Skip to Content

07. சமூகம் நம்மைக் காக்கும் தாய்

சமூகம் நம்மைக் காக்கும் தாய்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவு : திரு நாகராஜன், ராணிப்பேட்டை மையம்.

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 07/09/2014

அன்னை ஒரு அன்பரை நாகலிங்க மலர் கொண்டு வரும்படி கேட்டார். திருவுருமாற்றமும் கேட்டார். அவருக்கு அம்மலர்களை அன்று கொண்டு வந்தவனுக்குத் தினசரி 1 ரூபாய் கூலி. அவன் பல மாதம் நாகலிங்க மலர் ஏராளமாகக் கொண்டு வந்தான். பிறகு சிவந்த மலர் கிடைக்கவில்லையென வெண்மையான மலர் கொண்டு வந்தான். வெண்மையான மலர் சுயநலமற்ற சுபீட்சமாகும். இன்று அவன் தினமும் 1,000 ரூபாய் சம்பாதிக்கிறான். பரம்பரையாக விஸ்வாசம் என்பதறியாத குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் அவனை அவன் முதலாளிக்கு எதிரி அணுகினார். அவன் அப்பொழுது முதலாளியை விட்டு நின்று பல வருடமாயிற்று. முதலாளிக்குத் தொந்தரவு தர அவருக்கு எதிரி அவனை அணுகினார். எதிர்பாராதவிதமாக அவன் அவர் கூறியதைச் செய்ய மறுத்து விட்டான். மரமல்லிகை என்பது திருவுருமாற்றம். அம்மலர் கிடைக்காமல் ஒன்று அல்லது இரண்டு கிடைக்கும். பல நாட்கள் அவன் கொண்டு வந்த மலர் அன்னைக்குப் போயிருக்கிறது. விஸ்வாசமற்ற பரம்பரையில் பிறந்த அவன் திருவுருமாறி விஸ்வாசத்துடன் பேசினான். பழைய முதலாளியின் எதிரியிடம் கூறினான். “என் முதலாளிக்குத் துரோகம் செய்ய மாட்டேன். மேலும் அவருக்குத் தொந்தரவு கொடுக்க உங்களை அனுமதிக்க மாட்டேன்” என்றான். இது அன்னை அவன் ஆத்மாவின் அம்சத்தைத் திருவுருமாற்றித் தந்தது. 55 வயதில் ஒரு அமெரிக்கர் அமெரிக்கன் மேனேஜ்மெண்ட் அசோசியேஷனில் ஒரு வைஸ்-பிரசிடெண்ட்டாக இருந்தார். இதற்குமுன் இலண்டனில் ஒரு சர்வதேச மேனேஜ்மெண்ட் பத்திரிகைக்கு Copy Editor ஆசிரியராக இருந்தார். 15 ஆண்டுகள் இலண்டன் அனுபவம் அமெரிக்காவில் இப்பெரிய பதவியைப் பெற்றுத் தந்தது. உயர் பதவி, அந்தஸ்து பெரியது. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபொழுது நியூயார்க் வந்தார். இவர் அவரை சந்திக்கப் பிரியப்பட்டார். அனுமதி கிடைத்தது. 1985-இல் இலட்சம் டாலர் அமெரிக்காவிலும் பெரும் சம்பளம். கல்லூரி பேராசிரியர்கட்கு 40 ஆயிரம் என்றால் இவர் பெறுவது அதைப் போல் 2½ மடங்கு. அதிகம் படித்தவர். 6 வயதில் ஒரு கதை எழுதினார். அதிலிருந்து ஒரு புத்தகம் வெளியிட ஆவல் கொண்டார். 50 ஆண்டுகள்வரை அது ஆவலாகவே இருந்தது. நிறைவேறவில்லை. Tom Peters என்பவர் In Search of Excellence என்ற புத்தகம் எழுதி 60 இலட்சம் பிரதிகள் விற்று பிரபலமானவர். நான் கூறும் அமெரிக்கர் தலைமையில் மாதந்தோறும் சொற்பொழிவுகள் நடக்கும். அதற்கு அமெரிக்காவில் முன்னணி Management Consultants வருவார்கள். அவர்களில் Tom Peters ஒருவர். அன்று 1984-இல் அவருக்கு $400 பீஸ். புத்தகத்தால் பிரபலமானபின் ஒரே ஆண்டில் Tom Petersக்கு பீஸ் ஒரு நாளைக்கு $20,000 என உயர்ந்தது. இவற்றையெல்லாம் கண்ணுறும் அன்பர் ஒரு புத்தகம் வெளியிடும் ஆவல் நிறைவேறவில்லை என்பதைக் கண்டு வருத்தப்பட்டார். வாழ்வில் பெரும் அனுபவப்பட்டவர். இவர் அன்பரில்லை. வாழ்வு இவருக்கு ஒரு பரிசு தர முடிவு செய்தது. நம் சொஸைட்டி அன்பருடன் இணைந்து ஒரு நூல் எழுதினார். பிரஞ்சு, ஜெர்மன், டச், ஜப்பான், இத்தாலியன், ஸ்பானிஷ் என 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாயிற்று. அமெரிக்காவில் Best Seller எனப் பெயர் பெறும் அளவுக்குப் பிரதிகள் விற்றன. அதைத் தொடர்ந்து இவர் வேறு 3 புத்தகங்கள் எழுதினார்.

