Skip to Content

ரௌடியின் மனம்

"அன்னை இலக்கியம்"

 (ஜனவரி 2001 இதழின் தொடர்ச்சி)

இல. சுந்தரி

மறுநாள் காலை வழக்கம்போல் தெருப்பக்கம் கயிற்றுக் கட்டிலில் சோம்பிக் கிடக்காமல் கிணற்றடிக்குச் சென்று பல்துலக்கி, நிரம்பத் தண்ணீரைச் சேந்தி உடல் குளித்துத் துணி துவைத்துக் கைலிகட்டாமல் அம்மா தீபாவளிக்கென்று ஆசையாய் வாங்கிப் பெட்டியில் சேர்ந்துவிட்ட வெள்ளை வேட்டி, நல்ல சட்டையணிந்து மலர்ச்சியாக வந்தான். சட்டைப்பையில் நேற்றைய தியான மையத்தில் கிடைத்த அன்னை படத்தை நினைவாக வைத்துக் கொண்டான். வாசல் தெளித்து உள்ளே வந்த அஞ்சலை முற்றிலும் மாறுபட்ட கபாலியைக் கண்டு திகைத்தாள். அம்மா டீத் தண்ணி தர்ரியா?

யாரிவன்? என் மகனா? கபாலியா? முரட்டு லுங்கி எங்கே? பரட்டைத் தலையெங்கே? பத்து மணியானாலும் கண் விழிக்காமல் வாசல் கயிற்றுக் கட்டிலில் புரள்பவனா? வருவோர் போவோரை வம்பிழுப்பவனா? பெரிய டீத் தண்ணி என்று அலட்சியப் படுத்துபவனா?

"கபாலி நீயா?" என்றாள் இன்பமான அதிர்ச்சியுடன்.

"ஏம்மா? மனுஷனை மாறவுடமாட்டியே" என்றான் சிரித்துக் கொண்டே.

மேலும் வியப்பு. "என் ராசா. நீ மாறணும்னு நா வேண்டாத தெய்வமில்லடா. நேத்துவரை ஒரு தெய்வமும் கண் தொறக்கல. இன்னிக்கி எந்தத் தெய்வம் கண் தொறந்திச்சோ", என்று மகிழ்ந்து டீ போட்டு எடுத்து வந்தவள் நீலா சொன்னதை நினைத்துக் கொண்டாள். நா சொல்ற தெய்வத்தை நம்பினா நடக்கும்னாளே அந்தத் தெய்வத்தின் வேலையா இது! இவள் எளிய நம்பிக்கை பலி த்த இடம் இது. 

"கபாலி, அப்பிடியே மளிகை கடை நாயுடு உன்ன வரச் சொன்னாரு போய்ப் பாரப்பா. எதினாச்சும் ஒதவி செய்வாரு" என்று நயமாகக் கூறினாள்.

"ஒனக்கு வேற வேலையில்ல" என்ற பதில் உருமாறி, ‘ஆகட்டும் போய்ப் பாக்குறேம்மா' என்று வந்தது.வெள்ளை வேட்டியும், முழுக்கைச் சட்டையுமாக அவனே அவனுக்குப் புதிதாய்த் தோன்றினான். எல்லோரும் தன்னையே கவனிப்பதுபோல் ஒரு எண்ணம். "வேண்டாத எண்ணங்களை விரட்டியடி. பழயனவற்றை மறப்பதும் ஒரு நல்ல வழியே" என்ற நீலாவின் குரல் மனதில் கேட்டது. நேற்று தியானமைய மேடையில் சோபாவில் வீற்றிருந்த அன்னையின் புன்னகை தவழும் முகத்தை அழுத்தமாக நினைவில் பதித்துக் கொண்டான். ஒரு தெரு கடந்து நாயுடுவின் கடைக்கு வந்துவிட்டான். தயங்கித் தயங்கிச் சென்றான். "வா, கபாலி. நாந்தான் ஒன்ன வரச்சொல்லி ஒங்க அம்மாகிட்ட சொல்லியிருந்தேன். சொன்னமாதிரியே அனுப்பிடுச்சே" என்று பாராட்டும் முகமாக வரவேற்றார். வரவேற்பு சரளமாயிருந்தது. கடையில் தன்னை யாரேனும் ஒரு மாதிரியாய்ப் பார்க்கிறார்களோ என்று ஒரு நோட்டம் விட்டான். நல்ல வியாபார நேரமாதலால் அவரவர் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். தான் வேலை வெட்டியில்லாததால் எல்லோரையும் வேடிக்கை பார்க்கவும், வம்பு செய்யவும் முடிந்தது. பொறுப்பான வேலையிருந்திருந்தால் தானும் அப்படி ஆகியிருக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டான்.

