Skip to Content

13. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

அனந்தம் என்பது ஒரே சமயத்தில் மூலமான சாரமுடையது, அளவுகடந்த பெரிய தொகுப்பானது, பல்வகைச் சிறப்புடையது (P.331)

அந்தம் என்பது முடிவு. முடிவற்றதை அனந்தம் என்றனர். நம்மூரிலிருந்து சென்னைக்கு ஒரு ரோடு போகிறது. அது சென்னையுடன் முடியவில்லை. அங்கிருந்து டெல்லிக்குப் போகிறது. டெல்லியிலிருந்து சிம்லா போகிறது. இந்த ரோடு எந்த ஊருடனும் முடியவில்லை என்பதால் நாம் இதை அனந்தம் எனக் கூறலாம். முடிவற்றதை நாம் அனந்தம் என இதுவரை அறிவோம். பகவான் தலைப்பில் கூறிய அனந்தம் பிரம்மத்தைப் பற்றியது. அது இப்பொருளுக்குக் கட்டுப்படாது. பிரம்மத்தின் அனந்தத்தைக் குறிக்கும். அதன் அம்சங்களை உபநிஷதம், கீதை கூறியுள்ளன.

  1. அந்தமில்லை என்பதுடன் ஆதியுமற்றது. "ஆதியும் அந்தமும் அற்றவன்".
  2. பிரிந்து தோன்றுவது, ஆனால் பிரிக்க முடியாதது.
  3. அசைவற்றது, ஆனால் நமக்குமுன் செல்வது.
  4. அகண்டமாகவும் அணுவாகவும் ஒரே சமயத்திலிருப்பது.
  5. எடுக்க எடுக்க குறையாதது.
  6. அழிவற்றது, அழிக்க முடியாதது, அழியாதது.
  7. சுதந்திரத்தின் எல்லா அம்சங்களையும் உடையது. (உதாரணமாக சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரமும் உடையது).
  8. எதையும் நிர்ணயிக்கக்கூடியது. எந்த நிர்ணயத்திற்கும் கட்டுப்படாதது.

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா என்ற அத்தியாயத்தில் (Book II, Chapter 11) பகவான், பிரம்மம் மனத்திற்கும், தெய்வீக மனத்திற்கும், சத்தியஜீவியத்திற்கும் எப்படித் தெரிகிறதுஎனக் கூறுகிறார். அத்துடன் பிரம்மத்தின் காலத்தை (காலமும், கடந்ததும் இணைந்தது) விளக்குகிறார். இதுவரை இந்துமத தத்துவ மரபில்லாத கருத்து அது. அங்கு மரணம், தீமை, வலி, நோய், துன்பமில்லை எனவும், அனைத்தும் க்ஷணத்தில் நடக்கும் எனவும் விளக்கிக் கூறுகிறார். அதுவே பகவான் கூறும் அற்புதம். தத்துவமாகக் கூறும்பொழுது அதற்கு மூன்று அம்சங்களைக் கூறுகிறார். பிரம்மத்தின் அம்சம் மூலமானது. பிரபஞ்சத்தின் அம்சம் தொகுப்பானது. தனி மனிதனான ஜீவாத்மாவின் அம்சம் பல்வகைப்பட்டது என்பது தலைப்பு குறிக்கிறது. அதன் சிறுஅம்சத்தை - ஓர் அம்சத்தை - நாம் காமதேனு, கற்பக விருக்ஷம், பிரம்ம தண்டம் என அறிவோம். உலகில் அனைத்துப் பொருள்களும் எல்லா நேரமும் காமதேனுவாகவும் கற்பக விருக்ஷமாகவும் பிரம்ம தண்டமாகவும் உள்ள லோகம் சத்தியஜீவியம் வந்து எழுப்பப்போகும் அற்புத லோகம்என்கிறார். இவை அந்த லோகத்தில் நிரந்தரமான குணங்களாக அமையும் என்கிறார் பகவான். பூலோகம், பிரபஞ்சம், பிரம்ம லோகம் மூன்றும் சேர்ந்த நிலை என்பதை மூலம் - சாரம் எனவும், பெரிய தொகுப்பு எனவும், பல்வகைச் சிறப்பு எனவும் சேர்த்து - அனந்தம் எனக் குறிப்பிடுகிறார்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உனக்குரியதை அனுபவிக்காமலிருப்பதும், உரிமையில்லாததை அனுபவிக்க விரும்புவதும் மன்னிக்க முடியாதது. (கடைசி வரை ஏற்றுக்கொள்ளாததால் அது பூர்த்தியாகாமல் இருக்கிறது).
 
உள்ளதை உள்ளபடி ஏற்பதவசியம்.

*****



book | by Dr. Radut