Skip to Content

10. பவித்ராவான இராமகிருஷ்ணர்

பவித்ராவான இராமகிருஷ்ணர்

இல.சுந்தரி

1927-ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தரின் குறிப்பில் காணப்பட்ட ஒரு செய்தி, “பவித்ரா பூர்வ ஜென்மத்தில் இராமகிருஷ்ணராக இருந்தார்” என்பது.

மேலும் இராமகிருஷ்ணரைப் பற்றிச் சொல்லும் போது “அவர் பக்தி சாம்ராஜ்யத்தை முழுவதுமாகக் கொள்ளை- யடித்தவர்” என்பது.

காளி உபாசகரான ஸ்ரீ இராமகிருஷ்ணரை ஆன்மீக உலகம் அவதார புருஷராக அறியும்.

அவரே தம்மைப்பற்றி, “இராமனும், கிருஷ்ணனுமாக வந்தவன் யாரோ அவனே இங்கு இராமகிருஷ்ணனாக வந்துள்ளான்” என்பதாக ஒரு செய்தியும் உள்ளது.

அவதார புருஷராகிய இராமகிருஷ்ணர், ஏன் சாதாரண மனிதனாக - பவித்ராவாக வரவேண்டும். ஆன்மீக மண்ணாகிய இந்தியாவில் பிறக்காது ஏன் பாரிஸில் பிறக்க வேண்டும் என்பது போன்ற வக்கிரபுத்திக்கேயுள்ள கேள்விகள் என்னுள் எழுந்தன.

அன்னையே என் குழப்பம் தீர்த்து தெளிவு பெற அருளுங்கள் என வேண்டிய பிறகு எழுந்த கருத்துகளை இங்கே எழுதுகிறேன்.

அன்பர்: என்ன நண்பா! நான் வந்ததைக் கூட கவனியாமல் அப்படி என்ன ஒரே சிந்தனை?

நண்பர்: வா வா. நல்ல நேரத்தில்தான் வந்திருக்கிறாய். எனக்கு ஒரு விஷயம் பற்றி ஒரே குழப்பமாக உள்ளது. முடிந்தால் தெளிவுபடுத்தேன்.

அன்பர்: அது சரி. தெளிவாகச் சொன்னாலே குழம்பி விடுவாய். குழப்பமான விஷயம் என்றால் கேட்கவா வேண்டும். எதுபற்றி என்று சொல்.

நண்பர்: ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

அன்பர்: அவர் சத்தியத்தின் திருவுருவம் என்று நினைக்கிறேன்.

நண்பர்: அப்படியென்றால் அவர் கூறியதும் சத்தியமாகத்தானே இருக்க வேண்டும்.

அன்பர்: ஆமாம். அதிலென்ன சந்தேகம்?

நண்பர்: ஸ்ரீ இராமகிருஷ்ணரைப் பற்றி அவர் என்ன கூறியுள்ளார்?

அன்பர்: அவர் பக்தி சாம்ராஜ்யத்தை முழுமையாய்க் கொள்ளையடித்தவர் என்று கூறியுள்ளார்.

நண்பர்: அதிலொன்றும் எனக்குக் குழப்பமில்லை.

அன்பர்: வேறு என்ன குழப்பம்?

நண்பர்: பகவானுடைய 1927-ஆம் ஆண்டு குறிப்பில் ஆஸ்ரம சாதகர் பவித்ராவைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்.

அன்பர்: ஆம். பவித்ரா பூர்வ ஜென்மத்தில் இராமகிருஷ்ணராய் இருந்தவர் என்று கூறியிருக்கிறார்.

நண்பர்: அதில்தான் எனக்குக் குழப்பமாயுள்ளது.

அன்பர்: இதுதானா உன் குழப்பம்? சரி, சரி, நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வா. புரிகிறதா என்று பார்ப்போம்.

நண்பர்: கேள்வியை நீ கேட்கப் போகிறாயா? எனக்குக் கேட்டுத்தான் பழக்கம்.

அன்பர் : முதலில் நான் கேட்கிறேன். பிறகு நீ கேள்.

