Skip to Content

08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

3. விட முடியாத குறையை விட்டுவிடுகிறேன்:

நாள் தவறாமல் இரண்டு சினிமாப் பார்க்கும் பட்டதாரி. யாரையும் பார்த்துப் பேச விரும்பமாட்டார். நீங்கள் எந்த ஊர்? உங்கள் தகப்பனார் யார்? என்று கேட்டுவிடுவார்களோ என அஞ்சி விலகி இருந்தவர், சினிமாப் பார்ப்பதையே அறவே நிறுத்த முன்வந்தார். ஊரில் பிரபலமானார். “ஜில்லாவில் உங்கள் பெயர் தெரியாதவர் இல்லை” என்று ஊரில் உள்ள பெரிய மனிதர் அவரிடம் சொல்லும் அளவுக்கு அவர் வாழ்க்கை மாறியது. டெல்லிக்கும், காஷ்மீருக்கும், வாஷிங்டனுக்கும் அவர் சேவையும், பெயரும் எட்டின.

4. செயல் சிறப்படைய உழைப்பேன்: (Will aim at perfection in work):

சர்க்கார் உத்தியோகத்தில் இருந்த என்ஜினீயர், எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாகச் (perfect) செய்ய முழுமுயற்சி எடுப்பார். எக்ஸிகியூடிவ் என்ஜினீயராக இருக்கும்போதே அவருடைய வேலையின் சிறப்பின் காரணமாக மாநிலத்தில் முதன்மை பெற்றார். அவர் புகழ் டெல்லிக்கும் எட்டியது. சர்க்கார் சம்பளம் 2,000 ரூபாய் இருக்கும்பொழுது ரூ.15,000 சம்பளத்திற்கு வெளிநாட்டில் வல்லுநராகப் (expert) போக வேண்டும் என அடுத்த மாநிலத் தலைமை என்ஜினீயர் அவரை நேரே வந்து அழைத்தார். ஒரு கடமையில் சிறப்பை நாடி அதை அடைபவருக்கு, வாழ்க்கையின் உச்சகட்டச் சிறப்பும், புகழும் வர முடியும் என்பது உயர்மட்ட அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும். அத்தகைய அன்பர்களை அன்னை அரவணைத்துக் கொள்வார்.

5. முயன்றால் முடியாதது ஒன்றில்லை:

1952-இல் எந்தக் கட்சிக்கும் சென்னை அசெம்பிளியில் மெஜாரிட்டி இல்லை என்றபொழுது ராஜாஜியை முதன்மந்திரியாக்க மத்திய, மாநிலத் தலைவர்கள் முயன்று, முடியாது என்று கைவிட்டபின் C. சுப்ரமணியம், தான் முயல்வதாகச் சொல்லி, முயன்று வெற்றி பெற்றார். மத்திய சர்க்காரில் உணவு இலாகாவில் மந்திரியானவர்களுடைய அரசியல் வாழ்வு முடிந்துவிட்டதென பெயர் பெற்றுவிட்டது. 1964-இல் லால்பகதூர் பிரதமரானபின் உணவு இலாகாவை ஒத்துக்கொள்ள எவரும் முன்வரவில்லை. சுப்ரமணியத்தை சாஸ்திரி கேட்டார். முயன்றால் முடியாதது ஒன்று இல்லை என்ற கொள்கையுடையவர் சுப்ரமணியம்; ஏற்றுக்கொண்டார்; முயன்றார்; வெற்றி மட்டும் கிடைக்கவில்லை; நாட்டின் உணவுப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் பசுமைப் புரட்சியை ஆரம்பித்து வெற்றி கண்டார்.

6. ஒருவரால் முடியுமானால், என்னாலும் முடியும்:

இராமாபுரம் கிராமத்தில் எவரும் போர்கிணறு (borewell) தோண்ட முன்வராதபோது இராமசாமி முன்வந்தார். அவரால் முடியும் என்றால், என்னாலும் முடியும் என்று அனைவரும் முன்வந்தனர். அதன் விளைவாகப் பயிரில் பலன் ரூ.200-லிருந்து ரூ.20,000 ஆயிற்று. மற்றவர் ஒருவரால் செய்யக்கூடிய ஒன்றை நாமும் முயன்று செய்யலாம். அதற்குப் பெரும்பலன் உண்டு.

