்குப் பதில் தன் கள்ள ஆசையை எண்ணி வெட்கத்தில் சிரிப்பு வந்தது.   நாக்கு வெற்றிலை போடாமல் துறுதுறுவென்றது. அவள் கணவன் எழுந்து வந்து பலகாரம் கேட்டான்பதில் பேசாது செய்து கொடுத்தாள். அவனும் ஏதும் பேசாமல் வேலை தேடி வெளியேறிவிட்டான். அவளும் வேலைக்குப் போகப் புறப்பட்டாள்வழியில் ராவுத்தர் கடையில் வழக்கம்போல் வெற்றிலை வாங்கச் சென்றாள். ஆனால் ராவுத்தர்,  "என்ன புள்ள சொல்லட்டும்? வெள்ளம் வந்து கொடிக்காலெல்லாம் அழிகிட்டதாம். வெத்தலைக்கு ஏக டிமாண்டு. பஸ் வேற ஊரு சுத்தி வரணும். வெத்திலை வருதோ வாராதோ தெரியல புள்ள'' என்று சோகமாய்ச் சொன்னார்.

     அன்னை தன்னுடைய அடக்க முடியாத ஆசையை எப்படியெல்லாம் முறியடிக்கிறார் என்று நினைக்க சிரிப்பு வந்தது.

     "என்ன வேலம்மா? எதை நினைச்சு சிரிக்கிறாய்?'' என்றாள் எஜமானியின் பெண்.

"ஏதோ பழச நெனச்சு சிரிக்கறேன்மா'' என்று கூறி விட்டுவிட்டாள்தான் எடுத்த முயற்சி பலிக்கும்வரை வெளியில் சொல்லக்கூடாது என்று சொற்பொழிவில் கேட்டதை நினைவுபடுத்திக் கொண்டாள்.

     வெற்றிலை போடாத குறை உள்ளூர இருக்கிறதுஅன்னைக்காக இந்தப் பாழாய்ப்போன பழக்கத்தை விடமுடியவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. அன்னையே, அன்னையே' என்று சிறுபிள்ளைபோல் வெற்றிலை நினைவு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டாள்வேலை முடிந்து வீடு திரும்பும்வரை வெற்றிலை போடாது ஓட்டிவிட்டாள். ஆனால் கொஞ்சமாவது வெற்றிலை போட மனம் ஏங்கியது.

      வீட்டிற்குப் போகப் புறப்பட்டவள் நான்கு வீடுவரை சென்று கொண்டிருந்தபோது நாலாவது வீட்டுக் கமலத்தம்மாள் பார்த்துவிட்டு, "வேலம்மா, ஒரு நிமிஷம் நில்லு'' என்று கூறி உள்ளே சென்று வெற்றிலைப் பாக்குடன் வந்தாள். "இந்தா வேலம்மா, நேத்து எங்க வீட்ல சாமிக்குப் படைச்சதுஎங்க வீட்ல யாரும் வெத்திலை போடறதில்லை. ஒனக்குத் தான் வெத்திலை பிடிக்குமேன்னு எடுத்து வெச்சேன்'' என்று வெற்றிலைப் பாக்குடன் ஒரு ரூபாய் நாணயமும் சேர்த்துக் கொடுத்தாள்சிரித்துக் கொண்டே வாங்கி சுருக்குப்பையில் போட்டு, இடுப்பில் செருகிய வண்ணம் நடந்தாள். "வீட்டிற்குப் போனதும் மொதல் வேலையா ஒரு வாய் வெத்திலை போட்டாத்தான் வேலை ஓடும்' என்று எண்ணியவாறு சென்றாள்அப்போது நேற்றைய பேச்சில் கேட்ட விஷயம் நினைவு வந்தது. "நாம் ஒன்றை விட முடிவு செய்தபோது ஆசை எழுந்து நம்மை ஜெயிக்கப் பார்க்கும். அதற்குத் தோதாக நாம் ஆசைப்படும் பொருள் வலிய கிடைக்கும். அப்போது மனம் அடங்குவதுதான் உண்மையான கட்டுப்பாடு. கட்டுப்பாட்டிற்கு (சுயக்கட்டுப்பாட்டிற்கு) அன்னை பெரிதும் பலிப்பார்' என்ற செய்திதான் அது.