சமூகம் தாய், அவள் கொடுப்பது ஏராளம். அதுவும் ஏழைமக்கட்கு வழங்குவது வரம். அதிர்ஷ்டமான காலங்களில் அதிகமாகப் பெறுவது ஏற்கனவே வசதியானவர்களே.

இந்தியப் பணக்காரர்கள் சுதந்திரம் வந்தபின் பெரும் பணம் பெற்றனர். சமூகம் அவர்கட்கு தருவது இது.

சமூகம் என்று ஒன்று இன்று இல்லாவிட்டால், நாம் பேச்சிழந்து ஊமையாகி, செயலிழந்து நடைப்பிணமாகி விடுவோம் என்ற உண்மையை நாம் கருதுவதில்லை. ஒரே சமூகத்தில் பிறந்த தாழ்ந்த மக்களும், உயர்ந்த மக்களும் எவ்வளவு வேறுபட்டுள்ளனர் எனக் காணும்பொழுது பெறுவதில் உள்ள வித்தியாசம் தெரிகிறது. ஒரு சமுதாயத்தினரை சமூகம் உயர்த்தியதும் அடுத்தவரை தாழ்த்தியதும் உண்மையே. ஒதுக்கப்பட்டதும், தாழ்த்தப்பட்டதும் உள்ளதே.

ஆனால் உள்ளதை நாம் முழுவதும் பெறுவதில்லை. சமூகம் தருவதை நாம் பெறும்பொழுதும் அதைச் சரியாகப் புரிந்து கொள்வதில்லை என்பதும் அடுத்த பெரிய உண்மை.

கீழ்க்கண்டவை நாம் முக்கியமாகக் கருத வேண்டியவை:-

  • சில நாடுகள் உயர்ந்தும், மற்றவை தாழ்ந்தும் உள்ளன.
  • உயர்ந்த நாடுகளுக்கு உயர்ந்த சந்தர்ப்பங்கள் இருந்தன.
  • பல நாடுகள் தாங்களே அரிய சந்தர்ப்பங்களை உற்பத்தி செய்து கொண்டன.
  • நாடுகளைப் போலவே ஒரு நாட்டில் ஜாதி அல்லது class வித்தியாசம் உண்டு.
  • புதிய சந்தர்ப்பம் வரும்பொழுது வசதியுள்ளவனே அதிகமாகப் பெறுகிறான்.
  • பெரியதும், சிறியதும் என்றும் உள்ள நிலை.
  • காலம் மாறினாலும், அது மாறுவதில்லை.
  • உலகத் தலைமை காலம் மாறும்பொழுது வெவ்வேறு நாடுகட்கு மாறுகிறது.
  • முழுவதும் தவறானவன் முழுவதும் தொடர்ந்த பெருவெற்றி பெறுகிறான்.
  • உயர்ந்ததும், தாழ்ந்ததும் மாறிமாறி வருகின்றன.
  • ஒரு விஷயத்தில் உயர்ந்தவன் அடுத்த விஷயத்தில் தாழ்ந்து விடுகிறான்.
  • சமூகம் வற்றாத ஊற்றான தாய். தடம் மாறினால் காளியாக மனிதனை அழிக்கும்.
  • சமூகத்துடன் ஒட்டி வாழ்ந்தால் 100 ஆண்டில் பெறுவதை 10 ஆண்டில் பெறலாம்.
  • இருண்டு, வறண்டிருந்த சமூகம், ஒளிமயமாகி, வளம் நிறைந்ததாக மாறி வருகிறது.
  • சமூகமே இல்லையெனில் கல்வி என்பதே இருக்காது.
  • சிறிய மனிதனுக்குப் பெரிய அனுபவம் தர சமூகம் தன் வளர்ச்சியைப் பயன்படுத்துகிறது.
  • ஏராளமான பணம் பெற சமூகம் எல்லா வாயில்களையும் திறந்து வருகிறது.
    சமூகம் தரும் வசதிகளில் மிகச் சிறியது பணம்.
    மன நிறைவு, ஆத்ம விளக்கம், அறிவின் சிறப்பு, குடும்ப உயர்வு, ஊரிலும் வீட்டிலும் தரும் பாதுகாப்பு, பணத்தைவிட உயர்ந்தவை.
  • சமூகத்தை அதிகமாக அறிந்தவன், வாழ்வை முழுமையாக அனுபவிப்பான்.
  • தாயாராகவும், தகப்பனாராகவும் செயல்படும் சமூகம் தாயும், தகப்பனும் தர முடியாததெல்லாம் தரும்.
  • கடந்தகால பொக்கிஷங்களை காத்து வைத்திருந்துத் தருவது சமூகம்.
  • எதிர்கால ஏற்றங்களை நிகழ்காலத்தில் உற்பத்தி செய்வது சமூகம்.
  • சமூகம் பரந்து விரிந்துள்ளது. அது ஆழ்ந்து, உயர்ந்துள்ளது.
  • முழு சமூகத்தையும் பண்பு நிறைந்தவன் தன் குடும்பத்துள் காண்பான்.
  • ஆன்ம விளக்கமுள்ளவன், அகத்துள் (மனதில்) அதையே காண்பான்.
  • மொழி, பண்பு, பழக்கம், நோக்கம், கல்வி, கருத்து, பதவி, பட்டம் ஆகியவற்றை நாம் சமூகத்திலிருந்தே பெற்றோம்.
  • சமூகம் தாய் என்பது உண்மை: உயர்ந்த மனிதன் உள்ளத்தால் சமூகத்திற்குத் தாயாவான்.