7. எந்த விஷயத்திலும் நுணுக்கம், இரகஸ்யம் என்றுண்டு. அதைக் கண்டுபிடித்தபின் அந்த விஷயத்தில் வெற்றி நிச்சயம்:

5 வகுப்புப் படித்துத் தமிழாசிரியராக இருந்த ஒருவர் B.A. பட்டம் பெற 1950-இல் பிரியப்பட்டார். விளைவு, அனைவரும் அவரைக் கேலி செய்தனர். முயற்சியைக் கைவிட்டுவிட்டார். அடுத்த ஆண்டு அவர் ஒரு இளைஞரைச் சந்தித்தார். தாம் கைவிட்ட எண்ணத்தை அவரிடம் சொன்னார். மொழியியலில் உள்ள நுணுக்கங்களை அறிந்தவர் இளைஞர். அந்த நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு B.A. பட்டத்திற்குரிய ஆங்கிலப் படிப்பை மேற்கொண்டால் அது வெற்றி பெறும் என விளக்கினார். ஒரு மொழியில் சில வாக்கிய அமைப்புகள் (sentence structures) உண்டு. ஆங்கிலத்தில் அத்தகைய அமைப்புகள் 5, 6-தான் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டு தேவையான பயிற்சியை மேற்கொண்டால் ஆங்கிலம் எளிமையாகும் என்றார். தமிழாசிரியர் அதை ஏற்றுக்கொண்டார். நுட்பத்தை அறிந்து கொண்டார். மகிழ்ச்சி அடைந்தார். B.A.-க்கு விண்ணப்பித்தார். பயிற்சியை மேற்கொள்ள மறுத்தார். 2 முறை தவறி மூன்றாம் முறையாக பட்டம் பெற்றார். பின்னர் M.A.-யும் பெற்றார். B.T.-யும் பெற்றார். தலைமையாசிரியரானார். விருதும் பெற்று ஓய்வு பெற்றார்.

படிப்பு, நோய், பிள்ளைகளை வளர்த்தல், தொழில், பணம், அரசியல், பொதுவாழ்வு, உயர்ந்த நன்மை, தாழ்ந்த தீமை, எவற்றிலும் ஓர் உட்கருத்தான நுட்பம் உண்டு. அனுபவத்தில் அதைத் தெரிந்து கொள்ளலாம். அறிவால் சீக்கிரத்தில் உணரலாம். வாழ்வில் பலன் அளிக்கக் கூடியவை அவை. அன்னை வழிபாட்டில் சிறப்பைக் கொணர்ந்து சேர்க்கும் திறன் அதற்குண்டு.

8. எதிர்மறையான கருத்திலும் உண்மையிருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்:

பகவான் ஸ்ரீ அரவிந்தர் தாம் எழுதிய பெரிய நூல்களை எல்லாம் 1914-இல் ஆரம்பித்து, 1919, 20-இல் எழுதி முடித்துவிட்டார். இதுவும் அவர் எழுத வேண்டுமென திட்டமிட்டதன்று. அன்னையும், அவருடைய கணவரும் ஸ்ரீ அரவிந்தரை முதலில் சந்தித்தபொழுது, “உங்களிடம் உள்ளது பெரிய பொக்கிஷம். அதை உலகுக்கு நீங்கள் எழுத்தின் மூலம் அளிக்க வேண்டும்” எனக் கேட்டதன்பேரில் அந்த நூல்களை எழுதினார். அந்த எல்லா நூல்களையும் முறையாக வேதம் எனக் கருதி பயின்று, அதன் சாரத்தைப் பூரணமாக உணர்ந்து, ஆன்ம ஞானத்தைப் பெற்றவர் ஒருவர் பகவானுடைய சிறிய நூலாகிய (Thoughts and Aphorisms) கருத்துகளும், பொன்மொழிகளும் என்ற கருத்துடைய தலைப்பில் உள்ளதைப் படித்தால், ஸ்ரீ அரவிந்தருடைய மூல நூல்களில் பல ஆயிரம் பக்கங்களில் உள்ளதை 540 வரிகளில் இங்கு கூறியிருக்கிறார் என்பது விளங்கும். இந்நூலை மட்டுமே பகவான் எழுத விரும்பினார்போலும். 1913-இல் இதை எழுதியிருக்கிறார். மேலும், இவருடைய மூல நூல்களில் இல்லாத சில பெரிய கருத்துகளையும் இதில் கோடி காட்டியவாறு குறிப்பிடுகிறார். இந்நூலை எழுதி முடித்தபின் 7 வரி பிற்சேர்க்கையாக உள்ளது. அதில் முதல் கருத்து, ”நான் சொல்லியவை எல்லாம் உண்மையானாலும், இவற்றின் எதிர்மறையும் உண்மையே” என்பது.