"சுந்தரம் இங்கே வா!" என்று நாயுடு கணக்கெழுதிக் கொண்டிருந்த ஓரிளைஞனை அழைத்தார். எழுந்து வந்தான் அவன்.

  • "கபாலி நீயும் சுந்தரமும் குடவுனுக்குப் போய் லாரியில் வந்திருக்கும் சாமான்களை இறக்கி அடுக்கி வாங்கிக் கணக்கு பார்த்துவிட்டு வாருங்கள்" என்று சாவியை நீட்டினார். சுந்தரம் சாவியைப் பெற்றுக் கொண்டான். "சுந்தரம், அங்கு எங்கெங்கு என்னென்ன மூட்டை அடுக்க வேண்டும் என்பதைக் கபாலிக்குக் காண்பித்துக் கொடு. லாரியில் வரும் ஆட்களே மூட்டையை இறக்கி அடுக்குவார்கள். 

கபாலி நீ பார்த்துக் கொண்டால் போதும்" என்றார் நாயுடு.எடுத்த எடுப்பில் தன்னிடம் பெரும் பொறுப்பை ஒப்படைத்தது கபாலிக்கு வியப்பளித்தது. அங்கு -நீலாவின் நம்பிக்கை - மலையை நகர்த்தும் நம்பிக்கை மூலம் செயல்படத் தொடங்கிய அன்னை சக்தி கபாலி யை நல்லவனாக்க இங்கு நாயுடுவின் நல்லவுள்ளத்தை இடமாகக் கொண்டு செயல்பட்டது.

சுந்தரம் நல்ல இளைஞன்.பி.காம்.,படித்திருந்தும் வேலை கிடைக்காததால் சும்மாயிருக்கப் பிடிக்காமல் கிடைத்த வேலை பரவாயில்லையென வந்திருப்பதாகவும், வேறு வேலை கிடைத்தால் போய்விடுவானென்றும் சொன்னான். கபாலி தனக்குக் கிடைத்த நல்ல நண்பனிடம் நேற்றுவரை தான் பயனற்று வாழ்ந்த வாழ்வையும், இன்றுமுதல் புது வாழ்வு மேற்கொள்வதாயும் எல்லாவற்றையும் சொன்னான். இவ்வளவு நல்லவரான உங்களால் எப்படி ரௌடியாய் இருக்க முடிந்தது என்றான் சுந்தரம். ரௌடியாக இருக்கவில்லை. சின்ன வயதில் அப்பா தன்னைத் தவறாகப் பயன்படுத்தியதால் அவர் மீதுள்ள வெறுப்பு தன்னை அப்படி மாற்றிவிட்டது என்றும் குற்றவாளி தந்தைதான் - உலகமில்லை என்பது இப்போதுதான் புரிகிறது என்றும், இனி திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் கூறினான். "வெறும் ஐந்தாவதுதான் படிப்பு. உடல் பலம்தான் என் சொத்து.இனி உழைப்பது என்று முடிவு செய்து விட்டேன். "மனிதன் மாற நாளாகாது. எங்கு மாற வேண்டும் என அவன் அறிய நாளாகும்" -ஸ்ரீஅன்னை- என்று வெள்ளையாகப் பேசினான். அன்றிலிருந்து கடைக்குத் தொடர்ந்து போகத் தொடங்கினான். உண்மையில் தனியாக இவனுக்கு வேலை எதுவுமில்லை. நாயுடுவுக்கு ஒரு மகனிருந்தால் எப்படிப் பயிற்றுவாரோ அப்படிப் பயிற்றினார். சம்பளம் காசு என்று எந்தப் பேச்சுமில்லை. தன்னுடன் சாப்பிடச் சொல்லுவார். சுந்தரமும், கபாலியும் நல்ல நண்பர்களாயினர்.

பரட்டைத் தலை படிய வாரிய கிராப் ஆயிற்று. கிருதா நீங்கி மென்மைத் தோற்றம் எழுந்தது. முறுக்கு மீசை அரும்பு மீசையாயிற்று. முரட்டு லுங்கி வெள்ளை வேட்டியாயிற்று. நல்ல நட்பின் மூலம் அன்னை சக்தி செயல்பட்டு கபாலியை வெறுத்தொதுக்கியவர் விரும்பக்கூடிய மனிதனாய் மாற்றியது.

