Skip to Content

05. நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

சமர்ப்பணத்தின் பகுதிகள், அம்சங்கள்,
பலதிசை பக்குவங்கள்

கர்மயோகி

— சமர்ப்பணம் சரணாகதியின் ஆரம்பம்.
Synthesis of Yoga -வில் இதன் தத்துவாம்சங்கள் மனித நிலை, அகந்தையொழிந்த பிரபஞ்ச நிலை, அந்நிலையில் ஆனந்தம் பெறுவது, தனி மனிதனுடைய சமர்ப்பணம் மனித குலத்தின் சமர்ப்பணமாவது, இவை கடந்த பிரம்ம நிலை, அவையனைத்தும் முக்குணங்கள் மூலம் மனித சுபாவத்தில் வெளிப்பட்டு, சரணாகதி பூர்த்தியாவது 4 அல்லது 5 பக்கங்களில் தெளிவாகக் கூறப்படுகிறது. அவை தத்துவம்.

— நடைமுறையில் தெரிய வேண்டிய விவரங்கள், முன்னறிவிப்பு, எச்சரிக்கை, கடந்தகால, எதிர்கால விளைவுகள், சூட்சும லோக விவரங்கள், இரகஸ்யங்கள், அவற்றுள் உடல், மனம், வாழ்வு, ஆன்மாவுக்குரிய தனிச் சிறப்புகள், குறிப்பாக நமக்கு உதவக் கூடியவை, தவறக் கூடியவை ஏராளமான விவரங்கள். எழுது- வதால் பூரணம் பெறும் கருத்தல்ல. எழுத்து மூலத்தையும், சாரத்தையும், அடிப்படையான, அத்தியாவசியமான அம்சங்களையும் சுட்டிக் காட்டலாம். அனுபவம் பூர்த்தி செய்யும்.

— எந்த ஒரு செயலும் ஆன்மா அளவில் உலகிற்கும், பிரபஞ்சத்திற்கும், பிரம்மத்திற்கும் முடிவிலும், மூலத்திலும் சமம்.

— காரியத்துள் உணர்ச்சி, எண்ணம், நினைவு, கற்பனை, விருப்பு, வெறுப்பு என எல்லா எண்ணத்தின் அம்சங்களும், செயலின் அம்சங்களும் நிறைந்திருப்பதைச் சமர்ப்பணத்தின் போது மனதில் ஏற்க வேண்டும்.

— நம் சமர்ப்பணம் நம்மைப் போன்றவர் அனைவரையும் தீண்டும்.

— பரநலம் சுயநலமாகப் பலிக்கும்.
சுயநலம் பரநலமாகும், நமக்கு எதிரான பலன் தரும்.
(பிறருக்கு நாம் நல்லெண்ணத்தால் விழைவது நமக்கு பலிக்கும். நமக்கு மட்டும் விருப்பப்படுவது பிறருக்கு மட்டும் பலிக்கும். சமயத்தில் எதிரிக்கு மட்டும் பலிக்கும்).

— சட்டம் தலை கீழே செயல்படும் பொழுது வாழ்வின் முழுமையைச் செயல் குதர்க்கமாக வெளியிடும்.

— நல்லது நல்லது செய்யும், கெட்டது கெட்டது செய்யும். உயர்ந்த நிலையில் நல்லது கெட்டது செய்யும். கெட்டது நல்லது செய்யும். அதனால் நல்லது கெட்டதாகாது. கெட்டது நல்லதாகாது. கூர்ந்து கவனித்து, ஆழ்ந்து உணர்ந்து அவை கூறுவதை அறிவது அவசியம்.

முதல் கடமை: சமர்ப்பணம் நாள் முழுவதும் பூர்த்தியாக வேண்டும்.

100-க்கு 10 பலிப்பதும் ஆரம்பத்தில் கடினம். இது காலத்தைப் பொறுத்தது. மனத்தைப் பொறுத்து சமர்ப்பணம் இதே முழுமை பெறுவது அடுத்த கட்டம். சிரமம். அவசியம் செய்ய வேண்டியது. அளவு, தரம், காலம், இடம், விஷயம் ஆகிய அம்சங்களால் சமர்ப்பணம் பூரணம் பெறுவது முடிவான குறிக்கோள்.