      தன் ஆசையை நினைத்து வெட்கம் வந்தது. "புருஷன் குடிக்கறத விட்டுவிட்டு நல்ல ஆம்பிளயா வாழணும்னா வெத்திலையை விட்டுடத்தான் வேணும். முடியை எடுத்தா நடக்கும்னா எடுத்திடறோம்.தரையில உருண்டா கெடைக்கும்னா உருளுறோம். சாப்பிடாம இருந்தா பலிக்கும்னா பட்டினி கெடக்கறோம். அதெல்லாம் நம்மால முடியுறப்போ, இது மட்டும் ஏன் முடியாதுஎஜமானியம்மா மக சொன்னது போல விட்டுட விருப்பமில்லைங்கறதுதான் உண்மை' என்று எண்ணியவாறு வெற்றிலையைத் தொடாமலேயே இருந்துவிட்டாள்.

     அன்று அவள் புருஷன் குடிக்காமல் வந்தான்ஆனால் கையில் காசு கிடைக்காததால் குடிக்காமல் வந்தான்குடிக்காத ஏமாற்றம் அவனுக்கு. "ஏ புள்ள வேலம்மாஎங்கையில காசில்ல.    ஏதாச்சும் காசு குடு'' என்றான்.

"சரி, சரி, சோறு துன்னு, அப்பால காசு தர்றேன்'' என்றாள்.

     "ஏது காசு? குடிக்கறதுக்குக் கொடுக்கவா சம்பாரிக்கிறேன்?' என்று சண்டையிடும் அவள், சண்டையிடாமல் சொன்னாள்.

     தன்னால் இந்த வெற்றிலை போடும் பழக்கத்தை விடமுடியாதது போல்தான் அவனும் குடியை விடமுடியாமல் தவிக்கிறான். இனி அவனோடு சண்டையிடப் போவதில்லை. தன்னிடமேதான் சண்டையிடப் போகிறாள். அதாவது வெற்றிலையை விட்டுவிடப் போராடப்போகிறாள்.

     சோறு சாப்பிட்டு முடித்துவிட்டு, தன் முன் கை நீட்டி நிற்கும் புருஷனுக்கு பிளாஸ்டிக் டப்பியிலிருந்து ரூபாய்த்தாளை எடுத்துக் கொடுத்தாள். கொடுக்கும்போதே, "அன்னையே, என் வெற்றிலை போடும் பழக்கத்தை நான் விட்டுவிட வேண்டும்' என்று வேண்டியவாறு கொடுத்தாள்.

     "இப்படிக் காசு வாங்கியாச்சும் குடிக்கணுங்கற ஆசையை நெனச்சா ரொம்ப வெக்கமா இருக்கு புள்ள. ஆனா முடியல'' என்று கூறிச் சென்றான்.

      இத்தனை நாளில் இப்படி ஒரு முறைகூடக் கூறியறியாத கணவன், இன்று இப்படிச் சொல்வது அவளுக்கு உடல் சிலிர்த்தது. "அன்னையே' என்று நினைத்து, நிச்சயம் இந்த முயற்சி பலிக்கும் என்று நம்பினாள்.

      சற்று நேரத்தில் தள்ளாடாமல் வந்து நின்றான்.  "என்ன நெனச்சு காசு குடுத்த புள்ள? நீ என்னெ ஏசிப்பேசிக் காசு கொடுத்தப்ப எல்லாம் குடிச்சுட்டு வருவேன். இன்னிதினம் சாராயமே கெடக்கல புள்ள. அங்கே போலீஸ்காரங்க பூந்து ஒரே கலவரம். சாராயமெல்லாம் கொட்டிக் கவுத்து, ஒரே சண்டை. பயந்துபோய் வந்திட்டேன்'' என்றான்.

