Skip to Content

11.ஆபத்பாந்தவர்

ஆபத்பாந்தவர்

ஆபத்தின் ரூபங்கள் பல. நாம் அனைத்தையும் அறிவோம். கணவன் முன்கோபக்காரர், மூர்க்கமானவர் எனில் காப்பி சாப்பிடும் நேரம் காப்பி பவுடர் இல்லைஎன்று கண்டால் அது மனைவிக்கு ஆபத்து. விஷயம் சிறியதானாலும், அர்த்தமற்றதானாலும், மனிதரைப் பொருத்து நிலைமை மாறும். STDயில் எப்படி 3 நிமிஷத்திற்குமேல் பேசலாம் என்பதை பிரச்சினையாக்கி தகப்பனார் மகனை அடித்து ஆர்ப்பாட்டம் செய்வதும் உண்டு.

இரயில்வே ஆபீசர். தம் கீழுள்ள ஆபீசரிடம் தம் மாமாவுக்காக இரயிலில் இடம் ரிஸர்வ் செய்யச் சொல்லியிருந்தார். பொறுப்பேற்றவர் பேசவேண்டியவர்களிடம் பேசி செய்யவேண்டியவற்றைச் செய்துவிட்டார். டிக்கட் பெர்த் நம்பர் ஆபீசர் மாமாவுக்குப் போக ஏற்பாடு செய்தவர், அதைத் தொடர்ந்து கவனிக்க மறந்துவிட்டு, விஷயம் முடிந்துவிட்டதாக இருந்துவிட்டார். தவறினால் இது எப்படிப்பட்ட ஆபத்துஎன அறிவார் எனினும், மறந்துவிட்டார். இரயில் புறப்பட 3 மணி நேரத்திற்கு முன் ஆபீசர் மாமாவிடமிருந்து பொறுப்பேற்றவருக்கு போன் வருகிறது. ரிஸர்வேஷன் செய்யவில்லை.

பெரிய ஆபீசர்களிடம் வேலை செய்பவர்கட்கு இது எப்படிப்பட்ட நிலை எனத் தெரியும். மறந்துவிட்ட ஆபீசர் அன்பர். கரண்ட்டில் கை வைத்ததுபோன்ற உணர்வு. மறந்ததை மறந்து, அன்னையைத் தீவிரமாக அழைத்தார். விளைவுகள் என்ன என்று மனம் சிந்திக்கத் துடித்தாலும், அதை அனுமதிக்காமல், இந்த 3 மணி நேரத்தில் என்ன செய்ய முடியும், எப்படிச் செய்ய முடியும் என்று கருதாமல் பதைபதைக்கும் நெஞ்சுடன் அன்னையை மட்டும் தீவிரமாக அழைப்பதில் ஈடுபட்டுத் தம்மால் இயன்றதைச் செய்ய முனைந்தார். உதவிக்கு ஒருவர் வந்து சம்பந்தப்பட்ட ஆபீசருக்குப் போன் செய்தார். முடியாதுஎன்று பதில் வந்தது. இந்த நேரம் இவர் ஆபீஸ் சேர்மன் ஆபீஸுக்குப் போகவேண்டி வந்தது.

அங்கு சேர்மன் P.A.  இதே நபருக்காக எமர்ஜென்சி கோட்டாவில் சீட் போனில் கேட்பதைக்கண்டு திகைத்து நின்றார்.

எப்படி நடந்தது என்பதை மனம் எழுப்பவில்லை. அன்னை ஆபத்பாந்தவராகச் செயல்பட்டதை நினைத்து வியந்தார்.

*******



book | by Dr. Radut