Skip to Content

03. இச்சையற்றவருக்கு சித்திக்கும்

இச்சையற்றவருக்கு சித்திக்கும்

N. அசோகன்

ஓர் அரசு அதிகாரி ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி அவர் வழிபடும் தெய்வத்திற்கு முக்கியமான பண்டிகை நாளை கொண்டாடுவதற்காகப் புதுவை வந்துகொண்டிருந்தார். இவர் ஏற்றுக் கொண்ட தெய்வத்திற்கான வழிபாட்டு முறைகளில் பக்தனுடைய பிறந்த நாளன்று தெய்வத்தின் அருள் சிறப்பாகக் கிட்டுமென்ற நம்பிக்கை நிலவியது. அதாவது பிறந்த நாளன்று பக்தனுடைய ஆன்மா ஒரு படி மேலே உயர்ந்து செல்வதாகக் கருதப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் பஸ் சர்வீஸ் இன்று போல் சிறப்பாக அமையவில்லை. பக்தர் பிப்ரவரி 21ஆம் தேதியில் புதுவையில் இருக்க வேண்டுமென்றால், குறைந்தது மூன்று நாள்கள் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. ஓர் அரசாங்க அதிகாரிக்கு இத்தனை நாள்கள் விடுப்புக் கிடைப்பது அப்போது அவ்வளவு சுலபம் இல்லை. மேலும் அவருடைய மேலிட அதிகாரி ஒருவர் அதே அலுவலகத்தில் முகாமிட்டிருந்தார்.

பக்தருடைய பிறந்தநாள் பிப்ரவரி 19ஆம் தேதி வந்தது. தம்முடைய பிறந்த நாளன்று அவர் புதுவையில் இருக்கவேண்டும் என்றால் தொடர்ந்து ஐந்து நாள்கள் விடுப்புக்கிடைத்தாக வேண்டும். இது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக அப்போது இருந்தது. இவருடைய சூழ்நிலை மற்றும் இவர் பயணம் செய்ய வேண்டிய தூரம் ஆகியவற்றைப் பற்றித் தெரியாத மற்றொரு பக்தர் இவருடைய பிறந்தநாளன்று புதுவை செல்வது பற்றிப் பேச்செடுத்தார். நண்பருடைய யோசனையை உடனே நிராகரித்தார் பக்தர். அந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அவருக்கு சூழ்நிலை திடீரென்று விபரீதமாக மாறியது. திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய அலுவலகத்தில் இத்தகையதொரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை. ஆனால் 110 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவருடைய பதவியில் அமர்த்தப்பட்டார். மீண்டும் வேலை கிடைத்துவிட்டபிறகு அடுத்த ஆண்டாவது தம் பிறந்தநாளன்று புதுவை செல்வதுபற்றி யோசித்தார். தமது சிந்திக்கும் திறனின் இறுதிக்கு வந்துவிட்டிருந்தார். புதுவையில் இப்படிப் பிறந்த நாளைக்கு வருவது பற்றி முன்பு பேச்செடுத்திருந்த நண்பரைச் சந்தித்தார். நண்பரும், "பிப்ரவரி 19 மற்றும் 21ஆம் தேதிகளில் நீங்கள் புதுவையிலிருப்பது எவ்வளவு சிரமமென்று எனக்குத் தெரியும். ஆனால் இது நம்மறிவிற்குத்தான் முடியாத காரியமேயொழிய நம் ஆன்மாவிற்கன்று. மனித முயற்சி முடியுமிடத்தில்தான் இறைமுயற்சி தொடங்குமென்ற உண்மை உங்களுக்குத் தெரியாதா?'' என்று கேட்டார். அதிகாரியான பக்தரும் இவ்வுண்மையை நம்புவதாகப் பதில் சொன்னார். இவ்விஷயமாகத் தம் அறிவு எழுப்பும் கேள்விகளையெல்லாம் விலக்கினார். அவருடைய மனத்தில் அமைதி நிலவியது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் வந்தது. 110 உயர் அதிகாரிகளும் தேர்தல் பணிக்காக அழைக்கப்பட்டனர். விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதிசயமாக இவரைத் தேர்தல் பணிக்கு அழைக்கவில்லை. பக்தரும் தம்முடைய பிறந்த நாளைக்குப் புதுவைக்கு வந்து, பிப்ரவரி 21ஆம் தேதி வரையிலும் தங்கினார். அந்த ஆண்டிருந்து தொடர்ந்து ஆண்டுதோறும் பிப்ரவரி 19ஆம் தேதி வந்து, 21ஆம் தேதி வரையிலும் தங்கினார்.