நண்பர் : சரி. உன் பெயர் என்ன? உன் பெற்றோர் யார்? என்பது போல் எளிமையாய்க் கேள்.

அன்பர் : அதைக் கேட்டால் நீ பெருங்குழப்பவாதியாகி விடுவாய்.

நண்பர் : சரி சரி. எப்படி வேண்டுமானாலும் கேள். தெரிந்ததைச் சொல்கிறேன்.

அன்பர் : இராமகிருஷ்ணர் மீது உனக்கு ஈடுபாடு எழுந்தது எதனால்?

நண்பர் : அவர் இடையறாத இறை சிந்தனை (காளி உபாசனை) உடையவராக இருந்ததால்.

அன்பர் : எனவே, அவர் பக்தர், தீவிர பக்தர் என்பது விளங்கியதா?

நண்பர் : ஆம். அப்படி உணர்வதாலேயே அவரிடம் பெருமதிப்பும், ஈடுபாடும், மரியாதையும் எழுகிறது.

அன்பர்: இராமகிருஷ்ணராக அவர் அடைந்த நிலை அல்லது தகுதி என எதை அறிகிறாய்?

நண்பர் : அவர் மோட்சத் தகுதி பெற்றிருப்பதாய் அறிகிறேன்.

அன்பர் : சரி. மோட்சம் என்பது என்ன?

நண்பர் : இறைவனுடன் இரண்டறக் கலப்பது.

அன்பர் : பூரணயோகக் குறிக்கோள் யாது?

நண்பர் : மோட்சம் அன்று. திருவுருமாற்றம். புவியில் வாழ்வு ஆன்மாவால் வாழ்ந்து வளர்வது. அடுத்தது ஆன்மா வாழ்வில் வளர்ந்து அதுவே புவி வாழ்வாவது.

அன்பர் : எனவே, மகாகாளியின் செல்லக் குழந்தையான இராமகிருஷ்ணர் மகாகாளியின் விருப்பமே தம் விருப்பம் என ஏற்பாரல்லவா? அதன்படி, மகாகாளி மானுடத்தில் வருகை தரச் சம்மதித்து பூமியில் அன்னையாக (காளி சிலையில் காட்சி தந்தவர்) மானுடத்தில் வருகை தரும் போது இராமகிருஷ்ணரும் உடன்வாராதிருப்பாரா?

நண்பர் : வாராதிருக்கமாட்டார். நிச்சயம் வருவார்.

அன்பர் : அவர்தான் பவித்ரா என்பதைக் கூறியவர் யாரோ அல்லர். சர்வமும் அறிந்த ஸ்ரீ அரவிந்தர். இதில் ஐயப்பட என்ன இருக்கிறது?

நண்பர்: அவர் ஏன் ஆன்மீக மண்ணில் (இந்தியாவில்) பிறக்காமல் பிரான்ஸில் பிறக்க வேண்டும்?

அன்பர்: அன்னை அவதரித்த பூமியிலேயே அவர் ஏன் பிறக்கக் கூடாது.

நண்பர் : ஆம். அது பொருத்தமே. அம்மாவைப் பின் தொடரும் பிள்ளையே அவர்.

அன்பர் : சரி. முற்பிறப்பில் அதாவது இராமகிருஷ்ணராக அவர் வந்தபோது அவர் காளியை உபாசித்து அனுபவித்தார். அவ்வளவே. காளி தேவியான ஸ்ரீ அன்னையின் பூரணயோகச் சட்டம் யாது?