  • முறை முழுமை பெறும்படி ஆரம்பிப்பது அதிர்ஷ்டம்.
  • எவ்வளவு முன்னேற்றம் பெற்றோம் என்பதைவிட பெற்றதை இழையும் தவறவிடக் கூடாது. தவறினால் தவறியதை உடனே சரி செய்ய வேண்டும்.
  • பலனே நாம் சரியெனக் காட்டும்.
    அது அவசியம், மிக அவசியம்.
    பலனை முயன்று பெற வேண்டும்.
    பலனை நினைக்காமல் முயல்வதால் வரும் பலன் பெரியது.
    பலனை நினைக்காமல், எதிர்பார்க்காமல், பொருட்படுத்தாமல் பெறும் பலன் பெரியது, போற்றத்தக்கது.
  • அவசியமான பலனை கட்டாயம் கருதாமல், தவறாமல் பெற வேண்டும். 

இரண்டாவது: எழுத்தில் உள்ள அத்தனையையும், சமர்ப்பணத்தைச் சார்ந்தவை என்பதால் படித்து, புரிந்து, ஆழ்ந்து மனத்தால் ஏற்று, நினைவிலிருத்தி, ஒவ்வொரு முறை சமர்ப்பணம் பலிக்கும் பொழுதும், முக்கியமாக தவறும் பொழுதும், அதைவிட முக்கியமாகப் பலிக்கும் பொழுதும் எந்த அளவில் நாம் பின்பற்றியுள்ளோம் என கணக்கெடுப்பது நல்லது.

நாம் செய்தவை அன்னை நோக்கில் விமர்சனம் செய்யும் பாங்கு இக்கணக்கெடுப்பு.

மூன்றாவது: ஆரம்பித்த சமர்ப்பணம் எந்த நிலையில், எந்த அளவு பலித்தாலும், அந்த அளவில், அளவில் முழுமையும், தரத்தில் பூரணமும் பெற வேண்டும். அந்த வரையறைக்குள் அதன்பின் குறை வரக் கூடாது. அதை சிறிது சிறிதாகச் வளர்க்க வேண்டும். உடல் வளர்வது எப்பொழுதும் குறைவதில்லை. அது போல் சமர்ப்பணம் குறைவற வளர வேண்டும். எந்தச் செயலையும் சமர்ப்பண நோக்கில் மட்டும் காண வேண்டும்.

-— நான்காவது: உடல் தூய்மை போல, மனம் தூய்மை பெற்று நாளடைவில் தூய்மை அதிகரிக்க வேண்டும். தூய்மை குறைவதை அனுமதிக்கக் கூடாது. உடனே சரி செய்ய வேண்டும்.

ஐந்தாவது: நேரம் கிடைத்தபொழுதெல்லாம் அதிகபட்சம் முடியுமளவு கடந்தகால சமர்ப்பணத்தை மேற்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் வேலை இருப்பதால் நேரமிருக்காது. ஆனால் வேலை நடுவே வரும் பழைய நினைவுகளை நினைவிலிருத்தி, சமர்ப்பணமாகும்வரை சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஆறாவது: உலகம் பழித்தவற்றை அறவே கைவிடுதல் நன்று.
மனம் தவறு என்று கூறுபவற்றை முழுவதும் கைவிட முடிவு செய்ய வேண்டும்.
மீண்டும் மீண்டும் எழும் தவற்றை முக்கிய கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழைய தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என்ற முடிவு வேண்டும்.
அவை அகலாவிட்டால், குறைய வேண்டும்.
மனம் அத்தவறுகளை ரசிக்கக் கூடாது.
முடியாது என எதையும் ஒதுக்கக் கூடாது.
குழந்தைகளிடம் காணும் குறை, நம் குறை என அறிய வேண்டும்.
மீண்டும் மீண்டும் பிறர் மூலம் வரும் குறை, நம் ஆழத்தின் குறையென அறிய வேண்டும்.
வாதம் செய்வதைக் குறைத்துத் தவிர்க்க வேண்டும்.
வாதம் வெளியில் போனபின் மனத்தில் எழும்;
வாதமாக ஆரம்பித்து ஆராய்ச்சியாக மனம் சிந்திக்கும்.
சிந்தனை முடிவில் அடங்கும்.
அடங்கினாலும் அழியாது.
எந்தச் சிந்தனையுமின்றி செயல்படுவது யோக இலட்சியம்.
மனம் ஆழ்ந்து, அகன்று, அமைதியுற்று, சலனமிழந்து எழும் மௌனம் (Mental Silence) மனத்திற்குரிய மௌனம். அது ஆன்மவாயில். அதைக் கடந்தால், ஆன்மாவில் நுழையலாம். அது முடிவது பிரம்ம வாயில்.

ஏழாவது: கோபம், அவசரம், பதட்டம், படபடப்பு ஆகியவை அடியோடு போக வேண்டும்.
முயற்சி பெரும் பலன் முதலில் தரும்.
மனம் பெறும் தெளிவு முன்னேற்றம் தரும்.
மனம் பெறும் வெற்றி மலை போன்றது.
பொறுமை பலன் தரும்.
இக்குறைகளால் பொறுமை இழக்காமலிருந்தால், அவை சீக்கிரம் பெரிய அளவில் கரையும்.

