Skip to Content

07. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

ஜெயந்தி, அம்பத்தூர்

ஸ்ரீ அன்னையின் பாதங்களில் பணிந்து இக்கடிதத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.

என் பெயர் ஜெயந்தி. நாங்கள் சென்னையில் உள்ள அம்பத்தூரில் வசித்து வருகிறோம். எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. என் மூன்று வயதான முதல் பையனின் பெயர் கார்த்திக். அவனுக்கு வலது நெற்றியில் ஒரு சிறிய கட்டி வந்தது. நாங்களும், வெய்யில் காலத்தில் வரும் கட்டி என்று நினைத்து, அதை விட்டுவிட்டோம். இப்படியே ஓரிரு நாட்கள் செல்லச் செல்ல அந்தக் கட்டி மிகவும் பெரியதாக மாறி, அவனது நெற்றிக்கு கீழுள்ள கண்கள் உள்ளே மூடி, மூக்கு மற்றும் கன்னம் மிகவும் பெரிதாக உப்பிவிட்டது. இதனால் அவனுடைய முகம் மிகவும் விகாரமாகக் காட்சியளித்தது. காலையிலும், மாலையிலும் வீக்கம் வற்றவும், அதிகமாகவும் மாறி மாறி இருந்து வந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தையின் அழகே போய்விட்டது. அவனை டாக்டரிடம் அழைத்துப் போங்கள் அல்லது கட்டிக்கு தேவையான நாட்டு வைத்தியமாவது செய்யுங்கள் என்று என்னை அனைவரும் திட்டினார்கள். எதையுமே பொருட்படுத்தாமல் ஸ்ரீ அன்னையின் முன்பு அமர்ந்து இந்தக் குழந்தையை தங்களிடம் சமர்ப்பணம் செய்கிறேன். உங்கள் கண் பார்வையில் உள்ள ஒளியானது இவனுடைய முகத்தில் பட்டு இவனுக்கு பழைய முகத்தைத் தாருங்கள் என்று வீட்டில் பிரார்த்தனை செய்வேன். பின்பு நாள்தோறும் அவனை தியான மையத்திற்கு அழைத்துச் சென்று வந்தேன். இதற்குள் ஒருநாள் காலை என் தங்கை அம்பத்தூர் தியான மையத்தில் குழந்தைக்கு நிகழ்ந்ததைக் கூறி இன்னும் எப்படி அன்னையிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறாள். அதற்கு அவர்கள் நேற்று உங்கள் அக்கா குழந்தையை அழைத்துக் கொண்டு இங்கு வந்தார்கள். அவன் முகத்தைப் பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. நீங்கள் தினமும், ஊதுபத்தி ஏற்றி அன்னை முன்பு அமர்ந்து ‘அவன் உங்கள் குழந்தை அவனை கஷ்டப்படுத்தலாமா? வலி, வேதனை எதுவும் இல்லாமல் அவனுக்குக் கட்டி குணமாகி, பழைய திருமுகத்தைத் தாருங்கள் அம்மா என்று காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்றார். அவர்கள் கூறியபடியே நானும் என் தங்கையும் அன்னையிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தோம். பிரார்த்தனை செய்த மூன்றாம் நாளில் அன்னையின் அருளால் கட்டி குணமாகி, வீக்கம் வற்றி, கட்டி வந்த சுவடே தெரியாமல் அவனுக்குப் பழைய அழகிய திருமுகம் கிடைத்தது. உடனே அன்னைக்கு நன்றி தெரிவிக்க குழந்தையை அழைத்துக் கொண்டு தியான மையத்திற்கு சென்ற பொழுது, அவர்கள் என் பையனை பார்த்து அன்னையின் அருளால் கட்டி வந்த இடமே தெரியவில்லை. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்றார்கள். அன்னைக்கும், அன்னை ரூபத்தில் எனக்குப் பிரார்த்தனையை செõன்ன அம்பத்தூர் அன்பருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல் என்னுடைய இரண்டாவது மகன் ரித்தீஷ். அவனுக்கு 1½ வயது ஆகிறது. அவன் ஒரு இருதய நோயாளி. அவனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு சளி மற்றும் இருமல் வந்தது. உடனே ‘அன்னையே! இவனுக்கு ஒரு வாரமாக இந்த தொந்தரவு இருந்து வருகிறது. இவனை டாக்டரிடம் அழைத்துப் போக மாட்டேன், மருந்து, மாத்திரை எதுவும் கொடுக்க மாட்டேன். இவனுக்கு எப்பொழுது நீங்கள் மரணத்திலிருந்து மறு வாழ்வு கொடுத்தீர்களோ, அந்த நிமிடமே இவன் உங்கள் குழந்தை. இவனைப் பரிபூரணமாக உங்களிடம் சமர்ப்பணம் செய்துவிட்டேன். உங்களின் சக்தியால் மட்டுமே இவன் குணமடைய வேண்டும். இதுவே என்னுடைய பிரார்த்தனை’ என்று அன்னையிடம் மனமுருகி வேண்டினேன். என் வேண்டுதலை அன்னை உடனே நிறைவேற்றினார்.

இங்கு நான் முக்கியமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஸ்ரீ அன்னையின் அருளால்தான் என் குழந்தைக்கு நான்கு மாதத்தில் இருதய ஆப்பரேஷன் நல்ல படியாக முடிந்தது. இந்த ஆப்பரேஷனுக்குத் தேவையான மொத்த பணமான ரூபாய் 2.75 லட்சத்தைக் கொடுத்து உதவிய திரு. நாராயணன், திருமதி கீதா ராணி அவர்களுக்கும், திரு. தாயுமானவர், திருமதி பிரேமா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை எங்கள் குடும்பத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதவிர, அன்னையின் அருளால் ஆப்பரேஷன் நல்லபடியாக முடித்துக் கொடுத்த இரண்டு டாக்டர்களுக்கும், அன்னைக்கு உண்மை- யாக சேவை புரிந்த என் அப்பா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல் அன்னை எனக்கு அருளிய ஒரு நிகழ்ச்சியை இங்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு முதல் பிரசவம் முடிந்த ஒரு வருடத்திலேயே இரண்டாவது பிரசவமும் நடந்து விட்டது. இதனால் உடலில் தெம்பு குறைந்திருந்தது. இதற்கு எப்படி பிரார்த்தனை செய்வது என்று அம்பத்தூர் அன்பரை அணுகிக் கேட்டேன். அதற்கு அவர்கள் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீர் மற்றும் அதில் துளசி போட்டு அன்னையின் முன்பு வைத்து, நம்பிக்கையுடன் நாள்தோறும் பிரச்சனையின் வரலாற்றை அன்னையிடம் கூறி அதைக் குடிக்குமாறு கூறினார். நானும் அதேபோல் செய்தேன். என்ன ஆச்சரியம்! பிரார்த்தனை ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் உடல் நன்கு குணமாகியது. நானும் முன்போல் தெளிவாகி விட்டேன். இவைகள் அனைத்திற்கும் காரணமான அன்னை மற்றும் பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கு எங்கள் நன்றியை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்களின் துயர் தீர்க்க வழி காட்டிய அம்பத்தூர் அன்பர்களுக்கும் எங்கள் நன்றியை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறோம்.

********

 



book | by Dr. Radut