விவேகிகள் அறிந்த உண்மை இது. தத்துவரீதியாக இந்தக் கூற்றை ஆராய்ச்சி செய்வதை விட்டு, அன்பர் வழிபாடு, பிரச்சினைகளைத் தீர்த்தல் என்ற (context) நிலைகளில் மட்டுமே இதைப் பார்ப்போம்.

இங்கிலாந்தில் எல்லாத் துறைகளுக்கும் சங்கம் இருப்பதுண்டு. மது அருந்துபவர்களுக்குச் சங்கம், மது அருந்தாதவர்களுக்குச் சங்கம் (Teetotaller). ஓர் ஆண்டு விழாவை மது அருந்தாதவர்கள் சங்கம் கொண்டாடியது. பலர் மதுவின் கொடுமையைப் பற்றிப் பிரசங்கம் செய்தனர். முடிவில் தலைவர் சுருக்கமாக உறையாற்றினார்: “என் உடல் ஆரோக்கியத்தைப் பாருங்கள். எனக்கு வயது 65. இந்தத் திடகாத்திரமான ஆரோக்கியத்திற்குக் காரணம் நான் அதைத் தொட்டதேயில்லை” என்றார். பலத்த கரகோஷம். ஒருவர் எழுந்தார். தமக்குப் பேச அனுமதி கேட்டார். செழிப்பான உடல்நலம் பெற்ற அவருக்கு வயது 70. மேடைக்கு வந்தார். “என் செழிப்பான உடல் நலத்தைப் பாருங்கள். நான் மதுவைத் தவிர வேறு எதையும் தொட்டது இல்லை” என்றார். ஓர் உண்மைக்கு எதிரான கருத்தும் உண்மையாக இருக்கும். எல்லாத் துறைகளிலும் இதற்கு உதாரணம் கொடுக்கலாம். நம் பிரச்சினை வேறு. நம் மனத்திலுள்ள கருத்துக்கு எதிர்மறையான கருத்தின் உண்மையை ஏற்றுக்கொண்டவுடன் மனம் பரந்து விசாலம் அடைகிறது. விசால புத்தி ஏற்பட்டால் தெளிவு பெருகும். பிரச்சினைகளை ஏற்படுத்திய சின்ன புத்தி அழிந்து, பிரச்சினைகள் அழியும். மனம் பக்குவம் அடையும். வழிபாட்டுக்குரிய திறனைப் பல மடங்கு அதிகரிக்கும். பிரச்சினைகளை அழிக்கும் திறன் வலுவடையும். இந்த முறையை நடைமுறையில் எப்படிக் கையாள்வது? இதனால் வழிபாட்டை வகுத்துக்கொள்வது எப்படி? பிரச்சினைகளை இதனால் எங்ஙனம் விலக்கலாம்?

நாத்திகர்களாக வாழ்க்கையைத் தொடங்கி, கடைசிக் காலத்தில் திருவாசகமும் கையுமாக உள்ளவர்கள் உண்டு. பூஜை, ஸ்தோத்திரம், அனுஷ்டானத்தில் அதீத படிப்போடு இளமையில் இருந்தவர்கள், ஓய்வு பெற்றபின் சந்தியாவந்தனம் கூடச் செய்யாமல் இருப்பதுண்டு. மறைமுகமாக மேற்கூறிய உண்மையை ஓரளவுக்குச் சுட்டிக்காட்டும் உதாரணங்கள் இவை.

ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் வேலையை விட்டுவிட்டு, தொழிலை ஆரம்பித்தார். முதல் ஆண்டு ரூ.80,000 விற்பனையாயிற்று. அவருடைய தகப்பனார் ரூ.100 பென்ஷனுடன் ஓய்வு பெற்றவர். அவர்கள் குடும்பத்திலும், ஊரிலும் தகப்பனாருக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து உண்டு. வீட்டிலும் அளவுகடந்த மரியாதையுண்டு. தகப்பனார் சொல்லை ஊரில் அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். வீட்டில் அவருடைய சொல்லே வேதவாக்கு. ரூ.900 வருவாய் வரும் சர்க்கார் வேலையை விட்டு, சொந்தமாகத் தொழில் நடத்தினார். முதல் ஆண்டு ரூ.80,000 விற்பனையாகி, ரூ.25,000 இலாபம் நின்றது. லைசென்ஸ் எடுக்க, டெண்டர் போட, புது ஆள் வைக்க, எல்லாக் காரியங்களுக்கும் தகப்பனார் சொல்லே கடைசி. அடுத்த ஆண்டு வியாபாரம் பெருகியது. சில ஆண்டுகளில் வியாபாரம் 20 இலட்சத்தைத் தாண்டியது. தகப்பனார் யோசனைக்கும், வியாபார நிர்ப்பந்தங்களுக்கும் ஒத்துவரவில்லை. ஆயிரம் ரூபாய் தகப்பனாருக்குப் பெரிய தொகை. ஒன்றரை இலட்சம் டெண்டர் என்றால் தகப்பனாருக்கு அதிர்ச்சியாயிருக்கிறது.