இத்தனை வகையில் மாறிய மகனை மாப்பிள்ளையாய்ப் பார்க்க ஆசைப்பட்டாள் அஞ்சலை. தெருக்கோடியில் இருந்த இராஜேசுவரி வீட்டிற்குச் சென்றாள்.

"இராஜேசு, நீ எம்மவளைப் பாத்தேன்னு சொன்னியே? அவ அட்ரஸ் கொடுத்தீனா ஒரு நடை போய் பாத்துவர ஆசை", என்றாள்.

"அவள் ஒரு வார்த்தைகூட ஒன்னையும், ஒம் மகனையும் விசாரிக்கலை. நீ போனா என்ன சொல்லுவாளோ?" என்றாள் இராஜேஸ்வரி.

"என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஒருக்கால் அவளை நேர்ல பாத்தா அவ என்னை புரிஞ்சிப்பா. இல்லைனாலும் என்ன? நீரடிச்சு நீர் வெலகுமா?" என்று கூறினாள் அஞ்சலை.

"நா ஒம்மகளைப் பூந்தமல்லிலேதான் பார்த்தேன். அங்கேதான் ராஜாஜி தெருவுல 108ஆம் நம்பர்னு சொன்னா" என்றாள் இராஜேஸ்வரி.

"ஒனக்கு ரொம்பப் புண்ணியமாப் போவும். அப்படியே பஸ் நம்பரும் சொல்லிடு" என்று விபரமெல்லாம் கேட்டுக் கொண்டாள்.

பிள்ளையிடம் மயிலாப்பூர் கோவிலுக்கு என்று சொல்லிவிட்டு மகளைப் பார்க்கச் சென்றாள். பெண்ணின் மனநிலை அறியும்முன் தன் பிள்ளை மனத்தில் ஏக்கங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாதே என்றுதான் உண்மையைச் சொல்லவில்லை.

தாயைக் கண்ட சுமதி ஒரு கணம் புரியாமல் நின்றாள். பிரிந்து நாளானதாலும், அம்மா உடல் மெலிந்திருந்ததாலும் அடையாளம் கண்டுகொள்ளவே கணநேரமாயிற்று.

"வாம்மா. எப்படி எளச்சுப் போய்ட்ட", என்று வரவேற்றாள். 

அஞ்சலை பாசத்தால் அழுதாள். "நீ நல்லாயிருக்கியா சுமதி? மாப்பிள்ளை எங்க? உனக்கு எத்தனை புள்ளைங்க?" என்றாள் ஆர்வமாக.

"அவுங்க இப்ப வந்திடுவாங்கம்மா. எனக்கு ஒரே ஒரு பொட்டைப் புள்ளதான். மல்லிகான்னு அவுங்க அப்பா வச்ச பேரு. ரொம்ப நல்லா படிச்சா. இப்பவொரு கம்பெனியில நல்ல சம்பளத்தில வேலை பாக்கிறா" என்று பெருமிதம் பொங்கக் கூறினாள்.

சுமதி தம்பியைப்பற்றி எதுவும் பேசாதது அவளுக்கு வருத்தமளித்தது. தானே முன்வந்து, "நீ வீட்டைவிட்டுப் போனபிறகு ஒங்கப்பன் எம்மவனை அடாவடியா வளத்து ஒண்ணுமில்லாம ஆக்கிடுச்சு. இல்லைன்னா அவனும் இந்நேரம் நல்ல படிப்புப் படிச்சு ஒம்புள்ளபோல வேலையில இருப்பான். இப்போதும் தன் முயற்சியால நல்லபடியா ஒரு கடையில இருக்கான்"' என்றாள்.

சுமதி தம்பியைப் பற்றி அறிய ஆர்வமில்லை என்பதுபோல் ஒன்றும் பேசாதிருந்தாள்.

"உம்மவளுக்குக் கல்யாணங்கட்ட ஏதாச்சும் ஏற்பாடுனா சொல்லு. உந்தம்பி ராசா கணக்காயிருக்கான்" என்றாள் அஞ்சலை மெதுவாக.