— சமர்ப்பணத்தில் உள்ள பல்வேறு தடைகள்:
செயலைச் சமர்ப்பணம் செய்யும் பொழுது அது செயலாக உடலிலும், உணர்வாக இதயத்திலும், எண்ணமாக மனத்திலும் நிகழும்.
மனம் மேல்மனம் எனவும், அதற்கடியில் ஆழம் எனவும் இருபகுதிகளாக உள்ளது. (இவையிரண்டும் சேர்ந்தே மேல்மனமாகும். மனத்தின் மேற்பகுதி, கீழ்ப்பகுதியாகப் பிரிகிறது.)
அதேபோல் இதய உணர்வுக்கும் இரு பகுதிகள் உண்டு.
உடலும் இரண்டாகப் பிரிகிறது.
நாம் இன்று சமர்ப்பணம் செய்யும் செயல் ஆதி நாள் முதல் பழக்கத்தால் நடப்பது (உ.ம் தண்ணீர் குடிப்பது)
சமர்ப்பணம் செயல்பட பழக்கம் விலகி, செயல் சமர்ப்பணத்தை ஏற்க வேண்டும்.
தண்ணீர் குடிக்க நினைத்தால் கை டம்ளரை எடுக்கிறது.
குடிக்கிறது. சமர்ப்பணம் மறந்துவிடும், நினைவிருந்தால் பாதியில் நினைவு வரும்.
கையை நீட்டுமுன் சமர்ப்பணம் நினைவு வருவது முதற்கட்ட வெற்றி.
கையை நீட்டுமுன் உணர்வும், அதன்முன் நினைவும் அதற்கு அனுமதி அளித்திருக்கும்.
கவனமாக முதல் நினைவு எழுமுன் சமர்ப்பணம் நினைவு வருவது முதற்கட்டத்தில் பெரியது. அது நின்று நிலைத்து, நீடிப்பது நன்று.
அதன் பிறகு கவனித்தால் அவசரத்தில் இந்தச் சமர்ப்பணம் விட்டுப் போகும்.

இந்த வெற்றி எல்லா நிலைகளிலும் பரவி உறுதியானபின்

  • பேச்சை சமர்ப்பணம் செய்ய முயன்றால், குடிப்பதைவிட நமக்கு எளிதாக அங்குச் சமர்ப்பணம் தவறுவதைக் காணலாம். இங்கு பெறும் வெற்றி விரைவாகப் போகும் எக்ஸ்பிரஸ் பஸ்ஸை கை நீட்டி நிறுத்துவது போலாகும். இதற்கடுத்த கட்டங்களில் ஓடும் ரயிலை நிறுத்துவது போன்றது சமர்ப்பணம்.
  • சிரமம் எவ்வளவு பெரியதானாலும், ஆத்மீக முயற்சிக்கு மனித முயற்சி பெறாத வெற்றி கிட்டும். சிரமம் பெரிதானால் வெற்றியும் பெரியதாகும். முயற்சி மனத்திலிருந்து ஆத்மாவுக்குப் போக வேண்டும்.
  • கோபம், படபடப்பு, அவசரம், நிதானமிழந்த நேரம், எக்காரணத்தை முன்னிட்டும் தீவிர வேகம் எழுந்த நேரம், சமர்ப்பணம் காத தூரம் போகும். 

ஏதாவது ஒரு சிறு விஷயத்திலாவது சமர்ப்பணத்தை எல்லா நிலைகளிலும் முழுமைப்படுத்தினால், அதன் அத்தனை அம்சங்களும், எதிரானவையும், தேவையான எச்சரிக்கைகளும், இழந்தால் பெறுவதன் கடினமும், ஏன் இழப்பது சரியில்லை என்பதும், நாம் ஆண்டவனை நோக்கி ஒரு அடி வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்து அடி எடுப்பான் என்பதன் உண்மையும் விளங்கும்.

சமர்ப்பணத்தில் வெற்றியைவிட அதைப் பூரணமாக அறிவது முக்கியம். அறிவது பலிக்க உதவும்.

********

 

ஜீவிய மணி 

முறையின் முனை உயர்ந்து சிறந்தால் செயல் ஆண்டவனாகும்.

ஒரு முனை சிறப்பது பலன் உயர்வது.

எல்லா முனைகளும் செறிந்து சிறப்பது செயலையே உயர்த்துவதாகும். 

பகுதி சிறப்பால் ஆண்டவனாகும் முறை.

 

 

*********

 

 



book | by Dr. Radut