     வேலம்மாவுக்கு நம்பிக்கை (தான் மாறினால் புருஷன் மாறுவான் என்ற நம்பிக்கை) வலுத்தது.

     மறுநாள் காலை எழுந்தவுடன் அவள் கை இடுப்பில் செருகிய வெற்றிலைச் செல்லத்தைத் தடவிப் பார்க்கவில்லை. காரணம் எழுந்திருக்கும்போதே அன்னையை நினைத்து எழவேண்டும் என சொற்பொழிவில் கேட்டதை நினைவுபடுத்த, அதே நினைவாக இருந்ததில் வெற்றிலை மறந்தேபோனது.

    வழக்கமான வீட்டு வேலைகளை முடித்து, புருஷனுக்கு இட்லி வேகவைத்து கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்போகும்போது நேற்று கொடுத்த காசு அவனிடம் இருப்பதால் "குடித்துவிட்டு வராதே' என்று சொல்ல நினைத்து, நினைவை மாற்றிக்கொண்டாள்.  "பேசக்கூடாது.நமக்குள் பேசாமல் செய்ய வேண்டியதைச் செய்தால் போதும்' என்று சொற்பொழிவில் கூறியதை நினைத்தாள். அவன் குடிப்பதை நிறுத்தும் சாவி தன்னிடமுள்ளதுதான் வெற்றிலை ஆசையை மனமார விட்டுவிடுவதுதான் அது என்று உள்ளூரப் புரிந்தது. அதனால் எதுவும் பேசவில்லை. "அன்னையை நம்பினால் நம் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். பொறுப்பை அவரிடம் விட்டுவிட வேண்டும்என்று சொல்லப்பட்டதையும் நினைவுபடுத்திக் கொண்டாள். அவள் இதையொரு சத்தியசோதனையாகவே ஏற்றுக் கொண்டாள்.

"ஏன் புள்ள வேலம்மா? நேத்து நீ எங்கையில குடுத்த காசு எங்கிட்டதான் இருக்கு. "குடிக்காம ஒழுங்கா வா'ன்னு ஏன் சொல்லல?''என்று அமைதியாக இருந்த அவளைச் சீண்டினான்.

     "கையில காசு இருந்தா குடிச்சிட முடியுமா, என்ன?'' என்றாள்.

     ", நேத்து வந்திட்டேன்னு சொல்றியா?'' என்றான்.

     "இல்ல, அது இல்ல. இது வேற'' என்றாள்.

     "வேற என்ன?'' என்றான்.

     "அன்னைன்னு ஒரு மந்திரம் இருக்கு. அதைச் சொன்னா தப்பு செய்ய முடியாது'' என்றாள்.

"! நீ இப்ப மந்திரமெல்லாம் படிக்கிறியா?'' என்றான்.

"நான் போய்ப் படிக்கல. அதுவா கெடச்சது'' என்றாள்.

     "அதனாலதான் நான் நேத்து குடிக்காம வந்தேன்னு நெனக்கறியா?'' என்றான். மேலும், "ஒம் மந்திரமெல்லாம் குடிக்கிறவங்கிட்ட பலிக்காது''என்று கேலியாய்ச் சொல்லிச் சிரித்துவிட்டுப் புறப்பட்டான்.

     திடீரென்று வேலம்மாவுக்கு வெற்றிலை நினைவு வந்தது. அப்பாடி! ஆன வயசுக்கு ஒரு நாகூட வெத்திலை தின்னாம இருந்ததில்ல. ஆனா நேத்து பூரா வெத்திலையே போடல. அது நெனவு வந்தா ஆசை வருது. அத நெனைக்காம இருக்க அன்னைய நெனக்கிறதுதாஞ் சரி. "அன்னையே ஒம் அருளால இந்தப் பாழாப்போன வெத்தில ஆசை வரக்கூடாது' என்று வேண்டியவாறு புறப்பட்டாள்.