ஜீவன் மூன்றுவித முன்னேற்றம் பெறுவது. அதாவது முதலாவது, ஜீவன் தனித்தன்மை பெறுவது. இரண்டாவது இந்தத் தனித்தன்மையை இறைவனுக்கு அர்ப்பணிப்பது. மூன்றாவது தன்னை ஐக்கியமடைந்த அந்தத் தனி ஜீவனை இறைவன் தன்னுடைமை- யாக்கிக் கொண்டு தன் வடிவாய் அவனை மாற்றுவது. இதில் இராமகிருஷ்ணர் பக்தியே தாமாய் தன் ஜீவனைத் தனித்தன்மை பெறச் செய்துவிட்டார். அவர் வரலாறு அறியாதவர் பக்தியுலகில் யாருளர்? யாவரும் அறிவர். இரண்டாவதாகிய பூரண சரணாகதியையும் மேற்கொண்டவர். அவர்தம் இளம் மனைவியை நடுநிசியில் காளியாய் எழுந்தருளச் செய்து ஷோடசி பூஜை செய்தவர். இவரைச் சூழ்ச்சியாளர் சிலர் பரத்தையின் வீட்டிற்குச் செலுத்தியபோது, தாயே என விளித்து பரத்தையையே காளியாகக் கண்டவர்.

இறைவனுக்குத் தன்னைக் கொடுத்துவிட்டால் எல்லாம் முடிந்து விட்டதாக மற்ற யோகங்கள் (மோட்சத் தில்) நின்றுவிடுகின்றன. அன்னையின் பூரணயோகமோ அங்குதான் தொடங்குகிறது. மகாகாளியாகிய அன்னை இதுவரை இவரைத் தம் இரண்டாவது கட்டத்திற்குத் தயாராக்கினார். தன்னைப் பூரணமாய்ச் சரணடைந்த அந்தத் தனி ஜீவனை தெய்வீக ஜீவனாய் மாற்றி ஒரு தெய்வீக உலகில் செயல்படச் செய்வதற்கு, அதாவது அதிமானுடத்தின் முதல் பிரஜையாகச் செலுத்துவதற்கு ஸ்ரீ அன்னை இராமகிருஷ்ணரை பவித்ராவாக ஏற்றார் என்பதில் குறை என்ன? அதனாலன்றோ இரண்டறக் கலக்க விரும்பிய பவித்ராவைத் தடுத்தார். இது குறித்தே அக்டோபர் 2014 மலர்ந்த ஜீவியத்தில் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் “இரண்டறக் கலந்தால் அது மோட்ச நிலையை நாடும் என்பதால் அதை அன்னை தடுத்தார் போலும்” என்று குறிப்பிடுகிறார்.

நண்பர்: இங்கு மேலும் ஒரு கருத்து பற்றித் தெளிவடைய விரும்புகிறேன். அதாவது இராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்தவன் யாரோ அவனே இங்கு இராமகிருஷ்ணராக வந்தவன் என்று அவர் தம்மை பற்றிக் கூறினாரே. இராமனையும், கிருஷ்ணனையும் ஆன்மீக உலகம் தெய்வமாக அல்லவோ அறியும்? அப்படியிருக்க அவர்கள் ஏன் திருவுருமாற வேண்டும்.

அன்பர்: ஏனெனில் பிரம்மமே சிருஷ்டியுள்ளும், சிருஷ்டியைக் கடந்தும் உள்ள ஏகவஸ்து. எதுவும் இல்லாதது. எல்லாம் வல்லது. இராமன் முனிவர் உலகத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் ஆனந்தமான தெய்வீக தளத்தை, அதாவது இருவருமே மனதளத்தைச் சார்ந்த தெய்வங்கள். அஞ்ஞானக் கலப்புள்ளவர்கள். எனவே இவர்கள் திருவுருமாற பூரணயோகக் கருவியாக மாற உடல் பெற்ற மனிதனாக வேண்டும். எனவேதான் பவித்ரா சாமான்ய மனிதனாக திருவுருமாற்றத்திற்குரிய உடலுடையவராய் மூன்றாவது வெற்றி அதாவது இறைவனைச் சரணடைந்தபின் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தெய்வீக உலகிற்கு ஏற்றவராய் மாற்றப்படக் கூடிய (அதி மானுடத்தில் தோன்றக் கூடியவராய்) தகுதி பெற்றவராய் வந்தார்.

நண்பர்: தகுதியா? அது எவ்வாறு?