மகனுக்கு மனதில் போராட்டம். தொழிலை விட்டாலும் விட்டுவிடுவாரேயொழிய, தகப்பனார் அபிப்பிராயத்தை எதிர்த்துப் போக முடியவில்லை. மனப் போராட்டத்தில் சில ஆண்டுகள் கழிந்தன.

“உங்கள் தகப்பனாருக்கு மரியாதை செலுத்துவது சரி. அவருடைய எண்ணங்களை இன்றையத் தொழிலில் அமுல்-ப டுத்த முடியாது” என்று எல்லோரும் சொன்னார்கள். இவருக்கு என்ன நல்ல யோசனை சொல்லலாம் என அவர் நண்பர்கள் என்னைக் கேட்டார்கள். அவர்களிடம் நான், “தகப்பனார் சொல்வது சரி. அதற்கு எதிரானதும் சரி. மகன் எதிர்மறையான உண்மையை ஏற்றுக் கொண்டால் தொழில் வளரும்” என்றேன். இந்தக் கருத்தை அவரால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதே சமயம் அவர் தகப்பனார், “எனக்கு ரூ.200 என்றால் பெரிய தொகை. நீ 2 இலட்சம், 3 இலட்சம் என்று பேசுகிறாய். எனக்குப் பயமாயிருக்கிறது. இனி, தொழிலில் நீ அனுபவம் உடையவனாகிவிட்டாய். நீ சொல்வது சிரியாக இருக்கும். என்னைக் கேட்காதே” என்றார். மகனுக்கு மனப்போராட்டம் விலகியது. சில ஆண்டுகளில் வருஷச் செலாவணி 60 இலட்சமாயிற்று.

எந்தப் பிரச்சினையானாலும், அதைத் தீர்க்க வழியில்லா விட்டால் நம் கருத்துக்கு எதிரான கருத்தில் உண்மையுண்டா எனச் சோதனை செய்யும் மனப்பான்மையுள்ளவர்களுக்கு வழி பிறக்கும்.

9. முயற்சி செய்யாமல் அழிவதைவிட, முயற்சி செய்து தோல்வியடைந்தால் சிறப்பு:

Harper and Raw என்பது அமெரிக்காவில் பெரிய புத்தக வெளியீட்டுக் கம்பெனி. அவர்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிடுகிறார்கள். பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் போய் அங்குள்ள (Ph.D thesis) டாக்டர் படிப்பு ரிப்போர்ட், சர்வே ரிப்போர்ட் (survey report) போன்றவற்றைப் பரிசீலனை செய்து, சிலவற்றை வெளியிடுவது ஒரு பழக்கம். இம்மாதிரி வெளியீடுகள் 10, 12 முதல் ஆயிரம் பிரதிகள் வரைதான் விற்கும். ஒரு சமயம் மக்கின்ஸி கம்பெனியின் ரிப்போர்ட் ஒன்றைப் படித்து, அதை வெளியிட வேண்டி எழுதியவராகிய பீட்டர்ஸ் என்பவருக்குக் கடிதம் எழுதினார்கள். பீட்டர்ஸின் அந்த ரிப்போர்ட் கம்பெனியிலேயே எல்லோரும் ஒத்துக்கொண்ட ஒன்றன்று. “நீங்கள் வெளியிடுவது பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆயிரம் பிரதிகூட விற்காது என்பதே என் அபிப்பிராயம்” என பீட்டர்ஸ் பதில் எழுதினார். கம்பெனியார் 10 ஆயிரம் பிரதி விற்கும் என்று கருதி வெளியிட்டார்கள். 3 ஆண்டுகளில் அந்தப் புத்தகம் 50 இலட்சம் பிரதிகள் விற்பனை ஆயின. தாம் எழுதிய ரிப்போர்ட்டின் திறன் தமக்கே தெரியவில்லை. இது சமீப காலத்து நிகழ்ச்சி.