"அம்மா தயவுசெஞ்சு அந்த ஆசையை மறந்துடு. பத்து கிளாஸ் படிச்ச நானே படிச்சவரைக் கட்டிக்கிட ஆசைப்பட்டேன். எம்மவ காலேஜெல்லாம் படிச்சிருக்கு. அதோட படிப்பு, உத்யோகத்துக்கு ஏத்தமாதிரிதான் மாப்ள பாப்போம். அதுவும் அதும் விருப்பப்படிதான் மாப்ள கட்டுவோம்; நீ தம்பி மனசுல இந்த ஆசையெல்லாம் வளக்காத" என்று வெட்டினாற்போல் கூறினாள். இம்மாதிரி நேரங்களில் மனிதனுக்கு எழும் அவநம்பிக்கை இங்கு அஞ்சலைக்கும் எழுந்தது. என்னதான் மகன் மனம் மாறினாலும் படிக்காத, பெரும் பதவி வகிக்காத சாதரணமானவனை படிச்ச பெண்ணுக்கு - உத்யோகம் பார்க்கும் பெண்ணுக்குக் -கட்டிவைப்பதை சமுதாயம் ஏற்காது என அன்னையை நம்பாமல் வாழ்வை நம்பினாள். 

மாப்பிள்ளை வந்தார். "என்ன சுமதி? யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்?" என்றார்.

"இங்க எங்க அம்மா வந்திருக்காங்க" என்று சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.

"அடட!வாங்க அத்தை. நல்லாயிருக்கீங்களா? தம்பி வரலயா? சுமதி அத்தைக்குக் காப்பி, பலகாரம் கொடுத்தியா?" என்று அன்பாக விசாரித்தார்.

எத்தனை பண்புள்ளவர்? தம்பியைப்பற்றி சுமதி கேட்கா விட்டாலும் மாப்பிள்ளை கேட்டது ஆறுதலாகவிருந்தது.

இவ்வளவு நல்லவரையா எம்புருஷன் வெறுத்து ஒதுக்கினார். அவரெங்கே புத்தி தெளிவாயிருந்தார். குடிவெறி. மகள் நல்ல வாழ்வு தேடிக்கொண்டாற்போல் புள்ளயும் போய்ட்டா தனக்கென்ன வழி என்ற சுயநலம். பொம்பள நான். அவரை மீறி எனக்கென்ன உரிமையிருந்தது? என்று கடந்த காலத்தை நினைத்துக் கொண்டாள்.

"நல்லாயிருக்கேன் மாப்ள. தம்பி ஒரு கடையில வேலை பாக்குது. ஒங்களுக்கு இவுங்க அப்பா பண்ணின துரோகத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அப்போ சுயமா எனக்கு எந்த வுரிமையுமில்ல" என்று கதவுக்குப்பின் நின்று மரியாதையாகச் சொன்னாள்.

நல்ல மாப்பிள்ளையைக் கணவன்மீது கொண்ட கண்மூடித்தனமான மரியாதையால் அவமதித்ததற்கு உண்மையாக வருந்தியதும் அன்னை அங்கும் அதன்மூலம் செயல்பட்டார். அதன் விளைவு:- மாப்பிள்ளை, "நீங்க பெரியவங்க, மன்னிப்பு என்ற வார்த்தை யெல்லாம் எதற்கு? அப்போதிருந்த நிலை அப்படி. பழசெல்லாம் மறந்திடுங்க" என்றார்.

"அப்ப நா புறப்படுறேன் சுமதி. நீங்க ஒருக்கா வீட்டுக்கு வந்தா மனசுக்கு ஆறுதலாயிருக்கும்" என்று மாப்பிள்ளையை அழைத்துவிட்டுப் புறப்படத் தயாரானாள்.

"அம்மா! யார் வந்திருக்காங்க" என்று கேட்டுக்கொண்டே மல்லிகா வந்தாள்.

"வா மல்லிகா, உங்க பாட்டி வந்திருக்காங்க" என்று அவள் தந்தைதான் அறிமுகப்படுத்தினார்.

"வாங்க பாட்டி", என்றாள். அப்பாவின் பண்பு அப்படியேயிருந்தது. "பாட்டிக்குச் சாப்பிட எதுனா குடுத்தியாம்மா" என்று கூறியவள், "கொஞ்சம் இருங்க பாட்டி, முகம் கழுவி வருகிறேன்" என்று போனாள்.

அவளைப் பார்த்ததும் அஞ்சலைக்கு பெரிய அதிசயத்தைக் கண்டதுபோலிருந்தது.அழகும், அறிவும், பண்புமா எனக்கும் ஒரு பேத்தியா?என்ன புண்ணியம் என்றெண்ணினாள்.