தெய்வம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் இது உண்மை என்றில்லை. அன்றாட வாழ்க்கையிலும் இது நடக்கத்தான் செய்கிறது. நாம்தான் இதைக் கண்டுகொள்வதில்லை. நாமொரு நேர்முகத் தேர்விற்குப் போகிறோம். முடிவுகள் அறிவிக்கப்படும்பொழுது நம் பெயரில்லை. அதனால் நாம் நம்பிக்கை இழக்கிறோம். நாம் வீட்டிற்கு வரும்பொழுது செலக்ஷன் ஆர்டர் நமக்காகக் காத்திருக்கிறது. நம் முயற்சியைக் கைவிட்டபின் இறைவன் நம்மைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது நமக்குப் புரிய விசேஷ ஆன்மீக அறிவு வேண்டும். தானே எல்லா வேலைகளையும் செய்வதாக நினைக்கும் மனிதனுக்கு இறைவன் தான் இவ்வேலைகளையெல்லாம் செய்கிறான் என்றும், அவர் செய்யும் வேலையைக் கெடுப்பதுதான் தன்னுடைய பங்கென்றும் தெரிய வாய்ப்பில்லை. "உன் பங்கு உபத்திரம் தருவதே'' என்பதை மனிதன் அறிவது ஞானம்.

முக்கியமாகப் பேரம் பேசும்பொழுது மேற்கண்ட உண்மைகள் தெரியவரும். ஒரு பெரிய சொத்தை வாங்க முயன்ற ஒருவர் கிரயப் பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் பாதி விலையை மட்டும் கொடுத்து வாங்க விரும்பினார். இது சாத்தியமில்லை என்று அவரது அறிவு சொன்னாலும், தம் ஆசையை வெளியிட்டுப் பார்த்தார். பலனில்லை என்று தெரிந்து வெறுங்கையுடன் வீடு திரும்பினார். பதிவு செய்வதற்குச் சிலமணி நேரத்திற்கு முன்னர் விற்பவரின் ஆளொருவர் இவர் வீட்டிற்கு வந்து இவருடைய விருப்பத்திற்கு, விற்பவர் உடன்படுவதாகத் தெரிவித்தார்.

இறைவன் அனுதினமும் அனைத்துச் செயலிலும் நம்மிடையே செயல்படுவதை நாமறிவதில்லை. நம் மனத்தின் இச்சை இறைவனின் இயல்பான செயலுக்குத் தடை. "இச்சையற்றவருக்குச் சித்திக்கும்'' என்ற வழக்கு நடைமுறையில் செயல்படுவதை நாம் காணலாம்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
அகந்தையைப் பிரகிருதி உற்பத்தி செய்தது. சைத்திய புருஷன் ஆன்மாவினுடையது. அகந்தையைக் கரைத்து சைத்தியபுருஷனை நாடுதல் எனில், நம் செயல் மையம் இயற்கையிலிருந்து ஆன்மாவிற்குப் போகிறது எனலாம். இதன் முதல் அறிகுறியாக எல்லா இயற்கையின் செயல்களும் - எண்ணம், உணர்வு - நம்மால் ஆரம்பிக்கப்படுவது நின்று, ஆன்மா ஆரம்பிப்பதற்காக நாம் காத்திருப்பதாகும்.
நம்செயல் அழிந்தால்,
இறைவன்செயல் சைத்தியபுருஷன் மூலம் வரும்.



book | by Dr. Radut