அன்பர்: பெண்ணைப் போகப் பொருளாக நுகரும் பூவுலகச் சூழலில் எதனாலும் தீண்டப்படாது பெண்களை அன்னையாகவே கண்ட புனிதர் இவர். ஆன்மீகத் தூய்மையுடையவர்களுக்குக் கூறப்பட்ட தூய்மை யாவும் பொருந்தியவர். அதாவது சொந்த நோக்கங்களுக்காக அல்லாமல், பேர், புகழ், உலகப் பெருமைகள் மீது ஆசையில்லாமல், தனது சொந்த மன நோக்கங்கள், பிராண ஆசைகள், உடல் விருப்பங்களை வற்புறுத்தாமல் தற்பெருமை, பதவி, அந்தஸ்த்திற்கு உரிமை கொண்டாடுதல் இவையில்லாமல், இறைவனுக்காக மட்டுமே வாழ்ந்தவர் இராமகிருஷ்ணர். அகங்கார உணர்வு கொண்ட எந்தச் செயலும் அஞ்ஞான உலகிலுள்ள மக்களுக்கு எவ்வளவு நல்லதாக இருப்பினும் அவை சாதகனுக்குப் பயனற்றவையே என்ற ஸ்ரீ அன்னையின் வாக்குப்படி வாழ்ந்தவர்.

நண்பர்: அதெல்லாம் சரியே. அவர்தான் பவித்ராவா? முன்பே ஸ்ரீ அரவிந்தர் கூறினார் என்பதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கூறிய பின்னும், என் வக்கிரபுத்தி, சிறிய என் பகுத்தறிவு அடங்காமல் அடம்பிடிப்பதை பொருட்படுத்தாது, என் அகந்தை கரையுமாறு தயவு செய்து இக்குழப்பத்தையும் தீர்க்க வேண்டுகிறேன்.

அன்பர்: அன்னை புலன்களுக்கோ, மனத்திற்கோ உரியவரல்லர். மனங்கடந்த ஆன்மாவில் - சைத்திய புருஷனில் உறைபவர். ஆன்மாவாலேயே அவரைக் காணவும், உணரவும் முடியும். மனத்தில் எழும் எண்ணம் அன்னைக்குப் புறம்பாகவும் இருக்கும். புறவெளியில் திரியும் புலன்களால் அன்னையை நெருங்கவும் முடியாது. அந்நிலையில் பவித்ராவோ அன்னையிடம் நெருக்கமாக இருந்தவர். பார்த்தனுக்குச் சாரதியான பார்த்தசாரதிக்கு (ஸ்ரீ அன்னைக்கு) பவித்ரா சாரதியாக (கார் டிரைவராக) இருந்தவர். இரண்டறக் கலத்தலே அவர் ஆர்வமாக இருந்தபோது கூடாது, இது கூடாது. உன்னை அதிமானஸ உலகின் முதல் பிரஜையாக வெளிப்படுத்தத் திட்ட மிட்டுள்ளேன் என்ற அன்னை அவர் தம்மோடு இரண்டறக் கலப்பதைத் தடுத்தார் என்று விளங்கவில்லையா? அவர் இராமகிருஷ்ணராக இருந்தபோது அவர் அன்னைக்குத் தம்மைப் பூரண சரணாகதி செய்து கொண்டாரல்லவா. பூரண யோகச் சட்டப்படி அது இரண்டாவது கட்டமே. மோட்சத் தகுதி பெற்றபின் எழும் மூன்றாவது கட்டத்திற்கு திருவுருமாற்றத்திற்கு பவித்ராவை அன்னை ஏற்றது இரண்டறக் கலத்தலைத் தடுத்தமையால் புலனாகவில்லையா?

நண்பர்: இப்போது தெளிவானது. தயவு செய்து என் அதிகப்பிரசங்கித்தனத்தை மன்னித்து மீண்டும் ஓர் ஐயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ‘பார்த்தசாரதி- யான அன்னைக்கு’ என்று குறிப்பிட்டதில் பார்த்தசாரதியான கிருஷ்ணரோ ஆடவர். ஸ்ரீ அன்னையோ பெண். அவரை எப்படி பார்த்தசாரதி எனக் கருத முடியும்?