கபாலிக்கு மட்டும் கொஞ்சம் படிப்பிருந்தா பெண் கேட்டிருக்கலாம். மீண்டும் மீண்டும் மனம் ஏங்குகிறது. மகன் மனம் மாற வேண்டும் என்று அன்னையை நம்பினாள். அன்னை அவனை மாற்றினார். ஆனால் இப்போது மல்லிகாவைப் பார்த்தவுடன் தன் மகனுக்குப் படிப்பிருந்தால் மல்லிகா கிடைத்திருப்பாள் என அன்னைமீது கொண்ட நம்பிக்கையை மறந்து சமூக அந்தஸ்தை மதித்தாள். அதன் விளைவு சுமதியின் மறுப்பாக எழுந்தது.

முகம் கழுவி உள்ளே வந்த மல்லிகாவிற்கு, சுமதி காபியும் பலகாரமும் கொடுத்தாள்."நீங்க சாப்டீங்களா பாட்டி?" என்று பரிவுடன் கேட்டாள்.

"நீ சாப்பிடம்மா. நான் வந்ததுமே சாப்பிட்டுவிட்டேன். மணியாகுது, இருட்டினா தனியா போகக் கண் தெரியாது. பொழுதோடு போவணும்" என்றாள்.

"இருங்க பாட்டி நா வந்து பஸ் ஏத்திவிடுறேன்" என்றாள் மல்லிகா.

சுமதிக்கு இஷ்டமில்லை. மல்லிகாவிடம் தன் தாய் தம்பியைப் பற்றி எதுவும் சொல்லக்கூடும் என்று எண்ணி, "இரு, இரு. நீ இப்பத்தான் வந்திருக்க. நா போய் பஸ் ஏத்திவுட்டு வரேன்" என்று கிளம்பினாள்.

வீடு வந்த அஞ்சலைக்கு மல்லிகாவின் குணமும், அழகும் கொள்ளை போவது போலிருந்தது.

சிறிது நேரம் கழித்து வந்த கபாலி மிகவும் சோர்வுடன் வந்தான். "அம்மா! சோறுபோடு. இன்னிக்கி அலைச்சல் கூடுதல். அதனால அசதியாயிருக்கு. இந்தா பணம். இதை செலவுக்கு வச்சிக்க" என்று 200 ரூபாயைக் கொடுத்தான். "ஏது பணம்?" என்றாள் அஞ்சலை.

"நாயுடு கொடுத்தாரம்மா" என்றான்.

"என் ராசா. இது போதும். நீ ஒழைச்சுக் கொண்டுவர காசு எம்மனமெல்லாம் நெறஞ்சிருக்கு." என்றாள்.

சோறு போட்டாள். மல்லிகாவை மனம் எண்ணியது. ஆனால் ஒரு பேச்சுக்கூட கபாலியிடம் சொல்லவில்லை.

மறுநாள் காலை வெள்ளை வேட்டி சட்டையுடன் பொறுப்பான இளைஞனாய்க் கபாலி வேலைக்குப் புறப்பட்டான்.

நீலா கம்ப்யூட்டர் வகுப்பிற்குக் கிளம்பியவள் "கபாலியண்ணே, வேலைக்குப் போனதும் தங்கையை மறந்திட்டயே" என்றாள் விளையாட்டாக.

"மறக்கல தங்கச்சி. நெறைய சம்பாரிச்சு நல்லா கல்யாணம் கட்டி வைக்கறேன், நல்லா படி" என்றான்.

டீக்கடை தாண்டும்போது நாயர் தைரியமாய்ப் பேசினார். "என்ன கபாலி டீக்கடைப் பக்கம் டீ குடிக்க வர்ரதில்லையா?" என்றார்.

"வீட்டுல டீக் குடிச்சிடறேன் நாயரே.அதனாலதான் வர்ரதில்லை" என்றான் அமைதியாக. இவன் முரட்டுத்தனம் அடங்கியதும் அவர் ஏற்றமானார்.

"திடீர்னு பெரிய மனிஷனாயிட்டப் போலிருக்கு?" என்று சீண்டும் தோரணையில் பேசினார் நாயர். 

