Skip to Content

04. அஜெண்டா

அஜெண்டா

"இது அற்புதமான சொல், மீண்டும் மீண்டும்
சொல்ல வேண்டியது" - அன்னை

  • அன்னை பகவான் ஒரு சாதகருக்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரு சொல்லை எடுத்துக் கூறி இப்படிப் பேசுகிறார்.
    "நம் இஷ்டப்படி நடக்க அனுமதிக்கும் யோகம் இது இல்லை.
    இது இறைவனின் யோகம். இறைவனின் இஷ்டம் பூர்த்தியாக அகந்தை விலக வேண்டும்'' என்பது பகவான் சாதகருக்கு எழுதியது.
  • ஒரு அன்பர் மேற்படி கருத்தை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, செயல்பட ஆரம்பித்தால் நடப்பவை,
    • அடுத்த காரியம் ஆரம்பிக்கும் பொழுது இது மறந்து போகும். இலட்சியம் மறந்து போய்விட்டது என்பதே தெரியாது.
    • ஒருவர் சுட்டிக் காட்டினால் புரியாது.
    • பிறர் சுட்டிக் காட்டி நடப்பதில்லை இந்தக் காரியம்.
    • அப்படி நினைவுக்கு வந்தபொழுதும், மீண்டும் அச்சொற்களை நினைவுக்குக் கொண்டு வர முடியாது.
    • முடிந்தால் செயல்படுத்த முடியாது.
    என்பது அதிதீவிரமாக முழு உண்மையுடன் முயன்றவர் அனுபவம்.
  • அப்படியென்றால் இந்த யோகம் நாம் செய்ய முடியாது என்று அர்த்தமா?
  • ஒரு வகையில் அது சரியெனினும், அதுவே முடிவல்ல.
  • வாட்ச்மேன், வீட்டு வேலை செய்பவள், ஆட்டோ டிரைவர் தம் பிள்ளை டாக்டராக வேண்டுமென 50 ஆண்டுகட்கு முன் கனவு கண்டிருக்க இடமில்லை.
  • இப்பொழுது அவை நடக்கின்றன. சமூகம் இடம் தருகிறது. உரிமை தருகிறது, உதவி தருகிறது.
  • உள்ள இடத்தை அனுபவிக்கும் அம்சம் வேண்டும்.
  • உரிமை தருவதால், உரிமையைக் குலைக்கும் சக்திகள் ஏராளம், அவற்றைக் கடக்க முடியுமா?
  • உதவி தந்தால் பெற முடியுமா? பெற்றால் காலம் கடந்து வந்தால் என்ன பயன்?
  • சந்தர்ப்பங்கள் தொடர்ந்து சாதகமாக இருக்க, நல்ல உள்ளமுள்ளவர் வலிய உதவும் நிலையில், பெறுபவன் பெறும் பாங்குடையவனானால், காலம் ஒத்து வந்தால், கனவு பலிக்கும் எனக் காண்கிறோம்.
  • அகந்தை விலகி, தொடர்ந்தும் விலகி, யோகம் இறைவனுக்குப் பலிக்க நாம் சொல்லையும், உணர்வையும், செயலையும் கடந்து, சொல்லுக்குரிய மனத்தினின்று விலகி, உணர்வுக்குரிய நெஞ்சை விட்டகன்று, செயல் உறையும் உடலைப் புறக்கணித்து, ஜீவனில் நம்மை இருத்தினால், ஜீவன் மற்ற ஜீவன்களையும், பரமாத்மாவையும் நாடினால், அது பலிக்கும்.
  • வாழ்நாள் முழுவதும் அதீதமான சிரத்தையுடன் அன்னை மேற்கொண்ட கட்டுப்பாடு இது.
  • ஒரு நாள் பலிப்பது இந்த நாட்டில் ஒரு நாள் பிரதமராக இருப்பது போலாகும்.
  • ஒரு மணி பலித்தால் யோகம் முழுமையாக ஆரம்பமாகும்.
  • ஆசனம் உடலுக்குரியது, பிராணாயாமம் உயிருக்குரியது, ஜடம், நிஷ்டை மனத்திற்குரியது.
    இது அகந்தையை விலக்குவது, ஆத்மா மட்டும் செய்யக்கூடிய discipline கட்டுப்பாடு.
  • ஆத்மாவை அடைந்தபின்னரே ஆரம்பிக்கக் கூடியது.
  • சமர்ப்பணம் ஆத்ம சமர்ப்பணமானால் இது பலிக்கும்.
  • தன்னையறிந்து இன்பமுற ஒரு தந்திரமிது.
  • தன்னையறிவதே பெரிய யோகம்.
  • அன்னை கூறுவது அற்புத வாக்கு.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாம் எதைக் கைவிட்டோமோ
அதனால் நமக்கு பாதிப்பு இருக்காது.
 
மௌனம் பூண்டால் உலகம் நம்மை மறக்கும்.
 
உணர்வோடு உறவு அறுந்தால்
உலகம் உணர்வால் நம்மை பாதிக்காது.
 
செயலற்றுப் போனால்
உலகின் செயல் உன்னைத் தீண்டாது.
 

*******



book | by Dr. Radut