அன்பர் : இதுபோலவே (முட்டாள்தனமான) ஒரு கேள்விக்கு அன்னையே பதிலளித்த நிகழ்ச்சியை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருமுறை ஒரு ஆஸ்ரம சாதகி குழலூதும் கண்ணனின் விக்ரஹத்தை ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பித்து, அக்கண்ணனைத் தாம் அடிக்கடி தம் கனவில் காண்பதாகக் கூறியுள்ளார். அன்னை புன்னகையுடன் அவ்விக்ரஹத்தைப் பெற்றுக் கொண்டு அச்சாதகி சென்றபின் தம் அருகில் இருந்த சாதகரிடம் “அவள் என்னையே கனவில் தரிசிக்கிறாள்” என்று கூறினார். அதற்கு அந்தச் சாதகரும் “அது எப்படிச் சாத்தியம்? கிருஷ்ணரோ ஆண். நீரோ பெண். உம் கையில் புல்லாங்குழலும் இல்லையே” என்றாராம். அதற்கு அன்னை மெல்ல நகைத்து, ‘அதுவொரு விஷயமில்லை’ என்றாராம். இன்னும் புரியவில்லையா? நீ சரியான மரமண்டைதான். பரம்பொருள் ஆணா? பெண்ணா? ஒரு சிவனடியார் இறைவனை, ஆண் இலி, பெண்ணும் இலி, (ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை) என்று பாடவில்லையா? “ஒரு நாமம், ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ” என்று மணிவாசகர் பாடவில்லையா? நாமமும், ரூபமும் நம் பொருட்டே. 1926-ஆம் ஆண்டு ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தில், கிருஷ்ணன் என்ற ஆனந்தம் அவர் பௌதிக உடலில் இறங்கியது. ஸ்ரீ அரவிந்தரோ ஸ்ரீ அன்னையுள் மறைந்தார். இணையில்லா தெய்வீக அன்பும், அனந்தமான ஆனந்தமுமே ஸ்ரீ அன்னை. அன்பு ஆணா பெண்ணா? ஆனந்தம் ஆணா பெண்ணா?

நண்பர் : போதும், போதும். நறுக் நறுக்கென்று எத்தனை குட்டுகள் என் தலையில்.

(இருந்தாலும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை என்பதே உண்மை).

*******

ஜீவிய மணி

மனிதன் அனுபவத்தால் புரிந்து கொள்கிறான். அறிவால் புரிந்து கொள்வது அரிது. அனுபவம் வந்தாலும் புரியாமல் இருப்பது உண்டு. அனுபவத்தைப் புரிந்து கொள்ள முயல்பவர் குறைவு. நடப்பது அருளால் நடந்து விட்டால், நடந்தது ஆன்மாவுக்குத்தான் புரியும். ஆன்மாவுக்குப் புரிய வேண்டியது, அறிவுக்குப் புரியாது. புரிந்ததைச் செயல்படுத்த உணர்வு இடம் கொடுக்காது. உணர்வு இடம் கொடுக்கும் இடங்களிலும் சுயநலம், குணம் தடை செய்யும். நிர்ப்பந்தத்தால் மனிதன் மாறுவானே தவிர, நிர்ப்பந்தம் இல்லாமல் மாற முன்வரமாட்டான். மனிதன் ஆன்ம விழிப்பைத் தேடவில்லை, அதனால் ஆன்மா விழிக்காது. மனிதன் அறிவை நாடவில்லை, அதனால் மனம் விழிப்பாக இருக்காது. நாலுபேர் தன்னை ஏற்க வேண்டும் என்பதே மனித முயற்சி. அது உணர்வின் முயற்சி; அறிவின் முயற்சி இல்லை, ஆன்மாவின் முயற்சியும் இல்லை. அவன் தேடுவது அவனுக்குக் கிடைக்கிறது. மனிதன் தேடாதது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியமில்லை.

********



book | by Dr. Radut