இவன் பேச்சுக்கு மறு பேச்சு பேச பயப்படும் நாயர், இவன் பணிவுடன் மாறியதும் இவன் சுபாவத்தைக் கிளறப் பார்த்தார். இவன் பழய கபாலியாயிருந்தால் சீண்டியிருக்க முடியுமா? உள்ளே கோபம் எழுமுன் சாந்தப்படுத்திக் கொண்டான்." மனமே, கோபப்படாதே. நீலா சொல்லியிருக்கு, ‘பழச நினைக்காத. நினைப்பு வந்தா அன்னைய நெனச்சுக்க' என்று.அன்னையை நினைத்தான், மனம் அடங்கியது. கோபம் கரைந்தது; புன்னகை மலர்ந்தது.அதன் விளைவு, சற்றுமுன் ஏற்றமாகப் பேசிய நாயர், "கபாலி மனசுல வச்சுக்காத, நெசமா நீ இப்படி இருக்கறது மனசுக்கு ரொம்பச் சந்தோஷமாயிருக்கு" என்று மன்னிப்பு வேண்டும் பாவனையில் பேசவே மனம் அடங்கியதன் பலன் கபாலிக்குப் புரிந்தது. சிரித்துக் கொண்டே கடையை நோக்கி நடந்தான்.

"கபாலி வா, வா. நீ வந்தால்தான் கடையே களை கட்டுது", என்று நாயுடு மகிழ்ச்சி பொங்கக் கூறினார். கபாலி தன் முரட்டுத்தனம், சோம்பேறித்தனம் யாவற்றையும் உழைப்பாக மாற்றிவிட்டான். கல்லாப்பெட்டியைத் துடைப்பதுமுதல் கள்ளிப்பெட்டி தூக்குவதுவரை அவனே செய்வான். சாமான் அளப்பவர், பொட்டலம் போடுபவர் எல்லோர்க்குமே கபாலியால்தான் சிறிதுநேரம் ஓய்வு. "கபாலி கொஞ்சம் இப்படி உட்கார்" என்று சொல்லிப் பொட்டலம் கட்டுபவர் 5 நிமிஷம் வெளியே போய்வருவார். சாமான் நிறுப்பவரும் "கபாலித் தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துக்க" என்று கூறிச் செல்வார். கூடாது குறையாது எடை போடுவான். சிந்தாமல் சிதறாமல் பொட்டலம் கட்டுவான். திறம்பட வேலை செய்யும் அவன் குணம் நாயுடுவுக்கு மகிழ்வளிக்கும்.கடையில் எரிச்சலில்லாத சுமுகமான சூழல் வியாபாரத்தை முன்னை விடப் பெருக்கியது.

கபாலியின் திறமையும், கை சுத்தமும் நாயுடுவைக் கவர்ந்தன. எப்படி இவன் முரடனாகத் திரிந்தான், சுபாவம் மாறியதா என்பதைச் சோதிக்கவும் எண்ணினார்.

தொடரும்.

Comments

ரௌடியின் மனம்  "அன்னை

ரௌடியின் மனம்

 
 

"அன்னை இலக்கியம்"

no space is there after the full stops of the sentences.

after the heading and author's name - extra space is there.

para no.1, line no.1 - கட்டில் - கட்டிலில் 

para no.1, line no.3 - குüத்துத் - குளித்துத் 

para no.1, line no.3 -  கைலிகட்டாமல் - கைலி கட்டாமல்

para no.1, line no.8 - கபாயைக் - கபாலியைக்

para no.5, line no.6 - பத்த - பலித்த

after para no.5 - extra space is there.

para no.7, line no.10 -  சொல் - சொல்லி

para no.7, line no.17 -வேலையிருந் திருந்தால் - வேலையிருந்திருந்தால்

para no.8 - after 2nd line extra space is there.

para no.8 - line no.3 - no bullet is necessary

para no.8 - after line no.9 - extra space is there.

para no.8, line no.13 - கபாயை - கபாலியை

para no.9, line no. 15 - after ஸ்ரீஅன்னை - extra space is there.

para no.9, line no. 16 - என்றுவெள்ளையாகப்பேசினான்.அன்றிலி ருந்து -

என்று வெள்ளையாகப் பேசினான்.அன்றிலிருந்து

para no.9, line no. 19 -எந்தப்

பேச்சுமில்லை. - எந்தப் பேச்சுமில்லை. -

para no.10, - after line no. 3 - extra space is there.

after para no.19 - extra space is there.

para no.25, - after line no. 9 - பெண்ணுக்குக் -கட்டிவைப்பதை - 

பெண்ணுக்குக் - கட்டிவைப்பதை 

after para no.25 - extra space is there.

para no.27, line no.2 - வெüயே - வெளியே  

after para no.33 - extra space is there.

after para no.42 -         do.

para no.51, line no.2 - கபாலிடீக்கடைப் - கபாலி டீக்கடைப்

after para no.53 - extra space is there.

para no.55, line no.12 - மகிழ்வüக்கும். - மகிழ்வளிக்கும்.

 

 



book | by Dr. Radut