     எதிரே அடுத்த வீட்டு பாக்கியம் வந்து, "வேலம்மா, ஒரு வாய் வெத்தில பாக்கு இருந்தாக் குடேன்'' என்றாள்.

     நேற்று கமலத்தம்மாள் தந்ததை சுருக்குப்பையோட அவளிடம் தந்தாள்.

     "என்ன பையோட தர்ற?'' என்றாள் பாக்கியம்.

     "பரவாயில்ல பாக்கியம்நீ வச்சுக்கஎங்க எஜமானியம்மா பொண்ணுக்கு வெத்தில போட்டா புடிக்காதுஇத எடுத்திட்டுப் போனா பாதி வேலைல போட்டுக்குவேன். அதான் நீயே வச்சிக்க'' என்றாள்.

     "உனக்கு வேணான்னாக்க குடுத்திடு'' என்று பாக்கியம் வாங்கிச் சென்றாள்.

     "என்ன வேலம்மா, இன்னிக்குப் பாதி சுத்தம் செய்யும்போதே விட்டு விட்டுப் போகமாட்டாயல்லவா?'' என்று குறும்பாய்க் கேட்டாள் எஜமானியம்மாவின் மகள்.

     அவளும் சிரித்துக்கொண்டே, "நிச்சயமா போகமாட்டேன்மாநா அந்தப் பழக்கத்தையே விட்டுப்புட்டேன்'' என்றாள்.

     "வெரி குட். இனி உனக்கு அதிர்ஷ்டம்தான் பாரேன்'' என்று மகிழ்ந்து பாராட்டினாள்.

    மேலதிகாரியின் பாராட்டு நல்ல டானிக் அல்லவா? வேலம்மா கூடுதல் கவனத்துடன் வேலைகளைச் செய்தாள்.

     வெற்றிலை போடாதது வெறும் மனக்குறைதான்அதனால் எந்தப் பாதிப்புமில்லை என்று அவளால் உணர முடிந்தது.  "இந்த வெத்திலப் பழக்கத்தால், அத வாங்க முடியாதபோதெல்லாம் ஏமாற்றம் வரும். கோபம் வரும். கோபத்தை மற்றவரிடம் காட்ட நேரும். வேலை செய்யுமிடத்தில் வெத்திலை நினைவால் வேலையை சரியாய்ச் செய்யாது திட்டு வாங்கியதுண்டுஆனால் வெற்றிலையே போடாத இந்த இரண்டு நாளில் மனம் சுறுசுறுப்பாய், உற்சாகமாயிருக்கிறது. அன்னையே! உமக்கு நன்றி, நன்றி'' என்று மனம் நெகிழ்ந்து வீட்டிற்கு வந்தாள்.

     ராச்சோறு ஆக்கி புருஷனின் வரவிற்குக் காத்திருந்தாள்புருஷன் வந்தான். தள்ளாடாமல் தெளிவாய் வந்தான். ஆனால் சோகமாய் இருந்தான்.

    "கைகால் கழுவி சோறு துன்ன வா மச்சான்'' என்று அழைப்பு விடுத்தாள்.

     "இல்ல புள்ள. இன்னக்கி சோறு வேணாம் புள்ள. நெஞ்சு கனமா கனக்குது. வயிறு பசிக்கல'' என்றான்.

      "நேரத்தோட வந்தீன்னா டாக்டர் ஐயாகிட்ட போய் எதுனா மருந்து வாங்கியிருக்கலாமில்ல?'' என்றாள்.

     "இல்ல புள்ள. என் ஒடம்புக்கு ஒண்ணுமில்ல. மனசு கஷ்டம் தாளல''என்று விம்மினான்.

      "நீ என்ன சொல்லுற? என்னாயிடுச்சு ஒனக்கு?'' என்றாள் வேலம்மா.

      "ஒம் மந்திரம் பலிச்சுடுச்சி புள்ள. இனிமே நா குடிக்க மாட்டேன்'' என்றான்.

     "நா மந்திரம் ஒண்ணும் போடல. ஒரு பேச்சுக்கு சொன்னேன்'' என்றாள்.