ஒரு கெஜட் பதவி உத்தியோகஸ்தரை அவர்கள் இலாகா டைரக்டர் 1965-இல் (oust) வேலை நீக்கம் செய்தார். எல்லோரும் அவரை டைரக்டருக்கு மேலே செக்ரடரிக்கு அப்பீல் செய்யச் சொன்னார்கள். “எங்கள் இலாகாவில் கடந்த 20 ஆண்டுகளாக டிபார்ட்மெண்டில் நினைவு இருக்கும்வரை டைரக்டருக்கு எதிராக செக்ரடரிக்குச் செய்த அப்பீல் மனு ஒன்றுகூட பலிக்கவில்லை. எதற்கு நான் அப்பீல் செய்வது” என்றார். கடைசியில் ஒருவாறாக அப்பீல் செய்தார். 3-ஆம் நாள் மீண்டும் வேலையில் அமர்த்த செக்ரடரி ஆர்டர் போட்டுவிட்டார். “டைரக்டர் செய்தது தவறு. அவரைத் தண்டிக்க வேண்டும். அப்பீல் மனு வந்தால் உடனே ஆர்டர் போடலாம்” என செக்ரடரி காத்துக்கொண்டிருந்ததாகப் பின்னர் தெரியவந்தது.

நம் நிலையில் முழு நியாயம் இருந்தாலும், பெரிய உண்மை இருந்தாலும், சத்தியம், நேர்மையிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் நாம் வாயைத் திறக்கவே முடியாது. காலம் நடைமுறைக்கே. பணம் பேசும். பெரிய இடம் நிற்கும். ஏழை சொல் அம்பலம் ஏறாது.

செல்வாக்கின் எதிரே நின்று போராடச் சக்தியில்லை என்ற நிலைமையிலும்கூட கேட்காமல் அழிவதைவிட, கேட்டுவிட்டே தோல்வி அடையலாம் என்ற மனநிலைக்கு வாழ்க்கையில் சில சமயங்களில் பலன் கிடைப்பதுண்டு. அன்னையிடம் அந்த மனநிலைக்குத் தவறாமல் நூற்றுக்கு நூறு பலன் கிடைக்கும். தனக்கென்று இருந்த அத்தை மகளுக்கு I.A.S. மாப்பிள்ளை வந்தபின், இந்த B.A. கிளார்க்குக்குப் பேச்சேது என்பது ஒரு சந்தர்ப்பம். கோயங்காவே M.P. சீட்டுக்கு நின்று விமானம் மூலம் விளம்பரம் செய்யும்போது, கோர்ட்டுக்குப் போகாத வக்கீலுக்கு ஜெயிக்க சந்தர்ப்பம் ஏது? அட்வான்ஸ் இல்லாமல் ரூ.50,000-த்திற்குக் கிரயப் பத்திரம் எழுதியாயிற்று. 4 மாத காலாவதி ஆகப்போகிறது. கிரயத்துக்கான ரொக்கம் கிடைக்கவில்லை. ரொக்கம் கொடுக்காமல் கிரயப் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து கொடு என்று எப்படி வாய் வந்து கேட்பது. இது நடக்காது. நடக்கவே நடக்காது என்று பகுத்தறிவுக்கும், நாட்டு வழக்கத்திற்கும் பூரணமாக, நிதர்சனமாகத் தெரிந்தாலும், நம்மிடம் உண்மையிருந்தால், மனதில் சத்தியம் இருந்தால், சந்தர்ப்பத்தின் நிலையை ஒதுக்கிவைத்துவிட்டு முயன்று பார்ப்பதில் தவறில்லை. அன்னை பக்தர்களுக்கு அது நல்ல முயற்சி. தவறாது பலிக்கும்.

தொடரும்...

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பொய் என்பதை நாம் விலக்குகிறோம். மெய்யைப் போற்றுகிறோம். ஸ்ரீ அரவிந்தம் கூறுவது: பொய் மெய்யின் மாறிய உருவம். மெய் தன்னைத் தன்னுள் மறைத்துப் பொய்யாயிற்று. அதனால் பொய் மெய்யைவிட அதிக சக்தி வாய்ந்தது. மெய்யால் வாழ்பவன் செய்யும் முயற்சி பெரும் பலன் தரும். அதே சமயத்தில் பொய்யால் வாழும் ஒருவன் தன்னை மெய்யாகத் திருவுரு மாற்றி, முன்னேற முடிவு செய்தால், அவன் முன்னேற்றம் மெய்யின் முன்னேற்றத்தைவிட 10 மடங்கு, 100 மடங்கு பெரியதாக இருக்கும். இதே கருத்தை ஸ்ரீ அரவிந்தர் வேறு வகையாக -

அறியாமை அறிவைவிட உயர்ந்தது என்கிறார்.

*******



book | by Dr. Radut