சமூகம் அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், தாய், தகப்பன், குடும்பம், ஊர், உலகம் அனைத்துமாகும். இன்றைய சூழ்நிலையில் சமூகத்திற்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமானால் அது எலக்ட்ரிசிட்டி. விளக்கு எரிவது, பேன் சுழல்வது, A.C., பிரிஜ் வேலை செய்வது, அடுப்பு எரிவது வீட்டில் காண்கிறோம். எலக்ட்ரிசிட்டியில்லாவிட்டால் ஊர் இரவில் இருண்டு போகும். ரயில் ஓடுவதும், கார் ஸ்டார்ட் செய்வதும், போன் பேசுவதும், கம்ப்யூட்டர் செயல்படுவதும், ஆலைகள் இயங்குவதும் எலக்ட்ரிசிட்டியால். அது செய்யும் வேலைகளைச் சொல்லி முடியாது. ஆனால் ஷாக் அடிக்கும். கையால் தொட்டுவிட்டால் உயிர் போகும். மனிதனை வாழ வைப்பது சமூகம். சமூகம் தாய் என்றாலும் சமூகத்திற்குள்ள சக்தி தாய் போல மட்டும் செயல்படுவதில்லை, அது ஒரு சக்தி. நாம் அதைச் சரியாகப் பயன்படுத்தினால் தாயாக செயல்படும். சமூகத்தை அறியாமல், நீச்சல் தெரியாதவன் நீரில் இறங்குவதைப் போலிறங்கினால் உயிர் போவதைப் போல், அதைத் தவறாக அணுகினால் ஏராளமான அதன் சக்தி எதிராகச் செயல்படும். உயிரும் போகும். நிலைமை மீறினால் சமூகம் ஊரையும் அழிக்கும். பிரெஞ்சுப் புரட்சியில் சுமார் 10 ஆண்டுகள் சமூக சக்திகள் கட்டவிழ்ந்து terror பயங்கரம் நிலவியது. இந்து-முஸ்லீம் கலவரத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் அது போன்று ஆபத்தான சூழ்நிலையை நாம் இந்நாட்டில் கண்டோம்.

கடப்பாறை வாங்கிக் கொண்டிருந்தவனை கட்டியிழுத்துப் போய் காபினட் மந்திரியாக்கும் சக்தி சமூகத்திற்குண்டு. வன்னியர், M.A. பட்டம் பெற்ற வன்னியர் என்ற காரணத்தால் பூவராகன் மந்திரியானாலும் அதைச் செய்தது சமூகம். தண்டோரா போட்ட தொண்டர் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராகி, முதன் மந்திரியாகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவுமானதும், இந்திய பிரதமரை நியமித்ததும் அவர் திறமையாலும், நாணயத்தாலும் என்றாலும், எப்படிச் சமூகம் அவரை ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவு அளித்து உயர்த்தியது என்பதைக் கண்டால், நமக்குச் சமூகம் எப்படிப்பட்ட கடலென விளங்கும். சமூகம் செய்யும் பல பெரிய காரியங்களைத் தனி மனிதனோ, ஒரு ஸ்தாபனமோ செய்ய முடியாது. சர்க்கார் மூலம் சமூகம் ரோடு போடும். மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகம் செய்யும். அது போல் அளவிறந்த காரியங்களை சர்க்கார் மூலம் செய்யும். சமூகத்தின் அனுமதியின்றி சர்க்காராலும் இது போன்ற பெரிய காரியங்களைச் செய்ய முடியாது.