     "இல்ல புள்ள, கடவுள் கருணையில இன்னிக்கு எனக்கு நெசமாவே புத்தி வந்திடுச்சி'' என்றான்.

       "புரியுற மாதிரி சொல்லு மச்சான்'' என்றாள்.

"எனக்கு இன்னிக்கு பெரிய ஐயா வூட்ல தோட்ட வேல கெடச்சிதுஒரு நாள் வேலை. சுளையா 150 ரூவா கொடுத்தாங்கநேரமாயிடுச்சு. இருந்தாலும் கையில காசு இருக்குற தெம்புல சாராயக்கடைக்குப் போனேன்ஆனா அங்க ஒரே போலீஸ் அடிதடி. ஆஸ்பத்ரி பஸ் வேற (ஆம்புலன்ஸ்). நான் போவறதுக்கு முந்தியே பாவிப்பசங்க எல்லாம் குடிச்சிட்டு மயங்கி விழுந்துகிடந்தாங்க. வெஷசாராயம்னு பேசிக்கிட்டாங்க. சில பேரு செத்துட்டாங்க. சில பேரு ஆஸ்பத்ரில உயிரு ஊசலாடிக் கெடக்கறாங்கசெத்தவங்கள சுத்தி ஒரே கூட்டமா அழுதிட்டிருந்தாங்கஅப்போ அங்க வெள்ள சீலை கட்டின பொம்பளைங்க சாமியாரம்மாகணக்கா இருந்தவங்க சில பேரு வந்தாங்கஅவுங்க அழறவங்ககிட்ட, "செத்தவங்க முன்ன அழுது அவங்க உயிரு நல்ல கதி அடையறத தடுக்கக்கூடாதுஅவங்கமேல ஒங்களுக்கு உண்மையா பிரியம் இருந்தா அமைதியா கடவுள வேண்டுங்க' என்று சொல்லி அவங்க எல்லாம் கண்ண மூடி தவம் (தியானம்) செஞ்சாங்க. அப்பால அழறவங்களப் பாத்து "மெய்யாலுமே இவங்களுக்காக நீங்க எதுனா நல்லது செய்ய நெனச்சா, நீங்க குடிக்கறத விட்டுவிடறதா சத்தியம் எடுத்துக்கங்க. உங்க கண் முன்னால துடிச்சு செத்ததை பார்த்த பிறகும் நீங்களும் அதே தப்பை செய்யுறதில என்ன பிரயோசனம்'ன்னாங்க. இன்னும் புத்தில உரைக்கறாப்பல நல்லதெல்லாம் சொன்னாங்கஇனிமே குடிக்கறதில்லேன்னு நானும் முடிவு செஞ்சிட்டேன் புள்ள. ஆனாலும் மனசு நல்லாயில்ல. நிம்மதியா இருக்கணும்போலயிருக்கு'' என்றான்.

     "கவலப்படாத மச்சான்மனச நிம்மதியா ஆக்குற இடம் ஒண்ணு இருக்கு. நாளெபொழுது விடிஞ்சதும் ஒன்னெ அங்க இட்டுணு போறேன்''என்றாள்.

     "அன்னையே எம் புருஷன் திருந்திட்டாருஅது எனக்குச் சந்தோஷம் இல்ல; பெருமையுமில்லஉம்ம கருணைனு புரிஞ்சிட்டேன். எம் புருஷன் குடிக்கறதில்லேன்னு சொன்னப்போ நா அவருக்குள்ள ஒம்மைத்தான் பார்த்தேன். நீரே அவருக்குள்ள வந்து சொன்னதா ஏழை மனசு நம்புது. உம்ம கிட்டவே இருந்து, உம்மையே நெனச்சா எதுவுமே முடியும்னு தெரிஞ்சுகிட்டேன். அன்னிக்கு தியானத்தில கேட்டதெல்லாம் மெய்யாலுமே பலிச்சிடுச்சி' என்று உருகினாள்.


 

முற்றும்

****


 



book | by Dr. Radut