ஒரு வகையில் சர்க்காரே பல காரியங்களில் சமூகமாகத் தென்பட்டாலும், சமூகம் சர்க்காரைவிடப் பெரியது, அதிக சக்தியுள்ளது.

எந்தச் சர்க்காரும் ஒரு சமூகத்தை, பண்பை உற்பத்தி செய்யக் கட்டாயப்படுத்த முடியாது.

சர்க்கார் மக்களை ஒரு மதத்தைத் தழுவக் கட்டாயப்படுத்தலாம்.

ஆனால் மதத்தை இதுவரை உற்பத்தி செய்த சர்க்காரில்லை.

நாட்டின் பண்பு, கலாச்சாரம், மதம், இலக்கியம், கலை, ஓவியம் போன்றவற்றை உருவாக்குவது சமூகம்.

வாழ்வு விரிவடைந்தால் உரைநடை வளரும். சமூகம் உயர்ந்து சிறப்படைந்த நிலையில் நெடுநாள் நிலைத்திருந்தால் காவியம் (Poetry) உற்பத்தியாகும். எலிசபெத் மகாராணியின் ஆட்சியில் ஆங்கில இலக்கியம் தழைத்து, ஷேக்ஸ்பியர் உற்பத்தியானதை இதற்கு உதாரணமாகக் கூறுவார்கள். பிரெஞ்சு மொழி பிரபலமானதும், பிரெஞ்சு பாஷனை உலகம் முதன்மையானதாக ஏற்றதும், பிரெஞ்சு சாப்பாடு, டிரஸ் உலகெங்கும் பரவியதும் பிரெஞ்சு சமூகத்தால்தான்.

சமூகம் கலாச்சாரத்தின் தாய்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது சமூக சக்தியின் முழுமையை எதிரான சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டுவதாகும். இந்த சமூகத்தின் அடிக்கல்லாக (unit) விளங்குவது குடும்பம். அக்குடும்பத்தின் ஜீவனாக செயல்படுவது பெண். பெண்மையின் உயிர்நாடி தூய்மை, தாய்மை, சிருஷ்டித்திறன், நேர்மை, நியாயம், நிர்ணயம். ஆணுக்கு இவ்வுயர்வுகள் எல்லாமிருக்கலாம். ஆனால் அது மின்சாரம் விசிறியுள் நுழைந்தால் விசிறும். ஒளி எழாது. ஒளி எழவேண்டுமானால் மின்சாரம் விளக்குக்குள் நுழைய வேண்டும். உயர்ந்த குணங்களை உலகம் பெற வேண்டுமானால் அவை பெண்மை வழியாக அடுத்த தலைமுறையை எட்ட வேண்டும்.

(முற்றும்)

**********

ஜீவிய மணி

நீதி காலத்துக்குக் காலமும், நிலைக்கு ஏற்பவும் மாறும். உடலுக்கு உரிய நீதியும், உணர்வுக்கு உரியது, ஆன்மாவுக்கு உரியதும் வேறு; அன்னைக்கு உரிய ஆன்மீக நீதியும் வேறு. நான் உன்னிலும், நீ என்னிலும் இருப்பது ஆன்மாவுக்கு உரிய நீதி. சமூக நியதி, சர்க்கார் சட்டம், தர்மம், நியாயத்தைக் கடந்து ஆன்மாவுக்கு எது நல்லதோ அதைச் செய்வது அன்னையின் ஆன்மீக நீதி. அன்னை ஆசையைப் பூர்த்தி செய்து அதை அழிக்க உதவுகிறார். மனிதனை, அவன் உள்ள நிலையில், அவன் ஆன்மீகத்தை நோக்கி வளர வழி செய்கிறார். தாழ்ந்த ஆசையைப் பூர்த்தி செய்யும் பொழுதும், அதனுள் கலந்துள்ள உயர்ந்த அம்சத்தை வளர்ப்பதன் மூலம் அன்னை செயல்படுவதே அன்னையின் நீதி. பயன்பெறும் மனிதன் தாழ்ந்த குணங்களை வளர்த்து அனுபவித்துக் கொண்டேயிருக்க முயன்றால், அன்னை பூர்த்தி செய்யாமல் விலகுகிறார். அன்னை விலகியவுடன் அவன் தவறு அவனையே தண்டிக்கிறது. அன்னை தண்டிப்பதில்லை. அன்னையின் நீதி பரம்பொருளின் நீதி. இருளை அழித்தும், அடக்கியும், வளர்த்தும், ஒளியை வளர்ப்பதே அன்னை ஆன்மா என்ற ஒளிக்கு அளிக்கும் நீதி.

*********



book | by Dr. Radut